விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2010 அக்டோபர்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : பெருநாள் தினம் திட்டமாக முன் கூட்டியே தெரிந்த நிலையில், சமுதாய ஒற்று மையைக் கருதி பெருநாள் கொண்டாட்டத்தை ஒரு நாளோ, இரு நாளோ தள்ளி ஊரோடு இணைந்து கொண்டாடலாம் என்று நீங்கள் கூறுவது உங்களது சுய கருத்தே அல்லாமல் குர்ஆன், ஹதீஸ் போதனை அல்ல என்று சிலர் உங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். இன்னும் சிலர் நீங்கள் ஜாக் தலைமையகத்தில் 8.8.2010 அன்று நடந்த பிறை பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டதின் தாக்கம் என்கின்றனர். உண்மை நிலை என்ன?
ஷாகுல் ஹமீது, மேலப்பாளையம்.

விளக்கம் : அல்லாஹ் பாதுகாப்பானாக. எந்த நிலையிலும் எமது சுய கருத்தை மார்க்கத்தில் நுழைப்பதை விட்டும் மிகமிக எச்சரிக்கையாகவே இருக்கிறோம். மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள சகல சீரழிவுகளுக்கும் அடிப்படை காரணமே முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கத்தில் (பார்க்க 39:3) மனிதன் தனது சுய கருத்துக்களைப் புகுத்துவதே என்று ஊருக்கு உபதேசம் செய்து விட்டு 2:44ல் அல்லாஹ் கடிந்து கூறுவது போல் எம்மை மறந்து விட ஒரு போதும் துணிய மாட்டோம்.

நாம் கூறுவது எமது சுய கருத்துத்தான் என்ப தற்கு உரிய குர்ஆன் அல்லது ஹதீஸ் ஆதாரத்தைத் தந்து அதாவது நபி(ஸல்) அவர்களே “நேரம் கடந்து விட்டதால் அடுத்த நாள் காலை வரும்படி கட்டளையிட்டார்கள்” என்று ஹதீஸ் ஆதாரத்தைக் காட்டி இவ்வாறு கூறினால், அது சரியாக இருந்தால் நிச்சயமாக அதை ஏற்று எம்மைத் திருத்திக் கொள்ள தயாராகவே இருக்கிறோம். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகளைப் போல் விதண்டா வாதம் செய்ய ஒருபோதும் முற்பட மாட்டோம்.

குறிப்பிட்ட நாளை விட்டு, அடுத்த நாள் பெருநாள் திடலுக்கு வரும்படி நபி(ஸல்) கட்டளையிட்டதாக உள்ள நிகழ்வை ஆதாரமாகக் கொண்டே அவ்வாறு கூறுகிறோம். அந்த நிகழ்வைக் கூறும் ஹதீஸில் நபிதோழர் விடுபடுகிறார். ஒரு தாயியே அறிவிக்கிறார் என வாதிடலாம். அதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று யாரும் கூறினால் அது பரிசீலிக்கப்பட வேண்டிய கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் பெருநாள் தொழுகை பற்றி வந்திருக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அனைத் தையும் பரிசீலிக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் மக்களில் ஆண்கள், பெண்கள், மாதவிடாய் பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஒட்டுமொத்த சமுதாயமும் பெருநாள் திடலில் கொண்டாடி மகிழ்வதையே பிரதானப்படுத்தி இருக்கிறார்கள் என்பது எளிதாக விளங்குகிறதே!

பெருநாள் தொழுகையின் சிறப்புப்பற்றி ஒரேயொரு ஹதீஸையும் பார்க்க முடியவில்லையே! பள்ளி வாசலைத் தவிர்த்து பெருநாள் திடல் வரவேண்டும். மாதவிடாய் பெண்களும் வரவேண்டும்; உரிய ஆடைகள் இல்லாத பெண்கள் இரவல் ஆடை வாங்கி அணிந்து கொண்டு வரவேண்டும், நோன்புப் பெருநாளுக்கு சாப்பிட்டு வரவேண்டும்; ஹஜ்ஜு பெருநாளுக்கு சாப்பிடாமல் வரவேண்டும்; திடலுக்கு ஒரு வழியாக வந்து, வேறு வழியாக வீடு திரும்ப வேண்டும் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் ஒன்று கூடி மகிழ்வதைக் குறிக்கின்றனவா? பெருநாள் தொழுகை தொழுவதைக் குறிக்கின்றனவா? சொல்லுங்கள்.

ஐங்கால தொழுகைகளின் முன், பின் சுன்னத் தான 12 ரகாஅத்துகளை விடாமல் தொழுது வருபவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை கட்டப் படுகிறது. (உம்மு ஹபீபா(ரழி), முஸ்லிம், திர்மிதீ)

இந்த 12 ரகாஅத்துகளையும் விடாமல் தொழுதால் சிறந்த நன்மையுண்டு. தொழாமல் விட்டால் குற்றமில்லை. ஏன் தொழவில்லை என்ற கேள்வியும் இல்லை. பெருநாள் தொழுகை விடயத்தில் இதுபோல் சிறப்பித்துக் சொல்லப்பட்ட ஒரேயயாரு ஹதீஸாவது இருக்கிறதா? நாம் அறிந்தவரை இல்லையே!

அதே போல் ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவதில் பெருத்த நன்மைகள் இருக்கின்றனவே! ஜமாஅத் தொழுகைக்கு வராதவர்களின் வீட்டை கொளுத்தி விட எண்ணுவதாகவும், பெண்கள், பிள்ளைகள் காரணமாக அந்த எண்ணத்தைக் கைவிடுவதாக நபி(ஸல்) அவர்கள் எச்சரித்த ஹதீஸ் காணப்படுகிறதே!

நன்மைகளை அள்ளித்தரக் கூடிய ஜமாஅத் தொழுகையையும், முன், பின் சுன்னத்துகள் 12 ரகாஅத்துகளையும் விடாமல் பேணித் தொழக் கூடியவர்கள் எத்தனை பேர்? அப்படிப் பேணித் தொழுகிறவர்களுக்கு பெருநாள் தொழுகை 2 ரகாஅத்தின் நிலை தெரியும். பெருநாள் தொழுகை ஜும்ஆ நாளில் வந்தால் ஜும்ஆவை தொழாமல் விடலாம் என்பதை ஆதாரமாகக் காட்டி, பெருநாள் தொழுகை கடமையான தொழுகை போன்றது என சிலர் வாதிடலாம். இதுவும் தவறேயாகும். சுற்றுப் புறங்களிலிருந்து பெருநாளுக்காக பெருநாள் திடலுக்கு வந்தவர்கள் மீண்டும் ஜும்ஆவுக்கு வரும் சிரமத்திற்கு ஆளாகும் நிலையை தவிர்க்கவே நபி(ஸல்) அவ்வாறு கூறி இருக்கிறார்களே அல்லாமல் பெருநாள் தொழுகை கடமையான தொழுகை போன்றது அல்ல. “நாங்கள் ஜும்ஆ தொழுவோம்” என்ற நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பே இதை உறுதிப்படுத்துகிறது. நாட்டுப் புறங்களிலிருந்து ஜும்ஆவுக்காக வருகிறவர்கள் மற்ற நாட்களில் தங்களின் ஐங்காலத் தொழுகைகளை எப்படி தினசரி தொழுது கொண்டிருந்தார்களோ, குறிப்பாக ளுஹர் தொழுகையை அதேபோல் வெள்ளியன்றும் தங்கள் பகுதிகளில் நிறைவேற்றுவார்கள் என்றே விளங்க முடிகிறது. மற்றபடி பெருநாள் தொழுகை தொழுதவர்கள் ஜும்ஆ வையும் தொழாமல், ளுஹரையும் தொழாமல் விட்டுவிடலாம் என்ற பொருளில் அல்ல. பெரு நாள் தொழுகை ஒருபோதும் கடமையான தொழுகை நிலையை அடையாது. அப்படியானால் அதை நபி(ஸல்) சொல்லியிருக்க வேண்டுமே அல்லாது வேறு யாரும் 42:21க்கு முரணாக அப்படி விதிக்க முடியாது.
இந்த நிலையில் பெருநாள் தொழுகைக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து அன்றே தொழுதே தீரவேண்டும் என வாதிடுகிறவர்கள் அதற்குரிய ஆதாரத்தை குர்ஆன், ஹதீஸிலிருந்து தரவேண்டும். அதல்லாமல் தங்களின் சுய கருத்தை வெளிப்படுத்திக் கொண்டு அப்பழியை 4:112ல் அல்லாஹ் இழித்துக் கூறுவது போல் எம்மீது போடுகிறார்கள்.

தொழுகை நேரம் கடந்து விட்டதால் நாளை காலை பெருநாள் தொழுகைக்குத் திடலுக்கு வாருங்கள் என நபி(சல்) கூறியிருந்தால் மட்டுமே அவர்களது கருத்து ஏற்கத்தக்கதாகும். நபி(ஸல்) அப்படிக் கூறவில்லை. வருட முசல்லிகள் பெருநாள் தொழுகைக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பார்கள். ரமழான் முசல்லிகள் பிறை 27ஐ கத்ருடைய நாள் என தவறாக நம்பி 26வது நாளை 27வது நாள் என எண்ணி அதிமுக்கியத்துவம் கொடுப்பார்கள். வார முசல்லிகள் ஜும்ஆ தொழுகைக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள். தலைபோகிற காரியமாக இருந்தாலும் ஜும்ஆ தொழாமல் பயணம் புறப்பட மாட்டார்கள். ஆனால் ஐங் கால தொழுகைகளைப் பேணி ஜமாஅத்துடன் தொழுது வருபவர்கள், ஜும்ஆவுடைய நாளில் சாதாரண பயணத்தையும் காலையில் தொடர்ந்து ளுஹரையும், அஸரையும் ஜம்வுகசர் செய்து கொள்வார்கள். மார்க்கம் அப்படித்தான் கூறுகிறது. அதாவது பிரயாணிக்கு ஜும்ஆ கடமை இல்லை என்பதாகும்.

அதேபோல் ஊரில் முகீமாக இருக்கும் போது ஜமாஅத் தொழுகையையும், முன்பின் சுன்னத்து 12 ரகாஅத்துகளையும் விடாமல் பேணித் தொழுகிறவர்கள், ஒருபோதும் பெருநாள் தொழுகைக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். மாறாக முஸ்லிம் ஆண், பெண், சிறுவன், சிறுமி அனைவரும் பெருநாள் திடலில் ஒன்றுகூடி மகிழ்வாக கொண்டாடுவதற்கே அதிமுக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஐங்கால ஜமாஅத் தொழுகைகளிலும், முன், பின் சுன்னத்துகள் 12 ரகாஅத்துகளிலும் பொடு போக்காக இருப்பவர்கள் பெருநாள் தொழுகையில் அதிக ஆர்வம் காட்டுவது ஆச்சரியமான ஒன்றல்ல. 8.8.10 அன்று ஜாக் தலைமையகத்தில் இடம் பெற்ற கருத்தரங்கம் எமக்கு எந்தவித மனமாற்றத்தையும் தரவில்லை என்பதற்கு டிசம்பர் 2000-திலேயே நாம் இக்கருத்தை வெளியிட்டது போதிய ஆதாரமாகும்.

——————————————

விமர்சனம்: நபி(ஸல்) அவர்கள் காலமெல்லாம் இரவுத் தொழுகையாக 8+3 மட்டுமே தொழுது வந்துள்ளார்கள். அந்த தொழுகைகளும் நீண்ட நெடியதாகவே தொழுது வந்துள்ளார்கள். இர வில் நபில் தொழுததாக காண முடியவில்லை. தாங்கள் உபரியாக இரவில் நபில் தொழலாம் என்று கூறுவது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எனத் தெரிந்து கொள்ளலாமா?
MA­ஷப்னம், மதுரை

விளக்கம் : நபி(சல்) அவர்கள் நஃபிலாக உபரியாக தொழுதவை நமக்கு சுன்னத் ஆகும். 17:79ல் அல்லாஹ் நபி(சல்) அவர்களுக்கு தஹஜ்ஜுத் தொழுகை நஃபில்-உபரி என்றே கூறுகிறான். அதேசமயம் அதே தஹஜ்ஜுத் தொழுகை நமக்கு சுன்னத் ஆகும். அதாவது நபி (ஸல்) செய்து நமக்கு வழிகாட்டியதாகும். எனவே நபி(சல்) செய்து காட்டாத ஒரு செயலை சுன்னத் எனக் கூறி நாம் செய்வது பித்அத்தாகும்- வழிகேடாகும். இது நபி(சல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையாகும்.

அதே சமயம் சுன்னத்-நபி வழி எனக் கூறாமல், ஒருவர் சுயமாக உபரியாக, நஃபிலாக தொழுவதை மார்க்கம் தடை செய்யவில்லை என்றே கூறுகிறோம். முஸ்லிம்களில் பெரும்பாலோர் சுன்னத்திற்கும் நஃபிலுக்கும் வேறுபாடு தெரியாமல் தடுமாறுகிறார்கள். நஃபிலை தனது அன்றாட கடமைகளுக்கு பங்கம் விளைவிப்பதாகவோ, மற்றவர்களையும் அப்படித் தொழ ஏவுவதாகவோ, ஜமாஅத்தாகத் தொழுவதோ அனுமதிக்கப்பட்டதல்ல. புகாரீ முதல் பாகம் 731வது ஹதீஸ் சுன்னத்தான தொழுகைகளையே ஜமாஅத்தாகத் தொழுவதை தடுக்கும்போது, நாம் தொழும் நஃபில்-உபரி தொழுகையை எப்படி ஜமாஅத்தாகத் தொழ முடியும்?

—————————————

விமர்சனம் : பள்ளிகளில் தொழுவோர்களிடம் இரவுத் தொழுகை 8+3 மட்டும் தொழுங்கள். 20 ரகாஅத் தொழாதீர்கள் என்று கூறினால், 8 ரகா அத் சுன்னத் மற்ற 12 ரகாஅத் நபில் என்று இருந்து விட்டுப் போகட்டுமே என்கிறார்கள். உங்கள் கூற்றும் இதனை ஆமோதிப்பதுபோல் இருக்கிறதே? M.A ஆஃப்ரீன், மதுரை.

விளக்கம் : புகாரீ 731-ல் ஹதீஸில் சுன்னத்தான ரமழான் இரவுத் தொழுகைக்கு ஜமாஅத் அனுமதி இல்லை என நபி(சல்) நேரடியாகக் கட்டளையிட்டிருக்கும்போது, நஃபிலான தொழுகையை எப்படி ஜமாஅத்துடன் தொழ முடியும்? ஒரு போதும் சாத்தியமில்லை. இதை சென்ற இதழிலும் நாம் தெளிவு படுத்தியுள்ளோம். தனியாக உபரியாக-நஃபிலாக தொழுவதை மார்க்கம் தடை செய்யவில்லை எனும்போது அது 20+3 ஜமாஅத்தாக தொழுவதை ஆமோதிப்பதாக எப்படி அமையும்?

————————————–

விமர்சனம் : நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். இந்த ஆண்டு 9 நாட்கள் மட்டுமே இஃதிகாஃப். 10 நாள் இருப்பதுதானே நபிவழி என்கிறார்கள்! மீதி ஒருநாள் களா செய்ய வேண்டுமா?
A.சலீம் பாட்ஷா, செம்பட்டி

விளக்கம் : பிறை மாதம் 30 நாட்களிலும் முடியும். 29 நாட்களிலும் முடியும். நபி(ஸல்) தமது மனைவிமார்களை விட்டு ஒரு மாதம் ஒதுங்கி இருப்பதாகக் கூறிவிட்டுத் தனித்திருந்தார்கள். 29 நாட்கள் முடிந்தவுடன் இறங்கி வந்தார்கள். மனைவிமார்கள் ஒரு மாதம் என்று கூறிவிட்டு 29 நாட்களில் இறங்கி வந்து விட்டீர்களே எனக் கேட்டதற்கு இந்த மாதம் 29 நாட்க ளுடன் முடிந்துவிட்டது என விடை பகர்ந்தார்கள். அதேபோல் 1431 ரமழான் மாதமும் 29 நாட்களுடன் முடிவுற்றது.

பிந்திய 10 நாட்கள் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்பது பொதுவான ஒரு பேச்சே அல்லாமல் 10 நாட்கள் முழுமையடைய வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்பட்ட தல்ல. மாதங்கள் அனைத்தும் 30 நாட்களைக் கொண்டு நிறைவடைந்தால் மட்டுமே அப்படி பொருள் கொள்ள முடியும்.
மாதம் 30 நாட்களிலும் முடிவடையும்; 29 நாட்களிலும் முடிவடையும் என்பது நபி(ஸல்) அவர்களின் நேரடியான தெளிவான விளக்கமாகும். கடந்த ரமழான் மாதம் 29 நாட்களுடன் முடிவடைந்து விட்டதால் மீதி ஒரு நாளை கழா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இட மில்லை.

———————————–

விமர்சனம் : உலகிலேயே காதியானிகளை முஸ்லிம்கள் என ஏற்றுக் கொள்ளும் ஒரே நபர் அபூஅப்தில்லாஹ் மட்டுமே என ஊடகங்களிலும், வாய்மொழியாகவும் சில மவ்லவிகள் செய்தி பரப்பி வருகின்றனரே? இதற்கு உங்களின் விளக்கம் என்ன? A.கமால், திருச்சி

விளக்கம் : காதியானிகளை மட்டுமா முஸ்லிம்கள் என்கிறோம்.முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு காதியானிகளைவிட தரம் தாழ்ந்து ஷிர்க், குஃப்ர், பித்அத் அனைத்திலும் முங்கிக் குளிப்பவர்களையும், முஸ்லிம்களாகவே இவ்வுலகில் ஏற்றிருக்கிறோம். ஆக தன்னை முஸ்லிம் என்று சொல்லும் அனைவரையும் இவ்வுலகில் முஸ்லிம்களாகவே ஏற்று 2:8-20, 49:14 இறைக் கட்டளைகள் படி நபி(ஸல்) நடந்து காட்டியதை 33:21 இறைக் கட்டளைப்படி ஒப்புக்கொண்டு 21:92, 23:52 இறைக் கட்டளைகள் படி சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்கப் பாடுபடுகிறோம். 2:8 முதல் 20 வரை மற்றும் எண்ணற்ற இடங்களில் முனாஃ பிக்குகள் என்ற நயவஞ்சகர்கள் சிலை வணக்கம் முதல் அனைத்து ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கியிருந்ததைத் தங்கள் கண்களால் நேரில் பார்த்துக் கொண்டிருந்தும், அல்லாஹ் தெள்ளத் தெளிவாக விளக்கியிருந்தும், நபி(ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்கள் முஸ்லிம்கள் இல்லை என ஃபத்வா கொடுக்கத் துணியவில்லை.

காரணம் படைத்த எஜமானனாகிய அல்லாஹ்வே, தீர்ப்பளிக்கும் முழு அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே தீர்ப்பளிப்பதை மறுமைக்கென்று ஒத்திவைத்திருக்கும் நிலையில், தீர்ப்பளிக்கும் அதிகாரமே இல்லாத நாம் எப்படி இவ்வுலகிலேயே தீர்ப்பளிப்பது? அது அல்லாஹ் வின் தனி அதிகாரத்தில் தலையிடும் மாபெரும் குற்றம் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக விளங்கி இருந்தார்கள். எனவே முஸ்லிம் எனச் சொல்லும் யாரையும் முஸ்லிம் இல்லை என்று சொல்லும் துணிச்சல் நபி(ஸல்) அவர்களுக்கு இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்களுக்கே இல்லாத அசாத்திய துணிச்சல்தான் இந்தப் புரோகித மவ்லவிகளுக்கு இருக்கிறது. இவர்களின் இறுதி இருப்பிடம் எதுவாக இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஆம்! இப்புரோகித மவ்லவிகள் 42:21, 49:16 இறைக் கட்டளைப்படி மாபெரும் பாவிகளே! இறை நிராகரிப்பாளர்களே!

இந்த அசாத்தியத் துணிச்சல் அபூ அப்தில்லாஹ்வாகிய எமக்கு இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். எனவே ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி இருக்கும் முஸ்லிம்கள் பற்றிய தீர்ப்பை எஜமானனாகிய, தீர்ப்பு நாளின் அதிபதியாகிய அல்லாஹ்விடமே ஒப்ப டைத்து விட்டு, இவ்வுலகில் முஸ்லிம்கள் என்ற நிலையில் முஸ்லிம் சமுதாயத்தில் இருக்கும் காதியானிகள் முதல் அனைவரையும் முஸ்லிம்கள் என்றே நாம் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிகிறோம்.

Previous post:

Next post: