ஐயமும்! தெளிவும்!!

in 1989 மே,ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: மனைவியிடத்தில் பால் அருந்தலாம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இதற்கு விளக்கம் தரவும். ஏ.உபைதுர் ரஹ்மான், தமாம்.

தெளிவு: மனைவியிடத்தில் பால் அருந்தினால் “பால்குடி உறவு” ஏற்பட்டு விடும் என ஒரு சிலர் பயப்படுவதால் “கூடாது” என கூறுகின்றனர். இதற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் மாற்றமாக இருப்பதைக் காணுகிறோம் ஒரு பெண்ணிடம் பால் அருந்துபவனின் வயது இரண்டு வயதுக்குள் இருந்தால்தான் அப்பெண் அவனுக்கு “பால்குடி உறவால்” ஆன தாய் போலாவாள். இரண்டு வயதுக்கு மேற்பட்டிருந்தால் அவ்வவுறவு ஏற்படாது.

பால்குடி மறத்தல் இரண்டு வருடங்களில்(வயதில்) ஆகின்றன. (அல்குர்ஆன் 31:14)

இரண்டு வயதிற்குட்பட்ட பால்குடியினரால் தவிர ஹராம் ஏற்படாது. (இப்னு உமர்(ரழி), தாரகுத்னீ)

கணவன், மனைவியிடம், பால்குடித்தல் சாதாரணமாக உடலுறவு தாம்பத்தியங்களில் ஏற்படும் உணர்ச்சிப் பூர்வமான சங்கதியாகும். பால் குடிக்க வேண்டுமென்று எண்ணத்தில் உருவாவதில்லை. உணர்ச்சி வசத்தால் முன்னுரை விளையாட்டுக்களில் ஏற்படும் ஒரு அசம்பாவிதம். இது போன்ற அசம்பாவிதங்கள் நபித்தோழர்கள் காலத்திலும் ஏற்பட்டுள்ளது. அதற்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது.

ஒரு நபர் அபூமூஸா(ரழி) என்ற நபித்தோழரிடமும் வந்து தனக்கு நிகழ்ந்த அந்த அசம்பாவிதத்தைக் கூறி விடை கேடுகிறார். “நான் என் மனைவியின் மார்பகத்திலிருந்து பால் அருந்தி விட்டேன். அது என் வயிற்றுக்குள் சென்று விட்டது. அவள் எனக்கு நிச்சயமாக ஹராமாகிவிட்டாள்” என் கருதுகிறேன் என்றார்.

அப்போது(அருகிலிருந்து) இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் “இவர் என்ன தீர்ப்பளிக்கிறார் என்று பாருங்கள்!” என ஆட்சேபித்தார்கள். உடனே அபூமூஸா(ரழி) அவர்கள் “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று விளக்கம் கேட்கிறார்கள். அதற்கு இப்னு மஸ்ஊத்(ரழி)  இரண்டு வயதிற்குட்பட்டு இருந்தால் மட்டுமே பால்குடி உறவு சட்டம் (அமுலாகும்) என்றனர்” (யஹ்யாபின் சயீத்(ரழி), ஆத்தா இமாம் மாலிக்)

உங்களது கேள்விக்கு இந்த பதில் போதுமானதாக இருப்பினும் பால்குடி உறவு சிறுபிராயத்தில் உருவாகிறது என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டை அறிவுக்கு விருந்தாக்குகிறோம்.

அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) கூறுகிறார்கள். நான் இப்னு உமர்(ரழி) அவர்களுடன் “தாருல் கழா” என்ற நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தேன், அப்போது ஒரு மனிதர் வந்து பெரியவர்கள் ஒரு பெண்ணிடம் பால்குடிப்பதால் ஏற்படும் சட்ட நுணுக்கத்தைப் பற்றிக் கேட்டார்.

அதற்கு இப்னு உமர்(ரழி) தனது தந்தை உமர்(ரழி) காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்கள். ஒரு மனிதர் உமர்(ரழி) அவர்களிடம் வந்தார். அவர் தான் ஒரு அடிமைப்பெண்ணை மணமுடித்து உடலுறவு கொள்வதாகவும், தனது மனைவி(சக்களத்தி பொறாமையால்) நிர்ப்பந்தப்படுத்தி அவ்வடிமைப் பெண்ணுக்கு தனது மார்பகப் பாலை ஊட்டி விட்டாள் என்றும் கூறுகிறார்.

அதற்குப்பின் நான் அவ்வடிமைப் பெண்ணுடன் உடலுறவுக்குச் செல்கையில் “அவள் எனது பால் அருந்தி பால்குடி உறவாகிவிட்டாள். எனவே அவளுடன் போகிப்பது ஹராம்” என தடுக்கிறாள். இதற்கு என்ன விடை? என கேட்டார்.

அதற்கு உமர்(ரழி) அவர்கள்: உனது மனைவியை தண்டிக்கும் விதமாக அந்த அடிமைப் பெண்ணுடன் போகிப்பீராக! பால்குடி உறவு சிறு பிராயத்தில் (இரு வயதிற்குள்) உருவாவதுதான் (வயது வந்தபின் உருவானது அல்ல) என்றார்கள். இந்நிகழ்ச்சியை நாம் முஅத்தா இமாம் மாலிக் நூலில் கிதாபுர்ரதா என்ற பாடத்தில் காணலாம்.

ஐயம்: நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா? ஏ.உபைதுர் ரஹ்மான், தமாம்.

தெளிவு: இதற்கான விடையை நாம் அக்டோபர் 1986  இதழில் கொடுத்திருந்தோம். மேலும் சில விளக்கங்களை இவ்விதழில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தருகிறோம்.

ஆதமுடைய மக்களே! நிச்சயமாக நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (இறை பக்தி) என்னும் ஆடையே அதைவிட மேலானது. (அல்குர்ஆன் 7:26)

இவ்வசனத்தில் ஆடையின் உபயோகத்தை அல்லாஹ் அழகாக விளக்குகிறான். மானத்தை மறைக்கவும், அலங்காரமாகவும் ஆடையை தந்ததாக அல்லாஹ் அறிவிக்கிறான். நாம் அணியும் ஆடை முதன் முதலாக நமது மானத்தை மறைக்க வேண்டும் என்பதை அறிகிறோம். இவ்வசனத்தின் முடிவில் தக்வா (இறைபக்தி) என்னும் ஆடையைப் பற்றியும் குறிப்பிடுகிறான். இதனை கீழ்வரும் வசனத்தில் காண்க.

அவர் (மனைவியர்)கள் (மாதவிடாயிலிருந்) தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூய்மையடைந்தபின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கிறானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:222)

இவ்வசனப்படி அல்லாஹ் எப்படி நபி(ஸல்) மூலம் கட்டளையிட்டிருக்கிறானோ அதன்படி செயல்படுவதுதான் தக்வா (இறைபக்தி) ஆகும் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதுவே சிறந்த ஆடையெனவும் விளம்புகிறான். எனவே ஆடையின் உபயோகத்தை விளக்கிய அல்லாஹ் மேலும் தாம்பத்திய உடலுறவைப் பற்றி விளக்குவதையும் பார்ப்போம். அதன்படி செயல்படுவோமாக!

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாகும். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:223)

இவ்வசனத்தில் மனைவியரை விளை நிலத்திற்கு ஒப்பிடுகிறான் அல்லாஹ். அவ்விளை நிலங்களுக்கு உங்கள் விருப்பப்படி செல்லவும் அனுமதியளிக்கிறான். நமது விருப்பப்படி செய்வதை அனுமதித்த அல்லாஹ்வும், அவனது ரசூல்(ஸல்) அவர்களும் அதற்கும் ஒரு சில வரைமுறைகளை வகுத்திருப்பதை குர்ஆன், ஹதீஸ்களில் காணுகிறோம். மாதவிடாயின்போது உடலுறவு தடுக்கப்பட்டுள்ளது. உடலுறவை எந்த முறையில் செய்தாலும், செய்ய வேண்டிய இடத்தில் தான் செய்யவேண்டும். பின்துவாரத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது போன்ற வரையறைகளைக் காணுகிறோம். இதனைத் தவிர அவர்கள் உடைகளின்றி நிர்வாணமாக இருப்பதை தடுத்துள்ளதற்கான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படவில்லை மாறாக,

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 2:187)

ஆடையின் உபயோகத்தை அல்லாஹ் 7:26 வசனத்தில் விளக்கியுள்ளான். இவ்வசனத்தில் கணவன், மனைவிக்கு ஆடையாகவும், மனைவி, கணவனுக்கு ஆடையாகவும் உடலுறவின் போது இருப்பதாக கூறுகிறான். அதாவது ஒருவருக்கொருவர் தங்களது மானத்தை காக்கவும், அலங்காரமாகவும் ஆடையாக உள்ளனர் என்பது தெளிவு. எவரது பார்வையுமின்றி தனித்து நடைபெறும் உடலுறவில் கணவன், மனைவி எங்ஙனமிருக்க வேண்டுமென்பதை இவ்வசனம்  உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்குவதைப் பாருங்கள். அங்கு புற உடைகளை விட ஒருவருக்கொருவர் ஆடையாக இருப்பதையே விளக்குகிறான். இதை இன்னும் தெளிவாக்குவதைப் பாரீர்.

மேலும் அவர்கள் தங்களுடைய மர்ம ஸ்தானங்களை (புகுஜனம்) காத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் மனைவிகளிடமோ, அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – இவர்களிடம் உறவு கொள்வது கொண்டு நிச்சயமாக பழிக்கப்படமாட்டார்கள். ஆனால் இதற்குப் புறம்பாக எவர் நாடுகிறாரே. அத்தகையவர் வரம்பு மீறியவர்களாவார்கள். (அல்குர்ஆன் 23:5-7, 70:29-31)

உமது மர்ம உறுப்புகளை உன் மனைவியிடமும், உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்றவர்களிடம் பாதுகாத்துக் கொள்வீராக! என்ற நபிமொழியும் இதனை வலுப்படுத்துகின்றது. (பஹ்ஸ் இப்னு ஹகீம்(ரழி), அபூதாவூத், திர்மிதி)

மேலே கண்ட குர்ஆன், ஹதீஸ் வசனங்களில் “மர்ம உறுப்புக்கள்” என குறிப்பிட்டுச் சொல்லப்பட்டதிலிருந்து கணவன் மனைவிகளுக்கிடையில் அவரவர் மர்ம உறுப்புகள் பார்வையில் பரிச்சயமாவது தவறில்லை என்பது உணரலாம். நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆடையாக அமையலாம் என்பதையும் அறியலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம்: இறைவன் தன்னுடைய திருமறையில் “நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயன்படுவதெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம்”. (35:28)

அப்படி என்றால் கல்வியறிவு இல்லாதவர்கள் இறைவனுக்கு பயப்படவில்லையா? குர்ஆன் கல்வியாளர்களுக்கு மட்டும் அருளப்பட்டதா? விளக்கம் தேவை. எலத்தை இப்னு ஸாலெஹ், துபை.

தெளிவு: தாங்கள் குறிப்பிட்டுள்ள மொழி பெயர்ப்பு 35:28க்குரிய சரியான மொழி பெயர்ப்பல்ல. அதற்குரிய சரியான மொழியாக்கம் வருமாறு.

“நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவர்களே ஆலிம்கள்”.

இதனை அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான். (2:282) என்ற இறைவாக்கு ஊர்ஜிதம் செய்கிறது. நபித்தோழர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரைத் தவிர எஞ்சியுள்ள இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அரபி எழுதவோ, படிக்கவோ தெரியாது. அவர்கள் எந்த அரபி மதரஹாக்களிலும் கல்வி பயிலவுமில்லை; மவ்லவி பட்டம் பெறவும் இல்லை. ஆனால் அவர்கள் அனைவருமே ஆலிம்களாய் திகழ்ந்தார்கள். மதரஸா சென்று கல்வி கற்றோர் தான் ஆலிம்கள் என்ற தவறான நம்பிக்கை இந்தச் சமுதாயத்தில் ஆழ வேரூன்றிவிட்டது. இந்த தவறான நம்பிக்கையை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்தெறியாதவரை இந்த சமுதாயத்திற்கு விமோசனமுமில்லை, ஈடேற்றமுமில்லை.

ஐயம்: நெஞ்சில் கை கட்டவேண்டுமென்பதற்கான ஆதாரம் என்ன? குளச்சல் பி.என். முஹம்மது, மங்களூர்.

தெளிவு: தொழுகையில் கையைக் கட்டும் விஷயத்தில் காணப்படும் ஹதீஸ்களில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ், வாயிலுப்னு ஹுஜ்ரு(ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்டு இப்னு குஸைமாவில் பதிவாகியுள்ளது. அதில் நெஞ்சில் கை கட்டுவதற்குரிய ஆதாரம் இருக்கிறது.

ஐயம்: அத்தஹிய்யாத்தில் விரலை ஆட்டுவதற்குரிய ஆதாரமென்ன? குளச்சல் பி.என்.முஹம்மது மங்களூர்.

தெளிவு: நபி(ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில்) தமது இடக்கையை இடது தொடை மீதும், முட்டுக்காலின் மீதும (சேர்ந்த அமைப்பில்) வைத்து, இவ்வாறே வலக்கையை வலது தொடை மீது வைத்துக்கொள்வார்கள். பின்னர் (கண்டு விரல், மோதிர விரல் ஆகிய) இரு விரல்களையும் மடக்கியவர்களாக, (இந்நிலையில் நடுவிரலும் ஓரளவு மடக்கியேயிருக்கும்) நடுவிரல் மேல், கட்டை விரலை(சிறிது) வளைத்து வட்டமாக வைத்துக்கொண்டு, துஆ ஓதியவர்களாக தமது கலிமா விரலை அசைத்த வண்ணம் இருந்து கொண்டிருந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். (லாயிலுபின் ஹுஜ்ரு(ரழி), அபூதாவூத, நஸயீ, அஹ்மத்)

ஐயம்: ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் மரணிக்கும் தருவாயில் அவர்களின் உருக்கும் சட்டை யூதரிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்ததால், ஸஹீஹான ஹதீஸ் இருப்பதாய் பிப்ரவரி நஜாத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் நாமும் அடமானம் வைக்கலாமா? ஏ.உபைதுர்ரஹ்மான், தம்மாம் சவூதி அரேபியா

தெளிவு: நபி(ஸல்) அவர்களுக்கு வட்டியில்லா கடன் கொடுத்த நிலையில் உத்திரவாதம் வேண்டி அந்த யூதர் நபி(ஸல்) அவர்களின் உருக்குச் சட்டையை வாங்கி வைத்துக்கொண்டார். அந்த அடிப்படையில் நாமும் உத்திரவாதத்திற்காக எப்பொருளை மேலும் கொடுத்து வட்டியில்லாக் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

ஐயம்: வரம்பு மீறாத கவிதைக்கு இஸ்லாத்தின் இடமுண்டா? மவ்லூது கவிகளில் ஆட்சேபனைக்குரிய வரிகளை நீக்கிவிட்டு ஓதலாமா? யூ.எம்.நூர் முஹம்மது, சிங்கப்பூர்.

தெளிவு: (நம்முடைய தூதராகிய அவருக்கு நாம் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தேவையானதும் அல்ல. (36:69)

இன்னும் கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதை(நபியே) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் தாங்கள் செய்யாததைச் (செய்ததாகச்) சொல்வார்கள். ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, நல்லமல் செய்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து, தங்களுக்கு அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழி தீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகளே) (26:224-227)

நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸானுபின் ஸாபித்(ரழி) அவர்களுக்கு பள்ளிவாசலில் மேடை அமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதன்மீது அவர் நின்றுகொண்டு நபி(ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடுவதோடு, நபி(ஸல்) அவர்களை விமர்சித்துப் பாடியவர்களுக்கு எதிராக மறுப்புத் தெரிவித்தும் பாடுவார்கள். (அது சமயம்) நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் ஹஸ்ஸானுபின் ஸாபித் அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப் புகழ்ந்தும், அவர்களை விமர்சித்துப் பாடியவர்களுக்கு எதிராக மறுப்புத் தெரிவித்தும், பாடும்போதெல்லாம் “ரூஹுல் குத்ஸ்” என்னும் ஜிபிரீல்(அலை) அவர்களைக் கொண்டு உதவி அளிக்கிறான் என்று கூறுவார்கள். (ஆயிஷா(ரழி), புகாரி)

நபி(ஸல்) அவர்கள் “குரைழா”வின் யுத்தத்தின்போது ஹஸ்ஸானுபின் ஸாபித்(ரழி) அவர்களை நோக்கி நீர் முஷ்ரிக்குகள் (ஆகிய தமது எதிரிகள்) மீது வசைபாடுவீராக! நிச்சயமாக ஜிப்ரீல் உம்முடன் இருந்து கொண்டிருக்கிறார் என்றார்கள். மேலும், ஹஸ்ஸான்(ரழி) அவர்களை நோக்கி நீர் என் சார்பில்(எதிரிகளுக்கு) பதில் அளிப்பீராக! என்று கூறிவிட்டு யாஅல்லாஹ்! இவருக்கு “ரூஹுல் குத்ஸ்” என்னும் ஜிப்ரீல் அவர்களை பக்க பலமாக்குவாயாக! என்ற துஆவும் செய்வார்கள். (பர்ராஉ(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடத்தில் கவிதையைப் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. அப்போதவர்கள் அது (மக்களால் பேசப்படும்) வார்த்தையே, அதில் நல்லது நல்லதுதான், கெட்டது கெட்டதுதான் என்று அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா(ரழி), தாருகுத்னீ)

ஒருமுறை கஃபுபின் மாலிக்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ் கவிஞர்களை விமர்சித்து (சில ஆயத்துக்களை அருளியிருக்கிறானே? என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக மூமீனானவன் தனது வாளைக் கொண்டும், தனது நாவைக் கொண்டும் போராடுகிறான் என்று கூறிவிட்டு, எவனது கரத்தில் எனது உயிர் உள்ளதோ அத்தகையவன்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். கவிதையின் மூலம் நீங்கள் குத்தும் குத்து அம்பினால் குத்தும் குத்தைப் போன்றதாகும் என்றார்கள். (கஃபுபின் மாலிக்(ரழி), அஹ்மத்)

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் லபீத் என்னும் கவிஞரின் கவிதைகளில் “அலா குல்லு ஷையின் மாகலல்லாஹு பாத்திலு” எனும் வாசகம் மிகவும் உண்மையானதாகும் என்றார்கள்.

பொருள்: “அல்லாஹ் சம்பந்தப்படாத அனைத்துப் பொருள்களும் வீனே. (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் உற்று நோக்கும்போது வரம்புகளுக்கு உட்பட்டு கவிதைகளுக்கு அனுமதி உண்டு என்பது தெரிகிறது. மார்க்கத்தைப் போதிக்க வந்த நபி(ஸல்) அவர்களுக்குக் கவிதை தேவையானது அல்ல என்று அல்லாஹ் தெளிவாகவே கூறியுள்ளான். எனவே கவிதைகளைக் கொண்டு மார்க்கத்தை போதிக்க முற்படுவது நபி வழியல்ல. அதே சமயம் எதிரிகளால் தாக்கப்படும்போது நபி(ஸல்) அவர்கள் சில நபித்தோழர்களைக் கொண்டு கவிதையில் பதிலளிக்க ஏவியுள்ளார்கள். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்பதை 26:227 இறைவாக்கு உண்மைப்படுத்துகிறது. உதாரணமாக, இன்று சல்மான்ருஸ்தி என்பவன் “சாத்தானிய கவிதைகள்” என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களையும், அவர்களின் மனைவிமார்களான  முஃமின்களின் தாய்மார்களையும், நபித்தோழர்களையும் பற்றி மிக இழிவாக எழுதியுள்ளான். இந்த நூலுக்கு மறுப்பாக ஒரு முஸ்லிம் அழகிய முறையில் கவிதை வடிவில் பதில் அளித்து இஸ்லாத்தின் சிறப்பை மக்கள் முன் எடுத்து வைப்பாரானால் அது மிகவும் பாராட்டத்தக்கது. அதற்கு அல்லாஹ்விடம் நல்ல கூலியும் நிச்சயமாக உண்டு. அதே சமயம் அப்படிப்பட்ட கவிதைகளையோ. வரம்பு மீறாத கவிதைகளையோ அல்லது மவ்லூது கவிகளில் உள்ள ஆட்சேபனைக்குரிய வரிகளை நீக்கிவிட்டு எஞ்சியவற்றையோ தொழில், வியாபாரம், மற்றும் குடும்பங்களில் பரக்கத் உண்டாகும். நன்மைகள் ஏற்படும் என்ற குருட்டு நம்பிக்கையில் ஓதுவது பித்அத்தான-புதுமைச் செயலாகும். ஆனால் அக்கவிகளைப் பொருள் விளங்கப் படித்து அவற்றில் இருக்கும் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் ஒத்த கருத்துக்களை எடுத்துச் செயல்படுத்துவது கொண்டு நன்மைகள் கிடைக்கும்.

ஐயம்: ரமழான் மாதத்தில் சில பள்ளிவாசலில் முழு குர்ஆனை ஓதி தராவீஹ் தொழ வைக்கப்படுகிறது. அந்த ஜமாஅத்தில் ஒருவர் கலந்து கொண்டு தொழுவது பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது? U.M.நூர்முஹம்மது, சிங்கப்பூர்.

தெளிவு: நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவில் 8 ரகாஅத்தை மிக நீண்ட நேரம், நீண்ட கிராஅத்துடன் தொழுவதற்குரிய ஆதாரம் ஹதீஸ்களில் காணப்படுகிறது. எனவே ரமழான் இரவுத் தொழுகைகளில் முழு குர்ஆனையும் முறையாக ஓதி தொழுவதில் மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் முழுக் குர்ஆனையும் முடிப்பது ஸுன்னத் என்று சொல்வதற்கு ஹதீஸ் ஆதாரம் இல்லை.

ஐயம்: லைலத்துல் கத்ர் இரவுகளில் தஸ்பீஹ் தொழுகை ஜமாஅத்துடன் தொழ ஆதாரமுள்ளதா? U.M.நூர்முஹம்மது, சிங்கப்பூர்.

தெளிவு: தஸ்பீஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதற்கு ஹதீஸ் ஆதாரம் இல்லை.

Previous post:

Next post: