மெகா பெளர்ணமி

in 2011 மே,பிறை

 Y.முஹம்மது ஹனிஃபா, திருச்சி

நபியே! பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “”அவை மனிதர்களுக்கு, காலங்களையும் ஹஜ்ஜையும் குறிப்பிடுபவை” என நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189)

உலகெங்கும் 19.03.2011 அன்று மெகா பெளர்ணமி என்று பிரகடனம் செய்து அதை அங்கீகரித்துக் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கும்போது உலகின் எல்லா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் இந்த பெளர்ணமியால் ஏதாகிலும் மாற்றம் ஏற்படுகிறதா, பூமியின் சுழற்சியில் வானிலையில், கடலலையில், தட்பவெப்பத்தில் மற்றும் இது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது என்பனவற்றிலெல்லாம் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு ஆராய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், நமது முஸ்லிம் சகோதரன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? இவன் எப்பொழுது சிந்திக்கப் போகிறான்? விழிப்படையப் போகிறான்? என்ற ஏக்கத்தில் நாம் இருக்கும்போது, அவனின் நிலை என்ன?

தாருன்னத்வா காலத்தில் கண்மூடி இருளில் மூழ்கிப் போனவர்கள் போனார்கள். ஆனால் இவர்களுக்கு குர்ஆன் என்ற சூரியனும், ஹதீஸ் என்ற சந்திரனும் கிடைத்த பின்னரும் கண்களை மூடிக் கொண்டு இருளில் மூழ்கிப் போனார்களே!

அந்தோ பரிதாபம்! மாற்றாரின் பார்வையில் கேவலம்; மூன்றாம் பிறையை முதல் பிறை என்று கூறிக் கொண்டிருக்கிறானே என்ற ஏச்சு; இவர்கள் மூளையெல்லாம் பழைமை என்ற பேச்சு. இதற்கிடையில் கிரிகோரியன் காலண்டரில் இந்த பெளர்ணமி தினத்தை ரபியுல் ஆகிர் பிறை 13 என்று போட்டு நிம்மதியடைந்த பெரியார்கள். இதைப் பார்த்துக் கொண்டு ஆனந்தம் அடைந்த அவலர்கள்.
இதைவிடவும் கொடுமை “”நாங்கள் குர்ஆன் ஹதீஸ்படி நடக்கிறோம்” என்று மார்தட்டிக் கொண்டோர் “உண்மையை அது உண்மை என்றறிந்த பின்னரும்; தம் சொந்த பிள்ளையை பெற்றோர் அறிவது போல் அறிந்த நிலையிலும் புறங்காட்டிப் பின்வாங்கிச் சென்றவர்கள் போல் அச்சாக, அசலாக அப்படியே ஆகிப் போனவர்களை என்னவென்று சொல்வது? நாவு கூசுகிறதே! உள்ளம் நடுங்கிறதே!!

காலம் காலமாக குர்ஆனில் விஞ்ஞான உண்மைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே; சவால்கள் விடப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே. அதைப் பொய்யாக்க ஆராய்ந்தோரின் உள்ளங்கள் படைத்தோனின் படைப்பைக் கண்டு அந்த கண்கள் நிலைக்குத்தி திரும்பி விட்டனவே.

இப்படிப்பட்ட உண்மைகளை அறிந்தும் புரிந்தும் விஞ்ஞானம் அறிவியல் கண்டுபிடிப்பின் உண்மைகள் இஸ்லாத்துக்கு மாற்றமானதல்ல என்ற மெகா உண்மையை முழுவதுமாக சோத்துக்குள் மறைக்கவன்றோ பார்க்கிறார்கள். இருளில் மூழ்கிக் கிடக்கும் மத்ஹப் பிரிவினரை விட இவர்கள் நான்காம் பிறையை முதற்பிறை என்றும், இரண்டாம் பிறையை (பார்க்கா மலேயே பார்த்து விட்டதுபோல்) முதற் பிறையென்றும் பிதற்றிக் கொண்டு பிடிவாதம் பிடிப்பது அல்லாஹ் குர்ஆனில் கூறியதுபோல் (பார்க்க 3:14) மனதுக்கு ஆசையூட்டப்பட்டவற்றை நேசிப்பது இவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. மேலே சொன்ன ஆயத்தின்படி இவ்வுலக இன்ப அற்பமான காசு, பணம், பங்களா, ஏ.சி, புகழ், பதவி, இத்தியாதி, இத்தியாதி இவைதானே காரணம். இதற்காக இவர்கள் 28:50 வசனத்தின்படி நேர்வழியன்றி தன் மனோ இச்சையைப் பின்பற்றி மிகவும் வழிகெட்டவர்கள்.

அன்றைய நபிமார்களெல்லாம் மேற்கண்ட அத்தனை உலக இன்பங்களையும் (அமைப்பு, செயலர், தலைவர், வங்கிக் கணக்கு) போன்றவைகளையும் வைத்துக் கொண்டா இந்த உலகில் தீனை நிலை நாட்டினார்கள்; தவ்ஹீதைத் தக்க வைத்தனர் என்ற உண்மையெல்லாம் இவர்களுக்கு இந்த உலக இன்பம் என்ற மேகத்தால் மறைக்கப் பட்ட மெகா பெளர்ணமியாகிவிட்டது.

“”நாம் விண்கலையை அறியாதவர்களாய் இருக்கிறோம்” (புகாரி, முஸ்லிம்) என்ற நபி மொழியில் பிற்காலத்தில் விண்கலையை அறிவார்கள் என்ற முன்னறிவிப்பு, ருஃய ருஃய பார்த்து, பார்த்து என்ற (அக்கால) பதத்தை அறிவார்கள் என்ற முன்னறிவிப்பு மாற்றிவிட்டதை இவர்கள் உணரவில்லை. (அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான் என்ற வசனத்தின்படி ஆனார்கள்.)

விக்கித்து ஏங்கி நிற்கும் நாங்கள் வெளிவரும் காலத்தால் வெளிவரும், அப்போது இந்த புல்லுருவிகள், நுரைகள், துருக்கள் எல்லாம் அகன்று உண்மை புலப்படும்; அறிவு பலப்படும். அந்த நாள் வரும் ஏக்கம் அகன்று மேகம் விலகி நிலவு தென்படும் முதல் பிறை முதற் பிறையாக, கடிகாரத்தைப் போல், ஹிஜ்ரி ஆண்டை, ஹிஜ்ரி மாதத்தை, ஹிஜ்ரி தேதியை கடைபிடிக்கும் காலம் விரைவில் வரும். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: