மார்க்க விதிகளைக் கடைப்பிடிப்பதால் குற்றம் இழைப்பது தவிர்க்கப்படுகிறது

in 2008 பிப்ரவரி

மார்க்க விதிகளைக் கடைப்பிடிப்பதால் குற்றம் இழைப்பது தவிர்க்கப்படுகிறது

மார்க்க விதிகளைப் பேணி வாழாமல், தன் செயல்கள் கணிக்கப்பட்டு இறுதியில் தண்டிக்கப்படுவோம் என்ற உணர்வில்லாதவர் இறைவன் வகுத்த வரையறைகளை அனுசரித்து இறைவனின் திருப்தியைப் பெற மற்றவரின் நலனுக்காகவும் மேன்மைக்காகவும் உழைக்க வேண்டிய தேவையே இல்லை என்றும், இவ்வுலகில் வாழ ஒரே ஒரு வாய்ப்பே தரப்பட்டிருப்பதால் இவ்வாழ்க்கையை, தான் நாடியவற்றை எல்லாம் எவ்வழியிலேனும் அடையப்பெற்று தான் விரும்பியவாறு செயல்பட்டு வசதி வாய்ப்புகளுடன் அனுபவிக்க வேண்டுமென்றும் தவறாக அறிவிக்கப் பெற்றுள்ளனர். இவ்விதம் சிந்திப்பவர்களைக் குர்ஆன் கீழ்வருமாறு வர்ணிக்கின்றது.

இவ்வுலகில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறோன்றும் இல்லை என்றும் நாம் இங்கே வாழ்ந்து மடிந்து விடுவோம். காலத்தைத் தவிர வேறொன்றும் நம்மை அழிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். இதைப்பற்றிய உண்மையான ஞானம் அவர்களுக்கு இல்லை. அதை ஊகித்துக் கொள்கிறார்களே அன்றி வேறில்லை. (45:24)

இவ்விதம் தவறான அணுகுமுறையை மேற்கொள்பவர் எல்லாவிதமான தீய செயல்களுக்கும் கெட்ட ஒழுக்கங்களுக்கும் உள்ளாவார். எவ்விதத் தயக்கமும் நாணமும் இன்றி பொய் சொல்வார்; கொடுத்த வாக்கை முறித்து விடுவார்; வன்முறையில் ஈடுபடுவார்; பொய் சொல்வதைத் தொழிலாகவே கருதி செயல்படுவார்; மோசடிகளில் ஈடுபடுவார்; மற்றவரின் உழைப்பையும் உடைமையையும் சுரண்டி பிழைப்பார்; வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் இந்தத் தீய செயல்களை மேற்கொள்வார். தீயவற்றிலிருந்து அவரை யாரும் எதுவும் தடுத்து நிறுத்த இயலாது.

தன் ஆணவத்தால் உந்தப்பட்டு நேரம் வாய்க்கும் போதெல்லாம் தன் மன இச்சைக்குப் பணியத் தயங்கமாட்டார். தீயவற்றில் ஈடுபட அவருக்கு வரம்பேதும் இல்லை. தனக்கும் பலனளிக்கும் என்றிருந்தால் கொலை செய்யவும் துணிந்து விடுவார். இத்தகைய நிகழ்வுகளைப்பற்றி நாளிதழ்கள் கொட்டை எழுத்துக்களால் அறிவிக்கின்றன. பொன்னகைகளுக்காக அண்டை வீட்டாரைக் கொலை செய்வதையும், மனைவியர் கணவன்மாரை ஆத்திரமடைந்து கொன்றுவிடுவதையும், தந்தையர் மக்களைக் கொடுமைப்படுத்துவதையும், மக்கள் பெற்றோரை பணத்திற்காகக் கொலை செய்வதையும் பற்றிய செய்திகளே இந்த நாளிதழ்களில் நிறைந்திருக்கின்றன. இன்னும் நாளிதழ்களில் இடம் பெறாத இத்தகைய நிகழ்வுகள் எண்ணிலடங்கா. இவை யாவும் மக்கள் தங்களின் கீழ்த்தரமான மன இச்சைகளுக்கு எளிதில் இரையாகி விடுகிறார்கள் என்பதையே தெளிவுபடுத்துகின்றன. ஆன்மீகமாக இத்தகையவர்கள் மிருகங்களை விட இழிவானவர்களே ஆவர். இத்தகையவர்கள் ஒவ்வொருவரும் குர்ஆனில் வரம்பு மீறிய பாவி (83:12) என்றழைக்கப்படுகிறார்கள்.

தாங்கள் நினைத்ததை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி செய்யக்கூடிய மக்கள் நிறைந்த ஒரு சமுதாயம் அபாயகரமானது; பேருந்தில் அல்லது கடைவீதியில் அடுத்திருப்பவர் அல்லது அடுத்து நிற்பவரிடம் எப்படி வேண்டுமென்றாலும் நடந்து கொள்ளும் மக்கள், சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவரே, கொள்ளைக்காரர்களாக, கொலைகாரர்களாக அல்லது காமவெறியர்களாக அவர்கள் காணப்பெறுவர். இவர்கள் கவர்ச்சிகரமானத் தோற்றமும், கல்வியறிவுடையவர்களாகவும் விளங்கலாம் . பெயரும் புகழும் வாய்ந்த இதழ் ஒன்றில் விவரிக்கப்பட்ட கீழ் வரும் நேர் காணல் இதனை உறுதிப்படுத்துகிறது.

கேள்வி : கொலைகள் உங்கள் கவனத்தை வெகுவாகக் கவர்வதாக கூறுகீறீர்களே! அப்படியானால் -நீங்களும் ஒரு நாள் கொலை செய்வீர்களா?

பதில் : நான் கொலை செய்ய விரும்பிய சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்பட்டன. ஆனால் நான் கொலை செய்ய விரும்பும் ஆள் யாரும் என் மனதில் குறிப்பாகத் தோன்றவில்லை. ஒரு நாளில் ஏழு அல்லது எட்டு பேரைக் கொலை செய்ய வேண்டும் என்று சும்மா விரும்புவேன். இத்தகைய விருப்பத்திற்கு மனித ஆன்மா உட்படும். நான் என் உள் மனதில் இந்த விருப்பம் எழுவதை உணர்கிறேன். ஆனாலும் அப்பட்டமான ஒரு கொலை அவ்வளவு நல்ல ஒரு செயலாகத் தோன்றவில்லை. கொலையில் இரத்தம், சாவு, அபாயச்சங்கொலி, காவலர் … … என எத்தனையோ அம்சங்கள் தொடரும். இவையெல்லாம் என் மனதில் தோன்றினாலும் கொலை செய்ய வேண்டுமென்ற எண்ணம் என்னுள் உதிக்காமலில்லை.

கேள்வி : எத்தகைய கொலை செய்ய விரும்புகிறீர்கள்?

பதில் : துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவே விரும்புகிறேன். நஞ்சு கொடுத்துக் கொல்வதில் அவ்வளவு திகில் உருவாகுவதில்லை; அது கள்ளத்தனமானது அல்லது வஞ்சகமானது.

இந்த நேர்காணலில் பங்கேற்றவர் சமுதாயத்தில் அறிவாளராகக் கண்ணியத்தோடு மதிக்கப்படுவர். ஆனாலும் பயங்கரவாதச் செயலை செய்ய விரும்புகிறார்; அதனை வெளிப்படையாகக் கூறவும் தயங்கவில்லை. இந்த மனப்பான்மை, நிச்சயமாக மார்க்க விதிகளைப் பேணாத ஒரு சமுதாயத்தின் தன்மையையே வெளிப்படுத்துகிறது. இறை நம்பிக்கையோ, இறையச்சமோ அற்ற ஒருவரின் இயல்பு எத்துணை பயங்கரமாக இருக்கும் என்பதை இந்த எடுத்துக்காட்டு விளக்குகிறது. இறை நம்பிக்கை அற்றவர்கள் எளிதாக மேற்கொள்ளும் கொலை பற்றிக் குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது:

எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காக அன்றி கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். (5:32)

இந்த வசனத்தில், ஓர் ஆத்மாவைத் தக்க காரணமின்றிக் கொல்வது மனித குலத்தையே கொன்றதற்கு ஒப்பாகும் என்று இறைவன் கூறுவது மிக முக்கியம் வாய்ந்தது. பிரிதொரு வசனத்தில் கொலை செய்பவர்கள் நரகத்தில் நிரந்தரமான தண்டனைக்குள்ளாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (4:93). இறைவனை அஞ்சுபவன் கொலை செய்வதை எண்ணிக் கூடப் பார்க்க மாட்டான். இது, குர்ஆனில் ஆதம் நபி(அலை) அவர்களின் இரு குமாரர்களைப் பற்றிய வரலாற்றில் கூறப்படுகிறது. ஆதம்(அலை) அவர்களின் மகன் ஒருவர் அவரது சகோதரரை அவர் மீது பொறாமை கொண்டு கொல்ல விரும்புகிறார். கொலை செய்யப்படவிருந்தவரோ, இறையச்சம் உடையவராதலால், மிகச் சிறந்த மனப்பான்மையுடையவராகக் காணப்பட்டார். அவர் தன் சகோதரனிடம் கீழ்வருமாறு கூறியதாகக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னை நோக்கி நீட்டினாலும் கூட நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை ஓங்கமாட்டேன். இவ்வுலகில் உள்ளோர் அனைவரையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனை நான் அஞ்சுகிறேன். (5:28)

இதில் இறை நம்பிக்கையாளர்களுக்கும் இறை நம்பிக்கையற்றவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு வெட்ட வெளிச்சமாகிறது. எந்தச் சூழ்நிலையிலும் இறை நம்பிக்கையாளர்கள் இறைவன் தவிர்க்கும்படி ஏவியவை எதையும் மீற வேண்டும் என்று நினைத்துப் பார்க்கக் கூட மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், இறை நம்பிக்கையாளர்களை கீழ்வருமாறு அறிவுறுத்தினார்கள்.

தீங்கிழைக்கவோ, தீங்கிழைத்தவரைப் பழிவாங்கவோ கூடாது. (ஸுனைன் இப்னுமாஜா)

இது மேலே கூறியதை உறுதிப்படுத்துகிறது. இதற்கு நேர்மாறாக, இறைநம்பிக்கையற்றவர்கள், வெகுத் தாராளமாகத் தீயச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் சமுதாயத்திலிருந்து களவு, இலஞ்சம், பொய் மற்றும் கொலை ஆகியவற்றை நீக்கி விடுகின்றன. இஸ்லாமிய ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பவர், இறைவன் விதித்த வரையறையைப் பேணி வாழ்வார்; தன்னுடைய இழிந்த இச்சைகளுக்குப் பணியமாட்டார்.

இதற்கு நேர்மாறாக, மார்க்கப்பண்புகளைப் பேணி வாழாதவர் தன்னுடைய மன இச்சைகளுக்கு எப்பொழுதும் இரையாகி விடுவார். இதுதான் ஒழுக்கக்கேடுகள் ஒவ்வொன்றுக்கும் வழிகோலுவதாகும். ஒவ்வொன்றுக்கும் வழிகோலுவதாகும். எடுத்துக் காட்டாக, திருடுவதால் திருடுபவன் பொருள் ஆதாயம் அடையலாம். உண்மையில் திருடுவது திருடுபவனுக்கும் திருடப்படுபவனுக்கும் தீமையே விளைவிக்கிறது. ஒரே இரவில் ஒருவனுடைய சேமிப்புகள் அனைத்தும் திருடப்படலாம்; அது சமயம் அது திருடுபவனின் மனச்சாட்சியை உறுத்தாமல் இருக்காது. பல்வேறு காரணங்களுக்காக மார்க்கம் இத்தகைய தீமைகளைத் தடை செய்கிறது; அவற்றைத் தடை செய்வதன் மூலம் உலகில் ஓர் அழகிய அமைதியான சூழ்நிலைக்கு வழிவகுத்துக் கொடுக்கிறது.

இறை நம்பிக்கையற்ற ஒருவர், “எனக்கு இறை நம்பிக்கை இல்லை; ஆனாலும் நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்” என்ற கூறலாம். இவர் அவர் வாழ்நாளில் ஒரு தடவை கூட ஏமாற்றாமல் இருந்தது உண்மையாக இருக்கலாம்; கொள்கை ரீதியாக இவர் இதைக் கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் சில தவிர்க்க முடியாதச் சந்தர்ப்பங்களில் மற்றவரை ஏமாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேரிடும். சில நேரங்களில் இவருக்குப் பணம் அவசரமாகத் தேவைப்படலாம். அல்லது ஏமாற்றுவது ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். ஏமாற்றுவதற்கு ஏதுவான அடிப்படைக் காரணங்கள் எழக்கூடிய பல்வேறு சூழ்நிலைகள் உருவாகலாம். இவை இவரை அந்தப் பாவத்தை செய்ய தூண்டிவிடும்.

மற்றவரின் உடைமையைத் தனதாக்கித் கொள்ள மார்க்கம் அனுமதிக்கவில்லை. மார்க்கக் கோட்பாடுகளைப் பின்பற்றி வாழும் மனிதர் மற்றவரை ஏமாற்ற ஒருபோதும் முயலமாட்டார். ஏமாற்றுவது, குர்ஆன் பல இடங்களில் கண்டிக்கும் ஓர் அநீதியாகும்.

ஒருவர் மற்றவரின் உடைமையைத் தவறான முறையில் விழுங்காதீர்; நீதிபதிகளுக்கு அதனை இலஞ்சமாக வழங்கி மற்றவரின் உடைமையை அபகரிக்க முயலாதீர். (2:188)

Previous post:

Next post: