விமர்சனம் : நீங்கள் நவம்பர் 2009 பக்கம் 15-ல் இந்தியாவில் தெரிந்த சூரிய கிரகணத் தொழுகையை உலகில் அனைவரும் தொழுவார்களா? என 03.06.09 உணர்வு இதழ் பக்கம் 13-ல் வினாத் தொடுத்துள்ளது பற்றிய விமர்சனத்திற்குப் பதில் அளிக்கும் போது, முழுச் சூரிய கிரகணம் அதிகபட்சம் இரண்டு(2) மணி நேரமே நீடிக்கும். எனவே 24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில் உலகின் ஒரு பகுதியில் மட்டுமே தெரியும். ஒரு மாதம் 30 நாட்கள் 30×24=720 மணி நேரமாகும். அதாவது 720 மணி நேரம் நீடிக்கும் பிறையை அதிகபட்சம் சுமார் 2 மணி நேரமே நீடிக்கும் முழுச் சூரிய கிரகணத்துடன் ஒப்பிடுகிறவர்கள் அறிவிலிகளா? அல்லது 2:42ல் அல்லாஹ் கூறுவது போல் உண்மையை நன்கு அறிந்து கொண்டே அதை மறைத்துப் பொய்யை உண்மையென புரட்டும் பொய்யர்களா? என்று கேட்டிருந்தீர்கள்.
அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள முழுச் சூரிய கிரகணம் அதிகபட்சம் 2 மணி நேரமே நீடிக்கும் என்று எழுதியிருப்பது பெருந்தவறு. 2 மணி நேரத்திற்கு அதிகமாகவும் கிரகணம் நீடிக்கும். இந்த சாதாரண விஞ்ஞான அறிவு கூடத் தெரியாத நீங்கள் எப்படி விஞ்ஞான கணினி கணக்கீட்டின்படி முதல் பிறை உலகம் முழுவதும் ஒரே நாளில் வரும் என்று கூறுகிறீர்கள் என்று உங்கள் ஊர்க்காரரான பேராசிரியர் ஒருவர் சென்னையில் செய்தி பரப்பியும், பத்திரிகையில் எழுதியும் வருகிறார். அவர் கூறித் திரிவதும், எழுதுவதும் சரியா?
ஜாஹிர் ஹுசைன்,சென்னை, அப்துல் ஹமீது, குவைத்.
விளக்கம்: பொதுவாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்களும், கைத்தடிகளும் அவர்களது பக்தர்களை ஏமாற்றித் தங்கள் பிடிக்குள் வைத்திருக்கப் பலவித தந்திரங்களைக் கைக்கொள்வார்கள். எதில் தங்கள் பக்தர்களை ஏமாற்ற முடியுமோ அதைப் பெரிதாகப் பரப்பித் திரிவார்கள். ஒரு சொல் வழக்கு உண்டு. அள்ளிப்போடும் போது தவறிச் சிந்துவதைத் தூக்கிப் பிடித்து பெரிதாக விளம்பரம் பண்ணுவார்கள் என்று. அதுபோல்தான் இந்தப் பேராசிரியர்(?) கூறித் திரிகிறார்.
நாம் குறிப்பிட்டதோ சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும் முழுச் சூரிய கிரகணம் பற்றி. அவர் சிந்திக்கத் துணியாத மக்களுக்கு எடுத்துக் காட்டுவதோ சென்ற மாதம் இடம் பெற்ற கங்கண சூரிய கிரகணம் மற்றும் பகுதி சூரிய கிரகணங்கள் பற்றியாகும். நபி(ஸல்) அவர்களது காலத்தில் இடம் பெற்றது முழுச் சூரிய கிரகணமாகும். சூரியன் சந்திரனால் முழுமையாக மறைக்கப்பட்டதால்தான் அன்று பகல் இரவு போல் காட்சியளித்து மக்கள் கவனத்திற்கு வந்தது. அது பகுதி கிரகணமாக இருந்திருந்தால், சூரிய வெளிச்சம் முற்றிலுமாக மறைக்கப்பட்டிருக்காது. அன்று கிரகணத்தைப் பற்றி விஞ்ஞான அறிவு இல்லாதிருந்ததால் அது ஒரு பொருட்டாகவே அவர்களுக்கு இருந்திருக்காது. அது பற்றி அன்றைய மக்கள் பேசியும் இருக்க முடியாது.
இந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கிரகணத்தை வைத்து உலகம் முழுதும் கிரகணத் தொழுகை தொழுவார்களா? என்ற அறிவீனமான பொய்யனின் கேள்விக்கே நாம் பதில் அளித்து இருந்தோம். முழு சூரிய கிரகணம் நீடிப்பது அதிகபட்சம் இரண்டு மணி நேரம். (பார்க்க 23ம் பக்க பத்திரிகைச் செய்தி) ஒரு மாதத்தின் பிறை நீடிப்பது 720 மணி நேரம். எனவே சூரிய கிரகணத்தையும், மாதத்தின் தலைப்பிறையையும் போட்டுக் குழப்பி உங்கள் பக்தர்களை ஏமாற்றாதீர்கள் என்ற கருத்திலேயே எழுதி இருந்தோம்.
இப்போது முழுச் சூரிய கிரகணம் நீடித்தது சுமார் 2 மணி நேரம். ஆனால் ஜனவரி 2010ல் நிகழ்ந்த கங்கண சூரிய கிரகணம் அதைவிட அதிக நேரம் நீடித்தது எப்படி என்பதைப் பார்ப்போம்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் அல்லாஹ் அவற்றிற்கு விதித்துள்ள பாதைகளில் எவ்வித மாற்றமும் இன்றி சுழல்கின்றன. அப்படிச் சுழலும் போது சில காலங்களில் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாகவும் சூரியனுக்கு தூரமாகவும் நேர்கோட்டில் வருகிறது. அப்போது சின்னஞ்சிறிய சந்திரன் மிகப்பென்னம பெரிய சூரியனை முழுமையாக மறைக்க முடிகிறது. அதுவே முழுமையான சூரிய கிரகணம். அப்போது சந்திரன் பூமிக்கு மிகமிக அருகில் இருப்பதால் 2 மணி நேரத்தில் ஒரு பகுதியில் மட்டுமே கிரகணம் ஆரம்பித்து முடிந்து விடுகிறது. இதை நீங்கள் ஒரு சிறிய பயிற்சி மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒரு சிறிய வட்டப் பொருளை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். சூரியனுக்கு நேராகவோ, அல்லது ஒரு பெரிய பொருளுக்கு நேராகவோ பிடியுங்கள். கையிலிருக்கும் பொருள் சிறிதாக இருந்தாலும் அப்பொருள் உங்கள் கண்ணுக்கு நெருக்கமாக வரும்போது எதிரேயுள்ள சூரியன் அல்லது பெரும் பொருளை மறைத்து விடும்.
இப்போது கையிலிருக்கும் அப்பொருளை வலம் இருந்து இடம் ஒரே சீரான வேகத்தில் நகர்த்துங்கள். சில வினாடிகளிலேயே மறைந்த காட்சி போய் பொருள் தெரிய ஆரம்பத்துவிடும். இப்போது கையிலிருக்கும் அவ்வட்டப் பொருளை கண்களிலிருந்து சிறிது சிறிதாகத் தூரப்படுத்திப் பாருங்கள். மிகப் பெரிய பொருள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலிருந்து அதன் பகுதியே மறைக்கப்படும் நிலையும், கையிலுள்ள பொருள் கண்ணிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அதன்படி பென்னம் பெரும் பொருள் பகுதியாக மறைந்து வெளிப்படும் நேரமும் அதிகரிப்பதை அவதானிக்க முடியும்.
இன்னும் எளிதாக விளங்க இன்னொரு உதாரணம் கூறுகிறோம். ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இதை அனுபவத்தின் மூலம் அறிந்திருப்பார்கள். கஃபாவுக்கு மிக அருகில் தவாஃப் செய்கிறவர்கள் மிகக் குறுகிய நேரத்தில் தவாஃபை முடிப்பதையும், கஃபாவிலிருந்து தூரப்போக, போக தவாஃபின் நேரம் அதிகரிப்பதையும் அவதானிக்க முடியும்.
இந்த அடிப்படையில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தூரம் கூடிக் குறைவதாலும், அவற்றிற்கிடையே சஞ்சரிக்கும் சந்திரனும் பூமிக்கு நெருக்கமாகவும், தூரமாகவும் மாறி மாறி சஞ்சரிப்பதாலும், மூன்று கோள்களும் நேர்கோட்டிற்கு (CONJUNCTION) வரும்போது பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை வைத்து முழுச் சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் என மாறி மாறி ஏற்படுகிறது. அதனால்தான் முழுச் சூரிய கிரகணம் குறைந்த நேரத்தையும், கங்கண சூரிய கிரகணம் அதைவிட அதிக நேரத்தையும், பகுதி சூரிய கிரகணங்கள் பூமிக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூர அடிப்படையில் அதிக நேரங்களையும் எடுக்கின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட நகரத்தை எடுக்காமல் கிரகணம் தென்படும் மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதி வரை கணக்கிட்டால் கிரகண நேரத்தை மிக அதிகமாகக் காணலாம். உதாரணமாக ஜனவரி 2010ல் இடம் பெற்ற கங்கண சூரிய கிரகணம் தென்பட்ட ஆப்பிரிக்காவிலிருந்து சைனாவின் எல்லை வரை UT நேரத்தைக் கணக்கிட்டால் கிரகணம் மிக நீண்ட நேரம் இருந்ததாகச் சொல்லலாம்.
எது எப்படியோ, கிரகணம் ஒரு பகல் முழுவதும் நீடித்தாலும் அதாவது 12 மணி நேரம் நீடித்தாலும், நாம் எடுத்து வைத்த தலைப்பிறை உலகம் முழுவதும் ஒரு நாள் -24 மணி நேரம் மட்டுமே இருக்க முடியும். 2நாள் – 48 மணி நேரம், 3 நாள் -72 மணி நேரம் ஒருபோதும் வர முடியாது. இது விஞ்ஞானம் அறியா அறிவீனர்களின் கூற்றாகும் என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தாது. கிரகணம் அறிவுக்கே பொருந்தாத நிலையில் 12 மணி நேரம் நீடிக்கும் என்பது அந்த பேராசிரியரின்(?) அறிவீனமான கூற்றாக இருந்தாலும், 720 மணி நேரங் கொண்ட பிறை தோன்றி மறைவதுடன் 12 மணி நேரம்(?) கொண்ட கிரகணம் தோன்றி மறைவதை ஒப்பிட்டாலும் தலைப் பிறை, சந்திரமாத முதல் தேதி ஆங்கில மாத முதல் தேதி போல், வெள்ளிக்கிழை போல் ஒரு நாள் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் என்ற எமது முடிவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இந்த உண்மைகளை அறிய முடியாத இளங்கலைப் பட்டதாரியான அவர் தன்னைப் பேராசிரியர் எனப் பீற்றிக் கொண்டு இவ்வாறு பிதற்றித் திரிகிறார்.
அமாவாசையோ, கிரகணமோ ஆரம்பித்து முடிந்த பின்னரே நாளை ஆரம்பிக்க வேண்டும் என கோவையில் ஒரு சகோதரர் கூறுவது போல், இவர் மேற்கிலிருந்து கிழக்கு வரை பகுதி கிரகணமாக இருந்தாலும் ஆரம்பித்து முடிவதைக் கணக்கிட வேண்டும் என்கிறார். நாமோ மூன்று கோள்களும் நேர்கோட்டில் வரும் (CONJUNCTION) நொடிப் பொழுதையும், குறிப்பிட்ட ஓர் ஊரில் தோன்றி மறையும் முழு கிரகணத்தையும் குறிப்பிடுகிறோம். வேறுபாடு தெரியாமல் பிதற்றுகிறார்.
விஞ்ஞானத்தையும், வானவியலையும் கரைத்துக் குடித்த பெரும் மேதை எனப் பீற்றிக் கொள்ளும் மேற்படி இளங்கலைப் பட்டதாரி, அவற்றில் முழுமையான அறிவு இல்லாவிட்டாலும், அரை குறை அறிவைப் பெற்றிருந்தாலும் சந்திர மாதத்தின் முதல் நாள், முதல் பிறை ஒரு நாள் மட்டுமே இருக்க முடியும். இரண்டு நாட்கள் -48 மணி நேரம் ஒருபோதும் இருக்க முடியாது. விஞ்ஞானத்தையும், வானவியலையும் புறக்கணித்து விட்டு, பிறையைப் புறக் கண்ணால் மட்டுமே பார்த்து முதல் நாளை தீர்மானிக்க வேண்டும் என்று கூறும் புரோகித மூட முல்லாக்களைக் கண்மூடிப் பின்பற்றும் அறிவிலியாக மட்டுமே இருக்க முடியும் என்பதை அறிந்திருப்பார்.
ஏழு கிழமைகளைக் கொண்ட வாரத்தில் ஒரு கிழமை 24 மணி நேரம் மட்டுமே கொண்டது போல், குறிப்பாக முஸ்லிம்கள் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை 24 மணிக்குள் ஜும்ஆ தொழுது முடித்து விடுவது போல் சூரியக் கணக்குப்படியுள்ள 12 மாதங்களின் ஒரு மாதத்தின் முதல் நாள்- முதல் தேதி-ஒரு கிழமை-24 மணி நேரம் மட்டுமே இருப்பது போல், சந்திரக் கணக்கின்படியுள்ள 12 மாதங்களின் ஒரு மாதத்தின் முதல் நாள்-முதல் தேதி -முதல் பிறை-ஒரு கிழமை-24 மணி நேரம் மட்டுமே இருக்க முடியும். அது ஒரு போதும் 2 நாள்- 2 தேதி -2 கிழமை -48 மணி நேரம் இருக்க முடியாது என்ற சாதாரண அடிப்படை உண்மை (FUNDAMENTAL TRUTH) பற்றிய அற்ப அறிவும் இல்லாதவர்களை விஞ்ஞானியாக, வானவியல் அறிஞராக, அறிஞர்களாக-பேராசிரியர்களாக மட்டுமல்ல, சாதாரண ஆசிரியராக, ஏன் ஒரு பாமரனாகக் கூட ஏற்க முடியுமா? என்பதை மக்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.