ரமழான் பயிற்சிப் பட்டறையில் தேறியவர்கள் யார்?

in 2011 செப்டம்பர்,தலையங்கம்

ஆயிரம் மாதங்களைவிட சிறப்புப் பெற்ற ஒரு நாளையுடைய ரமழான் மாதம் நம்மை விட்டுக் கடந்து செல்கிறது. மனித குலத்திற்கே இறுதி வழிகாட்டல் நெறி நூலான அல்குர்ஆன் இந்த ரமழான் மாதத்தில் தான் குறிப்பாக ஆயிரம் மாதங்களை விட சிறப்புக்குரிய கத்ருடைய நாளில்தான் முதன்முதலாக வஹி மூலம் இறங்கியது. இந்த குர்ஆன் மனித குலத்திற்கு முழுமையான வழகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், நன்மை எது? தீமை எது? எனத் தெளிவாகப் பிரித்தறிவிப்பதுமாகவும், இருக்கிறது என்பதை 2:185 இறைவாக்கு உறுதி செய்கிறது.

இந்த ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் முஸ்லிம்கள் தக்வாவுடையவர்களாக-அதாவது பயபக்தியுடையவர்களாக முடியும் என்று 2:183 இறைவாக்கு உறுதி கூறுகிறது. மேலும் 2:185ல் அல்லாஹ் மக்களுக்கு அவனது நேர்வழியை எளிதாக்கிக் கொடுத்துள்ளதாகவும், சிரமமானதாக ஆக்கவில்லை என்றும் உறுதி அளித்துள்ளான். மேலும் அல்லாஹ்வே நேர்வழி காட்டியுள்ளதாகவும், அவனது மகத்த வத்தைப் போற்றிப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தவும் கட்டளையிடுகிறான்.

அடுத்து வரும் 2:186 இறைவாக்கில், அல்லாஹ் மனிதர்களுக்கு மிக நெருக்கமாகவும், அதாவது 50:16 வசனப்படி பிடறி நரம்பை விட நெருக்கமாகவும் இருப்பதாகவும், அழைப்பவர்களின் அழைப்பை ஏற்றுப் பதில் அளிப்பதாகவும், அந்த இறைவனிடமே வேறு யாரிடமும் கேட்காமல் கேட்கும்படியும், மனிதர்களிலோ, மலக்குகளிலோ யாரையும் நம்பி அவர்களைப் பாதுகாவலர்களாக எடுக்காமல் தன்னையே முற்றிலும் நம்பி தன்னை மட்டுமே பாதுகாவலனாகக் கொண்டு தன் வழிகாட்டல்படியே நடக்கக் கட்டளையிடுகிறான் அல்லாஹ். மனிதர்களில் யாரையும் நம்பாமல் தன்னை மட்டுமே நம்பி தனது வழிகாட்டல்படி நடப்பவர்களே நேர்வழியை அடைந்து வெற்றி வாகைச் சூடக்கூடியவர்கள் என்கிறான் அல்லாஹ். (பார்க்க: 7:3, 33:36, 3:173, 6:66,102,107, 10:108, 11:12, 39:41,62, 42:6, 4:81,109,132,171, 17:2, 54,65,68,86, 25:43, 33:3,48, 73:9)

அல்லாஹ் இத்தனை இறைவாக்குகளில் தன்னை மட்டுமே பாதுகாவலனாக, வழிகாட்டியாக எடுக்கும்படியும், வேறு யாருக்கும் அந்தத் தகுதியோ, அதிகாரமோ இல்லை என்று கூறி இருக்க மனிதர்களிலுள்ள கலீஃபாக்கள், நபிதோழர்கள் போன்ற ஸலஃபிகளையும், அகாபிரீன்கள், சாதாத்துகள், இமாம்கள், வலிமார்கள் போன்ற கலஃபிகளையும் பாதுகாவலர்களாகக் கொண்டு அவர்களின் வழிகாட்டல் என்று நம்பி மதகுருமார்களைக் கண்மூடி ஏற்பது வெற்றியைத் தருமா? சிந்தியுங்கள்.

இத்தனைக்கும் அல்லாஹ் 2:134,141 இறை வாக்குகளில் முன்னோர்களான அவர்கள் சென்று போனவர்கள், அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவையே உங்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள் என்று தெளிவாக நேரடியாகக் கூறி இருக்க, அல்லாஹ் வின் நேரடியான இக்கட்டளையை நிராகரித்துப் புறக்கணித்துவிட்டு, முன் சென்றுபோனவர்களின் பெயரால் இந்த மதகுருமார்கள் கூறும் கட்டுக்கதைகளை நம்பிச் செயல்பட்டால் அது வெற்றியைத் தருமா? சிந்தியுங்கள்.

இம்மதகுருமார்களை நம்பி, யூத மதக் கலாச் சாரத்தைப் பின்பற்றி புதிய மாதம் பிறக்கும் சங்கமத்திற்கு (Counjunction)  அடுத்த நாளுக்கும் அடுத்த நாள் காலையில் கிழக்கில் உதித்து மாலையில் மேற்கில் மறையும் 3ம் பிறையை முதலாம் பிறையாகக் கொண்டு ரமழானின் முதல் இரண்டு நோன்புகளை அறிந்த நிலையில் விடுபவர்களை அல்லாஹ் மன்னிப்பானா? அதே போல் இதே அடிப்படையில் ஷவ்வால் மாதம் முதல் நாள் நோன்பு நோற்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளையை நிராகரித்துப் புறக்கணித்து விட்டு, இம்மதகுருமார்களான மவ்லவிகளை கண்மூடி நம்பி அன்று ஹராமான நாளில் நோன்பு நோற்பவர்களை அல்லாஹ் மன்னிப்பானா? சிந்தியுங்கள்!

அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் நாள் பஜ்ரில் ஆரம்பித்து பஜ்ரில் முடிகிறது என்று கூறிக்கொண்டிருக்க, எவ்வித குர்ஆன், ஹதீஸ் ஆதாரமுமில்லாமல் யூதமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி காலையில் உதித்து மாலையில் மறையும் 3ம் பிறையைக் கண்ணால் பார்த்துவிட்டு, நாளும், மாதமும் துவங்கிவிட்டது என மூடத்தனமாகக் கூறி ஒற்றைப்படை நாள்களை இரட்டைப்படை நாள்களாகவும், இரட்டைப்படை நாள்களை ஒற்றைப்படை நாள்களாகவும் ஆக்கும் இந்த மூட முல்லாக்களைக் கண்மூடி நம்பி முஸ்லிம்கள் தங்கள் பொன்னான அமல்களைப் பாழாக்குவதோடு, நபியின் கட்டளைக்கு முரணாக ஒற்றைப்படை நாள்களில் கத்ருடைய நாளைத் நேடுவதற்குப் பதிலாக இரட்டைப் படை நாள்களில் தேடும் மூடத்தனமான முயற்சியை அல்லாஹ் ஏற்பானா?

முஸ்லிம்களே உஷார்! சுயமாகச் சிந்தியுங்கள். அற்ப உலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்ட இந்த மூட முல்லாக்களான மவ்லவிகளை நம்பி, அல்லாஹ்வை பாதுகாவலனாக, வழிகாட்டியாக கொள்வதற்கு மாறாக இந்த சுயநல மவ்லவிகளை பாதுகாவலர்களாக வழி காட்டிகளாகக் கொண்டு அவர்கள் கூறுவதை வேதவாக்காகக் கொண்டு அதன்படி நடந்தால் அது நிச்சயமாக உங்களை நரகில் கொண்டு சேர்க்கும் என்று கூறும் 33:66,67,68 இறைவாக்குகளை நேரடியாகப் படித்துப் பார்த்துப் படிப்பினை பெறுங்கள்.

தெற்கே கன்னியாகுமரி செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டு, இறைவா என்னைப் பாதுகாப்பாக வடக்கே சென்னை கொண்டு சேர்த்து விடு என அந்தப் பயணம் முழுக்க அழுது அழுது துஆ செய்தாலும் அந்த துஆவின் மகிமையால் அந்த ரயில் சென்னைக்கு ஒருபோதும் செல்லாது. இதை முஸ்லிம்களாகிய நீங்கள் புரியாமல் இருக்க முடியாது. இங்கேயாவது தவறை உணர்ந்து அங்கிருந்து சென்னை செல்லும் ரயிலில் சென்னையை சென்றடைய முடியும்.

ஆனால் மவ்லவி, ஆலிம், மதகுரு எனத் தங்களைத் தாங்களே பல இறைக் கட்டளைகளுக்கு முரணாகப் பீற்றி கொள்ளும், தம்பட்டம் அடிக்கும், அகம்பாவம் பேசும் இந்த மவ்லவிகளைக் குருட்டுத்தனமாக நம்பி, அவர்களின் சுயநல வழிகேட்டுப் போதனைகளை வேதவாக்காகக் கொண்டு, கடந்த ரமழானில் முதல் 2 நோன்பை இழந்தும், ஷவ்வால் முதல் நாளில் ஹராமாக 1 நோன்பு நோற்றும் 29 நாட்கள் பகல் முழுதும் பட்டினி கிடந்து உணர்வுகளை அடக்கி நோன்பிருந்தாலும், இரவு முழுவதும் நின்று வணங்கி இருந்தாலும், 29 நாட்களும் அழுதழுது அல்லாஹ்விடம் துஆ செய்திருந்தாலும், அவர்கள் கன்னியாகுமரி செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டு, சென்னை கொண்டு சேர்க்குமாறு அழுதழுது அல்லாஹ் விடம் துஆ செய்தவர்களின் நிலையையே அடைவார்கள்.

33:66,67,68 இறைவாக்குகள் கூறுவது போல் அல்லாஹ்வை முற்றிலுமாக நம்பி, அவன் வழி காட்டல் நூல் அல்குர்ஆனில் கூறி இருப்பதை நேரடியாகப் பார்த்து அதன்படி நடக்காமல், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்களை நேரடியாக அறிந்து அதன்படி நடக்காமல், அற்ப உலக ஆதாயங்களையே அசல் குறிக்கோளாகக் கொண்ட, அகாபிரீன்கள், சாதாத்துகள் பெயரால் இந்த மவ்லவிகள் கூறும் சுயநலக் கூற்றுக்களை கண்மூடி ஏற்று ரமழான் 3ம் நாளில் நோன்பை ஆரம்பித்து முதல் இரண்டு பர்ழான நோன்புகளைப் பாழாக்கி, ஹராமான ஷவ்வால் முதல் நாளில் நோன்பு நோற்று தங்கள் அமல்களைப் பாழாக்கியவர்கள் 33:66,67,68 இறைவாக்குகள் எச்சரிக்கும் நிலையையே அடைவார்கள் என்று குர்ஆன் கூறுவதே நாளை நிறைவேறும்!

தாஃகூத்களான மவ்லவிகளின் ரயில் என்ற வழிகாட்டல் நரகை அடையும் என 18:102-106, 33:66,67,68 இறைவாக்குகள் கூறிக் கொண்டிருக்க, அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் வழிகாட்டல் எனும் ரயில் சுவர்க்கத்தை அடையும் என பல இறைவாக்குகள் கூறிக் கொண்டிருக்க, மதகுருமார்களின் ரயிலில் அமர்ந்து கோடி கோடியாக அமல் செய்தாலும், அழுதழுது துஆ கேட்டாலும் மத குருமார்களின் ரயில் சுவர்க்கத்தை அடையுமா? நிச்சயம் நரகையே சேரும்! அங்கிருந்து சுவர்க்கம் சென்றடையவும் முடியாது! அல்லாஹ்வின் அடிமைகளான நாம் அவனது கட்டளைகளை, தீர்ப்பை மறுக்க முடியுமா? முஸ்லிம்களே உஷார். சிந்தித்துச் செயல்படுவீர்!

Previous post:

Next post: