ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

in 2008 டிசம்பர்

ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

தொடர் : 4

உண்மை இதழ் ஆசிரியர் திரு.கீ.வீரமணி அவர்களே, அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு என கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே. சத்தியத்தை – நேர்வழியை அறிந்து நடப்பவர்களுக்கே இறுதி வெற்றி என அபூ அப்தில்லாஹ்வாகிய நான் நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன். அந்நஜாத் இதழுக்கு உங்களின் உண்மை இதழின் மாற்றுப் பிரதியை (Exchange Copy) அனுப்பும் நேர்மை உணர்வும் உங்களிடம் இல்லை என மீண்டும் குற்றப்படுத்துகிறேன்.

இறைவனுக்கும் மனிதனிக்கும் இடையில் தரகர்களைப் புகுத்தும் மதங்களையும், மதங்களைக் கொண்டு வயிறு வளர்த்து வரும் மதகுருமார்களையும் உங்களைவிட ஒருபடி மேலே சென்று கடுமையாக விமர்சித்து வருவதை அந்நஜாத் மாற்றுப் பிரதியை முறையாக நீங்கள் படித்து வந்தால் நன்கு அறிவீர்கள். முஸ்லிம்களாகிய எங்களுக்கும் நாத்திகர்களாகிய உங்களுக்கும் இடையேயுள்ள பெருத்த வேறுபாடு எங்களையும், உங்களையும் படைத்து உணவளித்து நிர்வகித்து வரும் ஒரே ஒரு இறைவனையும் நீங்கள் மறுத்து நாத்திகம் பேசுவதுதான்.

நாங்கள் இறைவனால் அவனது தூதர்களாக அனுப்பப்பட்ட ஏப்ரஹாம், மோஸஸ், ஜீஸஸ், முஹம்மது (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக) போன்றவர்கள் கூறியபடி அனைத்தையும் படைத்த ஒரு இறைவன் இருக்கிறான் என்று உறுதியாக நம்புகிறோம். நீங்களோ பெரியார் போன்றவர்களின் கூற்றுப்படி ஐம்புலன்களுக்குள் அடைபடாத அபவ்தீக ஓர் இறைவன் இல்லை; அதை போதிப்பவன் முட்டாள்; அக்கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்கிறீர்கள். அதாவது மதகுருமார்களின் கற்பனையில் உருவான பொய்க் கடவுள்களின் பட்டியலில் ஒரே உண்மைக் கடவுளையும் சேர்த்து மறுக்கிறீர்கள்.

நாங்கள் நம்பும் இறைத் தூதர்கள் ஒழுக்க சீலர்களா? சொல்லும் செயலும் ஒத்த நிலையில் செயல்பட்டார்களா? சொன்னதை நடைமுறைப் படுத்திக் காட்டினார்களா? சாதனையாளர்களா? அல்லது நீங்கள் நம்பிக்கை வைத்து அவர்களின் கற்பனைகளை ஏற்று நடக்கும் பெரியார் போன்றோர் ஒழுக்க சீலர்களா? சொல்லும் செயலும் ஒத்த நிலையில் செயல்பட்டார்களா? சொன்னதை நடைமுறைப்படுத்திக் காட்டினார்களா? சாதனையாளர்களா? என்று ஆய்வு செய்து பார்த்தால் உண்மை வெளிப்பட்டு விடும்.

ஒரே ஒரு இறைவன் மட்டுமே உண்டு என்று மக்களுக்குப் போதித்த இறைத் தூதர்கள் உண்மையாளர்களா? அல்லது பொய்யர்களா? அதற்கு மாறாக அந்த ஒரே இறைவனும் இல்லை என்று மக்களுக்குப் போதித்த பெரியார் போன்றவர்கள் உண்மையாளர்களா? அல்லது பொய்யர்களா? என்பது குன்றிலிட்ட தீபமாக வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்ற அடிப்படையில் இருசாராரின் சொல், செயல், நடவடிக்கைகள் இவற்றை ஆய்வு செய்து வருகிறோம்.

அந்த வரிசையில் மதுவை ஒழிக்க பாடுபட்ட இரு சாராரிலும் இறைத்தூதர் வெற்றி பெற்றதையும், பெரியார் தோல்வி கண்டதையும் தமிழ்நாடு மதுவில் மிதப்பதையும் புள்ளி விபரங்களுடன் பார்த்தோம். அடுத்து சிலை வணக்கத்தை ஒழிக்கப் பாடுபட்ட இருசாராரிலும் இறைத்தூதர் வெறும் 23 ஆண்டுகள் உழைப்பில் மகத்தான வெற்றி பெற்றார். இன்று 1430 ஆண்டுகள் ஆகியும் முஸ்லிம்கள் சிலை வணக்கத்தில் ஈடுபடுவதில்லை.

தங்களின் உயரிலும் மேலாக மதித்துப் போன்றும் அத்தூதரின் சிலையைக் கூட வடித்து வணங்குவதில்லை. மாற்றார்கள் அவரின் சிலையை, படத்தையோ வடிப்பதை அனுமதிப்பதில்லை என்பதையும் நாத்திகர்களாகிய நீங்களும் மறுக்க முடியாது.

முஸ்லிம்களிடையே திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டுள்ள மதகுருமார்களான புரோகிதர்கள் முஸ்லிம் சமுதாயத்திலும், மண்ணறை சடங்குகள், சமாதி(தர்கா) வழிபாடு என் அந்த ஒரே இறைவனுக்கு இணைவைக்கும் பொய்க் கடவுள்களை உருவாக்கிய நிலையிலும், இறைத் தூதரின் உருவச் சிலையையோ, வடிக்க முடியாத அளவில் இறுதி இறைத் தூதரின் போதனைகள் செயலிழக்காமல் இன்று 1430 ஆண்டுகள் ஆகியும் உயிருடன் இருக்கின்றன.

அதற்கு மாறாக நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள பெரியார் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் நீண்டகாலம் சிலை வணக்கத்தை ஒழிக்கப் பாடுபட்டும் அவரால் அதை சாதிக்க முடிந்ததா? அவர் உயிருடன் இருக்கும்போதே அவரது போதனைக்கு மாறாக அவரே சிலையாக வடிக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறார். இன்று தமிழகமெங்கும் சாமி சிலைகளைவிட பெரியாரின், பெரியாரின் சீடர்களின் சிலைகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. சாமி சிலைகளுக்காக மாலைகள், அபிஷேகங்கள் என செலவிடப்படுவதை விட நாத்திகர்களின் சிலைகள் செதுக்கவும். பின்னர் தொடர்ந்து மாலை மரியாதை செய்யவும் மிக அதிகமாக கோடிக்கணக்கான ரூபாய்கள் வீண் விரயம் செய்யப்படுகின்றன. ஆக சிலைகளைப் பற்றியும், அவற்றிற்காகச் செலவிடப்படும் வீண் செலவுகள் பற்றியும் பெரியாரின் போதனைகளை அவராலும் கடைபிடிக்க முடியவில்லை. அவரது தொண்டர்களான உங்களைப் போன்றவர்களாலும் கடைபிடிக்க முடியவில்லை. சிலை வழிபாட்டு ஒழிப்பில் உங்கள் அபிமான நம்பிக்கை நட்சத்திரம் பெரியார் படுதோல்வி அடைந்துள்ளார் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? அவரது அறிவுரையின்படி அவரே நடக்கவில்லை என்பது உறுதியாகிறது. இந்த நிலையில் கடவுளை கற்பிப்பவன் முட்டாள்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என முழக்கமிட உங்களுக்கு நாக்கூசவில்லையா? மறைந்த தலைவர்களை படமாகவும், சிலையாகவும் வடித்து மலர்தூவி நினைவாஞ்சலி செய்துவருவதால் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அத்தலைவர்களே பொய்க் கடவுள்களாக உருமாறுகிறார்கள் என்பதைப் பகுத்தறிய முடியாத பெரியார் தொண்டர்கள் தங்களை பகுத்தறிவாளர்கள், சுயமரியாதைக்காரர் கள் என்று நாக்கூசாமல் சொல்லிக் கொள்ள வெட்கப்படவேண்டும்.

அடுத்து பெரியாருக்கு நாத்திகச் சிந்தனைத் தோன்ற பிரதான காரணம் மக்களிடையே காணப்படும் ஜாதிப் பிரிவினயைாகும். ஒரே நிலையில், ஒரே வழியில் பிறக்கும் மக்களை ஜாதியின் பெயரால் பிரித்து கொடுமைப்படுத்தும் தீய செயலாகும். ஒரு காலத்தில் ஹிந்து மக்களிடையே புகுந்து கொண்ட மனு என்ற உணர் ஜாதிக்காரனின் சுயநலப் போதனைப்படி மக்களை நான்கு வர்ணத்தாராகப் பிரித்ததோடு, பள்ளன், பறையன், சக்கிலியன் என தீண்டத்தகாத மக்களாக பிரித்து அந்த மக்களை நாயிலும் கேடாக, மிருகங்களை விடக் கேவலமாக இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தும் பாதகச் செயலைப் பார்த்தே பெரியார் கொதித்தெழுந்தார்.

பிராமணர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி இந்த அராஜகச் செயலை செய்து வந்ததால், அந்தக் கடவுளே இல்லை என்று நிலைநாட்டி விட்டால் ஜாதி வேறுபாடுகள் ஒழிந்துவிடும் என பெரியார் கற்பனை செய்து கொண்டு, தனது தவறான பிரசாரத்தைத் தொடங்கினார். இது போன்றதொரு குறுகிய எண்ணத்தில்தான் தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டால் மதுப்பழக்கம் ஒழிந்துவிடும் என கற்பனை செய்து கொண்டு தனது தோட்டத்திலிருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டிச் சாய்த்து, தென்னை மரங்களில் கிடைக்கும் பல நல்ல பலன்களை காவு கொடுத்தார். இதிலிருந்தே பெரியாரின் கற்பனைகள், போதனைகள் அனைத்தும் குறுகிய கண்ணோட்டத்தில் உருவானவை என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரே ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் மனிதர்களை படைத்ததாக இறைவன் அல்குர்ஆனில் கூறி இருக்க, அதை இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மரபணு சோதனைகள் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்க, மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் புரோகிதனான மனுவின் கற்பனையில் உதித்த ஜாதி வேற்றுமையை இறைவனோடு சம்பந்தப்படுத்தி, அந்த ஒரே இறைவனை மறுப்பவர்களை பகுத்தறிவாளர்கள் என ஒப்புக்கொள்ள முடியுமா?

அது சரி! கடவுளே இல்லை என்று நிலைநாட்டிவிட்டால் ஜாதி வேற்றுமைகள் ஒழிந்து விடும்; இன இழிவு நீங்கிவிடும் என கற்பனை செய்துகொண்டு கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்த பெரியார் அதில் வெற்றி கண்டாரா? தமிழகத்தில் ஜாதி வேற்றுமை ஒழிந்ததா? இன இழிவு நீங்கியதா? தீண்டத்தகாதவர்கள் என வெறுத்து ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சுய மரியாதை கிடைத்ததா? இரட்டைக் குவளை நடைமுறை ஒழிக்கப்பட்டதா? தீண்டாமை சுவர் அகற்றப்பட்டுவிட்டதா? உத்தபுரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இப்போது சட்டக் கல்லூரிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? பகுத்தறிவு வாதம் பேசுவார்கள் இதற்கு என்ன விடை வைத்திருக்கிறார்கள்?

அரசின் சமபந்தி போஜனத்தாலோ, சமத்துவபுரம் திட்டங்களாலோ, இவை போன்ற திட்டங்களால் இன இழிவு நீங்கியதா? பெரியாரின் சீடர்களால் கடந்த 41 ஆண்டுகளாக தமிழகம் ஆளப்பட்டு வரும் நிலையில் அந்த அரசுகளின் சட்டங்களால், ஜாதி வேற்றமையை ஒழிக்க முடிந்ததா? இன இழிவை நீக்க முடிந்ததா? மூ நம்பிக்கைகளை பகுத்தறிவு என்று நம்பிக்கொண்டு செயல்படும் போலி பகுத்தறிவாளர்களே இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? பெரியாரின் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட உழைப்பின் ஜாதி வேற்றுமைகளை ஒழித்து, இன இழிவை நீக்கி சமத்துவ சகோதரத்துவ மனித சமுதாயத்தை நிலைநாட்ட முடிந்ததா? பெரியாருக்கு இதிலும் படுதோல்வியே பரிசாகக் கிடைத்துள்ளது. பெரியார்களின் சீடர்களாலும் இன்று வரை இந்த இழிவுகளிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களை கரையேற்ற முடியவில்லை.

ஜாதி வேற்றுமைகளை ஒழித்துக்கட்டி, இன இழிவை நீக்கி சமத்துவ சமத்துவம் காண தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் பெரியாரைப் போல் அறிஞர்கள் தங்களின் அறிவில் பட்ட முயற்சிகளை எல்லாம் செய்து முடித்து விட்டார்கள். ஆனால் பலன் பூஜ்யம். பல நூற்றாண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

இப்போது தனது இறுதித் தூதர் மூலம் இறைவன் அளித்த வாழ்க்கை நெறி, வெறும் 23 ஆண்டுகளிலேயே சாதித்த சாதனை பாரீர். நமது தமிழகத்தில் மிக இழிவாக வெறுத்து ஒதுக்கப்படும் பள்ளு, பறை, சக்கிலி என்று இழிவுபடுத்தப்படும் மக்களைவிட மிகக் கொடுமையாக, அடிமையாக அன்றைய நீக்ரோ கருப்பு இன மக்களை அரபியர்கள் இழிவுபடுத்திக் கொண்டிருந்தார்கள். இறுதித் தூதர் தனது 23 ஆண்டுகால முயற்சியில், அந்த அடிமை இனத்திலுள்ள பிலால் (இறைவன் அவரை பொருந்திக் கொள்வானாக) நீக்ரோ அடிமைக்கு அரபியர்கள் போல் சம அந்தஸ்து கொடுத்து, மக்களை அரபியர்கள் போல் சம அந்தஸ்து கொடுத்து, மக்களை தொழுகைக்காக அழைக்கும் மகத்தான பொறுப்பையும் கொடுத்தார்கள். இறை இல்லமான கஃபாவின் மேலே ஏறி நின்றுகொண்டு தொழுகைக்கு அழைக்கும் (பாங்கு ஒலிக்கும்) பேறு பெற்றார்கள். இன, நிற இழிவு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

இங்கே நமது தமிழகத்திலேயே இந்த அதிசயத்தை நீங்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். தமிழக முஸ்லிம்களில் 99 சதவிகிதத்தினர் பள்ளர், பறையர், சக்கிலியர் என மேல் ஜாதியினரால் இழிவு படுத்தப்பட்டு, ஊருக்குள் நுழைய முடியாது. பொதுப் பாதையில் நடக்க முடியாது. கோயிலுக்குள் நுழைய முடியாது என்றெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டு, அந்த இன இழிவிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும் விடுதலை பெறும் நோக்கில் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம்கள் ஆனவர்களே.

அவர்களோடு முன்னர் ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு ஜாதி வேற்றுமை இன்று அவர்களிடம் காணப்படுகிறதா? இன்று அவர்கள் பள்ளிகளில் முன் நின்று முஸ்லிம்களுக்காக தொழுகை நடத்தும் உரிமையையும், தொழுகைக்கு அழைக்கும் உரிமையையும் சர்வ சாதாரணமாகப் பெற்றிருப்பதை மறுக்க முடியுமா? எந்த ஊருக்குள் வர முடியாது. எந்தப் பாதையில் நடக்கக் கூடாது என்றெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டார்களோ அந்த மேல் ஜாதியினர் நடமாடும் பாதைகளிலும் சர்வசாதாரணமாக போய்வர முழு உரிமை பெற்றிருக்கிறார்களா? இல்லையா?

எந்த மேல் ஜாதியினர் இவர்களை இழி ஜாதியினராகவும், தீண்ட தகாதவர்களாகவும் கருதி ஒதுக்கி வைத்தார்களோ, அந்த மேல் ஜாதியினரே அவர்களுக்கு மரியாதை கொடுத்து ‘வாங்க பாய்’ ‘உட்காருங்கள் பாய்’ என்று தங்கள் பக்கத்திலேயே உட்கார வைத்து கண்ணியம் கொடுப்பதை பார்க்கத்தானே செய்கிறீர்கள். இந்த மரியாதையும், கண்ணியமும் அவர்களில் கிறிஸ்தவர்கள் ஆனவர்களுக்கும், பெளத்தவர்களாக மாறியவர்களுக்கும் கிடைக்கிறதா? எண்ணிப் பாருங்கள். அங்கெல்லாம் இந்த இன இழிவு ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களில் முஸ்லிம்கள் ஆனவர்களிடம் மட்டும் அந்த இன இழிவு இருந்த இடம் தெரியாமல் போயே போய்விட்டது. இந்த அதிசயத்தை நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையால் நிகழ்த்திக் காட்ட முடிந்ததா?

ஆம்! அந்த எண்ணத்தில் 1947-ல் “இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என கூட்டங்களில் பெரியார் பேசினார். இதழ்களில் எழுதினார். ஆனால் உங்களைப் போன்றவர்கள், இன்று மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு தூய வாழ்க்கை நெறியை மற்ற மதங்களைப் போல் மதமாக்கி வயிறு வளர்க்கும் முஸ்லிம் மதப் புரோகிதர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் முஸ்லிம்கள் மூழ்கி இருக்கும் மூட நம்பிக்கைகளைக் காட்டி, மூடச் சடங்கு சம்பிரதாயங்களைக் காட்டி பெரியாரின் மனதை மாற்றிவிட்டீர்கள். முஸ்லிம்கள் இப்புரோகிதர்களின் வழிகெட்ட போதனைகளால் மூட நம்பிக்கைகளிலும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கி இருந்தாலும் அவர்களிடம் ஜாதி வேற்றுமையோ, இன இழிவு நடைமுறைகளோ இல்லை என்பதையும், உயர் ஜாதியினர் அவர்களை முஸ்லிம்கள் என்ற நிலையில் மதித்து நடக்கிறார்கள். அந்த பாக்கியமாவது ஜாதி வேற்றுமையிலும், இன இழிவிலும் சிக்கிப் புழுவாகத் துடித்துக் கொண்டிருக்ம் தலித் மக்களுக்கு அவற்றிலிருந்து விடுதலையாவது கிடைக்குமே என்பதை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டீர்கள். உங்களின் நாளிதழுக்கு விடுதலை என பெயரிட்டிருக்கிறீர்களே அல்லாமல் இன இழிவு காரணமாகத் துடித்துக் கொண்டிருக்கும் அந்த மக்களின் ‘விடுதலை’ பற்றி போலி பகுத்தறிவாளர்களாகிய உங்களுக்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

1947-ல் பெரியாருக்கு அன்று உதித்த சிந்தனையை ஏற்று, நீங்கள் எல்லாம் அவருக்கு உறுதுணையாக இருந்து, அதைச் செயல்படுத்தி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அடுத்துப் பார்ப்போம்.

**************

Previous post:

Next post: