முஸ்லிம்களே படிப்பினை பெறுங்கள்!

in 2009 ஜூன்

முஸ்லிம்களே படிப்பினை பெறுங்கள்!

அபூ அப்தில்லாஹ்

2009 பொதுத் தேர்தல், முஸ்லிம்கள் கண்டிப்பாகப் படிப்பினைப் பெறவேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறது. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே’ என்ற முதுமொழி முஸ்லிம்களின் இழி நிலையை உணர்த்துகிறது. இந்து மக்களின் ஒரு பிரிவான கொ.மு.பே என்ற அமைப்பினர் சில தொகுதிகளில் போட்டியிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று பிரதான கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளனர். அடுத்தடுத்து வரும் தேர் தல்களில் பிரதான கட்சிகள் அவர்களின் தயவை எதிர்பார்த்து அவர்களின் கோரிக்கையை அது சரியோ தவறோ நிறைவேற்றிக் கொடுக்க முன் வருவார்கள் என்பதில் ஐயமுண்டா?

ஆம்! நம்முடைய போலி ஜனநாயக நாட்டில் வாக்கு வங்கி இருக்குமேயானால், அரசியல் கட்சிகள் விழுந்து விழுந்து உதவி செய்ய முன் வருவார்கள். ஆனால் கைசேதத்திற்குரியது என்னவென்றால் புரோகிதர்கள் மற்றும் மாற்றாரின் சூழ்ச்சி வலையில் சிக்கி முஸ்லிம்கள் எண்ணற்ற பிரிவுகளில் சிக்கிச் சீரழிவதால், முஸ்லிம்களின் வாக்கு வங்கி என்ற ஒன்றுபட்ட நிலை இல்லை. எனவே பிரதான அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. முஸ்லிம்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கை களையும் நிறைவேற்றித்தர முன் வருவதில்லை.

அகில உலக மக்களையும் வழிநடத்திச் செல்ல கடமைப்பட்ட முஸ்லிம் (3:110) சமுதாயம்  நடுநிலைச் சமுதாயம் என அல்லாஹ்வால் சிறப்பித்துச் சொல்லப்பட்ட சமுதாயம் (2:143) மற்ற சமூகங்களுக்குச் சாட்சி சொல்லக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம் (22:78) மற்ற சமுதாயத்தவர்கள் பின்னால் செல்கிறார்கள் என்றால், அவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து அதன்படி நடக்க வில்லை என்பது தானே அதன் பொருள். நாளை மறுமையில் இவர்கள் வெற்றி பெற முடியுமா?

முஸ்லிம்களின் வழிகாட்டிகள் மாற்றாரின் பின்னால் அணி வகுப்பதின் பொருள் என்ன? அதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் அற்ப இவ்வுலக ஆதாயங்களுக்காக முஸ்லிம் சமுதாயத்தையே பலி கொடுக்கும் அவர்கள் சமுதாய துரோகிகள் என்பதில் ஐயமுண்டா? முஸ்லிம்கள் அப்படிப்பட்ட புரோகித மவ்லவிகள் பின்னாலும், அரசியல் தலைவர்கள் பின்னாலும் கண்மூடிச் செல்லலாமா? அதனால் அவர்கள் இவ்வுலகில் அனுபவிக்கும் கடும் துன்பங்களையும், நாளை மறுமையில் அதைவிட மிகமிகக் கடுமையான தண்டனை களையும், நரக வேதனையையும், உணர்ந்தவர்களாக இருந்தால் இப்படிக் கண் மூடிச் செல்வார்களா? ஆம்! இப்புரோகித மவ்லவி களின் மூடத்தனமான உபதேசங்களால் முஸ்லிம்கள் மறுமையை மறந்து வாழ்கிறார்கள். அல்லாஹ்வின் அச்சம் சிறிதும் அவர்களுக்கு இல்லை அவர்களை வழி நடத்திச் செல்லும் புரோகித மவ்லவிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்குமே அல்லாஹ்வின் அச்சம் இல்லாத போது, அவர்கள் பின்னால் செல்பவர்களுக்கு அல்லாஹ்வின் அச்சம் இருக்கவா போகிறது. அல்லாஹ்வின் அச்சம் இருந்தால் அல்லாஹ்வின் 21:92, 23:52, 3:103,105, 6:153, 159, 42:13,14 போன்ற எண்ணற்ற இறைக் கட்ட ளைகளை நிராகரித்து (2:39), புறக்கணித்து, முதுகுக்குப்பின்னால் தூக்கி எறிந்துவிட்டு பல பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பார்களா?

முஸ்லிம்கள் மறுமையை மறந்து வாழ்கிறார்கள். அதன் பலனை நாளை மறுமையில் சந்திக்க இருக்கிறார்கள். அல்லாஹ்வே அவரவர் களுக்குரிய வழி அவர்களுக்கு (109:6) நேர் வழியை விரும்புகிறவர்கள் ஏற்கலாம், விரும்புகிறவர்கள் நிராகரிக்கலாம் (18:29) என்று கூறி இருப்பதோடு, அது பற்றிய தீர்ப்பை நாளை மறுமைக்கென்று ஒத்திவைத்திருப்பதாக 42:14,21லும் மேலும் பல இடங்களிலும் கூறியுள்ளபடி, அல்லாஹ்வின் அந்த அதிகாரத்தில் மனிதர்களாகிய நாம் தலையிடாமல் 49:14-ல் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளபடி இறை நம்பிக்கை உள்ளத்தில் நுழையாத நிலை யிலும் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லும் அனைவரையும் இவ்வுலகில் முஸ்லிம் களாகவே ஏற்று ஒரே முஸ்லிம் சமுதாயமாக நாம் செயல்படுவதால் முஸ்லிம்களுக்கு நட்டமா? லாபமா? நிச்சயமாக லாபமேதான். ஆனால் பிரித்தாளும் சூழ்ச்சி மனம் கொண்ட புரோகித மவ்லவிகளுக்கும், அரசியல் புரோகிதர்களுக்கும் அது பெரும் நட்டத்தை ஏற்படுத்துவதால், அவர்கள் ஒருபோதும் உடன்படமாட்டார்கள்.

இப்போது முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க வேண்டும். இந்த மத, அரசியல் புரோகிதர்களின் இவ்வுலக ஆதாயங்களுக்காக முஸ்லிம்கள் தங்களின் இவ்வுலக, மறுஉலக ஆதாயங்களை பலி இடவேண்டுமா? அது அவசியம்தானா? என்பதே! முஸ்லிம் சமுதாயம் இந்த மத, அரசியல் புரோகிதர்களை நிராகரித்து, புறந்தள்ளி சுயமாக தன்னம்பிக்கையுடன் குர்ஆன், ஹதீஸைப் பற்றிப் பிடித்தால் அவர்களுக்கு இவ்வுலகிலும் மன நிம்மதியான வாழ்க்கை. மறுமையிலும் வெற்றியோ வெற்றி. மத, அரசியல் புரோகிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் அடையப்போவது தோல்வியோ தோல்வி.

அதற்கு மாறாக முஸ்லிம் சமுதாயம் அல்குர்ஆனையும், ஹதீஸையும் நேரடியாகப் படித்து விளங்குவதைக் கைவிட்டு, இப் புரோகிதர்கள் கொடுக்கும் சுய விளக்கங்களை நம்பி, அவர்கள் பின்னால் சென்றால் முஸ்லிம் சமுதாயம் இவ்வுலகிலும், மறுமையிலும் அடையப் போவது தோல்வியோ தோல்வி. அதற்கு மாறாக இந்த மத, அரசிpயல் தலைவர்கள் அவர்களின் விருப்பப்படியே இவ்வுலகில் அல்லாஹ் நாடிய அளவில் அற்ப இவ்வுலக ஆதாயங்களைப் பெற்று அனுபவிக்கலாம். ஆனால் நாளை மறுமையிலோ அவர்கள் அடையப்போவது நிரந்தர நரகமே. (பார்க்க 2:39,159-162, 33:66,67,68)

எனவே முஸ்லிம்களே இந்த மத, அரசியல் புரோகிதர்களின் வார்த்தை ஜாலங்களில் மயங்காமல் அவற்றைப் புறக்கணித்து குறைந்த அளவில் இவ்வுலகிலாவது 49:14 அல்லாஹ்வின் கட்டளைப்படி முஸ்லிம்கள் என்ற நிலையில் ஓரணியில் ஒரே தலைமையில் ஒன்றுபடுவோம். இவ்வுலக ஆதாயங்களையாவது பெற்று அனுபவிப்போம்.

புரோகித மவ்லவிகளாகட்டும், அரசியல் தலைவர்களாகட்டும், தங்களின் சொந்த நலனுக்காக, சமுதாய நலனை பலியிட ஒரு போதும் தயங்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சமுதாய துரோகிகள் அவர்கள். அவர்களில் முன்னிலை வகிப்பவர் ததஜ தலைமைப் பூசாரி. 1987க்குப் பிறகு ஏற்பட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் இவரே காரணகர்த்தா பொறுப்பாளரும் அவரே! போட்டி பொறாமை காரண மாகவும் அற்பப் பணத்திற்கும், வசதிவாய்ப் பிற்கும் அடிமைப்பட்டு மாற்றார்களை பதவியில் அமர்த்த ஓயாது உழைத்தார்கள் அவரும் அவரது பக்தர்களும். அதற்காகவே அத்துமீறிய அராஜக செயல்களிலும் ஈடுபட்டார்கள். யாருக்காக பரிந்துரை செய்து பதவியில் அமர்த்தி னார்களோ அவர்களின் அட்டூழியங்களில் கணிசமான பங்கு இவர்களுக்கும் உண்டு. (பார்க்க 4:85)

எனவே சகோதர, சகோதரிகள் இப்படிப்பட்ட வர்களின் நயவஞ்சக, வசீகர சூன்யப்பேச்சில் மயங்கி அவர்களின் பின்னால் செல்வதைக் கைவிட்டு, குர்ஆன், ஹதீஸைப் பற்றிப் பிடித்து, அவற்றிலுள்ளவற்றை அப்படியே செயல்படுத்த முன்வர வேண்டும்;. அதுவே அவர்களுக்கு வெற்றியையும், மறுமையில் ஈடேற்றத்தையும் பெற்றுத் தரும்.

2009 பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறி விழுந்ததால், மாற்றாரின் பார்வையில் முஸ்லிம் சமுதாயம் செல்லாக் காசாக ஆகும் நிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் தேர்தல்களிலாவது, முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் விழுவதற்குரிய முயற்சிகளை முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டோர் இப்போதிருந்தே மேற்கொள்வது அவசியத்திலும் அவசியமாகும்.

Previous post:

Next post: