அஹ்ல குர்ஆன் இயக்கம்!

“அஹ்லகுர்ஆன்” – குர்ஆன் மட்டுமே மார்க்கம்; ஹதீஸ் அவசியமே இல்லை என்று கூறும் ஒரு பிரிவினரும் முஸ்லிம்களில் இருக்கின்றனர். இவர்களின் கொள்கை பற்றி ஆராயும்போது, குர்ஆன் மட்டுமே உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ளது; ஹதீஸ்கள் பதிந்து பாதுகாக்கப்படாததால் அவற்றில் கலப்படம் ஏற்பட்டுவிட்டது.  ஹதீஸின் பெயரால் இலட்சக்கணக்கான கற்பனைக் கதைகள் இட்டுக் கட்டப்பட்டுள்ளன. அதனால்தான் சமுதாயத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டு விட்டன. ஹதீஸ்களைப் புறக்கணித்துவிட்டு அல்குர்ஆனை மட்டும் பற்றிப் பிடித்து நடந்தால் மட்டுமே சமுதாய ஒற்றுமை ஏற்படும். அதுவே நேர்வழி என வாதிடுகின்றனர். யூதக் கைக்கூலிகள் முஸ்லிம் உம்மத்தைப் பிளவுபடுத்தும் கெட்ட நோக்கத்துடன் ஆங்கிலத்தில் எழுதிக் குவித்த நூல்களைப் படித்து மூளை சலவைச் செய்யப்பட்டவர்களின் வாதம் இது. ஆனால் அவர்களின் இந்தக் கூற்றுக்கே முரணாக “அஹ்லகுர்ஆன்” கூட்டத்தாரிலும் இன்று பல பிரிவுகள் ஏற்பட்டுவிட்டன. ஒவ்வொரு பிரிவாரும் தங்கள் மனம்போன போக்கில் மனோ இச்சைக்கு ஏற்றவாறெல்லாம் விதவிதமான விளக்கங்கள் குர்ஆனுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஷைத்தானும் அவற்றை அவர்களுக்கு அழகாகக் காட்டி வழிகேட்டில் இழுத்துச் செல்கிறான். இப்படி நாம் சொன்னவுடன் அபூ அப்தில்லாஹ் குர்ஆனை பின் பற்றுவது வழிகேடு என்று சொல்கிறார் என்று அவர்களின் ஆதரவாளர்களை திசை திருப்புகின்றனர்.

அஹ்ல குர்ஆன்கள் குர்ஆனை பின்பற்றவில்லை! அவர்கள் குர்ஆனைப் பின்பற்றுவதாக வாயளவில் சொல்கின்றனரே அல்லாமல், அதிலுள்ள அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைப்படி நடக்கவில்லை. இவர்களின் இந்தப் போக்கு ஷைத்தானைப் பின் பற்றிச் செல்வதாகவே இருக்கிறது. அல்லாஹ் ஆதமுக்கு சுஜூது செய்யுமாறு கட்டளையிட்டான். ஷைத்தான் என்ன நினைத்தான்?  சுஜூது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும். மனிதனுக்கு எப்படி சுஜூது செய்வது? என்று சிந்தித்தானே அல்லாமல், ஆதமுக்கு சுஜூது செய்யுமாறு கட்டளை இடுவது யார்? என்பதைச் சிந்திக்கத் தவறி விட்டான். சுஜூது செய்வது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாக இருந்தாலும், படைத்த எஜமானனான அல்லாஹ்வே ஆதமுக்கு சுஜூது செய்யுமாறு கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆதமுக்கு சுஜூது செய்தால், அது அல்லாஹ்வுக்கு அடிபணிவதாகவே இருக்கும்; ஆதமுக்கு சுஜூது செய்ய மறுப்பது, அல்லாஹ்வுக்கு அடிபணிய மறுப்ப தாகவே ஆகி அல்லாஹ்வின் வெறுப்பையும், தண்டனையையும் பெற்றுத்தரும் என்பதை சிந்தித்து விளங்கத் தவறிவிட்டான். அதனால் சபிக்கப்பட்டான்; விரட்டப்பட்டான். சுவர்க்கம் அவனுக்கு ஹராமாக்கப் பட்டது; நரகத்தில் இருப்பிடத்தைத் தேடிக் கொண்டான்.

மலக்குகள் ஆதமுக்கு சுஜூது செய்ததை ஆதாரமாகக் காட்டி, அத்துவைதம் எனும் வழிகேட்டு தரீக்காக்களைப் பின்பற்றுகிறவர்கள், தங்கள் ஷைகுகளுக்கு சுஜூது செய்வதை நியாயப்படுத்தி வழிகேட்டில் செல்கின்றனர். நிறைவு பெற்ற இஸ்லாத்தில் மனிதனுக்கு மனிதன் சுஜூது செய்வதை அல்லாஹ் நபி மூலம் தடுத்துள்ளான் என்பதை வசதியாக மறந்துவிட்டு ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகின்றனர்.

ஷைத்தான் செய்த இதே தவறைத்தான் அஹ்லகுர்ஆன் பிரிவினரும் செய்து, அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி வருகின்றனர். நபியைப் பின்பற்றக் கட்டளையிடுவது யார்? படைத்த எஜமானனான அல்லாஹ்வே கட்டளையிடுகிறான். சுமார் 10 வசனங்களில் தனக்கு அடிபணியச் சொல்லும் இடங்களில் எல்லாம் தனது தூதருக்கும் அடிபணியச் சொல்கிறான் அல்லாஹ். அந்நூர் 24:56

இறைக்கட்டளையில்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள்; தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்.

என்று நேரடியாகவே கட்டளையிட்டுள்ளான். ஆனால் இந்த அஹ்ல குர்ஆன் இயக்கத்தினரிடம் தூதருக்குக் கீழ்ப்படிதலும் இல்லை; தொழுகையும் இல்லை; ஒரு சில பிரிவினர் தொழுதாலும் அத்தொழுகை நபி வழியில் இல்லை; அவர்களின் மனோ விருப்பப்படி தொழுது வருகிறார்கள். ஆக இந்த இறைக்கட்டளைகளை நிராகரிக்கிறார்கள். தாஹா 20:90 இறைவாக்கில் ஹாரூன் (அலை) மக்களிடம் “என்னைப் பின் பற்றுங்கள்; என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்”என்று கூறியது இடம் பெற்றுள்ளது; இதல்லாமல் எல்லா நபிமார்களும் தங்களைப் பின்பற்றி நடக்கும்படி கட்டளையிட்டது குர்ஆனில் சுமார் 11 இடங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த அஹ்லகுர்ஆன் இயக்கத்தினர் இந்த அனைத்து குர்ஆன் வசனங்களையும் நிராகரிக்கிறார்கள். இவர்கள் எப்படி குர்ஆனை பின்பற்றியவர்கள் ஆக முடியும்?

சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை!
அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறுவோரிடம் எப்படி நபியின் அசலான சுன்னத்துகள் இல்லையோ, தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோரிடம் எப்படி அசலான தவ்ஹீத்-ஏகத்துவம் இல்லையோ, அதேபோல் அஹ்ல குர்ஆன் என்று பீற்றுவோரிடம் அசலான குர்ஆனைப் பின்பற்றும் தன்மை இல்லை. பெரும்பாலான குர்ஆன் வசனங்களை நிராகரித்துக் கொண்டு தங்களை அஹ்ல குர்ஆன் என்கின்றனர்.

இவர்களின் வினோதமான வாதம் என்ன தெரியுமா? நபிமார்களும் இறை அறிவிப்பின்படிதான் நடந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது. எனவே குர்ஆன் மட்டும் போதும். நபியின் நடைமுறைகளைக் கூறும் ஹதீஸ்கள் தேவை இல்லை என்பதாகும்.

அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுக்கும் அஹ்லகுர்ஆன் இயக்கவாதிகள்!
அல்லாஹ் 49:16-ல் கூறுவதுபோல் இவர்கள் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்க முற்படுகிறார்கள். குர்ஆன் மட்டும் போதும் என்றால் நபியைப் பின்பற்றும்படி பல இடங்களில் தேவையில்லாமல் அல்லாஹ் கூறி இருக்கிறான் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால், நபிமார்களை அல்லாஹ் அனுப்பி இருக்கத் தேவையில்லை. அந்த நபிமார்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத், ஜபூர், இன்ஜீல், குர்ஆன் போன்ற நெறி காட்டும் நூல்களை மட்டுமே இறக்கி இருந்தால், மக்கள் அவற்றைப் பார்த்து அதன் படி நடந்திருப்பார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

அவர்கள் ஷைத்தானுக்கு அடிமையாகாமல் முறைப்படி சிந்திப்பார்களேயானால், நபிமார்களின் செயல்முறை விளக்கங்கள் (ஹதீஸ்) இல்லாமல் மக்கள் நெறி காட்டும் நூல்களை (அல்குர்ஆன்) நேரடியாகப் பார்த்து அதன்படி நடக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் அவசியமே ஏற்பட்டிருக்காது. அந்த நபிமார்கள் கடவுள்களாகவும், அவதாரங்களாகவும், கடவுள் குமாரன்களாகவும், கடவுள் தன்மையுடைய வர்களாகவும் கற்பனை செய்யப்பட்டு, மக்கள் கொடிய இணை வைப்பில் ஷிர்க்கில் மூழ்கி இருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. இப்படிப்பட்ட நிலையிலும் அல்லாஹ் நபிமார்களை ஏன் தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் இறையறிவிப்புகளை அவர்களின் செயல்முறைகள் மூலம் தெளிவு படுத்தக் கட்டளையிட்டான், (பார்க்க 2:213, 16:44,64) என்பதைச் சிந்தித்தாலே, நபி(ஸல்) அவர்களின் செயல்முறை விளக்கங்கள் முஸ்லிம்களுக்குக் கண்டிப்பாகத் தேவை என்பதை எளிதாக உணர முடியும். எனவே ஹதீஸ்கள் தேவை இல்லை; குர்ஆன் மட்டும் போதும் என்ற அஹ்லகுர்ஆன் இயக்கவாதிகளின் கூற்று அர்த்தமற்ற பிதற்றலே அல்லாமல் ஏற்கத்தக்க வாதம் அல்ல.

ஹதீஸ்கள் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படாதது ஏன்?
இன்னொரு அர்த்தமற்ற வாதத்தையும் அஹ்ல குர்ஆன் இயக்கத்தினர் வைக்கின்றனர். அதாவது ஹதீஸ்களையும் பின்பற்றி நடப்பதாக இருந்தால், அல்லாஹ் அல்குர்ஆனை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கச் செய்தது போல், ஏன் ஹதீஸ்களையும் உடனுக் குடன் பதிந்து பாதுகாக்கச் சொல்லவில்லை? எனவே ஹதீஸ்கள் தேவை இல்லை என வாதிடுகின்றனர். இதிலும் இவர்கள் அல்லாஹ்வுக்கு மார்க்த்தைக் கற்றுக் கொடுக்க முற்படுகின்றனர். (பார்க்க 49:16) அன்றைய காலத்தில் குர்ஆனையும், நபியின் நடைமுறைகளையும் உடனுக்குடன் எழுதிப் பாதுகாத்திருந்தால், இன்று அல்குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கு முள்ள வேறுபாடு தெரியாமல் போயிருக்கும்; குர்ஆன் வசனங்களை ஹதீஸ் என்றும், ஹதீஸ்களை குர்ஆன் வசனங்கள் என்றும், இந்தப் புரோகிதர்கள் கலப்படம் செய்து மார்க்கத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். சுமார் 10 இலட்சம் பொய் ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர்களுக்கு இது முடியாத ஒரு காரியம் அல்ல.

இறை வெளிப்பாடு மூலம் கொடுக்கப்பட்ட குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளவே அல்லாஹ் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான் என்று விளங்குவதே முறையாகும். மேலும் அல்லாஹ்வின் சுன்னத்திற்கும், அல்லாஹ் நீதியாளன், நேர்மை வழுவாதவன் என்ற அவனது தனித்தன்மைகளுக்கும் உகந்ததாகும். அல்குர்ஆனுக்கு முன்னுள்ள, இறையருளிய நெறி காட்டும் நூல்கள் அனைத்தும் இந்தப் புரோகிதர்களால் கலப்படம் செய்யப்பட்டு அவற்றின் தூய நிலை மாசுபட்டதை அல்குர்ஆன் மூலம் அறிகிறோம். அப்படி இருந்தும் யூத கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளை என்ன? மனிதக் கரம் பட்டு கலப்படமாகியுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் காணப்படும் உண்மையான இறையறிவிப்புகளைக் கண்டறிந்து அதன்படி நடக்க வேண்டும் என்றே கட்டளையிட்டுள்ளான்.அவை கலப்படமாகிவிட்டதால் அவற்றை புறக்கணித்துவிட்டு உங்கள் மனம்போன போக்கில் செயல்படுங்கள் என அல்லாஹ் அனுமதி அளிக்கவில்லை.

அல்குர்ஆன் இறுதி வழி காட்டும் நெறி நூலாகவும், உலகம் அழியும் வரை அதுவே வழிகாட்டி நூலாக நிலைத்திருக்கும் நிலை இல்லை என்றால், அல்குர் ஆனின் நிலையும் அதுவாகவே இருந்திருக்கும். ஆனால் அதற்கு மாறாக, அதாவது முன்னைய நெறி காட்டும் நூல்கள் விஷயத்தில் கடைபிடித்த நியதிக்கு மாறாக அல்குர்ஆன் உடனுக்குடன் பதியப்பட்டு பாதுகாக்கப்பட்டது போல், நபி நடைமுறைகளும் உடனுக்குடன் பதியப் பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தால், இதற்கு முன்னுள்ள நபிமார்களின் சமூகங்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் ஒரு குற்றச் சாட்டை வைக்க வாய்ப்பு ஏற்படும்.

அல்லாஹ் அநீதியாளனா?
“யாஅல்லாஹ்! முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சமூகத்திற்கு உனது வழி காட்டிகள் (குர்ஆன், ஹதீஸ்) அனைத்தையும் உடனுக் குடன் பதிவு செய்து பாதுகாத்துக் கொடுத்துவிட்டாய். எனவே அவர்கள் குர்ஆனையும், ஹதீஸையும் நேரடியாகப் பார்த்து அதன்படி நடக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக எங்களுக்கு நீ அருளியவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. அதனால் இப்புரோகிதர்கள், அதில் மனிதக் கருத்துக்களைப் புகுத்தி அதை கலங்கப்படுத்தி விட்டார்கள். அதிலுள்ள நேர்வழியை- நீ அருளியவற்றை மட்டும் பிரித்து எடுத்து நடப்பது எங்களுக்குப் பெரும் சிரமமாகி விட்டது. அதனால் நாங்கள் வழிகேட்டில் சென்றுவிட்டோம்; அதற்காக எங்களைக் குற்றப்படுத்தாதே” என்று அவர்கள் முறையிட்டால் அது நியாயமான முறையீடாகவே இருக்க முடியும்.

அதனால்தான், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த வகை நபியும் இல்லாத காரணத்தால், அல்குர்ஆனைப் பதியவைத்து பாதுகாக்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதே சமயம், முன்னைய சமூகங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த சோதனையான மனிதக் கலப்படங்களிலிருந்து சத்தியத்தை-நேர்வழியை கண்டறிந்து அதன்படி நடக்கும் கட்டாயம் இருந்தது போல், பாதுகாக்கப்பட்ட இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனைப் பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு, நபி நடைமுறையில் – ஹதீஸில் மனிதக் கலப்படங்கள் நிறைந்துள்ள நிலையில் அவற்றிலிருந்து சத்தியத்தை- நேர்வழியைக் கண்டறிந்து அதன்படி நடக்கும் கட்டாயம், அல்லாஹ்வால் சோதனையாகக் கொடுக்கப் பட்டுள்ளது என்று கூறினால், அதில் இந்த அஹ்லகுர்ஆன் இயக்கவாதிகள் என்ன தவறைக் காண முடியும்? (பார்க்க 33:38, 62, 35:43, 40:85, 48:23)

அஹ்லகுர்ஆன் இயக்கவாதிகளின் மெளட்டீகம்!
அல்குர்ஆன் வழங்கப்பட்ட, அல்குர் ஆனுக்கு விளக்கம் கொடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்ட (2:213, 16:44,64) நபியின் விளக்கங்கள் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டு ஹதீஸ்களாக இருப்பவற்றை ஏற்க முடியாது என்றும், குர்ஆன் மட்டுமே போதும் என்றும், வாதிடும் அஹ்லகுர்ஆன் இயக்கவாதிகள் அதில் உண்மையாளர்கள் இல்லை.  அல்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க எவ்வித அருகதையும், அதிகாரமும் இல்லாத யூதக் கைக்கூலிகளை வழிகாட்டிகளாகவும், ரசூலாகவும் ஏற்று, அவர்களின் மூடத்தனமாக சுய விளக்கங்களை இறைவாக்காக ஏற்றுச் செயல்பட்டு வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் சுய கருத்துக் களை அப்படியே வாந்தி எடுக்கின்றனரே அல்லாமல், இவர்கள் நேரடியாக குர்ஆனை படித்துச் சிந்தித்து விளங்குபவர்களாக இல்லை. எப்படி ஷைத்தான், இதர பிரிவினைவாதிகளுக்கு வழிகேடுகளை நேர் வழியாகக் காட்டி மயக்குகிறானோ, அப்படி அதே மயக்கத்தில் இந்த அஹ்ல குர்ஆன் வாதிகளும் சிக்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அஹ்லகுர்ஆன் வாதிகள் செழித்து வளர 1997-ல் பிரிவுகள் பற்றிய விவாதத்தில், தவ்ஹீத் மவ்லவி(?) ஹதீஸ்களில் தன் மனம்போன போக்கில் விளையாடியதும், இன்று வரை அந்த ஷைத்தானியப் போக்கு தொடர்வதும் ஒரு முக்கிய காரணமாகும்.

எனவே இந்த அஹ்லகுர்ஆன் வாதிகளும் நேர்வழியில் இல்லை; ஒன்று பட்ட ஒரே சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் வகையில், நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேட்டிலேயே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

Previous post:

Next post: