அவனது சட்டதிட்டங்களைப் பேணுவதைப் போன்றே அவன் வழங்கிய
சலுகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் விருப்பமாகும்!
எஸ். அமீர், நிந்தாவூர், இலங்கை
அக்டோபர் மாத தொடர்ச்சி…..
அபுல்வத்தாக் ஜப்ர் பின் நவ்ஃப்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: பயணத் தொழுகை யில் இரண்டு ரக்அத்துகள் தொழுவதைப் பற்றி இப்னு உமர்(ரழி) அவர்களிடம் நான் கேட்டேன் “அது வானத்திலிருந்து அருளப் பெற்ற சலுகையாகும். (எனவே அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்) என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் பதிலளித்தார்கள். (தஃப்சீர் இப்னு மர்தவைஹி, தஃப்சீர் இப்னு கஸீர் : 2:682-691) மேலும்;
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மக்காவுக்கும், மதீனாவுக்கும் இடையே மேற்கொண்ட பயணத்தில் எந்தவித அச்சமுமின்றி பாதுகாப்பானவர்களாக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் (நான்கு ரகாஅத் தொழுகைகளை) இரண்டு, இரண்டு, ரக்அத்களாகவே தொழுதோம். (நஸயீ, முஸ்னது அஹ் மத், முஸன்னஃப் இப்னு அபீஷைபா, தஃப்சீர் இப்னு கஸீர் 2:682-691) மேலும்;
பயணத்தில் அச்ச நேரத் தொழுகையை ஒரு ரக்அத்தாகவும் தொழலாம் என்பதும் சலுகை யாகும்:
சிமாக் பின் அல்வலீத் அல்ஹனஃபி(ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர்(ரழி) அவர்களிடம் பயணத் தொழுகையைப் பற்றி வினவினேன் “”அது இரு ரகாஅத்துகளாகும் (அது) சுருக்கப்படாமல் ஆரம்பத்திலேயே முழுமையாகக் கடமையாக்கப்பட்டது. தொழுகையைச் சுருக்கித் தொழுவதெல்லாம் அச்ச நேரத்தில்தான்” என இப்னு உமர்(ரழி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது நான் “அச்ச நேரத் தொழுகை என்றால் என்ன?” என்று கேட்டேன் அதற்கு அவர்கள்; “இமாம் (போர் வீரர்களில்) ஒரு பிரிவினருக்கு ஒரு ரக்அத் தொழுவிப்பார். (மற்றொரு பிரிவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்) பின்னர் ஒரு ரக்அத் தொழுது முடித்தவர்கள் பாதுகாப்புப் பணிக்குச் செல்வார்கள். பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் இரண்டாவது ரக்அத்தில் கலந்துகொள்ளச் செல்வார்கள். இமாம் இவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுவிப்பார். ஆக அச்சநேரத் தொழுகை இமாமுக்கு இரண்டு ரக்அத்துகளாகவும், போர் வீரர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு ரகாஅத்தும் ஆகும் என்று பதிலளித்தார்கள். (தஃப்சீர் தபரி, தஃப்சீர் இப்னு கஸீர் 2:682-691) அது எவ்வாறெனில், வாளேந்திப் போரி டும்போது ஒரே ரக்அத் தொழுதால் போதும். அதையும் சைகை மூலம் நிறைவேற்றலாம். அதற்கும் இயலாதபோது ஒரே ஒரு சஜ்தா செய்தால் போதும் ஏனெனில் சஜ்தாவும் இறைவனை நினைவு கூறும் வழிபாடுதான் எனறு இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (4:102, தஃப்சீர் இப்னு கஸீர் : 2:692-699)
இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல) அவர்கள் (ஒரு போர் முனையில் எங்களுக்கு) அச்ச நேரத் தொழுகை தொழுவித்தார்கள். (எங்களில்) இரு அணிகளில் ஓரணியினருக்கு (முதலில்) ஒரு ரக்அத் தொழுவித்தார்கள். (அப்போது) மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் (நின்றுகொண்டு) இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் எதிரிகளுக்கு முன்னால் நின்று கொண்டனர். பிறகு இரண் டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு ரக்அத் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது அச்ச நேரத் தொழுகை பற்றிய இப்னு உமர்(ரழி) அவர்களது மேற்கண்ட ஹதீத் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் அச்ச நேரத் தொழுகை தொழு திருக்கிறேன்” என்று ஹதீத் தொடங்குகிறது. ஸஹீஹ் முஸ்லிம் : 1523-1525, 1527, 1528, 1530, தஃப்சீர் இப்னு கஸீர் : 2:692-699)
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர் (இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் (ஒரு ரக்அத்) தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் (ஒரு ரகாஅத்) தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங் களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும்.
ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப் பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்பு கின்றனர். ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ் சல் இருந்தாலோ அல்லது நீங்கள் நோயாளி களாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயு தங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான். (அ.கு. 4:102)
உள்ளூரில் இருக்கும்போதும் சில வேளைகளில் இரண்டு நேரத் தொழுகைகளை சேர்த்து ஒரே நேரத்தில் தொழுவது என்பது சலுகையாகும்.
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (அவர்கள்) அச்ச நிலையிலோ பயணத்திலோ இருக்கவில்லை. இந்த ஹதீத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுஸ் ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். நான் (இந்த ஹதீதை எனக்கு அறிவித்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவ்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்? என்று கேட்டேன். அதற்கு சயீத்(ரஹ்) அவர்கள், “நீர் என்னிடம் கேட்டதைப் போன்றே நானும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் தம் சமுதாயத்தாரில் எவருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கருதினார்கள். (எனவேதான் இவ்வாறு செய்தார்கள்) என விடையளித்தார்கள் என்றார்கள். (முஸ்லிம் 1268)
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் லுஹரையும், அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை. (முஸ்லிம் : 1267)
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (தமது உள்ளூரான) மதீனாவில் இருக்கும்போது ளுஹரையும், அஸரையும் (4+4) எட்டாகவும், மஃரிபையும், இஷாவையும் (3+4) ஏழாகவும் தொழுதார்கள். அறிவிப்பவர்: (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி: 543) மற்றும் ஒரு முறை;
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ளுஹரையும், அஸரையும் இவ்வாறே மஃரிபையும், இஷாவையும் சேர்த்து “ஜும்உ” செய்து தொழுதார்கள். அப்போது அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எனது உம்மத்தினர் சிரமப்படாமல் இருப்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), தப்ராணி, ஸயீது பின் ஜுபைல்(ரழி) அவர்கள் மூலமாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இது போன்ற அறிவிப்பில் ஸயீது பின் ஜுபைல்(ரழி) அவர்கள் இவ்வறிவிப்பின் அறிவிப்பாளராகிய இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் இரு நேரத் தொழுகைகளையும் ஒரே நேரத்தில் ஏன் சேர்த்து “ஜம்உ” செய்து தொழுதார்கள்? என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது உம்மத்தினருக்கு சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காகவே இவ்வாறு செய்தார்கள் என்று கூறினார்கள்.
மழைக் காலங்களிலும், குளிரான வேளைகளிலும், வீடுகளில் தொழுது கொள்வது சலுகையாகும் :
இறை நம்பிக்கை கொண்டவர்களே ஜும்ஆவுடைய நாளில் தொழுகைக்காக உங்களை அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வை நினைவு கூற விரைந்து சொல்லுங்கள். (62:9) என்பது அல்லாஹ்வின் கட்டளை. ஆனாலும் ஜும்ஆவுடைய நாளில் மழையாக இருந்தால் தமது வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குக் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார்: மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ஜும்ஆப் பிரசங்கம் செய்வதற்காக மிம்பரில் ஏறினார்கள். “அப்போது பாங்கு சொல்பவர் ஹய்ய அலஸ்ஸலாஹ்” என்று சொல்ல ஆரம்பித்தபோது உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார் கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை ஆச்சரியமாகப் பார்த்தனர். இந்த பாங்கு சொல் பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கின்றார்கள்! என இப்னு அப்பாஸ்(ரழி) கூறினார். (புகாரி: 616, அத்தியாயம்: 10 பாங்கு)
நாஃபிவு கூறினார்: குளிரும், காற்றும் நிறைந்த ஓர் இரவில் தொழுகைக்காக இப்னு உமர்(ரழி) பாங்கு சொன்னார்கள். பின்னர் உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்றார்கள். குளிரும் மழையுமுள்ள இரவுகளில் கூடாரங்களில் தொழுங்கள் என்று கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிடுவார்கள் என்றும் கூறினார்கள். (புகாரி: 666)
நாஃபிவு அறிவித்தார்: மக்காவை அடுத்துள்ள ஸஜ்னான் என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர்(ரழி) பாங்கு கூறினார்கள். அதன் கடைசியில் “உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்றும் கூறினார்கள். மேலும் பயணத்தின் போது குளிரான இரவிலும் மழை பெய்யும் இரவிலும் முஅத்தின் பாங்கு சொல்லும்போது அதன் கடைசியில் உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று சொல்லுமாறு முஅத்தினுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள் என்றும் இப்னு உமர்(ரழி) கூறினார். புகாரி : 632
அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார்: பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று (பாங்கில்) கூறிய பிறகு ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் உங்கள் வீடுகளி லேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறும் என இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்.
(இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது என்னை விட மிகவும் சிறந்தவரான நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்று கூறிவிட்டு நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும் சக்தியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்கள். (புகாரி : 901, அத்தி.11, ஜும்ஆத் தொழுகை) (இன்ஷா அல்லாஹ் தொடரும்)