விஞ்ஞானத்தை எந்த அளவிற்கு நம்பலாம்!

in 2026 செப்டம்பர்

விஞ்ஞானத்தை எந்த அளவிற்கு நம்பலாம்!

அ. நஜ்முத்தீன்

பொதுவாக, விஞ்ஞானம் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், விண்வெளிப் பயணங்களையும், மருத்துவத் துறையின் வளர்ச்சியையும், தகவல் தொடர்பு வசதிகளையும் மனிதகுலத்திற்கு வழங்கியுள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த பல கண்டுபிடிப்புகள், இன்று நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. குறிப்பாக, கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு (AI) போன்றவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவுகளாகும்.

அதேபோன்று, மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் ஆராய்ச்சிகளும் விஞ்ஞானத்தின் மூலமே கிடைத்துள்ளன. இவற்றில் பல ஆதாரங்கள், பரிசோதனைகள் மற்றும் மீண்டும் சோதித்து உறுதிப்படுத்தக்கூடிய முறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. எனவே, மனித அறிவால் இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், விஞ்ஞானம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நம்பகமான அறிவு என்பதை  மறுக்க  முடியாது.

ஆனால், விஞ்ஞானம் எல்லா நேரங்களிலும் இறுதியான உண்மையைச் சொல்லுமா? என்ற கேள்விக்கு, இஸ்லாமிய பார்வையில் நாம் “இல்லை” என்று கூறுகிறோம். ஏனெனில், உண்மையின் இறுதியான அளவு கோலாக முஸ்லிம்கள் திருக்குர்ஆனை, ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விஞ்ஞானம் மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்று ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு கருத்து, நாளை புதிய ஆதாரங்கள் கிடைத்தால் திருத்தப்படலாம். எனவே, விஞ்ஞானக் கருத்துக்களை இறுதியான மாற்றமற்ற  உண்மை   என்று  கருதமுடியாது.

இதற்கு மாறாக, முஸ்லிம்களின் நம்பிக்கையில் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் இறைவாக்காகும். எனவே, குர்ஆனுக்கும், விஞ்ஞானக் கருத்துகளுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றும் இடங்களில், ஒரு முஸ்லிம் மிகவும் கவனமாக அணுகவேண்டும். விஞ்ஞானத்தின் தற்காலிகக் கருத்தை இறுதியான உண்மை என்று ஏற்றுக்கொண்டு  குர்ஆனை  மறுப்பது  சரியான  அணுகுமுறை  அல்ல.

உதாரணமாக, மனிதன் பூமியில் மட்டுமே வாழ்வதற்காக படைக்கப்பட்டவன் என்ற கருத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆனால் விஞ்ஞானிகள் மனிதன் சந்திரனிலோ செவ்வாய் கிரகத்திலோ எதிர்காலத்தில் வாழமுடியுமா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய எதிர்காலக் கணிப்புகளை ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட இறுதியான  உண்மைகளாகக்  கருதுவது  சரியானதல்ல.

அதேபோன்று, வானங்களும், பூமியும் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்து பின்னர் பிரிக்கப்பட்டதாகக் கூறப்படும் குர்ஆன் வசனத்தை  நாம் காண்கிறோம்.

“வானங்களும், பூமியும் இணைந்திருந்தன. பின்னர் அவற்றை நாம் பிரித்தோம்”. (அல்அன்பியா 21:30)

இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு, சிலர் இதனை நவீன பிரபஞ்சவியல் கருத்துகளுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் ஒரு முக்கியமான விசயத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். குர்ஆன் அறிவியல் பாடநூல் அல்ல. அதன் முதன்மை நோக்கம் மனிதனை நேர்வழிப்படுத்துவதாகும். எனவே, ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் ஒரு வசனத்துடன் கட்டாயமாகப் பொருத்துவது சரியான  அணுகுமுறை  அல்ல.

மேலும், குர்ஆனில் பூமி குறைக்கப்படுவது தொடர்பாகவும் சில வசனங்கள் குறிப்பிடப்படுகின்றன. உதாரணமாக, அர்ரஅத் 13:41 சிலர் இதனை பூமியின் நிலப்பரப்பு மட்டும் குறைவதோடு தொடர்புபடுத்துகிறார்கள். ஆனால் அந்த வசனங்களின் சரியான பொருளை புரிந்து கொள்ளவேண்டும். (இதைப் பற்றி ஏற்கனவே நாம் கட்டுரையில் எழுதியுள்ளோம்) ( 2023, மே இதழில் காணலாம்)

எனவே, ஒரு அறிவியல் கருத்து குர்ஆனுடன் ஒத்துப்போகிறது என்பதற்காக மட்டுமே அது உண்மை என்று ஒத்துப்போக தேவையில்லை. அதேபோல் அது பொய் என்றும் உடனடியாக முடிவு செய்வதும் சரியானதல்ல.

இதேபோன்று, தேனீக்கள் மற்றும் தேன் உற்பத்தி குறித்து திருக்குர்ஆன் கூறும் வசனங்களும் குறிப்பிடத்தக்கவை. அந்நஹ்ல் 16:68,69 வசனங்களில் தேனீக்கள் பற்றியும், அவற்றிலிருந்து பல்வேறு நிறங்களுடைய பானம் வெளிப்படுவது பற்றியும் கூறப்படுகிறது. பின்னர் மனிதர்கள் தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது என்று ஆராய்ந்துள்ளனர். பின்னர் குர்ஆன் கூறுவதே சரியயன ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், குர்ஆனை விஞ்ஞானத்தின் அடிப்படையில் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. குர்ஆன் இறைவனின் நெறிநூல் என்ற நம்பிக்கை அதற்கே உரிய அடிப்படையில் உள்ளது. அதே வேளை, இயற்கையைப் பற்றிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் குர்ஆனின் சில கருத்துகளுடன் ஒத்துப் போகும்போது, அவை ஒரு முஸ்லிமுக்கு சிந்திக்கவும் இறைவனின் வல்லமையைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ளவும் உதவக் கூடும்.

ஆகவே, விஞ்ஞானம் என்பது உண்மைகளை அறிந்துகொள்ளப் பயன்படுத்தும் மிக முக்கியமான ஓர் ஆய்வு முறை: ஆனால் அது இறுதியான, மாற்றமற்ற உண்மையின் ஒரே அளவுகோல் அல்ல என்பதே இஸ்லாமிய பார்வையில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்தாகும்.

விஞ்ஞானத்தை நாம் கண்மூடித்தனமாக நம்பவும் கூடாது. அதே நேரத்தில் விஞ்ஞானத்தின் அனைத்து கண்டுபிடிப்புகளையும் மறுக்கவும் கூடாது. ஆதாரங்களை ஆராய்ந்து, எது நிரூபிக்கப்பட்ட உண்மை. எது தற்போதைய அறிவியல் கருத்து, எது இன்னும் ஆய்வில் உள்ளது என்பதை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

முக்கியமாக, குர்ஆனின் வசனங்களை அறிவியல் கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றிப் பொருள் கொள்ளாமல், முதலில் அதன் மொழி, சூழல் மற்றும் இஸ்லாமிய விளக்கங்களின் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும்.

முடிவாக, விஞ்ஞானம் மனித அறிவின் வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான கருவி. ஆனால் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை, இறுதியான உண்மையின் அடிப்படை அல்லாஹ்வின் வெளிப்பாடாகும். எனவே, விஞ்ஞானத்தைக் கற்கவும், ஆதாரங்களை ஆராயவும், கேள்வி கேட்கவும் வேண்டும். அதே நேரத்தில் இறைவனின் இறைநூலான அதன் வழிகாட்டுதலையும் அடிப்படையாகக் கொண்டு  சிந்திக்க வேண்டும்.

Previous post:

Next post: