சாடல் போக்கு தேவையா?

in 1993 மே,தலையங்கம்

சாடல் போக்கு தேவையா?

அந்நஜாத் அழகிய, நளினமான உபதேசங்களை விட்டு, குற்றம் குறைகளை நாசுக்காக எடுத்துக் காட்டுவதை விட்டு சாடல் போக்கைக் கடைபிடிக்கிறது. இதனால் வாசகர்கள் முகம் சுளிக்கிறார்கள். காணும் சகோதரர்கள் எல்லாம் இதையே குறையாகச் சொல்லுகிறார்கள். இந்த சாடல் போக்கு மட்டுமில்லை என்றால் அதிகமான மக்கள் அந்நஜாத்தைப் படிப்பார்கள். அந்நஜாத் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சிந்தனைத்திறன் மிக்கவர்கள் பலர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கும் இவ்வாறு செயல்பட்டு அவர்களின் அபிமானத்தையும், ஆதரவையும் பெற ஆசைதான். ஆனால் எங்கெல்லாம் இந்த சகோதரர்களின் ஆலோசனை கடைபிடிக்கப்படவேண்டுமோ அங்கெல்லாம் அதைக் கடைபிடிக்கவே செய்கிறோம். சத்தியத்தை அறியாமல், அசத்தியத்தையே சத்தியமாக மனப்பூர்வமாக நம்பிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதமாக, நளினமாக, சாடல் போக்கு இல்லாமல் அழகிய முறையில் உபதேசிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்வதோடு, அதையே கடைபிடித்து வருகிறோம். சத்தியத்தை உணர்ந்து கொண்டார்கள். அதே சமயம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அதைச் செயல்படுத்தவோ, அதனை மற்றவர்களுக்கு உபதேசிக்கவோ தயாரில்லை. சத்தியத்தை அறிந்தும் மறைக்கிறார்கள், இவர்களைக் கடுமையாக எச்சரிப்பதோடு சரி. இவர்கள் விஷயத்திலும் சாடல் போக்கைக் கடைபிடிப்பதில்லை.

ஆனால் சத்தியம் இதுதான் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்கள் சுயநலத்திற்காக, தங்கள் புரோகித இனத்தைத் தக்கவைப்பதற்காக சத்தியத்தை திரித்து வளைத்து மக்களை வழிகெடுப்பவர்கள் விஷயத்திலும் நளினத்தைக் கடைபிடிக்கவேண்டும். சாடல் போக்கை விடவேண்டும் என்பதை அந்நஜாத் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. இதற்கு, இன்று அந்நஜாத் எந்த தவ்ஹீத் மவ்லவியைக் கடுமையாகச் சாடுகிறதோ அதே தவ்ஹீத் மவ்லவி ஆசிரியராக இருந்தபோது அவரே எழுதிய ஒரு பாராவை எடுத்துத் தருகிறோம்.

உலமாக்களை நாம் கடுமையாக விமர்சனம் செய்வதாகப் பல கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இன்றைக்குப் பெரும்பாலான உலமாக்கள் நிர்பந்தம் காரணமாக, சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகச் சில விஷயங்களைச் சொல்லத் தயங்குகின்றனர் என்பதை அவர்களது கடிதங்களிலிருந்து அறிகிறோம். இன்றைக்கு தமிழக உலமாக்களை மூன்று வகையாகப் பகுக்கலாம். முதல் வகையினர், உண்மை எது என்பதனையுணர்ந்தும், குடும்ப, சமுதாயச் சூழ்நிலை, நிர்ப்பந்தங்களின் காரணமாக உண்மையை வெளிப்படையாகப் பேச இயலாமல் இருக்கின்றனர். அடுத்த வகையினர், கடந்த காலத்தில் உண்மைக்கு எதிராகச் செயல்பட்டிருந்தாலும், உண்மையை உயர்ந்து பின் அதனை ஏற்கும் மனப்பான்மை பெற்றவர்களாக உள்ளனர்.

இவ்விரு தரப்பினரையும் நாம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், உண்மையைத் தெரிந்த பின்பும், வீண் பிடிவாதம், வறட்டுக் கெளரவம் இவற்றின் காரணமாக, உண்மைக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் மூன்றாவது தரப்பினரை நாம் கடுமையாக விமர்சனம் செய்து அடையாளம் காட்ட வேண்டியுள்ளது. (நஜாத் ஆகஸ்ட் 86 பக்கம் 1,2)   

இதே அடிப்படையில் அந்நஜாத் ஆரம்பித்ததிலிருந்தே சத்தியத்தை வளைத்து, திரித்து மக்களை வழி கெடுப்பவர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து, சாடி அவர்களை மக்களுக்கு, தவ்ஹீத் மவ்லவி எழுதி இருப்பது பேல் அடையாளம் காட்டியே வருகிறோம். அந்நஜாத் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு, ஆணவம் பிடித்த பல மவ்லவிகள் சாடப்பட்டு, அடையாளம் காட்டப்பட்டுள்ளது தெரியவரும். இந்த நல்ல காரியத்தை ஆரம்பித்து வைத்த அந்த தவ்ஹீத் மவ்லவியே இன்று அந்த அடையாளம் காட்டப்படும் இழி நிலைக்கு அவராகவே ஆளாகியிருக்கிறார். நாம் என்ன செய்ய? குர்ஆன், ஹதீஸ்களை முறையாக அணுகிப் பார்ப்பவர்கள் சத்தியம் மக்களிடையே சென்றடையாமல் தடுக்க முற்பட்டவர்கள் கடுமையாகச் சாட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். அந்நஜாத்தின் துணிவுமிக்க இந்த சாடல் போக்கினால்தான் புரோகிதர்களைப் பற்றிய விழிப்புணர்வு, சுயசிந்தனை சமுதாயத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆக அந்நஜாத் தனது அபிமானிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதை விட அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணியவே விரும்புகிறது. ஆனாலும் இவ்வாறு செயல்படும்போது மிகப் பெரும்பான்மையினரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடுகிறது. பரேல்வி-கபர் வணங்கி மவ்லவிகளின் புரோகிதத்தைச் சாடும்போது பெருந்தொகையினரான அவர்களது முகல்லிதுகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிட்டது. தேவ்பந்தி முகல்லிது மவ்லவிகளின் புரோகிதத்தைச் சாடும்போது அவர்களது முகல்லிதுகன் வெறுப்புக்கு ஆளாக நேரிடுகிறது. இப்போது தவ்ஹீது மவ்லவிகளின் புரோகிதத்தைச் சாடும்போது அவர்களின் முகல்லிதுகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடுகிறது.

இவர்கள் அனைவரும் முகல்லிதுகளாக இருக்கப்போய்தான் தங்களின் அபிமானத்துக்குரியவர்கள் சாடப்படுகிறார்களே என்று ஆத்திரப்படுகிறார்கள். மற்றப்படி சுய சிந்தனையுடையவர்களாக இருந்தால் நமது கூற்று குர்ஆன், ஹதீஸ்படி இருக்கிறதா? என்று ஆராய்வார்கள். தவறாக இருந்தால் விளக்கம் தருவார்கள். மற்றபடி எங்களைக் குறை சொல்லுவதா? என்று ஆத்திரப்படமாட்டார்கள்.
கபர் பரஸ்திகளிடம், முகல்லிதுகளிடம் காணப்படும். அவர்களைக் குறை சொல்லுகிறோம் என்று ஆத்திரப்படும் அதே போக்கு இவர்களிடமும் காணப்பட்டால் இவர்களும் அதே நிலையில் அதாவது முகல்லிதுகள் நிலையில் தானே இருக்கிறார்கள். சுய சிந்தனையாளர்கள் – உண்மையான விசுவாசிகள் தங்கள் குறைகள் சுட்டிக் காட்டப்பட்டால் ஆத்திரப்படமாட்டார்களே? நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்களே?

அடுத்து இன்னொரு கேள்வியை எழுப்பலாம். அவர்கள் மனமுரண்டாக வேண்டுமென்றுதான் இவ்வாறு நடக்கிறார்கள் என்பதை அவர்களின் உள்ளத்தைப் பிளந்து நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. அதே சமயம் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் தவ்ஹீத் மவ்லவிகள் சாடும் கபர் பரஸ்தி, முகல்லிது மவ்லவிகள் விஷயத்தில் அவர்களின் உள்ளத்தைப் பிளந்து இவர்கள் பார்த்தார்களா? உதாரணமாக அல்ஜன்னத் மார்ச் 93 இதழ் பக்கம் 3-ல் இந்த தவ்ஹீத் மவ்லவியை விட பன்மடங்கு கோடிக்கணக்கான அபிமானிகளையும், ஆதரவாளர்களையும் கொண்டிருந்து, முகல்லிதுகளுக்கு மத்தியில் இறந்த பின்பும் பேரும் புகழுடன் விளங்கும் தப்லீஃக் ஜக்கரிய்யா சாஹிபை சாடி எழுதி இருக்கிறாரே? அதுவும் இறந்து போனவரைப் பற்றி சாடி எழுதி இருக்கிறாரே? அவரது உள்ளத்தை இவர் பிளந்து பார்த்தாரா? அல்லது அவரது கோடிக்கணக்கான அபிமானிகள் ஆத்திரப்படுவார்கள் என்று எண்ணி அவர் ஏற்படுத்தியுள்ள வழிகேட்டை அடையாளம் காட்டாமல் விட்டுவிட்டாரா?

ஆம் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாறாக யார் மக்களை வழிகேட்டில் இழுத்துச் சென்றிருந்தாலும், அவர்கள் இறந்து விட்டாலும் கூட அவர்களைச் சாடி அவர்களை அடையாளம் காட்டி அவரது வழிகேட்டிலிருந்து மக்களை காப்பது உண்மை விசுவாசியின் கடமையாகும். இதற்கு அவர்களின் உள்ளத்தை தோண்டிப்பார்க்க வேண்டியதில்லை. வழிகேட்டுக்குரிய அவர்களின் எழுத்துக்களே போதிய சான்றாக இருக்கிறது.

‘இறந்து போனவர்கள் விஷயத்தில் நல்லதையே பேசுங்கள்் என்ற நபிமொழி இருந்தும், அவர்கள் ஏற்படுத்திச் சென்றுள்ள வழிகேடுகள் இன்றும் உயிரோடு இருந்து மக்களை வழிகெடுத்து வருவதால், இறந்துபோன அவரையும், அவரது எழுத்தையும் சாடி தெளிவாக அடையாளம் காட்டி மக்களை அந்த வழிகேட்டிலிருந்து காப்பாற்றுவது அவசியம் என்பதை உணர்ந்துள்ள தவ்ஹீத் மவ்லவிகளும், அவர்களது ஆதரவாளர்களும், இவர்கள் உயிரோடிருக்கும் நிலையிலேயே இவர்களது வழிகேட்டை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு விளங்கினால், சாடினால், அடையாளம் காட்டினால் ஏன் ஆத்திரப்படுகிறார்கள்?

இங்கு தப்லீஃக் மவ்லவிகளைச் சாடும்போது ஆத்திரப்படும் தப்லீஃக் காரர்களையும், தவ்ஹீது, மவ்லவிகளைச் சாடும்போது ஆத்திரப்படும் குர்ஆன், ஹதீஸ் வழியில் நடக்கிறோம் என்பவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். முகல்லிது மவ்லவிகளுக்கு ஒரு நீதி, தவ்ஹீத் மவ்லவிகளுக்கு ஒரு நீதியா? இதுதான் குர்ஆன், ஹதீஸ் போதனையா? சத்தியத்திலிருப்பவர்கள், அசத்தியத்தை சத்தியமாக மனப்பூர்வமாக நம்பிச் செயல்படுகிறவர்கள் மாற்றுக் கருத்துடையவர்கள் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லமாட்டார்கள். அவர்கள் மீது அபாண்டமாகப் பழி சுமத்த மாட்டார்கள். அவதூறு பரப்பமாட்டார்கள். குர்ஆன், ஹதீஸ் நேரடி விளக்கங்களை திரித்து, வளைத்து அர்த்தம் சொல்லமாட்டார்கள். இதுவரை கபர் பரஸ்தி, முகல்லிது மவ்லவிகளிடம் காணப்பட்ட இந்த தவறான போக்குகள் அத்தனையும் இப்போது இந்த தவ்ஹீத் மவ்லவிகளிடம் மண்டிக் கிடக்கின்றனவே? இதற்கு அவர்களின் பேச்சும், எழுத்துமே போதிய ஆதாரமாக இருக்கின்றனவே? எனவே அந்த முகல்லிது மவ்லவிகளின் நிலைக்கே இந்த தவ்ஹீது மவ்லவிகளும் வந்துவிட்டார்கள். தங்கள் புரோகித இனத்தைக் காப்பாற்ற சமுதாயத்தையே பரி கொடுக்கவும். வழி கெடுக்கவும் தயாராகிவிட்டார்கள் என்பது தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரிந்த பின்பும் அவர்களைச் சாடாமல், அவர்களை அடையாளம் காட்டாமல் இருந்தால் நாளைக்கு அல்லாஹ்வின் தர்பாரில் நாம் தப்பமுடியுமா?

இன்று அவர்களின் ஆதரவாளர்களுக்குப் பயந்து, அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்டு அதனால் தாக்கத்திற்குள்ளாகியுள்ள நல்லெண்ணமுள்ள சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று நமது போக்கை மாற்றிக் கொண்டால் அது குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு முரணாகும். ஆரம்பத்திலேயே அவர்களை அடையாளம் காட்டத் தவறினால்தான் அவர்கள் மக்கள் மத்தியில் இந்த அளவு செல்வாக்குப் பெற முடிந்தது. அவர்களை அடையாளம் காட்டுவதை அன்று தடுத்துக் கொண்டிருந்தவர்கள் குர்ஆன், ஹதீஸ் விளக்கமுடையவர்கள் அல்ல என்பதை இன்று அனுபவ வாயிலாகவே அறிந்து கொண்டோம்.

கடந்த அக்டோபரிலிருந்து அவர்களை அடையாளம் காட்ட முனைப்பாக முற்பட்டது. இன்று நல்ல பலனை அளித்து வருகிறது. அவர்களது ‘ஜாக்ஹ்’ கூடாரம் கலகலத்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் காலியாகிவிடும். எனவே அவர்களை அடையாளம் காட்டுவதைத் தடுக்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.

அடுத்து அந்நஜாத் ‘ஜர்னலிஸம்’ அடிப்படையில் வியாபார நோக்கில் நடத்தப்படும் இதழ் அல்ல. எனவே வாசகர்களைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கத்துடன், வாசகர்கள் விரும்பும் பல்வேறு அம்சங்களுடனும், நுணுக்குகளுடனும், ஜோக்குகளுடனும் பொழுது போக்கு இதழாக அது வெளிவரவில்லை. குர்ஆன், ஹதீஸை மக்களிடையே நேரடிப் புழக்கத்திற்குக் கொண்டு வரும் நோக்கத்துடன், அதற்கு முட்டுக்கட்டையாகத் திகழும் புரோகிதத்தை முற்றாக நீக்கும் லட்சியத்துடன் வெளிவருகிறது. எனவே புரோகிதர்களை அடையாளம் காட்டுவதிலேயே குறியாக இருக்கும்.

அந்நஜாத்தின் போதனையை ஏற்பவர்கள் 7:3 மற்றும் பல வசனங்களில் அல்லாஹ் சொல்லியிருப்பது போல் எண்ணிக்கையில் சொற்பமாகவே இருப்பார்கள். ‘வஃதக்கிர் ஃபஇன்னஃத்ஃதிக்ர தன்ஃபவுல் முவ்மினீன்” உபதேசம் செய்யுங்கள்: நிச்சயம் உபதேசம் விசுவாசிகளுக்குப் பலன் தரும் (51:55) என்ற குர்ஆனின் கட்டளைக்கிணங்க, அவர்கள் அளவில் சத்தியம் போய்ச் சேர்வதைத் தடுக்கும் வகையில் பெரும்பான்மையினரின் மனோ விருப்பங்களை நிறைவேற்றும் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என்பதிலும் அந்நஜாத் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருக்கிறது. எந்த நிலையிலும், நல்ல நோக்கத்துடனும் புதுமைகளைப் புகுத்தாமல் இருப்பதை அப்படியே எடுத்து வைப்பதை லட்சியமாகக் கொண்டுள்ளது. அந்நஜாத்தின் இந்தப் போக்கில் எவ்வித மாறுதலும் இல்லை. அல்லாஹ் போதுமானவன்.

Previous post:

Next post: