பிறை பார்ப்பது இபாதத்தான வழிபாடா?

in 2010 செப்டம்பர்,பிறை

இப்னு ஹத்தாது

08.08.2010 ஞாயிறன்று சென்னை ஜாக் தலைமையகத்தில் “பிறைக் குழப்பமும் இஸ்லாமியத் தீர்வும்’ என்ற அறிவிப்போடு பலர் பேசினர். காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை அவர்கள் என்ன பேசுகிறார்கள்? அதில் ஏற்கத்தக்க ஆதாரங்களைத் தருகிறார்களா? அதை ஏற்போமே என்று 39:18 இறைக்கட்டளைக்கு அடிபணிந்து அங்கேயே இருந்து அவர்கள் உரைகளை கவனமாகக் கேட்டோம். பிறையைக் கண்ணால் கண்டிப்பாகப் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு உருப்படியான ஒரேயொரு ஆதாரத்தையும் அவர்களில் யாருமே தரவில்லை. மாறாக மார்க்கப் பணியைப் பிழைப்பாகக் கொண்டவர்கள் மார்க்கமல்லாததை மார்க்கமாக்குவார்கள்;  என்ற எமது குற்றச் சாட்டை அவர்களின் பேச்சுகள் நிரூபிப்பதாகவே இருந்தன.

நபி(ஸல்) அவர்களின் அசலான சுன்னத்து களைப் புறந்தள்ளிவிட்டு சுன்னத் அல்லாதவற்றை சுன்னத் எனக் கடைப்பிடிப்பதோடு, தங்களை “சுன்னத் வல்ஜமாஅத்’ என பீற்றிக் கொள்ளும் முன்னோர்களை கண்மூடிப் பின்பற்றும் “முகல்லிதுகள்’ எடுத்து வைக்கும் அறிவீனமான வாதங்களையே குர்ஆன் ஹதீஸ்படி நடக்கிறோம் “அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்’ எனப் பீற்றிக் கொள்ளும் இவர்களும் எடுத்து வைத்தது எமக்குப் பெருத்த ஏமாற்றத்தையே அளித்தது. சுன்னத் ஜமாஅத்தினர்(?) நீண்ட ஜுப்பா அணிவது சுன்னத்-இபாதத், தொப்பி போடுவது சுன்னத்-இபாதத், தலைப்பாகை அணிவது சுன்னத்-இபாதத், மக்கள் விளங்கும் வகையில் ஜும்ஆ குத்பா-உரை இருக்க வேண்டும் என்பதற்கு மாறாக ஜும்ஆ குத்பா பொதுமக்களுக்கு விளங்காத அரபியில் இருப்பதே சுன்னத்-இபா தத், அப்போது ஒரு தடியைக் கையில் பிடித்திருப்பது சுன்னத்-இபாதத், பஜ்ரிலிருந்து மஃறிபு வரை நோன்பை கடைபிடியுங்கள் என குர்ஆனும் ஹதீசும் தெளிவாக கூறி இருக்க பஜ்ருக்கு 20 நிமிடங்கள் முன்னால் சாப்பிடுவதை நிறுத்தி சூரியன் மறைந்த பின்னர் 5 நிமிடங்கள் கழித்தே நோன்பைத் துறப்பது சுன்னத்-இபாதத், 7:55,205 இறைக் கட்டளைகளுக்கு முரணாக, அவற்றை நிராகரித்துவிட்டு கூட்டு துஆ, கூட்டு திக்ர் சுன்னத்-இபாதத் என்று காலங்காலமாக நடை முறைப்படுத்துவதோடு, அதே வரிசையில் பிறையைக் கண்ணால் பார்ப்பது சுன்னத்-இபாதத் என அடம் பிடிப்பதில் அர்த்தம் உண்டு. ஆனால் இவை அனைத்தும் சுன்னத்-இபாதத் அல்ல அன்றைய நடைமுறையில் இருந்த “ஆதத்’ எனக் கூறும் ஜாக்கினரும், ததஜவினரும் பிறையைக் கண்ணால் பார்ப்பது சுன்னத்-இபாதத் என்று கூறுவதில்தான் அர்த்தம் இல்லை; மடமையாகும்.

பிறையைக் கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்பதற்கு அவர்கள் 8.8.2010 அன்று எடுத்து வைத்த ஆதாரங்கள் அனைத்தும் 1431 வருடங்களுக்கு முன்னர் பிறையைக் கண்ணால் பார்த்ததைக் கூறும் ஹதீஸ்களையே. ஏதோ அன்று நபி(ஸல்) கணக்கீட்டின் மூலமும் மாதம் பிறப்பதை அறிந்தார்கள் என்று நாம் சொல்லுவது போலும், அது உண்மையல்ல என்று நிலை நாட்ட அன்று கண்ணால் பார்த்ததைக் கூறும் ஹதீஸ்களை அடுக்கினார்கள் போலும். நாம் என்ன கூறுகிறோம் என்பதைப் புரியாமல் அன்றைய நாளை வீணாக்கினார்களே அல்லாமல், அரபி தெரிந்த ஆலிம்கள் மட்டுமே மார்க்கத்தைச் சரியாக விளங்க முடியும்;  அரபி தெரியாதவர்கள் விளங்க முடியாது என்று அடிக்கடி கூறி, வந்திருந்த மக்களை மூளை மழுங்கச் செய்து ஏமாற்றி அவர்களைக் குழப்பத்தில் ஆக்கினார்களே அல்லாமல், தங்கள் கூற்றுக்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஒன்றையும் தரவில்லை.

அவர்கள் கொடுத்த ஆதாரங்கள் அனைத்தும் சிந்திப்பவர்களைச் சிரிக்க வைத்தனவே அல்லாமல், அவர்கள் கூறுவது போல் பிறை பார்ப்பது சுன்னத்-இபாதத் என ஏற்க முடியவில்லை. உதாரணமாக அவர்களது ஒரு ஆதாரம்.

பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள்; பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளை, ஒளூ இல்லாமல் தொழுகை இல்லை; கலிமா சொல்லாமல் ஒருவர் சுவர்க்கம் நுழைய முடியாது என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளையைப் போன்றதே. எனவே ஒளூ செய்வது இபாதத் என்பது போல், கலிமா சொல்வது இபாதத் என்பது போல், பிறை பார்ப்பதும் இபாதத்தே என முழங்கினார் ஒரு மதனீ. ஆலிம் களுக்கு மட்டுமே மார்க்கம் விளங்கும் என்ற அவர்களது மூடக்கூற்றை அப்படியே கண்மூடி ஏற்று அவர்கள் பின்னால் செல்லும் அப்பாவிகள் இதை ஏற்கலாம். தங்கள் சுய புத்தியை இந்தப் புரோகிதர்களிடம் அடகு வைக்காமல் சிறிது சிந்திப்பவனும் இந்தக் கூற்றிலுள்ள மடமையை விளங்கிக் கொள்வான். அதாவது ஒளூ செய்வது இபாதத்-மார்க்கத்திற்கு உட்பட்டதே. அதனால் தொழும் ஒவ்வொரு வரும் கண்டிப்பாக ஒளூ செய்ய வேண்டும்.

ஒருவர் ஒளூ செய்துவிட்டு, தான் ஒளூ செய்துவிட்டதாக மற்றவர்களுக்கு கூறினால், அந்த மற்றவர்கள் ஒளூ செய்யாமலேயே தொழ முடியுமா? அவர் ஒளூ செய்து கொண்ட செய்தி மற்றவர்களுக்குக் கிடைத்து, அதுவே போதும் என நினைத்து ஒளூவில்லாமல் தொழுதால் அந்தத் தொழுகை கூடுமா? இந்தச் சாதாரண அறிவும் இவர்களுக்கு இல்லையா? அதேபோல் ஒருவர் கலிமா சொல்லி விட்டால், தான் கலிமா சொன்னதாக அறிவித்து விட்டால், அந்தச் செய்தி கிடைத்த அனைவரும் கலிமா சொல்லாமலேயே சுவர்க்கம் புகமுடியுமா? இந்தச் சாதாரண அறிவும் அவர்களுக்கு இல்லையா?

உண்மையில் பிறை பார்ப்பது சுன்னத்-இபாதத் அதைப் பார்த்த பின்னர்தான் நோன்பு நோற்க வேண்டும். அப்போதுதான் நோன்பு நிறைவேறும் என்றிருந்தால், நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் பிறை யைப் பார்த்த பின்னரே நோன்பு நோற்க வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பார்கள் என்ற அற்ப அறிவும் இவர்களுக்கு இல்லையா? அன்று நபி(ஸல்) அவர்களது காலத்தில் காலக் கணக்கினை அறிய பிறையைக் கண்ணால் பார்த்தது போல், நேரக் கணக்கினை அறிய சூரியனைக் கண்ணால் பார்த்தே தொழுது வந்தார்கள். பிறை பார்த்து நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் எப்படிக் கட்டளையிட்டார்களோ, அதுபோலவே ஐங் கால தொழுகைகளைத் தொழவும் கட்டளையிட்ட பல ஹதீஸ்களை பார்க்க முடிகிறது. அங்கும் ரஅய்த்து என்ற அரபி பதமே காணப்படுகின்றது.

பிறையைக் கண்ணால் பார்ப்பது போல், சூரியனையும் கண்ணால் பார்த்து தொழும் நிலை, நேரம் காட்டும் கருவியான கடிகாரம் கண்டு பிடிக்கும் வரை நீடித்தது. எப்போது கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதிருந்து சுய சிந்தனையாளர்கள் சூரியனைப் பார்த்து தொழுவதைக் கைவிட்டு கடிகாரம் பார்த்துத் தொழ ஆரம்பித்தார்கள்.
அப்போதும் இப்புரோகிதர்கள், இன்று பிறையைப் பார்ப்பதைக் கைவிட்டு, கணினி கணக் கீட்டின்படி மாதம் பிறப்பதை மிகமிகத் துல்லிய மாக அறிந்து அதன்படி செயல்படுவதை மறுத்து எப்படியெல்லாம் கூக்குரலிடுகிறார்களோ, சுன்னத்திற்கு மாற்றம், பித்அத், வழிகேடு, குஃப்ர், ´ர்க் என்றெல்லாம், முழங்குகிறார்களோ அப்படிப்பட்ட முழக்கங்களை அன்றும் எழுப்பிக் கடுமையாக எதிர்த்தவர்கள்தான். கடைசிவரை அவர்கள் திருந்தவில்லை காலமே அவர்களைத் திருத்தியது. இன்று சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் கூட தொழுகை, நோன்பு கால அட்டவணை என தகவல் பலகைகள் தொங்குவதைப் பார்க்கலாம்.

அன்று சூரியனைப் பார்த்து தொழுவதைக் கைவிட்டு, கடிகாரம் பார்த்துத் தொழுவதை அப்படிக் கடுமையாக எதிர்த்துப் போராடியவர்கள், இன்று சூரியனைப் பார்த்துத் தொழுவதைக் கைவிட்டதை எப்படி நியாயப்படுத்தி 8.8.2010 ஜாக் தலைமையகத்தில் பேசினார்கள் தெரியுமா? சூரியனுக்கு ஒரு சட்டமாம். அதாவது சூரிய னைப் பார்த்து நேரத்தை அறிந்து தொழுவது சுன்னத்-இபாதத் இல்லையாம். பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்வது மட்டுமே சுன்னத்-இபாதத்தாம். இதற்கு அவர்கள் கொடுத்த பெரிய ஆதாரம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் விட்ட தொழுகைகளை மீட்ட வேண்டியதில்லை; அத ற்கு மாறாக நோன்பை மீட்ட வேண்டும் என்று கூறும் மார்க்கச் சட்டமாம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதானோ? பார்த்தீர்களா? எதற்கு எது ஆதாரம்? இப்புரோகிதர்கள் கூறுவது வேடிக்கையாக இல்லையா? பெண்களைப் போல் ஆண்களுக்கும் மாத விடாய் உண்டு என சொல்ல வருகிறார்களா? இல்லை என்றால் பெண்கள் மட்டுமே சூரியனைப் பாராமல் கடிகாரம் பார்த்துத் தொழலாம். ஆண்கள் இன்றும் சூரியனை மட்டுமே பார்த்துத் தொழவேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்! வற்புறுத்துவார்களா? அல்குர்ஆன் 6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 16:12, 21:33, 29:61, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5 ஆகிய 13 இடங்களில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒரே சட்டம் தான் என்று நெத்தியடியாகக் கூறிக்கொண்டிருக்க இப்புரோகிதர்கள் சூரியனுக்கு ஒரு சட்டம், சந்திரனுக்குப் பிரிதொரு சட்டம் எனப் பிதற்றி தங்களின் புரோகிதத் தொழிலை வளர்க்க முற்படுகிறார்களே, இவர்கள் அல்லாஹ்விடம் சம்பளத்தை எதிர் பார்த்து மார்க்கப்பணி புரிந்த நபிமார்களின் வாரிசுகளா? அல்லது மக்களிடம் சம்பளம் எதிர்பார்த்து மார்க்கத்தை மதமாக்கி, மதப்பணி புரிந்த அபூ ஜஹீல் போன்றோரின் வாரிசுகளா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

இவர்கள் அபூ ஜஹீலின் வாரிசுகளாக இருக்கப்போய்தான் சுமார் 65 இறைவாக்குகளுக்கு மேல் கண்டித்துக் கூறியும் அவற்றை நிராகரித்து மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சந்திரனுக்கு ஒரு சட்டம், சூரியனுக்குப் பிரிதொரு சட்டம் என பிதற்றும் இப்புரோகிதர்கள் அதிலும் பொய்யர்களே என் பதற்கு இதோ ஆதாரம். சந்திரனுக்கு ஒரு சட்டம், சூரியனுக்கு பிரிதொரு சட்டம், அதனால் தொழுகை நேரங்களை அறிய சூரியனைப் பார்க்காமல் கடிகாரம் பார்த்துத் தொழலாம்; ஆனால் பிறையைப் பார்க்காமல், கணினி கணக்கீட்டின்படி நோன்பை ஆரம்பிக்கக் கூடாது என்று பிதற்றும் இப்புரோகிதர்கள் நோன்பை ஆரம்பிப்பது சூரிய வைகறையைப் பார்த்தா? அல்லது கடிகாரத்தில் நேரம் பார்த்தா? அதேபோல் நோன்பு துறப்பு சூரிய மறைவைப் பார்த்தா? அல் லது கடிகார நேரம் பார்த்தா? நோன்பிற்கு ஒரு சட்டம்; தொழுகைக்குப் பிரிதொரு சட்டம் என பிதற்றுகிறவர்கள் அந்த நோன்பின் சட்டப்படி நோன்பு நோற்பதையும், துறப்பதையும் சூரிய வைகறையையும் மறைவையும் பார்த்து அல்லவா கடைபிடிக்க வேண்டும். அப்படியா கடைபிடிக்கிறார்கள்? இல்லையே! சூரியனைப் பார்க்காமல் கடிகாரம் பார்த்து அல்லவா செயல்படுகிறார்கள். இவர்கள் வாங்கும் சம்பளத்திற்காக வாய்க்கு வந்தவாறு உளறுகிறார்கள்; மவ்லவிகளுக்கு மட்டுமே மார்க்கம் விளங்கும் என கண்மூடித்தனமாக நம்பும் அவர்களது பக்தர்களே இந்த உளறாட்டங்களை அப்படியே ஏற்று அதன்படி நடந்து நரகை அடைந்து அங்கு ஞானம் வந்து பிதற்றுவார்கள் என்பதை அல்குர்ஆன் 33:36, 66,67,68 இறைவாக்குகள் நெத்தியடியாகக் கூறிக் கொண்டிருக்கின்றன.

ஆக 8.8.2010 ஜாக் தலைமையகத்தில் அவர்கள் வீணாக்கிய பகல் பொழுதில் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது சுன்னத்-இபாதத் என்பதை நிலைநாட்ட குர்ஆன், ஹதீஸிலிருந்தோ, பகுத்தறிவு ஏற்கும் அளவிலோ எந்த ஆதாரத்தையும் தரவில்லை. தங்களின் புரோகிதத் தொழில் அம்பலப்பட்டுப் போய்விடுமே என்ற நடுக்கத்தில் அவர்கள் தங்கள் உளறாட்டங்களையே எடுத்து வைத்தனர் என்பது உறுதியாகிறது. நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் அவர்களை இவ்வாறு நடுங்க வைத்தன என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பிரயாணத்திற்கு நவீன வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்டபோது, வானொலி கண்டுபிடிக்கப்பட்டபோது, தொலைத் தொடர்பு கண்டு பிடிக்கப்பட்ட போது, ஒலி பெருக்கி கண்டு பிடிக்கப்பட்டபோது, தொலைக்காட்சி கண்டு பிடிக்கப்பட்டபோது இப்படி ஒவ்வொரு அறிவியல் நுட்பங்கள் வெளியானபோதெல்லாம் அவற்றை மறுத்து இப்புரோகிதர்கள் அலறியதை மக்கள் அறிவார்கள். காரணம் அல்லாஹ்வின் பெயரால் மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்ப்பதோடு, அவர்களை நரகில் தள்ளும், ஷைத்தானின் ஏஜண்டுகளாக அவர்கள் செயல்படுவது வெளிச்சத்திற்கு வந்து தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்ற அச்சமே! இது அல்லாமல் வேறு காரணம் எதுவும் இல்லை.

அடுத்து, அன்று அரபி மொழி கற்ற மவ்லவிகள் மட்டுமே மார்க்கத்தைச் சரியாக விளங்க முடியும். குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளைப் பார்த்து மார்க்கத்தை விளங்க முடியாது என்று மீண்டும், மீண்டும் அடுத்தடுத்து எடுத்து வைக்கப்பட்டது. இதற்கு அவர்கள் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஒரேயொரு ஆதாரத்தையும் எடுத்துத் தராமல் அவர்களின் சொந்தச் சரக்கையே அரங்கேற்றினர். அல்லாஹ் அல்குர்ஆனை மனிதர்களுக்கு விளக்கி அருளியதாக எண்ணற்ற இறைவாக்குகள் நெத்தியடியாகக் கூறிக்கொண்டிருக்க அவை அனைத்தையும் 2:39 இறைவாக்குக் கூறுவது போல் நிராகரித்து விட்டு அல்குர்ஆன் மரதஸாவில் சில வருடங்கள் ஓசி-தெண்டச்சோறு சாப்பிட்டு மவ்லவி புரோகித பட்டம் வாங்கியவர்களுக்கே விளங்கும் என்று கூறும் இந்த மவ்லவிகளிடம் ஷைத்தான் எந்த அளவு ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதை அல்குர்ஆனை அவர்களுக்குத் தெரிந்த மொழியில் படித்து விளங்குகிறார்களே அறிய முடியும். இப்புரோகிதர்களின் மூடத்தனமான பிதற்றல்களை அப்படியே கண்மூடி ஏற்று அல்குர்ஆனை தங்களுக்குத் தெரிந்த மொழியில் நேரடியாகப் படித்து விளங்க முற்படாத மூடர்களே இந்த முல்லாக்களின் அறிவீனமான பேச்சை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் சென்று நரகில் வீழ்வார்கள்.

சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனப் பிரிக்கவோ, ஆலிம்களுக்கு மார்க்கத்தில் அதிகாரம் உண்டு; அவர்களின் வழிகாட்டல்படி நடக்க வேண்டும் என்றோ ஒரேயொரு குர்ஆன் வசனத்தை, அல்லது ஹதீஸை இந்த மூட முல்லாக்களால் காட்ட முடியுமா? இவர்கள் புரோகிதக் கல்வி கற்று மவ்லவி பட்டம் பெற்று வெளி வருகிறார்களே இந்த மதரஸாக்களுக்கு குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உண்டா? நபி(ஸல்) அவர்கள் இப்படி நூறு, இருநூறு மாணவர்களை கூட்டி அவர்களுக்கு ஓசியில் சாப்பாடு போட்டு கல்வி கற்றுக்கொடுத்த ஆதாரம் இவர்களிடம் உண்டா?  நபி(ஸல்) அவர்களது காலத்தில் அவர்களது பாட்டனாரின் பாட்டனார் குசை என்பவர் கி.பி.440ல் உருவாக்கிய “தாருந்நத்வா’ என்ற புரோகித மதரஸா இருந்ததை நபி(ஸல்) அவர்கள் இழுத்து மூடி தரைமட்டமாக்கினார்கள் என்பதற்கே ஆதாரம் இருக்கிறது. அனைத்து நபிமார்களின் சமூகங்களை வழிகெடுத்து ஒரே நேர் வழியை பல கோணல் வழிகளாக்கி அதாவது பல மதங்களை உருவாக்கி மனித சமுதாயத்தை நரகில் தள்ளும் கொடும் பாதகர்கள் இந்த மதகுருமார்கள் என்பதற்கே எண்ணற்ற ஆதாரங்கள் அல்குர் ஆனில் கிடைக்கின்றன.

யார் தன்னை மார்க்கம் கற்ற மேதை-மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவன்-மத குரு என பிதற்றுகிறானோ அவன் 53:32, 4:49 சுட்டிக் காட்டுவதுபோல் வடிகட்டிய மூடன் -ஜாஹில் -அபூ ஜஹீலின் வாரிசு என்பதே குர்ஆன் கூறும் உண்மையாகும். அல்லாஹ், இப்படி கற்றறிந்த மேதைகள்-மதத்தில் அதிகாரம் பெற்றவர்கள்-மதகுருமார்கள் எனப் பீற்றியவர்களை ஒரு போதும் நபியாகத் தேர்ந்தெடுக்கவில்லை; சீர் திருத்தவாதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதே அல்குர்ஆன் கூறும் உண்மையாகும். அரபியில் சகல கலைகளையும் கற்று “அபுல் ஹிக்கம்’ என மக்களால் போற்றப்பட்ட தன்னை விட்டுவிட்டு, போயும் போயும் ஆடு மேய்க்கும் ஒரு சாதாரண மனிதனையா அல்லாஹ் நபியாகத் தேர்ந்தெடுப்பது என்ற கடுமையான ஆத்திரம், பொறாமை காரணமாகவே அபூ ஜஹீல் சத்தியத்தை மறுத்தான்.

மிகமிகச் சாதாரணமானவர்களை, பெரும்பாலும் ஆடு மேய்ப்பவர்களையே அல்லாஹ் தனது தூதர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்களே மக்களுக்கு மார்க்கத்தை-நேர்வழியைப் போதித்ததற்கே குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இருக்கிறது. அரபி மொழி கற்றவர்கள், மார்க்கம் கற்ற மேதை கள், பேரறிஞர்கள் எனத் தங்களைத் தாங்களே புகழ்ந்து பீற்றிக் கொண்டவர்களை அல்லாஹ் நபியாகவோ, சீர்திருத்தவாதியாகவோ நேர்வழியைப் போதிப்பவர்களாகவோ ஒருபோதும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை இந்த மூட முல்லாக்கள் உணர்ந்து கொண்டால் அது அவர்களையும், அவர்களை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்பவர்களையும் நரகிலிருந்து காப்பாற்றும்.

மற்ற மதங்களிலுள்ள மதகுருமார்கள் அவர்களை நம்பியுள்ள மக்களை வழிநடத்திச் செல்வது போல், எங்களுக்கும் முஸ்லிம்களை வழிநடத்திச் செல்லும் உரிமை உண்டு எனப் பீற்றுகிறார்களே! மற்ற மதங்களிலுள்ள மத குருமார்கள் தங்கள் பின்னால் வரும் மக்களை நேர்வழியில் அழைத்துச் செல்கிறார்களா? அல்லது பித்அத், குஃப்ர், ஷிர்க் இவற்றை நேர்வழியாகப் போதித்து அந்த மக்களை நரகிற்கு இட்டுச் செல்கிறார்களா? சொல்லுங்கள் மவ்லவிகளே!

அப்படியானால் மற்ற மதங்களிலுள்ள மத குருமார்கள் தங்களை நம்பியுள்ள மக்களை வழி கேட்டில் இழுத்துச் சென்று நரகில் தள்ளுவது போல், நாங்களும் முஸ்லிம்களை வழிகேட்டில் இழுத்துச் சென்று நரகில் தள்ளுகிறோம் என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்களா? எனவே இதர மதங்களிலுள்ள மத குருமார்களின் உதாரணங்களையோ, உலகியல் கல்விகளில் மனித இனத்தைச் சேர்ந்தவர்களே ஆய்வு செய்து எழுதி வைத்துள்ளதை மக்களுக்குப் போதிக்க ஆசிரியர்கள் தேவைப்படுவது போல், அல்லாஹ் மனிதர் களுக்கென்றே விளக்கியதை மேலதிகமாக விளக் கும் பேர்வழிகள் என்று ஆதாரம் காட்டாமல், தங்களுக்கு மார்க்கத்தில் ஆலிம்கள்-மவ்லவிகள் என்ற நிலையில் அதிகாரம் உண்டு என்பதற்கு ஒரேயொரு குர்ஆன் வசனத்தையோ, அல்லது ஒரேயொரு ஹதீஸையோ ஆதாரம் தரட்டுமே பார்க்கலாம். 1983லிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்று 2010 வரை அவர்களால் ஒரு குர்ஆன் ஆயத்தையோ, ஒரேயொரு ஹதீஸையோ தர முடியவில்லை. அப்படி ஒரேயொரு ஆதாரமும் இல்லாமல் இந்த மவ்லவிகள் மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என மார்தட்டிக் கொள்வது அபூஜஹீலின் மூடத்தனமான வாதமாக இருக்குமே அல்லாது உண்மையாக இருக்காது.

மேலதிக விளக்கங்களுக்கு முழுக்க முழுக்க குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் மட்டுமே கொண்டு “முஸ்லிம் மத குருமார்களின் புரோகித மாயை மற்றும் லீலைகள்’ என்ற தலைப்பில் “இயக்கங்களால் சமுதாயத்திற்கு பலமா? பலவீன மா?’ “சர்வதேச தலைப்பிறை’ “மார்க்கப் பணிக்கு கூலி (சம்பளம்) அனுமதிக்கப்பட்டதா?’ “அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் விளங்குமா? அல்லது மவ்லவிகளுக்கு மட்டும் விளங்குமா?’ போன்ற நான்கு உப தலைப்புகளில் 80 பக்கங்கள் மலிவு விலையாக ரூ.15/-க்கு மே. 2009ல் ஜமாஅத் அல் முஸ்லிமீன், கோட்டார், நாகர்கோவில் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலை வாங்கி பக்கத்தில் அல்குர்ஆன் மொழி பெயர்ப்பையும் வைத்துக்கொண்டு அந்நூலில் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நேரடியாகச் சிந்தனையோடு படித்து விளங்குகிறவர்கள், நாங்கள்தான் மவ்லவிகள், அரபி மொழி கற்ற ஆலிம்கள் என ஆணவத்தோடு பிதற்றும் இந்த மவ்லவிகளைவிட கேடுகெட்ட ஜன்மம்-படைப்பு வானத்தின் கீழ் உண்டா? இல்லவே இல்லை என்பதைச் சுயமாகவே விளங்கி அவர்களைப் புறக்கணித்து நேரடியாக மார்க்கத்தை, அந்த மவ்லவிகளை விட திறம்பட விளங்கி அதன்படிச் செயல்பட முடியும். (வசதி இல்லாதவர்கள் அந்நூலை இலவசமாக அனுப்பி வைக்க ஒரு தபால் அட்டை முழு முகவரியுடன் அனுப்பி வைக்கவும்) அல்லாஹ் அப்படிப்பட்ட ஒரு நேர்வழி சமுதாயத்தை இந்த ஹிஜ்ரி 15ம் நூற்றாண்டில் உருவாக்கி இஸ்லாம் மீண்டும் மறுமலர்ச்சி அடைய, முஸ்லிம்கள் 3:139, 24:55 இறைவாக்குகள் கூறுவது போல் பயமோ, துக்கமோ இல்லாத மேன் மக்களாகவும், ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டவர்களாகவும் திகழ அருள் புரிய இந்த ரமழானில் அனைவரும் துஆ செய்ய வேண்டுகிறோம்.

அன்றைய பேச்சில் இன்னொரு அபத்தமான கருத்தும் எடுத்துரைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர் களது காலத்திலும் அமாவாசை இருக்கத்தானே செய்தது. அமாவாசைக்கு அடுத்த நாள் தலைப் பிறை என்றால் அதை நபி(ஸல்) அன்றே அறிவித் திருக்க முடியுமே? ஏன் அறிவிக்கவில்லை? என கேள்வி எழுப்பி அவர்களை நம்பியுள்ள மக் களைத் தடுமாற்றத்தில் விட்டனர். இந்த அறிவீன மான கேள்விக்கு முன்னரே பதில் கொடுத்துள் ளோம். அவர்களோ அரைத்த மாவையே அரைக் கும் அறிவீனமான செயலையே செய்து கொண்டி ருக்கிறார்கள். அமாவாசைக்கு அடுத்த நாள் தலைப்பிறை என்று நாம் என்றுமே கூறியதில்லை. சூரியன், சந்திரன், பூமி மூன்று கோள்களும் நேர்கோட்டில் வந்து (சங்கமம்-Conjunction) அந்த நேர்கோட்டைத் தாண்டியவுடன் புதிய மாதம் பிறந்து விட்டது. அந்நிகழ்வு உதாரணமாக செப். 02 வியாழன் 03 வெள்ளியாக எப்படி ஒரு நொடிப் பொழுதி லும் குறைவான நேரத்தில் மாறுகிறதோ அதே போல் மாதமும் மாறிவிடும்; அமாவாசை போல் சில மணி நேரம் எடுக்காது. சமயங்களில் அமாவாசை மாலை வேலையில் தொடங்கினால் அது அடுத்த நாளே முடியும். சந்திரன் பூமியிலிருந்து இருக்கும் இடைவெளி தூரம் அடிப்படையில் அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் ஆரம்பித்து முடிய நேரம் வேறு படும். அமாவாசையின் ஆரம்ப பகுதி முடியும் மாதத்தின் இறுதிப் பகுதி, மூன்று கோள்களின் சங்கமம் ஏற்பட்ட அடுத்த நொடியே முடியும் மாதத்தின் இறுதிப் பகுதி முடிந்து புதிய மாதத்தின் ஆரம்பப் பகுதி ஏற்பட்டு விடும். சங்கமம் ஏற்படும் நாளில் முடியும் மாதத்தின் இறுதிப் பகுதியும், புதிய மாதத்தின் ஆரம்பப் பகுதியும் கலந்திருப்பதால், அதை புதிய மாதத்தின் முதல் நாளாக எடுக்க முடியாது. எனவே சங்கமம் (Conjunction) நிகழும் நாளுக்கு அடுத்த நாள் பஜ்ரிலிருந்து புதிய மாதம் ஆரம்பிப்பதாகக் கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) அவர்களது காலத்தில் சில மணி நேரம் நீடிக்கும், சமயங்களில் ஒரு நாளின் பிற்பகுதியில் ஆரம்பித்து அடுத்த நாளின் முற்பகுதியில் முடியும் அமாவாசையைப் பற்றித் தெரியுமே அல்லாது மூன்று கோளும் சங்கமம் ஆகும் நொடிப்பொழுது தெரிய வாய்ப்பே அன்று இருக்கவில்லை. அமாவா சையைக் கொண்டு அடுத்த நாள் மாதம் பிறக்கிறது என்பதை நபி(ஸல்) ஏன் கூறவில்லை என்பது இப்போது புரிந்திருக்கும். இன்றிருக்கும் அறிவியல் நுட்பம் அன்று கண்டுபிடிக்கப் படவில்லை.
சகோதரர் முஸ்தபா கமாலும் இந்த தடுமாற்றத்தில்தான் இருக்கிறார். அவரது தவறான கருத்து என்னவென்றால், அமாவாசையோ, அல்லது சூரிய கிரகணமோ முடிந்த பின்னர்தான் புதிய மாதம் துவங்குகிறது என்பதுதான். அதனால் தான் அமாவாசை காலையில் ஆரம்பித்து அன்றைய தினமே முடிந்துவிட்டால் அடுத்த நாள் தலைப் பிறை என்றும், அமாவாசை மாலையில் ஆரம்பித்து அடுத்த நாள் முடிந்தால், அதற்கடுத்த நாள் தலைப்பிறை என்றும் தவறாகக் கூறி வருகிறார்.

நாள் மாறுவது அமாவாசையைக் கொண்டோ, சூரிய கிரகணத்தைக் கொண்டோ அல்ல; சூரியன், சந்திரன், பூமி மூன்றும் நேர்கோட்டிற்கு (சங்கமம்-Conjunction) வரும் நொடிப் பொழுதிலேயே பழைய மாதம் முடிந்து புதிய மாதம் பிறந்து விடுகிறது; அதையே அறிவியலார் புதிய பிறை (New Moon) என் கின்றனர். நாம் ஒரு பிறை-ஒரு கிழமை முழு நாள் 24 மணி நேரத்தைக் கணக்கில் கொண்டு அடுத்த நாள் பஜ்ரிலிருந்து மாதம் ஆரம்பிப்பதை எடுக் கிறோம். அமாவாசை, சூரிய கிரகணம் இவற்றிற் கும் சங்கமம் (ளீலிஐளூற்ஐஉமிஷ்லிஐ) நிகழ்வுக்குமுள்ள வேறு பாட்டைத் திட்டமாக அறிந்து கொண்டால் சகோதரர் முஸ்தபா கமாலின் தடுமாற்றம் தீர்ந்து விடும்.

அடுத்து சகோதரர் கோவை அய்யூப் ஒரு கருத்தை மீண்டும் மீண்டும் கூறினார். ஜாக் சகோதரர்கள் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு, ஹதீஸ்கள் மொழிபெயர்ப்புகள் இவற்றை விலை கொடுத்து வாங்கி பெட்டியில் வைத்துப் பூட்டி விடுவதோடு சரி; அவற்றை எடுத்துப் பார்ப்பதே இல்லை என்று கூறினார். அரபி தெரியாத உங்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்புகளைப் பார்த்து மார்க்கத்தை விளங்க முடியாது என்று திரும்பத் திரும்பக் கூறி, அது அவர்களின் உள்ளத்தில் புரையோடிப் போயிருக்கும் நிலையில், அவர்களுக்கு அம்மொழி பெயர்ப்புகளைப் பார்க்கும் துணிச்சல் ஏற்படுமா? ஒருபோதும் ஏற்படாது. அல்லாஹ் ஆதத்தின் சந்ததிகள் அனைத்து மக்களுக்கும் மார்க்கத்தைத் தெளிவாக விளக்கி இருக்கிறான். அரபி மொழி தெரிந்தவர்கள்தான் குர்ஆனையும், ஹதீஸ்களையும் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர். மார்க்கம் உங்களுக்கும் தெள்ளத் தெளிவாக விளங்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மொழிபெயர்ப்புகளைப் படித்து விளங்க முற்படுங்கள். அல்லாஹ் 29:69ல் வாக்களித்திருப்பது போல், நீங்கள் மார்க்கத்தை விளங்கும் வழிகளை எளிதாக்கித் தருவான் என்று உற்சாகப்படுத்தும் மவ்லவிகள் இருக்கிறார்களா? இல்லையே!

நாங்கள் அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என 4:49, 53:32 இறைக் கட்டளைகளை நிராகரித்துப் பீற்றிக் கொள்ளும் ஜாக் மத்ஹபினர் அதில் பொய்யர்களே என்பதை அன்று 8.8.2010ல் ஜாக் தலைமையகத்தில் சந்தித்த ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஜாக் உறுப்பினரின் வாக்கு மூலமே நிரூபிக்கிறதே. அதாவது அவர் எம்மைப் பார்த்து, பிறை பற்றிய விளக்கம் என்றவுடன் வந்து விட்டீர்களா? என்று கேட்டார். 39:18 இறைக் கட்டளைப்படி யார் சொன்னாலும் அதைக் காது கொடுத்துக் கேட்டு அதில் சரியானதை-அழகானதை எடுத்து நடப்பதே நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் கடமை. இவர்களுக்கே அல்லாஹ் நன்மாராயம் கூறுகிறான். ஆனால் உங்களைப் போன்றவர்கள் எங்களுடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முன் வருவதில்லையே என்று நாம் சொன்னோம்.

இதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? எங்களுக்கு அப்படி கேட்டு சிந்தித்து அறிந்துகொள்ள போதிய திறமையோ, ஞானமோ இல்லையே என்று பதில் அளித்தார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. காலங்காலமாக அரபி கற்ற மவ்லவிகளுக்கே மார்க்கம் விளங்கும் என்ற புரோகிதக் கூப்பாட்டைக் கேட்டு கேட்டு அவரது உள்ளம் மழுங்கி விட்டது. அரபி தெரியாத தனக்கு மார்க்கத்தை விளங்கும் ஆற்றல் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் அவர் இருக்கிறார். ஜாக் மத்ஹபில் உறுப்பினராக இருக்கும் அனைவரின் நிலை இதுதான். ஏன்? ததஜ மத்ஹபில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரின் நிலையும் இதுதான். ஆம்! அவர்கள் அரபி கற்ற மவ்லவிகள்(?) சொல்வதை அப்படியே வேதவாக்காக(?) எடுத்துச் செயல்படுபவர்கள். அதனால் தான் பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள்.

Previous post:

Next post: