உலகை வழி நடத்த முன்வாருங்கள்!

in 2009 ஆகஸ்ட்,பிறை,புரோகிதம்,பொதுவானவை,ரமளான்

உலகை வழி நடத்த முன்வாருங்கள்!

சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1430-ம் ஆண்டின் ரமழானை சந்திக்க இருக்கிறோம். மிக மிக நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பான கணினியின் மூலம் மிகத் மிகத் துல்லியமான கணக்கீட்டின்படி 1430-ம் ஆண்டின் ரமழான் மாதம் 21.08.2009 வெள்ளியன்று ஆரம்பித்து 18.09.2009 வெள்ளியன்று 29 நாட்களுடன் முடிவடைகிறது. 19.09.2009 சனி அன்று பெருநாள். இந்த மிகமிகச் சரியான கணக்கீடுகளின்படி நம்முடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற முயல்வோமாக. இப்போது இந்தத் துல்லியக் கணக்கீட்டின்படி செயல்படுகிறவர்களே ரமழான் இரவுத் தொழுகைகளையும், லைலத்துல் கத்ருடைய நாளையும் முறையாக முழுமையாக அடையும் பாக்கியம் பெற்றவர்கள்.

புரோகிதர்கள் வீண் பிடிவாதம் பிடிக்கும் தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்பது, விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அன்றையலத்தில் மாதம் பிறப்பதை அறிந்து கொள்ள இருந்த ஒரே வழியே அல்லாமல், மார்க்கத்திற்கு உட்பட்ட ஒரு கடமை அல்ல, பொதுவாக மார்க்கத்தைத் தொழிலாகக் கொண்ட புரோகிதர்களிடம் ஒரு மிக ஆபத்தான பிடிவாதமான நடைமுறை உண்டு. எவையெல்லாம் மார்க்கத்திற்கு உட்பட்டவை இல்லையோ கால சூழ் நிலைகளுக்கு ஏற்ப, விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டியவையோ, அவற்றைப் பிடிவாதமாக மார்க்கமாகக் கற்பித்து நிலை நிறுத்த முற்படுவார்கள். அதற்கு மாறாக எவையெல்லாம் மார்க்கத்திற்கு உட்பட்டவையோ, குர்ஆன், ஹதீஸில் இருப்பதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் உள்ளது உள்ளபடி மார்க்கக் கடமையாக எடுத்து நடக்க வேண்டும் என்று அல்லாஹ் 7:3, 33:36,66,67,68, 59:7 போன்ற பல இறைவாக்குகளில் கடுமையாகக் கட்டளையிட்டிருக்கிறானோ அவற்றில் தங்களின் சுய விளக்கங்களைப் புகுத்தி தூய இஸ்லாமிய மார்க்கத்தையும், இதர மதங்களைப் போல் ஒரு மதமாக மாற்றி விடுவர், இதர மதப் புரோகிதர்கள் பொது மக்களை அவர்களின் வேதங்களை(?) விட்டும் தூரப்படுத்தி வைத்திருப்பது போலவே முஸ்லிம்களை அல்குர்ஆனை விளங்குவதை விட்டும் தூரப்படுத்தி விட்டார்கள்.

அதன் விளைவு முஸ்லிம்கள் அல்குர் ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைகளின்படி நடந்த காலமெல்லாம், அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் இருந்தார்கள். பயமோ, துக்கமோ இல்லாத மிகமிக உயர்ந்த நிலையில் இருந்தார்கள் (பார்க்க 3:139). உலக மக்களை வழிநடத்திச் செல்லும் பெரும் பேறைப் பெற்றிருந்தார்கள். ஆட்சி அதிகாரத்தையும் அல்லாஹ் முஸ்லிம்களுக்குக் கொடுத்திருந்தான். (பார்க்க. 24:55)
என்று இந்த புரோகிதர்கள் திருட்டுத்தனமாகப் புகுந்து முஸ்லிம் சமுதாயத்தில் ஆலிம்-அவாம் வேறுபாட்டைக் கற்பித்து, சமுதாயத்தை இரண்டாகப் பிளவு படுத்தினார்களோ, அன்றே முஸ்லிம்களின் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. முஸ்லிம்கள் அல் குர்ஆனைப் பற்றிப் பிடிப்பதைக் கைவிட்டு இப்புரோகிதர்கள் பின்னால் கண்மூடிச் செல்ல ஆரம்பித்தார்கள். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டவர்கள் ஒருபோதும் நேர்வழியை போதிக்க மாட்டார்கள், கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதிப்பார்கள் என்பதை அல்குர்ஆனின் பல வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன.

இதற்குக் காரணம் என்ன? மக்களில் மிகப் பெரும்பான்மையினர் கோணல் வழிகளில் சென்று நரகை அடைவர் என அல்குர்ஆன் எண்ணற்ற இடங்களில் உறுதிப்படுத்துகிறது. இப்புரோகிதர்கள் இவ்வுலகை தேர்ந்தெடுத்துள்ளதால், பெரும் பான்மையினரின்; அன்பைப் பெற, கோணல் வழிகளையே நேர் வழியாகக் காட்டும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். அல்லாஹ் அதிகமான இடங்களில் யார் நேர்வழியை விளங்கமாட்டார்கள் என்று கூறுகிறானோ, அவர்களுக்கு இப்புரோகிதர்கள் நேர்வழியைக் காட்டுகிறார்கள் என்றால் அது கோணல் வழியாகத்தானே இருக்கும். அவர்கள் எதிர்பார்ப்பது போல் வழிகேட்டில் சென்று நரகம் புகும் மக்கள் இப்புரோகிதர்கள் பின்னால் அணி வகுக்கிறார்கள். ஆதம்(அலை) அவர்களது காலத்திலிருந்து இதுதான் நடைபெற்று வருகிறது. இதுதான் புரோகிதர் களுக்குரிய சாதக சூழ்நிலை.
முஸ்லிம் சமுதாயமும் இப்புரோகிதர்களின் கடும் சூழ்ச்சி காரணமாக கடந்த(1000) ஆயிரம் ஆண்டுகளாக இப்புரோகிதர்களின் பிடியிலேயே வசமாக வலுவாகச் சிக்கி இருக்கிறது. கடலிலிருந்து எடுக்கப்படும் பல லட்சக்கணக்கான சிப்பிகளை உடைத்துப் பார்க்கும்போது அவற்றில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கே முத்துகள் கிடைப்பதுபோல், நேர்வழி நடந்து சுவர்க்கம் புகும் மக்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள் என அல்குர்ஆன் பல இடங்களில் கூறி உறுதிப்படுத்தி இருப்பதே நடந்தேறி வருகிறது.

மிகப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் மவ்லவிகள் சொல்வது தான் மார்க்கம்ளூ மவ்லவி அல்லாதவர்கள் சொல்வது எப்படி மார்க்கமாக முடியும்? என்று வினாத் தொடுக்கிறார்கள். மற்றபடி எடுத்துச் சொல்லப்படும் குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை நேரடியாகப் பார்த்து சிந்தித்து விளங்க முன் வருவதாக இல்லை. பின் எப்படி அவர்கள் நேர் வழி பெறுவார்கள்? அதனால்தான் புரோகிதர் களின் காட்டில் மழை பெய்கிறது. மிகப் பெரும் பான்மையான மக்கள் தங்கள் பின்னால்தான் இருப்பார்கள் என்ற தைரியத்தில்தான் இப்புரோகிதர்கள் தெனாவட்டாகப் பேசித் திரிகிறார்கள்.

ஆனால் இறுதி வெற்றி அவர்களுக்கல்ல, இவ்வுலகில் கூட மொத்த முஸ்லிம்களில் ஓரிரு விழுக்காட்டினர் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒன்றுபட்டுச் செயல்பட முன்வந்தால் அவர்களால் உலகின் போக்கையே மாற்றியமைக்க முடியும். 22:78-ல் இம்மார்க்கம் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கம் என அல்லாஹ் சொல்கிறான். இன்றைக்கு 1430 வருடங்களுக்கு முன்னால் நபி(ஸல்) அவர்கள், அரபு மக்களைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருந்த தாருந் நத்வா புரோகிதர்களை எதிர்த்து மிக மிகக் கடுமையாகப் போராட நேரிட்டது. பெருங் கொண்ட மக்கள் அப்புரோகிதர்கள் பின்னால்தான் கண் மூடிச் சென்றனர். நரக விளிம்பில் நின்றனர்.

அன்று இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கப்படி நடக்கிறோம் என்று கூறிய மக்கள் தொகையோடு நபி(ஸல்) அவர்களின் அல்குர்ஆன் போதனையை ஏற்று அவர்கள் பின்னால் அணி வகுத்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் ஓரிரு விழுக்காடே இருப்பார்கள். அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்த அந்த ஓரிரு விழுக்காட்டினரான சிறுபான்மையினரைக் கொண்டே அல்லாஹ் உலகின் போக்கையே மாற்றி அமைத்தான்.

அதேபோல் இன்றும் இன்றைய முஸ்லிம் மக்கள்; தொகையில் ஓரிரு விழுக்காட்டினர் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஓரணியில் ஒன்றுபட்டு விட்டால், உலகின் போக்கையே மாற்றியமைக்கும் அதிசயம் நிகழ்ந்து விடும். இன்ஷா அல்லாஹ். அன்றைய உலக மக்கள் மூட நம்பிக்கைகளிலும், அனாச்சாரங்களிலும், ஒழுக்கக் கேட்டிலும், குடி, சூது, விபச்சாரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை என அழிவின் விளிம்பில், நரகின் விளிம்பில் நின்ற அதே நிலையில்தான் இன்றைய மக்களும் இருக்கிறார்கள்.

அழிவின், நரகின் விளிம்பில் நிற்கும் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பும், தகுதியும் முஸ்லிம்களுக்கே இருக்கிறது. எனவே முஸ்லிம்களில் ஓரிரு விழுக்காட்டினராவது அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஓரணியில் ஒன்றுபட்டுவிட்டால், இன்ஷா அல்லாஹ் உலகம் எதிர்பார்க்கும் அந்த மாறுதல் ஏற்பட்டு விடும். அதற்கு முதலில் முஸ்லிம்களில் ஓரிரு விழுக்காட்டினராவது புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். மவ்லவிகள்தான் மார்க்கத்தைச் சொல்ல அதிகாரம் பெற்றவர்கள் என்ற மூட நம்பிக்கையைக் களைய வேண்டும். குர்ஆனில் அப்படிச் சொல்லும் ஒரேயொரு வசனமும் இல்லை என்பதை அறிந்து அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின் தூதரை விட இந்தப் புரோகிதர்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது என்ற, அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் (பார்க்க 42:21) கொடிய பாவத்தை விட்டு பாவ மன்னிப்புக் கேட்டுத் திருந்த வேண்டும். அதிலும் குறிப்பாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுள்ள இந்த புரோகிதர்கள் ஒருபோதும் நேர்வழியைக் காட்ட முடியாது, கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுவதை உறுதியாக ஏற்க வேண்டும்.

இந்த கடும் முயற்சியைத்தான் அந்நஜாத் 1986-லிருந்து செய்து வருகிறது. அந்நஜாத் இதுவரை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்த அல்குர்ஆன் வசனங்கள், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இவை அனைத்தையும் நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்கியவர்கள் மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் 100% உண்மை என்பதை உறுதியாக அறிவார்கள்.

ஆம்! முஸ்லிம்கள் புரோகிதர்களைப் புறக்கணித்து அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து, ஓரணியில் ஒன்றுபட வேண்டும் என்ற தீராத தாகத்துடன் அந்நஜாத் கடந்த 1986-லிருந்து வெளி வருகிறது. அல்லாஹ்வின் நாட்டப்படி சில புரோகிதர்களின் சதியால் தொய்வு ஏற்பட்டு, மீண்டும் முஸ்லிம்களிடையே இயக்கப் பிரிவுகளை விட்டு விடுபட்டு முஸ்லிம் என்ற நிலையில் ஒன்றுபட வேண்டும் என்ற ஆர்வம் துளிர்விட ஆரம்பித் திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நாம் முறையாக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முற்பட வேண்டும்.
இதற்கென்றே ஆகஸ்ட் 15,16 சனி, ஞாயிறு இரு தினங்கள் பெரம்பலூர் J.K மஹாலில் ஓர் ஒருங்கிணைப்பு முயற்சிக்கு ஏற்பாடு செய்திருக் கிறோம். ஒவ்வொருவரும் குறைந்தது 10 முஸ்லிம்களையாவது அழைத்துவர பெரும் முயற்சி(தியாகம்) செய்ய வேண்டுகிறோம்.
அந்நஜாத் எடுத்து வைக்கும் இந்தக் கோரிக்கையை சரி காண்பவர்கள், விளம்பரமோ, வேறு வெளிநாட்டு உதவிகளோ இல்லாமல், அல்லாஹ்மீது முழு நம்பிக்கை வைத்துச் செயல்படும் அந்நஜாத்திற்கும், 15,16 ஒருங்கிணைப்பு முயற்சிக்கும் தங்களால் ஆன நிதி உதவிகளைச் செய்வதுடன், அந்நஜாத்தின் இச் செய்தி மக்களிடம் போய்ச் சேரும் வகையில் அந்நஜாத்தின் சந்தாக்களை அதிகப்படுத்த முன் வர வேண்டுகிறோம். சத்தியத்தை உணர்ந்த ஒவ்வொரு சகோதரரும் குறைந்தது 100 சந்தாக்களையாவது சேர்க்க உழைக்க வேண்டுகிறோம்.
ஜகாத் கடமையான சகோதரர்கள் தவறாமல் வருடாவருடம் கொடுத்த பொருள்களுக்கே மீண்டும், மீண்டும் ஜகாத் கொடுக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள். இதுதான் குர்ஆன், ஹதீஸ் கூறும் சரியான போதனை. ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும், மீண்டும் மீண்டும் கொடுக்கத் தேவை யில்லை என்று சிலர் கூறுவது, குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலல்ல. ஜகாத் கொடுக்காமல் கஞ்சத் தனம் செய்யும் செல்வந்தர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று உலக ஆதாயம் அடையும் தீய நேக்கத்துடனும், தங்கள்மீது கடமையான ஜகாத்தைத் தட்டிக் கழிக்கவும் அவர்கள் செய்யும் தந்திரமாகும். பெரும் தவறாகும். பாவமாகும், நாளை நரகில் சேர்க்கும். கடந்த 1430 ஆண்டுகளாக நபி(ஸல்) அவர்களது காலத்திலிருந்து யாருமே, எந்த நாட்டினருமே சொல்லாத, செயல்படுத்தாத ஒரு பகிரங்க வழிகேடாகும்.
இப்படிப்பட்டவர்களின் வழிகெட்ட அறிவுரை களைக் கேட்டு அதன்படி ஜகாத் கொடுக்காமல் தடுத்துக் கொள்கிறவர்கள் 9:34 இறைவாக்கை மீண்டும், மீண்டும் படித்துப் பார்த்துப் படிப்பினை பெறுவார்களாக.

அடுத்து ஜகாத் கூட்டு முறையில் கொடுப்பதே மிகமிகச் சிறந்ததும் நபி வழியுமாகும். அந்நஜாத் நீண்ட காலமாக செல்வந்தர்களிடமிருந்து ஜகாத்தைப் பெற்று ஜகாத் பெற தகுதியுடைய வர்களை அறிந்து கொடுத்து வருகிறது. அப்படிப் பட்ட ஏழைகளின் பெருநாள் செலவு, அரிசி (ஃபித்ரா), துணிமணி, படிப்புச் செலவு, திருமணச் செலவு, மருத்துவச் செலவு, கடனுதவி, தொழில் அபிவிருத்தி இப்படி அவர்களின் நியாயமான தேவைகளை அறிந்து அந்நஜாத் விளம்பரம் இல்லாமல் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி உதவி வருகிறது.
இப்படிப்பட்ட உதவிகள் ஜகாத் பெற உரிமைப் பெற்ற ஏழைகளுக்கு முறையாகவும் அதிகமாகவும் கிடைக்க மன வளமும், பொருள் வளமும் நிறைந்த பெருந்தகைகள் தாராளமாக தங்கள் ஜகாத் பணத்தை அனுப்பித் தந்தால் பேருதவியாக இருக்கும்.

செல்வந்தர்கள் தங்கள் ஜகாத் பணத்தையும் அனுப்பி, தங்கள் ஜகாத் பணத்திலிருந்து பெறத் தகுதி பெற்றவர்களையும் பட்டியலிட்டு அனுப்பலாம். அப்படி செல்வந்தர்களால் அனுப்பப் படும் பட்டியலில் உள்ளோருக்கும் முறையாக ஜகாத் பணம் அனுப்பி வைக்கப் படுகிறது. ஆனால் இப்போதைக்கு ஒரு சில செல்வந்தர்களே அப்படி அனுப்பி வருகிறார்கள். மற்றும் பலர் தனித்தனியாகக் கொடுத்து வருவதாகத் தெரிகிறது. அவர்களும் இக்கூட்டு முயற்சியில் பங்கு பெறுவதே நபிவழி என்பதை உணர்த்தக் கடமைப் பட்டிருக்கிறோம். ஜகாத், அந்நஜாத் நிதிஉதவி, ஃபித்ரா, குர்பானி என அனுப்புகிறவர்களுக்கு வருடா வருடம் வரவு-செலவு கணக்குகள் தவறாமல் அனுப்பப் படுகின்றன.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி, நபி(ஸல்) அவர்களின் நடைமுறைப்படி எவ்வித கூடுதலோ, குறைத்தலோ இன்றி ரமழான் ஆரம்பித்தவுடன் நோன்பை ஆரம்பித்து, ரமழான் முடிந்தவுடன் நோன்பை முடித்து, ஷவ்வால் முதல் நாளிலேயே பெருநாள் கொண்டாட முனைவோம். தங்களின் அற்ப உலக ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு, பிறையைப் புறக்கண்ணால் பார்த்துத் தீர்மானிக்க வேண்டும் என்ற அறிவீனமான சட்டத்தைச் சொல்லி ஆரம்ப ரமழான் நோன்புகளை விட்டும், ஷவ்வால் முதல் நாள் பெருநாள் தினத்தில் ஹறாமான நோன்பு நோற்றும் முஸ்லிம்களின் நற்செயல்களைப் பாழாக்கும் புரோகிதர்களின் துர்ப்போதனைகளைத் தூக்கி எறிவோமாக.

நம்முடைய செல்வங்களின் ஜகாத்தை முறையாக, முழுமையாகக் கணக்கிட்டு வருடா வருடம் கொடுப்பதுடன், உரிய காலத்தில் நோன்பு நோற்று உரிய காலத்தில் இரவுத் தொழுகைகளை நிறை வேற்றி, லைலத்துல் கத்ருடைய நாளைத் தேடும் நாட்;களை முறையாக முழுமையாக அடைந்து, உரிய நாளில் பெருநாள் தொழுகை தொழுது அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவோமாக. சமுதாய மறுமலர்;ச்சிக்கும், மீண்டும் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு உன்னத நிலையை அடையவும், உலக மக்களை வழி நடத்தவும், அல்லாஹ் முஸ்லிம்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்கவும். ரமழானில் அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆ செய்வோம். அல்லாஹ் அருள் புரிவானாக! வஸ்ஸலாம்.
இப்படிக்கு,
அபூ அப்தில்லாஹ்
நீங்கள் அனுப்பும் நிதி உதவிகளை இன்ன வகைக்கு எனக் குறிப்பிட்டு டிரஸ்ட்டுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

AL MUSLIMEEN CHARITABLE TRUST

PUNJAB NATIONAL BANK, W.B.Road, Trichy-8.

A/c. No. 4403000101024016

Previous post:

Next post: