ஏன் படைத்தான் இறைவனும் என்னை?
– அ. நஜ்முத்தீன்
ஏன் படைத்தான் இறைவன் என்னை?
இந்தக் கேள்வி வெறும் வார்த்தைகளால் எழுப்பப்படும் கேள்வி அல்ல. வாழ்க்கையில் பல துயரங்களையும், ஏமாற்றங்களையும், தோல்விகளையும் சந்திக்கும் மனிதர்களின் உள்ளத்தி லிருந்து சில நேரங்களில் வெளிப் படும் ஆழமான புலம்பல் இது.
உலகில் அனைவரும் ராஜாவாகவோ, மந்திரியாகவோ, அதிகாரம் படைத்தவர்களாகவோ, செல்வந்தர்களாகவோ, புகழ் பெற்ற வர்களாகவோ வாழ்வதில்லை, ஒரு சிலருக்கு அதிகாரம் கிடைக்கிறது, ஒரு சிலருக்கு செல்வம் கிடைக்கிறது, ஒரு சிலருக்கு புகழ் கிடைக்கிறது, ஒரு சிலருக்கு குடும்ப மகிழ்ச்சி கிடைக்கிறது.
ஆனால் பெரும்பாலானவர்கள் சாதாரண குடிமக்களாகவே வாழ்கிறார்கள். அவர்களிலும் சிலர் வசதிகளுடன் வாழ்கிறார்கள். பலர் பல்வேறு சிரமங்களையும், துயரங்களையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
அப்போது சிலருடைய மனதில் ஒரு கேள்வி எழுகிறது:
எனக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்க்கை? என்னை ஏன் இப்படி இறைவன் படைத்தான்?
வீணாகப் படைத்தானா?
இந்தக் கேள்விக்கான முதல் பதிலை குர்ஆன் மூலம் இறைவனே கூறுகிறான்.
நாம் உங்களை வீணாகப் படைத்தோம் என்றும், நீங்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா? (23:115)
அப்படியானால் ஒரு மிகப் பெரிய உண்மை நமக்குத் தெரிகிறது. இறைவன் மனிதனை வீணாகப் படைக்கவில்லை. நம்முடைய வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் இருந்தாலும், நம்முடைய வாழ்க்கை அர்த்தமற்றது என்று பொருள் கொள்ளக்கூடாது.
அப்படியானால் ஏன் படைத்தான்?
இதற்கான நேரடியான பதிலையும் இறைவனே கூறுகிறான். ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை. அ.கு.51:56
இதுதான் நம்முடைய மிகப் பெரிய கேள்விக்கான விடை: ஏன் படைத்தான் இறைவனும் என்னை? என்ற கேள்விக்கு இறைவனுடைய பதில்: “வீணாக அல்ல, ஒரு நோக்கத்திற்காக” அதாவது வணக்கம் என்றால் தொழுகை ஆயினும், வணக்கம் என்றால் தொழுகை மட்டுமா? என்றால் இல்லை இறைவனுக்கு முற்றிலும் அடிபணிவது.
வணக்கம் என்பது மிகவும் விரிவான பொருளைக் கொண்டது.
இறைவனை நம்புவது, அவனை நினைவு கூறுவது, அவனுடைய கட்டளைகளின்படி வாழ்வது, உண்மையைப் பேசுவது, அநியாயத்தைத் தவிர்ப்பது, பெற்றோரை மதிப்பது, பிறருக்கு நன்மை செய்வது, ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவது, ஹலாலான வழியில் உழைப்பது, துன்பத்தில் பொறுமையாக இருப்பது, கிடைத்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது என மனித வாழ்க்கையின் பல செயல்களும் இறைவனுக்காகச் செய்யப்படும்போது வணக்கத்தின் பரந்த பொருளுக்குள் வருகின்றன.
அதனால், தொழுகை வணக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே, இறைவனுக்காக வாழ்வதே வாழ்க்கை யின் நோக்கம். ராஜ்யம் இல்லாவிட்டாலும் வாழ்க்கை வீணல்ல, எனக்கு ராஜ்யம் இல்லை என்பதால் நான் மதிப்பற்றவன் அல்ல. எனக்கு பதவி இல்லை என்பதால் நான் தேவையற்றவன் அல்ல. எனக்கு செல்வம் இல்லை என்பதால் என் வாழ்க்கை அர்த்த மற்றதல்ல. எனக்கு புகழ் இல்லை என்பதால் இறைவனிடம் எனக்கு இடமில்லை என்பதுமல்ல.
மனிதர்கள் அவனுடைய மதிப்பை மற்ற மனிதர்களோடு அளவிட்டுப் பார்க்கிறார்கள்.
V அவனிடம் என்ன இருக்கிறது?
V அவன் என்ன பதவியில் இருக்கிறான்?
V அவனிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?
V அவனை எத்தனை பேர் மதிக்கிறார்கள்? என்று கேட்கிறான். ஆனால் இறைவனுடைய அளவுகோல் வேறுபட்டது.
ஒரு சாதாரண மனிதனின் நேர்மையான வாழ்க்கை, ஒரு பெரிய பதவியில் இருப்பவனின் வாழ்க்கையை விட இறைவனிடம் உயர்ந்ததாக இருக்கக் கூடும். துன்பம் வந்தால் கேள்வி மாறவேண்டும். வாழ்க்கையில் துன்பம் வரும்போது நாம் பொதுவாகக் கேட்கிறோம்.
ஏன் எனக்கு மட்டும்? இப்படி…!
ஆனால் ஒரு முஃமின் கேள்வியை மாற்றிக் கேட்கவேண்டும். இந்தச் சூழ்நிலையில் இறைவன் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறான்? இந்த ஒரு கேள்வி மனிதனின் பார்வையையே மாற்றிவிடும். துன்பம் வந்தால் பொறுமை தேவைப்படலாம். வசதி வந்தால் நன்றி தேவைப்படலாம். அதிகாரம் கிடைத்தால் நீதி தேவைப்படலாம். செல்வம் கிடைத் தால் பகிர்வு தேவைப்படலாம். அறிவு கிடைத்தால் அதை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். தோல்வி வந்தால் மீண்டும் எழ வேண்டும். தனிமை வந்தால் இறைவனுடன் உள்ள உறவை ஆழப்படுத்த வேண்டும்.
அதாவது, ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கைக்கு ஒரு பாடமும் ஒரு பொறுப்பும் இருக்கிறது. எனவே புலம்புவதை விட சிந்திப் போம். ஏன் படைத்தான் இறைவன் என்னை? என்று புலம்புவதற்கு முன் எதற்காகப் படைத்தான் இறைவன் என்னை? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இந்த இரண்டு கேள்விகளுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
முதல் கேள்வி நம்மை விரக்திக்குள் அழைத்துச் செல்லலாம்.
இரண்டாவது கேள்வி நம்மை நோக்கத்தைக் கண்டறியும் பயணத்திற்கு அழைத்துச் செல்லும்.
நான் ஏன் படைக்கப்பட்டேன் என்பதைப் புரிந்து கொண்டவுடன், நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற கேள்வியின் வலி குறையத் தொடங்கும். தன்னிடம் இல்லாததை எண்ணி வருந்துவதற்குப் பதிலாக, தன்னிடம் இருப்பதை வைத்து இறைவனுக்காக என்ன செய்ய முடியும் என்று சிந்திக்கத் தொடங்க வேண்டும்.
முடிவாக…
ராஜாவாக இல்லை என்பதற்காக வருந்தவேண்டாம், மந்திரியாக இல்லை என்பதற்காக வருந்த வேண்டாம், பெரிய செல்வந்தராக இல்லை என்பதற்காக வருந்த வேண்டாம், புகழ் கிடைக்க வில்லை என்பதற்காக வாழ்க்கையை வீணாக எண்ணவேண்டாம். உலகம் உனக்கு என்ன பதவி கொடுத்தது என்பது முக்கியமல்ல, இறைவன் உனக்கு கொடுத்த வாழ்க்கையை நீ எவ்வாறு பயன் படுத்துகிறாய் என்பதே முக்கியம்.
உனக்கு ராஜ்யம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது.
உனக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் உனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது.
உனக்கும் செல்வம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் உனக்கு ஒரு உள்ளம் இருக்கிறது.
உனக்கு புகழ் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் உனக்கு இறைவனை அறிந்து அவனை வணங்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இனிமேல், “”ஏன் படைத்தான் இறைவன் என்னை? என்று கேட்காமல், “எதற்காகப் படைத்தான் இறைவன் என்னை? அந்த நோக்கத்திற்காக நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்று நம்மையே கேட்டுக்கொள்வோம்.
ஏனெனில்,
இறைவன் நம்மை வீணாகப் படைக்க வில்லை. நம் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை அறிந்து வாழ்வதே நம் வெற்றி.
எனவே, எவர் நம்பிக்கையாளராக நல்ல செயல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகிவிடாது; நிச்சயமாக நாமே அதை (அவருக்காகப் பதிவு செய்து வைக்கிறோம். (21:94)