ஹாரூத், மாரூத் இரண்டு ஷைத்தான்களா?

in ஐயமும்! தெளிவும்!!,கேள்வி-பதில் (தொகுப்பு)

 கேள்வி: “அல்குர்ஆன் அல்பகரா 2:102-ல் வரும் ஹாரூத், மாரூத் இரண்டு மலக்குகள் என்று நீங்களும், மற்றும் குர்ஆன் தமிழுரைகளும் கூறுகின்றன. ஆனால் பி.ஜைனுல்ஆபிதீன் ஹாரூத், மாரூத் இரண்டு ஷைத்தான்கள் என்று கூறுகிறார். அவரது குர்ஆன் மொழி பெயர்ப்பிலும் எழுதியுள்ளார். இந்த இரு கருத்துக்களில் எது சரியானது; விளக்கவும். எம்.எஸ். சையது அஹமது, ரியாத்.

பதில்: அல்குர்ஆன், மனித வாழ்க்கை நெறியை மனிதர்களுக்காக அல்லாஹ் விளக்கிய நெறி நூலாகும். எழுதப்படிக்கத் தெரியாத பாமரனும் பிறர் படிப்பதைக் கேட்டு மிக எளிதாக விளங்கக் கூடியதாகும். குர்ஆன் மக்களுக்கு விளங்காது; அரபி மொழி படித்த மவ்லவிகளே விளக்க வேண்டும் என்றால், அதன் பொருள் இந்த மவ்லவிகள் மக்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றலை அவர்களைப் படைத்த அல்லாஹ்வை விட அதிகமாகப் பெற்றவர்கள் என்பதாகும். இப்படிச் சொல்கிறவர்களும், அதை அப்படியே நம்பிச் சொல்கிறவர்களும், அதை அப்படியே நம்பிச் செயல்படுகிறவர்களும் நரகத்திற்குரியவர்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா? எனவே அல்குர்ஆனுக்கு எந்த மவ்லவியின் மேல் விளக்கமும் அணுவளவும் அவசியமே இல்லை. அல்குர்ஆனில் உள்ளதை உள்ளபடி எடுத்து நடப்பதே நேர்வழியாகும். சுவர்க்கம் கொண்டு சேர்க்கும் நல்வழியாகும். இந்த அடிப்படையில் இந்த 2:102 இறைவாக்கில் குறிப்பிட்ட பகுதியை படித்துச் சுயமாகச் சிந்தியுங்கள்.

“….ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்; இன்னும் பாபிலில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும்; ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும், “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக்கற்று) நீங்கள் நிராகரிப்போர் ஆகிவிடாதீர்கள் என்று சொல்லி எச்சரிக்காதவரையில், எவருக்கும் அதைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படி இருந்தும் கணவன் மனையிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள்…….” (2:102)

பகரா 2:102 இறைவாக்கின் இப்பகுதியை ஒரு புரோகித மவ்லவி விளக்கித்தான் விளங்க வேண்டுமா? அரபியிலும் தெளிவாக நேரடியாக 

وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ“வமாஉன்சில அலல் மலக்கைனி பிபாபில ஹாரூத்த வ மாரூத்த” என்றுதான் இருக்கிறது. அதாவது பாபிலில் இரண்டு மலக்குகள் ஹாரூத்தும், மாரூத்தும் என்று நேரடியாகவே இருக்கிறது. இதை விளங்க இந்த மவ்லவி புரோகிதர்களின் மேல் விளக்கம், சுய விளக்கம் கற்பனை மற்றவர்களுக்குத் தேவையா? இந்த 2:102-ல் காணப்படும் ஹாரூத், மாரூத் 2:98-ல் காணப்படும் ஜிப்ரீலையும், மீக்காயீலையும் குறிக்கும் என்பது இவரது சுய கற்பனை.

அல்குர்ஆன் தெள்ளத் தெளிவானது, கோணல் இல்லாதது, நேரடியானது என்று கூறும் அல்லாஹ் 2:97-ல் காணப்படும் ஜிப்ரீலையும், மீக்காயிலையும் குறிக்க 2:102-ல் மலக்கைனி என்று குறிப்பிடுகிறான் என்று கூறி யார் காதில் பூ சுற்றுகிறார். அவரது பக்தகோடிகள் கண்மூடி ஏற்கலாம். சுய சிந்தனையுள்ள எழுதப்படிக்கத் தெரியாத ஒரு பாமரனும் இதை ஏற்கமாட்டான். அன்னிஸா 4:157ல் ஈஸா(அலை) அவர்களை யூதர்கள் நிச்சயமாகக் கொல்லவே இல்லை என்று கூறி 4:158-ல்

بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ“பல்ரஃபஅஹுல்லாஹு இலைஹி” – “ஆனால் அல்லாஹ் அவரைத்தன் அளவில் உயர்த்திக் கொண்டான்” என்று நேரடியாகவே கூறப்பட்டிருப்பதை, காதியானிகள் பகுத்தறிவு ஏற்காததால், “கொல்லப்படாத நிலையில் உயர்த்தப்படவில்லை; இறந்த பின் பதவியை அல்லாஹ் உயர்த்தினான்” என்று தங்களின் சுய கற்பனையை புகுத்துவது போல், இந்த நவீன காதியானியும் மலக்குகள் எப்படி சூனியத்தைக் கற்றுத் தர முடியும்? அது சாத்தியமில்லை; எனவே அவர்கள் மலக்குகள் அல்ல; ஷைத்தான்கள் என தனது சுய கற்பனையைப் புகுத்துகிறார்.

பாவம் அவர்! மலக்குகளும், ஜின், மனித இனங்களைப் போல் சோதனைக்காகப் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் சுவர்க்கம், நரகம் உண்டு என்று எண்ணுகிறார் போலும். ஆனால் அல்லாஹ் தெளிவாக அத்தாரியாத் 51:56-ல் ஜின் இனமும் மனித இனமும் மட்டுமே சோதனையாக தனக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கப் படைக்கப்பட்டதாகக் கூறுகிறான். ஜின், மனித இனத்திற்கு மட்டுமே நல்லது கெட்டதை பிரித்தறிந்து நல்லதைச் செய்யவும், கெட்டதைத் தவிர்க்கவும் கட்டளையிட்டுள்ளான். மலக்குகள் சோதனைக்கு உட்பட்டவர்கள் அல்ல. சொர்க்கம், நரகம் அவர்களுக்கு இல்லை. அல்லாஹ்வின் ஏவலர்கள், அல்லாஹ் கட்டளையிடுவதை அணுவும் பிசகாது அப்படியே செய்து முடிப்பவர்கள். ஏவப்பட்டது சரியா, தவறா, நன்மையா, தீமையா என்றெல்லாம் பகுத்துப் பார்த்து செயல்படும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. “போய் ஒரு லட்சம் மக்களுள்ள ஊரை அழித்து விட்டு போ” என்று அல்லாஹ்வின் கட்டளை பிறந்தால் வினாடி கூட சிந்திக்காது போய் அழித்து வருவதுதான் அவர்களது வேலை.

“ஆதமுக்கு சுஜுது செய்யுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளை பிறந்தவுடன் அடுத்த வினாடியே ஆதமுக்கு சுஜுது செய்து விட்டார்கள் மலக்குகள். ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர்; தாழ்ந்தவர். நாமோ ஒளியால் படைக்கப்பட்டிருக்கிறோம்; உயர்ந்தவர் தாழ்ந்தவருக்கு சுஜுது செய்வது என்ன நியாயம் என அவர்கள் சிந்திக்கவில்லை. ஆனால் மலக்குகளை விட கீழான படைப்பான சோதனையின் அடிப்படையில் நல்லதையும், கெட்டதையும் பிரித்து அறிந்து செயல்பட கடமைப்பட்ட ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தானுக்குத்தான் அந்த விபரீத புத்தி ஏற்பட்டு அல்லாஹ்வின் நிந்தனைக்கு ஆளாகி சபிக்கப்பட்டு நரகில் எறியப்பட்டான்.

நல்லதா, கெட்டதா என தங்கள் புத்தியைச் செலுத்தாமல் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே நிறைவேற்றுவதுதான் மலக்குகளின் கடமை. அந்த அடிப்படையில் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளும், தாங்கள் சோதனைக்காக கணவன் மனைவிக்கிடையே பிரிவை உண்டாக்கும் கலையை கொண்டு வந்திருப்பதாகவும் அதைக் கற்று நிராகரிப்பவர் (காஃபிர்) ஆகிவிடாதீர்கள் என்று எச்சரித்த பின்னரே அக்கலையைக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

ஷைத்தான் இப்படிப்பட்ட புத்திமதியைச் சொல்லிவிட்டு அதைக் கற்றுக்கொடுப்பானா? என்ற சிந்தனையும் இந்த நவீன காதியானிக்கு இல்லை. ஆதம்(அலை) அவர்களை ஷைத்தான் வழி கெடுக்க எப்படிப்பட்ட போதனைகளைக் கூறினான் என்று அல்குர்ஆன் கூறுவதை பார்த்த பின்னராவது அவர் படிப்பினை பெறட்டும். (பார்க்க அஃராஃப் 7:11-25)

Previous post:

Next post: