நபித்தோழர்கள் வாழ்வில்…!
எஸ். ஹலரத் அலி
கஅப் பின் மாலிக்(ரழி) அவர்களின் உண்மை, இன்றைய மக்களுக்கு ஒரு பாடம்!
நபித்தோழர்களின் வாழ்வு நமக்கு வெறும் வரலாறு அல்ல. வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய பாடங்கள் அதில் ஒரு முக்கியமான சம்பவம். கஅப்பின் மாலிக்(ரழி) அவர்களின் உண்மைப் பேச்சு.
தபூக் போருக்கு நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களை அழைத்தபோது, கஅப்(ரழி) அவர்கள் தவறவிட்டார். அவருக்கு உடல் பலம் இருந்தது. செல்வமும் இருந்தது. ஆனால் தயக்கம், காலதாமதம் காரணமாக போருக்குப் புறப்படாமல் விட்டுவிட்டார்.
போர் முடிந்து நபி(ஸல்) அவர்கள் திரும்பியபோது, பலர் பொய்யான சாக்குகளைக் சொல்லி மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால் கஅப்(ரழி) அவர்கள் உண்மையைச் சொன்னார்.
“எனக்கு எந்தக் காரணமும் இல்லை. எனக்கு வலிமை இருந்தும், வசதி இருந்தும் போரில் கலந்து கொள்ளாமல் நான் தவறி விட்டேன்!”
நபி(ஸல்) அவர்கள் :
“இவர் உண்மையைச் சொல்லிவிட்டார், அல்லாஹ்வின் தீர்ப்பு வரும் வரை காத்திருங்கள்!” என்று கூறினார்கள்.
பின்னர் கஅப்(ரழி) அவர்களையும், மற்ற இரு உண்மையாளர்களையும் மக்கள் புறக்கணித்தார்கள். ஐம்பது நாட்கள் மிகுந்த மன வேதனையும், தனிமையும் அனுபவித்தார்கள்.
இறுதியில் அல்லாஹ் மன்னிப்பு அளித்து, குர்ஆனில் இந்த வசனத்தை இறக்கினான்.
மேலும் பின்தங்கி விட்ட மூவரையும் அவன் மன்னித்தான். (சூரா அத் தவ்பா : 118)
இந்த நிகழ்வு புகாரி, முஸ்லிம் நூல்களில் பதிவாகியுள்ளது.
இன்றைய மக்களுக்குப் பாடங்கள் :
1. உண்மை கசப்பாக இருந்தாலும் அதுவே வெற்றி.
பொய்யும் சாக்குபோக்கும் தற்காலிகமாகத் தப்பிக்க உதவும். ஆனால் உண்மை நிரந்தர அமைதியைத் தரும்.
2. தவறை ஒப்புக்கொள்வது பலவீனம் அல்ல, வலிமை:
கஅப்(ரழி) அவர்கள் தவறை மறைக்கவில்லை. ஒப்புக்கொண்டார். அதனால் அல்லாஹ்வின் மன்னிப்புப் பெற்றார்.
3. கடமையைத் தள்ளிப் போடாதீர்கள்:
வசதி, வலிமை இருந்தும் கடமையை விட்டுவிட்டால் அது வாழ்வில் பெரும் இழப்பாக மாறலாம்.
4. தெளபா செய்வோரை அல்லாஹ் கைவிடுவதில்லை:
எவ்வளவு தாமதமானாலும், உண்மையான மனந்திருந்துதல் இருக்கும்போது அல்லாஹ் மன்னிக்கிறான்.
5. சமூகப் புறக்கணிப்பு அல்லது சோதனை வந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள்:
கஅப்(ரழி) அவர்கள் ஐம்பது நாட்கள் சோதிக்கப்பட்டாலும், இறுதியில் அல்லாஹ்வின் அருள் வந்தது.
6. பொறுப்புணர்வு ஒவ்வொரு முஸ்லிமின் அடையாளம் :
குடும்பம், சமூகம், நாட்டுநலன், மார்க்கக் கடமைகள், எதிலும் நேர்மையாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.
முடிவுரை : இன்றைய உலகில் பொய், ஊழல், சாக்குபோக்கு, பொறுப்புத் தவிர்ப்பு ஆகியவை பெருகிவருகின்றன. கஅப்பின் மாலிக் (ரழி) அவர்களின் வாழ்வு நமக்குச் சொல்லும் செய்தி. உண்மையாக இரு: தவறை ஒப்புக்கொள், தெளபா செய், கடமையை நிறை வேற்று. அல்லாஹ்வின் மன்னிப்பும் அருளும் நிச்சயம் வரும்.