ஜும்ஆ பயான்!

in 2011 அக்டோபர்

அபூ நஜ்ம், ஏர்வாடி, (நெல்லை)

அல்லாஹ்வுடைய தூதர் நபி(ஸல்) அவர் களின் ஜும்ஆ பிரசங்கம் எப்படி இருந்தது?

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரழி அல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள்(ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது, அவர்களுடைய கண்கள் சிவந்து விடும்,
கோபம் அதிகரித்து விடும். காலை யிலோ, மாலையிலோ தாக்குதல் நடத்த வரும் பகைவர்களைப்
பற்றி ஒரு படையை எச்சரிப்பவரைப் போன்று உரையாற்றுவர்கள், பின்னர்,

நூல்களில் சிறந்தது அல்லாஹ்வின் அல்குர்ஆன் ஆகும், வழிகளில் சிறந்தது முஹம்மது (ஸல்)
அவர்களது வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக தோற்றுவிக்கப்படும் ஒவ்வொரு (புதிய)
செயலும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் என்று கூறுவார்கள். (முஸ்லிம்)

ஆனால், இன்றைய ஜும்ஆ பிரசங்கம் கூலிக்கு மார் அடிக்கும் புரோகித மவ்லவிகளால்
கொச்சைப் படுத்தப்பட்டு ஜும்ஆ வுடைய தினத்தையே கேலிகூத்தாக்கி விட்டார்கள்.
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபை கொண்டு சரியான பிறை கணக்கின் அடிப்படையில் அதாவது
அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவன் தன் சத்திய நெறிநூல் அல்குர்ஆனில் தெளிவுபடுத்தியபடி,

ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக வும்,
தெளிவான சான்றுகளைக் கொண்ட தாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்)
பிரித்தறிவிக்கக் கூடிய (தெளிவான விளக்க மாகவும் உள்ள) குர்ஆன் இறக்கியருளப்பட்டது.
எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும்…. (அல்குர்ஆன்:
2:185)

அவன்(தான்) சூரியனைச் சுடரொளி மிக்க தாகவும், சந்திரனை ஒளியாகவும் ஆக்கினான் இன்னும்
நீங்கள் ஆண்டுகளின் (மாதங்கள், நாட்களின்) எண்ணிக்கையையும், கணக்கையும் அறிந்து
கொள்வதற்காக அதற்குப் பல தங்குமிடங்களையும் அவன் ஏற்படுத்தி னான். அல்லாஹ்
உண்மை(யாக தக்க காரணம்) கொண்டே தவிர இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும்
மக்களுக்கு(த் தன்னுடைய) அத்தாட்சிகளை (இவ்வாறே) விவரிக்கிறான். (அல்குர்ஆன் :
10:5)

மேல்கண்ட சத்திய நெறிநூல் அல்குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் நாம் ரமழான்
(1.09.1432) ஜூலை 31.07.2011 ஞாயிற்றுக் கிழமையன்று நோன்பைத் துவக்கினோம். (அல்ஹம்துலில்லாஹ்)
இது நபிவழிக்கு முர ணான செயலும் அல்ல; நாம் ரமழான் முதல் பிறை விசயத்தில், தவறு
செய்து, இரண்டாம் மூன்றாம், பிறையைப் பார்த்து, முதல் பிறை என் றும் புரோகித
மவ்லவிகள் சொல்வதை அப்படியே கேட்டு கண்மூடித்தனமாக பின்பற்றி நடக்கவும் மாட்டோம்.
அப்படி நடந்தால் நாமும் அல்லாஹ் சொல்வது போல்

(33:66) சத்திய வழிகாட்டல் நூல் வார்த்தைகளை மறுத்த வர்கள் போல்
ஆகிவிடுவோம்…..

நாம் ஏன் ஜும்ஆ-பயான் என்று தலைப்பிட்டு எழுதுகிறோம் என்கின்ற விசயத்திற்கு வருவோம்.
நெல்லை மாவட்டத்திற்கு அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் முஸ்லிம்களால்
நடத்தப்படும் பொறியியல் கல்லூரியில் ரமழான் முதல் வெள்ளிக்கிழமை (6.09.1432)
05.09.2011 அன்று அந்த கல்லூரியில் ஜும்ஆ பயான் ஒரு மவ்லவியால் நிகழ்த்தப்பட்டது.
அந்த ஜும்ஆ உரையில் ரமழான் மாதம் பற்றி அந்த மவ்லவி பேசும்போது, இந்த ரமழான்
மாதத்தில், ஒரு சாரார் ஞாயிற்றுக்கிழமை அன்றும், மற்றொரு சாரார்கள் திங்கள்,
செவ்வாய் கிழமையன்றும், நோன்பு நோற்று உள்ளார்கள் என்று சாதாரண மாகவே பேசி உள்ளார்.
ஜும்ஆ தொழுகை முடிந்த பின் மற்ற சகமாணவர்கள், அந்த மவ்லவியிடம் என் மகனைச்
சுட்டிக்காட்டி, இவன் ஞாயிற்றுக்கிழமையே நோன்பு நோற்று உள்ளான் என்று சொல்ல, மவ்லவி
என் மகனை பார்த்தாரே தவிர எதுவும் கேட்கவில்லை. பின்னர் கோட்டாரை சார்ந்த மற்றொரு
மாணவரும் என் மகனும் மவ்லவி அருகில் சென்று சில கேள்விகளைக் கேட்கிறார்கள்?

நாளின் துவக்கம் எது? நாளின் துவக்கம் மஃக்ரீப் என்று மவ்லவியின் பதில். நாளின்
துவக்கம் மஃக்ரிப் என்றால் நபி(ஸல்) அவர்கள் ரமழான் இறுதிப் பத்தில் பிறை 21ல் ஃபஜர்
தொழுதுவிட்டு இத்திகாஃப் இருந்து விட்டு பின்னர் ஷவ்வால் பிறை 1ல் ஈத் பெருநாள்
அன்று ஃபஜ்ரை தொழுதுவிட்டுத் தானே பெருநாள் திடலுக்கு வருகிறார்கள். அப்படி என்றால்
நாளின் துவக்கம் இரவா? பகலா? மவ்லவியின் பதில் இரவுதான். எப்படி நாளின் துவக்கம்
இரவு?

அல்லாஹ் குர்ஆனில் முதலில் சொல்வது இரவைப் பற்றிதான், பகலை பின்னர் தானே
சொல்கிறான், அப்படி என்றால் இரவு தானே நாளின் ஆரம்பம். மாணவர்கள் மவ்லவியை விடவில்லை,
முதலில் நாங்கள் கேட்ட கேள்விக்கு தாங்கள் பதில் தரவில்லை. எங்களுக்கு குர்ஆன்,
ஹதீஸில் இருந்து தெளிவான பதில் வேண்டும், அதோடு அடுத்த கேள்வியை தொடுக்கிறார்கள்.

ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்கள் துல்ஹஜ் பிறை 8ம் நாளில் மிளாவில் தங்கிவிட்டு
அன்றைய 9ம் நாள் ஃபஜ்ர் தொழுகை தொழுது விட்டு தானே, அரஃபா நோக்கிச் செல்கிறார்கள்;
அப்படி என்றால் நாளின் துவக்கம் எது? மவ்லவியால் பதில் சொல்ல முடியவில்லை, இப்படி
எல்லாம் கேள்விகள் கேட்டு குழப்பத்தை உண்டாக்குகிறீர்கள்.

இது அமெரிக்காகாரனுடைய சதி என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார். நாளின் துவக்கம்
இரவா? பகலா? என்பதில் அறிவுள்ள வர்களே சறுக்குகிறார்கள். இந்த புரோகித மதரஸாவில்
கல்வி கற்று வெளிவரும் ஸனது ஆலிம்களுக்கு இது தெரியவா போகிறது?

அல்லாஹு ரப்புல் ஆலமீன் தெளிவாக சொல்வதைப் பார்ப்போம்.

சூரியன், சந்திரனை எட்டி விட முடியாது? (அல்குர்ஆன் 36:40)

சூரியன் மீதும், அதனுடைய ஒளியின் மீது சத்தியமாக! அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன்
மீது சத்தியமாக! பகல் வெளியாகும் போது, அதன் மீது சத்தியமாக! (அப்பகலை)
மூடிக்கொள்ளும், இரவின் மீது சத்தியமாக!

(அல்குர்ஆன் 91:1-4))

அல்ல! சந்திரன் மீது சத்தியமாக! பின்னோக்கி வரும் இரவின் மீது சத்தியமாக!

(அல்குர்ஆன் 74:32,33)

இந்த அகிலங்களையும், அதில் பல கோள்களையும் படைத்த அல்லாஹு ரப்புல் ஆலமீன் அல்லவா
நமக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருகிறான், அப்படி என்றால் அல்லாஹ் சொல்வது சரியா?
அல்லது இந்த புரோகித மவ்லவிகள் சொல்வது சரியா? அறிவுள்ள முஸ்லிம்கள் சிந்திப்பார்களா?

நாளின் துவக்கம் இரவா? பகலா? என்பதை கூட தெரியாத ஆலிம்கள்(?) மதரஸாவில் எதை தான்
கற்றுக் கொண்டார்கள். மேல்கண்ட அல்குர்ஆன் வசனங்களுக்கு இவர்களின் பதில் என்ன?

பின்வாங்கி செல்லும் இரவின் மீதும், மூச்சு விட்டுக்கொண்டு உதயமாகம் வைகறைப்
பொழுதின் மீது சத்தியமாக (81:17,18) இந்த அல்குர்ஆன் வசனங்களுக்கு இந்த புரோகித
மவ்லவியின் பதில் என்ன?

குர்ஆன், ஹதீஸில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்ல
தெரியாத மவ்லவி மறு ஜும்ஆவில் (13.09.1432) 12.08.2011ல் கேள்வி கேட்ட இந்த இரு மாண
வர்களைப் பார்த்து சைகினை செய்து இவர்கள் எல்லாம் மார்க்கத்தை பிரிப்பவர்கள்.
நயவஞ்சகர் என்றெல்லாம் பேசி தனது புரோகித கோபத்தை கொட்டித் தீர்த்து இருக்கிறார்.
நய வஞ்சகர் என்ற சொல்லுக்கு இலக்கணம் தெரியுமா? அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கத்தை
வளைத்துத் திரித்து, மக்களை வழிகேட்டுக்கு இழுத்து செல்லும் புரோகித மவ்லவிகள்
மார்க்கத்தை தெளிவாக மக்களுக்குச் சொல்ல கற்றுக் கொள்ளட்டும்.

ஜும்ஆ உரை நபி(ஸல்) அவர்கள் எப்படி நிகழ்த்தினார்களோ அதுபோல நிகழ்த்தக் கற்றுக்
கொள்ளட்டும். நாங்கள் நபிமார்களின் வாரிசுகள் என்று கொக்கரிக்கும் புரோகித மவ்லவிகள்,
நபிமார்களின் வாரிசுகளே அல்ல. இவர்கள் அபூ ஜஹீலின் வாரிசுகளே! ஏன் என்றால்
நபிமார்களின் வாரிசுகளான உண்மையான உலமாக்கள், தீனாருக்கோ, திர்ஹமுக்கோ
சொந்தக்காரர்கள் அல்ல என்பதை புரோகித மவ்லவிகள் புரிந்து கொள்ளட்டும்.

ஆனால் இன்றைய உலமாக்கள்(?) மவ்லவிகள்(?) ருபியாவுக்கு சொந்தக்காரர்கள். அல்லாஹ் நம்
எல்லோருக்கும் மார்க்கத்தில் தெளிவைத் தருவானாக! ஆமீன்.

Previous post:

Next post: