காலத்தின் கட்டாயம்!

in 2011 நவம்பர்,தலையங்கம்

ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாக (21:92, 23:52) உலகை நடுநிலையுடன் வழிநடத்திச் செல்லக்
கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம் (3:110, 2:143, 22:78) இன்று பிரிவுகளிலும்,
பிளவுகளிலும் சிக்கித் தவிக்கிறது. முஸ்லிம்கள் நேர்வழியில் இருந்தால் அல்லவா மற்றச்
சமுதாயங்களுக்கு அந்த நேர்வழியைக் காட்ட முடியும். முஸ்லிம்களே எண்ணற்றக் கோணல்
வழிகளில் திசைமாறிச் செல்லும்போது, நடுநிலையுடன் இருந்து மற்ற சமுதாயங்களுக்கு
எவ்வாறு நேர்வழி காட்ட முடியும்? அதனால் இன்று மனித குலத்தினரிடம் இருக்கக் கூடாத
அனைத்து ஒழுங்கீனங்களும், அடாத செயல்களும் நிறைந்து காணப்படுகின்றன. வன்முறைச்
செயல்கள், தீவிரவாதம் என நாடுகள் சுடுகாடுகளாகி வருகின்றன. உலகே 1450 ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்தது போல் அழிவின் விளிம்பில், நரக விளிம்பில் நிற்கிறது.

மனித குலத்தை மீண்டும் அதன் உயர்நிலைக்குக் கொண்டு வருவதாக இருந்தால், இறுதி
வாழ்க்கை நெறி நூல் அல்குர்ஆனை தம் வசம் வைத்திருக்கும் முஸ்லிம்களால் மட்டுமே அது
சாத்தியப்படும். அதற்கு முஸ்லிம்கள் முதலில் குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒன்றுபடுவது
காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதற்கு மாறாக கடந்த 1000 வருடங்களாக புரோகித
மதகுருமார்களின் கற்பனையில் உதித்த நான்கு மத்ஹபுகளில் சிக்கிச் சீரழிந்து
கொண்டிருந்த முஸ் லிம் சமுதாயம் 1987க்குப் பிறகு மேலும் பல இயக்கப் பிரிவு
மத்ஹபுகளிலாகி மேலும் அதீத வழிகேடுகளில் உழல்கின்றது.

1995வரை முஸ்லிம்கள் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நாட்களில், பிறை பார்த்து நோன்பு
ஆரம்பித்து பெருநாள் கொண்டாடினார்கள். தகவல் தொடர்பு இல்லாத முன்னைய கால கட்டத்தில்
சமுதாயத்தில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. தகவல் தொடர்பு ஏற்பட்ட பின்னர்,
அறிவு ஜீவிகளிடம் உலகம் முழுவதும் ஒரு நாள் 24 மணி நேரத்திற்குள் கடைபிடிக்க
வேண்டிய நோன்பு, பெருநாள் எப்படி வெவ்வேறு நாட்களில் ஏற்பட முடியும்? என்ற நியாயமான
சர்ச்சை எழுந்தது. அதன் விளைவாக உலகம் முழுவதும் கிழக்கிலிருந்து மேற்கு வரை
வெள்ளிக்கிழமை-1 நாள்-24 மணி நேரத்திற்குள் ஜுமுஆ தொழுது முடித்து விடுவது போல்,
ஜுமுஆ தொழுகை 2 நாள்- 48 மணி நேரம், 3 நாள்-72 மணி நேரம் வரவே வராது போல், பெருநாள்
தொழுகையும் நிச்சயமாக ஒரு நாள்-24 மணி நேரத்திற்குள் உலக முழுவதும் வந்தே
தீரவேண்டும். பெருநாள் தொழுகை நிச்சயமாக 2 நாள் 48 மணி நேரம், 3 நாள் 72 மணி நேரம்
வரவே வராது என்ற உறுதியான முடிவுக்கு வந்தனர்.

இதை சுஜ, அஹ்லஹதீஸ், முஜாஹித் மவ்லவிகள் கடுமையாக எதிர்த்து மறுப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் 1985, 86களில், இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை, இஸ்லாம் அல்லாத இயக்கம்
இல்லை. புரோகிதத்திற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை; ஒவ்வொரு முஸ்லிமான ஆணும்
பெண்ணும் தங்கள் சம்பந்தப்பட்ட மார்க்கக் காரியங்களை அவர்களே சுயமாக விளங்கி அதன்படி
நடக்க வேண்டும் என்ற குர்ஆன், ஹதீஸ் போதனையை ஏற்று நம்முடன் இணைந்து மார்க்கப் பணி
செய்ய முன் வந்த தங்களை தவ்ஹீத் மவ்லவிகள் என அழைத்துக் கொள்பவர்கள் நம்மோடு இணைந்து
செயல்பட்டுவிட்டு, அல்லாஹ் 2:213-ல் குறிப்பிட் டுக் கூறுவது போல், குர்ஆன், ஹதீஸ்
தெளிவாக இருந்தும் பொறாமை காரணமாக 1987-ல் மாறுபட்டுப் பிரிந்து சென்றார்கள்.

அவர்கள் 1985-86களில் நம்மோடு இருக்கும் போது 21:92, 23:52 இறைவாக்குகள் கூறுவது
போல் ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத் என ஒப்புக் கொண்டவர்கள் அதற்கு மாறாக ஆக் என்றும் பின்னர்
ஜாக் என்றும் தனி ஜமாஅத் ஏற்படுத்தி ஒன்றுபட்ட ஜமாஅத்தைப் பிளவு படுத்தினார்கள்.
இவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களோடிருந்த மவ்லவி ஹாமித் பக்ரி
போன்றவர்களின் தூண்டுதலின் பேரில் தத்தம் பகுதி பிறை என்ற நிலைக்கு மாறாக சர்வதேசப்
பிறை என்ற அடிப்படையில் பீ.ஜே. எஸ்.கே. முதல் அனைத்து ஜாக் மவ்லவிகளும் ஒன்று கூடி
பல அமர்வுகளில் ஆலோசனை செய்தனர். ஆரம்ப அமர்வுகளுக்கு மவ்லவி ஹாமித் பக்ரி எம்மை
அழைத்ததின் பேரில் நாமும் கலந்து கொண்டோம். அவர்கள் முடிவு எடுத்த இறுதி அமர்வுக்கு
எம்மை அழைக்கவில்லை. நாமும் கலந்து கொள்ளவில்லை. அந்த இறுதி அமர்வில் அவர்கள்
ஒன்றிணைந்து எடுத்த முடிவை 1997 நவம்பர் அல்ஜன்னத் இதழில் பீ.ஜை. தனது பெயரிலேயே
வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

பிறை பார்த்தல் : -P.ஜைனுல் ஆபிதீன்

தத்தம் பகுதி பிறையா, சர்வதேச பிறையா, கணினி கணக்கீட்டின் பிறையா? இந்தக்
கேள்விகளுக்கு விடை காண்பதற்காக தமிழகத்தில் உள்ள ஏகத்துவக் கொள்கையில் உள்ள
அறிஞர்கள், இந்த விசயத்தில் ஞானமுடைய விஞ்ஞானிகள் பலமுறை கூடி ஆய்வு நடத்தினார்கள்.

பல்வேறு காலகட்டங்களில் இது குறித்து ஐந்து அமர்வுகளில் ஆய்வு நடந்தது.

கமாலுத்தீன் மதனீ, ஹாமித் பக்ரி, M.I.முஹம்மது சுலைமான், அப்துல் ஜலீல் மதனீ,
ஸம்சுல்லுஹா, J.S.ரிபாயி, செய்யிது முஹம்மது மதனீ, அப்துல் காதிர் மதனீ, P.ஜைனுல்
ஆபிதீன், S.S.U.சைபுல்லாஹ் காஜா, M.S.சுலைமான் மற்றும் பலர் இந்த அமர்வுகளில் கலந்து
கொண்டனர். சிலர் அனைத்து அமர்வுகளிலும் கலந்து கொண்டனர். சிலர் சில அமர்வுகளில்
மட்டும் கலந்து கொண்டனர்.

பல்வேறு விதமான கருத்துப் பரிமாற்றம், வாதம், எதிர்வாதம் ஆகியவற்றிற்குப் பின்
25.10.1997 அன்று சென்னை புதுப்பேட்டையிலுள்ள மர்கஸில் வைத்து நடைபெற்ற ஐந்தாம்
அமர்வில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

* விஞ்ஞானிகளிடையே இது குறித்து கருத்து வேறுபாடு உள்ளதாலும், எது முதல் பிறை என்று
கணிப்பதில் அவர்களிடையே ஒத்த கருத்து இல்லாததாலும், இன்னும் பல காரணங்களாலும் பிறை
பார்க்காமல் முன் கூட்டியே பெருநாள், நோன்பு ஆகியவற்றை அறிவிக்கக்கூடாது என்று ஏக
மனதாக முடிவுக்கு வந்தனர்.

இது குறித்து ஐந்து அமர்வுகளிலும் மிக விரிவாக விவாதங்கள் நடந்தன.

* ஒரு ஊரில் பிறை காணப்பட்டதாக தகவல் வந்து அந்தத் தகவல் ஊர்ஜிதமானதாகவும் இருந்தால்
அதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த நாடுகளில் பிறை காணப்பட்டாலும், எந்த
மாநிலத்தில் காணப்பட்டாலும் அந்தத் தகவல் கிடைத்த அனைவரும் அதனடிப்படையில் முடிவு
செய்ய வேண்டும்.

* அருகிலிருக்கும் ஊர்களானாலும் தொலைவில் உள்ள ஊர்களானாலும் அதைப் பொருட்படுத்தாமல்
எங்கிருந்து கிடைக்கும் தகவல்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு
செய்யப்பட்டது.

இந்த இறுதி அமர்வில் செய்யது முகம்மது மதனீ, அப்துல் காதிர் மதனீ, அப்துல் ஜலீல்
மதனீ, கமாலுத்தீன் மதனீ, பி.ஜைனுல் ஆபிதீன், ஹாமித் பக்ரி உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.

எனவே இதனடிப்படையில் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு 97 நவம்பரில் முடிவெடுத்தவர்களில் அரசியல் ஆதாயங்களைக் குறிக்கோள்களாகக்
கொண்டு ஜாக்கிலிருந்து வெளியேறிய பீ.ஜையும் அவரது சஹாக்களும் நவம்பர் & டிசம்பர் 99
அல்முபீன் இதழில் அந்தர் பல்ட்டி அடித்து 47:25 குர்ஆன் வசனம் கூறுவது போல்
புறமுதுகிட்டுப் பின்வாங்கி மீண்டும் சர்வதேசப் பிறையை மறுத்து தத்தம் பகுதிக்
குட்டையில் விழுந்தனர்.

அல்முபீன் இதழில் வெளியான அவர்களின் அர்த்தமற்ற பிதற்றல்களுக்குத்தான் சர்வதேசப்
பிறையை வலியுறுத்தி அந்நஜாத் 2000 ஜனவரி இதழ் முழுக்கப் பதில் அளிக்கப்பட்டது.
அல்ஜன்னத் பிப்ரவரி 2000 இதழிலும் முழுக்க பீ.ஜையை விமர்சித்துப் பதில்
அளிக்கப்பட்டிருந்தது. பீ.ஜை. கற்பனை செய்த தஜவினரின் நிலை இப்படிப் புறமுதுகு
காட்டிச் செல்லும் நிலையில், எஸ்.கே.யின் ஜாக்கினர் அல்ஜன்னத் நவம்பர் 2007 இதழ்
பக்கம் 3-5 பக் கங்களில் சர்வதேச தலைப்பிறை என்ற நிலையிலிருந்து உயர்ந்து துல்லிய
கணக்கீட்டின் அடிப்படையில் செயல்படுவதை சரிகண்டு ஒப்புக் கொண்டு தெளிவாக விளக்கமாக
3 பக்கங்களில் எழுதி இருந்தனர். முன்னாள் ஜாக் அமீர் எஸ்.கே. கணக்கின் மூலம் அறியும்
பிறையை ஏற்றுச் செயல்படுவது சரியானதே என்று பேசிய CD யையும் பலர் பார்த்திருக்கலாம்.
விரும்புவோர் அந்த CD.யை எம்மிடமிருந்து வாங்கிப் பார்க்கலாம்.

ஆனால் கைசேதம் பீ.ஜைக்கு ஷைத்தான் அற்பமான அரசியல் ஆதாயங்களை அழகாகக் காட்டி 47:25
சொல்வது போல் சர்வதேச பிறையிலிருந்து தத்தம் பகுதி பிறைக்கு புறமுதுகு காட்டி
பின்வாங்கச் செய்தது போல் எஸ்.கே.க்கு அவர் வாங்கும் கை நிறைந்த கூலி-சம்பளத்தை
ஷைத்தான் அழகாகக் காட்டி, ஸலஃபிகளின் நிர்பந்தத்திற்கு அடிமைப்பட்டு குர்ஆனுக்கோ,
ஹதீஸுக்கோ சிறிதும் முரணில்லாத அறிவியலின் அடிப்படையில் கணினி கணக்கீட்டைக் கொண்டு
முன்கூட்டியே அறியும் உயர் நிலையிலிருந்து 47:25 சொல்வது போல் புறமுதுகு காட்டி-தடம்
புரண்டு உலகின் எங்கேயாவது பிறையைக் கண்ணால் பார்த்து வரும் தகவலையே ஏற்க வேண்டும்
என்ற கீழ் நிலைக்கு இறங்கிவிட்டார். இதை அல்ஜன்னத் டிசம்பர் 2008 பக்கம் 24, ஜனவரி
2009 பக்.44, ஆகஸ்ட் 2009 பக்.43 இவற்றைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

“”நாம் உம்மி சமுதாயம், நமக்கு எழுதவும் தெரியாது, கணக்கும் தெரியாது..” என்று
கூறியுள்ளதையும், “”தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லு மாறு சூரியனையும் சந்திரனையும்
அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்” … (14:33)

“”சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” (31:29) இந்த இறைவாக்குகளையும்
ஆராயும்போது, அன்று 1432 வருடங்களுக்கு முன் அறிவியல் முன்னேற்றம் ஏற்படாத
காரணத்தால் சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து தொழுதது போல், பிறையைக் கண்ணால்
பார்த்து நோன்பு நோற்றும், பெருநாள் கொண்டாடியும் வந்தார்கள்.

அறிவியல் கண்டுபிடிப்பான கடிகாரம் கண்டு பிடிக்கப்பட்டபின் சூரியனைப் பார்க்காமல்
கடிகாரம் பார்த்துத் தொழுகிறோம். அவர்களும் தொழுகிறார்கள். இது குர்ஆன் ஹதீஸுக்கு
முரணான செயல் இல்லை. அதேபோல் இன்று மேலும் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டு
கண்டுபிடிக்கப்பட்ட கணினி கணக்கீட்டின் மூலம் பிறையைப் பார்க்காமல் மாதம் பிறப்பதை
அறிந்து செயல்படுவது குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரண்பட்ட செயல் அல்ல என்பதே சரியாகும்.
நேர்வழியாகும்.

அதற்கு மாறாக கடிகாரம் பார்த்துத் தொழுவதை ஏற்போம், கணினி கணக்கீட்டைப் பார்த்து
நோன்பு நோற்பதையும், பெருநாள் கொண்டாடுவதையும் ஏற்கமாட்டோம் என்று கூறி, தங்களின்
இந்தத் தவ றான கூற்றை நியாயப்படுத்த எப்படிப்பட்ட சுயவிளக்கங்களைக் கொடுத்தாலும்,
அதாவது நபி(ஸல்) அவர்கள் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே செயல்படச் சொல்லி
இருக்கிறார்கள் என்றோ, சூரியக் கணக்குப் படி நாள் இரவு 12 மணிக்கு ஆரம்பிக்கிறது
என்பதை உலகமே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் மாதம் ஆரம்பிப்பது (சங்கமம்-Conjunction)
குறிப்பிட்ட நேரத்தில் அல்ல; குறிப்பிட்ட இடத்தில் அல்ல. வெவ்வேறு நேரத்தில்,
வெவ்வேறு இடங்களில் ஏற்படுகிறது என்றோ கூறி மறுப்பது சூரியனும், சந்திரனும் ஒரே
நியதிப்படி, அவற்றிற்குரிய கணக்கின்படி துல்லியமாக சுழல்கின்றன என்று கூறும் பல
குர்ஆன் வசனங்களி லும் கூறப்பட்டுள்ளதில் சூரியக் கணக்கை ஏற்று, சந்திரக் கணக்கை
மறுப்பதாகும். அதாவது யூதர்கள் செய்ததாக அல்லாஹ் 2:85-ல் கூறுவதுபோல் அல் குர்ஆனில்
சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுக்கும் பெருங்குற்றமாகும், பாவமாகும். இறைக் கோபத்திற்கு ஆளாக்கும்.

மேலும் சங்கமம் (Conjunction) எந்த நேரத்தில், எந்த இடத்தில் நடந்தாலும்,
வெள்ளைக்காரன் சுயமாக நாள் இரவு 12 மணிக்கு ஆரம்பிக்கிறது என்று கூறுவதைவிட,
அல்லாஹ்வே நாள் பஜ்ரில் ஆரம்பிக்கிறது என்று கூறுவதை 97:1-3, 2:238 இறைவாக்குகளும்,
பல ஹதீஸ்களும் உறுதிப் படுத்துகின்றன.

ஆனால் மார்க்கத்தை மதமாகத் திரித்து அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள மவ்லவிகளுக்கு அல்லாஹ் நேரடியாகச் சொல்வதை விட, தூதர் நேரடியாகச் சொல்வதைவிட அவர்களது
ஆபாக்களான புரோகித முன்னோர்கள் சொல்வதே வேதவாக்காகத் தெரிகிறது. 2:174 சொல்வது போல்
அவர்கள் ஹராமான வழியில் தங்கள் வயிறுகளை நரக நெருப்பால் நிரப்புவதாலும், அதற்காக
ஆலிம் என தற்பெருமை அடிப்பதாலும் மற்றவர்களை அவாம்கள் என இழிவாகச் சொல்வதாலும்
அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெற முடியவே முடியாது. காலம்தான் அவர்களைத் திருத்தும்.

அந்த அடிப்படையில் சு.ஜ.மவ்லவிகள், தப்லீக் மவ்லவிகள், அஹ்லஹதீஸ் மவ்லவிகள், முஜாஹித் மவ்லவிகள், ஜாக் மவ்லவிகள், ததஜ மவ்லவி கள், ஸலஃபி மவ்லவிகள், இங்கு
குறிப்பிடாத அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள் என ஒட்டு மொத்த மதகுருமார்கள் அனைவரும்
அன்றுபோல் இன்றும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என
பிடிவாதம் பிடிக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு
மாறாக அவற்றை நிராகரித்து-குஃப்ரிலாகி ஒன்றுபட்ட சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதிலேயே
அவர்களின் வாழ்வாதாரம் தங்கி இருக்கிறது. சமுதாயம் ஒன்றுபட்டு விட்டால் அவர்களின்
பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும். எனவே யுக முடிவு வரை அவர்கள் சமுதாய ஒற்றுமையைச்
சரி காண மாட்டார்கள். பிரித்தாளும் சூழ்ச்சி (Divide
and rule) அடிப்படையில்
சமுதாயத்தைப் பிளவு படுத்தி அவர்கள் ஆதிக்கம் செலுத்தவே முற்படுவார்கள்.

தமிழகத்தில் 1987க்கு முன்னர் ஹனபி, ஷாபி, முஜாஹித், அஹ்ல ஹதீஸ் என நான்கு மத்ஹபுகள் மட்டுமே இருந்தன. இப்போது இந்த நான்குடன் ஜாக், ததஜ, இதஜ, கநதஜ, திதஜ, கடலூர்
தஜ, லெ.கு.தஜ இப்படி பல பிரிவுகளில் மத்ஹபுகள் உருவாகிவிட்டன. உருவாகிக்
கொண்டிருக்கின்றன. இதற்கு மூலகர்த்தாக்கள் நாங்கள்தான் தவ்ஹீத் வாதிகள், குர்ஆன்,
ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோர் என வாயளவில் பீற்றிக் கொண்டு செயலில் மனோ
இச்சையின்படியுள்ள சுய கருத்துக்களை மார்க்கத்தில் திணிப்பவர்கள்.

1987க்கு முன்னர் தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நாட்களில் நோன்பு,
பெருநாள் என்ற நிலையே இருந்தது. ஆனால் இந்த தவ்ஹீத்வாதிகள் என 4:49, 53:32 குர்ஆன்
வசனங்களை நிராகரித்துப் பீற்றுபவர்கள் தலை எடுத்து, சர்வதேச பிறையை ஒப்புக் கொண்டு
பின்னர் பல்ட்டி அடித்தாலும், ஜாக்கினர் கணக்கு முறைப்படியுள்ள பிறையை
ஒப்புக்கொண்டு பின்னர் பல்ட்டி அடித்து புறமுதுகு காட்டிச் சென்றதாலும், இன்று
ஒவ்வொரு ஊரிலும் ஏன்? ஒவ்வொரு குடும்பத்திலும் 1-ம் நாள் 2-ம் நாள், 3-ம் நாள் என
மூன்று நாட்கள் நோன்பு, பெருநாள் எனச் சமுதாயம் சிதறிச் சீரழியும் நிலையை ஏற்படுத்தி
விட்டார்கள்.

சமுதாயம் இப்படிச் சிதறிச் சீரழியக் காரணம் முஸ்லிம்கள் தங்களை நரகிற்கு இட்டுச்
செல்லும் இந்த மவ்லவிகளை நம்பிச் செயல்படுவதாகும்.

2:134,141 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து முன்னோர்களின் முடிவு பற்றி
எவ்வித ஆய்விலும் ஈடுபடாமல், 2:186, 7:3, 59:7 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும்
வழிபட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் காட்டியே இன்றைய மதகுருமார்களின்,
அவர்களின் பின்னால் கண் மூடிச் செல்லும் முஸ்லிம்களின் இழிநிலை பற்றி
விமர்சிக்கிறோம். அதுவும் 3:110, 9:71, 103:1-3 இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்தே!
இந்த நிலையில் மதகுருமார்களாகிய மவ்லவிகள் நாம் முன் சென்ற நல்லடியார்களை அவமரியாதை
செய்வதாகவும், திட்டுவதாகவும், தரக்குறைவாகப் பேசுவதாகவும் கூறி தங்களையே முற்றிலும்
நம்பியுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்குக் கொம்பு சீவி விட்டு நமக்கு எதிராக வெறுப்பைக்
கக்க வைக்கிறார்கள். அந்நஜாத்தைப் படிக்க விடாமல் தடுக்கிறார்கள்.

ஆனால் குர்ஆனின் பல வசனங்கள் முன்னோர்களைப் பின்பற்றியதாகக் கூறிய அனைவரும் வழி
கெட்டு நரகை அடைவதாகவே கூறுகின்றன. இறைவனிடமிருந்து பெற்ற குர்ஆன் வசனங்களைப் படித்துக் காட்டிய நபி(ஸல்) அவர்களை மிகக் கடுமையாகத் திட்டிய அபூ லஹப், அபூ ஜஹீல்
போன்றோர் என்ன சொன்னார்கள்? நாங்கள் பார்க்கப் பிறந்தவன் நீ! கடந்த பல ஆயிரம்
ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கட்டிக் காத்து வந்த மதத்தையும், அந்த முன்னோர்களையும்
இழிவு படுத்துகிறாயா? அந்த மேதைகளை விடவா நீ பெரிய அறிவாளி ஆகிவிட்டாய்? என்று
கூறியே குறைஷ்களைத் தூண்டிவிட்டு எண் ணற்ற துன்பங்களைக் கொடுத்தனர். இறுதியில் ஊரை
விட்டே துரத்தியடித்தனர்.

குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடிச் சொல்பவர்களின் நிலையும் இதுதான் என்று நபி(ஸல்)
அவர்கள் அறிவிப்பும் செய்துள்ளனர். இப்போது மவ்லவிகள் நேர்வழி நடந்து காட்டிய
நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறார்களா? அதற்கு மாறாக வழி கேட்டில் சென்று நரகை
அடையும் அபூ லஹப், அபூ ஜஹீல், அன்றைய ஜ.உ.ச.வான தாருந்நத்வாவினர் போன்றோரைப்
பின்பற்றுகிறார்களா? என்பதை மவ்லவிகள் மீள் ஆய்வு செய்ய முன்வரா விட்டாலும், அவர்கள்
பின்னால் கண்மூடிச் செல்லும் முஸ்லிம்கள் கண்டிப்பாக மீள் ஆய்வு செய்யக் கடமைப்
பட்டிருக்கிறார்கள்.

மவ்லவிகளின் அகராதியில் 42:21, 49:16 இறை வாக்குகள் கூறுவதுபோல் அல்லாஹ்வை விட,
ரசூலை விட 2:186க்கு முரணாக அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள இமாம்கள், சாதாத்துகள்,
அகாபிரீன்கள் பின்பற்ற மிகமிகத் தகுதியானவர்கள் என்ற எண்ணம் அற்ப உலக ஆதாயம்
காரணமாக மிகைத்திருப்பதாகவே தெரிகிறது. 33:66-68, 18:102-106 குர்ஆன் வசனங்கள்
எச்சரிப்பதை அவர்கள் உணர்வதாக இல்லை. முஸ்லிம்களே இம்மையிலும், மறுமையிலும் வெற்றி
வேண்டுமா? உஷார்! குர்ஆனை நேரடியாகப் பற்றிப் பிடியுங்கள். தவறினால் நரகமே
சென்றடையும் இடம்!

அல்குர்ஆன் 7:3, 33:36, 59:7, 2:186, 50:16, 18:102-106, 56:85, 33:66,67,68
வசனங்களின் மொழிபெயர்ப்புகளை மீண்டும் மீண்டும் சுய சிந்தனையுடன் படித்து உங்கள்
உள்ளங்களில் ஏற்றிக் கொண்டு அசைபோட்டுப் பாருங்கள். மதகுரு மார்களான இந்த மவ்லவிகளை
நம்பி அவர்கள் பின்னால் சென்றால் நாம் போய் சேருவது நரகம் என்பதை நீங்களே அறிந்து
கொள்வீர்கள்.

ஆக இன்று ஒவ்வொரு ஊரில் மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்திலும் 3 நாள் நோன்பு, 3 நாள்
பெருநாள் என்ற ஆபத்தான அவல நிலை மாறி ஊரில் மட்டுமல்ல, நாட்டில் மட்டுமல்ல, முழு
உலகமும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் ஜுமுஆ தொழுவது போல், நோன்பு, பெருநாள்
இவற்றையும் ஒரே நாளில் செயல்படுத்தி அல்லாஹ்வின் அருள்பெற, மவ்லவி
M.A.அப்துல்
வதூதின் கடிதத்திற்கு அளித்துள்ள பதிலில் காணப்படும் குர் ஆன் வசனங்களையும்,
ஹதீஸ்களையும் நீங்களே நேரடியாகப் படித்து விளங்கினால் நிச்சயம் 29:69ல் அல்லாஹ்
வாக்களித்துள்ளபடி தத்தம் பகுதி பிறையா? சர்வதேச பிறையா? கணினி கணக்கீட்டின் மூலம்
முன்னரே அறியும் பிறையா? என்பதை நீங்களே தெளிவாக அறிந்து கொள்வீர்கள். முயற்சிப்பவர்களின் முயற்சிகளை ஏகன் அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான் (29:69) என்ற
உறுதியான நம்பிக்கையுடன் படியுங்கள், சிந்தியுங்கள், தெளிவு பெறுங்கள். இது
காலத்தின் கட்டாயம்! அல்லாஹ் அருள் புரிவானாக!

Previous post:

Next post: