சர்வதேச தலைப்பிறை

in 2008 பிப்ரவரி,பிறை

சர்வதேச தலைப்பிறை

புரோகித மவ்லவிகளின் அறியாமையா? ஆணவமா?

K.M.H.

ஜமாஅத்துல் உலமா, ரஹ்மத் ஆகிய இரு மாத இதழ்களின் ஜனவரி 2008 பிரதிகளில் “அரபு நாட்டுப் பிறையும் அரபா தினமும்” என்ற தலைப்பில் மெளலவி பாஸில் அஷ்ஷைகு முயீனுத்தீன் மன்பஈ” என்ற பெத்தப்பெயரில் பிறை சம்பந்தமான ஓர் ஆக்கம் இடம் பெற்றுள்ளது. அதன் ஆரம்ப இரு பாராக்கள் வருமாறு:

உலக முழுவதற்கும் ஏக நேரத்தில் ஒரே நாளில் முதல் பிறை என்னும் புதிய வாதம் வானவியல் விதிகளை அறியாதவர்களின் மூட நம்பிக்கையாகும். தவறான கொள்கையாகும். முதல்பிறையை இரண்டாம் பிறையாக்குவதும், இரண்டாம்பிறையை முதல் பிறையாக கணக்கிடுவதும், சந்திரமாத இறுதிநாளை அடுத்த மாத முதல் நாளாக ஆக்கிக் கொள்வதும் சந்திர இயக்க விதிகளை அறியாதவர்களின் மடமையாகும்.

ஹாஜிகள் அரபா வெளியில் இருக்கும் நாளில் (துல்ஹஜ் பிறை 9) அரபா வெளியில் அப்பால் தூர தேசங்களில் இருப்பவர்கள் நோன்பு பிடித்தால் அவர்களின் முன்பின் பாவங்கள் கழுவப்படுகின்றன என்ற நபிகள் நாயகத்தின் போதனையை, வானவியல் விதிகளை அறியாதவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். ஹாஜிகள் இருக்கும்போது அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், கிழக்காசியர்கள் ஏக நேரத்தில் அரபா நோன்பு பிடிக்க முடியுமா? இவர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டால் லுஹர், அஸர், மஃரிப், இஷா நேரங்களில் அடுத்தடுத்து நோன்பை ஆரம்பித்து மறுநாள் வெவ்வேறு நேரங்களில் நோன்பை விட வேண்டியதிருக்கும். இதை சிந்தித்தால் தான்இவர்களின் முட்டாள் தனம் வெளிச்சத்திற்கு வரும்.

ஜமாஅத்துல் உலமா, ரஹ்மத்.

உலகின் கிழக்கிலிருந்து மேற்குவரை 360 டிகிரி, 24 மணி நேரம் வித்தியாசம் இருக்க 180 டிகிரி, 12 மணி நேரம் வித்தியாசம் மட்டுமே இருக்கிறது என்பது போல் பிதற்றி இருக்கிறார்கள். இவர்களின் இப்பிதற்றலை ஏற்று கிழக்கிற்கும் மேற்கிற்கும் வெறும் 180 டிகிரி, 12 மணிநேரம் வித்தியாசம் மட்டுமே இருக்கிறது என்று பெரும்பாலான முஸ்லிம்களும் கூறி வருகின்றனர். இதோ புரோகித மவ்லவியின் கூற்று:

ஒரே சூரியனின் இயக்கத்தை கொண்டு ஏக நேரத்தில் வெவ்வேறு தொழுகைகள் நிறைவேற்றப்படுகின்றன. உதாரணமாக கிழக்குத் திசை நாடுகளில் சூரியன் உதிக்க 76 நிமிடங்களுக்கு முன் ஸுப்ஹுத் தொழுகையும், அதே நேரத்தில் மேற்குத் திசை நாடுகளில் இஷாத் தொழுகையும் நிறைவேற்றப்படுகிறது. ஒரே சூரியன் ஏக நேரத்தில் காலை, மாலை என இரண்டு வெவ்வேறான நேரங்களை, வெவ்வேறான இடங்களில் நிர்ணயிக்கிறது. ஒரே பிறை கிழக்கு திசை நாடுகளில் மாதத்தின் இறுதி நாளையும் மேற்கு திசைநாடுகளில் மாதத்தின் முதல் நாளையும் நிர்ணயிக்கிறது.

ஜ.உ. ரஹ்மத்.

புரோகித தவ்ஹீத், தக்லீத் மவ்லவிகளிடம் இந்த அளவு அறியாமையும், மெளட்டீகமும் நிறைந்து காணப்படுவதற்கு அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. சுமார் 700 வருடங்களுக்கு முன்னர், பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது. உலகம் முழுவதும் சூரியன் உதித்து மறைய 12 மணி நேரம் ஆகிறது என்று எழுதப்பட்டுள்ள மூடநம்பிக்கைகள் நிறைந்த நூலான “தஷ்ரீக்குல் அஃப்லாக்” என்ற புவியியல் நூலே, இன்றும் இவர்களின் அரபி கல்லூரிகளில் (?) போதிக்கப்படுகிறது. பூமி முட்டைபோல் நீள் உருண்டை, அது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி தன்னைத்தானே சுற்ற 24 மணிநேரமும், சூரியனைச் சுற்ற சுமார் 3651/4 நாட்களும் எடுக்கிறது என்ற உண்மை கண்டு பிடிக்கப்பட்டு 300 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட மூட நம்பிக்கைகள் பல நிறைந்த இந்த நூலே இந்த அரபி மதரஸாக்களில் பரக்கத்தானது என்று கூறி இன்றும் பாட திட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்றால், ஏழு ஆண்டுகளாக அதை உருப்போட்டு வரும் இந்த மவ்லவிகள் எந்த அளவு அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும் ஊறித்திளைததிருப்பார்கள் என்பதைச் சுய சிந்தனையாளர்கள் மட்டுமே அறிய முடியும்.

புரோகித மவ்லவிகள் விளங்கித்திருந்த முன் வராவிட்டாலும், அவர்களைப் பெரிதும் நம்பியுள்ள முஸ்லிம்கள் விளங்கித் திருந்த கீழ்க்கண்ட விளக்கங்களை அறியத் தருகிறோம். பூமி நீள் உருண்டையாக இருப்பதால், நாம் இருக்கும் பகுதியில் சூரிய உதயம், மறைவு 12 மணி நேரம் இருப்பதுபோல், மறு பகுதியிலும் உதயம், மறைவு 12 மணி நேரம் ஆக 24 மணி நேரம் ஆகின்றது. அவர்கள் எழுதி இருப்பது போல் கிழக்குத் திசை நாடுகளில் சுபுஹு தொழும் அதே நேரத்தில் மேற்குத் திசை நாடுகளில் இஷா தொழமாட்டார்கள். உண்மையில் தேதிக்கோட்டிற்கு அருகாமையில் இருக்கும் கிழக்குத்திசை நாடுகள் வெள்ளி காலை சுபுஹு தொழுதால், அதே நேரத்தில் தேதிக் கோட்டிற்கு அருகாமையில் இருக்கும் மேல்திசை நாடுகள் வியாழன் காலை சுபுஹு தொழுவார்கள். அதாவது கீழ்த்திசை நாடுகள் வெள்ளி ஜும்ஆ தொழும் அதே நேரத்தில் மேல்திசை நாடுகள் வியாழன் ழுஹர் தொழுவார்கள். கீழ்த்திசை நாடுகள் ஜும்ஆ தொழுது சரியாக 24 மணி நேரத்திற்குப் பிறகு மேல்திசை நாடுகள் வெள்ளி ஜும்ஆ தொழுவார்கள்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஒரே தேதி – ஒரே பிறை – ஓரே நாள் – ஒரே வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுவார்கள் என்று நாம் சொன்னால், இந்த தவ்ஹீத், தக்லீத் மவ்லவி புரோகிதர்கள் அதை எப்படி விளங்குவார்கள்? பிறை விஷயத்தில் அவர்கள் எழுதி இருப்பது போல் உலக முழுவதும் ஏக நேரத்தில் ஒரே நேரத்தில் ஜும்ஆ தொழுவார்கள் என்று விளங்குவார்களா? அல்லது 24 மணி நேரத்திற்குள் உலக நாடுகள் அனைத்தும் ஜும்ஆ தொழுது முடித்து விடுவார்கள் என்று விளங்குவார்களா?

உதாரணமாக 1-2-1429 (8.2.2008) வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ஜும்ஆ தொழுது முடித்து விடுவார்கள் என்று நாம் கூறினால் அதை ஏற்பார்களா? அல்லது அதற்கு மாறாக உலகம் முழுவதும் ஏக நேரத்தில் ஓரே நாளில் ஜும்ஆ எப்படி தொழ முடியும்? 1.2.1429, 2.2.1429 வெள்ளி, சனி இரண்டு நாள் என்றோ அல்லது 1.2.1429, 2.2.1429, 3.2.1429 வெள்ளி, சனி, ஞாயிறு என்றோ இந்த தவ்ஹீத், தக்லீது் புரோகித மவ்லவிகள் சொல்வார்களா? அப்படிச் சொன்னால், மக்கள் இவர்களை அறிவாளிகள் என்பார்களா? அறிவு கெட்ட மூடங்கள் என்று சொல்வார்களா? இதே மூடத்தனமான வாதத்தைத்தான் ஹி.1429 முஹர்ரம் தலைப்பிறை, ஆண்டின் முதல் நாள், முதல் பிறை 9.1.2008, 10.1.2008, 11.1.2008 புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் வர முடியும் என் பிதற்றுவோர் வைக்கின்றனர்.

“வானவியல் விதிகளை அறியாதவர்களின் மூட நம்பிக்கையாகும்”, “தவறான கொள்கையாகும்”, “முதல் பிறையை இரண்டாம் பிறையாக்குவதும், இரண்டாம் பிறையை முதல் பிறையாக கணக்கிடுவதும், சந்திர மாத இறுதிநாளை அடுத்த மாத முதல் நாளாக ஆக்கிக்கொள்வதும் சந்திர இயக்க விதிகளை அறியாதவர்களின் மடமையாகும்” என்று அவர்கள் எழுதி இருப்பது யாருக்குப் பொருந்தும்? முதல் பிறை இரண்டு நாளோ, மூன்று நாளோ வர முடியும் என்று கூறும் அவர்களுக்குப் பொருந்துமா? 1-ம் தேதி, புதன் கிழமை, 1-ம் பிறை ஆகிய இம் மூன்றும் ஒரு நாள் 24 மணி நேரத்திற்குள் மட்டுமே இருக்க முடியும் என்று கூறும் எமக்குப் பொருந்துமா?அவர்கள் எழுதி இருப்பது போல் அறிவை இந்தப் புரோகித முல்லாக்களிடம் அடகு வைக்காமல் சுயமாக சிந்திக்க முற்படுகிறவர்களுக்கு மட்டுமே விளங்கும்.

அல்லது விஞ்ஞானிகள் சொல்லுவது போல் சூரியன், சந்திரன், பூமி மூன்றும் நேர் கோட்டிற்கு வரும் (Conjuction) அமாவாசை நாளை புதிய பிறை (New Moon) ஏற்கவில்லை. காரணம் அந்த நாளின் முந்திய பகுதி கடக்கும் மாதத்தின் இறுதிப் பகுதியாகவும், ஆரம்பிக்கும் மாதத்தின் முற்பகுதியுமாக இருக்கிறது . அன்று ஹிந்து சகோதரர்கள் முற்பகுதி தேய்பிறையில் இறந்து போனவர்களுக்குரிய சடங்குகளை செய்கிறார்கள். தீபாவளி அந்த அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி அந்த அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. அந்த நாளின் பிற்பகுதியில் அதாவது சந்திரன் நேர்கோட்டைத் தாண்டிய பின் வளர்பிறையில் தொட்ட காரியம் வளரும் என்ற மூடநம்பிக்கையில் சுப காரியங்களையும் செய்கின்றனர். ஹிந்து புரோகிதர்களுக்கு இருக்கும் அறிவு கூட முஸ்லிம் புரோகிதர்களுக்கு இல்லையே என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

நாமோ தேய்பிறையும், வளர்பிறையும் கலந்துள்ள அந்த நாளை முதல் நாளாக எடுக்காமல், அதற்கு அடுத்த நாள் கிழக்கில் நாள் ஆரம்பிக்கும் தேதிக் கோட்டிலிருந்து முதல் நாளைக் கணக்கிட்டு முதல் பிறை என்கிறோம். அதிலிருந்து 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் அதாவது கிழக்கிலிருந்து மேற்குவரை அனைத்து நாடுகளும் முதல் நாள் – முதல் பிறை – முதுல் கிழமையை முடித்துக் கொண்டு இரண்டாவது நாளில் நுழைந்துவிடும் என்கிறோம். இதில் அவர்களின் அறிவற்ற பிதற்றல்களுக்கு எங்கே இடம் இருக்கிறது? மாதத்தின் ஆரம்ப முதல் நாள் – முதல் தேதி – முதல்கிழமை, முதல்பிறை மூன்று நாள், மூன்று கிழமை, மூன்று தேதி வர முடியும் என்று பிதற்றுகிறவர்களே அறிவற்ற மூடர்களாகவும், மடமையில் மூழ்கியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். துல்ஹஜ் மாதம் முதல் நாள் – முதல் தேதி – முதல் கிழமை – முதல் பிறையைச் சரியாகக் கணக்கிட்டு அந்த அடிப்படையில் பிறை 9-ன் காலை பஜ்ரை அதாவது தேதிக்கோட்டுக்குச் சமீபமாக இருக்கும் உலகின் கிழக்குப்பகுதி மக்கள் அரஃபா நோன்பை நோற்க ஆரம்பிக்க வேண்டும். ஜும்ஆ தொழுகையை முதலில் தேதிக் கோட்டிற்கு சமீபமாக கிழக்கில் இருப்பவர்கள் ஆரம்பித்து படிப்படியாக 24 மணி நேரத்திற்குள் உலகிலுள்ள அனைவரும் ஜும்ஆ தொழுகையை முடிப்பது போல், தேதிக் கோட்டிற்கு சமீபமாக கிழக்கில் உள்ளவர்கள் பிறை 9-ல் அவர்களுக்குரிய பஜ்ர் நேரத்தில் அரஃபா நோன்பை முதலில் ஆரம்பித்து அவர்களுக்குரிய மஃரிபில் துறப்பார்கள். இதே போல் உலகிலுள்ள அனைவரும் அவர்கள் பிறை 9-ன் காலை பஜ்ரை அடையும்போது அரஃபா நோன்பை ஆரம்பித்து அன்று அவர்களுக்குரிய மஃரிப் நேரத்தில் நோன்பை துறப்பார்கள். மற்றபடி அரஃபாவில் இருப்பவர்களின் அன்றைய பஜ்ர் நேரத்தையோ, மஃரிபு நேரத்தையோ போட்டு, தானும் குழம்பி மக்களையும் குழப்ப மாட்டார்கள். இது நேர்வழி நடப்பவர்களின் செயலாகும். ஆனால் அல்லாஹ் அல்குர்ஆன் அத்தவ்பா 9:34-ல் கூறி இருப்பது போல் மக்களின் பொருட்களை, அல்குர்ஆனில் சுமார் 55 இடங்களில் கடுமையாக எச்சரித்துள்ள எச்சரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, தவறாகச் சாப்பிட்டு வரும் தவ்ஹீத், தக்லீத் மவ்லவி புரோகிதர்கள், அல்லாஹ்வின் நேரிய பாதையை விட்டு மக்களைத் தடுக்கும் நோக்கத்துடன், தலைப்பிறை முதல் தேதி – முதல் நாள் – முதல் கிழமை இரண்டு நாட்களும் வரலாம், மூன்று நாட்களும் வரலாம் என குழப்பத்தான் செய்வார்கள். அதனால்தான் உலகம் முழுவதும் ஒரே நாளில் 24 மணி நேரத்திற்குள் தலைப்பிறை ஆரம்பித்து முடிந்து விடும் என்று கூறுவதை மறுத்து, “அப்படி ஏற்றால் ழுஹர், அஸர், மஃரிப், இஷா நேரங்களில் அடுத்தடுத்து நோன்பை ஆரம்பித்து மறுநாள் வெவ்வேறு நேரங்களில் நோன்பை விடவேண்டி இருக்கும்” என்று கூறி தங்களின் முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களை குழப்பியுள்ளனர். இப்புரோகித மவ்லவிகளின் பிடியிலிருந்து விடுபட்டு சொந்தப் புத்தி கொண்டு சிந்தித்து செயல்படுகிறவர்களே வெற்றியாளர்கள்.

மேற்கொண்டு விளக்கம் பெற வீடியோவை கிளிக் செய்யவும் வீடியோ – Video

Previous post:

Next post: