ஐயமும்! தெளிவும்!!

in 2010 அக்டோபர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: ஷைத்தானை கழுதைகள் பார்க்க முடியும் என ஹதீஸில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறுகிறார். அப்படி இருந்தால் தயவு செய்து அந்த ஹதீஸை தெரிவிக்கவும்.
முகமது அன்சாரீ, திருச்செந்தூர்.

தெளிவு : “இரவில் நாய் குலைப்பதையும் கழுதை கத்துவதையும் செவியேற்றால், அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டுப் பாதுகாவல் தேடுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவை நீங்கள் பார்க்காததை (ஷைத்தானை)ப் பார்க்கின்றன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபீர்(ரழி), நூல்: அபூதாவூது.

————————————————-

ஐயம்: மனிதர்களில் அமல்கள் பதிவு செய்யப்படாமலும் சில வர்க்கத்தினர் இருக்கின்றனரா?
ஷேக் அலி, சென்னகரம்பட்டி.

தெளிவு : வர்க்கத்தினர் என தாங்கள் வினாவில் குறிப்பிட்டுருப்பதன் பொருள் எமக்குத் தெரிய வில்லை. இருப்பினும் அமல்கள் பதிவு செய்யப் படாத மனிதர்கள் இருக்கின்றனரா என்பது தாங்களின் வினா என எடுத்துக் கொண்டு பதிலளிக்கின்றோம்.

ஆம்! சிலருடைய அமல்கள் பதியப்படுவதில்லை என்பதைத் தெரிவிக்கும் ஹதீஸ் ஒன்றை கீழே எழுதியுள்ளோம்.
“”மூவரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டிருக்கிறது”.
1. தூங்குபவர் விழித்தெழும் வரையில்
2. குழந்தை வாலிபப் பருவத்தை அடையும் வரையில்
3. பைத்தியம் பிடித்தோர், தெளியும் வரையில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்.
அறிவிப்பவர்: அலீ(ரழி), நூல்:அபூதாவூது திர்மிதி.

————————————————

ஐயம் : மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது விந்து வெளியாகும் முன்பாகவே, ஆண்குறியை வெளியே எடுத்துவிட்ட நிலையில் குளிப்பு கடமையாகுமா? (எடுத்த பின் மீண்டும் உடலுறவு கொள்ளவில்லை என்பதையும் தெரி விக்கிறேன்). சிராஜுத்தீன், சங்கரன்கோவில்.

தெளிவு : இது போன்ற சந்தர்ப்பங்களில் குளிப்பு கடமை இல்லை உளூ செய்தால் போதும் என்பதை கீழே உள்ள ஹதீஸ் தெரிவிக்கிறது.

“அன்ஸாரி ஒருவரை அழைத்து வருமாறு நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பினார்கள். அன்ஸாரி வந்த பொழுது அவரது தலையிலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. (அதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், “உம்மை நாம் அவசரப்படுத்தி விட்டோம் போலிருக்கிறதே” என்று கூறினார்கள். “”ஆம்! யாரசூலுல்லாஹ்” என்றார். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், “நீர் அவசரப்படுத்தப்பட்டால் அல்லது உமக்கு இந்திரியம் வராதிருந்தால் உம்மீது குளிப்பு கடமையாகாது. உளூ செய்வதே உமக்குப் போதுமானதாகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸஈத்(ரழி), நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத்.

இந்த ஹதீஸைப் படித்து தாங்கள் இப்படி கேள்வி கேட்டிருக்கலாம் என நினைக்கிறோம். இந்த ஹதீஸ் பின்னால் மாற்றப்பட்டுவிட்டது. இதன்படி ஆண்குறி பெண் துவாரத்தில் சென்று விட்டால் விந்து வெளியாகாவிட்டாலும் குளிப்பு கடமையாகி விடும்.

———————————————–

ஐயம்: எனது இரண்டு சக்கர வாகனத்தில் (Motor Bike) என்னையும் சேர்த்து 2 நபர்களோ, 3 நபர்களோ பயணம் செய்யலாமா? இதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? ஆனால் 3பேர் பயணம் செய்தால் இங்கே போலீஸ்காரர்கள் பிடித்துச் செல்கின்றார்களே? PKR. தாமரைசெல்வன், நாகபட்டினம்.

தெளிவு: இரு சக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து பயணம் செல்லக்கூடாது என்பது மோட்டார் வாகன விதிமுறைகளிலுள்ள அரசின் சட்டமாகும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் காவல் துறையினரால் வழக்குப் பதியப்படுவார்கள். இதற்குரிய தண்டனையை நீதிமன்றமே வழங்கும்.

ஆனால் Bike ல் 3 பேர் அமர்ந்து செல்லவோ இரு நபர்கள் அமர்ந்து செல்லவோ இஸ்லாம் அனுமதிக்கிறது. இச்சலுகை இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தால் அதற்கு அந்நாட்டின் சட்டவிதிகளுக்கேற்ப தண்டனை வழங்கப்படலாம். Bike ல் இருவரோ மூவரோ பயணம் செய்வதற்கு ஆதாரமாக கீழே உள்ள ஹதீஸ்களைத் தருகின்றோம்.

“உஃபைர் என்னும் கோவேறு கழுதையின் மீது நபி(ஸல்) அவர்களுக்குப்பின் நானும் அமர்ந்து சென்றேன்” அறிவிப்பவர்: முஆத்(ரழி), நூல்: அபூதாவூத்.

“நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபொழுது, அப்துல் முத்தலிபுடைய ஆண் மக்கள் பலர் முன் சென்று நபி(ஸல்) அவர்களை வரவேற்றனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், அவர்களில் ஒருவரைத் தமக்கு முன்னும் மற்றவரைத் தமக்குப் பின்னும் அமரவைத்துக் கொண்டார்.” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: புகாரி, நஸாயீ

————————————–

ஐயம்: காஃபிர்கள் இறக்கும் தருவாயிலேயே வேதனை செய்யப்படுவார்களா?
சல்மான், camp : குவைத்.

தெளிவு : ரூஹை கைப்பற்றப்படும் நிலையிலேயே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்பதை 8:50வது வசனம் தெரிவிக்கின்றது.

“மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும்போது, நீங்கள் பார்ப்பீர்களேயானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள் “”எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று.
அல்குர்ஆன் 8:50

————————————

ஐயம்: உங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி, ஃபிர்அவ்ன் நியமித்த சூன்யக்காரர்கள், மோசஸ் செய்த சூனியத்தைப் பார்த்துத்தானே மனம் மாறினார்கள்? அவர்கள் அல்லாஹ்வை இறைவன் என்று மனமாற ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? பதில் தருவீர்கள் என்று நினைக்கிறேன்.
பெனடிக்ட் அலெக்ஸ், தூத்துக்குடி.

தெளிவு: “உங்கள் குர்ஆனல் கூறப்பட்டுள்ளபடி, எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். குர்ஆன் எங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) மட்டும் சொந்தம் அல்ல (“குர்ஆனாகிய) இது உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்று அல்லாஹ் அறிவித்துள்ளான். எனவே அனைத்து மக்களும் நேர்வழி பெற வேண்டும் என்ற நன்நோக்கோடு மட்டுமே குர்ஆன் ஆகிய இந்த நெறிநூலை இறைவன் அருள் புரிந்திருக்கிறான் என உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள்.
“”குர்ஆனில் கூறப்பட்டுள்ள” என்று தாங்கள் தெரிவித்திருக்கும் வார்த்தைப் பிரயோகத்திலிருந்து குர்ஆனை தாங்கள் படித்துள்ளீர்கள் என்பதை அறிய முடிகிறது. ஆனால் கிருத்துவ நம்பிக்கை தங்களிடம் மேலோங்கியிருப்பதால், குர்ஆனைப் படித்தும், அது கூறும் உண்மைகளை அறியாமல் இருக்கிறீர்கள். ஒருக்கால் வேண்டா வெறுப்புடன் படித்திருந்தால், நடுநிலையோடு மீண்டும் கவனமாகப் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதனால் உள்ளது உள்ளபடி உண்மைகளை அறிய முடியும்.

உங்கள் ஐயத்திற்கான தெளிவையும் குர்ஆனிலிருந்தே பெற முடியும். இருப்பினும் இப்போது தங்களின் ஐயத்திற்கான தெளிவைத் தருகிறோம். அதுவும் எமது சுய சிந்தனையிலிருந்தோ, அறிவாற்றலிலிருந்தோ இதனைத் தரவில்லை. குர்ஆனின் 7வது அத்தியாயத்தின் 113வது வசனத்திலிருந்து 126வது வசனம் வரை உங்கள் முன் வைக்கின்றோம். மோசஸ் செய்தது சூன்யம் அல்ல; இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதை முழுமையாக நம்பிக்கைக் கொண்டுதான் அந்த சூன்யக்காரர்கள் முஸ்லிம்களாயினர் என்பதை அறிவீர்கள். இதன் மூலமாக வேண்டா வெறுப்புடன் கிருத்துவ தாக்கத்துடன் தாங்கள் குர்ஆனை அணுகிய தவறையும் உணர்ந்து விடுவீர்கள்.

Previous post:

Next post: