ஜனநாயக சாபக்கேடு!

in 2010 ஜூலை,தலையங்கம்

உலகின் பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஜனநாயக ஆட்சி முறை என்றால் மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பப்படி ஆட்சி நடத்துவதாகும். மக்களில் பெரும்பான்மையினர் கல்வியறிவற்றவர்களாகவும், மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு வாழ்பவர்களாகவும், எளிதில் ஏமாறுகிறவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் அறிஞர்களிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இல்லை என்றால் தங்களின் விலை மதிப்பற்ற பொன்னான வாக்குகளை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் இழக்க முன் வருவார்களா?

அதன் விளைவு முற்றிலும் தகுதியற்றவர்களே ஆட்சியில் அமரும் வாய்ப்பே பிரகாசமாக இருக்கிறது. இன்று நாட்டில் நீக்கமற நிறைந்து காணப்படும் குடி, கூத்து, விபச்சாரம், ஆபாசம், ஒழுக்கக்கேடு, வன்முறை, தீவிரவாதம், கொலை, கொள்ளை, திருட்டு, ஏமாற்று, மோசடி, வஞ்சகம், சூது, லஞ்சம், கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை, வரதட்சணை கொடுமை, பெண்கள் எரித்துக் கொல்லப்படுதல், இப்படி அனைத்தும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றன.

நீதித்துறையே அநீதித் துறையாக உருமாறி வருகிறது. பணம் இருந்தால் எத்தனைக் கொலைகளையும் செய்துவிட்டு, மக்கள் மத்தியில் எவ்வித சலனமுமின்றி தைரியமாக காலரை தூக்கி விட்டுக் கொண்டு நடமாடும் நிலை ஏற்பட்டுவிட்டது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்களே அதுபோல் ஜனநாயக ஆட்சி முறை சாபக்கேடு ஆட்சி முறையாகவே இருக்கிறது. ஜனநாயகம் என்றால் நீதியோ, அநீதியோ தர்மமோ, அதர்மமோ அதுவல்ல விவகாரம்; பெரும்பான்மை மக்களை திருப்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே ஆட்சியாளர்களிடமும், நீதிபதிகளிடமும் காணப்படுகிறது.

சமீபத்தில் உயர்மன்ற, உச்சமன்ற தீர்ப்புகள் எமது கூற்றை உறுதிப்படுத்துகின்றன. நாட்டின் கோடிக்கணக்கான பொருளாதாரம் ஜனநாயக ஆட்சி முறையால் வீணடிக்கப்படுகின்றது. ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி மக்களுக்கு மிகமிகத் தேவையான ஒரு திட்டத்தைத் துவங்கி இருக்கும். அதற்காகப் பல்லாயிரம் கோடி செலவிட்ட நிலையில் ஆட்சி மாறிவிட்டால் புதிதாக ஆட்சியில் அமரும் கட்சி அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டு விடும். மக்கள் பணம் பல்லாயிரம் கோடி வீணடிக்கப்படுவதைப் பற்றிப் புதிய ஆட்சியாளருக்குக் கவலை இருக்காது. அதற்கு மாறாக அத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மக்கள் செல்வாக்கு முன்பு ஆட்சியிலிருந்த கட்சிக்குச் சென்றுவிடுமே என்ற கவலையும், அத்திட்டத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறதே என்ற கவலையுமே மிகைத்திருக்கும். சேது கால்வாய்த் திட்டம் முடக்கப்பட்டிருப்பது இதற்கு நல்லதொரு உதாரணம்.

மக்களுக்கு இமயமலையளவு பயன்தரும் திட்டத்தை ஆட்சியிலிருக்கும் கட்சி கொண்டு வந்தாலும், எதிர்க்கட்சிகள் அத்திட்டத்தை முறியடிக்கவே முற்படுவர். காரணம் தங்களுக்கு மக்கள் செல்வாக்குப் போய்விடும், தங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காது என்ற பொறாமைக் குணமே அன்றி வேறில்லை. ஜனநாயக ஆட்சி முறையால் பெரும் பான்மையினரைத் திருப்திப்படுத்த சிறுபான்மையினருக்கு எவ்வளவு பெரிய கொடுந்துன்பங்கள் ஏற்பட்டாலும் ஆட்சியாளர்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். ஹிந்துத்துவாவினரால் அரங்கேற்றப்பட்ட பல குண்டு வெடிப்புகள், பல வன்முறைச் செயல்கள், மும்பை கலவரம் இவை அனைத்தையும் மூடி மறைக்க முற்பட்டும் அதை எல்லாம் தாண்டி அவை வெளிச்சத்திற்கு வந்த பின்னரும் மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தன? நடவடிக்கை பூஜ்யம்.

அதே சமயம் பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்த சிறுபான்மையினரைச் சேர்ந்த அப்பாவிகள் மீது எப்படிப்பட்ட குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க வாய்ப்புக் கொடுக்காமல் ஒருதலைப் பட்சமாக அவர்கள் குற்றவாளிகள் என உயர்மன்ற, உச்சமன்ற தீர்ப்புக்களையும் பார்க்கிறோம். பல அப்பாவிகள் பல்லாண்டுகள் ஜாமீன் மறுக்கப்பட்டு விசாணைக் கைதிகளாகவே சிறையில் வாடுவதையும், அவர்களின் இளமை தொலைக்கப்படுவதையும், முதுமைக் காலத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுவிக்கப்படுவதையும் பார்க்கிறோம்.

கொலை வழக்கில், கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவரே அப்ரூவராகி, கொலைக்கு மூலகர்த்தா அடையாளம் காட்டப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கலாகும் நிலையில் மடாதிபதியான குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கி, அவர் தன்னிடமுள்ள பல ஆயிரம் கோடிகளில் சிலதைக் கொடுத்து பல முக்கிய சாட்சிகளை பிறழ் சாட்சியாக்க அரசும், நீதிமன்றமும் துணை போகிறது. அதே சமயம் எவ்வித சாட்சியமும் இல்லாமல், அரசால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் விசாரணை கைதியாக மட்டுமே இருந்த குணங்குடி ஹனீபாவுக்கு சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று அரசு கூறி ஜாமீன் மறுக்கப்பட்டு 12 ஆண்டுச் சிறையில் வாடி தனது உடல் ஆரோக்கியம், தொழில், செல்வம் அனைத்தையும் இழந்த பின்னர் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்து சிறையிலிருந்து விடுவித்தக் கொடுமையும் ஜனநாயக சாபக்கேடே!

உள்நாட்டில் இப்படிப்பட்ட அலங்கோலங்கள், அட்டூழியங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்றால் பக்கத்து நாடுகளும் பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்த நீதியைக் குழி தோண்டி புதைக்கின்றன. இந்தியா ஹிந்துக்களைப் பெரும்பான்மையாகவும் முஸ்லிம்களை சிறு பான்மையாகவும் கொண்ட நாடு. இந்தியாவிலிருந்து 1947ல் பிரிக்கப்பட்ட பாகிஸ்தானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், ஹிந்துக்கள் சிறுபான்மையாகவும் இருக்கிறார்கள். பாகிஸ்தானும் அதன் உளவுத் துறையும் திட்டமிட்டு இந்தியாவில் வன்முறை-நாசகாரச் செயல்களைச் செய்ய தீவிரவாதிகளை ஊடுருவச் செய்கின்றன என்று தொடர்ந்து இந்தியா குற்றப்பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மாறாக அதே குற்றச்சாட்டை பாக்கிஸ்தான் இந்தியாமீது வாசித்துக் கொண்டிருக்கிறது. உண்மை நிலை என்ன?

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு பெரும் பான்மையினரைத் திருப்திப்படுத்தி அவர்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள முற்படுகின்றனவே அல்லாமல் சத்தியத்தை நீதியை நிலைநாட்ட முற்படுவதில்லை. இந்திய அரசு ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்படுவதில்லை; காரணம் வாக்கு வங்கி. அதேபோல் பாகிஸ்தான் பெயரளவு முஸ்லிம் தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்கள் திட்டமாக வெளிப்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்படுவதில்லை. காரணம் வாக்கு வங்கி. இதுபோல் இன்னும் எண்ணற்ற அநீதமான செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படி ஜனநாயக ஆட்சி முறை நாட்டில் அநீதி, அநியாயம், அட்டூழியம், அக்கிரமம், என பஞ்சமா பாவங்கள் பெருக வழி வகுக்குமே அல்லாமல் நீதி நியாயத்தை, அமைதியை, வளமான வாழ்வை நிலைநாட்ட ஒருபோதும் உதவாது.

கேடுகெட்ட இந்த ஜனநாயக ஆட்சி முறையால் ஒரே நாட்டில் பக்கத்துப் பக்கத்து மாநிலங்களிடையே ஏற்படம் நதிநீர் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் மோதல்களை தீர்த்து வைக்கும் ஆற்றல் அற்ற, அதிகாரமற்ற அரசாக மைய அரசு செயல்படும் கொடுமை. வாக்கு வங்கியை குறியாகக் கொண்டு எந்த மாநிலத்தையும் பகைத்துக் கொள்ளக் கூடாது, வாக்கு வங்கியை இழக்கக் கூடாது என்ற சுயநல எண்ணம் மிகைக்கிறதே அல்லாமல், நீதி நியாயத்தை நிலைநாட்டுவதே ஆட்சியாளர்களின் கடமை என்பதை இந்த ஜனநாயக ஆட்சி முறை மறக்கச் செய்துவிடுகிறது. நீதி நியாயம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டாலும் பரவாயில்லை பெரும்பான்மை மக்களின் செல்வாக்கை இழந்து விடக்கூடாது என்று ஆட்சியாளர்கள் எண்ணும் அளவுக்கு இந்த கேடுகெட்ட ஜனநாயக ஆட்சி முறை இருக்கிறது.

இதைவிட கேடுகெட்ட நிலை என்ன தெரியுமா? ஜனநாயக ஆட்சி முறையால் அமையும் கூட்டணி ஆட்சி. ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு பிரதிநிதிகளே தேவை என்ற நிலையில், அந்த இரண்டு பிரதிகளை மட்டுமே கொண்ட ஓர் உதிரிக்கட்சியிடம் பேரம் பேசி கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்து விடுவார்கள். ஆயினும் அந்த ஆட்சியின் சூத்திரக் கயிறு இந்த இரண்டு பிரதிநிதிகளிடமே இருக்கிறது. அவர்கள் இழுத்த இழுவைக்கெல்லாம் ஆட்சியாளர்கள் ஆடுவார்கள். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அந்த இரண்டு பிரதிநிதிகள் வைக்கும் கோரிக்கைகள் எவ்வளவு அநீதமாக இருந்தாலும் கொடூரமாக இருந்தாலும் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களை திருப்திப்படுத்தவே முற்படுவார்கள் ஆட்சியில் இருப்போர். சமீபத்தில் ஜார்கண்டில் சிபுசோரனுக்கும், பா.ஜ.கவுக்குமிடையில் நடைபெற்ற பேரங்கள், ஜனநாயக கேலிக்கூத்து மற்றும் நாடகம் ஜனநாயக ஆட்சி முறையின் கேடுகெட்ட பரிதாப நிலையை உணர்த்தப் போதுமானதாக இருக்கிறது. இதைவிட கேடுகெட்ட, மானங்கெட்ட செயல் பிரிதொன்று இருக்க முடியுமா? சிந்தியுங்கள். ஜனநாயகத்தின் கேடுகெட்ட, தரங்கெட்ட நிலை இன்னுமா புரியவில்லை.

அனைத்து வகை ஊடகங்களும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்புச் செய்து, பொய்ச் செய்திகளையே மீண்டும், மீண்டும் பரப்பி வருவது, பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற ஜனநாயக சாபக்கேடே! காரணம் சட்டங்களை இயற்றுகிறவர்கள் யாரோ அவர்களுக்குச் சாதகமாகவே அந்த சட்டங்கள் அமையும். அமெரிக்கச் சட்ட அமெரிக்கனுக்குச் சாதகமாகவே இருக்கும். பிரிட்டனின் சட்டம் அவனுக்குச் சாதகமாகவே அமையும். அதிலும் அங்குள்ள பெரும்பான்மை மக்களுக்குச் சாதகமாகவே அமையும். இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சட்டம் அதை வகுத்த மேல் ஜாதியினருக்குச் சாதகமாகவே இருக்கிறது. ஹிந்து மதக் குருமார்கள் அமைத்த சட்டம் ஹிந்து மதக்குருமார்களுக்கும், கிறிஸ்தவ மதக்குருமார்கள் அமைத்த சட்டம் கிறிஸ்தவ மதக்குருமார்களுக்கும், முஸ்லிம் மதக்குருமார்கள் அமைத்த சட்டம் (பிக்ஹு) முஸ்லிம் மதக்குருமார்களுக்கும் சாதகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமுண்டா? இப்படி மனிதச் சட்டங்கள் அவரவர்களுக்குச் சாதகமாக ஒரு தலைப்பட்ச மாக இருக்குமே அல்லாமல், நடுநிலையோடு நீதி நியாயத்தை நிலைநாட்டும் முறையில் மனிதச் சட்டங்கள் ஒருபோதும் இருக்காது. சட்டம் இயற்றுகிறவர்கள் தங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டும் அளவுக்கு மக்கள் நலனில் அதி அக்கறை கொள்ள மாட்டார்கள்.

உலகின் நாடுகள் அனைத்தும் இன்று மனிதர்கள் வடிவமைத்த சட்டங்களைக் கொண்டே இயங்கி வருவதால், உலகம் அமைதி இழந்து தவிக்கிறது. அமைதி கிலோ என்ன விலை என கேட்கும் அளவுக்கு அமைதி அருகி விட்டது. எங்கு பார்த்தாலும் அமைதியற்ற நிலை, மனித நேயம் மறக்கடிக்கப்பட்ட நிலை, மனித இரத்தம் ஆறாக ஓடும் பரிதாப, கேவல நிலை; ஆறறிவு மனிதன் ஐயறிவு மிருகங்களை விட கேடுகெட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட பரிதாபம். மனிதன் இங்கு மட்டும் நிம்மதி இழந்து நரக வாழ்க்கை வாழவில்லை. இவ்வுலக வாழ்க்கை மனிதன் தனது உணவுத் தேவையை நிறைவேற்ற வயலில் வேலை செய்வது போன்ற மிகமிகக் குறுகிய வாழ்க்கை. மனிதன் தன் மரணத்திற்குப் பின்னர் சந்திக்க இருக்கும் வாழ்க்கையே நிரந்தரமானது. அந்த நிரந்தர வாழ்க்கையை நரக வாழ்க்கையாக்கிக் கொள்ளும் மிருகங்களை விட கேடுகெட்ட வாழ்க்கையையே ஜனநாயக, சர்வாதிகார, சோசலிச, கம்யூனிச சித்தாந்தங்களின்படி வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன். மன்னராட்சியின் நிலையும் இதுவே!

மனிதன் மனித நேயத்துடன், இரத்த பாசத்துடன் மன நிம்மதியான அமைதியான, வளமான வாழ்க்கையை அற்பமான குறுகிய இவ்வுலகில் வாழ்வதோடு மட்டுமில்லாமல், நிரந்தரமான நெடும் மறு உலகிலும் முழுமையான மன திருப்தியுடனும், சுபீட்சமாக வாழ விரும்பினால், மனிதன் அவனைப் படைத்து அவனுக்கு அழகிய வாழ்க்கைத் திட்டத்தைக் கொடுத்துள்ள இணை துணை இல்லாத தன்னந்தனியனான ஏகன் இறைவன் கொடுத்துள்ள வாழ்க்கை நெறி நூலின்-அல்குர்ஆனின் சட்ட திட்டங்களின்படி நடக்க முன்வர வேண்டும். இதற்கு முன்னர் இறைவன் அருளிய ஹிந்து வேதங்கள், யூத தோரா, கிறிஸ்தவ பைபிள், இன்னும் முன்னைய அனைத்து மதங்களின் வேத நூல்கள் இவை அனைத்திலும் பொதிந்துள்ள சத்திய, நேர்வழி கருத்துக்கள் அனைத்தையும் இறைவன் இறுதி நெறிநூல் அல்குர்ஆனில் இடம் பெறச் செய்துள்ளதோடு, அரசுகள் முன்னைய புழக்கத்திலிருந்த பழைய நோட்டுக்களைச் செல்லாது என ரத்து செய்வதுபோல் முன்னைய அனைத்து வேதங்களையும் இரத்து செய்துள்ளான்; இறைவன் அளித்துள்ள இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டங்களைக் கொண்டது, அவற்றையே மனித சமுதாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை ஏற்று அதன்படி அனைத்துலக மக்களும் நடக்க முன்வந்தால் மட்டுமே உலகம் உய்ய வழி பிறக்கும்.

Previous post:

Next post: