இஸ்லாமும் செயல்பாடுகளும்
நாங்கள் யார்?
நாங்கள் கொள்கையால் ஒன்றுபட்டவர்கள்தான் என்றாலும்
நாங்கள் பல அமைப்புகளாய் –
பல்வேறு பெயர்களில் செயல்படுகிறோம். அதனால்
எங்களை நாங்கள் கொள்கை சகோதரர்கள் என்றே
அழைத்துக் கொள்கிறோம்.
சேவைகள் அடிப்படையில் செயல்பட வசதியாய் பல்வேறு குழுக்களாய் இயங்கி வருகிறோம். நன்மைதானே! நன்மைகள் தானே செய்து வருகிறோம்.
ஒன்று முடக்கப்பட்டாலும், மற்றொன்றின் மூலம் செயல்பாடுகள் தொடரலாமே….!
ஒரு நிகழ்ச்சி குறிப்பிட்டதொரு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் எல்லோரும் கலந்து கொள்கிறோம்.
சில நேரங்களில் பல அமைப்புகளும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
செயல்பாடுகளில் ஒருவருக்கொருவர் நேசக்கரம் நீட்டுகிறோம்.
பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம்.
தனித்தனி பெயர்களில், தனி அமைப்புகளாய், சங்கங்களாய், மன்றங்களாய், இயக்கங்களாய், மையங்களாய், கழகங்களாய், பேரவைகளாய், இயங்கினாலும் கொள்கையில் ஒன்றானவர்கள் தானே! நாங்கள் ஒன்றுபட்டுத்தானே நிற்கிறோம்!
பிரிந்தா நிற்கிறோம்?
இது போன்று இன்னும் கவர்ச்சிகரமான காரணங்களை அடுக்கிக் கொண்டிருப்போர் யார்?
-இயக்கங்கள், அமைப்புகள், மன்றங்கள், கழகங்கள், மையங்கள், பேரவைகள், இன்னும் எதிர்காலத்தில் இவைபோன்றோ அல்லது இவற்றில் ஒரு சில அம்சங்களை உள்ளடக்கியோ – அல்லது முற்றிலும் மாறுபட்டோ – எவைகள் தோன்றினாலும் – அவை அனைத்தையும் நியாயப்படுத்தும் வர்ண ஜாலங் காரணங்களை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருப்போர்கள். ஓ! இனி எவைகள் எந்த புதுப் பெயரில், எந்த நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டாலும், அவை அனைத்தையும் நியாயப்படுத்தும் புதுப்புது காரணங்களும் கண்டுபிடித்துக் கொடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும்.
போலி ஒற்றுமை கோஷங்கள்:
நாம் மயக்கு மொழிகளில் கட்டுண்டனவர்களாயிற்றே! அதனால் எவ்வித பார்வையும், பரிசீலனையுமின்றி எதையும் ஏற்றக் கொள்ள தயாரிகிவிட்டோம். அதற்கோர் உதாரணம்.
பல்வேறு பெயர்களில்
பல்வேறு அமைப்புகளாய்
பிரிந்து நின்று….. பிரிந்து நின்று செயல்படுவதை ஒற்றுமை! ஒற்றுமை! என்று முழங்கிக் கொண்டிருக்கிறோம்.
பொய் திரும்ப, திரும்ப உரத்து உறுதியோடு ஒலித்துக் கொண்டிருப்பதால் அது ஏற்றுக் கொள்ளப்படும் நியதியாகிவிடும்.
ஆதரவாளர்களின் அங்கீகாரம் கிடைத்து விடும்போது, அது நடைமுறை மரபாகவும் மாறிவிடுகிறது. இது போலியான ஒற்றுமை! உண்மையான ஒற்றுமையல்ல என்பதை எங்களில் பலர் உள்ளபடி உணர்ந்திருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
எங்கள் ஒற்றுமைக் கோஷம் – நாங்கள் போடும் வெளிவேஷம் என்பதை எங்களைக் காட்டிலும் எங்களை எதிர்ப்பவர்கள் துல்லியமாய் அறிந்திருக்கிறார்கள் அதனால் எங்கள் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் ஒற்றுமை, ஒற்றுமை என்று இப்போது அலற ஆரம்பித்திருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் பிரிந்து நிற்பதை மற்றவர்கள் இனங்கண்டு கொள்ள கூடாதல்லவா? கொள்கையில் ஒன்றானவர்களாகிய நாங்களே ஒருங்கிணைய முடியவில்லையயன்றால் -மற்றவர்களை ஒன்றுபடுத்துவது எப்படி சாத்தியமாகும்?
இன்றைய முஸ்லிம்கள் ஒரே உம்மத்தாக – ஒன்றுபட்ட சமுதாயமாக இல்லை. குரூப், குரூப்பாய், அணி, அணியாய் குழுக்கள், குழுக்களாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த குரூப்களில் ஒன்றாய், பலவாய் நாம் உண்டாக்கிக் கொண்டிருப்தும் குரூப்கள்தானே! மற்ற குரூப்களிலிருந்து நாம் வேறுபட்டு நிற்கிறோம் என்று வேண்டுமானால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
அமைப்புகள் ஏன்?
முன்னரே பல்வேறு குரூப்களாய் பிரிந்து கிடக்கும் இன்றைய முஸ்லிம்களை ஒரே சமுதாயமாக்கும், ஒன்றுபட்ட சமுதாயமாக்கும் முயற்சியை நாம் மேற்கொள்வது நம்மீது கடமையல்லவா? அதை விடுத்து, அதற்கு மாற்றமாய்- ஒன்றுபடுவதற்கும், ஒன்றுபடுத்துவதற்கும, ஒன்றுபட்டு செயல்படுவதற்கும் உலகியல் நடைமுறையை – அறிஞர்களின் மனித அபிப்ராயங்களில் தஞ்சமடையலாமா?
உலகியல்வாதிகளைப் போல் அமைப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் தான் ஒன்றுபட முடியும், செயல்பட முடியும் என்று நாமாக சுய விதிகளை உண்டாக்கிக் கொள்ளலாமா?
“அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்க விதிகட்குட்பட்டதாக ஆக்கிய (இறைவனுக்கு) இணையானவர்கள் அவர்களுக்கு இருக்கின்றனரா? (அல்லாஹ்விடமிருந்து) தீர்ப்பளிக்கும் வாக்கு ஏற்படாதிருப்பின் இப்பொழுதே அவர்களுக்கிடையே தீர்ப்பு ஏற்படாதிருப்பின் இப்பொழுதே அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநீதி இழைப்பவர்களுக்கு வேதனையளிக்கக் கூடிய தண்டனை உள்ளது.” (சிந்தனைக்கும் படிப்பினைக்குமுரிய இறைவாக்கு: அஷ்ஷிரா:42:21)
உலகியல்வாதிகளைப் போல் நாம் உண்டாக்கிய அமைப்புகளாலும் சில சில்லறை நன்மைகளை ஏற்படுத்தலாம்; மறுக்கவில்லை. இதுபோன்ற அமைப்புகள் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம் சமைய பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறதே! இயக்கங்கள், அமைப்புகளை ஆதரிப்போர் யாரும் இதைக் கவனத்தில் கொள்வதில்லையே ஏன்?
ஒன்றுபட்ட சமுதாயத்திற்கு உலைவைக்கும் மாபெரும் தீங்கையுமிழைத்துக் கொண்டிருப்பவைகள் – இதுபோன்ற இயக்கங்களும், அமைப்புகளும்தானே! இது மட்டும் நம் கவனத்திற்குக் கொண்டுவரப்படாமல் -இருட்டடிப்புச் செய்யப்படும் மர்மம்தான் என்ன?
சிறிய அளவில் நன்மையை ஏற்படுத்தி – பெரும் அளவில் தீங்கேற்படுத்தும் அனைத்தையும் இஸ்லாம் முற்றாக தடை செய்கிறதே!
அல்லாஹ்-ஜல்-ஹராமாக்கியுள்ள மதுவிலும், சூதாட்டத்திலும் கூட சில நன்மைகளும், பெருமளவில் தீங்குகளும் மிகைத்திருப்பதால் அவைகளைத் தடுத்துள்ளதாய் – அல்லாஹ்-ஜல்- நம்மை எச்சரித்துள்ளானே (சிந்தனைக்கும், படிப்பினைக்குரிய இறைவாக்கின் கருத்து: அல்பகறா: 2:219) இன்னும் நாம் இதிலிருந்து படிப்பினைப் பெறத் தவறியதேன்? நம்மில் நன்றாக சிந்திப்போர்கூட இதை கண்டு கொள்ளாமல் அப்படியே நழுவி விடுவதேன்? அல்லாஹ்-ஜல்-இதை கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுவான் என்ற அசட்டுத் துணிச்சலா?
சுய விமர்சனமென்றால் முகம் சுளிப்பதேன்?
அடுத்தவர்களுக்கு அறிவுரைகளையும், உபதேசங்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் வள்ளல்கள் – நாம்! நம்மைப்பற்றி என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? இல்லையே!
ஈமான் கொண்டவர்களே நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 61:2,3)
குர்ஆன், ஹதீதைக் கொள்கையாகக் கொண்டதால் – இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்ட புறப்பட்டுவிட்டதால் – மாற்றுக் கொள்கைகளையும், அவற்றிற்குரியவர்களையும் விமர்சனங்களால் விளாசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாமும் – விமர்சனத்திற்குட்படுத்தப் பட வேண்டியவர்கள் என்பதை மறந்துவிட்டோம்.
குர்ஆன், ஹதீஸைக் கொள்கையாகக் கொண்டதால் நாம் விமர்சனங்களுக்கப்பாற்பட்டவர்களாகி விட முடியுமா?
மற்றவர்களை விமர்சிக்கும் போது மகிழ்வின் எல்லைக்கே சென்றவிடுகிறோம்.
நம்மை மற்றவர்கள் விமர்சித்தால் – விட்டேனா பார் என்று வெகுண்டெழுந்து விடுகிறோம். சரிதானா? முன்போகும் ஒட்டகத்தைப் பார்த்த பின் செல்லும் ஒட்டகமும் முதுகு கோணல் என்று பழித்ததாம்!
நம்மை நாமே விமர்சித்துக்கொள்ள முன் வர வேண்டுமென்றால் முகம் சுளிப்பதேன்?
நமக்கொரு நியதி! மாற்றுக் கொள்கையுடையோருக்கு மற்றொரு நியதியா? வேண்டாம் இந்த விபரீத போக்கு.
“”உங்களை நீங்களே பரிசுத்தவான்கள் என்று போற்றிக் கொள்ளாதீர்கள். (படிப்பினைக்கும் சிந்தனைக்குமுரிய இறைவாக்கின் சாரம் 53:32)
ஒட்டுமொத்தமாய் இன்றைய பெயர்தாங்கி முஸ்லிம்களை – அவர்கள் கொள்கைகளை -நடை முறைகளை விமர்சிக்க முன் -நம்மை நாம் சுய விமர்சனம் செய்துகொள்வது அவசியமன்றோ – ஒன்றிற்குப் பலமுறை நம்மை நாமே விமர்சித்துக் கொள்வது அவசியத்திலும் அவசியமான தல்லவா…..? ஆனால் இதை நாம் செய்யத் தவறியதேன்? இதை நம்மில் யாரேனும் எடுத்துக்காட்டினால் அவர்களையும் எதிரிகளாய் பாவிப்பதேன்? போர்க்கொடி தூக்குவதேன்? இதை இன்னொரு கோணத்தில் பார்வையிடுவோம்.
நம்மை எதிர்ப்பவர்கள், நம்மோடு கொள்கையில் முரண்படுபவர்கள் இப்படி செய்தால்….நாம் என்ன செய்வோம்?
ஆஹா…..பார்த்தீர்களா? என்ன காரியம் செய்கிறார்கள்?
நன்மை, புண்ணியம் என்ற போர்வையில் வழிகேடுகளுக்கு வித்திடுகிறார்கள். ஆ…..ஓ…..என்று ஓலமிடுவோம். கடும் விமர்சன கண்டனக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருப்போம். இவ்வாறெல்லாம் செய்வதற்குத் திருகுர்ஆனில் ஆதாரமுண்டா? திரு நபி வழிகாட்டுதலில் ஆதாரமுண்டா? என்று ஆதாரங்கள் கேட்டுத் துளைத்தெடுப்போம். அதையே இன்று நாம் செய்கிறோம். அது நமக்குத் தவறாகப்படவில்லையே ஏன்?
மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடமா? சிறிய விஷயங்களையும் விட்டுவிடாமல் மற்றவர்களிடம் ஆதாரம் கேட்கும் நாம் – அமைப்புகள், இயக்கங்கள், மையங்கள், சங்கங்கள், மன்றங்கள், பேரவைகள், அசோசியேஷன்கள் – ஐம்யியத்துக்கள்…..இத்யாதி….இத்யாதி…..அமைத்து செயல்படுகிறோமே…..அதில் பெருமிதப்பட்டுக் கொள்கிறோமே…..
நாம் இப்படி செய்வதெற்கெல்லாம்….இறை வேதத்திலோ, இறைத்தூதர் வழிகாட்டுதல்களிலோ ஆதாரம் தேடியதுண்டா?
அல்லது நம்மில் யாரெல்லாம் இதை ஆதரிக்கிறார்களோ அவர்களிடமாவது இதற்குரிய ஆதாரங்களைத் தருமாறு கேட்டதுண்டா?
மாற்றுக் கொள்கை மவ்லவிகளும், அறிஞர்களும் தவறானதையே தருவார்கள் – தவ்ஹீத் மவ்லவிகள், அறிஞர்கள் மட்டும் சரியானதற்குச் சொந்தக்காரர்கள் – அவர்கள் ஆதாரம் தாராவிட்டாலும் அவர்கள் சொல்வதெல்லாம், எழுதுவதெல்லாம் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை நம்மிடம் வலுப்பட்டு வருவதும் சரிதானா?
மற்றவர்களின் தவறுகளை எளிதாய் இனங்கண்டு கொள்ளும் நாம்- நம் தவறுகளை, நமது மவ்லவிக்ள செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவடுவதன் மர்மம்தான் என்ன?
மீண்டும் வந்த சிந்தனையை மீண்டும் சிறை வைக்கலாமா?
ஒரு பக்கம் “மார்க்கம் அல்லாஹ்வுக்கே சொந்தம்’ என்று முழுங்குகிறோம் (சிந்தனைக்கும், படிப்பினைக்குமுரிய இறைவாக்கு 39:3)
நம் வசதிக்கேற்ப செயல்களை நாமே நிர்ணயம் செய்கிறோம் மறுபக்கம். ஏனிந்த முரண்பாடு?
ஆதாரமற்றவைகளç மாற்றுக் கருத்துடையோர் செய்தால் – அவர்களுக்கு குராஃபி என்ற முத்திரைக்குத்தும் நாம்-
இன்று ஆதாரமின்றி நாம் உருவாக்கி செயல்பாடுகளுக்கு நமக்கு நாமே என்ன முத்திரைக் குத்திக்கொள்வது?
நம்மையும் அறியாமல் அவர்களுக்குக் குத்திய முத்திரை -அதைவிட வேகமாய் நமக்கே குத்தப்பபடும் சூழ்நிலை நம்மாலே உருவாக்கப்பட்டு விட்டதே! வெட்கமாக இல்லை. மற்றவரை நோக்கி எய்த அம்பு நமக்கே திரும்பிவிட்டதே!
சீர்திருத்தம் எங்கே? எப்படி?
ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாய சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்! அந்த சீர்திருத்தம் எங்கிருந்து துவங்க வேண்டும்?
எந்த சமுதாயம் தம்மைத்தாமே சீர்திருத்திக் கொள்ளவில்லையோ – அந்த சமுதாயத்தை அல்லாஹ்வும் சீர்திருத்த மாட்டான். (சிந்தனைக்கும் படிப்பினைக்குமுரிய இறைவாக்கு 13:11)
மற்றவர்கள் சீர்திருந்த வேண்டும் என்பதற்காக நாம் காட்டும் ஆர்வத்தில், ஆயிரத்தில் ஒரு பங்காவது – நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளவேண்டும் என்பதில் காட்டுகிறோமா? நமது சீர்கேடுகளை நாமே சீர்திருத்திக் கொண்டால்தான் -சீர்திருத்தம் சாத்தியம் என்று அல்லாஹ்வும் எடுத்துக்காட்டிய பின் – இனியும் மெத்தனம் காட்டலாகுமா? நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொண்டு -நம்மிடம் காணப்படும் சீர்கேடுகளை – தவறுகளை நாமே சீர்படுத்திக் கொண்டு – இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல் – அதை உடனடியாக அமுல்படுத்த முன்வருமாறு நமது சகோதர, சகோதரிகள் அனைவரிடமும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
தனி அமைப்புகளால் ஒன்றுபட்ட சமுதாயத்தை ஒருக்காலும் உருவாக்கமுடியாது.
உலகியல் செயல்பாடுகளுக்காகவும்
நிர்வாக வசதிக்காகவும்
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதற்காகவும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும்
முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக குரல் கொடுப்பதாகவும்.
முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்டுத் தரவும் நம்மால் உருவாக்கப்பட்டு வரும் அமைப்புகள், இயக்கங்கள் ஜம்யிய்யத்கள்,
அசோசியேஷன்கள்,மையங்கள்,கழகங்கள், பேரவைகள், மன்றங்கள்…. இத்யாதி….இத்யாதி…போன்றவைகள் -முன்னரே பல்வேறு கொள்கையுடையவர்களாகவும், சேவை அடிப்டையில் அமைப்புகள் கண்டு பல்வேறு குரூப்களாய், அணிகளாய், குழுக்களாய் பிரிந்து கிடக்கும் முஸ்லிம்களை – மேலும் பிளவுபடுத்து மேயன்றி, ஒன்றபட்ட முஸ்லிம் சமுதாயம் அமைய ஒருக்காலும் உதவப்போவதில்லை.
இதை நாம் அனுபவப் பூர்வமாய் உணர்ந்தும், அதிலிருந்து விடுபடத் தவறினால் – நாளை மேலும் இந்த சமுதாயம் பிளவுபட காரணமானவர் களில் முதலிடம் முதலிடம் வகிப்பவர்கள் நம்மவர்களாகத்தான் இருப்பார்கள். ஐயம் வேண்டாம்.
மனிதனுக்கும்,மனித சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் எதையேனும் இஸ்லாம் எடுத்துக்காட்டாமல் விட்டு விட்டதா? இறை மார்க்கம் – இஸ்லாம் – உலகியல் செயல்பாடுகள் உட்பட மனித வாழ்வோடு தொடர்புடைய எல்லா அம்சங்களின் உள்ளடக்கம் தானே…! அல்லாஹ்வும் இதை-
….இன்றைய தினம் உங்களுக்காக – உங்கள் மார்க்கத்தை நிறைவு செய்துவிட்டேன்.
நான் உங்கள் மீது என் அருட்கொடையையும பூர்த்தியாக்கி விட்டேன்.
இன்னும் உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையே இசைவானதாய் தேர்ந்தெடுத்துள்ளேன்….(சிந்தனைக்கும் படிப்பினைக்குமுரிய இறைவாக்கு: அல்மாயிதா: 5:3)
அனைத்து முஸ்லிம்களின் உலகியல் காரியங்கள் மட்டுமல்ல; முழு மனித சமுதாயத்தின் இம்மை,மறுமை நல்வாழ்விற்கும் நன்மை பயப்பதுதானே – இஸ்லாத்தின் இலட்சியம்- -மேற்கண்ட இறைவாக்கை எத்தனை மேடைகளில் முழங்கியருக் கிறோம். எத்தனை முறை எழுதியுமிருக்கிறோம். ஏன் அதிலிருந்து படிப்பினை பெறத் தவறிவிட்டோம்?
உலகியலை ஒட்டி செயல்படவும் , நிர்வாக வசதிக்காவும் என்று அதுபோன்று கூறப்படும் காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதற்காக இயக்கங்கள், அமைப்புகள் என்று எவைகள் தோற்றுவிக்கப்பட்டாலும்- இப்படிப்பட்டவைகள் மூலம் நாம் எதைச் சாதிக்கவேண்டுமென்று -சாதிக்க முடியுமென்று எண்ணுகிறோமோ- யூகிக்கிறோமோ- அதைவிட கோடி, கோடிமடங்கு அல்ல நம்மால் மட்டுப்படுத்த முடியாத சாதனைகளை “இஸ்லாம்’ என்ற அல்லாஹ் அருளிய வாழ்க்கை நெறிக்குட்பட்டு சாதித்துக்காட்டி சாதனை படைத்தவர்கள்தான் நபிகால முஸ்லிம்கள்; அதுதானே இஸ்லாத்தின் பொற்காலம். அந்த பொற்காலத்தை அடைய பாடுபடும் நன்மக்களாய் நாம் அனைவரும் மாறிட அல்லாஹ் அருள்பாளிக்க வேண்டும். துஆ செய்கிறோம். அவ்வாறே துஆ செய்யுமாறு எல்லோரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். வஸ்ஸலாம்.
அப்படி நபிகால முஸ்லிம்கள் என்ன சாதனை படைத்தார்கள்? – மீண்டும் இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆய்வில் சந்திப்போம்! சிந்திப்போம்! சீர்பெறுவோம்.
முக்கிய குறிப்பு:
இயக்க அமைப்பு மயக்கங்களிலிருந்து விடுபட்ட நமது சகோதரர்கள் – இந்த ஆய்வை -இயக்கங்கள், அமைப்புகளில் கட்டுண்டு கிடக்கும் மற்ற நமது சகோதரர்களுக்குப் புகைப்பட நகல் எடுத்துக் கொடுத்து அவர்களையும் சிந்திக்கத் தூண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அல்லாஹ்(ஜல்) நம் முயற்சியில் வெற்றியருள்வானாக ஆமீன்.
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி(பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ: (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்து) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக்கொண்டே மகிழ்வடைகிறார்கள். (அல்குர்ஆன் 30:32)