நானா? நீயா? அரங்கம்!

in 2011 ஜுலை

நானா? நீயா? அரங்கம்!
நம் வீட்டுப் பெண்கள் என்ன செய்கிறார்கள்?
அ.ப.அகமது, புதுக்கோட்டை

 “”ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று சொல்வார்கள். குழந்தைகளை உருவாக்கும் பல்கலைக்ககழகம் தாய் என்றும் சொல்வார்கள். மேலும் இஸ்லாம் பெண்களுக்கு கண்ணியமான அந்தஸ்தை வழங்குகிறது என்றும் சொல்வார்கள். ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் எப்படி தமது மனைவி, மக்களிடம் அல்லது தாயிடம் நடந்து கொள்கிறார்கள்? மிகமிகச் சொற்பமானவர்களைப் பற்றி இங்கே எழுதவில்லை! பெரும்பான்மை முஸ்லிம் ஆண்களாகிய நாம் எப்படி? என்பது தான் இங்கே “”நானா? நீயா” டாப்பிக்.

 நாம் கலிமா சொல்லியிருக்கிறோம். ஈமான், இஸ்லாம் எல்லாம் தெரியும். இந்த மாதிரிக் காரணங்களால் நம் வீட்டுப் பெண்கள் ஏனைய சமூகத்தை விட்டும் தனித்து விளங்குவதும் உண்மை. அதே சமயம் பல விசயங்களில், அதாவது உலக விசயங்களில் ஏனைய சமூகங்களோடு நாம் எல்லோருமே இரண்டறக் கலந்து தான் வாழ்கிறோம். வியாபாரத்தில், குடியிருப்பு களில், கொடுக்கல் வாங்கலில், உணவு உடை களில்…. இப்படி பல விசயங்களில் முஸ்லிம் அல்லாதவர்களுடன் பகிர்ந்து கலந்து தான் நமது வாழ்வு இயல்பாக அமைந்துள்ளது. இது மார்க்க அடிப்படையில் பிழையும் அல்ல. மாறாக நாம் நமது தாவாவை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் உள்ளது. ஆனால்  பெரும்பான்மையானவர்கள் தாவா செய்யாமல் கரைந்து போய் விடுவது தான் நிஜம். கொஞ்சப்பேர் விதிவிலக்காக இருக்கலாம்.

 எது எப்படி இருப்பினும் ஒரு விசயம் அதுவும் மிகப் பெரிய விசயம் நம்மை அறியாமலே நம்மை கவ்விக் கொண்டுள்ளது. முஸ்லிம் ஆண்களை மட்டுமல்ல! முஸ்லிம் அல்லாத ஏனைய சமூக ஆண்களையும்தான். அதாவது, நான், நமது சகோதரன், தந்தை, தாத்தா ஆகிய எல்லா ஆண்களுமே ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகளாகவே நம் இல்லத்து பெண்களுடன் நடந்து கொள்கிறோம். ஏதோ ஒன்றிரண்டு சதவிகிதம் வேண்டுமானால் நீதமாக இருக்கலாம். பெரும் பான்மை ஆண்கள் நிலை?
*அதிகமானோர் வியாபாரம் செய்கிறார்கள்.
*அல்லது வெளிநாடுகளில் தனியாக வசிக்கிறார்கள்.
*அல்லது காலையில் வேலைக்குப் போய் இரவு திரும்பும் வேலையாகவும் இருக்கலாம்.
 இந்த மூன்று பிரிவில் ஒன்றில் நீங்கள் இருந்தால் பின்வரும் விசயங்களை உங்கள் மன சாட்சியோடு பேசவிடுங்கள்!
ஒரு பத்து வருட ரிப்போர்ட் ஒன்றை நீங்களே ஒரு பேப்பரை எடுத்து எழுதுங்கள்.
*கடந்த பத்து வருடத்தில் எத்தனை தடவை குடும்பத்தினரை மட்டும் அழைத்துக் கொண்டு (நண்பர்கள் உறவினர்கள் அல்ல) சுற்றுலா சென்றிருக்கிறீர்கள்?
* வீட்டில் எத்தனை தடவை ஜமாஅத் தொழுகை  நடத்தியிருக்கின்றீர்கள்?
*வாரத்தில் ஒருமுறை, அல்லது மாதத்தில் ஒரு முறை எத்தனை தடவை வீட்டில் தஃலிம் வாசித்திருக்கிருக்கின்றீர்கள்?
*வருடம் 365 நாளும் வீட்டில் வேலை செய் யும் மனைவிக்கோ, தாய்க்கோ, சகோதரிக்கோ, எத்தனை தடவை சமையல் அறையில்  உதவி  செய்திருக்கிறீர்கள்?
*எந்தந்த விசயங்களை மனைவியோடு உட் கார்ந்து ஆலோசனை செய்திருக்கிறீர்கள்?  ஆலோசனை  வேறு! உபதேசம் வேறு! இங்கே நீங்கள் பதிலளிக்க வேண்டியது என்ன மாதிரி விசயத்தில்  ஆலோசனை?

 அது, குடும்ப செலவு பட்ஜெட்டாக இருக்க லாம்(அல்லது) மார்க்க விசயமாக இருக்கலாம் (அல்லது) உங்களுக்கு தெரியாத வேறு தகவல் களாக இருக்கலாம் (அல்லது) அரசியல், சமூக விசயங்களாக கூட இருக்கலாம்? என்னன்ன பேசினீர்கள் என்பது தான் கேள்வி?
* உங்களது மகளின் நட்பு வட்டத்தில் யார் யார் உள்ளனர்? உங்களின் மகளின் தோழிகள் வீட் டிற்கு நீங்களும் மனைவியும் என்றைக் காவது போனது உண்டா? அவர்களின் பெற்றோர் கள் (முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாதவர் கள்) யாருடனும் எத்தனை தடவை பேசியிருக்கின்றீர்கள்?
*உங்கள் னைவி, அல்லது மகள், டி.வி.யில் எத்தனை மணி நேரம் என்னன்ன நிகழ்ச்சிகள் பார்க்கிறார்கள்? அவர்களின் ரசனை எப்படிப் பட்டது? நல்ல நிகழ்ச்சி எது கெட்ட நிகழ்ச்சி எது என பிரித்தறியும் அறிவு பற்றி வீட்டில் பேசி கலந்துரையாடல் செய்தது உண்டா?
*கைத் தொலைபேசியின் நன்மை தீமைகள், இன்டர்நெட், ஈமெயில், பேஸ்புக் இவற்றின் நன்மை தீமைகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்கள் மகளுக்கு என்ன தெரியும்?

*உங்கள் வீட்டின் உணவுகளின் அளவு, தரம் எவ்வளவு? எல்லோரும் குறிப்பிட்ட நேரத்தில் (Follow the Eating time Strictly) சாப்பிடுவது உண்டா? அல்லது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமா? உணவு சமச்சீராக உள்ளதா? வயிறு முட்ட சாப்பிடுவீர்களா? அல்லது நபிகள் (ஸல்) அவர் கள் சொன்ன அளவின்படி அரை வயிறு திட உணவு+கால் வயிறு தண்ணீர்+கால் வயிறு வெற்றிடம் இப்படி என்றைக்காவது சாப்பிட்டது  உண்டா?
* உங்கள் வீட்டில் நீங்கள் நடுநிலையான வரா? அதாவது உங்கள் உறவினர்களையும் உங்கள் மனைவி வழி உறவினர்களையும் சமமாக பார்ப்பீர்களா? அல்லது நடுநிலை தவறியவரா? “”குடும்பம்” என்கின்ற உங்கள் அங்கத்தில் அதாவது இறைவன் உங்களுக்கு கொடுத்துள்ள பரிசில் ஒரு பிள்ளைக்கு வெண்ணையும், ஒரு பிள்ளைக்கு சுண்ணாம் பும் தடவமாட்டீர்கள் அல்லவா? அது போலவே, உங்கள் பெற்றோரையும், உங்களின் மனைவி யின் பெற்றோரையும் சமமாக பார்ப்பீர் களா? அல்லது மனைவியின் பெற்றோரை அந்நியராக  பார்ப்பீர்களா?

அன்பார்ந்த முஸ்லிம் ஆண் சமூகமே! நாம் கலிமா சொல்வது சடங்குக்காகவா? அல்லது வாழ்வியலின் அங்கமா? நபி(ஸல்) அவர்களை நேசிப்பது உண்மையா? அப்படியயன்றால் நபி(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் மட்டும் வைக்காமல் வீட்டிற்குள்ளும் கொண்டு வருவதில் என்ன தயக்கம்? ஈமான், இஸ்லாம், தப் லீக், தவ்ஹீத், இவையயல்லாம் பள்ளிவாசல் என்கின்ற கட்டிடத்தில் மட்டுமா? நம்மை இறைவன் கண்காணித்துக் கொண்டிருக் கின்றான். அவன் நம்மை கணக்குக் கேட் பான். நாம் பெற்றுள்ள, மனைவி, மக்கள், வீடு எல்லாம் நம் அறிவால் வந்தது அல்ல! இறைவனின் கருணையால் என்பதே உண்மை! பதில்களை தயார் செய்யுங்கள்.
இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: