தீனை நிலைநாட்டுங்கள்…..

in 2010 ஏப்ரல்

தீனை நிலைநாட்டுங்கள்…..
அபூ ஆயிஷா உம்ரா, நெல்லை, ஏர்வாடி

“”தீனை நிலைநாட்டுங்கள் இதில் பிரிந்து விடாதீர்கள்!” (42:13) என்ற முழக்கத்துடன் மாநில மாநாடு கடந்த ஜனவரி 30,31 (2010) அன்று நடத்திய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பும் மனித கற்பனையில் உருவான அமைப்புதான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

துண்டாய்ச் சிதறியது போதும்! போதும்!! மலர்ச் செண்டாய் இணைவோம் வாரும்! வாரும்! பிரிந்து நின்று எதனைக் கண்டோம்? இணைந்து நின்று உலகை வெல்வோம்! என்பதாகவும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பிரசுரமும் முழக்கமிட்டது. முழக்கமிட்டது தவறு அல்ல! ஆனால் அந்த முழக்கத்துக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது உண்மையிலும் உண்மை.

இந்த மாநாடு நடப்பதற்கு முன்பு தொலைக் காட்சி விளம்பரத்தில் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் நாம் எல்லா அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறோம் என்பதை பட்டியலிட்டு சொன்னார். பட்டியலிட்டு சொன்ன எல்லா அமைப்புகளும் மனிதக் கற்பனையில் உருவான அமைப்புகள் மட்டுமே இடம் பிடித்தன. அல்லாஹுவும், அல்லாஹ் வுடைய தூதர் நபி(ஸல்) அவர்களும் நடைமுறைப்படுத்தி இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற “”ஜமாஅத் அல்முஸ்லிமீன்” என்ற உலகளாவிய அமைப்பு மட்டுமே பட்டியலில் இருந்து களட்டி விடப்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டிச் சென்ற ஜமா அத் அல்முஸ்லிமீன் களட்டி விடப்பட்டது என்பதை விட அவர்கள் தங்கள் மன இச்சைக்கு கட்டுப்பட்டு ஷைத்தானியத் வழியில் சென்று விட்டார்கள் என்பதே உண்மை. இவர்கள் அல்லாஹ்வுடைய சத்திய நெறிநூல் வசனம் 42:13படி நடந்து கொண்டார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. இவர்கள் தீனை நிலைநாட்ட மாநாடு போட்டார்களா? அல்லது தங்கள் அமைப்பை பலப்படுத்த மாநாடு போட்டார்களா?

அல்லாஹு ரப்புல் ஆலமீனுடைய சத்திய வார்த்தை எப்படி தீனை நிலைநாட்ட வேண்டும் என்பதை மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுகிறது என்பதை நடுநிலையோடு சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் மார்க்க மாக்கியுள்ளான். (நபியே!) உமக்கு நாம் வஹீ மூலம் அறிவித்தோமே அதுவும், இன்னும் எதனை இப்ஹாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்தோமோ அதுவும் (என்னவெனில்) இம்மார்க்கத்தை நீங்கள் நிலைநிறுத்துங்கள். இதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்பதாகும். இணை வைப்பவர்களை எதன் பக்கம் நீங்கள் அழைக்கிறீர்களோ அ(ந்த ஏகத்துவ அழைப்பான)து பெரும் சுமையாகி விட்டது (என்று அவர்களுக்குத் தோன்றும்) தான் நாடியவரை அல்லாஹ் தன் பக்கம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். இன்னும் (தன் பக்கம்) திரும்புகிறவரை தன் பக்கம் நேர்வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன் 42:13)
எல்லா நபிமார்களுக்கும் எந்த சத்தியமார்க்கத்தை அல்லாஹ் அருள் செய்தானோ அந்த சத்திய மார்க்கமான உலகளாவிய அல்லாஹ் வுடைய அமைப்பான நபி(ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற ஜமாஅத்அல் முஸ்லிமீன் என்ற அமைப்பையே (இம் மார்க்கத்தை நீங்கள் நிலைநிறுத்துங்கள்) என்று நெத்தியடியாகச் சொல்கிறான்.

அடுத்து நீங்கள் இதில் பிரிந்து விடாதீர்கள், என்றும் எச்சரிக்கிறான். 2:213 வசனத்தில் இந்த சமுதாயம் ஒரே சமுதாயம் என்றும் அழகாக வழி காட்டுகிறான். இந்த மார்க்கத்தில் பிரிவினைக்கு இடமே இல்லை என்று அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவுபடுத்த, இந்த இயக்கவாதிகள் நாங்கள் பிரிந்து இருந்துதான் எங்கள் கற்பனை அமைப்புகளை பலப்படுத்துவோம். இந்த முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோட்டு பலகீனப்படுத்துவோம் என்று சொல்லாமல் சொல்கிறார்களா? அப்படி என்றால் தீனை நிலைநாட்டுங்கள் என்ற கோஷம் வெற்றுக் கோஷம்தானே? சிந்திப்பவர்களுக்கு விடை கிடைக்கும். ஒவ்வொரு மனித கற்பனை இஸ்லாமிய பெயர் தாங்கி அமைப்புகளும், தங்கள் தங்கள் அமைப்பைக் கொண்டே பெருமை பேசி சந்தோஷப்படுகிறார்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் சத்திய நெறிநூல் வழியாகச் சொல்லும்போது எவர்கள் தங்கள் மார்க்கத்தை (மனம்போல்) பிரித்து வைத்து பல பிரிவினர்களாகி விட்டார்களோ, அத்தகையோரில் (உள்ளவர்களாக ஆகிவிடாதீர்கள், அவ்வாறு பிரிந்தவர்கள் உண்மையைப் புறக்கணித்து) ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடமுள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடை பவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 30:32)

ஆனால் நாம் மகிழ்ச்சி அடைவதெல்லாம் நம்மை நாம் முஸ்லிம்கள், என்று சொல்லிக் கொள்வதிலும், நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்கு கட்டளை இட்டுச் சென்ற ஜமாஅத் அல்முஸ்லிமீன் தான் எங்கள் அமைப்பு (மார்க்கம்) என்று சொல்வதிலும் நாங் கள் மகிழ்ச்சி அடைகிறோம். (அல்ஹம்து லில்லாஹ்) இங்கு நாம் நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டிச் சென்ற ஃபிர்கா இல்லாத ஜமாஅத்துல் முஸ்லிமீன் இருப்பதால் அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம் எல்லோரையும் பொருந்திக் கொள்வானாக! 30:32 அல்குர்ஆன் வசனத்தில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் பிரிவினை கூடாது என்று சொல்கிறான். அவ்வாறு பிரிந்தவர்கள் உண்மைக்கு மாறு செய்பவர்கள் என்றும், எச்சரிக்கிறான். அதே நேரத்தில்,

இன்னும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு காரியத்தை முடிவு செய்து விட்டால், இறை நம்பிக்கையாளனான, எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் தம் காரியங்களில் (அத்தீர்ப்புக்கு மாறாக வேறெதையும்) தேர்ந் தெடுக்கும் உரிமையில்லை; எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் பகிரங்கமான வழி கேடாகத் திட்டமாக வழிகெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)

மனிதக் கற்பனையில் உருவான அமைப் பினர், தீனை நிலைநாட்டுவார்களா? அல்லது இதில் (மார்க்கத்தில்) பிரிவினையே கூடாது என்று சொல்லக் கூடிய ஜமாஅத்துல் முஸ்லிமீன் மட்டுமே மார்க்கம் என்று சொல்லக்கூடியவர் கள் தீனை நிலைநாட்டுபவர்களா? அறிவுள்ள வர்கள் சிந்திக்க வேண்டும்.

இயக்கவாதிகள் சிந்திப்பார்களா? அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர்களும் மார்க்க விஷயத்தில் முடிவெடுத்து விட்டால் அதை மீறுவதற்கு இந்த இயக்கவாதிகளுக்கோ அதன் தலைவர்களுக்கோ எந்த அருகதையும் கிடையாது. இந்த அல்குர்ஆன் வசனங்கள் எல்லாம் கடுமையாக எச்சரிக்கும் போது இவர்களின் அறிவை மழுங்கடித்தது எது? பதவி, புகழ், பணம், இவைதானே? இன்று நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த சத்திய மார்க்கம் தஹனுன் கடுமையாக களங்கப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் பணம், பணம் பதவி, பதவி சுகம், புகழ். இங்கே பணம்(செல்வம்) வந்து விட்டால், செல்வத்தைக் கொண்டு பதவி, புகழ், செல்வாக்கு அனைத்தும் வந்துவிடும். நபி(ஸல்) அவர்கள் செல்வத்தைப் பற்றி சொல்லும்போது,

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு; என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் ஒரு சோதனையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதி 2258)

நபி(ஸல்) அவர்கள் தங்களது விடைபெறும் ஹஜ்ஜின் போது மக்களுக்கு, மக்களைப் பார்த்து சொன்னார்கள், எனது சமுதாயத்திற்கு வறுமை வந்து விடும் என்று நான் அஞ்சவில்லை. செல்வம் வந்து விடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர்கள் சொல் சக்திவாய்ந்தது. அவர்கள் உடைய சொல் ஒருபோதும் பொய்ப்பிக்காது; நபி(ஸல்) அவர் களின் பலம் வாய்ந்த வார்த்தையை அறிவுள்ளவர்கள் சிந்திக்க கடமைப்பட்டு உள்ளார்கள். என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதில் ஆயிரம், ஆயிரம் அர்த்தங்கள் உண்டு!

மனிதக் கற்பனையில், (இஸ்லாமிய போர் வையில்) ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறார்கள். அதனுடைய தலைவராக இருப்பார்கள்; குர்ஆனையும், ஹதீஃதையும் தங்களின் கற்பனைக்கு ஏற்றவாறு வளைத்து, திரித்து, மேடைகளில் முழக்கமிடுவார்கள். இவர்களுடைய ஷைத்தானியத் பேச்சின் சூழ்ச்சியால் இந்த தலைவர்களின் வலையில், இவர்களைக் கண்மூடி பின்பற்றும் தொண்டர்கள், அதாவது படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், பாமரர்கள் சிக்குவார்கள். அதற்குப்பின் இந்த கற்பனை அமைப்பு தலைவர்களுக்கு கொண்டாட்டம் தான். அதன் பின் வறுமையா இவர்களுக்கு வந்துவிடும்? சகோதர, சகோதரிகளே, பெரியவர்களே, தாய்மார்களே சிந்தித்துப் பாருங்கள், செல்வம் வந்துவிடும்! அதன் பின் பதவி, புகழ், எல்லாமே வந்து அபூ ஜாஹிலியாக்களின் வழியில் பயணிப்பார்கள், இவர்களை பகிரங்கமாக, கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களும் பயணிப்பார்கள். ஆனால் அவர்கள் பயணிக்கும் பாதை எங்கே போய் முடியும் என்பதையும் உணராமல் பயணிப்பார்கள். அவர்கள் செல்லும் இடம் பற்றி நபி(ஸல்) அவர்கள் சொல்லும் போது

ஆம்! உண்டு!! (பலரால்) நரகத்தின் வாயி லுக்கு அழைப்பு விடுக்கப்படும். எவர்கள் அந்த அழைப்பை ஏற்கிறார்களோ அவர்கள் அதில் (நரகத்தில்) எறியப்படுவார்கள். அப்படி என்றால் இஸ்லாமிய போர்வையில் கற்பனை அமைப்புகளான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், சுன்னத் வல் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜாக், தமுமுக, ததஜ, இதஜ மற்றும் இது போன்ற கற்பனை அமைப்புகள் பின்னால் செல்பவர்களின் நிலைபற்றி மக்களே! முஸ்லிம்களே! சிந்திக்க வேண்டாமா? அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த தலைவர்களைப் பற்றி சொல்லும் போது

(உலகில் தவறான வழியில் இட்டுச் சென்ற) பின்பற்றப் பட்ட(தலை)வர்கள், (மறுமையில், தம்மைப்) பின்பற்றியவர்களை விட்டும் ஒதுங்கி, வேதனையை(க் கண்ணால்) அவர்கள் கண்ட நிலையில், (உலகில்) அவர்களுக்கிடையே இருந்து வந்த உறவுகள் முறிந்து விடும்போது

(அத்தகையவர்களைப்) பின்பற்றியவர்கள்: நிச்சயமாக நமக்கு (மீண்டும் உலகிற்கு)த் திரும்பிச் செல்லுதல் இருக்க வேண்டுமே! அவ்வாறிருந்தால், (தலைவர்களாகிய) அவர்கள் (இப்பொழுது) நம்மை விட்டும் நீங்கிக் கொண்டதுபோல், அவர்களை விட்டும் நாமும் நீங்கிக் கொள்வோமோ என்று கூறுவார்கள்; இவ்வாறே அல்லாஹ் அவர்களுடைய செயல்களை அவர்களின் மீது கைசேதத்திற்குரியவையாக அவர்களுக்குக் காண்பிப்பான். இன்னும் அவர்கள் நரகத்தை விட்டும் வெளியேறுகிறவர்களும் அல்லர். (அல்குர்ஆன் 2:166,167)

மேல்கண்ட அல்லாஹ்வுடைய சத்திய நெறி நூல் வசனங்களும் நபி(ஸல்) அவர்களின் பொன் மொழிகளையும் அறிவுள்ளவர்கள் சிந்திப்பார்களா? அந்நஜாத் மாத இதழ் தொடர்ந்து புரோகிதர்களையும் இஸ்லாமிய போர்வையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கற்பனை அமைப்புகளையும் சாடி வருவதில் அறிவுள்ளவர்கள் குர்ஆன், ஹதீதைக் கொண்டு உரசிப் பார்த்தால் புரிந்து விடும். உரசிப் பார்ப்பார்களா?

மார்க்கத்திலிருந்து, நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியுள்ளான் என்கின்ற சத்திய நெறி நூல் வசனத்தில் உள்ள (தீனை) இம்மார்க்கத்தை நீங்கள் நிலை நிறுத்துங்கள். இதில் நீங்கள் பிரிந்துவிடாதீர்கள், என்று சொல்லக்கூடிய சத்திய நெறிநூல் வசனத்தை சொல்லி, மாநாடு என்ற பெயரில் மக்களைக் கூட்டி நாங்கள் மட்டுமே உண்மையான அமைப்பு என்று சொல்ல இந்த பிரிவினை வாதிகளுக்கு, எந்த விதத்திலும் தகுதி கிடையவே கிடையாது. ஒரே சமுதாயத்தை பிரித்து பல அமைப்புகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் எல்லா அமைப்புகளுக்கும் இது பொருந்தும். சமுதாயத்தை (உம்மத்தன் வாஹிதாவை) பிளவுபடுத்துவது பற்றி அல்லாஹ் சொல்லும்போது (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அனைவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய) ஒரே சமுதாயம்தான். (இதில் பிரிவு வேற்றுமை கிடையாது) உங்கள் அனைவருக்கும் இறைவன் நான் ஒருவனே! ஆகவே, எனக்கே நீங்கள் வழிபடுங்கள்.
எனினும் இவர்கள் தங்களுக்குள் (வேறு பட்டு) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர். இவர்கள் அனைவரும் நம்மிடமே திரும்ப வரக்கூடியவர்கள் தான். (அல்குர்ஆன் 21:92,93)

ஆகவே பிரிவுகள் இல்லாத ஒன்றுபட்ட சமுதாயத்தை அமைப்போம். தீனை (சத்திய மார்க்கத்தை) நிலைநாட்டுவோம். நபி(ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற ஜமாஅத்துல் முஸ்லிமீனை பற்றிப் பிடிப்போம். அல்லாஹ் அருள் செய்ய போதுமானவன்.

Previous post:

Next post: