விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 1989 ஏப்ரல்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

காலத்தையும், பணத்தையும் செலவிட்டு படித்துப் பட்டம் பெற்ற டாக்டரை நம்பி வைத்தியம் செய்து கொள்வதை ஒப்புக்கொள்கிறீர்கள். அதேபோல் பட்டம் பெற்ற தொழில் புரியும் வக்கீலை நம்பி அவரிடம் வழக்குகளை ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் காலத்தைச் செலவிட்டு, சிரமப்பட்டுப் படித்துப் பட்டம் பெற்ற மவ்லவிகளை நம்பி மார்க்க காரியங்களை ஒப்படைப்பதை மட்டும் நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்? சையது முஹம்மது, சென்னை -10

மார்க்கத்தில் உள்ள ஒன்றை தாமாக மறுப்பதற்கு நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? குர்ஆன் மறுக்கச் சொல்வதால் மட்டுமே மறுத்து வருகிறோம். டாக்டர் வக்கீல் போன்றோரை நம்பிச் செயல்படுவதை தடை செய்யாத அல்லாஹ், மார்க்கத்தில் மற்றவர்களை நம்பிச் செயல்படுவதை மிகத் தெளிவாகத் தடை செய்துள்ளான். அதாவது “உங்கள் ரப்பிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி வேறெவரையும் பாதுகாவலர்களாக்கி, அவர்களைப் பின்பற்றாதீர்கள். (எனினும் இதன்படி) நல்லுணர்வு பெறுவோர் உங்களில் வெகு சொற்பமே (7:3) என்று ஐயத்திற்கிடமின்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்த உண்மையை அதிகமானோர் உணர மாட்டார்கள் என்பதையும் அவனே குறிப்பிடுகிறான். முறையாகச் சிந்திப்பவர்கள் அல்லாஹ்வின் இந்த கட்டளையிலுள்ள உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும்.

1. மக்கள் அனைவரும் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆக வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு சிலர் டாக்டர்களாகவும், வக்கீல்களாகவும் இருந்தால், எல்லா மக்களின் இத்துறைகள் சம்பந்தப்பட்ட தீர்க்க முடிந்த பிரச்சனைகளைத் தீர்த்துவிட முடியும்.

ஆனால் அதற்கு மாற்றமாக அனைவரும் மார்க்கத்தை அறிந்து செயல்படுபவர்களாக இருப்பது கடமையாக இருக்கிறது.

2. டாக்டர்கள், வக்கீல்கள் தாங்கள் கற்று, பட்டம்பெற்ற கல்வியைக் கொண்டு பிழைப்பு நடத்தவும், அதைனைக் கொண்டு பொருளீட்டவும் தடை இல்லை.

ஆனால் மார்க்க அறிவைப் பெற்றவர்கள், அதனைக் கொண்டு பிழைப்பு நடத்தவோ, பொருளீட்டவோ அனுமதி இல்லை. காரணம் மார்க்கத்தைக் கற்றுக்கொள்ள கடமைப்பட்ட அனைவரும் கற்றுக் கொள்வதில் தடை ஏற்படுகின்றது.

3. டாக்டர்களை, வக்கீலு்களை நம்பிச் செயல்படுகிறவர்கள் தங்கள் அனுபவத்திலேயே அந்த நம்பிக்கை சரியா? தவறா? என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. வைத்தியத்தில் காணக் கிடைக்காவிட்டால், அந்த டாக்டரின் மீது நம்பிக்கை இழந்து வேறு டாக்டரைப் பார்த்துச் செல்கிறார்கள். வக்கீல் கேஸை ஜெயித்து கொடுக்காவிட்டால் வேறு வக்கீலைப் பார்த்துச் சென்று விடுகின்றனர். சாகும் வரை அவர்களை நம்பிச் செயல்பட்டு நஷ்டமடையும் நிலை இல்லை.

ஆனால், மார்க்க விஷயத்தில் ஒருவரை நம்பிச் செயல்படுகிறவர் சாகும் வரை அவரை நம்பியே செயல்படுகிறார். அந்த நம்பிக்கையின் பலனை இங்கு பார்க்க முடிவதில்லை. மறுமையில் பார்க்க வேண்டியவராக இருக்கிறார். உதாரணமாக, இறந்து போனவர்களிடம் நம்முடைய தேவைகளைக் கேட்பது மார்க்க முரணான காரியம் இல்லை என்று ஒரு மவ்லவி சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மவ்லவியை நம்பிச் செயல்படுகிறவர்கள் அதன் நஷ்டத்தை மறுமையில் தான் பார்க்கப் போகிறார்கள். இங்கு அனுபவத்தில் கண்டு அந்த மவ்லவியைவிட்டு வேறு நல்ல மவ்லவியை நம்பிச் செயல்படுவது நிரந்தர நஷ்டத்தை உண்டாக்கி அவரை நரகில் சேர்க்கிறது. அதனால் தான் டாக்டரை, வக்கீலை நம்பிச் செயல்படும் மனிதன் மவ்லவிகளை நம்பிச் செயல்படுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லை.

இமாம் கொமேனியின் கத்ல் பத்வாவை நீங்கள் ஆதரிக்காததற்குக் காரணம் என்ன? எம்.ஐ.செய்யது முஹம்மது ஸாலிஹ், காயல்பட்டினம்.

சில இஸ்லாமிய பத்திரிக்கைகள் கொமேனியின் இச்செயலை ஆதரிக்கின்றனவே? இது சரியா? அப்துல் ஹமீது, திருச்சி-14.

குர்ஆன், ஹதீஸ் வழியில் அதற்கு இடம்பாடு இருப்பதாக நமக்கு தெரியவில்லை. அவரது அந்த பத்வாவில் இரண்டு தவறுகள் காணப்படுகின்றன.

சல்மான் குஸ்தி கொடிய குற்றவாளி, அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதில் நமக்குக் கருத்து வேறுபாடில்லை, ஆனால் அந்த தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் பெற்றவர் யார்? என்பதிலேயே நமக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது. அதிகாரப் பொறுப்பில் இருக்கும் கலீபா சாட்சி இல்லாத நிலையில, அவர் மட்டும் கண்ணால் கண்ட பிறையை ஆதாரமாக வைத்து நோன்பை விட ஆணையிட முடியாது.

தன் மனைவி சோரம் போவதை தனது கண்ணால் காணும் கணவன் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவோ அல்லது அதிகாரியிடம் முறையிட்டு, நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் அந்த தண்டனையைப் பெற்றுக் கொடுக்கவோ அதிகாரம் பெற மாட்டார். மார்க்கம் இவ்வளவு தெளிவாக இருக்கிறது.

இங்கிலாந்தில் ஒரு முஸ்லிம் திருடிவிட்டான் என்பதற்காகவோ, விபச்சாரம் செய்து விட்டான் என்பதற்காகவோ, கொலை செய்து விட்டான் என்பதற்காகவோ இமாம் கொமேனி அவனுக்குத் தண்டனை அளிக்கும் அதிகாரம் பெறமாட்டார். அவரது அதிகாரமெல்லாம் அவரது ஆட்சிக்குக் கட்டுப்பட்ட பகுதியில் மட்டுமே. ஈரான் நாட்டில் ஒரு முஸ்லிம் திருடி விட்டான், அல்லது விபச்சாரம் செய்து விட்டான் அல்லது கொலை செய்துவிட்டான் அல்லது சல்மான் ருஸ்தியைப் போல் முர்த்தத் ஆகிவிட்டான். இதனைக் கண்ணால் கண்ட இன்னொரு முஸ்லிம் அவனுக்குரிய தண்டனையை வழங்கினால் அது முறையாகுமா? இமாம் கொமேனி அப்படி தண்டனை வழங்கிய முஸ்லிமைப் பாராட்டிப் பரிசு கொடுக்க முன் வருவாரா? அப்படி இடம் கொடுத்தால் ஈரான் நாட்டின் சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாட்டில் இருக்குமா? சிந்தித்துப் பாருங்கள். ஈரான் அரசாங்கமும் அவனை முறையாக விசாரித்தே தண்டனைத் தரமுடியும்.

மக்களுக்கிடையேயும், நாடுகளுக்கிடையேயும் இருக்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு, நல்லுறவு நிலைத்திருக்க இஸ்லாம் அழகிய வழிமுறைகளைத் தந்திருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் தனது ஆட்சி அதிகாரத்திற்கு வெளியே இருந்த யாரையும் அந்த நபர் செய்த குற்றத்திற்காகத் தண்டிக்க ஆதாரம் இருக்கிறதா? என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல முடியும். குற்றவாளிகளைத் தண்டிக்க அதிகாரம் பெற்றவர்கள் இப்படிப்பட்டவர்களே என்று இஸ்லாம் தெளிவாக வரையறை செய்திருக்கிறது. இஸ்லாத்தின் வரையறையை மீறி, இமாம் கொமேனி தனது கத்ல் பத்வாவை கொடுத்துள்ளார். அதன் காரணமாக மற்ற நாடுகளுக்கிடையே இருக்க வேண்டிய நல்லுறவுகள் கெட்டு, “இஸ்லாம்” காட்டுமிராண்டித்தனத்தைப் போதிக்கும் மதம் (மார்க்க நெறி அல்ல) என்ற தப்பான எண்ணத்தை முஸ்லிம் அல்லாதாரிடம் ஏற்படுத்தி உள்ளார்.

இமாம் கொமேனி செய்துள்ள இரண்டாவது தவறு சல்மான் ருஷ்தியைக் கொலை செய்பவனுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் பரிசாகக் கொடுப்பதாக அறிவித்ததாகும். மார்க்கக் காரியங்கள் அல்லாஹ்வுக்காகச் செய்யப்பட வேண்டும். பணத்தில் ஆசை வைத்து அதைச் செய்கிறவன் எப்படி அல்லாஹ்வின் பொருத்தம் பெற முடியும்? இது எப்படி மார்க்கத்திற்காகச் செய்யப்பட்ட காரியமாக ஆக முடியும். நபி(ஸல்) அவர்கள் அப்படி பரிசு கொடுத்ததாக ஆதாரம் இருக்கிறதா? பணத்தைக் காட்டி ஆசை காட்டினால் குற்றவாளியை அல்ல, மிகச் சிறந்த ஒழுக்கப் பண்புள்ள உத்தம புருஷனையும் கொலை செய்துவிட்டு பணத்தைப் பெறவே மனிதமனம் விரும்பும். எனவே பணம் பரிசாகக் கொடுப்பதாக அறிவித்தது மாபெரும் தவறாகும்.

இமாம் கொமேனி ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்திலிருந்தே இப்படிச் சில இஸ்லாத்திற்குப் பொருந்தாத காரியங்களை இஸ்லாத்தின் பேரால் செய்து வருகிறார். மறுமையைவிட இம்மையை அதிகமாக நேசிக்கும் லவ்கீக மனம் படைத்தவர்கள் மட்டுமே இமாம் கொமேனியின் இப்படிப்பட்ட செயல்களை ஆதரிக்க முடியும்.

ஒரு மவ்லவிக்கும் எனக்கும் ஏற்பட்ட விவாதத்தில் அவர். “நீ என்ன ஆலிமா? அரபிப் படித்து அர்த்தம் ்சொல்லத் தெரியுமா? எனக் கேட்டு மிஷ்காத் அரபி நூலைக்காட்டி “இதில் சில வரிகளைப் படித்து அர்த்தம் சொல்லிவிட்டால் நீ சொல்வதை எல்லாம் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று வாதம் செய்தார். எனது நண்பர்களும் அவரின் வாதத்தைச் சரிகாண்கின்றனர். அவரின் வாதம் குர்ஆன் ஹதீஸ்படி சரியா? கே.ஷாஹுல் ஹமீது, தென்னூர்.

இந்த மவ்லவிகள் இப்படி பொது மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பதைச் சில இடங்களிலிருந்து நமக்கு வரும் தகவல்கள் உணர்த்துகின்றன. இத்தகைய மவ்லவிகள் மக்களுக்கு “அரவி படிக்கத் தெரிந்தவன் தான் ஆலிம்” என்று போதித்து வைத்திருந்தால், சாதாரண மக்களும் அவர்களின் இந்த தவறான வாதத்தை ஏற்று. ஏமாறுகின்றனர். உண்மை அதுவல்ல. அவர்கள் அரபி மொழியைக் கற்றிருப்பதைப் பெருமையாக எண்ணிக் கொள்கின்றனர். குறிப்பிட்ட உங்கள் மவ்லவியை விட மிகத் திறம்பட அரபி எழுதிப் படிக்கவும், பேசவும் கற்றுக் கொண்ட பல முஸ்லிம் அல்லாதாரை காட்ட முடியும். அவர்கள் சொல்வதை உங்கள் மவ்லவி மார்க்கமா ஏற்கத் தயாரா? என்று கேளுங்கள். இன்று அரபி அகராதியையே வேதக்காரர்கள் தான் தயாரித்துக் கொடுத்துள்ளனர். எல்லா அரபி மதரஸாக்களிலும் அந்த அகராதியே காணப்படுகிறது. குர்ஆனை மனனமிட்ட, அரபி, கற்ற யூத கிறிஸ்தவர்கள் பலரை நாம் காட்ட முடியும். அவர்களை எல்லாம் ஆலிம்களாக ஏற்று, அவர்கள் பின்னால் இவர்கள் செல்லத் தயாரா? அரபி மொழியை ஆலிம்களுக்குரிய அளவு கோலாள வைப்பது எவ்வளவு பெரிய அறிவீனம் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்.

அரபி மொழி கற்றிருப்பது ஆலிம்களுக்குரிய அளவுகோல் என்றால் நபி(ஸல்) அவர்களும், விரல்விட்டு எண்ணக்கூடிய நபித்தோழர்களைத் தவிர எஞ்சியுள்ள லட்சக்கணக்கான நபித்தோழர்களும் ஆலிம்கள் இல்லை என்றே சொல்ல வேண்டிவரும். ஹுதைபியா உடன்படிக்கையின்போது முஹம்மது ரசூலுல்லாஹ் என்று எழுதியதைக் குறைஷித் தலைவன் ஆட்சேபித்து அதை அடிக்கச் சொன்னான். அதை எழுதிக் கொண்டிருந்த அலீ(ரழி) அவர்கள் அதனை தங்கள் கையால் அடிக்க மறுத்துவிட்டனர். நபி(ஸல்) அவர்கள் அதனை அடிக்க, அந்த வாசகம் எங்கிருக்கிறது என்று தெரியாமல் அதனைக் காட்டச் சொல்லி, அரபி படிக்கத் தெரிந்திருந்து அலி(ரழி) அவர்கள் காட்டிய இடத்தைத் தங்கள் திருக்கரத்தால் அடிக்கின்றனர். (பர்ராஉ(ரழி) – ஜிஹாத் பாடம் – முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்களின் நிலை மட்டுமல்ல;  லட்சத்திற்கு மேற்பட்ட நபித்தோழர்களின் நிலையும் இதுவாகவே இருந்தது. இன்று மவ்லவி அல்லாத நம்மிலே பலருக்கு அரபி மொழி தெரியாவிட்டாலும் வேறு ஒன்றிரண்டு மொழிகள் தெரியும். நம்மில் பலருக்கு குர்ஆனைப் பார்த்து ஓத முடியும். ஆனால் அந்த நபித்தோழர்கள் எந்த ஒரு மொழியும் எழுதப்படிக்கத் தெரியாத உம்மிகளாகவே இருந்தனர். சூரத்துல் பாத்திஹாவின் முதல் வசனமான “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று மட்டும் ஒரு தோலில் எழுதி அதனைப் படிக்கும்படி அவர்களிடம் காட்டினால் அதைக் கூட அவர்களுக்குப் படிக்கத் தெரியாது. அவ்வளவு தூரம் போவானேன். அவர்களின் சொந்தப் பெயரை அரபியில் எழுதிக்காட்டி வாசிக்கச் சொன்னால், அது கூட அவர்களுக்குத் தெரியாது. உங்களை மிஷ்காத்தைப் படித்துக் காட்டச் சொன்ன மவ்லவி அந்த நபித் தோழர்களை எல்லாம் ஆலிம்கள் இல்லை என்று சொல்லப் போகிறாரா? அந்தத் துணிச்சல் அவருக்குண்டா? இப்படிப்பட்டவர்கள் பிற்காலத்தில்  தோன்றுவார்கள் என்று தான்,

“அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான ஒரு தூதரை அவர்களிலிருந்தே (அவருக்கும் எழுதப்படிக்கத் தெரியாது) அனுப்பி வைத்தான். அவர்களோ அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (இவர்களுக்காகவும்) இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும் (தூதராக அனுப்பி வைத்தான்) அவர் யாவரையும் மிகைத்தவன், ஞானமிக்கவன்”. (62,2,3)

என்று அன்றே வசனங்கள் இறக்கி குர்ஆனில் இடம்பெறச் செய்யும் மார்க்கத்திற்கு உரிமை கொண்டாட எழுதப்படிக்கத் தெரிந்தவர்களைவிட, எழுப்படிக்கத் தெரியாதவர்களே முன்னுரிமை பெற்றுள்ளனர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிலைநாட்டியுள்ளார். இதற்கு ஆதாரமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ் இதோ.

நிச்சயமாக நாம் எழுதப்படிக்கத் தெரியாத “உம்மியான சமுதாயம். நமக்கு எழுதவோ, கணக்குப் பார்க்கவோ தெரியாது என்று கூறிவிட்டு ஒரு மாதம் என்பது இப்படி இப்படி என்று தமது இரு கை விரல்கள் பத்தையும் விரித்துக் காட்டினார்கள். மூன்றாம் முறையாக ஒரு கையின் கட்டை வரலை மட்டும் மடக்கிக் கொண்டார்கள். மறுமுறை 10 விரல்களையும் (முழுமையாக) மும்முறை விரித்துக் காட்டினார்கள். முதல் முறை 29 நாள்கள் என்றும் மறுமுறை 30 நாள்கள் என்றும் தெளிவுபடுத்தினார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்).

உண்மையான ஆலிம்கள், குர்ஆன், ஹதீஸை அறிந்தவர்கள்  இந்த தவறான வாதத்தைச் செய்ய மாட்டார்கள். மவ்லவிகளுக்கு குர்ஆன், ஹதீஸ் எங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றது? அவர்கள் படித்த பிக்ஹு கிதாபிலுள்ள ஆதாரமற்றவைகளை எடுத்துச் சொல்கிறார்கள். இப்போது குர்ஆன், ஹதீஸை நேரடியாகக் கேட்டு தெளிவு பெற்று வரும் சகோதரர்கள் அவர்களிடம் அதனை நேரடியாகக் கேட்கும்போது பதில் சொல்ல முடியாமல் திணருகிறார்கள். பொது மக்களிடையே தங்களுக்கு இருக்கும் கெளரவம் பாதிக்கப்படுவதாக எண்ணிக்கொண்டு நீ ஆலிமா? அரபி படிக்கத் தெரியுமா? மிஷ்காத்திலிருந்து சில வரிகள் படித்துக் காட்டு, நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று கூறி, மக்களைத் திசை திருப்புகிறார்கள். உண்மையில் மிஷ்காத்தைக் கூட சரியாக வாசித்து, முறையாக விளக்கஞ் சொல்ல முடியாதவர்கள் பலர் இன்று மவ்லவிகள் என்று வெளிவந்து கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய மவ்லவிகளை சத்தியத்தை விளங்கி ஏற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மவ்லவிகளைத் தாக்காதீர்கள் என்று நல்லெண்ணம் கொண்ட சத்தியத்தைப் புரிந்து வரும் சில மவ்லவிகள் நம்மிடம் வேண்டுகின்றனர். இத்தகைய மவ்லவிகள் மக்களை இந்த அளவு மடையர்களாக ஆக்க முற்படும்போது, அவர்களை அடையாளம் காட்டாமல் இருப்பதை நேர்மையாக நாம் கருதவில்லை. அப்படி அடையாளம் காட்டத் தவறுவதன் விளைவே தங்களது நண்பர்களையும் இப்படி எண்ண வைக்கிறது.

மதரஸாவில் ஓதி அரபிக் கற்று மவ்லவி பட்டம் வாங்கியவர்கள் தான் ஆலிம்கள் என்று இன்று மக்களிடையே ஒரு தவறான எண்ணத்தை இந்த மவ்லவிகள் ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் அல்குர்ஆன் 35:28ம் வசனப்படி ஆலிம்கள் என்று அல்லாஹ் யாரைக் கூறுகிறான் என்றால், “நிச்சயமாக, அல்லாஹ்வுடைய அடியார்களில் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களே ஆலிம்கள்”

லட்சத்திற்கு மேற்பட்ட நபித்தோழர்கள் இத்தகைய ஆலிம்களாகத் திகழ்ந்தார்களேயன்றி இன்று இவர்கள் கூறுவதுபோல் அரபி படிக்கத் தெரிந்த ஆலிம்களாக இருக்கவில்லை.

கீழக்கரையில் “இஸ்ராயீல்” என்பவன் தனக்கு வஹி வருவதாகவும், தன்னை நபி என்றும் பிரசுரங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறானே? எஸ்.ஏ.லியாகத்அலி, திருச்சி-8.

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன். மேலும் எனது அருட்கொடைகளை உங்கள் மீது பரிபூரணமாக்கிவிட்டேன், இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்” எனவே மார்க்கத்தைப் போதிக்க இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பிறகு யாரும் நபியாக வரவும் முடியாது, யாருக்கும் இல்ஹாமும் வரமுடியாது. குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக சூபிகளுக்கு இல்ஹாம்-ஞானோதயம் வருவதாக முகல்லிதுகளும் சூபிகளும் பிதற்றுகின்றனர். இவன் ஒருபடி மேலே போய் தனக்கு வஹி – வேத வெளிப்பாடு வருவதாகப் பிதற்றுகிறான். ஆக இப்படிப்பட்ட வீணர்களை வளர்த்து விடுவதே முகல்லிது – சூபிஸ முல்லாக்களேயாகும்.

தொழுகையில் இமாமுக்குப் பின்னால் தொழும் முக்ததி, சூரத்துல் பாத்திஹா முடிந்தவுடன் சப்தமிட்டு “ஆமீன்” சொன்னதற்காக, ஒரு இமாம் “ஏண்டா நீ சோறு தின்கிறாயா?…. தின்கிறாயா? இனி நீ இங்கு தொழ வராதேடா” என்று கத்தினார். இந்த இமாமின் இச்செயல் பற்றி….? இஸ்லாமிய பற்றுள்ள இளைஞர்கள், நெல்லிக்குப்பம்.

ஆமின் சப்தமிட்டுச் சொல்வதற்குத் தெளிவான ஹதீஸ் இருக்கிறது. அது வருமாறு.

“நபி(ஸல்) அவர்கள் கைரில் மக்ழுபி அலைஹிம் லலழ்ழால்லீன்” என்று நாம் ஓதி முடித்தவுடன் முதல் வரிசையில் இருப்போரும் கேட்கும்படி ஆமின் கூறுவார்கள். பின்னர் ஆமின் சப்தத்தால் பள்ளி எதிரொலிக்கும்.(அபூஹுரைரா(ரழி), இப்னு மாஜ்ஜா, தாரகுத்னீ, பைஹகீ)

பள்ளி ஆமின் சப்தத்தால் எதிரொலிக்கும் சம்பவம் ஓர் அஃதராக” புகாரீயில் இடம் பெற்றுள்ளது. (பாகம் 3, பக்கம் 107)

இவ்வளவு தெளிவாக நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இருக்க, அந்த அழகிய நடைமுறையை வெறுக்கும் ஒரு இமாமின் ஈமானின் நிலைபற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தக்லீது – கண்மூடிப் பின்பற்றல், அவர்களை இந்த அளவு கீழ்த்தரமாக நடக்கச் செய்கிறது.

வஸ்ஸலாம்.

Previous post:

Next post: