சமூக சேவையின் முக்கியத்துவம்!
(ஹில்ஃபுல் ஃபுதூல்) ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்கான சபை!
– எஸ். ஹலரத் அலி
“ஹில்ஃபுல் ஃபுதூல்‘ என்றால் “நல்லொழுக்கமுள்ளோரின் உடன்படிக்கை‘ அல்லது “சிறப்பு மிக்க கூட்டணி‘ என்று பொருள்படும். இது இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா) மக்காவில் ஏற்படுத்தப்பட்ட மிகவும் கெளரவமான உடன்படிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதையும், அக்கிரமக்காரர் களை எதிர்ப்பதையும் மையமாகக் கொண்ட இந்த ஒப்பந்தம், பிற்கால இஸ்லாமிய நீதிக் கோட்பாடுகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
வரலாற்றுப் பின்னணியும், உருவான காரணமும்!
கி.பி. 590ல், நபி(ஸல்) அவர்களுக்கு இருபது வயதாக இருந்தபோது இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக மக்காவில் மோசமான மோதல்கள் நிகழ்ந்தன.
பிஜார் போர் :
குறை´ மற்றும் கினானா கூட்டணிக்கும், ஹவாஸின் பழங்குடியினருக்கும் இடையே நடந்த இந்தப் போர் மக்காவின் மதிப்பையும், குறை´களின் ஒற்றமையையும் சிதைத்தது. இந்தப் பின்னடைவு, அவர்களுக்கிடையே ஒரு புதிய நல்லிணக்கத்தின் அவசியத்தை உருவாக்கியது.
நேரடித் தூண்டுகோல் :
ஒரு யமன் வர்த்தகர் (ஜபீத் நகரத்தைச் சேர்ந்தவர்) மக்காவிற்கு பொருட்களைக் கொண்டுவந்தார். குறை´ பிரமுகர்களில் ஒருவரான அல்ஆஸ் இப்னு வாயில் (அல்லது அஸ்வத் இப்னு அப்த் யகூத்) அவரது பொருட்களை வாங்கிக்கொண்டு, பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்.
பாதிக்கப்பட்ட வியாபாரி, மக்காவின் பல பிரமுகர்களிடம் முறையிட்டும் நீதி கிடைக்க வில்லை. கடைசியில், அவர் அபூ குபைஸ் மலை மீது ஏறி, தனக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி உரத்த குரலில் முறையிட்டு, உதவி கேட்டார்.
இந்த சம்பவமும், தொடர்ந்து நிலவிய உள் பூசல்களும் மக்காவின் கெளரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதை உணர்ந்த நல்லுள்ளம் கொண்ட குறைசிகள், இதற்கு ஒரு முடிவு கட்ட முடிவு செய்தனர்.
உடன்படிக்கையின் அமைப்பும், நிபந்தனைகளும்!
இடம் : அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆன் அவர்களின் இல்லம். அவர், இந்தக் கூட்டத்திற்கு விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார்.
தலைமை : நபி(ஸல்) அவர்களின் சித்தப்பா அஸ் ஸுபைர் இப்னு அப்தில் முத்தலிப் அவர்களின் அழைப்பின் பேரில் இந்தக் கூட்டணி உருவானது.
நபி(ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்கர் (ரழி) அவர்களும் இதில் பங்கேற்றனர்.
பங்கேற்ற குலங்கள் :
மக்காவின் மூத்த குடும்பங்களான பனூ ஹாசிம், பனூ முத்தலிப், பனூ ஸுஹ்ரா, பனூ தைம், பனூ அஸத் ஆகியோர் இணைந்தனர்.
உடன்படிக்கையின் நிபந்தனைகள் :
மக்கா நகரில் யாருக்கு (அவர் வெளி நாட்டினராக இருந்தாலும் சரி) அநீதி இழைக்கப் பட்டாலும், அவருக்கு நீதி வழங்க ஒரு மனதாக உதவவேண்டும். அக்கிரமக்காரன் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், அவனை எதிர்த்து, நீதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்டவரின் உரிமையை மீட்டெடுக்கும் வரை, அக்கிரமக்காரனுக்கு எதிராக ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
இந்த உறுதிமொழிகள், கஅபாவில் உள்ள ஹஜ்ருல் அஸ்வத் (கருங்கல்) அருகே கைகளை உயர்த்தி, இறைவனை சாட்சியாக வைத்து உறுதி செய்யப்பட்டன. உடன்படிக்கைக்குப் பிறகு, இந்தக் குழு அல்ஆஸ் இப்னு வாயிலிடம் சென்று, வியாபாரியின் பொருட்களை அவரிடம் ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்தியது.
நபி(ஸல்) அவர்களின் நிலைப்பாடும், பாராட்டும்!
தனக்கு நுபுவ்வத் கிடைத்த பல ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த உடன்படிக்கையை நபி(ஸல்) அவர்கள் உயர்வாகப் பாராட்டினார்கள். ஸஹாபாக்கள் இது பற்றி கேட்ட போது, அவர்கள் கூறினார்கள்.
“ஜாஹிலிய்யா காலத்தில் அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆனின் வீட்டில் நான் ஒரு உடன் படுக்கையில் கலந்துகொண்டேன். அது சிவப்பு ஒட்டகங்களை விட எனக்கு மிகவும் விருப்பமானது. இஸ்லாம் வந்த பின்பும் அதற்காக (அந்த நல்ல செயலுக்காக) அழைக்கப் பட்டால் நான் அதற்கு பதிலளிப்பேன்”. அஹ்மத், பைஹகி.
“சிவப்பு ஒட்டகங்கள்” அக்கால அரேபியர்களிடம் மிகவும் மதிப்பு மிக்க செல்வமாகக் கருதப்பட்டன. ஒரு இறைத்தூதர், தான் முஸ்லிம்களின் தலைவரான பின்பும், இந்த இஸ்லாமியர் அல்லாதோரின் உடன்படிக்கையை இவ்வளவு உயர்வாகப் பாராட்டுகிறார் என்றால், இதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.
“நான் இஸ்லாத்தின் காலத்தில் இதற்கு அழைக்கப்பட்டால், நான் நிச்சயமாக பதிலளிப்பேன்!” என்ற அவர்களின் வாக்கு, நீதிக்கும், மனித நேயத்திற்கும் இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இதிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள்!
1. இஸ்லாம் நீதியை உலகளாவியதாகக் காண்கிறது:
இஸ்லாம் வருவதற்கு முன்பே, இஸ்லாமியர் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உடன்படிக்கையை நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இது, நீதி என்பது மதம், இனம், நாடு பாராத மனிதாபிமானத்தின் அடிப்படைத் தேவை என்பதைக் காட்டுகிறது. இன்றும் ஒடுக்கப்பட்டோருக்கு உதவுவதில் முஸ்லிம்கள் அனைத்துத் தரப்பு மக்களுடனும் இணைந்து செயல்படுவதற்கு இது முன்னுதாரணமாகும்.
“அல்அமீன்”(நம்பகமானவர்) என்ற பண்பின் எதிரொலி:
நுபுவ்வத்திற்கு முன்பே “அல்அமீன்” (நம்பிக்கைக்கு உரியவர்) என்று அழைக்கப்பட்ட நபி(ஸல்), தமது இளம் வயதிலேயே நீதிக்கும் நேர்மைக்குமான இந்த முயற்சியில் கலந்துகொண்டு, மக்களின் நம்பிக்கைக்கும், நலனுக்கும் எவ்வாறு முன்னுரிமை அளித்தார்கள் என்பதை இது காட்டுகிறது.
அரசியல் மற்றும் சமூகப் பொறுப்பு :
இந்த உடன்படிக்கை, “எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற பார்வையில் அல்லாமல், “எனது சமூகப் பொறுப்பு என்ன?” என்ற பார்வையில் செயல்படும் முதிர்ந்த மனப்பக்குவத்தைக் காட்டுகிறது. இது “நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! அல்குர்ஆன் 5:2 என்ற இறைக் கட்டளையின் நடைமுறை உதாரணமாகவும் அமைகிறது. அரசாங்கமோ அல்லது பிற அதிகாரிகளோ நீதி வழங்கத் தவறும்போது, குடிமக்களின் கூட்டு முயற்சி இந்த உடன் படிக்கை மூலம் பிரதிபலிக்கிறது.
அல்லாஹு அஃலம்! (இறைவனே மிக அறிந்தவன்)