யார் இந்த மதகுருமார்கள்?

in 2011 மார்ச்

அபூஅப்தில்லாஹ்

பிப்ரவரி இதழ் தொடர்: 2
மார்க்கப்பணி சம்பளத்திற்குச் செய்யப்படுவதல்ல!
மனித குலத்தைச் செம்மைப்படுத்த, நேர்வழிப்படுத்த உலகிற்கு அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்கள் மார்க்கப் பணியை மக்களிடம் சம்பளம் எதிர்பாராமல், கேட்காமல், அல்லாஹ்வின் பொருத்தம் நாடியே செய்தார்கள்; அதன் முக்கியத்துவம் கருதி அதைப் பகிரங்கமாக மக்களுக்கு அல்லாஹ் அறிவிக்கச் செய்தான் என்பதை எல்லாம் சென்ற இதழில் பார்த்தோம். மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்காமல் அல்லாஹ்வுக்காக அப்பணியைச் செய்பவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள் என்று யாஸீன் 36:21 இறைவாக்கு கட்டியம் கூறுகிறது. ஆனால் அதே யாஸீன் அத்தியாயத்தை வீடு வீடாகச் சென்று அதன் பொருள் அறியாமல் ஓதிவிட்டு அதற்கே கூலி வாங்கும் கேவல நிலையிலேயே இம் மதகுருமார்கள் இருக்கிறார்கள்.

நாசத்தை விளைவிக்கும் குருகுல மடம்!
மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வதற்கென்றே, நபி(ஸல்) அவர்களால் தரைமட்டமாக்கப்பட்ட குரு குலக் கல்வி முறையை மதரஸா என்ற பெயரில் முஸ்லிம் சமுதாயத்திலும் நுழைத்து விட்டார்கள் இந்த மதகுருமார்கள். நோக்கம் அவர்களின் வயிற்றுப் பிழைப்பே.

நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை!
இப்போது புகாரீயில் காணப்படும் முதல் ஹதீஸே என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள் என உமர் பின் கத்தாப்(ரழி) அறிவிக்கிறார்கள்.
“”செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகிறானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிடைக்கும்.

ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காக, இருந்தால் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகச் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்காகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும்”. (புகாரீ, முஸ்லிம்)

அடிப்படைச் சீர்திருத்தங்களும், நல்லொழுக்கப் பயிற்சிகளுக்கும் மிகமிக முக்கியத் தேவையான, அதிமுக்கியமான நபிமொழியாகும் இது. நாம் நற்செயல்களாகக் கருதிச் செய்யும் அனைத்துச் செயல்களின் விளைவுகள் நமது எண்ணங்களை அடிப்படையாகவே அமையும். நமது எண்ணம் மறுமையைக் குறிக்கோளாகக் கொண்டு இருக்குமாயின் மறுமையில் அதற்குரிய கூலி நிச்சயம் கிடைக்கும். அதற்கு மாறாக இவ்வுலகைக் குறிக்கோளாகக் கொண்டதாக எண்ணம் இருக்குமாயின் இவ்வுலகு கிடைக்கும். மறுமை கிடைக்காது.

இஃக்லாசற்ற மிகமிக உன்னத செயலும் வீணே!
ஒருவனது செயலை எவ்வளவு உயர்வானதாக மக்கள் கருதினாலும், அவன் அச்செயலை உலக ஆதாயம் கருதிச் செய்தால், மறு உலகில் அல்லாஹ்விடம் அச்செயல் கால் காசும் பெறாது. ஹிஜ்ரத் ஒரு சாதாரண செயல் அல்ல; சொத்து, உறவு, சுகம் அனைத்தையும் துறந்து வேறிடம் செல்வதே ஹிஜ்ரத். அந்த உன்னத செயலையே ஒருவன் பெண்ணையோ, பொருளையோ, பேர் புகழையோ நோக்கமாகக் கொண்டால் அவையே கிடைக்கும். மறுமையில் அச்செயலே அவனை நரகில் கொண்டு சேர்க்கும்.
அபூஹுரைரா(ரழி) அறிவித்து முஸ்லிமில் இடம் பெறும் மிக ஆதாரபூர்வமான நபி மொழியில், நாளை மறுமையில் அனைவருக்கும் முன்னதாகச் சிறப்புக்குரிய மூவர் விசாரிக்கப்பட்டு, முகம் குப்புற நரகில் எறியப்படுவார்கள். அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு ­ஹீதானவர்; இரண்டாமவர் மார்க்கத்தைக் கற்று அதை மக்களுக்குப் போதித்தவர், மூன்றாமவர் அல்லாஹ்வுடைய பாதையில் வாரி, வாரி வழங்கியவர்.

இம்மூவரும் மார்க்கம் ஏற்றிப் போற்றும் மிகமிக உன்னத செயல்களைத்தானே செய்துள்ளனர். பின் ஏன் முகம் குப்புற நரகில் எறியப்படுகிறார்கள்? காரணம் என்ன? ஆம்! அவர்கள் நற்செயல்கள்தான் செய்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அந்த நற்செயல்களைச் செய்யவில்லை; உலகில் மக்களிடம் பேர், புகழைப் பெறுவதற்காகவே அந்த நற் செயல்களைச் செய்துள்ளனர். அதனால் அந்த நற்செயல்கள் மறுமையில் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. மாறாக நரகையே பரிசாகப் பெற்றுத் தந்துள்ளன. மிகமிக உன்னதமான நற்செயல்களையே பேர், புகழுக்காகச் செய்தவர்களின் கதியே, மறுமை முடிவே இப்படி இருக்கிறதென்றால், நபிமார்களைப் போல், மார்க்கப் பணியை அல்லாஹ்வின் பொருத்தம் நாடிச் செய்வதற்குப் பதிலாக, எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து விட்டு மார்க்கப் பணியை கூலி-சம்பளத்திற்காகச் செய்யும், அதற்காகவே நாங்கள் தான் ஆலிம்கள் என பெருமை பேசும் இந்த மதகுரு மார்களின் நாளைய நிலை எப்படி அமையும்? நரகே என்பதில் சந்தேகமுண்டா?

சம்பளம் மட்டுமல்ல; பேர், புகழையும் எதிர் பார்க்கிறார்கள்!
இந்த மதகுருமார்கள் இவ்வுலகில் கூலி, சம்பளத்தை மட்டும் எதிர்பார்க்கவில்லை; பேர் புகழையும் சேர்த்தே எதிர்பார்க்கின்றனர். அப்படியானால் நாளை மறுமையில் பொது விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே இந்த மதகுருமார்கள் விசாரிக்கப்பட்டு, அவர்கள் நற்செயல்களைப் பாழாக்கிய விதம் விவரிக்கப்பட்டு முகம் குப்புற இழுபட்டு நரகில் வீசப்படுவார்கள் என்பதில் ஐயமுண்டா?
இப்படிப்பட்ட பரிதாப, பெருங்கேட்டை விளைவிக்கும் நிரந்தர நட்டத்தை ஏற்படுத்தும் நிலை எதனால் ஏற்படுகிறது? நபி(ஸல்) அவர்களது காலத்தில் அரபு நாட்டிலேயே, கஃபத்துல்லாஹ்வுக்கு மிக அருகிலேயே இருந்த குருகுல கல்வி போதிக்கும் தாருந்நத்வாவை வேரோடு, வேரடி மண்ணோடு இடித்துத் தரைமட்டமாக்கி அழகிய நடைமுறையை நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குக் காட்டித் தந்திருந்தும், அவர்களின் இந்த நற்போதனையைப் புறக்கணித்து மீண்டும் இந்த குருகுல மதரஸா முறையை முஸ்லிம்கள் ஏற்றிப் போற்றி வளர்த்து வருவதுதான் இன்றைய முஸ்லிம்களின் அழிவிற்கும் இழிவிற்கும் காரணமாக இருக்கிறது.

நிய்யத்-எண்ணம் என்ன?
இப்போது நிதானமாக நடுநிலையோடு சிந்தியுங்கள். இப்போது முஸ்லிம் மதகுருமார்களால் நடத்தப்படும் குருகுல மதரஸாக்களுக்கு, அவை தர்கா, தரீக்கா, மத்ஹபு, முஜாஹித், அஹ்ல ஹதீஸ், ஜாக், ததஜ, இதஜ, ஸலஃபி, காதியானி, இத்தியாதி, இந்தியாதி பிரிவுகளைச் சார்ந்த மத குருமார்களால் உலகளாவிய அள வில் நடத்தப்படும் எப்படிப்பட்ட குருகுல மதரஸாவாக இருந்தாலும், அங்கு போய் பயிலும் மாணவர்கள் என்ன நோக்கத்தோடு (நிய்யத்) போய் பயிலுகிறார்கள்? மறுமையை நோக்கமாகக் கொண்டு, அல்லாஹ்வின் பொருத்தம் நாடி பயிலுகிறார்களா? அல்லது அக்கல்வியைக் கற்று அதன் மூலம் உலக வாழ்க்கையை முடிந்த மட்டும் வளமாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு அங்கு சென்று பயிலுகிறார்களா? தூய நோக்கத்துடன் செல்லும் ஒரேயொரு மாணவனையாவது காட்ட முடியுமா?

நடுநிலையோடு அல்லாஹ்வின் அச்சத்துடன் சொல்லக்கூடிய பதில் என்ன? அவர்களில் ஒரு மாணவனுக்குக் கூட மறுமை சிந்தனையோ, அல்லாஹ்வின் பொருத்தம் பெறவேண்டும் என்ற தூய நோக்கமோ இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. நவீன உலக அறிவியல் துறைகளில் படித்துப் பட்டம் பெற்று கைநிறையப் பொருள் ஈட்ட வசதி வாய்ப்பு உள்ளவர்கள் இந்த குரு குல மதரஸாக்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.

யார் மதரஸா நோக்கி வருகிறார்கள்?
பரம ஏழையாக இருந்தாலும் திறமை மிக்கவனாக இருந்தால், நாலு பேரிடம் முறையிட்டு உதவி பெற்று அத்துறைகளில் படித்து முன்னேறப் பார்ப்பானே அல்லாமல், குருகுல மதரஸா பற்றிய எண்ணமே அப்படிப்பட்ட வர்களுக்கு வராது. இறுதியில் எப்படிப் பட்டவர்கள் இந்த குருகுல மதரஸா நோக்கிப் படை எடுக்கிறார்கள்? மக்குப் பிள்ளைகள், வீட்டுக்கு அடங்காத முரட்டுப் பிள்ளைகள், படிப்பதில் நாட்டமே அற்ற ஏழைப் பிள்ளைகள், இப்படிப்பட்ட உதவாக்கறைப் பிள்ளைகளே இந்த குருகுல மதரஸா நோக்கி வருகிறார்கள்.

உலகியல் கல்வித் துறைகளில் கிடைக்காத இலவசமாக தங்கும் வசதி, இலவச உணவு, உடை என அனைத்தும் இங்கு ஓசியில் கிடைப்பதே இதற்குக் காரணம். மதகுருமார்களும் புரோகித கல்வி முறையை வளர்ப்பதற்கென்றே இந்த கையேந்தும் முறையை ஊக்கப்படுத்துகிறார்கள். ஆக உதவாக்கறை பிள்ளைகளே குருகுல கல்வி போதிக்கும் இந்த மதர ஸாக்களில் போய் ஒதுங்குகிறார்கள்.

ஏன் கைத்தொழில் கற்றுக் கொடுப்பதில்லை?
1966 அல்லது 1967ல் நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. தப்லீஃக் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம். 1963ல் நிறுவப்பட்ட மதரஸாவின் நிறுவனருடன் நெருங்கிய தொடர்பிருந்தது. அப்பொழுதே இம்மதர ஸாக்களில் பட்டம் பெற்று மவ்லவிகளாக வெளிவருபவர்கள், பிழைப்புக்கு வேறு வழியின்றி வெறுங்கையுடன் வெளிவருவது மனதிற்கு உறுத்தலாகவே இருந்தது. எனவே அந்த நிறுவனரிடம் மாணவர்களுக்குத் தொழிற் கல்வியும் போதிக்கலாமே. எனக்குப் பல கைத் தொழில்கள் தெரியும்; நானே அந்தப் பொறுப்பை ஏற்றுச் செய்கிறேன் என்று கூறினேன். அதற்கு அந்த நிறுவனர் கூறிய பதில் என்ன தெரியுமா? “”ஷாகுல் ஹமீது சாஹிப் நீங்கள் கூறுவது மிக அருமையான திட்டம். ஆனால் இவர்களுக்குக் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொடுத்து விட்டால், மதரஸாவிலிருந்து வெளியேறி அதிலேயே மூழ்கி விடுவார்கள். மார்க்கப் பணியைக் கைவிட்டு விடுவார்கள். அதனால் தான் அதை ஆதரிக்க முடியவில்லை என்றார். அப்போது நாமும் அதைச் சரிகாணும் நிலையிலேயே இருந்தோம் என ஒப்புக் கொள்வதில் வெட்கப்படவில்லை. ஆனால் இப்போது இந்த குருகுல கல்வி முறையை தெளிவாக அறிந்து கொண்ட பின்னரே கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொடுக்க அவர்கள் முன் வராததற்குக் காரணம் புரிகிறது. ஆம்! வயிற்றுப் பிழைப்பிற்கு வேறு வழியிருந்தால் அவர்கள் மதகுரு எனக் கூறிக் கொண்டு புரோகிதத் தொழில் செய்வதைக் கைவிட்டு விடுவார்கள்.

இம்மதரஸாக்களில் போதிக்கப்படும் கல்வியும் தூய குர்ஆன், ஹதீஸ் கல்வி அல்ல. அவர்களின் மத்ஹபுகளுக்கு, பிரிவுகளுக்குத் தோதான மனிதக் கற்பனைகள் நிறைந்த கல்வியே போதிக்கப்படுகிறது. 1000 வருடங்களாக நடை முறையிலிருக்கும் நான்கு மத்ஹபினர், 4 இமாம்களின் பெயரால் கற்பனை செய்யப் பட்ட பிக்ஹு நூல்களை நெறிநூல்களாகச் சொல்லி கற்பிக்கின்றனர்.

 இவர்கள் முகல்லிதுகள்.
சுமார் 400 வருடங்களாக நடைமுறையிலிருக்கும் கைர முகல்லிதுகள் என்று சொல்லிக் கொள்ளும் அஹ்ல ஹதீஸ், முஜாஹித், இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற மஸ்லக் என்று கூறிக் கொள்ளும் மத்ஹபுகள் அவரவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்களின் மனிதக் கற்பனைகளை மார்க்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். தங்களை ஸலஃபிகள் எனக் கூறிக் கொள்வோர் பின்னால் வந்தவர்களின் (கலஃபிகள்) மனிதக் கற்பனைகளை ஏற்கக் கூடாது; முன் சென்றவர்களின் (ஸலஃபிகள்) மனிதக் கற்பனைகளை ஏற்கலாம் என்று கூறி அதையே கற்பிக்கின்றனர்.

மிகச் சமீபத்தில் தமிழகத்தில் தோன்றிய ததஜ மத்ஹபினர் ஸலஃபிகளின் மனிதக் கற்பனைகளையும் ஏற்கக் கூடாது; கலஃபிக ளின் மனிதக் கற்பனைகளையும் ஏற்கக் கூடாது. ததஜ மத்ஹபை கற்பனை செய்துள்ள நவீன இமாமின்(?) மனிதக் கற்பனைகளையே ஏற்று நடக்க வேண்டும். அது மட்டுமே ஒரே நேர்வழி, நம்பர்1 தவ்ஹீத் என்கின்றனர். இப்படி குருகுலக் கல்வித் திட்டப்படி நடக்கும் மதரஸாக்கள் அனைத்தும் தூய மார்க்கத்தில் மனிதக் கருத்துக்களைப் புகுத்தி, ஒரே நேர் வழி மார்க்கத்தைப் பல கோணல் வழி மதங்களாக ஆக்கி, மதகுருமார்களை உருவாக்கி வயிறு வளர்த்து வருகின்றனர். பேர் புகழை நோக்கமாகக் கொண்டு உலகியல் ஆதாயங்களை முறை தவறி அடைகின்றனர்.

குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதிப்பதில்லை!
மதகுருமார்களால் நடத்தப்படும் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த குருகுல மதரஸாக்களில் தூய மார்க்கத்தை மிக எளிதாகவும், தெளிவாகவும் சொல்லும் குர்ஆன், ஹதீஸ் மட்டும் போதிக்கப்படுவதில்லை. அந்தந்த மத்ஹபுகளின், இயக்கங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப மனிதக் கற்பனைகள் நிறைந்தவையே போதிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

ஹராம்களை அடுக்கும் மதகுருமார்கள்!
குர்ஆன், ஹதீஸ் மட்டும் தூய நிலையில் போதிக்கப்பட்டால், மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வது அனைத்து வகை ஹராம்களிலும் மிகமிகக் கொடிய ஹராம் என்பதை எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்கலாம். ஆனால், வட்டி வாங்குபவனின் வீட்டு நிழலில் நின்றால் ஹராம், வட்டி வாங்குவது தாயுடன் 70 முறை விபச்சாரம் செய்வதை விட கொடிய ஹராம், வட்டி வாங்குகிறவன் அன்பளிப்பாகக் கொடுப்பதை வாங்குவது ஹராம், கோவில், சர்ச் திருவிழா கூட்டங்களில் போய் வியாபாரம் செய்வது ஹராம், கோவில் முன்னால் கடை வைத்து தேங்காய் விற்பது ஹராம், சாராயம் காய்ச்சுபவனுக்கு சக்கரை விற்பது ஹராம், கைக்கூலி வாங்கி நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வது ஹராம், திருமணத்தில் பெண் வீட்டார் கொடுக்கும் விருந்தைச் சாப்பிடுவது ஹராம், மாற்றார் கொள்கைகளை அச்சடித்துக் கொடுப்பது ஹராம் இப்படி குர்ஆன், ஹதீஸில் சொல்லப்படாத எண்ணற்ற ஹராம்களை அடுக்கும் இந்த மதகுருமார்கள் குர்ஆனில் எண்ணற்ற இறைவாக்குகள் மூலமும், பல ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மூலமாகவும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வது, குர்ஆனிலும், ஹதீஸிலும் ஹராம் எனத் தடுக்கப்பட்டுள்ள ஹராம்கள் அனைத்தையும் விட மிக மிகக் கொடிய ஹராம் என்பதை எப்படி அறியாமல் இருக்கிறார்கள்?

மதகுருமார்களின் இந்த அறியாமையே இந்த குருகுல மதரஸாக்களில் குர்ஆன், ஹதீஸ் போதிக்கப்படுவதில்லை; அவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹபு, அல்லது இயக்கம் போன்ற வழி கெட்டப் பிரிவுகளை நியாயப்படுத்தும், நேர் வழியாகக் காட்டும் குருகுலக் கல்வியே மார்க்கக் கல்வியாகப் போதிக்கப்படுகிறது என்பதைக் குன்றிலிட்டத் தீபமாக விளக்குகின்றது.

புகாரீ, முஸ்லிமில் காணப்படும் “”செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன” என்ற மிக முக்கிய மான ஹதீஸ்படி, வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு குருகுல மதரஸா சென்று மத குருமார்களுக்குரிய குருகுல கல்வி கற்ற இந்த மவ்லவிகளின் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா?

ஷஹீத், ஆலிம், வள்ளல் நிலை என்ன?
வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொள்ளாமல் பேர் புகழை மட்டும் நோக்கமாகக் கொண்டு ஷஹீதானவரின் நிலை என்ன? வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொள்ளாமல் தூய மார்க்கத்தைக் கற்றவரே அந்த தூய மார்க்கத்தை அல்லாஹ்வின் பொருத்தம் நாடாமல் பேர் புகழை மட்டும் நாடிப் பிரச்சாரம் செய்ததால் அவருக்கு ஏற்பட்ட நிலை என்ன? வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொள்ளாமல் ஹலாலாகப் பொருளீட்டிய வள்ளல், பேர் புகழை மட்டும் நோக்கமாகக் கொண்டு வாரி வாரி வழங்கியதால் அவருக்கு ஏற்பட்ட நிலை என்ன?

ஆக மிகமிக உன்னத செயல்களைச் செய்த இம் மூவரும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடாமல் பேர் புகழை மட்டுமே நாடி அந்த உன்னத செயல்களைச் செய்ததால் முகம் குப்புற இழுபட்டு நரகில் எறியப்படுகிறார்கள் என்றால், வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு, ஆலிம்-அறிஞன் என்ற அகந்தையுடன், பேர் புகழை நோக்கமாகக் கொண்டு மார்க்கப் பணி புரியும் இந்த மத குருமார்களின் இறுதி முடிவு என்னவாகும்? அனைவரின் மறுமை விசாரணைக்கு முன்னரே இந்த மத குருமார்கள் முகம் குப்புற இழுக்கப்பட்டு நரகில் எறியப்படுவார்கள் என்பதில் சந்தேகமுண்டா?

இவ்வுலகை நோக்கமாகக் கொண்டு குருகுலக் கல்வி கற்ற மவ்லவிகள் அவர்களது நோக்கப்படி இவ்வுலகில் ஆதாயம் அடைவார்களே அல்லாமல் மறுமையில் எதையும் எதிர்பார்க்க முடியாது என 2:200, 3:145, 4:134 மற்றும் பல இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

ஆலிம்கள் அனைவரையும் விமர்சிப்பதற்குக் காரணம் என்ன?
நீங்கள் மவ்லவிகளாகிய ஆலிம்கள்-அறிஞர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகச் சாடுகிறீர்கள். மிகக் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். அவர்களிலும் நல்லவர்கள், மனித நேயமிக்கவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களையும் சேர்த்து நீங்கள் கடுமையாக விமர்சிக்கிறீர்கள் எனக் குற்றப்படுத்துகிறார்கள் பலர்.

அப்படி நல்லவர்கள், மனித நேயமிக்கவர்கள் என்று பார்த்தால் இன்று உலகிலுள்ள அனைத்து மதங்களிலுமுள்ள மதகுருமார்களில் சிலரையும் சொல்ல முடியும். இன்னும் உண்மையை மறைக்காமல் சொல்வதாக இருந்தால் முஸ்லிம் மதகுருமார்களை விட மனித குலத்தின் இவ்வுலகம் சம்பந்தப்பட்ட கல்வி, மருத்துவம், மற்றும் பல துறைகளில் கிறித்தவ மதகுருமார்கள் முதலிடத்திலும், இந்து மதகுருமார்கள் அதற்கடுத்த இடத்திலும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

ஒரு அன்னை தெரசாவைப் போல் ஒரு முஸ்லிம் மதகுருவை காட்ட முடியுமா? கிறித்தவ மதகுருமார்கள் வெறும் புரோகிதக் கல்வியை மட்டும் கற்றுக் கொண்டு செயல்படவில்லை. உலகில் பல அறிவியல் துறைகளிலும் படித்துப் பட்டம் பெற்று மக்கள் தொண்டாற்றி வருகிறார்கள் என்பதை யாரால் மறுக்க முடியும்?

சொந்த அனுபவம்!
என்னுடைய சொந்த அனுபவத்திலேயே ஒரு கிறித்தவ மதகுருவின் மக்கள் சேவையைப் பார்த்து நினைத்து, நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்திருக்கிறேன். 1954ல் இலங்கை அம்பிட்டியாவில் சென்ட் மேரீஸ் கல்லூரியில் புதிதாக 5ம் வகுப்பில் சேர்ந்திருக்கிறேன். கெங்காலையிலிருந்து கண்டியைச் சுற்றி வருவதற்குப் பதிலாக தென்னக்கும்புர என்ற இடத்தில் இறங்கி மலை ஏறி அம்பிட்டியா வருவது வழக்கம்.

அப்படி மலை ஏறி வரும்போது தவறி கீழே விழுந்ததால் முட்டங்களில் காயம் ஏற்பட்டு விட்டது. அக்கல்லூரியை நிறுவிய ஃபாதர் பெரவெட் என்ற ஜெர்மன் மதகுருவே நேரில் வந்து ஒவ்வொரு வகுப்பறையையும் திறந்து விட்டு மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறுவது அவரது வழக்கம். எனது வகுப்பறையைத் திறக்க வந்தவர் என் காலில் ரத்தம் வடிவதைப் பார்த்தவுடன் துடி துடித்துவிட்டார். உடனே என்னைக் கையோடு அழைத்துச் சென்று அவரது அலுவலகத்திற்குப் பக்கத்தில் இருந்த நோயாளி அறையில் படுக்க வைத்து காயத்தைச் சுத்தப்படுத்தி அதற்கு மருந்திட்டுப் படுக்கையில் படுக்க வைத்தார். இதைப் பெரிதாகச் சொல்ல முடியாது.

ஆயினும் அந்த அறையின் மூலையிலேயே 1க்கு 2க்குப் போக ஏற்பாடு செய்து எனது கழிவுகளை அவரே எடுத்துச் சென்று அப்புறப்படுத்தினார். 75லிருந்து 80 வயதிருக்கும் ஒரு வயதான கிறித்தவ மதகுரு ஒரு 12 வயது பொடியனின் கழிவுகளை தானே எடுத்துச் சென்று அப்புறப்படுத்தினார் என்றால் அது ஒரு சாதாரண விஷயமா?

இப்படிச் சேவை செய்யும் ஒரு முஸ்லிம் மத குருவைக் காட்ட முடியுமா? மதரஸாவிலுள்ள மாணவர்கள் எங்கள் ஜட்டிகள் முதல் கொண்டு துவைத்துத் தருவார்கள் என்று 1987ல் இப்போதைய ததஜ மத்ஹபு இமாம்(?) எம்மிடம் பெருமையுடனும், ஆணவத்துடனும், திமிறாகப் பேசியதைத்தான் கேட்டிருக்கிறோம்.

உலகில் தொண்டாற்றுவதில் கிறித்தவ மதகுருக்களை முஸ்லிம் மதகுருக்கள் மிஞ்ச முடியாது!
ஆக இவ்வுலகில் மனித குலத்திற்குத் தொண்டாற்றுவதில் கிறித்தவ மதகுருமார்களை முஸ்லிம் மதகுருமார்கள் ஒருபோதும் முறியடிக்க முடியாது; ஏன் இந்து மதகுருமார்களையும் முறியடிக்க முடியாது. அவர்கள் நடத்தும் உலகியல் பல்வேறு துறைக் கல்லூரிகளையும், குறிப்பாக மருத்துவ, பொறியியல் கல்லூரிகளையும் முஸ்லிம் மதகுருமார்கள் நடத்துகிறார்களா? இல்லையே! பொதுமக்கள் அப்படி மருத்துவக் கல்லூரி நடத்த முயற்சித்தால் அது நிறைவேறாமல் தடுக்க எப்படிப்பட்ட முயற்சிகள் செய்ய வேண்டுமோ, பொய்ப்பிரச்சாரம் செய்ய வேண்டுமோ அதை மும்முரமாகச் செய்யவே இந்த முஸ்லிம் மதகுருமார்கள் முற்படுவார்கள்.

பேர், புகழுக்காக மக்கள் சேவை!
அப்படியே சாதாரண இரத்த தானம், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட்டால் அதைப் பெரிதாக தங்களின் வார, மாத இதழ்களில் புகைப்படங்களாகப் போட்டு மக்களிடையேயும், அரசிடமும் பேர் புகழையும், உலகியல் அரசியல் ஆதாயங்களையும் தேடவே முற்படுவார்கள். அந்த நற்செயல் மூலம் அல்லாஹ்வின் பொருத்தம் பெறுவதற்கு மாறாக மக்களிடம் பேர், புகழ் பெறவே முற்படுவார்கள்.

பேர் புகழை மட்டும் நாடிய ஷஹீத், ஆலிம், வள்ளல் போன்றோரே முகம் குப்புற இழுபட்டு நரகை அடையும்போது, வயிற்றுப் பிழைப்பையும், அதனால் பேர் புகழையும் நோக்கமாகக் கொண்ட மதகுருமார்களின் முடிவு என்ன என்பதை அறிய முடியாதா?

அல்லாஹ்விடம் கால் காசு பெறாது!
மக்களிடையே சிறந்த செயலாக, பெரும் தொண்டாக கணக்கிடுபவை அல்லாஹ்விடம் கால் காசு பெறாது. அல்லாஹ்வுக்கென்றே மிகத் தூய்மையான எண்ணத்துடன் செய்யப்படும் செயல்களே அல்லாஹ்விடம் ஏற்கப்படும் என்பதைப் பல குர்ஆன் வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன. அல்குர்ஆன் அந்நிசா. 4:48, 116 இறைவாக்குகள் “”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான்” என்று உறுதியாகக் கூறுகின்றன.

ஒரு மதகுருவும் ஷிர்க்கிலிருந்து விடுபட வில்லை!
அதற்கு மாறாக இந்த மதகுருமார்களில் ஒரு நபர் கூட மன்னிக்கப்படாத இந்த இணை வைப்பிலிருந்து (ஷிர்க்) விடுபட்டவர்களாக இல்லை. ஆனால் ஷிர்க் வைக்கும் விதம் தான் அவர்களிடையே மாறுபடும். பல தெய்வ வணக்கத்தை இந்து மதங்களிடையே புகுத்தியுள்ள இந்து மதகுருமார்கள் அது இணை வைப்பு இல்லை என வாதிடுவார்கள். முக்கடவுள் கொள்கையை கிறித்தவர்களிடம் புகுந்தியுள்ள கிறித்தவ மதகுருமார்கள் அது இணை வைப்பு இல்லை என வாதிடுவார்கள். (கபுரு) சமாதி வணக்கத்தை முஸ்லிம்களிடம் புகுத்தியுள்ள கபுரு மதகுருமார்கள் சமாதி வணக்கம் இணை வைப்பு இல்லை என வாதிடுவார்கள். இறந்தவர்களை வஸீலாவாக ஆக்கும் தரீக்கா, சுன்னத் ஜமாஅத் மதகுரு மார்கள் அவுலியாக்களை இடைத்தரகர்கள் ஆக்குவது இணைவைப்பு இல்லை என வாதிடுவார்கள்.

இறந்தவர்களைத்தான் இடைத்தரகர்கள் ஆக்கக் கூடாது. ஆனால் அவர்கள் குர்ஆன், ஹதீஸை விளங்கியபடிதான் நாமும் விளங்க வேண்டும் அது இணை வைப்பு இல்லை என மத்ஹபு மதகுருமார்கள் வாதிடுவர். கலஃபி களான பின்னோர்களைப் பின்பற்றுவதுதான் இணை வைப்பு; ஸலஃபிகளான முன்னோர்களைப் பின்பற்றுவது இணை வைப்பு இல்லை என ஸலஃபி மதகுருமார்கள் வாதிடுகின்றனர். முன்னோர்கள், பின்னோர்கள் யாரைப் பின்பற்றினாலும் அது இணை வைப்பு; ஆனால் என்னைப் பின்பற்றுவது; நான் சொல்லும் சுய கருத்துக்களை அதாவது குர்ஆன் வசனங்களுக்கு நான் கொடுக்கும் விளக்கத்தை ஏற்று நடப்பது இணை வைப்பு இல்லை என புதிய ததஜ மத்ஹபு இமாமான(?) மதகுரு வாதிடுகிறார். சுருக்கமாகச் சொன்னால் மதகுருமார்களில் எல்லாப் பிரிவினரும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகர்களாகச் சட்டவிரோதமாகப் புகுந்து கொண்டு அற்ப உலக ஆதாயம் அடையவே முற்படுகின்றனர்.

அல்குர்ஆன் என்ன சொல்கிறது?
இப்போது அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகராகப் புக இந்த மத குருமார்களுக்கு அனுமதி இருக்கிறதா என்பதை குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் பார்ப்போம்.

அல்குர்ஆன் அல்அஃராஃப்: 7:3 இறைவாக்கில் இறைவன் புறத்திலிருந்து இறக்கப்பட்டதை மட்டுமே பின்பற்ற வேண்டும்; மதகுருமார்கள் போன்ற மற்றவர்களைப் பாதுகாவலர்களாக, நேசர்களாக, வழிகாட்டிகளாக எற்றுப் பின்பற்றக் கூடாது என நெத்தியடியாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வால் இறக்கப்பட்டது குர்ஆன் மட்டும்தான் என அஹ்லகுர் ஆன் மதகுருமார்கள் பிதற்றுவார்கள்; அவர்களின் பக்தர்களும் அதைக் கண்மூடி ஏற்பார்கள்; ஆனால் அல்குர்ஆன் அந்நஜ்ம்: 53:2-5 இறைவாக்குகள் நபியின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வைதான் என உறுதி அளிக்கின்றன. இது அல்லாமல் “”அத்தீவுல்லாஹ வ அத்திவுர்ரசூல் என சுமார் 19 இடங்களிலும், அல்லாஹ்வுக்குப் பயபக்தியுடன் நடந்துகொண்டு என்னைப் பின்பற்றுங்கள் என எல்லா நபிமார்களும் கூறியது சுமார் 11 இடங்களிலும் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால் இறுதி நபியின் வழிகாட்டல்படி நடப்பதும் கடமையாகும்.

அதல்லாமல் 33:36, 66-68 இறைவாக்குகள் அல்லாஹ், அவனது முழுக் கண்காணிப்பில் இருந்து திருத்தப்பட்ட(52:48) நபியின் நடை முறை அல்லாது மூன்றாவதாக யாரையும் பின்பற்றக் கூடாது எனத் திட்டமாக அறிவிக்கின்றன. மீறி நபியைத் தவிர்த்து வேறு யாரையும் அதாவது மதகுருமார்களை நம்பி அவர்களைப் பின்பற்றினால் நாளை நரகில் கிடந்து வெந்து வேதனைப்பட்டுக் கொண்டு இந்த மதகுருமார்களைச் சபிப்பதை 33:66-68 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இவ்வுலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கை!
மேலும் 5:48, 6:165, 11:7, 16:92, 18:7, 21:35, 67:2 ஆகிய இறைவாக்குகளில் இவ்வுலகில் மனிதர்களை சோதனைக்காக, பரீட்ச்சைகாகப் படைத்திருப்பதாக அல்லாஹ் அறிவிக்கிறான். பரீட்சை என்றால் பரீட்சை எழுதுபவன் சுயமாகப் படித்து விளங்கி அதன்படி எழுதவேண்டும். பக்கத்திலுள்ளவனைக் காப்பி அடிப்பது பெருங்குற்றம் என்பதை அறிய முடியாதவன் பெரும் மூடனாக மட்டுமே இருக்க முடியும். சுயமாக விளங்கி எழுதினால் 100க்கு 35 புள்ளிகள் வாங்கினாலும் தேறிவிடுவான். காப்பி அடித்து 100க்கு 100கிடைக்கும் அளவில் எழுதினாலும் வெளியேற்றப்படுவான்; பெருந் தோல்வி அடைவான் என்பதைப் புரியாதவனும் பெரும் மடையனாகவே இருப்பான். ஆனால் முன்னரே தெரிந்தவர்களிடம் கேட்டு விளங்கி அதன்படி பரீட்சையில் சுயமாக எழுதுவது அனுமதிக்கப்பட்டதே என்பதையும் புத்திசாலி நன்கு அறிவான்.

மார்க்க அறிஞர் யார்? மூடன் யார்?
அதேபோல் மார்க்கப் பரீட்சையிலும் ஒரு சந்தேகம் எழுந்தால், தங்களை மார்க்க அறிஞர்கள், ஆலிம்கள், அல்லாமாக்கள் என்று மார்தட்டிக் கொள்வோரிடம் அதுபற்றி குர்ஆன் என்ன கூறுகிறது? ஆதாரபூர்வமான நபிமொழி என்ன கூறுகிறது? சம்பந்தப்பட்ட ஆயத்தை, ஹதீஸை எடுத்துத் தாருங்கள் என்றே கேட்க வேண்டும். உங்கள் கருத்து என்ன? உங்கள் அபிப்பிராயம் என்ன? என்று ஒருபோதும் கேட்கக் கூடாது.

மதகுருமார்களின் கொட்டம் எப்போது அடங்கும்?
அவர் உண்மையிலேயே அறிஞராக இருந்தால் சம்பந்தப்பட்ட ஆயத், ஹதீஸை எடுத்துக் கொடுப்பார், போலி மதகுருவாக இருந்தால், நீ என் ஆலிமா? உனக்கு அரபி தெரியுமா? பெரிதாகத் தெரிந்தது போல் குர்ஆன், ஹதீஸ் பற்றிக் கேட்கிறாயே! என அளந்து விடுவார். இப்படி அவர் அளக்கும்போது பயந்து வாய் மூடி வந்துவிடக்கூடாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், நீர் ஆலிம் என்று நினைத்து நான் வந்து கேட்டேன். நீர் ஆலிம் இல்லை; வடிகட்டிய ஜாஹில், ஃபிர் அவ்ன், அபூ ஜஹீல் போன்றோரின் வாரிசு என்பதை இப்போது தான் அறிந்து கொண்டேன் என முகத்தில் அடித்தது போல் நறுக் கென்று கூறிவிட்டு அகன்று விட வேண்டும். இப்படி பலர் சொல்ல முற்பட்டால்தான் இந்த மதகுருமார்களின் கொட்டம் அடங்கும். சிந்திக்க ஆரம்பிப்பார்கள். தங்களுக்கு தூய இஸ்லாமிய மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்பதை உணர ஆரம்பிப்பார்கள்.

மார்க்கப் பிரசாரம் செய்யும் தகுதி யாருக்கு?
மவ்லவிகள், ஆலிம்கள் என அகந்தை பேசும் இந்த மதகுருமார்களுக்கு மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது. இப்போது மார்க்கப் பிரசாரம் செய்யத் தகுதி உள்ளவர்கள் யார் என்று குர்ஆன் கூறுகிறது என்று பார்த்தால், முஸ்லிமான ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மார்க்கப் பணிக்குத் தகுதி உடையவர்கள். அவர்கள் மார்க்கப் பணியைச் செய்தே ஆகவேண்டும்; மார்க்கப்பணி செய்பவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள். அல்லாஹ்வுக்காக அந்த மார்க்கப் பணியை மறுமை வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் சகல துன்பங்களையும், சிரமங்களையும் சகித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் அதையே போதிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள், எஞ்சிய அனைவரும் தோல்வி அடைபவர்கள்; பெரும் நட்டவாளிகள் என்று அல்குர்ஆன் அல்அஸ்ர்:103:1-3 இறைவாக்குகள் நெத்தியடியாகக் கூறுகின்றன.

இந்த உம்மத்திலுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் நபிமார்கள் செய்த இந்த பிரசார பணியை செய்ய வேண்டும். அது கொண்டே ஆதம்(அலை) முதல் இறுதித் தூதர் வரை வந்து சென்ற அனைத்து சமுதாயங்களை விடச் சிறந்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் என்று அல்குர்ஆன் ஆலஇம்ரான் : 3:110 இறைவாக்கு அறுதியிட்டு உறுதி கூறுகிறது. மேலும் 3:104 இறை வாக்கில் உங்களில் ஒரு கூட்டம் நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும், தீயவை விட்டு விலக்குபவர்களாகவும் இருக்க வேண்டும்; அவர்களே வெற்றியாளர்கள் எனக் கூறுகிறது. இந்த இறைவாக்கிலும் கூலி-சம்பளம் வாங்காமல் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி மார்க்கப் பணி செய்கிறவர்கள் வெற்றியாளர்கள் என்று கூறப்பட்டுள்ளதே அல்லாமல் மதகுருமார்களுக்கு அனுமதி இல்லை என உறுதிப்படுத்துகிறது.

அல்குர்ஆன் அத்தவ்பா: 9:71 இறைவாக்கில் “”முஃமினான ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உற்றத் துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்யத் தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள் தொழுகையை நிலை நாட்டுகிறார்கள்; ஜகாத்தைக் கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்படுகிறார்கள்” என்று அனைத்து முஸ்லிம்கள் மீதும் மார்க்கப் பணி கடமையாக்கப்படுகிறது.

மார்க்கப்பணி இந்த மதகுருமார்கள் மீது சுமத்தப்பட்டதாக ஒரேயொரு ஹதீசும் இல்லாத நிலையில் சம்பந்தமில்லாத ஆயத் ஹதீஸ்களைக் காட்டி தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக இந்த மதகுருமார்கள் பிதற்றுவார்கள். அவற்றையும் அடுத்துப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: