சொர்க்கத்தின் விதி என்ன?

in 2026 நவம்பர்

சொர்க்கத்தின் விதி என்ன?

அ. நஜ்முதீன்

ஒரு இடத்திற்குள் நாம் நுழைய வேண்டுமென்றால், அங்கு நுழைவதற்கென்று ஏதாவது ஒரு  விதிமுறை  இருக்கும்.

ஒருவருடைய வீட்டிற்குச் சென்றால் வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் சேரவேண்டுமென்றால் அங்குள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சில இடங்களுக்குச் செல்ல நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும் சில இடங்களில் அடையாள அட்டை காட்டவேண்டும். இன்னும் சில இடங்களில் குறிப்பிட்ட தகுதி இருந்தால் மட்டுமே நுழைய  முடியும்.

அதாவது நுழைய வேண்டிய இடத்திற்கு அதற்குரிய அனுமதியோ, தகுதியோ தேவைப்படுகிறது. அப்படியானால், சொர்க்கத்திற்குள் நுழைவதற்கும் சில விதிமுறைகள் இருக்காதா? ஆம் இருக்கின்றன. ஆனால் பலரிடம் ஒரு  நம்பிக்கை  மட்டுமே  இருக்கிறது.

நாம் எப்படியும் சொர்க்கத்திற்குச் சென்று விடுவோம் என்பதாக, சொர்க்கத்தை விரும்புவது தவறல்ல மாறாக, ஒவ்வொரு முஃமினும் சொர்க்கத்தை  விரும்பவேண்டும்.

ஆனால் சொர்க்கத்தை விரும்புவது வேறு, அதற்குத் தகுதியான வாழ்க்கையை வாழ்வது வேறு. சொர்க்கம் என்பது எந்த நிபந்தனையும் இல்லாமல் யாரும் நுழைந்துவிடக்கூடிய ஒரு இடம்  அல்ல.

அப்படியானால் சொர்க்கத்திற்கான அந்த விதி முறைகள் என்ன?

1. ஈமான் (இறை நம்பிக்கை)

முதலாவது அடிப்படை – ஈமான் 

அல்லாஹ்வை மட்டுமே இறைவனாக ஏற் றுக்கொள்வது வானவர்களை (மலக்குகளை) நம்புவது, அவனுடைய தூதர்களையும் இதற்கு முன்பு அருளிய இறை வழிகாட்டி நூல்களை யும் மறுமை நாளையும் அல்லாஹ்வின் விதி யையும் நம்புவது ஈமானின் அடிப்படைகளில் அடங்கும். குர்ஆன் பல இடங்களில் ஈமானையும் நற்செயல்களையும் இணைத்தே கூறுகிறது. எனவே, சொர்க்கத்தை நோக்கிய பய ணத்தின்  முதல்  அடித்தளம்  ஈமான்.

ஈமான் என்பது மனதில் இருக்கும் நம்பிக்கையாக மட்டும் நின்றுவிடக்கூடாது. அந்த ஈமான் மனிதனுடைய செயல்களில் வெளிப் பட வேண்டும். தொழுகை நோன்பு, ஜகாத் பெற்றோருக்கு நன்மை செய்வது, ஏழைகளுக்கு உதவுவது, உண்மையைப் பேசுவது, அநீதியைத் தவிர்ப்பது, பிறருடைய உரிமை களை மதிப்பது போன்ற நற்செயல்கள் வாழ்க்கையில்  இடம்பெற  வேண்டும்.

அதனால்தான் குர்ஆனில் பல இடங்களில் “”ஈமான் கொண்டு நற்செயல்கள் செய்பவர்கள்” என்று ஈமானும், நற்செயல்களும் இணைத்துக் கூறப்படுகின்றன. மனிதர்களின் உரிமை களைப் பாதுகாப்பது, இது மிகவும் முக்கிய மான  ஒன்று.

அல்லாஹ்வை வணங்குகிறேன் என்று கூறிக்கொண்ட மனிதர்களுக்கு அநீதி செய்வது சொர்க்கத்திற்கான  பாதை  அல்ல. 

ஒருவருடைய பணத்தை அநியாயமாக எடுத்துவிட்டு தொழுவது மட்டும் போதாது.

ஒருவருடைய நிலத்தை அபகரித்துவிட்டு நோன்பு  இருப்பது  மட்டும்  போதாது.

ஒருவருடைய கண்ணியத்தை அழித்து விட்டு தன்னை நல்லவன் என்று நினைப்பதும் போதாது.

அல்லாஹ்வின் உரிமையும், மனிதர்களின் உரிமையும் மதிக்கப்பட வேண்டும். தவறு செய்தால் திருந்த வேண்டும். மனிதன் தவறு செய்யக்  கூடியவன்  தான். 

ஆனால் தவறு செய்த பிறகு அதை உணர்ந்து தவ்பா செய்வது மிகவும் முக்கியம். “நான் ஒருபோதும் தவறு செய்யமாட்டேன்” என்பது மனிதனுக்கு இயலாததாக இருக்கலாம். ஆனால், “நான் தவறு செய்துவிட்டேன் இனி திருந்துகிறேன்” என்று உண்மையாக அல்லாஹ்விடம் திரும்புவது மனிதனுடைய கடமை. அலலாஹ்வின் அருள் மிகப் பெரியது. நம்பிக்கை யின் அச்சமும் ஒரு முஸ்லிம் சொர்க்கத்தைப் பற்றிய நம்பிக்கையுடன் வாழவேண்டும். அதே நேரத்தில் நரகத்தைப் பற்றிய அச்சமும் இருக்க வேண்டும். 

“நான் முஸ்லிம். எனவே சொர்க்கம் எனக்குக் கட்டாயம்” என்று அலட்சியமாக வாழ்வது ஆபத்தானது. அதேபோல், “எனக்கு மன்னிப்பே கிடைக்காது” என்று அல்லாஹ்வின்  அருளில்  நம்பிக்கை  இழப்பதும்  தவறு. 

எனவே ஒரு முஃமின் நம்பிக்கைக்கும் அச்சத்திற்கும் இடையில் வாழவேண்டும். இறுதியில் அல்லாஹ்வின் அருள். இங்கே ஒரு மிகப்பெரிய உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் செய்யும் நற்செயல்களே நம்மை சொர்க்கத்தில் நுழையச் செய்கின்றன என்று மட்டும்  எண்ணக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் மனிதன் தனது செயல்களால் மட்டும் சொர்க்கத்தில் நுழைவதில்லை. அல்லாஹ்வின் அருளால்தான் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே நமது கடமை : ஈமான் கொள்ளுதல், நற்செயல்கள் செய்தல், பாவங்களைத் தவிர்த்தல், தவறு செய்தால் தவ்பா செய்தல், மனிதர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அல்லாஹ்வின்  அருளை  நாடுதல். 

அப்படியானால், சொர்க்கத்தின் விதி என்ன? சுருக்கமாகச் சொன்னால் ஈமான், நற் செயல், நேர்மை, இறையச்சம், தவ்பா, மனித உரிமை அல்லாஹ்வின் அருள். 

சொர்க்கம் என் பது ஒரு சாதாரண இடம் அல்ல. அது நிரந்தரமான தங்குமிடம். உலகில் ஒரு சிறிய அறைக்குள் நுழைவதற்குக் கூட அனுமதி தேவைப்படுகிறது. 

ஒரு பள்ளியில் சேருவதற்கு தகுதி தேவைப் படுகிறது.

ஒரு நாட்டிற்குள் செல்ல விசா தேவைப் படுகிறது

ஒரு தேர்வில் வெற்றி பெற தகுதி தேவைப் படுகிறது.

அப்படியானால், நிரந்தரமான சொர்க்கத் தில் நுழைவதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை என்று நாம் எப்படி நினைக்கமுடியும்? அதனால்தான் நாம் ஒவ்வொருவரும் நம்மையே  கேட்டுக்கொள்ள  வேண்டும்.

“நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புகிறேனா?” ஆம்! ஆனால், அதைவிட முக்கியமான கேள்வி. அதற்கான விதிமுறைகளை நான் பின்பற்றுகிறேனா? இதுதான் உண்மையான  கேள்வி. 

சொர்க்கத்தை விரும்புவது மட்டும் போதாது. சொர்க்கத்திற்குத் தகுதியான வாழ்க்கையை வாழவேண்டும். இறுதியாக ஒரு முக்கியமான உண்மை. சொர்க்கத்தின் கதவைத் திறப்பது நமது செயல்கள் அல்ல. அல்லாஹ்வின் அருள். ஆனால் அந்த அருளைப் பெறுவதற்கான நேரான பாதையில் நடப்பது நமது  பொறுப்பு. எனவே சொர்க்கத்தைப் பற்றி கனவு காண்பதை விட, சொர்க்கத்திற்கான  வாழ்க்கையை  வாழ்வோம்.

Previous post:

Next post: