Dr.A.முஹம்மது அலி, Ph.D.,
நமது மூலம் மண்ணே!
நிச்சயமாக அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன் 35:11)
ஆதி மனிதனின் படைப்பு மண்ணிலிருந்து ஆரம்பமாகிறது. (அல்குர்ஆன் 32:7)
நிச்சயமா உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 30:20)
கல்லும் மண்ணும் சுத்தமானதே!
ரசூல்(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்:
உங்களில் எவராவது மலஜலம் கழித்தபின் கற்(மண் கட்டி)களால் சுத்தம் செய்தால் அவர் (கல்-மண் கட்டிகளை) ஒற்றைப்படையாக உபயோகிக்கட்டும்.
இந்நபிமொழியை இதே சொற்களிலோ அல்லது இதன் மையக் கருத்து மாறாது வேறு சொற்களிலோ விளக்கமாகவோ அல்லது சுருக்கமாகவோ கீழ்கண்ட நபித் தோழர்கள் அறிவிக்கிறார்கள்.
1.அபூஹுரைரா(ரழி) இறப்பு 58 ஹிஜ்ரி
2.ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரழி), இறப்பு 70 ஹிஜ்ரி
3.அபூஸயீத்அல்குத்ரீ(ரழி), இறப்பு 63 ஹிஜ்ரி
4.சல்மா பின் கைஸ்(ரழி)
இந்நபிமொழி இடம் பெறும் ஹதீஸ் நூல்களையும்,பாடங்களையும், (வால்யூம்) தொகுப்பு / ஹதீஸ் எண்களையும், அறிவிப்பாளர்களையும் கீழ்காணும் பட்டியலில் காணலாம். ஸஹீஃபா ஹம்மாம், முஅத்தா மாலிகி, ஸஹீஹைன் புகாரி முஸ்லிம், அபூதாவூத் போன்ற நூல்களின் ஆங்கில் மொழி பெயர்ப்புகளைப் பாருங்கள். அரபி நூல்களில் காண விரும்புவோர் அதனதன் பாடங்களில் பார்வையிடுங்கள். அறிவிப்பாளர்களின் பெயருக்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள வரிசை குறிப்பிட்டுள்ளோம்.
ஆதார நூல்கள் பாடங்கள் அறிவிப்பாளர்
1. ஸஹீஃபா ஹம்மாம் ஹதீஸ் எண் :52 1
2. முஅத்தா மாலிகி தஹாரா: 32, 33 1
3. ஸஹீஹ் புகாரி ஒளூ: 1/62, 163 1
4.ஸஹீஹ் முஸ்லிம் தஹாரா: 458 முதல் 462, 1 461,463 3,2
5.அபூதாவூத் தஹாரா:1/35 1
6.நஸயீ தஹாரா 1
7.தாரமி தஹாரா 1
8.திர்மிதி தஹாரா 4
9.இப்னுமாஜ்ஜா தஹாரா:409 1 தஹாரா:406 4
10.இப்னுஹிப்பான் 2/1434 முதல் 1436 1 2/1433 4
11.இப்னு குசைமா 1/75,77 1 1/76
12. ஹாகிம் 1/பக். 158 1
13.முஸ்னமத் அபீஅவானா ஒளூ:1/247 1
14.முஸ்னத் அபூதயாலிஸி எண்: 1/284 4
15.முஸ்னத் அஹ்மத் முஸ்னத் அபீஹுரைரா பாகம் 1 2ல் பக்கங்கள்:236,254,277,
அறுபதுக்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளன. அதில் நாம் மேலே குறிப்பிட்டுள்ள அபூஹுரைரா, ஜாபிர், அபூசயீத் அல்குத்ரீ, சல்மா பின் கைஸ் போன்ற நபித்தோழர்கள் இடம் பெற்றுள்ளனர்.அபூஹுரைரா(ரழி) அவர்களுடன் அபூஸயீத் அல்குத்ரி(ரழி) அவர்களும் இணைந்து அறிவித்ததாக ஸஹீஹ் முஸ்லிமில் (எண் 461) ஒரு அறிவிப்புள்ளதும், நம்பிக்கைக்குரிய பல தாபிஈன்கள் இதனை தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.
தண்ணீரில்லாத இடத்திலோ, தண்ணீர் குறைவாக உள்ள இடத்திலோ இருப்பவர்கள் எப்படி சுத்தம் பேண வேண்டுமென்பதை தெளிவுபடுத்தும் நபிமொழியிது. ஒவ்வொரு மனிதனும் தினசரி மலம், ஜலம் கழிப்பது இயற்கை விதியாகும். இதிலிருந்து எவரும் தப்பிக்கவே முடியாது. மலம்,ஜலம், கழித்த பின் கழுவி சுத்தம் செய்வது அனைவரும் குறிப்பாக கீழை நாட்டவர்கள் அனுஷ்டிக்கும் வழக்கமாகும். மேலை நாட்டவர்கள் தண்ணீருக்கு பதிலாக பேப்பர்களை (Tissue papers) உபயோகிப்பர். நீரோ, பேப்பரோ எதனை உபயோகித்தாலும் குறிக்கோள் ஒன்றுதான். அது சுத்தம் செய்வதாகும்.
இயற்கை விதப்படி மனிதனுக்கு ஏற்படும் மலம், ஜலம், கழிப்பது எப்போதும் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஒருசில சமயங்களில் இடம், காலம் அறியாமல் மலம் ஜலம் வருவதுண்டு. “ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது” என்பது கிராமிய பழமொழியாகும். அச்சமயத்தில் தேவையான நீரோ, சுத்தம் செய்யும் பேப்பரோ கிடைக்காமல் போகலாம். அப்போது எங்கும் கிடைக்கும் கற்களக் கொண்டோ, மண் கட்டிகளைக் கொண்டோ சுத்தம் செய்ய நமக்கு அனுமதி அளிக்கிறது. இந்நபிமொழி சாலைகளில் கிடக்கும் கற்களுகம், மண்கட்டிகளும் அசுத்தமானவைதானே! என்ற நியாயமான கேள்விக்கு கீழ்கண்ட மற்றொரு பதில் அளிப்பதைப் பாரீர்.
பூமி முழுதும் பரிசுத்தமானதாகும் (பள்ளியாகும்). இடுகாடு, குளியலறைத் தவிர.
அறிவிப்பு: அபூஸயீத் அல்குத்ரீ(ரழி), ஆதாரங்கள்: அபூதாவூத் (ஹதீஸ் எண 1/492) திர்மிதி (மவாகீத் எண் 119) இப்னுமாஜ்ஜா (மஸாஜித் 1/745) முஸ்னத் அஹ்மத் (3/83, 96)
முந்திய எந்த சமுதாயத்திற்கும் அளிக்கப்படாத, ரசூல்(ஸல்) அவர்களது சமுதாயத்திற்கு மட்டும் செய்வது பற்றிய செய்திகளைக் கூறும் நபிமொழிகளுடன் இணைந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒளூ செய்பவர் மூக்கிற்கு நீர் செலுத்தி சிந்தி சுத்தப்படுத்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படை கற்களை உபயோகிக்கட்டும். உறங்கி எழுபவர் தங்களது இரு கரங்களையும் முதலில் சுத்தம் செய்தபின் நீரில் அக்கையை போடட்டும் (பார்க்க சென்ற மாத ஹதீஸ் பெட்டகம்) என்ற கூற்றுக்கள் சுத்தத்தைப் பற்றி ஒவ்வொரு மனிதனும் தெரிய வேண்டிய, அனுஷ்டிக்க வேண்டிய கோட்பாடுகளாகும். இக்கூற்றுகளை புகாரி (1/162, 163) முஸ்லிம் (458 முதல் 460) முஅத்தா (32) நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான் போன்ற நூல்களில் காணலாம்.
சுனன் அபூதாவூதில் இந்நபிமொழி ஒரு பெரிய பலவீனமான ஹதீஸின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. அபூதாவூதின் அறிவிப்பில் பல செய்திகள் கூறப்படுகின்றன.
1. எவராவது கண்ணுக்கு சுருமாயிட்டால் ஒற்றைப்படையாக இடட்டும். அப்படி செய்தால் அது அவருக்கு நல்லது. செய்யாவிட்டால் பரவாயில்லை.
2.எவராவது மலஜலம் கழித்த பின் கற்களால் சுத்தம் செய்தால் ஒற்றைப் படையாக செய்யட்டும் அப்படி செய்தால் அது அவருக்கு நல்லது. செய்யாவிட்டால் அது அவருக்கு நல்லது. செய்யாவிட்டால் பரவாயில்லை.
3. எவராது உணவு உண்டப்பின் பற்களின் இடுக்குகளில் உள்ளதை பற்குச்சிகளால் (Tooth Pick) எடுத்தால் அவரது நாவில் ஒட்டியுள்ளதை உண்ணட்டும். அப்படி செய்தால் அது அவருக்கு நல்லது. செய்யாவிட்டால் பரவாயில்லை.
4. மலஜலம் கழிக்க விரும்புபவர் மறைவை நாடட்டும்; ஷைத்தான் ஆதத்தின் மக்களிடையே வீண் விளையாட்டை உருவாக்குகிறான்.
இந்நபிமொழி மிகவும் பலஹீனமானதாகும். இக்கூற்றுக்களில் 2வது செய்தி மட்டும் மற்ற நூல்களில் உண்மையான அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தாலும், “அப்படி செய்தால் அவருக்கு நல்லது. செய்யாவிட்டால் பரவாயில்லை ” என்ற சொற்றொடர் பலவீனமான அபூதாவூத் ஹதீஸில் மட்டுமேயுளள்து.
ஒரு சில மத்ஹபு, தரீக்காவாதிகள் சுனன் அபீதாவூதில் வரும் ஹதீஸின் அடிப்படையில் மார்க்கச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளதால் அந்நபிமொழியில் கூறப்படும் விஷயங்களையும், அதன் தரத்தினையும் இங்கு நாம் விமர்சித்துள்ளோம். எனவே உண்மையான நபிமொழியின்படி நமக்கு தண்ணீர் கிடைக்காத போது மலஜலம் கழித்தபின் கற்கள், மண்கட்டிகள் – நவீனமுறையில் (Tissue) பேப்பகளில் – சுத்தம் செய்ய நாடினால் ஒற்றைப்படையாக உபயோகிப்பது ரசூல்(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறையாகும்.
அல்லாஹ் நம்மனைவரையும் அவன தூதர் வழி வாழ அருள் புரிவானாக!