தண்ணீர்! – நாளைய உலகின் தங்கமா?
அ. நஜ்முதீன்
தண்ணீர் என்பது வெறும் இயற்கை வளம் மட்டுமல்ல; அது உயிரின் அடிப்படை, மனித குலத்தின் எதிர்காலம். இன்று நாம் தண்ணீரைக் காப்பாற்றினால், நாளை தண்ணீர் நம்மைக் காப்பாற்றும். அலட்சியம் செய்தால், நமது சந்ததியினர் ஒரு துளி குடிநீருக்காகப் போராட வேண்டிய நிலை உருவாகலாம். உண்மையில், அந்தப் போராட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது.
உலகின் பல பகுதிகளில் தண்ணீர் பகிர்வு மற்றும் நதிநீர் உரிமைகளை மையமாகக் கொண்டு நாடுகளுக்கு இடையே பதற்றங்களும், மோதல்களும் உருவாகி வருகின்றன.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான சிந்துநதி நீர் ஒப்பந்தம்.
எகிப்து, எத்தியோப்பியா, சூடான் நாடுகளுக்கிடையிலான நைல் நதி பிரச்சினை.
துருக்கி, சிரியா, ஈராக் நாடுகளுக்கிடையிலான யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் நதிகள் தொடர்பான பிரச்சினை.
அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளுக்கிடையிலான கொலராடோ நதி நீர் பகிர்வு.
தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கிடையிலான காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் ஆகியவை அதற்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.
ஒரு காலத்தில் நாடுகள் நிலப்பரப்பிற்காகப் போரிட்டன. பின்னர் தங்கம், கனிம வளங்கள், எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற வளங்களுக்காகப் போட்டியிட்டன. ஆனால், எதிர்காலத்தில் குடிநீருக்காகவே உலக நாடுகள் மோதும் நிலை உருவாகலாம் என்று பல அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் உலக அரசியலை ஆழமாகப் பாதிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தண்ணீர் இவ்வளவு முக்கியமா?
நிச்சயமாக ஆம்! உணவு இல்லாமல் மனிதன் சில நாட்கள் உயிர்வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் சில நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது. மனித உடலின் பெரும் பகுதியும் தண்ணீரால் ஆனது. விவசாயம், தொழில், மருத்துவம், மின்சாரம், சுற்றுச்சூழல் என அனைத்துத் துறைகளுக்கும் தண்ணீர் இன்றியமையாதது. இந்த உண்மையை திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது.
“வானங்களும், பூமியும் ஒன்றாக இருந்ததை நிராகரிப்போர் கவனிக்கவில்லையா?” அவற்றை நாம் பிரித்தோம். மேலும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம். இன்னும் அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்களா? (அல்குர் ஆன் 21:30)
அதேபோல், திருக்குறளும் “நீரின்றி அமையாது உலகு” என்று மனித வாழ்வின் அடிப்படை உண்மையை மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது.
பூமியின் நீரில் சுமார் 97 சதவீதம் உப்பு நீராகும். மனிதர்கள் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய நன்னீர் சுமார் 3 சதவீதம் மட்டுமே. அதிலும் பெரும்பகுதி பனிப்பாறைகள் மற்றும் பனி மலைகளில் உறைந்துள்ளது. மனித பயன்பாட்டிற்கு ஏற்ற நீர், ஏரிகள், ஆறுகள் மற்றும் நிலத்தடி நீராக மிகச் சிறிய அளவில் தான் உள்ளது. எனவே, பூமியில் தண்ணீர் அதிகமாக இருந்தாலும், பயன்படுத்தக்கூடிய நன்னீர் மிகவும் குறைவாகும்.
இதன் காரணமாக, பல நாடுகள் கடல் நீரை உப்பு நீக்கம் (ம்eவிழியிஷ்ஐழிமிஷ்லிஐ) செய்து குடிநீராக மாற்றுகின்றன.
சவுதி அரேபியா,
ஐக்கிய அரபு அமீரகம்,
இஸ்ரேல்,
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இந்த முறையைப் பயன்படுத்துகின்றன.
இந்தியாவிலும் சில இடங்களில் இத்திட் டம் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும், இது நிரந்தரத் தீர்வல்ல. அதிக செலவு, அதிக மின்சாரத் தேவை. சுற்றுச்சூழல் பாதிப்பு, மேலும் அதிகளவு கழிவு நீர் உருவாகுதல் போன்ற குறைபாடுகளும் இதில் உள்ளன. மேலும் உடல்நலம் குறைவும் இந்நீரால் ஏற்படுகிறது.
நமது முன்னோர்களுக்கு தண்ணீர் இல வசமாகக் கிடைத்தது. ஆறுகள் ஓடின; குளங்களும், கிணறுகளும் நிரம்பியிருந்தன. ஆனால் இன்று குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். நாளை தண்ணீரே உலகின் மிக விலையுயர்ந்த வளமாக மாறினால் ஆச்சரியப்படத் தேவையில்லை.
தண்ணீர் பற்றாக்குறைக்கு இறைவனோ, இயற்கையோ காரணமல்ல. மனிதனின் அலட்சியமே முக்கிய காரணம்.
மழை நீரைச் சேமிக்காதது,
ஏரிகள் மற்றும் குளங்களை ஆக்கிரமித்தது
ஆறுகளை மாசுபடுத்தியது,
அளவுக்கு மீறி நிலத்தடி நீரை உறிஞ்சியது
காடுகளை அழித்தது,
திட்டமிடப்படாத நகரமயமாக்கல் போன்றவை இந்தப் பிரச்சினையை மோசமாக்கியுள்ளன.
மழை நீரே நிலத்தடி நீரின் முக்கிய ஆதாரம். இதை திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். பின்னர் அதை பூமியில் தங்க வைத்தோம். (அல்குர்ஆன் 23:18)
இவ்வசனம், மழை நீரை இறைவன் அளவோடு அருளுகிறான் என்பதையும், அதை பாதுகாப்பது மனிதனின் பொறுப்பு என்பதையும் நினைவூட்டுகிறது.
“எண்ணெய் இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளரும். ஆனால் தண்ணீர் இருந்தால்தான் மனித இனம் வாழும்” இந்த உண்மையை உலகம் இன்று மெதுவாக உணரத் தொடங்கியுள்ளது.
தங்கம் இல்லாமல் மனிதன் வாழ முடியும். தண்ணீர் இல்லாமல் எந்த உயிரும் வாழ முடியாது. எனவே, நாளைய உலகின் உண்மையான தங்கம் தண்ணீரே என்பதில் சந்தேகமில்லை. இன்று நாம் வீணாக்கும் ஒவ்வொரு துளி நீரும், வருங்கால சந்ததியினரிடமிருந்து நாம் பறிக்கும் ஒரு சொத்தாகும். அதேபோல், இன்று நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீரும், அவர்களுக்காக நாம் சேமித்து வைக்கும் விலை மதிப்பற்ற செல்வமாகும்.
எனவே, மழை நீரைச் சேமிப்போம். ஏரிகள், குளங்கள், ஆறுகள் மற்றும் நிலத்தடி நீரைப் பாதுகாப்போம். தண்ணீரை சிக்கன மாகப் பயன்படுத்துவோம். இயற்கையைப் பாதுகாப்போம். இதுவே நமக்கும், நமது பிள்ளைகளுக்கும், உலகிற்கும் நாம் செய்யும் மிகப் பெரிய சேவையாகும்.
ஹதீத்கள் : 1. தண்ணீரை வீணாக்க வேண்டாம்.
நபி(ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரழி) அவர்கள் உளூ செய்வதைப் பார்த்து, “இந்த வீணடிப்பு என்ன?” என்று கேட்டார்கள். அவர், “உளூவிலும் வீணடிப்பு உண்டா?” என்று கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள்; “”ஆம்! ஓடும் ஆற்றங்கரையில் இருந் தாலும் (தண்ணீரை) வீணாக்காதே!” என்று கூறினார்கள். ஆதாரம்: சுனன் இப்னு மாஜா, ஹதீத் எண் 425.
2. உளூவில் அளவோடு தண்ணீர் பயன் படுத்துதல் :
அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள் ஒரு “முத்‘(சுமார் 0.6 0.75 லிட்டர்) அளவு தண்ணீரில் உளூ செய்தார்கள். ஐந்து “முத்‘ வரை ஒரு “ஸாஅ‘ அளவில் குளித்தார்கள். ஆதாரம் : அல்புகாரி, ஹதீத் எண் 201, முஸ்லிம், ஹதீத் எண் 325.
இஸ்லாம் தண்ணீரை அல்லாஹ்வின் அருட்கொடையாகக் கருதுகிறது. எனவே தண்ணீரை தேவைக்கு ஏற்ப மட்டுமே பயன் படுத்த வேண்டும். உளூ, குளியல் போன்ற இபாதத்துகளிலும் வீணாக்கக் கூடாது. வளங்கள் அனைத்தையும் சிக்கனமாகப் பயன் படுத்துவது நம் எதிர்கால தலைமுறைக்கு நல்லது. இதுவே முஸ்லிமின் நற்பண்பாகும்.
“இன்று தண்ணீரைக் காப்போம்; நாளை மனிதகுலத்தைக் காப்போம்.”
இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு வெறுமனே கடந்து செல்லாதீர்கள். தண்ணீரைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டு மல்ல; ஒவ்வொரு மனிதனின் தார்மீகப் பொறுப்பும் ஆகும். இன்று நாம் எடுக்கும் பொறுப்பான முடிவுகளே, நாளைய தலைமுறையின் உயிரைக் காக்கும்.