அல்லாஹ் உருவம் உள்ளவனா? அல்லது உருவம் அற்றவனா?

in 1996 மார்ச்,ஐயமும்! தெளிவும்!!,கேள்வி-பதில் (தொகுப்பு)

ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: இணையற்ற அல்லாஹ் உருவம் உள்ளவனா? அல்லது உருவம் அற்றவனா? விரிவாக ஆதாரத்துடன் விளக்கவும். இப்னு மசூத், கடையநல்லூர்.

தெளிவு: தமிழில் கடவுள் என்று இறைவனை அழைப்பதுண்டு. கட+உள்= கடவுள் அதாவது உள்ளத்தைக் கடந்தவன். அவனை எந்நிலையிலும் உருவகப்படுத்த முடியாதவன் என்ற கொள்கையை கொண்டது இஸ்லாம். அல்லாஹ் ஒருவன்; அவன் எத்தேவையுமற்றவன், தனித்தவன், மனித உருவில் உருவகப்படுத்த முடியாது. ஏனெனில் அவன் எவருக்கும் மகனாக பிறக்கவுமில்லை; அவன் எவனையும் பெற்றெடுத்தவனுமில்லை. தன்னிகரற்றவன். (பார்க்க 112 அத்தியாயம்) அவனை எவரும் பார்க்க முடியாது. எப்பார்வையும் அவனை அடைய முடியாது (அல்குர்ஆன் 6:103) என்ற கொள்கையில் ஏகத்துவ இறைவனை-அல்லாஹுவை- நம்புவதுதான் இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையாகும்.

அல்லாஹ் உருவமற்ற அரூபி எனக் கூற முடியாது. ஏனெனில் ரசூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹுவின் நல்லடியார்கள் அல்லாஹுவை பெளர்ணமி நிலவைக் காண்பது போலக் காண்பார்கள் என்ற அறிவிப்பை அபூஹுரைரா, அனஸ் பின் மாலிக்(ரழி-அன்குமா) அறிவிக்க புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத், ஸஹீபா ஹம்மாம் போன்ற நூல்களில் பதிவாகியுள்ளது. அல்லாஹுவின் உருவத்தை மறுமையில் மட்டுமே, அல்லாஹுவின் நல்லடியார்களால் மட்டுமே பார்க்க முடியும். இவ்வுலகில் எவராலும் பார்க்க முடியாது.

சிறந்த திருத்தூதர்களில் ஒருவரான மூஸா(அலை) அவர்கள் அல்லாஹுவை நேரில் காண வேண்டியபோது கூட அல்லாஹுவின் வல்லமை மிக்க ஒளியை மட்டுமே காண முடிந்தது. அதனையும் அவரால் முழுமையாகக் காண முடியாமல் மயக்கமுற்று விழுந்தார்.(அல்குர்ஆன் 7:144)

இந்த ஆதாரங்கள் அனைத்தும் அல்லாஹுவுக்கு ஓர் உருவமுண்டு. அது எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணர முடியாது என்பதைத் தெளவுபடுத்துகின்றன. அல்லாஹுவின் வல்லமைகளை இந்துமத சகோதரர்கள் தனித்தனிக் கடவுள்களாக உருவகப்படுத்தி உருக்கொடுத்து சிலைகளாக்கி வணங்குகின்றனர். அவ்விதம் உருவகப்படுத்துவதையோ,அல்லாஹுக்கு உதாரணங்கள் கற்பிப்பதையோ அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிருக்கிறது.

நீங்கள் அல்லாஹுவுக்கு உதாரணங்களை அவனது அழகிய திருநாமங்களின் பொருள்களை அறிவதன் மூலம் அறியலாம். அவ்வல்லமைகள் அனைத்தும் ஒன்றானவன்தான் அல்லாஹ் என்பதை ஓரளவு விளங்கலாம். முழுமையாக அவனது உருவத்தைப் பார்க்க மறுமை நாள் வரை நாம் காத்திருக்க வேண்டும். அதுவும் அவனது ஆணைப்படி வாழ்ந்த நல்லடியார்களாக இருக்க வேண்டும். அதற்கு அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் தந்தருள்வானாக! அமீன்.

Previous post:

Next post: