அனைவராலும் குர்ஆனை விளங்க முடியும்

in 2010 ஏப்ரல்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : அனைவராலும் குர்ஆனை விளங்க முடியும் என்றால் நபி(ஸல்) ஏன் உலமாக்கள் நபி மார்களின் வாரிசுகள் என்று சொன்னார்கள்? ஜெ.அப்துர் ரஹ்மான், IS சிம் நகர், நாகர்கோவில்

விளக்கம் : அனைவராலும் குர்ஆனை விளங்க முடியும் என்று எமது சுய கருத்தைச் சொல்லவில்லை. அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறி இருப்பதையே எடுத்துக் கூறுகிறோம். அதே சமயம் நமது தந்தை ஆதம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையை விட ஷைத்தானின் மயக்கு மொழி சரியாகத் தெரிந்தது போல், நமக்கும் அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளை விட ஷைத்தானின் ஏஜண்டுகளான மதகுருமார்களின் மயக்கு மொழிகள் அழகாகவும், சரியாகவும் தெரிகிறது. உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் என்று மட்டும் நபி(ஸல்) கூறவில்லை. அவர்கள் தீனாருக்கோ, திர்ஹத்திற்கோ வாரிசாக மாட்டார்கள் என்று சேர்த்தே சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள மவ்லவிகள் இந்த ஹதீஸின் பிற்பகுதியை மறைத்து விடுவார்கள். காரணம் என்ன தெரியுமா? அவர்கள் அல்குர்ஆனின் பல கட்டளைகளுக்கு மாறாக, ஹதீஸ்களுக்கு முரணாக மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக ஆக்கி இருப்பதே!

அல்குர்ஆனில் 6:90, 10:72, 11:29,51, 12:104, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 14 இடங்களில் நபிமார்கள் செய்த மார்க்கப் பணிக்கு மக்களிடம் கூலி கேட்கவில்லை என பகிரங்கமாகப் பிரகடனம் செய்ய வைத்துள்ளான். 36:21ல் மார்க்கப் பணிக்குக் கூலி வாங்காமல் செய்கிறவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மார்க்கப் பணியை கூலிக்காகச் செய்கிறவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பையே நிரப்பு கின்றனர் என்று 2:174ல் கூறுகிறான். மார்க்கப் பணியை கூலிக்குச் செய்கிறவர்கள் அல்லாஹ் அருளியவற்றைத் திரிப்பவர்களாகவும், வளைப்பவர்களாகவும், மறைப்பவர்களாகவுமே இருக்க முடியும். கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள் என்று 9:34, 11:18,19, 31:6 போன்ற இறைவாக்குகளில் கூறி அவர்களை அல்லாஹ்வும், மலக்குகளும், மனிதர்களும் சபிக்கிறார்கள், அவர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலையே கிடைக்காது என்று 2:159,161,162 ஆகிய இறைவாக்குகளில் கூறி இருக்கிறான். இப்போது சொல்லுங்கள். கூலிக்கு-சம்பளத்திற்கு மார்க்கப் பணி செய்யும் இந்த மவ்லவிகள் நபிமார்களின் வாரிசுகளா? அல்லது அபூ ஜஹீலின் வாரிசுகளா?

—————————————-

விமர்சனம் : நீங்கள் பேசக்கூடிய பேச்சுக்களிலே குர்ஆன் ஆயத்துக்களையும், ஹதீஸ்களையும், தஃப்சீர்களையும் அரபியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்து பேசுகிறீர்களே? உங்களுக்கு எப்படி இந்த கல்வி கிடைத்தது? உங்களுக்கும் ஆலிம்தானே மொழி பெயர்த்து தந்திருக்கின்றனர். ஆலிம்கள் இல்லாமல் எப்படி அரபிக்கு மொழிபெயர்ப்பு செய்ய முடியும்? ஆர்.ஷேக் தாவூது, கோட்டார்.

விளக்கம்: புரோகித மவ்லவிகள் அரபி மொழியை வைத்து ஆணவம் பேசுவதால் அதை அப்படியே ஏற்று நீங்கள் இப்படியயாரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆலிம்களாக மதிக்கும் இந்த மவ்லவிகளில் 95% அரபியில் 10 நிமிடம் பேசவே தெரியாது. அரபு நாட்டிலிருந்து வரும் ஒரு விசா நகலைப் படித்து விளக்கம் சொல்லத் தெரியாது. இது தான் அவர்களின் நிலை. விரல்விட்டு என்னும் ஒரு சிலரே தங்களின் சொந்த முயற்சியால் அரபி மொழியில் ஓரளவு திறமை பெறுகிறார்கள்.

அரபிமொழி அகராதியை தயாரித்துத் தந்தவர் முஸ்லிமான ஓர் ஆலிம் அல்ல. ஹதீஸ்களை அகர வரிசைப்படி தொகுத்துத் தந்தவர் முஸ்லிமான ஓர் ஆலிம் அல்ல. இன்றைய யூத, கிறித்தவ அரபி மொழி பண்டிதர்களோடு நீங்கள் போற் றும் மவ்லவிகளான ஆலிம்களை ஒப்பிட்டால் அரபி மொழி அடிப்படையில் அவர்களின் கால் தூசு இவர்கள் பெறமாட்டார்கள்.

அரபு நாடுகளுக்குச் சென்று பாருங்கள். அங்குள்ள நிறுவனங்களின் உரிமையாளர்களான ஷேக்குகளுக்கு அடுத்த பதவியில் இருந்து கொண்டு நீங்கள் மதிக்கும் ஆலிம்களான மவ்லவிகளையும், முஸ்லிம்களையும் ஆட்டிப் படைக்கும் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்று நோட்டமிட்டுப் பாருங்கள்.

அந்த அளவு அரபி மொழியில் திறமை பெற்று ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் முஸ்லிம்களோ, மவ்லவிகளோ அல்ல. முஸ்லிம் அல்லாத பிராமணர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், பிற மதத்தவர்கள். நம் நாட்டு மவ்லவிகள்-ஆலிம்கள் அரபி மொழி அகந்தை ஆணவம் பேசுகிறவர்கள், உரிய முறையில் அரபி மொழித் திறமை பெற்றவர்கள் அல்லர். நிறைகுடம் தழும்பாது; குறைகுடமே தழும்பும் என்பது போல் இவர்கள் அரபியில் அரைகுறையாக இருக்கப் போய்தான் அரபி ஆணவம் பேசுகிறார்கள்.

எவ்வித சுய நலமும் இல்லாமல் நடுநிலையோடு முஸ்லிம் அல்லாத அரபி மொழி கற்ற அறிஞர் அல்குர்ஆனை மொழி பெயர்த்தால், புரோகித சிந்தனையோடு அல்குர்ஆனை மொழி பெயர்க்கும் நம் மவ்லவி-ஆலிம்கள் மொழி பெயர்த்ததை விட அது சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கபுரு சடங்குகளையும், தரீக்காக்களையும், மத்ஹபு களையும், இயக்கங்களையும், அமைப்புகளையும், ஆக உம்மத்தைப் பிளவுபடுத்தும் பிரிவுகளைச் சரிகாணும் இந்த மவ்லவி-ஆலிம்கள் தாங்கள் சார்ந்துள்ள பிரிவை நியாயப்படுத்தும் நோக்கோடு தவறாகத்தான் மொழி பெயர்த்துள்ளார்கள். உங்களைப் போன்றவர்கள் தூய நோக்குடன் அவற்றில் முயற்சி செய்தால் 29:69 கூறுவது போல் அல்லாஹ் சத்தியத்தை-நேர்வழியை உங்களுக்கு உணர்த்தப் போதுமானவன்.

Previous post:

Next post: