ஐயமும்! தெளிவும்!
ஐயம் : திருமண வயது அடைந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது பெண்ணின் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா? அல்லது பெண்ணின் தந்தை தன் சொந்த விருப்பத்திற்கு திருமணம் செய்து கொடுக்கலாமா? குர்ஆன், ஹதீஸ் வழியில் விளக்கம் தருக!. R.ஹபீப் முஹம்மது, துபாய்.

தெளிவு : இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் ஏற்படும் வாழ்க்கை ஒப்பந்தமாகும். மாற்று மதங்களில் கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவது இஸ்லாத்தில் இல்லை; திருமணம் புரியவுள்ள ஆணும் பெண்ணும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்  கணவன், மனைவியாகிறார்கள். எனவே ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் தங்களது பரிபூரண சம்மதத்தை தெரிவிக்க வேண்டியது இஸ்லாமிய திருமணத்தில் மிக மிக அவசியமாக வலியுறுத்தப்பட்ட விஷயமாகும்.

முன்பே மணமுடிக்கப்பட்டு கணவனை இழந்துவிட்ட விதவையும், அல்லது முந்திய கணவனால் விவாக முறிவு (தலாக்) கொடுக்கப்பட்ட பெண்ணும் தனக்கான இத்தா காலம் முடிந்ததும் மறுமணம் முடிக்க விரும்பினால் அப்பெண்ணின் முழு சம்மதத்தையும் பெற்றே மணமுடித்து வைக்க வேண்டும். இப்பெண்களை அயிம்மா என்றோ தய்யிபா என்றோ அழைப்பர்.
கன்னிப் பெண்ணாக இருப்பானேயானால் அவள் தனது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். அவளுக்கு விருப்பமில்லையெனில் கட்டாயம் சொல் மூலம் தெரிவிக்க வேண்டும். அவன் எந்த பதிலும் தராமல் மெளனம் சாதித்தால் அது சம்மதம் என்ற பொருளைத் தரும். இப்பெண்ணை ‘பாகிரா’ என்று அழைப்பர்.

‘அயிம்மா’ பெண்களுக்கு அவர்களது சம்மதமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள். கன்னிப் பெண்களிடம் திருமண விஷயமாக அனுமதி பெற வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப் பெண் (நாணத்தால் தன் எண்ணத்தை) தெளிவாகச் சொல்ல வெட்கப்படுவாளே! என்று சிலர் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவளது மெளனம் சம்மதமாகும் என்கிறார்கள். அறிவிப்பாளர்கள் : ஆயிஷா, இப்னு அப்பாஸ், அபூஹுரைரா(ரழி)-அன்கும்) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸபீ, தாரமி திர்மிதி, இப்னுமாஜ்ஜா, தராகுத்னீ, இப்ன ஜாரூத், பைஹகீ, இப்னு ஹிப்பான், இப்னு அபூஷைபா, முஸ்னத் அஹ்மத்.
இந்நபிமொழி மூலம் திருமண பந்தத்தில் முந்திய அனுபவம் பெற்ற பெண்கள் தங்களது அடுத்த திருமணத்திற்கு தெளிவாக சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்பதை அறியலாம். முந்திய அனுபவமில்லா கன்னிப்பெண்கள் தங்களது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். சம்மதமில்லையெனில் நிச்சயமாக வாய்விட்டு சொல்லியே ஆக வேண்டுமென்பதை உணரலாம். இதற்கு இரு (ஆண்) சாட்சிகள் நிச்சயம் வேண்டும்.

ஒரு திருமணத்தில் ஒரு ஆண், ஒரு பெண் கொண்ட சாட்சியை உமர்(ரழி) அவர்கள் ஏற்கவில்லை என்பதை அபூதாவூத், அஹ்மதில் வரும் ஒரு அஃதர் தெளிவுபடுத்துகிறது. இந்த சம்மதத்தை குறைந்தது இரு ஆண்கள் அல்லது ஒரு ஆண், இரு பெண்கள் சாட்சியாகப் பெற வேண்டும். இவ்விதமாக மணப்பெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்திவைக்கப்படும் திருமணம் இஸ்லாத்தில் செல்லத்தக்கதல்ல. அது முறிக்கப்படும்.
கன்சா(ரழி) என்ற அன்சாரி ஸஹாபியம்மா அறிவிக்கிறார்கள் ்

எனது தந்தை கிதாம்(ரழி) அவர்கள் (எனது முழு சம்மதமின்றி) எனக்கு பிடிக்காத இடத்தில மணமுடித்துக் கொடுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அந்த திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். இதே நிகழ்ச்சியை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். இதனை முஅத்தாமாலிகி, புகாரி (7v/69), அபூதாவூத், அந்-நஸயீ, தாரமி, இப்னு மாஜ்ஜா, இப்னு ஜாரூத், பைஹகீ, அஹ்மத் போன்ற நூல்களில் காணலாம்.

இவ்விதம் தனது தந்தையின் வற்புறுத்தலில் நடத்தப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் மூலம் ரத்து செய்யப்படவே கன்சா(ரழி) அவர்கள் அபூலுபாபா(ரழி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள் என்ற விபரம் அப்துர்ரஹ்மான்பின் யஜீத்(ரழி) அறிவிக்க இப்னு மாஜ்ஜா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஒர கன்னிப்பெண் சம்மதமின்றி அவளது தந்தையால் நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்ததாக ஒரு நபிமொழி அபூதாவூதில் (2091) இப்னு அப்பாஸ்(ரழி) கூற பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே எந்த முஸ்லிம் பெண்ணையும் அவளது முழு சம்மதமின்றி எவருக்கும் திருமணம் செய்து வைக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை. அப்பெண்ணைப் பெற்றெழுத்த தந்தைக்கும் அனுமதியில்லை என்பதை தெளிவாக உணர்ந்து பெற்றோர்கள் நடந்து கொள்வது அவசியமாகும்.

**************************
ஐயம்: ஒரு ஆண்மகன் திருமணம் செய்ய பெண் தேடும்போது மனைவியாக அமையும் பெண்ணிற்கு நபி(ஸல்)அவர்கள் கூறிய தகுதிகள் என்ன? ஆதாரங்களுடன் விளக்குக: பக்கீர் முஹம்மது,சித்தையன் கோட்டை.

தெளிவு : நபி(ஸல்) அவர்கள் திருமணம் புரிய நாடும் மணமகன், மணமகளுக்குக் கூறிய அடிப்படை தகுதிகளைக்  காண்போம். ஒரு பெண்ணுடைய செல்வத்துக்காக, அழகுக்காக, அவளது குலத்திற்காக, அவளது நல்லொழுக்கத்திற்காக என நான்கு விஷயங்களின் அடிப்படையில் மணமுடிக்கின்றனர்.

நீ நல்லொழுக்கமுள்ளவளை மணம் புரிவதன் மூலம் வெற்றியடைந்து கொள்! என நபி(ஸல்) அவர்கள் அறிவுரைப் பகன்றார்கள். அறிவிப்பு : அபூஹுரைரா(ரழி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரமி, இப்னு மாஜ்ஜா, பைஹகீ, அஹ்மத்.
இந்த நபிமொழியை மேலும் விளக்கும் விதமாக நபி(ஸல்) அவர்கள் கூறிய நபிமொழியையும் பாருங்கள்.
பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்க9ள அழிந்து விடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களில் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள அழகிய பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.. அறிவிப்பு : இப்னு அம்ர்(ரழி) ஆதாரம்: இப்னு ஹிப்பான், அஹ்மத்.
இந்நபி மொழிகள் திருமணம் செய்யவுள்ள மணமகளுக்குள்ள அடிப்படை தகுதிகள் என்பதை அறியலாம். இனி மணமகனுக்குரிய தகுதிகளைக் காண்போம்.

எவருக்கு திருமண வயது வந்து விட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களையும், வெட்கஸ்தளங்களையும் பாதுகாக்கும் அரணாக அமைகிறது. எவருக்கு திருமணம் செய்ய வசதிப்படவில்லையோ அவர் நோன்பு வைத்துக் கொள்ளட்டும். அறிவிப்பு: இப்னு மஸ்ஊத்(ரழி), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ. தாரமி, திர்மிதி, இப்னு ஜாரூத், பைஹகீ, அஹ்மத்.

இந்த நபிமொழி குறிப்பாக ஆண்களுக்கு கூறப்பட்டதாகும். இஸ்லாத்தில் மணப்பெண்ணுக்கு நாம் மேலே குறிப்பிட்ட தகுதிகள் இருந்தால் போதுமானது. அதிலும் நல்லொழுக்கமட்டுமிருந்தால் செல்வம், அழகு இல்லையெனினும் திருமணம் நடைபெற்று விடும் திருமண செலவுக்கும், வீட்டு செலவுக்கும் மணப்பெண் செல்வம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், மணமகன் பெண்ணுக்கான மஹர், திருமண செலவு, வலீமா விருந்து, செலவு என பல செலவுகள் செய்ய வேண்டியவனாகிறான். அது மட்டுமின்றி திருமணம் முடிந்த நேரம் முதல் தனது மனைவிக்கான உணவு, உடை, இருப்பிடத்திற்கான செலவுகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றான். எனவேதான் மணமுடிக்கும் மணப்பெண்ணுக்கு தனது உடல் ரீதியான சுகத்தையும், பொருளாதார ரீதியான சுமையையும் சுமக்க தகுதியுடையவன் தனது திருமண வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ளவும், அதற்கான வசதியில்லாதபோது நோன்பு வைத்து தனது இச்சையை அடக்கவும் நபி(ஸல்) அவர்கள் அறிவுரைப் பகர்ந்தார்கள்.
எங்கள் மனைவிகளுக்கு நாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது “நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிக்க வேண்டும்; நீ ஆடை அணியும்போது அவளுக்கு ஆடை அணிவித்தல் வேண்டும். அவளது முகத்தில் அடித்தலாகாது” என நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள். அறிவிப்பு: மு.ஆவியா பின் ஹைதா(ரழி) ஆதாரம்: அபூதாவூது.
எனவேதான் ஒர வேளை செய்ய செல்வ செழிப்புள்ள மணமகள் ஒருவருக்கு மனைவியாக அமைந்தாலும் அவளது சொத்து பங்கில் அவளது உரிமையன்றி கணவன் கைவைக்க அனுமதியில்லை என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. ஆகவே மணமுடிக்க நாடும் ஒரு முஸ்லிம் ஆண்மகன் தான் மணக்கும் பெண்ணை உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாக்கும் தகுதியைப் பெற்றிருப்பது அடிப்படை தகுதியாகும்.

**************************
ஐயம்: அல்லாஹ் குர்ஆனில் 7:200 வசனத்தில் ஷைத்தானின் ஊசலாட்டம் ஏற்படும்போது இறைவனிடம் பாதுகாப்பு தேடுவீராக என்று கூறுகின்றான். பாதுகாப்பு எப்படி தேடுவது? எந்த முறையில் என்பதை தெளிவாக குர்ஆன், ஹதீஸ்களின் வழியில் தெளிவுத் தாருங்கள். அபூஜிப்ரி மரைக்காயர், அபூதாபி.

தெளிவு: ஷைத்தான் நமது பகிரங்க பரம விரோதி; நம்மை நிச்சயமாக வழிகெடுப்பேன் என அல்லாஹுவிடம் பகிரங்கமாக சவால் விட்டு வந்துள்ள விரோதி, அவனின் ஊசலாட்டங்கள் பல வழிகளில் நம்மைத் தாங்கலாம். எனவே எல்லா தாக்கங்களிலிருந்தும் பாதுகாப்புப் பெற நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டி தந்த வழி:
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்
சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளிலிருந்தும் அல்லாஹுவிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் – என்பதாகும். அறிவிப்பு: இப்னு மஸ்ஊத், அபீ பக்காஸ்(ரழி) ஆதாரங்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜ்ஜா, தாரமி, அஹ்மத்
நமது வாழ்வை குர்ஆன், ஹதீஸ்களின் வழியில் அமைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் கூறிய வழியில் நாம் ஷைத்தானின் எல்லா ஊசலாட்டங்களிலிருந்து பாதுகாப்புத் தேடுவோமாக!

**************************
ஐயம்: நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்று ஐம்பது வேளை தொழுகையைக் கடமையாகக் கொண்டு வந்தபோது வழியில் மூஸா(அலை) அவர்கள் நமது இயலாமையை எடுத்துக் கூறி தொழுகையை குறைத்து வரக் கூறியதாக நபிமொழியுள்ளதே! நம்முடைய இயலாமையை எப்படி அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். இது மறைவான விஷயமல்லவா? M.S.பாதுஷா, வால்பாரை.

தெளிவு : மனிதனை தனது பிரதிநிதியாக அல்லாஹ் படைப்பதற்குமுன் வானவர்களிடம் இதைப் பற்றி கூறுகின்றான். வானவர்கள் நம்மைப் படைக்க வேண்டாம். இவர்கள் பூமியில் குழப்பத்தை விளைவிப்பார்கள். இரத்தம் சிந்துவார்கள், உன்னை வணங்க நாங்களிருக்கிறோம். மனிதர்களை படைக்காதே எனக் கூறினார்கள்.

இது எப்படி சாத்தியமாகும். அல்லாஹ் கற்றுத் தராக எந்த ஒன்றையும் பேச, செய்ய தெரியாத வானவர்கள் எப்படி இந்தப் பதிலை தந்தார்கள். சிறிது யோசித்துப் பாருங்கள். விளக்கம் தெரிந்து விடும். அதாவது இவ்விதம் பேசக் கற்றுக் கொடுத்ததும் அல்லாஹுவாகும் இதனை திருகுர்ஆனில் 2:32 வசனததில் காணலாம்.
இதே நிலையில்தான் அல்லாஹ் மூஸா(அலை) அவர்களுக்கு கற்று தந்து பேச வைத்துள்ளான். அது அவனால் முடிகின்ற காரியமே! என ஏற்பதே ஒரு முஸ்லிமின் நிலையாகும்.

**************************
ஐயம்: இறைவன் மரணிக்காதவர்களின் உயிர்களை தூக்கத்தில் கைப்பற்றுகிறான்” என 39:42-ல் கூறப்பட்டுள்ளதே! உறங்கும்போது மனிதன் உயிருடன் தானே இருக்கின்றான். அப்படியிருக்க 39:42-ல் கருத்து என்ன? இங்கு இறைவன் குறிப்பிடுவது மரணத்தையா? ஆத்மாவையா? என்.எஸ்.இராஜேந்திரன், தருமபுரி.

தெளிவு : தாங்கள் குறிப்பிட்டுள்ள 39:42 வசனத்தை முழுமையாகப் பாருங்கள்: தெளிவாகிவிடும்.
அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும்போதும், மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை(வாழ) அனுப்பி விடுகின்றான் சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் உள்ளன.
இஸ்லாத்தில் மட்டுமின்றி எல்லா மதங்களிலும் தூக்கம் ஒரு சிறிய இறப்பு – சாவு – என்ற நம்பிக்கையுள்ளதைக்  காணலாம். அதாவது அசந்து உறங்குபவனுக்கு உலகில் நிகழ்பவை எதுவும் தெரியாது. ஆனால் உயிர் மூச்சு மட்டும் ஓடிக் கொண்டிருக்கும்; நல்லது கெட்டது தெரியாது, அதாவது இறந்த ஒரு ஜடத்தைப் போன்ற நிலையிலிருக்கின்றான். எனவே தான் இதனை சின்னமெளத்து (மரணம்) எனக் கூறுவர்.

அல்லாஹ் நாடுவானேயானால் இந்த சின்ன மெளத்தை முடிவான மெளத்தாகவும் – மரணமாகவும் – மாற்ற முடியும். தூங்க சென்றவர் எழவேயில்லை. மரணித்து விட்டார் என சொல்லக் கேட்டிருக்கிறோம். மனிதன் தினசரி தனது கடைசிப் பயணமான – மரணத்தை – நினைக்க வேண்டுமென்ற நிலையில் அல்லாஹ் தினசரி தூக்கம் என்ற சிறிய மெளத்தை நல்கியுள்ளான் என்பதை மறத்தலாகாது எனவேதான் தூங்க செல்வதற்கு முன் ஓதும்படியாக நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த பிரார்த்தனையில்;

யாஅல்லாஹ்! உனது நினைவில் நான் உறங்கச் செல்கிறேன். உன் நினைவில் என்னை எழுப்புவாயாக! ஒரு வேளை இந்த உறக்கத்தில் எனது உயிரைப் பறித்துக் கொண்டால் அதற்கு அருள்பாவிப்பாயாக! எனது உயிரை திருப்பி தந்து வாழவிட்டால் நல்லோருடன் வாழச் செய்வாயாக! என கற்று தந்தார்கள். (ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

எனவே தூக்கம் என்பது முழு மரணமில்லை; ஆனால் மரணித்தவரின் மனோநிலையை காட்டும் நிகழ்ச்சியாகும். எனவேதான் ஒரு குறிப்பிட்ட தவணைவரை வாழ வைத்து பின் மரணிக்கச் செய்வேன் என அல்லாஹ் 39:42-ல் குறிப்பிடுகின்றான்.
ஐயம்: தொழுகை முடிந்ததும் அஸ்தஃபிருல்லாஹ் என 3 தடவைகள் கூறுகிறார்களே! நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை நினைத்து அஸ்தஃபிருல்லாஹ் கூறுகிறோமே அது போன்றதா? தொழுகை முடிந்தபின் இப்படி கூறுவது அவசியமா? அல்லது தொழுகையில் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காக சொல்லப்படுவதா? விளக்கம் தரவும். உடன்குடி, நாஸர், துபை.
தெளிவு: பர்லான தொழுகை முடிந்து சலாம் கொடுத்தவுடனே நபி(ஸல்) கொடுத்தவுடனே நபி(ஸல்) அவரகள் ‘அஸ்தஃபிருல்லாஹ்” என மூன்று தடவைகள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் (ஆதாரங்கள்: முஸ்லிம், அபூதாவூத், நஸயீ அஹ்மத்) என்ற நபிமொழிப்படி நாம் கூறுவது அழகிய சுன்னத்(நபிவழி) ஆகும். இதற்கான எந்தக் காரணங்களைக் கூறினாலும் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள். அவர்களை நமது நேர்வழிகாட்டியாக ஏற்றுள்ள நாமும் கூற வேண்டும் என்ற உண்மைக் காரணமே மேல்நோக்கியிருக்கும். எனவே நபிவழியென செய்வீர்களாக!

**************************
ஐயம்: முஹம்மது(ஸல்) அவர்கள் உங்கள் ஆண்களில் எவருக்கும் தந்தை அல்லர் (33:40) எனக் கூறப்பட்டுள்ளதே! முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஆண்குழந்தைகள் பிறந்து இறந்ததாக கூறப்படுகிறதே! விளக்கம் தருக! M.A.ஹாஜி முஹம்மது நிரவி.

தெளிவு : உண்மைதான் நபி(ஸல்) அவர்களுக்கு முதல் மனைவி கதீஸா(ரழி) மூலமாக இரு ஆண்மக்களும், மரியம் கிப்தியா(ரழி) மூலமாக கடைசியாக ஒரு ஆண் மகனும் பிறந்து இறந்தது உண்மையே! இவர்கள்  அனைவரும் சிறு வயதிலேயே சிறுவர்களாக இறந்து விட்டார்கள். “ஆண'”மை பெற்ற பெரியவர்களாக வளரவேயில்லை. பின் எப்படி நபி(ஸல்) அவர்கள் ஆண்களில் எவருக்கும் தந்தையாக முடியும்?

மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள திருகுர்ஆன் வசனத்திலேயே விளக்கமிருப்பதைப் பாருங்கள்; மிர் ரிஜாலிக்கும் உங்கள் ஆண்களில் எவருக்கும் அவர் தந்தையல்ல என்றேயுள்ளது. எவரோ பெற்றெடுத்து வளர்த்த ஆண்மக்களுக்கு நபி(ஸல்)அவர்கள் தந்தையாக ஆகமுடியாது என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. இதற்கொரு சரித்திர பின்னணியுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்றது முதல் அவர்களில் ஜைது பின் தாபித் (ரழி) என்ற அடிமையிருந்தார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் உரிமையிட்டபோதும் அவர் நபி(ஸல்) அவர்களை விட்டு பிரியாமலிருந்தார். எனவே அவரை எல்லோரும் ஜைது பின் முஹம்மது, முஹம்மதுடைய மகன் ஜைது என அழைக்கலாயினர். அதாவது முஹம்மது(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் என்று பொருள்பட கூறலாயினர். இதனை மறுக்கும் விதமாகவும், இஸ்லாத்தில் குழந்தைகளை தத்து எடுத்து சொந்த குழந்தைகளாக உரிமை கொண்டாடுவதையும் மறுத்தும் இந்த இறைவசனம் இறக்கப்பட்டதாகும். இப்போது இந்த இறைவசனத்தை முழுமையாகப் படித்துப் பாருங்கள். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசு கிடையாது. அவரது மரணத்திற்குப்பின் எவரும் வாரிசு உரிமையை எந்த விதத்திலும் கொண்டாட முடியாது என்பதை உணரலாம்.

**************************
ஐயம்: காயல்பட்டிணத்தில் ரஜப் மாதத்தில் அபூர்வ துஆ நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட துஆக்களுக்கு ஹதீஸில் ஆதாரம் உண்டா? அபூர்வ துஆ என்று சொல்வதின் காரணம் என்ன? அப்துல்லாஹ், அஜ்மான், யூ.ஏ.ஈ.

தெளிவு : ரஜப் மாதத்தில் குறிப்பிட்டு ஓதுவதற்கென்று பிரத்தியேக துஆ இருப்பதாக ஹதீஸ்களில் காணமுடியவில்லை. உலகத்தில் எங்குமில்லாமல் காயல்பட்டிணத்தில் மட்டும் அபூர்வமாக இப்படி துஆ ஓதுவதால் இதற்கு அபூர்வ துஆ என்று அழைக்கிறார்களோ என்னவோ? யாமறியோம்? தமிழகத்தில் முஸ்லிம்களிடையே நடைமுறையிலுள்ள பற்பல மார்க்க அனாச்சாரங்களை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் காயல்பட்டணத்து முல்லாக்கள் என்பது சரித்திர உண்மைகளாகும். அதனடிப்படையில் புதிதாக ஏதாவது அபூர்வ துஆவை உருவாக்கியுள்ளனரோ என்னவோ, தாங்கள் அந்த துஆவை முழுமையாக அனுப்பி வைத்தால் பரிசீலித்து விமர்சிக்கத் தயார்! அனுப்பி வையுங்களேன்.

**************************

ஐயம்: காயல்பட்டிணத்தில் ஒரு முல்லா “மெளலூதில் ஐயமும் தெளிவும்” என்று ஒரு புத்தகம் எழுதி நிறைய சாக்கடைகளைக் கொட்டி தெளவ்ஹீதுவாதிகளை முஷ்ரிக்குகள் என்று கப்ஸாக்களை அள்ளிவிட்டுள்ளார். உங்கள் பத்திரிகையில் அவர் எழுதிய ஷிர்க்கான கருத்துக்களுக்கு பதில் கொடுப்பீர்களா? அப்துல்லாஹ், அஜ்மான், யூ.ஏ.ஈ.

தெளிவு : இதுவரை தெய்வாம்சத்துடன் கண்ணியமாக மதிக்கப்பட்டு ஓதி வந்த மெளலூதில் ஐயத்திற்கிடமுள்ள விஷயங்களிலிருப்பதை மக்கள் புரிந்து கொண்டனர். விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதை மேற்படி முல்லா விளங்கி கொண்டதன் விளைவு தான் அவர் ஏழுதியுள்ள “மெளலூதில் ஐயமும் தெளிவும்” புத்தகம் என நாம் நினைக்கிறோம். இது தவறில்லை.
அவர் நம்மை முஷ்ரிக்குகள் என வசைப்பாடி இருப்பதை விடுங்கள். அவர் எழுதியுள்ளவைகளையும் சாக்கடையென இகழாதீர்கள். அந்நூலை எமக்கு அனுப்பி வையுங்கள். பரிசீலிப்போம். அவரது விமர்சனங்கள் குர்ஆன், ஹதீஸ்களின் வழியில் ஏற்புடையதாக இருப்பின் ஏற்போமாக! தவறானதாக இருப்பின் குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையில் அவரது தவறுகளை சுட்டிக்காட்டுவோமாக! அல்லாஹ் எவர்களுக்கு தனது அருட்கொடையே நல்கியுள்ளானோ அவர்கள்  இதன் மூலம் இன்னும் தெளிவு பெற முடியும். எனவே அந்நூலை உடனே அனுப்பி வைப்பீர்களாக!

**************************
ஐயம்: “துஆ ஹாஜாத்” என உருதுவில் அச்சடிக்கப்பட்ட ஒரு பக்க துஆவை அனுப்பியுள்ளோம். அதனைப் பார்த்து சரிகண்டு குர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் தெளிவுப்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம் அமல் செய்ய ஏதுவானதா? கீழை இப்னு மோதியார் மற்றும் தெளஹீத் சகோதரர்கள் அபூதாபி.

தெளிவு: தாங்கள் அனுப்பியிருந்த “துஆ ஹாஜாத்” என்ற ஒரு பக்க துஆவின் ஜெராக்ஸ் காப்பியை கண்ணுற்றோம். அதிலுள்ள அரபி துஆவில் எந்த தவறான பொருளுமில்லை. அதற்கும் மேலாக அந்த துஆவில் ஏறத்தாழ 30 அல்லாஹுவின் அழகிய திருநாமங்கள் (அஸ்மாஉல் ஹுஸ்னா) இரண்டு திருகுர்ஆனின் வசனங்களுள்ளான அல்லாஹுக்கு இணை வைக்கும்படியான எந்த வாசகமும் இடம் பெறவில்லை.

ஆனால் இந்த துஆவை ஓதுவதால் கிடைக்கும் பலாபலன்கள் என அவர்கள் ஆரம்பத்தில் உருது மொழியில் எழுதியுள்ளவைகள் பொய்யானவையாகும். ஒவ்வொரு மனிதனிடமுள்ள பலஹீனத்தை பயன்படுத்திக் கொண்டு இதனை வியாபாரமாக்கியுள்ளனர் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் அரம்பத்தில் எழுதியுள்ளவை என்ன என்பதைப் பாருங்கள்; எவரொருவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் குறிப்பாக ஜும்ஆ தொழுகைக்குப்பின் இந்த துஆவை ஓதி வருகிறாரோ அவருக்கு அல்லாஹ்.
1. எல்லா பயம், கவலைகளிலிருந்து பாதுகாத்தருள்வான்.
2. அவனது விரோதிகளிலிருந்து பாதுகாத்து உதவுங்கள்.
3. பெரும் செல்வந்தனாகி வைப்பான்.
4. அவன் நினையா புறத்திலிருந்து உணவளிப்பான்.
5. அவனது வாழ்வை இலகுவாக்கி வைப்பான்.
6. அவனது கடன் தொல்லைகள் மலையளவிலிருந்தாலும் அதிலிருந்து அவன் பாதுகாக்கப்படுவான்.
இந்த துஆவை ஓதினால் மேற்படி பலாபலன்கள் கிடைக்கும் என்பது உண்மையானால் அதனை அல்லாஹ் தனது அருள்மறையில்  அறிவித்திருக்க வேண்டும். அல்லது நபி(ஸல்) அவர்கள் இதனை தெரிவித்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆதாரங்களை குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ நாம் காண முடியவில்லை. எனவே இந்த துஆவில் எந்தவிதமான தவறான கருத்துக்களும் இல்லையெனினும் மேற்படி பலாபலன்களுக்காக இதனை ஓதலாமென நாம் ஊகிப்பதோ, மக்களுக்கு எடுத்துரைப்பதோ தவறானதாகும். அதாவது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத வழியில் – பித்அத்தான முறையில் – ஓதப்படும் துஆவாகும் என்பதை அறியவும்.

**************************
ஐயம்: ஜனாஸா எடுக்குமுன் பாதிஹா ஓதுகிறார்கள், கூடுமா? ஜனாஸா எடுக்கும் முன் மனைவி சந்தனத்தை தொட்டால் மஹர் இழந்ததாக சொல்கிறார்கள். உண்மையா? J.பாத்திமா, S.மும்தாஜ், கூத்தாநல்லூர்.

தெளிவு :  ஜனாஸா எடுக்குமுன் பாத்திஹா ஓதுவதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. ஜனாஸா எடுக்குமுன் மனைவி சந்தனத்தை தொட்டால் மஹர் இழந்ததாக சொல்வதும் ஆதாரமற்ற செயலாகும். இவையணைத்தும் நாமாக மார்க்கமாக்கி வைத்திருக்கும் அனாச்சாரங்களாகும். அல்லாஹ் இது போன்ற அநாசாரங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பானாக! ஆமீன்.

Previous post:

Next post: