இறைச் சட்டத்தை கேலிக் கூத்தாக்கும் உலமாக்கள்!

in 2010 டிசம்பர்

இறைச் சட்டத்தை கேலிக் கூத்தாக்கும் உலமாக்கள்!
உம்முநிதா

நிச்சயமாக எவர்கள் நெறிநூலிலிருந்து அல்லாஹ் இறக்கியதை மறைத்து, அதற்குப் பகரமாக சொற்பக் கிரயத்தை வாங்குகிறார்களோ, அத்தகையவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்கு நோவினையளிக்கும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 2:174)

அல்லாஹ் தன் நெறிநூலில் தெளிவாகச் சொல்லிவிட்டான். அதை எவ்வாறு கையாள வேண்டும் என்று நாம்தான் தடுமாறிக் கொண்டு இருக்கிறோம். ஆள் ஆளுக்கு ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) என்ற வகையில் இறைச் சட்டத்தை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். அல்லாஹ்தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.

சமீபத்தில் ஒரு தம்பதிகள் விளையாட்டாக computer ல் chat பண்ணும்போது கணவர் தலாக் மூன்று முறை சொல்லி விட்டாராம். மார்க்கம் சிறிதும் தெரியாத தம்பதியராய் இருக்கும் என்று நினைக்கிறேன். குர்ஆனை எடுத்து அது என்ன சொல்கிறது என்பதைக் கூட பார்க்க திறன் இல்லாத தம்பதியர் உலமாக்களை நம்பி கேட்டி ருக்கிறார்கள். (ஹிந்து 28.10.2010. பக். 20)

நம்மைப் போன்ற எந்த பாமர மக்களும் (நாம் மதரஸா சென்று மார்க்கச் சட்டம் படித்து ஆலிம், ஆலிமா என்ற பட்டத்தை வாங்கவில்லை) குர்ஆனோடு அதிகத் தொடர்பு உள்ளவர், உடனே அழகாக இறைச் சட்டத்தை குர்ஆன் ஆயத்து வாரியாக ஒழுங்காகச் சொல்ல ஆரம்பித்து விடு வார்கள். ஆனால் இந்த விஷயமோ உலமாக்கள் (தேவ்பந்த் -UP-ல் மிகச் சிறந்த மார்க்கச் சட்டம் பயிலும் மதரஸா) வசம் போய் அவர்கள் தங்கள் மனம் போன போக்கில் சட்டம் இயற்றுகிறார்கள்.

யா அல்லாஹ்! எப்படி மூன்று முறை தலாக் கூறினால் அது செல்லுபடி ஆகும். 3 முறை என்ன கோடி முறை சொன்னாலும் அது செல்லாது. குர்ஆன் வசனங்கள் (2:225 to 233) என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள். அல்லாஹ்வின் வார்த்தைகள் தெளிவாகச் சொல்கின்றன.
நம்மைப் போன்ற பாமர மக்களிடம் தம்பதி யர் கேட்டிருந்தால் கூட இவ்வளவு தூரம் மோசமாக அவர்களது குடும்ப வாழ்க்கை முடிவிற்கு வந்திருக்காது. மது(ஹராம்) அருந்திவிட்டு ஒருவன் இந்த வார்த்தையை மொழிந்தால் இதற்கும் அவர்கள் சொல்லும் சட்டம் தான் செல்லுமா? இவர்களுக்கு இறைச் சட்டத்தை மாற்ற என்ன உரிமை இருக்கிறது? பத்திரிக்கைகளில் பெரிய எழுத்துகளில் இதைப் பிரசுரித்து இருக்கிறார்கள். இஸ்லாம் மார்க்கத்தை பற்றி மாற்று மத மக்கள் தவறாகப் புரிந்து கொள்ள இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

தலாக் என்பது அல்லாஹ்விடம் வெறுப்பை ஊட்டும் காரியங்களில் ஒன்று. இவர்கள் சொல்வது போல் சட்டம் இயற்றினால் எத்தனை மக்களுடைய வாழ்க்கை கேள்விக் குறியாக இருக்கும். சிந்திக்க வேண்டாமா?

இதைப் பத்திரிக்கைகளில் படிக்கும் பிற உலமாக்களின் நிலை வெறும் மெளனமாக இருக்கிறது. ஏன் இந்த மெளனம்? பெரிய மதரஸாவின் பஃத்வா ஆயிற்றே என்று இருக்கிறார்களா? அவர்களும் நாளை அல்லாஹ்வின் முன்னி லையில் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண் டும். ஓடோடி வேறிடம் சென்று பதுங்கிக் கொள்ள இடம் தேட முடியாது.

எச்சரிக்கை! உடனடியாக இந்த விஷயத்தில் மறு பரிசீலனை செய்து திருத்த வேண்டும் என்று அவர்களின் முன் வைக்கிறோம். மரணம் வெகு தூரத்தில் இல்லை. செருப்பு வாரை விட மிக சமீபமாக இருக்கிறது என்று நபி(ஸல்) (அறிவிப்பு ஆயிஷா (ரழி) புகாரீ 3926) அவர்கள் சொல்லியிருக்க இவர்கள் ஏனோ அந்த பயம் சிறிதும் இல்லாமல் அல்லாஹ்வின் சட்டத்தை மாற்றி சின்னாபின்னப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

(அந்நாளில் நம்முடைய) தூதர், “”என்னுடைய இறைவனே! நிச்சயமாக என்னுடைய சமூகத்தினர் இந்த குர்ஆனை (ஏற்றுப் பின் பற்றாமல் தங்களுக்கு)த் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டார்கள்!! என்று கூறுவார்.
அல்குர்ஆன் 25:30

Previous post:

Next post: