அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் விளங்குமா? அல்லது மவ்லவிகளுக்கு மட்டும் விளங்குமா?

in அல்குர்ஆன்

 அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் விளங்குமா? அல்லது மவ்லவிகளுக்கு மட்டும் விளங்குமா?

அல்குர்ஆன் அகில உலக மக்களுக்கும் வாழ்க்கை வழிகாட்டி யாக நெறிநூலாக எல்லாம் வல்ல ஏகனாகிய அல்லாஹ்வால் சுமார் 1430 ஆண்டுகளுக்கு முன்னர் இறக்கியருளப்பட்டது. அது இதற்கு முன்னர் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அனைத்து நெறிநூல்களின் சாராம்சத்தையும் உள்ளடக்கியதாகும். முஸ்லிம் களுக்கு மட்டுமல்ல ஆதத்தின் சந்ததிகள் அனைவருக்கும் அல்குர்ஆன் சொந்தமானது. அல்குர்ஆன் முஸ்லிம்களுக்குரிய வேதம்(?), அவர்களுக்கு மட்டுமே சொந்தம். முஸ்லிம் அல்லாதவர்கள் அல்குர்ஆனை தொடக்கூடாது. அல்குர்ஆனில் உரிமை கொண்டாட முடியாது என்று புரோகித மவ்லவிகள் கூறித் திரிவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். ஒருவருக்கு சொந்தமானதை அவருக்கு சொந்தமில்லை என்று கூறுவதை விட பெருத்த மோசடி பிறிதொன்று இருக்க முடியுமா? அப்படிப்பட்ட பெரும் மோசடியாளர்களாகத்தான் புரோகித மவ்லவிகள் இருக்கின்றனர். அதனால் அல்லாஹ்வின் முன்னால் பெரும் பாவிகளாக இருக்கிறார்கள்.
அல்குர்ஆனை விட்டு முஸ்லிம் அல்லாதவர்களை மட்டும் அந்நியப்படுத்தவில்லை: முஸ்லிம்களையும் அந்நியப்படுத்தி அவர்கள் அல்குர்ஆனை தொடவிடாமல் ஆக்கி வைத்திருக் கின்றனர். ஒளு-அங்க சுத்தி இல்லாமல் அல்குர்ஆனை தொடக் கூடாது தொடுவது பெரும் பாவம் என்று அல்லாஹ்வோ அவனது தூதரோ விதிக்காத ஒரு சட்டத்தை இப்புரோகித மவ்லவிகள் விதித்து வைத்திருக்கிறார்கள். அதன்மூலம் 42:21-ல் அல்லாஹ் விதிக்காததை விதித்து அல்லாஹ்வுக்கு இணையாளர்கள் ஆவதோடு, 49:16 இறைவன் கூறுவதுபோல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் அதிகப் பிரசங்கிகளாகவும் இருக்கிறார்கள்.

அது மட்டுமா? அரபி மதரஸாக்களில் ஏழு வருடங்கள் தெண்டச்சோறு சாப்பிட்டு காலத்தை ஓட்டியவர்களே மவ்லவிகள் – ஆலிம்கள்; அவர்களுக்கு மட்டுமே அல்குர்ஆன் விளங்கும்: அம்மதரஸாக்களில் தெண்டச் சோறு சாப்பிட்டு காலத்தை ஓட்டாதவர்கள், அவர்கள் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் பணம் கட்டி முறையாகப் படித்து பட்டங்கள் பல பெற்று அவர்கள் மருத்துவர்களாக இருந்தாலும், பொறிஞர்களாக இருந்தாலும், விஞ்ஞானியாக இருந்தாலும், வேறு எந்தத் துறையில் பேரறிஞராக இருந்தாலும், அவர்களால் அல்குர்ஆனை அவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் படித்து விளங்க முடியாது என்பதுதான் புரோகித மவ்லவிகளின் பிடிவாதமான வாதம்.
இன்னும் வெட்கத்தை விட்டு இப்புரோகித மவ்லவிகள் வெளிப்படையாகச் சொல்வதாக இருந்தால், ஏழு வருடங்கள் குப்பை கொட்டிய எங்களாலும் அல்குர்ஆனை விளங்க முடியாது. குர்ஆனை விளங்க 14 கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட மேதைகள் இப்போது யாரும் இல்லை. அல்குர்ஆனை ஆய்வு செய்து அதில் பொதிந்து கிடக்கும் மார்க்கச் சட்டங்களை வெளிக்கொண்டு வரும் ஆற்றல் அதாவது இஜ்திஹாது செய்யும் ஆற்றல் அந்த இமாம்களின் காலத்தோடு முற்றுப் பெற்றுவிட்டது. இன்று அவர்கள் ஆய்வு செய்து – இஜ்திஹாது செய்து சொன்னவற்றை அப்படியே கண்மூடி ஏற்று நடப்பதே நம் கடமை என்றே கூறி வருகிறார்கள். அதன்படி மனிதக் கற்பனைகள் நிறைந்த குர்ஆன், ஹதீஸ் சுய கற்பனை விரிவுரைகள் மற்றும் பிக்ஹு நூல்களில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.
இந்த பிதற்றல்கள், உளறல்கள் அனைத்தும் ஏன் தெரியுமா? இப்புரோகித மவ்லவிகள் மார்க்கத்தை மதமாக்கி ஒரே நேர்வழியை பல கோணல் வழிகளாக்கி அவை கொண்டு வயிற்றை ஹராமான – கூடாத வழியில் நிரப்புவதால், அவர்களது இந்த தில்லுமுல்லுகள் அனைத்தையும் மற்ற மக்கள் கண்டு விடக் கூடாது என்ற அச்சமே – நடுக்கமே அவர்களை இவ்வாறு பிதற்ற, உளற வைக்கிறது.

இப்புரோகித மவ்லவிகளின் பிதற்றல்கள், உளறல்கள் அனைத்தும் கால் காசும் பெறாது என்று முடிவு செய்து, அவற்றைத் தூக்கி அம்பட்டனின் அழுக்குக் கூடையில் எறிந்து விட்டு, அல்லாஹ்வின் 29:69 கட்டளைப்படி அல்குர்ஆனை நேரடியாக அவர்களுக்குத் தெரிந்த மொழியாக்கத்தில் படித்து சிந்தித்து ஆய்வு செய்கிறவர்களுக்கு அது இரவும் பகலைப் போல் தெள்ளத் தெளிவாக விளங்கும் நிலையிலேயே அல்குர்ஆன் வசனங்கள் இருக்;கின்றன. இதோ அல்குர்ஆன் கூறுகிறது.

எவர்கள் நம்முடைய வழியில் முயல்கிறார்களோ, நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழியில் நாம் செலுத்துவோம்ளூ நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கிறான். (அன்கபூத் 29:69)

தக்வா-பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான். (2:282)

அல்லாஹ்வை (முழுமையாக) அஞ்சி நடப்பவர்களே உலமாக்கள் எனும் அறிஞர்களாவர். (35:28)

உலமாக்களாகிய நாங்கள்தான் அல்லாஹ்வை முழுமையாக அஞ்சி நடக்கிறோம் என புரோகித மவ்லவிகள் புருடா விடுவார்கள். இது பகிரங்கமான பொய்யாகும். அல்லாஹ்வின் சுமார் 50 இறைவாக்குகளை நிராகரித்துவிட்டு மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டவர்கள் எப்படி அல்லாஹ்வை முழுமையாக அஞ்சி நடப்பவர்களாக இருக்க முடியும். இவர்களை 2:39 இறைவாக்கு தெளிவாக அடையாளம் காட்டுகிறது. அது வருமாறு.

அன்றி யார் (நம்முடைய வாக்குகளை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்படுகிறார்களே, அவர்கள் நரகவாசிகள்: அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். (அல்பகரா 2:39)

இன்னும் அல்லாஹ் கூறுவதைக் காது கொடுத்துக் கேளுங்கள்!
‘இந்த குர்ஆனை (அவன்தான் கற்றுக்கொடுத்தான்’ (அர்ரஹ்மான் 55:2)

‘அவனே மனிதனைப் படைத்தான்.’ (55:3)

‘அவனே மனிதனுக்கு (அனைத்து) விளக்கங்களையும் கற்றுக் கொடுத்தான்.’ (55:4)

‘……(நபியே!) நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் (அல்;லாஹ்) உமக்குக் கற்றுக் கொடுத்தான்…..’ (4:113)

‘நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைப் போன்று அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்’ (2:239)

அல்குர்ஆனை தனக்குத் தெரிந்த மொழியில் பெயர்க்கப் பட்டதை ஒருவர் முறையாகப் படித்து வருவாரானால், மனிதனைப் படைத்த அல்லாஹ் தனது அடிமைக்கு, இவ்வாறு தெளிவு படுத்துகிறோம், விவரிக்கிறோம், புரிய வைக்கிறோம் என எண்ணற்ற இடங்களில் கூறி இருப்பதை அறிய முடியும்.

நிச்சயமாக அல்குர்ஆனை (நீங்கள்) விளங்கிக் கொள்வதற்காகவே (மிக) எளிதாக்கி வைத்திருக்கிறோம். எனவே (இதை) விளங்கி நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:17,22,32,40)
மேலும் அல்குர்ஆன் விளங்குவதற்கு எளிதாக்கப்பட்டுள்ளது என்று 19:97, 44:58, 80:20 இறைவாக்குகள் கூறுகின்றன.

அல்குர்ஆனை விளங்குவதற்கு மனிதர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லை என்று 5:6, 7:2, 9:91, 22:78 ஆகிய இறை வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

அல்குர்ஆன் நேரடியாக விளங்குவதற்கு மிகமிகத் தெளிவானது, எளிதானது என்று 12:1, 15:1, 16:64, 27:1, 28:2, 36:69, 43:2 ஆகிய இறைவாக்குகள் கட்டியம் கூறுகின்றன.

அல்குர்ஆனை விளங்குவதில் சிரமத்தை உண்டாக்கும் எவ்வித முரண்பாடும் அதில் இல்லை என்று 4:82, 18:1, 39:23,28 ஆகிய இறைவாக்குகள் உறுதி அளிக்கின்றன.

அல்குர்ஆன் மனிதர்களுக்கு அல்லாஹ்வாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்று 55:2,4, 4:113, 87:6 ஆகிய இறைவாக்குகள் சாட்சியமளிக்கின்றன.

இதற்கெல்லாம் மேலாக, நெத்தியடியாக அல்குர்ஆன் குறிப்பாக எழுதப்படிக்கத் தெரியாத, புரோகித மவ்லவிகளால் அல்அவாம் கல் அன்ஆம் – அவாம்களாகிய பாமர மக்கள் கால்நடைகளைப் போன்றவர்கள் என்று இழிவு படுத்தப்படுகின்ற சாதாரண மக்களுக்காகவே குறிப்பாக எளிமையான, தெளிவான நிலையில் அருளப்பட்டது என்று அல்ஜும்ஆ 62:2 இறைவாக்கு கூறுகிறது. கேளுங்கள்.

அவன்தான், எழுதப்படிக்கத் தெரியாத மக்களிடம் அவனுடைய வசனங்களைப் படித்துக் காட்டி அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்கு நெறி நூலையும் (அல்குர்ஆன்) விவேகத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (62:2)

பொதுவாக ஆதத்தின் சந்ததிகளான மனிதர்கள் அனைவருக்கும் அல்குர்ஆன் தௌளத் தெளிவாக விபரமாக விளக்கப் பட்டுவிட்டது என்று எண்ணற்ற வசனங்களை எடுத்துக் காட்டி விட்டோம். அதற்கு மாறாக அரபி மொழி கற்ற அறிஞர்களாலேயே அல்குர்ஆனை விளங்க முடியும் என்று கூறும் ஒரேயொரு வசனம் உண்டா? ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீஸ் உண்டா? இந்தப் புரோகித மவ்லவிகளால் காட்ட முடியுமா? காட்ட முடியாது.

இப்போது சிந்தியுங்கள்! நம்மைப் படைத்த சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வே நமது எஜமானனே, நாளை மறுமையில் நமது செயல்கள் அனைத்தையும் எடைபோட்டு நமக்குத் தீர்ப்பு அளிக்கும் அல்லாஹ்வே, ஒவ்வொரு தொழுகையிலும், ஒவ்வொரு ரகாஅத்திலும், தீர்ப்பு நாளின் அதிபதி என்று நாம் உறுதி அளிக்கும் அல்லாஹ்வே அல்குர்ஆனிலுள்ள மனிதர்கள் நேர்வழியாக எடுத்து நடக்க வேண்டிய அனைத்தையும் தௌளத் தெளிவாக, விளக்கமாக, நேரடியாக எவ்வித கோணலோ, முரண்பாடோ இல்லாத நிலையில் விளக்கிய பின்னர், மேலும் ஒரு தூதரைக் கொண்டு அவை அனைத்தையும் செயல் முறையில் நடைமுறைப் படுத்திக் காட்டச் செய்த பின்னர் அல்குர்ஆன் உங்களுக்கு விளங்காது, அரபி படித்து பட்டம் வாங்கியுள்ள எங்களுக்கு மட்டுமே விளங்கும் என்று இந்தப் புரோகிதர்கள் சொல்வது எந்த அளவு அகந்தைமிக்கது, ஆணவத்திற்குரியது, தலைக்கணம் கொண்டு அலைவது என்பதைப் புரிய முடியவில்லையா?  இப்படி அகந்தை பேசியவர்கள் யார்? நபிமார்களை எதிர்த்து அகந்தை பேசிய புரோகிதர் பட்டாளம் தானே! இப்றாஹீம்(அலை) அவர்களை எதிர்த்து, அகந்தை பேசிய நம்ரூது தானே? மூஸா(அலை) அவர்களை எதிர்த்து அகந்தை பேசிய ஃபிர்அவ்ன் தானே? இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களை எதிர்த்து அகந்தை பேசிய அபூ ஜஹீல்தானே?

இப்போது சொல்லுங்கள் அல்லாஹ் உங்களுக்கு விளக்கியுள்ள குர்ஆன் உங்களுக்கு விளங்காது நாங்கள் தான் விளக்க வேண்டும் என்று அகந்தை பேசும் புரோகித மவ்லவிகள் நம்ரூது, ஃபிர்அவ்ன், அபூஜஹீல் போன்ற நரகிற்குரியவர்களின் வாரிசுகளா? அல்லது நபிமார்களின் வாரிசுகளா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

அல்லாஹ் விளக்கியுள்ளது உங்களுக்கு விளங்காது, அல்லாஹ்வின் கண்காணிப்பில் (52:48) அவனது தூதர் விளக்கியது விளங்காது அதை நாங்கள் விளக்கித்தான் பொதுமக்களாகிய நீங்கள் விளங்க முடியும் என்று பிதற்றும் இப்புரோகித மவ்லவிகளின் ஆணவமும், அகங்காரமும் இமய மாலை உச்சிக்கும் மேலாகச் சென்றுள்ளதைப் புரிய முடிய வில்லையா? ‘அனரப்புக்குமுல் அஃலா – நானே ரப்புகளுக்கும் மேலான ரப்பு என்று பிதற்றிய ஃபிர்அவ்ன் இப்புரோகித மவ்லவி களிடம் பிச்சை கேட்க வேண்டும். அந்த அளவு இப்புரோகித மவ்லவிகள் 42:21-ல் அல்லாஹ் சொல்வதுபோல் அல்லாஹ்வுக்கே இணையாளர்கள் ஆகிறார்கள். 49:16-ல் அல்லாஹ் சொல்வது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் சொல்லிக் கொடுக்கத் துணிந்து விட்டார்கள். நாளை மறுமையில் இவர்களைவிட பெரும்பாவிகள், முஷ்ரிக்குகள், காஃபிர்கள் என்று அடையாளம் காட்டப்படும் வேறு யாரையும் சுட்டிக்காட்ட முடியுமா? அல்லாஹ் அல்அஃராப் 7:175லிருந்து 179 வரை சுட்டிக் காட்டியவர்களின் பட்டியலில் இவர்கள் முதல் இடத்தைப் பெறுவார்கள் என்பதை மேலே கண்டுள்ள குர்ஆன் வசனங்களை நடுநிலையோடு படித்து விளங்குகிறவர்கள் மறுக்க முடியுமா?

அல்குர்ஆன் அல்லாஹ்வால் கற்றுக் கொடுக்கப்பட்டது, தெளிவாக்கப்பட்டது, எளிதாக்கப்பட்டது, ஒரே நேர்வழியைச் சொல்வது, முரண்பாடற்றது, கோணல் அற்றது, எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழியும் விளங்க எளிதானது, அதில் சிரமத்திற்கு, கஷ்டத்திற்கு இடமே இல்லை. அந்த அளவு விபரமாக விவரிக்கப்பட்டது என்று பலவிதமாகக் கூறும் இறைவாக்குகளை நீங்கள் கணக்கிட்டுப் பார்த்தால் அவை எண்ணிக்கையில் சுமார் நானூறு(400)ஐத் தாண்டும். இப்படி எல்லாம் அல்குர்ஆன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் இப்புரோகித மவ்லவிகள் குர்ஆன் பொதுமக்களுக்கு விளங்காது என்று கோரஸ் பாடினால், அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ் 2:74, 5:13, 6:125 இறைவாக்குகளில் சுட்டிக் காட்டுவது போல் சுருங்கி, இறுகி கற்பாறைகள் போல் ஆகிவிட்டன என்பது தானே அதன் பொருள். மார்க்கப் பணிக்கு ஹராமான வழியில் அவர்கள் கூலி-சம்பளம் வாங்கி அதன் மூலம் அவர்கள் தங்கள் வயிறுகளை நரக நெருப்பால் நிரப்புவதுதானே (2:174) அதற்குக் காரணம்.

மேலே கண்;ட 2:74, 5:13, 6:125 மற்றும் 2:174 அல்லாஹ்வின் கடுமையான எச்சரிக்கைகளை பொருட்படுத்துவதாக இல்லை ஜாக் அமீர் S.K. துணிந்து அபூ ஜஹீலின் வாதத்தை எடுத்து வைப்பதில் முன்னணியில் இருக்கிறார் அவர். அவரது அல்ஜன்னத் 2009 மே மாத இதழின் 26-ம் பக்கம் காணப்படும் மிம்பர் ஏறத் தெரிந்தவர்களெல்லாம் அறிஞர்களா? என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரையும், 30-ம் பக்கம் காணப்படும் ‘மார்க்கத்தைப் போதிப்பது ஆலிம்கள்தான் ஜாஹில்கள் அல்ல!’ என்ற கட்டுரையும் இதை உண்மைப்படுத்துகிறது.

அவரது மடமை அபூ ஜஹீல் வாதம் இதுதான். அரபி மொழி கல்லாதவர்கள் ஒருபோதும் ஆலிம்-அறிஞர் ஆக முடியாது அவர்கள் குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் அரபி மொழி அல்லாத வேறு எந்த மொழியில் கற்றிருந்தாலும் அவர்கள் ஆலிமாக முடியாது. அவர்கள் ஜாஹில்களே-மடையர்களே என்றே வாதிடுகிறார். புரோகிதம் மூலம் அவர் வயிறு வளர்ப்பதால் அவரது உள்ளம் சுருங்கி, இறுகி கற்பாறை போல் ஆகிவிட்டதால், 1430 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய அபூஜஹீல் வாதத்தை இன்றைய அபூ ஜஹீல் எடுத்து வைத்துள்ளார்.

அரபிமொழி எழுதப் படிக்கக் கற்றவர்கள்தான் அல்குர்ஆனை விளங்க முடியும் என்ற S.Kயின் மடமைவாதத்தின்படி பார்த்தால், அன்று அபூ ஜஹீல் என்று நபி(ஸல்) அவர்கள் இழிவுபடுத்திய அபுல் ஹிக்கமும், அரபு மொழி பண்டிதர்களான தாருந்நத்வா உலமா – பெருமக்களாக அன்று மக்களால் கருதப்பட்டு, நபி(ஸல்) அவர்களால் ஜாஹில்கள் என அடையாளம் காட்டப்பட்ட தாருந்நத்வாவினரே அல்குர்ஆனை விளங்கி இருக்க வேண்டும். அந்த அரபி பண்டிதர்கள் அல்குர்ஆனை விளங்கினார்களா? இல்லையே?

அதற்கு மாறாக அல்குர்ஆனை தெளிவாக விளங்கியது யார்? அரபி எழதப் படிக்கத் தெரியாத உம்மிகளான கைநாட்டுப் பிரமுகர்கள்தான் அல்குர்ஆனை சரியாக விளங்கி-ஏற்று அதன்படி நடந்தார்கள். இந்தச் சாதாரண அடிப்படை அறிவும் இல்லாதவர் தான் தன்னை அரபி மொழி பண்டிதர் ஆலிம் என பீற்றிக் கொள்கிறார். அன்றைய தாருந்நத்வாவினரின் அரபி மொழி பாண்டித்யம், இலக்கண இலக்கிய ஆற்றல், கவி புனையும் மேலாண்மை, எதுகை முகனையுடன் எழுத, கவிபாட அவர்களுக்கிருந்த தனித் திறமையோடு, எஸ்.கே., பீ.ஜை மற்றும் அரபி அகந்தைப் பேசும் புரோகித மவ்லவிகளை ஒப்பிட்டால் அவர்களின் கால் தூசுக்குக் கூட இவர்கள் ஒப்பாக மாட்டார்கள்.

அது போகட்டும் இன்றைய யூதர்களின் அரபி மொழித் திறமைக்கும் இவர்கள் ஈடு கொடுக்க முடியாது. அரபி மொழி அகராதி, ஹதீஸ் தொகுப்புகளின் அட்டவணை இவற்றைத் தயாரித்தவர்கள் யூதர்களே. இந்த லட்சணத்தில் இப்புரோகித மவ்லவிகள் அரபி மொழி பெருமை பேசி, நாங்கள்தான் ஆலிம் கள் என அகந்தை பேசுவது குருடன் ராஜமுழி முழிப்பதாகச் சொல்வது போன்ற அறிவீனமான வாதமாகும்.
அவர்கள் உண்மையிலேயே ஆலிம்களாக இருந்தால் சுமார் 50க்கும் மேற்பட்ட வசனங்களை நிராகரித்து மார்க்கத்தை மதமாக்கிப் பிழைப்பு நடத்துவார்களா? 21:92, 23:52 இறைக் கட்டளைகளையும், நபி(ஸல்) அவர்களின் 23 வருட வாழ்க்கை நடைமுறைகளையும் நிராகரித்துவிட்டு (2:39) சமுதாயத்தை ஆலிம்-அவாம் என பிளவு படுத்துவார்களா? நபி(ஸல்) அவர்களது அந்த 23 வருட வாழ்க்கையில் முஸ்லிம்களை ஆலிம்கள் என்றும், அவாம்கள் என்றும் பிரித்து நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள் என்பதற்கு இவர்களிடம் ஆதாரம் இருக்கிறதா?

அல்ஜன்னத் மே 2009 இதழில் 30,31 பக்கங்களில் எடுத்து எழுதியுள்ள 39:9, 58:11, 35:28, 47:19 இன்னும் இவைபோலுள்ள வசனங்கள் அனைத்தும், முஸ்லிம் சமுதாயத்திலுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் குர்ஆன், ஹதீஸைக் கற்று மார்க்கம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனவே அல்லாமல், சமுதாயத்தை ஆலிம்-அவாம் என பிளவு படுத்தக் கூறவில்லை. அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றவர்களும், பெறாத வர்களும் சமமானவர்களா? என்றும் சுவர்க்கவாதிகளும், நரக வாதிகளும சமமானவர்களா? என்றும் கேட்டால், அதன் பொருள் என்ன? அனைவரும் அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் செல்ல முனைய வேண்டும் என்பது அதன் பொருளா? அல்லது இவ்வுலகிலேயே சுவர்க்கத்திற்குரியவர்கள், நரகத்திற்குரியவர்கள் என சமுதாயத்தைப் பிளவு படுத்துவது என்பது அதன் பொருளா? இதைக்கூட விளங்க முடியாத ஜாஹில்கள்தான் தங்களை ஆலிம்கள் என பீற்றிக் கொள்கிறார்கள்.

இவர்கள் நடத்தும் மதரஸாக்கள் நபி(ஸல்) அவர்கள் நடத்திக் காட்டிய மதரஸா என்று இவர்களால் கூற முடியுமா? ஆதாரம் இருக்கிறதா? இவர்களது மதரஸாக்களில் கற்றுக் கொடுப்பது குர்ஆன், ஹதீஸ் அல்லளூ குர்ஆன், ஹதீஸை முறையாகக் கற்றுக் கொடுத்தால், அதிலிருந்து வெளி வருபவர்கள் ஒருபோதும் மார்க்கத்தைக் கொண்டு வயிறு வளர்க்க மாட்;டார்கள். மாறாக மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொள்ளும் புரோகிதக் கல்வியே இவர்களது மதரஸாக்களிலும் போதிக்கப் படுகிறது என்பதை இவர்களால் மறுக்க முடியுமா? இவர்களது மதரஸாக்களிலிருந்து பட்டம் பெற்று வெளி வந்தவர்கள் கூலிக்கு – சம்பளத்திற்கு இவர்களின் புரோகித மதஸாக்களில் ஆசிரியர்களாகப் பணிபுரிகிறார்கள், பள்ளிகளில் இமாமத் செய்கிறார்கள் அல்லது கூலிக்கு – சம்பளத்திற்கு பிரசார பணி புரிகிறார்கள். இவர்களின் மதரஸாக்களிலிருந்து பட்டம் பெற்றவர்களில் எத்தனை பேர் கூலியை மறுமையில் எதிர்பார்த்து அல்லாஹ்வுக்காக மார்க்கப் பணி புரிந்து கொண்டு ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிடுகிறார்கள்? காட்ட முடியுமா?

நாங்கள்தான் மார்க்கம் கற்ற ஆலிம்கள் என பீற்றிக் கொண்டு மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுள்ள அபூ ஜஹீலின் வாரிசுகளையே கடுமையாக விமர்சிக்கிறோம். முறையாக குர்ஆன், ஹதீஸைக் கற்று, அரபி மொழி ஆணவம் பேசாமல் அடக்கமாக அல்லாஹ்வுக்காக கூலி-சம்பளம் வாங்காமல் மார்க்கப் பணி புரியும் நபிமார்களின் வாரிசுகளான ஆலிம்களை நாங்கள் ஒருபோதும் விமர்சித்ததில்லை. விமர்சிக்கவும் மாட்டோம்.
அதனால் தானே இப்புரோகிதர்கள் அல்குர்ஆன் நேரடியாகச் சொல்லும் இறைவாக்குகளே அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டாலும் அவற்றை மறுத்து சுய விளக்கம் கூறி நிராகரிக்கிறார்கள். 2:6,8, 10-12,15,16,18,44,79,99,146,159-162,175,176,188,204-206,208,209,212,213, 3:4,105, 5:104, 6:159, 7:175-179,182,183,186,193, 30:32, 42:14 இன்னும் இவைபோல் எண்ணற்ற இறைவாக்குகள் மார்க்கத்தைப்; பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்களையும், அவர்களைக் கண் மூடிப் பின்பற்றும் அவர்களது பக்தர்களையும் கடுமையாக எச்சரிக்கின்றன. ஆனால் இவற்றை படித்து உணர்ந்து திருந்தும் பக்குவம்தான் இப்புரோகிதர்களிடம் இல்லை. அதேபோல் நேர்வழி இதுதான் என்று 6:71,157, 7:152,193,198,203, 9:33, 10:57, 16:64,89,102, 17:94, 18:57, 19:76, 20:123, 22:8,67, 27:2,77, 28:50,57,85, 31:3,5,20, 34:24,32, 39:23, 41:44, 45:11,20, 47:17,25,32, 48:28, 53:23, 61:9, 72:13, 92:12 போன்ற எண்ணற்ற இறைவாக்குகள் மிக உறுதியாகக் கூறிக் கொண்டிருந்தும் இப்புரோகித மவ்லவிகள் உணர்வு பெறுவதாக இல்லை.

இப்புரோகித மவ்லவிகள் முஸ்லிம் சமுதாயத்தில் எந்த ஆதார அடிப்படையில் மதகுருமார்களாக உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதை நோட்டமிட்டால், குர்ஆன், ஹதீஸில் ஒரேயொரு ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை. அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் எனக் கூறும் எண்ணற்ற வசனங்கள் இருக்கின்றன. இறைத் தூதரின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் எனக் கூறும் எண்ணற்ற வசனங்கள் இருக்கின்றன. சமூகக் கட்டுப்பாட்டையும், ஒற்றுமையையும் நிலை நிறுத்த அமீருக்குக் கட்டுப்படவேண்டும் என 4:59 இறைவாக்குக் கூறுகிறது. அந்த அமீருக்குக் கட்டுப்பட்டு நடப்;பதும் குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டுத்தான்.அந்த அமீரும் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாகக் கட்டளையிட முடியாது. அப்படிக் கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படக் கூடாது என்பதை யும் 4:59 இறைவாக்கு தெளிவாக வலியுறுத்துகிறது.

ஆனால் மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், இமாம்கள் என மார்;தட்டிக் கொள்ளும் இந்தப் புரோகிதர்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறும் ஒரேயொரு குர்ஆன் வசனமும் இல்லை: ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லை. பின் எப்படி இந்தப் புரோகித மவ்லவிகள் முஸ்லிம் சமுதாயத்தில் ஆதிக்;கம் செலுத்தத் துணிகிறார்கள்? ஆம்! இதர மதங்களிலுள்ள மதகுருமார்கள் என்ற புரோகிதர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே இவர்கள் முஸ்லிம் சமூகத்திலும் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறார்கள். இது பற்றியும் நபி(ஸல்) முன் அறிவிப்பு செய்துள்ளனர்.

இதர மதங்களிலுள்ள புரோகிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? 5:46, 6:91, 7:154, 12:111, 20:47, 28:43, 32:23, 40:53, 54, 41:17 அல்குர்ஆன் இறைவாக்குகள் சுட்டிக்காட்டுவதுபோல், முன்னைய நபிமார்களுக்கு இறைவனால் இறக்கி அருளப்பட்ட ஒரே நேர் வழியை, தங்களின் அற்ப உலக ஆதாயத்திற்காக பல கோணல் வழிகளாக்கி அவை மூலம் வயிறு வளர்த்து வரும் புரோகிதர்களே அவர்கள். அவர்கள் வழியிலேயே முஸ்லிம் மதப் புரோகிதர்களும் அல்லாஹ் கொடுத்த ஒரே நேர்வழியை பல கோணல் வழிகளாக்கி அவை கொண்டு ஹராமான வழியில் தங்கள் வயிறுகளை நரக நெருப்பால் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். (2:174)

மற்ற மதங்களிலுள்ள குருமார்களையும் அவர்களைப் பின்பற்றும் மாற்று மதங்களின் மக்களையும் அல்குர்ஆன் கூறும் நேர்வழியை தவறவிட்டு கோணல் வழிகளில் செல்வதின் மூலம் வழிகேட்டிலாகி நரகத்திற்குரியவர்கள் ஆகிறார்கள் என்று இந்த முஸ்லிம் மதகுருமார்கள் துணிந்து சொல்கிறார்கள். அவர்களும் ஆதத்தின் சந்ததிகள்தான், மனிதர்கள்தான் என ஒப்புக் கொண்டு மனித பாசத்துடனும், மனித நேயத்துடனும் அவர்களுடன் பழகுவதையும் வெறுக்கிறார்கள் இந்த முஸ்லிம் மத குருமார்கள். இந்த நிலையில்,
புரோகித மவ்லவிகள் தங்களை முஸ்லிம் மதகுருமார்கள் என்று சிறிதும் வெட்கமின்றி கூறிக் கொள்கிறார்களே இவர்கள் குர்ஆன் கூறும் ஒரே நேர்வழியிலா இருக்கிறார்கள். இவர்களும் குர்ஆன் கூறும் ஒரே நேர்வழியை தவறவிட்டு பல கோணல் வழிகளில் அதாவது வழிகேட்டில் சென்று நரகை நிரப்புகிறவர் தானே! இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தை ஆலிம்-அவாம் என இரு கூறாகப் பிளந்து தங்களை மதகுருமார்கள் என்று சொல்லிக் கொள்ள ஒரேயொரு குர்ஆன் வசனத்தையாவது இவர்களால் காட்ட முடியுமா? ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீஸையாவது காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது.

அதற்கு மாறாக இந்துக்கள் அவர்களின் மதகுருமாருக்கு பின்னால் செல்வது போல், கிறித்தவர்கள் அவர்களின் குருமார்களான பாதிரிகளுக்குப் பின்னால் செல்வதுபோலளூ இப்படி ஒவ்வொரு மதத்தினரும் அவர்களின் மத குருமார்களின் பின்னால் செல்வது போல், முஸ்லிம்களாகிய நீங்கள் முஸ்லிம் மத குருமார்களாகிய எங்கள் பின்னால் வரவேண்டும் என்று மட்டுமே பிதற்ற முடியும்.

மேலும் அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? (39:9) பார்வையுள்ளவனும், குருடனும் சமமாவார்களா? (35:19) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்விமான்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் (58:11) போன்ற குர்ஆன் வசனங்களை காட்டி மக்களை, ஏமாற்ற முடியும். இப்படிப்பட்ட வசனங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்தவர்களாக, பார்வையுடையவர்களாக, கல்விமான்களாக ஆகவேண்டும் என்று அல்குர்ஆன் வலியுறுத்துகிறதே அல்லாமல், மதகுருமார்கள் என்ற கூலிக்கு மாரடிக்கும் புரோகித வர்க்கத்தை, சமுதாயத்தைப் பிளவுபடுத்தி ஆலிம்-அவாம் வேறுபாட்டை உண்டாக்கிக் கொள்ள அனுமதிக்கவில்லை என்பதை அறியாத மூடர்களா? இப்புரோகித மவ்லவிகள்.

தங்களின் குருத்துவத்தை நிலைநாட்டிக் கொள்ள அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும் தவிடு பொடியாகி தரைமட்டமான பின், உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் என்று நபி(ஸல்) கூறி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நபிமார்கள் செய்த மார்க்கப்பணியை செய்வதற்கு உரிமை பெற்றவர்கள் நாங்களே என மார்தட்டுவார்கள். உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் என்று சொன்ன நபி(ஸல்) அவர்கள், அவர்கள் திர்ஹத்திற்கோ தீனருக்கோ வாரிசாக மாட்டார்கள் என்று அதைத் தொடர்ந்து கூறியிருப்பதை அவர்களின் புரோகிதத் தொழில் வசதிக்காக மறந்து விடுவார்கள், அல்லது மறைத்து விடுவார்கள்.

ஆம்! அவர்கள் நபிமார்களின் வாரிசுகளாக இருந்து மார்க்கப் பணி செய்ய தகுதியானவர்கள்தான்! எப்போது? நபிமார்கள் கூலியை-சம்பளத்தை மக்களிடம் கேட்காமல், அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்து மார்க்கப்பணி செய்தது போல் இந்த மவ்லவிகளும் மக்களிடம் கூலி-சம்பளத்தை கேட்காமல், அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்த்து செய்ய முன்வந்தால், அவர்களை நபிமார்களின் வாரிசுகளாக ஏற்கலாம். அதற்கு மாறாக கூலிக்காக-சம்பளத்திற்காக மார்க்கப்பணி புரியும் இப்புரோகித மவ்லவிகள் ஒருபோதும் நபிமார்களின் வாரிசுகளாக மாட்டார்;கள். அதற்கு மாறாக நம்ரூது, ஃபிர்அவ்ன், அபூஜஹீல் மற்றும் தாருந்நத்வா ஜாஹில்களின் வாரிசுகளாக மட்டுமே ஆக முடியும். அவர்களுக்கு ஏற்பட்ட கதியே இவர்களுக்கும் ஏற்படும் என்று கடுமையாக எச்சரிக்கிறோம்.

நபிமார்கள் அல்லாஹ்வுக்காக மார்க்கப்பணி புரிந்ததால் அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்த ஒரே நேர்வழியிலிருந்து கடுகளவும் விலகாமல் நூல் பிடித்ததுபோல் அந்த நேர்வழியில் மக்களை அழைத்துச் சென்றார்கள். அந்த நிலையிலும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் இருந்து (52:48) செயல்பட்டார்கள். ஒரு சிறு பிசகு ஏற்பட்டாலும் உடனுக்குடன் அல்லாஹ்வால் எச்சரிக்கப்பட்டு திருத்தப்பட்டார்கள். அதைக் கூறும் பல குர்ஆன் வசனங்களையும் உங்களால் பார்க்க முடியும். உதாரணமாக 5:67, 6:52, 17:73,74,75, 69:44-47 இவை போன்;ற குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்த்து உணர்வு பெறுங்கள்.

இந்த மவ்லவிகளும் மக்களிடம் கூலியை எதிர்பாராமல், அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்து மார்க்கப் பணி புரிந்தால் குர்ஆனில் உள்ளதை உள்ளபடி திரிக்காமல், வளைக்காமல், மறைக்காமல் மக்களுக்குச் சொல்ல முடியும். அதற்கு மாறாக மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாக்கிக் கொண்டால் அல்லாஹ் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுவது போல் பல தில்லுமுல்லுகளைச் செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். அல்லாஹ் தௌளத் தெளிவாக நேர்வழியையும், ஆதாரங்களையும் விளக்கிய பின்னர், நாங்கள்தான் அதற்கும் மேலாக விளக்கும் பேர்வழிகள் எனக் கிளம்பும் இப்புரோகித மவ்லவிகள் நேர்வழியை பல கோணல் வழிகளாக்குவதன் மூலம், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி நிரந்தர நரகை அடைகிறார்கள் என்பதை 2:159,160,161,162 இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயமாக அறிய முடியும்.

….உங்களுடைய இறைவனிடமிருந்து மிகத் தெளிவாக (வழிகாட்டும் நெறி) நூலும், நேர்வழியும், அருளும் வந்து விட்டது. எவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக் கணித்து அவற்றை விட்டு, விலகி விடுகிறானோ அவனை விட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங் களை விட்டு விலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம். (அன்ஆம் 6:157)

எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு அறிவுரைக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்து தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனைவிடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கிறான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின்மீது, இவற்றை விளங்கிக் கொள்ளாதவாறு, திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம். ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும் அவர்கள் ஒருபோதும் நேர்வழியடைய மாட்டார்கள். (அல்கஃபு 18:57)

சுமார் 50 அல்குர்ஆன் வசனங்களை நிராகரித்து, மார்க்கத்தை மதமாக்கி வயிறு வளர்க்கும் புரோகித மவ்லவிகள் அல்குர்ஆன் பொதுமக்களுக்கு விளங்காது என்று கூறும் தந்திரம் புரிகிறதா? புரோகித மவ்லவிகள் நேர்வழியை அடைய முடியாது என்று அல்லாஹ்வே; இந்த 18:57-ல் கூறியிருப்பதை யாரால் மறுக்க முடியுமா?

நிச்சயமாக எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர் களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத் தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களை யும்) அவர்களுக்குப் பெருக்கிவிட்;டான். (முஹம்மது 47:25)
அரபி படித்த மவ்லவிகளாகிய நாங்கள் மட்டுமே குர்ஆனை விளங்க முடியும், மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்கும் அதிகாரம் பெற்றவர்கள் என்று கூறி வருவது கடைந்தெடுத்த ஆணவமிக்க பொய் என்பதை மேலே கண்ட இறைவாக்குகளைப் படித்து விளங்கலாம். மார்க்கத்தில் ஃபத்வா கொடுக்கும்-தீர்ப்பளிக்கும் அதிகாரமும் எங்களுக்கே என்று கூறி இப்புரோகித மவ்லவிகள் மார்தட்டுவதும் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முற்றிலும் முரணான வழிகேடாகும். மதரஸாக்களில் காலம் கழித்து வெளிவருகிறவர் களில் சிலருக்கு இவர்கள் ‘முஃப்தி’ என்ற பட்டம் கொடுப்பதும் ‘மவ்லவி’ என்று பட்டம் கொடுப்பது போன்ற ஒரு வழிகேடே! அல்குர்ஆன் 42:21, 49:16 இறைவாக்குகளுக்கு முரணான செயலே. அப்படி மனிதர்களில் யாரும் ஃபத்வா கொடுக்கும் முஃப்திகளாக ஒருபோதும் ஆக முடியாது.

அவர்கள் உண்மையான ஆலிம்களாக இருந்தால், நபிமார்களின் வாரிசுகளாக இருந்தால், அது கொண்டு, பிழைப்பு நடத்த மாட்டார்கள். கூலி வாங்கும் நோக்கத்துடன் குர்ஆன், ஹதீஸில் இல்லாத ஒன்றை மார்க்கமாக்கி ஃபத்வா கொடுக்க மாட்டார்கள். அதற்கு மாறாக தங்களிடம் வரும் கேள்விகளுக்கு குர்ஆன் வசனத்தையோ, ஆதாரபூர்வமான ஹதீஸையோ மட்டுமே எடுத்து வைப்பார்கள். தங்கள் புரோகித முன்னோர்களின் கற்பனையில் உருவான ‘பிக்ஹு’ சட்டங்களை ஒருபோதும் எடுத்து வைக்க மாட்டார்கள்.

இன்று இந்திய நீதித்துறையில் ‘முஹம்மடன்லா’ என்ற பெயரால் நடைமுறையிலிருப்பவை குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக இப்புரோகிதர்களின் முன்னோர்கள் தங்களின் சுயநலத்தை மையமாக வைத்துக் கற்பனை செய்து புனையப்பட்ட ஷரீஅத் சட்டமே. நீதிமன்றங்கள் அவற்றை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பு அளிக்கின்றன. எப்படி இந்து மத குருமார்களான ஆரியப் புரோகிதர்கள் தங்களின் சுயநலத்தை மையமாக வைத்து இந்து மதச் சட்டமாகக் கற்பனை செய்தவை இன்று இந்து மக்களை ஆட்டிப்படைக்கின்றனவோ அது போலவே முஸ்லிம் மதப் புரோகிதர்கள் கற்பனை செய்த பிக்ஹு அடிப்படையிலான ஷரீஅத் சட்டமே முஸ்லிம் மக்களையும் ஆட்டிப் படைக்கிறது. அனைத்து மதங்களிலும் அகிலங்களையும், அனைத்துப் படைப்புகளையும், மனிதனையும் படைத்த சர்வ வல்லமைமிக்க அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணாக அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் தரகர்களாக சட்ட விரோதமாக புகுந்து கொண்ட இப்புரோகிதப் பூசாரிகளே கோலோட்சுகின்றனர். மனித இனத்தின் மிகமிக பெரும்பான்மையினர் இப்புரோகிதர்களின் வலையில் சிக்கி நரகிற்குரியவர்களாகின்றனர். இந்த மதப் புரோகிதர்களின் அட்டூழியங்களை கண்டு ஜீரணிக்க முடியாத சில அறிவு ஜீவிகள், இந்த மதப் புரோகிதர்கள்தான் இறை கொடுத்த நேர்வழிக்கு அதிகாரம் பெற்றவர்கள் என்று நம்பி கடவுள் மறுப்புக் கொள்கையை – நாத்திகத்தை மக்களுக்கு போதிக்கத் தலைப் பட்டனர்.

முடிவு, புரோகிதப் பண்டாரங்கள் ஐம்பது சதவிகித ஒழுக்க மாண்புகளையும், மனிதப் பண்பாடுகளையும், மனித நேயத்தையும் சிதைத்துச் சீரழித்தார்கள் என்றால், எஞ்சியுள்ள ஐம்பது சதவிகித ஒழுக்க மாண்புகளையும், மனிதப் பண்பாடுகளையும், மனித நேயத்தையும் சிதைத்துச் சீரழித்து வருகிறார்கள் இந்த நாத்திகர்கள் அதன் விளைவு பகுத்தறிவு வாதம், பகுத்தறி வாளர்கள் என்று கூறிக்கொண்டு ஐயறிவு மிருக வாழ்க்கையை ஆறறிவு மனிதன் வாழும் சூழ்நிலைகளை பெரும் முயற்சிகள் எடுத்து வளர்த்து வருகிறார்கள்.

மனித வர்க்கத்தின் இந்த சீர்கெட்ட வாழ்க்கையை தீர ஆராய்ந்து, மனித வாழ்வு மேம்பட உள்ள ஒரே வழி, மனித அறிவில் படும் சட்டதிட்டங்கள் அல்ல: அது பரீட்சை எழுதும் மாணவனிடமே கேள்வித்தாள் தயாரிக்கக் கொடுக்கும் அறிவீனமான செயல். எனவே மனித சட்டங்களை தூக்கி எறிந்துவிட்டு, மனிதனைப் படைத்த ஒரே இறைவனாகிய அல்லாஹ் கொடுத்த வாழ்க்கைத் திட்டம், நேர்வழி கடந்த 1430 ஆண்டுகளாக மனிதக் கரம்பட்டு சிதையுறாமல் இருந்து வருகிறது. அதுவே வாழ்க்கை வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆன் என்பதை உணர்ந்து அதிலுள்ளவற்றைக் கூடுதல் குறைவு இல்லாமல் செயல்படுத்த முனைந்தோம். அவ்வாறு முயற்சியில் ஈடுபடும்போது சில மவ்லவிகளும் நமக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவதாக வாக்களித்து வந்தார்கள். இங்குதான் நாம் ஏமாந்தோம். அவர்கள் நமது திட்டத்தைக் கூட இருந்தே குழி பறித்துப் புதைத்துவிடும் சூது மதியோடு, நயவஞ்சக சிந்தனையோடு நம்மோடு வந்து இணைகிறார்கள் என்பதை அறியத்தவறினோம். அதன் விளைவு குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒன்றிணைந்து செயல்பட முன்வந்தவர்களை, இப்புரோகித மவ்லவிகள் தங்களின் வசீகர சூன்யப் பேச்சால் மயக்கி தங்களைத் தக்லீது செய்ய வைத்து விட்டார்கள். அதனால் நான்கு மத்ஹபுகளாக இருந்த நிலையை மாற்றி ஒரே மத்ஹபில் முஸ்லிம் என்று செயல்பட முனைந்த மக்கள் இன்று  4+7=11  மத்ஹபுகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
சுன்னத் ஜமாஅத் பள்ளி, ஹனஃபி பள்ளி, ஷாஃபி பள்ளி, அஹ்ல ஹதீஸ் பள்ளி என்ற நிலையிலிருந்து உயர்ந்து அனைத்தும் அல்லாஹ்வின் பள்ளி (2:114, 72:18) என்ற உயர் நிலைக்கு உயர்வதற்கு மாறாக அவற்றோடு மேலும் ஜாக் பள்ளி, தமுமுக பள்ளி, ததஜ பள்ளி, இதஜ பள்ளி என கீழ் நிலைக்கு, இழி நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். நமது திட்டத்தை இப்புரோகித மவ்லவிகள் ஒப்புக் கொண்டபடி உண்மையுடன் செயல்பட்டிருந்தால், இந்த 24 வருடங்களில் முஸ்லிம்கள் ஒரே ஜமாஅத்தாக (21:92, 23:52) ஆகி இருப்பார்கள்;, அனைத்தும் அல்லாஹ்வின் பள்ளிகளாக (2:114, 72:18) ஆகி இருக்கும். முயற்சி செய்து வழக்காடி நீதி மன்றங்களில் குர்ஆன், ஹதீஸ்படி உள்ள ஷரீஅத் சட்டத்தை, முஹம்மடன்லா என்ற புரோகித முல்லாக்களின் ஷரீஅத் சட்டத்திற்குப் பகரமாக நிலை நாட்ட வழி பிறந்திருக்கலாம். இந்த நல்ல முயற்சியைப் பாழாக்கிய சுய நலமிக்க சமுதாய துரோகிகளை முஸ்லிம்கள் இனம் கண்டு ஆலிம்-அவாம் என்ற அவர்களின் சுயநல பிரித்தாலும் முயற்சியை முறியடித்து ஒன்றுபட முன் வருவார்களாக. அதுவே இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை ஈட்டித்தரும். அல்லாஹ் அருள் புரிவானாக.

Previous post:

Next post: