வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?

in 2026 செப்டம்பர்

வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா?

– அபூ இஸ்ஸத், இலங்கை

ஆகஸ்ட்  2026  தொடர்ச்சி…

இதனால் அவர்கள் தமக்கு இடப்பட்ட இறைக் கட்டளையைப் புறக்கணித்தார்கள். அதனால் அவர்கள் கடுமையான பெருவெள்ளத்தால் அள்ளுண்டு “ஸபஉ”வைச் சுற்றியுள்ள தூரப் பகுதிகளின் மூலை முடுக்குகளிலெல்லாம் சிதறிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் 7:473) மேலும்;

வெற்றும் புதராக மாறிப்போன இனிய கனிகள்  தரும்  வளமான  இரு தோட்டங்கள்:

அவர்களின் வளமான இனிய கனி வகைகளை நிரப்பமாகத் தரும் இரு செழிப்பான சோலைகள், தோட்டங்களுக்குப் பதிலாகப் புளிப்பும் உண்ண முடியாத அளவுக்குக் கடும் கசப்பும், நிறைந்த இலந்தைப் பழ மரங்களும், அதிகமான முற்களும் குறைவான பழங்களும் உள்ள “அராக்‘ மரங்களும் கருவேல மரத்துப் புதர் மண்டிய செடிகளும், குறைவான சில இலந்தை மரங்களுமாக மாற்றப்பட்டது. (34:15-17, இப்னு அப்பாஸ்(ரழி), முஜாஹித் (ரஹ்), தஃப்ஸீர் இப்னு இஸீர் 7:472-479)

கடுமையான வறுமையாலும், நோயாலும், நாம் அவர்களைத் தண்டித்தோம். (6:42)

பாவத்திற்கான தண்டனையானது வழிபாட்டில் ஏற்படும் பலவீனம், வாழ்க்கையில் ஏற்படும் வாழ்வாதார நெருக்கடி, இன்பத்தில் எதிர்ப்படும் இடர்பாடு ஆகியவைகளாகும் என்று அலீ(ரழி) அவர்கள் கூறினார்கள். (அலீ (ரழி) அவர்களின் நண்பரான இப்னு கியரா(ரஹ்), தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் 7:479)

அளவை நிறுவையில் மோசடி செய்தால் பஞ்சத்தின் மூலமாகவும், பொருளாதார நெருக்கடியின் மூலமாகவும் அவர்கள் பீடிக்கப்படுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு உமர் (ரழி), இப்னு மாஜா 4019) அதனையே எல்லாம்  வல்ல  ரஹ்மானாகிய;

 அல்லாஹ் ஓர் ஊரை முன்னுதாரணமாகக் கூறுகின்றான். அவ்வூரானது பாதுகாப்பானதாக வும், நிம்மதியுடனும், அமைதியானதாகவும் இருந்தது. அதற்கான வாழ்வாதாரமாக ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவ்வூருக்குரிய உணவுகள் தாராளமாக வந்து சேர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அவ்வூரார் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறக்கலானார்கள்.

எனவே அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய, பாவமான)வற்றின் காரணமாக பசி மற்றும் பயம் எனும் ஆடைகளை அல்லாஹ் அவ்வூ(ரா)ருக்கு அணிவித்தான். (16:112) அவர்கள் தங்களது செயலின் தீய பலனை (இவ்வுலகிலும்) சுவைத்தார்கள். அன்றியும் (மறுமையிலும்) அவர்களுக்குத் துன்புறுத்தும் கடின வேதனை உண்டு. (64:5) ஒரு மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணமாக அவனது வாழ்வாதாரம் நிச்சயமாகத் தடை செய்யப்பட்டு விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸவ்பான்(ரழி), இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் 4:938)

அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களுக்கிடையே (மழையாகிய) அதை நாம் (பல தூர திசைகளுக்குத்) திருப்பி விடுகின்றோம். (25:50) வசனத்திற்கு யாருக்கு மழை பொழியவில்லையோ அவர்கள் தாம் செய்த பாவங்களின் காரணத்தாலேயே அவர்களுக்கு மழை தடுக்கப்பட்டுவிட்டது என்பதை அவர்கள் உணர வேண்டும். பின்னர் அப் பாவங்களி லிருந்து அவர்கள் விலக வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு மழையைத் திருப்பி விடுகிறோம் என்பதாக அநேகமான விரிவுரையாளர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் அல்பஹ்ருல் முஹீத், இப்னு கஸீர் 6:492) இது போன்று;

ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, (அல்லது) இரு முறையோ அவர்கள் (அனர்த்தங்களி னால்) சோதிக்கப்படுகின்றார்கள் என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வது மில்லை😉 அது பற்றி, நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (அல்குர்ஆன் 9:126) இங்கு உயர்ந்தோன் அல்லாஹ். பெரும்பாலான மனிதர்களின் திருந்தாத போக்கைச் சுட்டிக்காட்டுகின்றான். அவர்களுக்கு வாழ்க்கையில் எத்தனை சோதனை வந்தாலும் அவர்கள் திருந்துவதுமில்லை, தாம் புரிந்த தவறுகளுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதுமில்லை, படிப்பினை பெறுவதுமில்லை. (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கதீர் : 4:446-448)

(நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை அவர்கள் (கண்ணால்) பார்க்கவில்லையா? (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வீக) அடையாளங்களாலும் இவர்களை விட மிகக் கடினமானவர்களாகவே இருந்தனர். அப்போது, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக்கொண்டான். அல்லாஹ்வி(ன் பிடியி)லிருந்து அவர்களைக் காப்பவர் எவரும் இருக்கவில்லை. (அல்குர்ஆன் 40:21) என்றும்;

ஆதலால், நாம் அவர்களைத் தண்டித்தோம், ஆகவே, (நபியே!) நம்மால் அனுப்பப்பட்ட தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை நீர் (கண்ணால் கவனித்துப்) பார்ப்பீராக! (அல்குர்ஆன் 43:25) என்றும்;

மேலும் அவர்கள் மீது நாம்(கல்) மாரியைப் பொழிவித்து (அவர்களை அழித்து) விட்டோம். ஆகவே, (இக்) குற்றவாளிகளின் இறுதி முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் (கண்ணால்) நோக்குவீராக! (அல்குர்ஆன் 7:84) என்றும்;

(நபியே!) நீர் கூறுவீராக: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது? என்பதை(க் கண்ணால்) பாருங்கள், (முன்னிருந்த) அவர்களில் பெரும்பாலோர், இணை வைத்துக் கொண்டிருப்போராவாகவே இருந்தனர். (அல்குர்ஆன் 30:42) என்றும்;

(ஆகவே) பூமியில் பிரயாணம் செய்து குற்றவாளிகளின் முடிவு எப்படி இருந்தது என்பதை(க் கண்ணால் கவனித்து)ப் பாருங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர் ஆன் 27:69) என்றும்;

இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து, இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை (இவர்கள் கவனித்து)ப் பார்க்கவேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களை விட மிகுந்த பலசாலிகளாக இருந்தனர், இவர்கள் எவ்வளவு பூமியைப் பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்திச் செய்தார்களோ அதைவிட அதிகமாகப் (பன்மடங்கு பூமியைப்) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். இன்னும் (அல்லாஹ் வினால் அனுப்பப்பட்ட) அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களிடம் வந்தார்கள், ஆகவே அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை. எனினும் அவர்கள் (அந்நபிமார்களைப் பொய்யாக்கி) தங்களுக்குத் தாமே அநியாயம் செய்துகொண்டனர். (அல்குர்ஆன் 30:9) என்றும்;

பூமியில் அவர்கள் சுற்றித்திரிந்து, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை அவர்கள் (பார்க்கவில்லையா?) காணவில்லையா? மேலும், அவர்கள் இவர்களை விட பலத்தால் மிகக் கடினமானவர்களாக இருந்தனர். (அவ்வாறிருந்தும், அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து அவர்களால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை) மேலும், அல்லாஹ் அவனை இயலாமையில் ஆக்குவதற்கு வானங்களிலோ, பூமியிலோ எப்பொருளும் இருக்கவில்லை, நிச்சயமாக அவன் (யாவையும்) நன்கறிந்த வனாக, மிக்க ஆற்றலுடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 35:44) என்றும்;

பூமியில் அவர்கள் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு பிரயாணம் செய்வார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்கள் அதன்மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய காதுகள் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும், நிச்சயமாக அவர்களுடைய (வெளிப்) பார்வைகள் குருடாகவில்லை, எனினும் நெஞ்சங்களி லுள்ள (அவர்களுடைய) இதயங்கள் குருடாகிவிட்டன. (அல்குர்ஆன் 22:46) என்றும்;

உமக்கு முன்னர் ஊர்வாசிகளிலுள்ள (மனித இனத்தவர்களில்) ஆடவர்களை அல்லாமல் (மலக்குகளை) நாம் (தூர்களாக) அனுப்பவில்லை, அவர்களுக்கு (நம்முடைய கட்டளைகளை) வஹீ மூலம் அறிவிக்கின்றோம், அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு பிரயாணம் செய்தால்) அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி ஆயிற்று என்பதை அவர்கள் (தமது கண்ணால்) கண்டுகொள்வார்கள். மறுமையின் வீடோ பயபக்தியுடையோர் களுக்கு மிக்க மேலானது, நீங்கள் விளங்கிக் கொள்ளமாட் டீர்களா? (அல்குர்ஆன் 12:109) என்றும்;

இவர்கள் பூமியில் சுற்றித் திரிவதில்லையா? அப்போது அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை அவர்கள் (கண்ணால்) பார்த்திருப்பார்கள். அவர்களோ இவர்களை விட (எண்ணிக்கையால்) மிக அதிகமானவர்களாகவும், (உடல்களின்) பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற) அடையாளச் சின்னங்களாலும் (மற்றவர்களை விட) மிகக் கடினமானவர்களாக இருந்தார்கள். பின்னர் அவர்கள் சம்பாதித்(து வைத்)திருந்தது அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (அல்குர்ஆன் 40:82) என்றும்;

அவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (அவ்வாறாயின்) அவர்களுக்கு முன்னர் (அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் (கண்ணால்) கண்டு கொள்வார்கள். அவர்கள் மீது அல்லாஹ் அடியோடு அழிவை ஏற்படுத்திவிட்டான். நிராகரிப்போருக்கும் இவை போன்றவை உண்டு.  (அல்குர்ஆன் 47:10) என்றும்;

திட்டமாக உங்களுக்கு முன்னரும் (இத்தகைய) பல வழிமுறைகள் சென்றிருக்கின்றன. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (அல்லாஹ்வுடைய வசனங்களைப்) பொய்யாக்கி யோரின் முடிவு எப்படி இருந்தது என்பதை(க் கண்ணால்) பாருங்கள். (அல்குர்ஆன் 3:137) என்றும்; நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து பின்னர் (உங்களைப் போல் அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று நீங்கள் (கண்ணால்) கவனித்துப் பாருங்கள் என்று (நபியே! நீர் அவர்களிடம்) கூறுவீராக! (அல்குர்ஆன் 6:11)  என்றும்;

ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கின்றோம். (அத்தூதர் அச்சமூகத்தவரிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள். (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் அனைத்து ஷைத்தான்களாகிய) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்) ஆகவே, அவர்களின் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார் கள். இன்னும் எவர் மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (அத்தூதர்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை(க் கண்ணால் கவனித்து)ப் பாருங்கள். (அல்குர்ஆன் 16:36) என்றும்;

பூமியில் சுற்றித்திரிந்து, படைப்பை எவ்வாறு (ஆரம்பத்தில்) அவன் துவங்கி, பின்னர் அல்லாஹ் மற்றொரு உற்பத்தியை (எவ்வாறு) உண்டுபண்ணுகிறான் என்பதை(க் கண்ணால்) பாருங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன் என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 29:20) என்றுமாக; மேலே உள்ள சில வசனங்களில் பூமியைச் சுற்றி வந்து “கண்ணால்‘ பாருங்கள்! பாருங்கள்!! என்று அல்லாஹ் சொல்வதானது; அது என்ன பார்வை? எப்படிப்பட்ட பார்வை? எத்தகைய பார்வை? என்பதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: