அழைப்புப் பணி!

in 1996 நவம்பர் - டிசம்பர்

K.M.H.

    நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி(ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து சுமார் 1 1/4 லட்சம் நபிமார்கள், செய்து வந்த தூய பணியான  அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணி, இந்த உம்மத்தின் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் சார்ந்ததாக, இறைவனால் ஆக்கப்பட்டுள்ளது. சுமார் 1 1/4லட்சம் நபிமார்கள் செய்த பணியைக் கோடிக்கணக்கான தனது உம்மத்தவர்கள் செய்யும். நிலையில் அவர்களைத தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள்.

    “நம்பிக்கை கொண்டு, சாலிஹான அமல்கள் செய்து சத்தியத்தை ஒருவருக்கொருவர் எடுத்துச் சொல்லி (அதனால் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்துக் கொள்ளும்படி) ஒருவருக்கொருவர் பொறுமையையும் எடுத்துச் சொல்பவர்களைத் தவிர எஞ்சியுள்ள மனிதர்கள் அனைவரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்” என்று அல்குர்ஆனின் 103வது அத்தியாயத்தின் மூலம், மார்க்க அழைப்புப் பணியை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும்  அவசியம் செய்ய வேண்டும் என்று அல்லலாஹ்(ஜல்) வலியுறுத்திச் சொல்கிறான்.

    இதல்லாமல் அல்குர்ஆன் 3:110; 9:71; 51:55 வசனங்கள் இந்த அழைப்புப் பணியை முஸ்லிம்கள் செய்ய ஏவப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவு படுத்துகின்றன. இது விஷயத்தில் உண்மையான முஸ்லிம்களுக்கு கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

    ஆனால், இந்த அழைப்புப் பணி எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் பலரும் பல அபிப்பிராயங்களில் இருந்து வருவதைப் பார்க்கிறோம். இது விஷயத்தில் மனித அபிப்ராயங்களை விட்டு நீங்கி, அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏவியுள்ள முறைப்படி, நாம் எல்லாம் இந்த அழைப்புப் பணியைச் செய்ய முன்வந்தால், இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக  நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

    அழைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு சிலர் மக்களிடையே நன்மையைக் கொண்டு ஏவிக் கொண்டிருந்தால் மட்டும் போதும், தீமையைத் தடுக்க வேண்டியதில்லை.தீமையைத் தடுப்பதால் மக்கள் ஆத்திரமுற்று. நாம் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் நம்மைம விட்டு நழுவி விடுகிறார்கள். ஆகவே. தீமையைத் தடுக்காமல் நன்மையை மட்டும் ஏவிக் கொண்டிருந்தால் அவர்கள் அந்த நல்ல காரியங்களைச் செய்ய ஆரம்பித்த மாத்திரத்தில் தீமைகள் தன்னைத் ‘தானே நாம் விலக்காமலேயே விலகிவிடுகின்றன என்று சொல்லி, லைட்டை போட்டால் வெளிச்சம் வந்தவுடன் இருள் தானாகவே போய்விடுகின்றது. என்று உதாரணமும் காட்டுகிறார்கள்

 இவர்கள் காட்டக்கூடிய இந்த உதாரணம் குர்ஆனுக்குப் பொருத்ததமாகத் தெரியவில்லை. நாம் நினைப்பது போல் நன்மையைக் கொண்டு மட்டும் ஏவிக் கொண்டிருப்பதால், தீமைதானாக போய்விடும் என்பது உண்மையானால், அல்லாஹ்(ஜல்) நம்மை நன்மையைக் கொண்டு மட்டும் ஏவக் கட்டளை இட்டிருப்பான். ஆனால், அல்குர்ஆனில் நம்மை நன்மையைக் கொண்டு மட்டும் ஏவக் கட்டளை இட்டிருப்பான். ஆனால் அல்குர்ஆனில் நன்மையைக் கொணடு ஏவக் கட்டளையிடும் வசனத்திற்குப் பிறகு பெரும்பாலும் தீமையை விட்டும் தடுக்கக் கட்டளையிடும் வசனமும் இணைந்தே வருகின்றன. 103-ஆம் அத்தியாயத்தில் சத்தியம் என்று குறிப்பிடப்படும் நிலை நன்மைகள் செய்யப்பட்டும், தீமைகள் தடுக்கப்பட்டும் உருவாகும் நிலையையே குறிக்கின்றது. மேலும் நன்மையைக் கொண்டு ஏவுவதற்கு ஸப்ரு அவ்வளவாக தேவையில்லை. காரணம், அதற்கு எதிர்ப்பு அதிகமாக வருவதில்லை. தீமையைத் தடுக்கப்போகும் போது தான் எதிர்ப்பும் பலமாக இருக்கும். சோதனைகள் வரும். அப்போதுதான் ஸப்ரு (சகிப்புத் தன்மை) செய்யம் நிலை உருவாகும். அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்களின் சரித்திரங்களை உற்று நோக்கும் போது, அவர்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மக்களிடையே நன்மைகளை ஏவி, தீமைகளைத் தடுக்க முற்படும்போது ஏற்பட்டனவே அல்லாமல், நன்மையைக் கொண்டு ஏவும்போது மட்டும் ஏற்பட்டவை அல்ல.

    ஆக, குர்ஆனைக் கொண்டும், நபிமார்களின் நடைமுறைகளைக் கொண்டும், குறிப்பாக இறுதி நபி(ஸல்) அவர்களின் நடைமுறையைக் கெர்ணடும் நாம் தெளிவாகப் புரிந்துக் கொள்வது நன்மையைக் கொண்டு ஏவுவதற்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தைத தீமையை விட்டும் தடுப்பதற்கும் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். அதனால் எவ்வளவு பெரிய துன்பங்கள் ஏற்பட்டாலும் அவற்றைச் சகித்துச் கொண்டு கடமையாற்றக் கடமைப்பட்டுள்ளோம். அதைக் கொண்டுதான் நமது வாழ்வின் வெற்றி நிறைவு பெற முடியும்.”ஒரு தீமை நடக்கக் கண்டால் கைகளால் அதனைத் தடுக்கவும், அதற்கும் முடியாவிட்டால் நாவினால் தடுக்கவும், அதற்கும் முடியாவிட்டால் மனதினாலாவது அது தீயது என்று எண்ணி வருந்தவும. இது ஈமானின் இறுதி நிலையாகும்” என்ற ஹதீஸும் தீமையைத தடுப்பதையே வலியுத்துகிறது.

(ஆதாரம்: முஸ்லிம்,அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜ்ஜா)

    அழைப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இன்னும் சிலர் நன்மையைக்கொண்டு ஏவுவதையும், தீமையை விட்டுத் தடுப்பதையும் வரவேற்கின்றார்கள். ஆனால், மக்களுக்கு மத்தியில் ஏற்படும் எதிர்ப்புக்களை அனுசரித்து, தீமையை தடுப்பதில், மனித அபிப்பிராயங்களால் பெறப்படும் சில (நல்லது கெட்டதுகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு காரியம்  உண்மையில் தவறு என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தாலும் அதை இப்போதைக்கு எடுத்துச் சொல்வதால் மக்களில் பெரும்பான்மையினர், அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நம்மை எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஆகவே சில காலம் பொறுத்து அதைச் சொல்லிக் கொள்ளலாம் என்று அவர்களாக முடிவு எடுத்துச் செயல்படுகிறார்கள். இப்படிச் செயல்படுவதுதான் நளினமாகச் செயல்படும் அழகிய முறை என்று அவர்களாகவே முடிவு செய்து கொள்கிறார்கள். ஆனால் குர்ஆனின் வெளிச்சத்தில் பார்க்கும் போது அதற்கு நம்மால் ஆதாரத்தைப் பார்க்க முடியவில்லை.

    விளைவைப் பற்றிச் சிந்திக்காமல், ஹிதாயத் நம்முடைய திறமையிலும், சமயோசிதத்திலும் இருக்கின்றது என்று எண்ணாமல் இறைக் கட்டளைகளை மக்கள் முன்’வைப்பதே நமது கடமை என்பதையே குர்ஆனின் பல வசனங்கள் வலியுறுத்துகின்றன. உதாரணமாக “தெளிவாக எடுத்துச் சொல்வதையின்றி,எங்கள் மீது (வேறெதுவும்) கடமையல்ல (என்று தூதர்கள் சொன்னார்கள்)”

(அல்குர்ஆன் 36:17)

    மேலும் அல்குர்ஆன் 5:67-ல் தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்றதை, (யாதொரு குறைவுமின்றி அவர்களுக்கு) அறிவித்து விடும். நீர் (அவ்வாறு) செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்) மனிதர்(களின் தீங்கு)களிலிருந்து, அல்லாஹ் உம்மை (இரட்சித்து)க் காப்பாற்றிக்கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான் என்று தெளிவாகக் கூறி, அல்லாஹ்வின் அறிவிப்புகளை (விளைவுகளை எண்ணிப்பார்க்காமல்) மக்கள் முன் எடுத்து வைப்பதே கடமை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி வலியுறுத்துகின்றது.

    மேலும், அதிகமான மக்கள் ஏற்றுக் கொள்ளும் காலத்தை ஏதிர்பார்த்து சத்தியத்தை மக்கள் முன வைப்பதை மறைப்பது, அல்லது கால தாமதம் செய்வதும் கடும் குற்றம் என்பதையும் இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.

    இன்னும் அல்குர்ஆனின் 17:73- 75; 33:2; 43:43; 45:18; 69:44-46 வசனங்கள் அனைத்தும்  அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டவற்றை கூடுதல் குறைவின்றி,விளைவுகளைப் பற்றியும், நாம் ஆராயாமல் மக்கள் முன் வைப்பதே நமது கடமை என்பதைத் தெளிவுப்படுத்துகின்றன. அல்லாஹ் (ஜல்) நம்மனைவருக்கும் விளங்கிக்கொள்ள அருள் புரிவானாக)

    இறைவனிடமிருந்து வஹி மூலம் செய்திகளைப்  பெற்ற அவற்றை மறைக்காமல் மக்கள் முன் வைத்த எண்ணற்ற  நபிமார்களுக்கு ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே அதிகமாக  இருந்து வந்திருக்கின்றனர் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு சில நபிமார்கள், மறுமையில் தன்னைப் பின்பற்றியவர்கள் இல்லாத நிலையில் தனியாக வருவார்கள் என்றும், ஒரு சில நபிமார்கள் விரல் விட்டு எண்ணும் அளவு வெகு சொற்பமானவர்களையே உம்மத்தினர்களாகக் கொண்டிருப்பார்கள் என்றும் ஹதீஸ்களிலிருந்து விளங்குகிறோம்.

(ஆதாரம் :திர்மிதீ, நஸயீ)

    இவற்றை எல்லாம் அலசி ஆராயும்போது, மக்கள் ஏற்றுக் கொள்வதையும், ஏற்றுக் கொள்ளாததையும் நமது அழைப்புப் பணிக்கு அளவு கோலாக நாம் கொள்ளக் கூடாது அப்படியானால் எதை நாம் அளவுகோலாகக் கொள்வது?

    “உபதேசம் செய்யுங்கள். உபதேசம் விசுவாசிகளுக்குப் பலன் தரும்”.    (அல்குர்ஆன் 51:55)

    இந்த இறைவசனமே அழைப்புப் பணிக்குச் சரியான அளவு கோல் ஆகும்.

    யார் விசுவாசி, யார் விசுவாசி இல்லை என்பதை நாம் அறியமாட்டோம். ஆனால் நிச்சயமாக  நமது பிரச்சாரம் விசுவாசிகளுக்குப் பலன் கொடுக்கும். விசுவாசி அல்லாதவர்களுக்கு நிச்சயமாக பலன் கொடுக்காது. இது இறைவாக்கு. உதாரணத்திற்காக.: ஆயிரம் பேர் உள்ள ஒரு கூட்டத்தில் பத்துபேர் மட்டும் விசுவாசியாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எவ்வளவு திறமையாகவும், சமயோசிதமாகவும், நளினமாகவும் நாம் பிரச்சாரம் செய்தாலும் அது பத்து பேருக்குத் தான் பலன் கொடுக்கும் பாக்கியுள்ளோருக்கப் பலன் தரவே தராது. இந்த  நிலையில் அந்த ஆயிரம் பேரில் அதிகமானோர் ஏற்றக் கொள்ளும் ஒரு காலத்தை எதிர்பார்த்து, நாம் நமது பிரச்சாரத்தை சிறிது மறைக்கிறோம், அல்லது கால தாமதம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இது சரிதானா? நியாயம்தானா? என்று பார்த்தால். இது எவ்வளவு பெரிய தவறு என்பது புரியும் நமது அபிப்பிராயம காரணமாக பலன் பெறும் அந்த பத்து விசுவாசிகளும் பலன் பெற முடியாத ஒரு சூழ்நிலையே உருவாகின்றது. இந்த பெரும் குற்றத்திற்கு நாமே காரணமாகிறோம். இதற்கு நாம் ஆளாகலாமா? நாம் என்ன செய்ய வேண்டும்.?

    குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி மறைக்காமல் கால தாமதம் செய்யாமல் மக்கள் முன் எடுத்து வைக்க வேண்டும். நிச்சயமாக  விசுவாசிகளுக்கு அது பலன் தரும். நிச்சயமாக  அவர்கள் சத்தியத்தை எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் திருந்தி விடுவார்கள். இதில் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும் காரணம் இது இறைவன் கூறும் உறுதி மொழியாகும்.

    நாம் நமது மனித அபிப்ராயத்தில் வந்த முடிவுப்படி இதை இப்போது சொன்னால் அதிகமான மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பின் ஒரு சந்தர்பத்தில், அதற்குரிய காலம் கனிந்த பின் சொல்வோம் என்று சத்தியத்தைச் சொல்வதைத் தள்ளிப் போடுவது கொண்டு மேற்சொன்ன குற்றத்திற்கும் ஆளாகிறோம். பலன் அடைய வேண்டிய விசுவாசி பலனடையாமல் செய்து விடுகிறோம். அவர்கள் வரை சத்தியம் போய் சேராததற்கு நமது மனித அபிப்பிராயத்தைக் காரணமாக்கி விடுகிறோம். அதல்லாமல் இன்னொரு பெரும் குற்றத்திற்கும் ஆளாகிறோம்.

    அதாவது இப்படிச் செயல்படுவது மக்களுக்கு ஹிதாயத் கொடுக்கும் திறன் நமது அறிவு, ஆராய்ச்சியில் இருப்பதாக எண்ணி செயல்படுவதாக இருக்கிறது. இது உண்மையில் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும்.

    அகந்தை இல்லாத தங்கள் அறிவிலும், ஆற்றலிலும் வைக்கும் நம்பிக்கையைவிட அல்லாஹ்(ஜல்)  மீது அதிக நம்பிக்கை வைத்து  செயல்படும் மக்களையே அல்லாஹ் விரும்புகிறான் கட்டளைகளை மக்கள் முன் வைப்பவர்கள் மீது அல்லாஹ் பிரியம் கொள்வதில் ஆச்சரியம் ஒன்று மில்லை.

    அழைப்புப் பணியில் ஏற்படும் விளைவு நம் கையில் இல்லை. நபிமார்களுக்கும் அல்லாஹ் அந்த அதிகாரத்தைத் தரவில்லை என்பதை அல்குர்ஆன் 28:56 வசனம் கூறுகிறது. இந்த நிலையில் விளைவைப் பற்றிச் சிந்திப்பது அறிவுடைமையாகுமா?

    நம் அதிகாரத்திலில்லாத ‘ஹிதாயத்’ (நேர்வழியில் செலுத்துதலைப்)பற்றி சிந்திப்பதை விட்டு, நம் மீது சுமத்தப்பட்ட அழைப்புப் பணியை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

    சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போது ஏற்படும் இன்னல்களை சகித்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இல்லாமல் இருந்தாலும், விளைவுக்கு அஞ்சி சத்தியத்தை மறைக்கலாம் அல்லது கால தாமதம் செய்யலாம் இந்த நிலையும் மறுமையில் நமக்கு நிரந்த நஷ்டத்தையே தரும் என்பதை அல்குர்ஆன் 103-ம் அத்தியாயம் விளக்குகின்றது.

    ஆகவே, இறுதியாக, உறுதியாக நாம் இந்த முடிவுக்கே வர  வேண்டியுள்ளது. அதாவது மார்க்கப் பிரச்சாரத்தை மனித அபிப்ராய்படி செய்யாமல், இறைவன் எப்படிச் செய்யும்படிக் கட்டளையிட்டிருக்கிறனோ, அவ்வாறே நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இதற்கு நாமெல்லாம் தயாராகி விட்டால் அல்லாஹ்வின்  அருள் கிடைக்கும் ஹிதாயத் கிடைக்கும் சமுதாயத்தின் மறுமலர்ச்சியைப் பார்க்கலாம். ‘இன்ஷா அல்லாஹ்’

Previous post:

Next post: