நஜாத் பேசுகின்றது

in 1986 ஜுலை,பொதுவானவை

பேரன்பு கொண்ட சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் எங்களுக்கு அளித்து வருகின்ற பேராதரவும், ஒத்துழைப்பும், எங்களுக்கு மேலும் ஆர்வமூட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளன. எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் ஒருசில கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் ஒருசில விளக்கங்கள்.

முதல் தேதி பிறந்தவுடன் “ஏன் நஜாத் இன்னும் வரவில்லை?” என்று ஏராளமான கடிதங்கள் வருகின்றன. முதல் இதழ் ஏப்ரல் 15ஆம் தேதியன்று தான் வெளிவந்தது. பிரதி மாதமும் 15ஆம் தேதி அன்றுதான் நஜாத் வெளியிடப்படுகின்றது. 20ஆம் தேதிக்குள் அந்த மாத இதழ் வந்து சேராவிட்டால் மட்டும் எங்களுக்கு எழுதுங்கள்! படிப்படியாக முதல் தேதியிலேயே வெளிவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். (இன்ஷா அல்லாஹ்)

“பெண்கள்” பகுதி துவங்க மாட்டீர்களா?”  என்று பல சகோதரிகளும் சில சகோதரர்களும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். அப்படி ஒரு எண்ணம் எங்களும் உண்டு. இன்ஷா அல்லாஹ் இன்னும் இரண்டு இதழ்களுக்குள் அந்தப் பகுதியை வெளியிட முயற்சிக்கிறோம். இந்த இதழிலேயே பெண்கள் உணர வேண்டிய பல நபிமொழிகளைத் தந்துள்ளோம். நஜாத்தில் எழுத்துப் பிழைகள் ஏராளம். அதைக் கொஞ்சம் கவனிக்கலாமே! என்று பல சகோதரர்களின் வேண்டுகோள், உண்மைதான், படிப்படியாக அந்தக் குறைபாடுகள் நீக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

“எழுத்துக்கள் தெளிவில்லாமலும், சிறியதாகவும் உள்ளன” இது சில வாசகர்களின் மனக்குறை, அடுத்த இதழில் எழுத்துக்கள் தெளிவாகவும், பெரிதாகவும் இருக்கும். (இன்ஷா அல்லாஹ்)

“நஜாத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், குர்ஆனின் குரலில் வேலூர்ப் பேராசிரியர் ஒருவர் மூலமாக மறுப்புக் கட்டுரை எழுதப்படுகின்றதே! உங்கள் விளக்கம் என்ன?” என்று சில வாசகர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர்.

“நஜாத்” தன் முதல் இதழிலேயே சுட்டிக் காட்டியபடி விமர்சனங்களை வரவேற்கின்றது. உண்மைகள் வெளிவர விமர்சனங்கள் தான் துணை செய்யும். ஆரோக்கியமான சூழ்நிலைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். நாம் வேலூர் பேராசிரியரின் விமர்சனத்தை வரவேற்கிறோம். அவர்களின் முதல் தொடரிலேயே பொய்யான தகவல்கள், முரண்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன” எனினும் அவர்கள் “இன்னும்வரும்” என்று குறிப்பிட்டுள்ளதால், அது முடிந்த பின் நஜாத் தன் விளக்கத்தைக் கூறும்!

அவர்கள் எழுதி வருகின்ற அந்தத் தொடர்களை பத்திரமாக வாசகர்கள் வைத்திருந்து, நமது விளக்கத்தையும் அதனையும் ஒப்பிட்டு உண்மையை உணர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். அவர்களின் மறுப்புக் கட்டுரை முற்றும் வரை வாசகர்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நாம் விமர்சனங்களை வரவேற்பது போன்று அவர்களும் பெருந்தன்மையோடு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள விளக்கம் தர முன் வருவார்கள் என்று நம்புகிறோம். அதன் அடுத்த கட்டமாக, சென்ற இதழில் நாம் கேட்டிருந்த பிரச்சனைக்கு விளக்கம் கூறுவார்கள் என்று நம்புகிறோம்.

குர்ஆனின் குரல் ஜூலை இதழில், “உன்னைப்பார்!” என்று இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் விதமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். அதற்கு அடுத்த பக்கமே அதற்கு முரணாக உள்ளது இஸ்லாத்தை முரண்பாடுகளின் தொகுப்பாக சித்தரிக்க முற்பட்டுள்ளனர். “உன்னைப்பார்” கட்டுரையில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, வாசகர் M.M.சிராஜுத்தீன் அவர்கள் குர்ஆனின் குரலுக்கு கடிதம் ஒன்று எழுதி அதன் நகலை நமக்கும் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை இந்த மாத இதழில் இடம்பெறச் செய்துள்ளோம்.

பல வாசகர்கள் நல்ல பல கட்டுரைகளை அனுப்பியுள்ளனர் என்று பலர் தக்க ஆதாரங்களுடன் எழுதாததால் அவற்றைப் பிரசுரிக்க இயலாது என்பதைத் தெரிவிக்கிறோம். சில கட்டுரைகள் வெளியிடத் தக்கவைகளாக  உள்ளன. இந்த இதழில் ஹஜ்ஜுக்குச் செல்வோருக்கான பயனுள்ள சட்டதிட்டங்களும் இடம் பெறுவதால் அவை அடுத்த இதழில் பிரசுரமாகும்.

“நஜாத் நிற்கப்போகிறதாமே!” என்று சில வாசகர்கள் எழுதிக் கேட்கின்றனர். ஆம்! நிலைத்து நிற்கத்தான் போகிறது!. அல்லாஹ்வின் பேருதவியால் நஜாத் தன் பயணத்தைத் தொடரும்! “வதந்திகளை நம்பாதீர்கள்!”

திருக்குர்ஆன் விரிவுரை ஏன் தொடரவில்லை?” என்று சில வாசகர்கள் கேட்டுள்ளனர். திருக்குர்ஆன் விரிவுரை வெளியிடத் தயாராகவே உள்ளது. எனினும் அரபி மூலத்துடன் வெளியிட்டால்தான் சிறப்பாக அமையும். அரபி எழுத்துக்களை சேகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அல்லாஹ் நாடினால் அடுத்த இதழிலேயே தொடரலாம். – ஆசிரியர்

கேள்விகள் அனுப்புவோர் பத்திரிகையில் அதற்கான பதவிகள் இடம் பெற வேண்டும் என்று விரும்பினால், கொஞ்சம் காத்திருக்க வேண்டும். நாம் விரிவாக விளக்கம் தரவேண்டியுள்ளதால் இரண்டு மூன்று கேள்விகளுக்குத் தான் பதில் இடம் பெறச் செய்ய இயலும், பத்திரிகையில் இடம் பெறாமல் நேரடியாக விளக்கம் அவசரமாக தேவைப்பட்டால் 50 பைசா தபால் தலையுடன் கேள்வியை அனுப்புங்கள்! தாமதமின்றி உடனே பதில் அனுப்பப்படும். (இன்ஷா அல்லாஹ்)

நிறைய கேள்விகள் இடம் பெறச் செய்வதற்காக ஒரே வார்த்தையில் பதில் தர நாம் விரும்பவில்லை.

“பெண்ணுரிமைப் பேணுவீர்”

“எங்கள் மனைவிகளுக்கு நாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் எவை?” என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கும்போது, “நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிக்க வேண்டும்! நீ (புத்தாடை) அணியும்போது அவளுக்கும் (புத்தாடை) எடுத்துக் கொடுக்க வேண்டும்! அவளது முகத்தில் நீ அறையாமலிருக்க வேண்டும்! வீட்டிலே தவிர (மற்ற இடங்களில்) அவளைக் கண்டிக்காமல் இருக்கவேண்டும்! அருவெறுப்பான சொற்களால் அவளை  நீ ஏசாதிருக்க வேண்டும்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹைதா(ரழி) நூல்: அபூதாவூது

Previous post:

Next post: