காக்க! காக்க!! நா காக்க!
M. சையத் முபாரக், நாகை
நாக்கு என்பது நமது உடலிலுள்ள உறுப்புகளில் ஒரு சிறிய உறுப்புதான். ஆனால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பலவற்றிற்கு முக்கிய காரணியாக இருப்பதும் இந்த நாக்கு தான். வலிமை வாய்ந்த யானை, சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளைக் கூட அடக்கி விடும் மனிதனால் தன்னுள் இருக்கும் நாக்கைக் கட்டுப்படுத்த முடி வதில்லை.
நாக்கைச் சரியாகப் பயன்படுத்தினால் நன்மையும், தவறாகப் பயன்படுத்தினால் தீமையும் கிடைக்கும். உள்ளத்தில் தோன்றி நாவில் பிறக்கும் வார்த்தைகள் நல்லதாக இருந்தால் பாதுகாப்பை யும், உயர்வையும் பெற முடியும். அந்த வார்த்தைகள் தீயதாக இருப்பின் பாதிப்பையும், தாழ்வையும் பெறுவோம். ஒருவன் மேன்மை அல்லது இழிவை அடைய அவனுடைய வாயிலிருந்து புறப்படும் சொற்களே வழி அமைத்துத் தருகின்றது. நல்ல சொற்கள் உறவை மேம்படுத்தும். தீய சொற்கள் பகையை உருவாக்கும்.
நாம் வேறு ஒருவர் பற்றி அவர் இல்லாத போது பேசும்போது வார்த்தைகள் சர்வ சாதாரணமாக நீர்வீழ்ச்சி போன்று கொட்டும். ரசித்து மகிழ்ச்சி பொங்க பேசுவோம். அது நாமே உணராத நிலையில் வார்த்தைகள் வெளிவந்துவிடும். அதனால் ஏற்படும் விபரீதம் நமக்குப் புரியாது.
“கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்: உங்கள் நாவுகளாய் விசயத்தை நீங்கள் கடத்திக் கொண்டிருந்ததை, உங்களுக்கு அறவே தெரியாத விசயத்தை வாய் வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்ததை ஏதோ சாதாரணமாக அதை நினைத்துக் கொண்டீர்கள். அல்லாஹ்விடமோ அது மிகப் பெரிய பயங்கரமான விசயம்” (அல்குர்ஆன் 24:15)
“இறைத்தூதர் அவர்களே! ஈடேற்றம் பெறுவது எப்படி?” என்று கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள், “உமக்கு எதிராக உனது நாவு அமைவதை நீர் தடுத்துக் கொள்வீராக! உம் வீடு விசாலமாக இருக்கட்டும். உம் தவறுகளை நினைவு கூர்ந்து அழுவீராக!” என்று கூறினார்கள்.
நாவைக் காக்கும் வழிகள் :
1. நல்லதை மட்டும் பேசவேண்டும் :
நல்லதை மட்டும் பேசவேண்டும், தேவையற்றதைப் பேசுவதை விட பேசாமல் இருப்பதே சிறந்தது. நாம் பேசுவது நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
“எனது அடியார்களிடம் சொல்லிவிடுக: அழகிய சொற்களையே பேசுக! ஷைத்தான் உங்களிடையே பூசலை தோற்றுவிப்பான். மனிதரின் பகிரங்க பகைவனாக்கும், ஷைத்தான்.” (அல்குர்ஆன் 17:53)
மேலும், பார்க்க : அல்குர்ஆன் 35:10
“அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர்(ஒன்று) நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 6018, 6475, முஸ்லிம்:74,75)
2. சிந்தித்துப் பேசவேண்டும் :
சிந்தித்துப் பேசும்போது நமது மனமும், கேட்பவர் மனமும் புண்பட வாய்ப்பு இராது. வீண் வம்பு, மோதல் ஏற்பட வேலை இல்லை.
“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 6477)
3. தெளிவாகத் தெரிந்ததைப் பேசவேண்டும்:
தெரியாததை, சரியான புரிதல் இல்லாததை, அரைகுறையாக தெரிந்ததை பேசக் கூடாது.
“உங்களுக்குத் தெரியாத விசயத்தின் பின்னால் போகாதீர்கள். செவி, பார்வை, இதயம் என ஒவ்வொன்றைப் பற்றியும் விசாரிக்கப்பட்டே தீரும்”. (அல்குர்ஆன் 17:36)
“நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். 1. இவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவதும்), 2. பொருள்களை வீணாக்குவதும், 3. அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்” என நபி(ஸல்) அவர் கள் கூறினார்கள். (புகாரி 1477)
4. நாவைக் கட்டுப்படுத்த வேண்டும் :
நாவைப் பேணும்போது இவ்வுலகிலும் நல் வாழ்வு கிட்டும்; மறுமையிலும் சொர்க்கம் கிடைக்கும்.
“இறைத்தூதர் அவர்களே! நான் உறுதியாகச் செயல்படுத்த வேண்டிய ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்” எனக் கேட்டபோது, “என் இறைவன் அல்லாஹ் தான் என்று கூறுவீராக! அதில் உறுதி யாக இருப்பீராக!” எனவும், “இறைத்தூதர் அவர் களே! என்னிடம் நீங்கள் அதிகம் பயப்படுவது எது?” எனக் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் தன் நாவைப் பிடித்து “இதுதான்” எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ரியாளுஸ் ஸாலிஹீன் 1517)
5. ஆறுதல் கூறவேண்டும் :
கஷ்டத்திற்குள்ளானவர்களை, நோயாளிகளை சந்திக்கும்போது அவர்களின் நிலை குறித்து குத்திக் காட்டவோ, குறை கூறவோ கூடாது. இது சரியில்லை, அது சரியாக இருக்கும் என்று பலவற்றைக் கூறி அவர்களை குழப்பிவிடக் கூடாது. அவர்களுக்கு ஆறுதல் கூறவேண்டும். அவர்களுக்காக “துஆ” செய்திட வேண்டும். இது அவர்கள் மனமும், உடலும், புத்துணர்வும், புதுத் தெம்பும் பெற உதவியாக இருக்கும்.
“பங்கீடு செய்யும்போது (வாரிசல்லாத) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்தால், அதிலிருந்து அவர்களுக்கும் (கொஞ்சம்) கொடுங்கள். இன்னும் அவர்களிடம் கனிவான (ஆறுதலான) வார்த்தையையே கூறுங்கள்.” (அ.கு. 4:8)
நபி(ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் வஹி வந்தபோது, ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறுக கட்டியணைத்தபின் அச்சத்தோடு வந்த நபி(ஸல்) அவர்களை கதீஜா(ரழி) அவர்கள் ஆறுதல் கூறி தேற்றிய நிகழ்வை புகாரி 6982ல் பார்க்கலாம்.
6. நல்லதை செய்ய வேண்டும் :
வீணான பேச்சுகளைத் தவிர்த்துவிட வேண்டும். திக்ர், துஆ செய்ய வேண்டும். அல்குர்ஆனை கற்கவேண்டும். ஹதீத்களை புரிந்து கொள்ள வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
“அல்லாஹ்வை நினைவு கூறும் பேச்சை (திக்ரை) தவிர (மற்ற பேச்சை) அதிகம் பேசாதீர்கள். அல்லாஹ்வை நினைவு கூறும் பேச்சைத் தவிர்த்து (மற்ற பேச்சை) அதிகம் பேசுவது உள்ளத்தை இறுக வைத்துவிடும். மக்களில் அல்லாஹ்வை விட்டும் மிக தூரமாக விலகி நிற்பவர், இறுகிப் போன உள்ளத்தவர்தான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ரியாலுஸ் ஸாலிஹீன் 1520)
“நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதா தீர்: உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 5122)
7. தீங்கு இழைத்தவர்களை மன்னிக்க வேண்டும் :
நாம் இழைத்தப் பாவங்களைக் குறிப்பிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவோம். நாம் மற்றவர்களுக்குத் தீங்கு இழைத்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது மட்டும் போதாது; நம்மால் பாதிப்பு அடைந்தவரிடமிருந்தும் மன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் பாதிப்பு அடைந்திருந்தாலும் பாதிப்பு ஏற்படுத்தியவரை மன்னிக்க வேண்டும்.
“ஒருவர் தம் சகோதரருக்கு அநீதி ஏதேனும் இழைத்திருந்தால் (அவருடன் மனம் விட்டு பேசி தீர்வு கண்டு) அதிலிருந்து அவர் இவ்வுலகிலேயே) தம்மை விடுவித்துக் கொள்ளட்டும். ஏனெனில், அங்கு (மறுமையில் ஈட்டுத் தொகை கொடுக்க) பொற்காசோ, வெள்ளிக்காசோ இருக்காது. இவர் தம் சகோதரருக்கு (இழைத்த அநீதிக்கு ஈடாக) இவருடைய நன்மைகளிலிருந்து (தேவையா னவை) எடு(த்துக் கொடு)க்கப்படும். இவரிடம் நன்மைகளே இல்லை என்றால், (அநீதிக்குள்ளான) சகோதரனின் பாவங்களிலிருந்து (விகிதாச்சாரப்படி) எடுத்து இவர் மீது சுமத்தப்(படும். இந்நிலை ஏற்)படுவதற்கு முன்பே (இம்மையில் சமரசம் செய்து கொள்ளட்டும்)” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 6534)
8. நேரத்தை சரிவர பயன்படுத்த வேண்டும் :
நமது காலம் வீணான பொழுதுபோக்குகளில் கரைந்து கொண்டிருக்கின்றன. குறுகிய நமது வாழ்நாளின் நிலையை உணர்ந்து நேரத்தை சரியான வழியில் பயன்படுத்துவோம். இன்று தான் நமது வாழ்வின் கடைசி நாள் என்றிருப்பின் நமது செயல்கள் எப்படி இருக்கும்? என்பதை உணர்ந்து காலத்தை நல்வழியில் செலுத்துவோம்.
“காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்”. (103:1,2)
மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்:
கடுமையாக நடப்பது வரம்பு மீறலை ஏற்படுத்தி நம்மை அலங்கோலத்தில் ஆழ்த்திவிடும். மென்மைத் தன்மை அனைத்தையும் அழகாக்கி விடுவதால் நாம் மென்மையைக் கடைபிடிப்போம்.
“(நபியே!) மென்மையையும், மன்னிக்கும் நடத்தையையும் மேற்கொள்வீராக! மேலும் நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!” (அ.கு. 7:199)
“அல்லாஹ் மென்மையானவன், மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும், பிறவற்றுக்கும் வழங்காததையயல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 5055)
நாவால் ஏற்படும் தீமைகள் :
1. புறம், அவதூறு கூறுவது :
நமது பேச்சு நல்லதாக, பயனுள்ளதாக இருக்கவேண்டும். மீறினால் பாதிப்பை அடைய வேண்டியது தான்.
“நம்பிக்கையாளர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும், துப்பறிவதில் (துருவி துருவி ஆராய்வதில்) ஈடுபடா தீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேசவேண்டாம். உங்களில் எவரேனும் இறந்துவிட்ட தம் சகோதரனின் இறைச்சியை உண்ண விரும்புவாரா? பாருங்கள்! நீங்களே அதனை அருவருப்பாக கருதுகின்றீர்கள். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள், திண்ணமாக, அல்லாஹ் பாவமன் னிப்புக் கோரிக்கையைப் பெரிதும் ஏற்றுக்கொள்ப வன், பெரும் கிருபையாளன்.” (அல்குர்ஆன் 49:12, மேலும் 104:1)
நபி(ஸல்) அவர்கள் “புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று மக்களிடம் கேட்டார்கள்.” மக்கள் “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் “நீர் உம்மு டைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்” என்றார்கள். அப்போது, நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தா லுமா? (அது புறம்) என்று கேட்கப்பட்டது, “நீர் சொல்லும் குறை அவரிடம் இருந்தால் அது புறம். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டால் அது அவதூறு ஆகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்: 5048)
எவரைப் பற்றியும் தப்பெண்ணம் கொள்ள மார்க்கம் நமக்கு அனுமதி தரவில்லை. தப்பெண் ணம் சந்தேகத்தை ஏற்படுத்தி, துருவித் துருவி ஆராயச் செய்யும். அது எதிராளி மீது பழி சுமத்தும். ஆகவே, நாம் மற்றவர்கள் பற்றி நல்லெண்ணம் கொள்வோம்.
2. கோள் சொல்வது :
இருவரிடையே இரு குழுக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தி செய்திகளை திரித்துக் கூறி குழப்பம் செய்வதே கோள் ஆகும்.
“குற்றங்குறைகளைத் தோண்டுபவன், கோள் மூட்டித் திரிபவன். (எவன் பேச்சையும் காது கொடுத்துக் கேட்காதீர்)” (அல்குர்ஆன் 68:11)
“கோள் சொல்பவன் சொர்க்கம் செல்லமாட்டான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
(புகாரி : 6056)
3. பொய் பேசுவது :
செய்திகளை திரித்து ஏமாற்றி தவறான புரிதலை ஏற்படுத்துவதே பொய் ஆகும். உண்மைக்கு மாறான தகவலும் பொய் ஆகும்.
“பொய் பேசுவதை விட்டு விலகி நில்லுங்கள்” (அல்குர்ஆன் 22:30) மேலும் பார்க்க : அல்குர்ஆன் 2:42, 16:105.
“உண்மை! நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மை நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக் கொண்டிருப்பார். இறுதியில் அவர் “வாய்மையாளர்‘ ஆகிவிடுவார். இதைப் போன்றே பொய் நிச்சயமாக தீமைக்கு வழிவகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் “பெரும் பொய்யர்‘ எனப் பதிவு செய்யப்படுவார்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 6094, முஸ்லிம் 5083)
4. வீணாகப் பேசுவது, அதிகம் பேசுவது :
வீணாக, அதிகமாகப் பேசுவது யாருக்கும் எந்த நன்மையையும் தருவதில்லை. தீமையைக் கொண்டு வந்து சேர்க்கும். ஆகவே, கவனமாக பேசுவோம். அவர்கள் வீணானவற்றைச் செவியுற்றால் அவற்றை விட்டு விலகிவிடுகின்றார்கள். மேலும் கூறுகிறார்கள்: எங்கள் செயல் எங்களுக்கு; உங்கள் செயல் உங்களுக்கு! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! நாங்கள் அறிவீனர்களின் நடத்தையை மேற்கொள்ள விரும்புவதில்லை” (அல்குர்ஆன் 28:55)
“தாய்மார்களுக்கு துன்பம் தருவதை, பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதை, (பிற மனிதர்களின் உரிமைளை) நிறைவேற்றாமல் இருப்பதை, பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதை, தேவையற்ற வீண் பேச்சுகள் பேசுவதை, அதிகமாக கேள்விகள் கேட்பதை, செல்வத்தை வீணாக்குவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 2408)
5. செய்ததை சொல்லிக் காட்டுவது :
யாருக்காவது நாம் எதையாவது செய்தால் அதனை சர்வசாதாரணமாகச் சொல்லிக் காட்டுகிறோம். அது மிகப் பெரும் நஷ்டத்தை நமக்குத் தரும் என்பதை அறியாமல் சொல்லி விடுகிறோம்.
“நம்பிக்கையாளர்களே! சொல்லிக்காட்டியும் மனதை நோகடித்தும் உங்கள் தான தர்மங்களை பாழாக்கிக் கொள்ளாதீர்கள்!” (அல்குர் ஆன் 2:264)
மேலும், பார்க்க : அல்குர்ஆன் 2:262
“அல்லாஹ் மறுமை நாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்து பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு” என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். “(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர், நஷ்டமாகிவிட்டனர்,, அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என கேட்டபோது, “தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து சரக்கை விற்பவர்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 171)
6. குறை கூறுவது :
மனித பலவீனங்களைக் குறைகளாகச் சுட்டிக்காட்டும் போக்கு நம்மிடம் அதிகமாக இருக்கிறது. அது தவிர்க்க வேண்டிய தீய குணமாகும்.
“நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையயன்றால் விட்டுவிடுவார்கள்”. (புகாரி: 3563)
“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காத வரும், நோற்காதவரை நோற்றவரும் குறை கூற மாட்டார்கள்.” (புகாரி : 1947, முஸ்லிம்: 2048)
7. பரம்பரையை இழுப்பது :
மற்றவர்களின் குறை எதுவும் வெளியில் தெரியாதபோது நாம் அவர்களின் பரம்பரையிலுள்ள ஏதாவது ஒரு குறையைக் கூறி அவரைக் கேவலப்படுத்துகிறோம். இந்த அணுகுமுறையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். “மக்களிடம் உள்ள இரு குணங்கள் இறை மறுப்பாகும்: 1. பரம்பரையைக் குறை கூறுவது, 2. இறந்த வருக்கு ஒப்பாரி வைப்பது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்:121) மேலும் பார்க்க புகாரி : 3850.
8. வேதனை, நோவினை செய்வது :
மற்றவர் மனம் வேதனையடையுமே என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் நாம் பேசி வருகிறோம். அது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு குணமாகும். ஜிஸ்யா செலுத்தாத விவசாயிகள் சிலரை ஆட்சியாளர் வெயிலில் நிறுத்தி இருந்ததைக் கண்ட ஹிஷாம்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். “இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்” என்று. (முஸ்லிம் : 5097)
9. சபிப்பது:
நம்மிடம் அதுவும் பெண்களிடம் சபிப்பது என்பது அல்வா சாப்பிடுவது போல இலகுவாக வெளியில் கொட்டுகிறது. அதன் பின் விளைவை நாம் உணர்வதில்லை.”ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பர்?” என்று கேட்கப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும், தாயையும் ஏசுவார். (ஆக, தம் தாய் தந்தை ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள். (புகாரி : 5973) மேலும் பார்க்க: புகாரி 6105
10. கோபமாக, கடுமையாக, அருவருப்பாக பேசுவது :
நாம் பேசும்போது கோபம் தலைக்கேற கடுமை தொனிக்க அருவெறுப்பாக பேசுகிறோம் அதனால் வரம்பை மீறிவிடுகிறோம். யூதர்கள் (சிலர்) நபி(ஸல்) அவர்களிடம் “அஸ்ஸாமு அலைக்கும்” (உங்களுக்கு மரணம் நேரட்டும் என்று (முகமன்) கூறினர். உடனே நான் (ஆயிஷா(ரழி). “(அது) உங்களுக்கு நேரட்டும். மேலும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி உங்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும்” என்று (அவர்களுக்குப் பதில்) சொன்னேன். (அப்போது) நபி(ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம். (எதிலும்) நளினமா நடந்துகொள். மேலும், வன்மையுடன் நடந்து கொள்வதி லிருந்தும், அருவெறுப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை நான் எச்சரிக்கிறேன்” என்றார்கள். அப்போது நான் “அவர்கள் சொன்னதை செவியேற்கவில்லையா?” என்று கேட்டேன். நீ கேட்கவில்லையா? “அஸ்ஸாமு” என்ற சொல்லை தவிர்த்து விட்டு “வ அலைக்கும்” அவ்வாறே உங்கள் மீது உண் டாகட்டும் என்று) அவர்களுக்கு நான் பதிலளித்து விட்டேன். அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும். எனக்காக அவர்கள் சொன்ன பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது என்று சொன்னார்கள். (புகாரி: 6030) (மேலும் பார்க்க முஸ்லிம் 5051)
முடிவாக : ஆகவே, நாம் நமது நாவைப் பேண வேண்டும், பாதுகாக்க வேண்டும். “இறைத் தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு “எவருடைய நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற மக்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 11) (மேலும் பார்க்க : ரியாளுஸ் ஸாலிஹீன் 1517,1521)
உதடுகளுக்கும், பற்களுக்கும் உள்ளே நாக்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து, நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தருவதை மட்டும் பேசுவோமாக! அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக!! அல்ஹம்துலில்லாஹ்!