கூடன்குளம் அணுமின் நிலையம்! தீர்வு என்ன?

in 2012 மார்ச்,தலையங்கம்

அணு உலைத் திட்டம் ஆரம்பிக்கும்போது எதிர்ப்புக்காட்டாது ஆதரித்தவர்கள், ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையம் கடல் கொந்தளிப்பால் பாதிப்புள்ளாகி பெரும் உயிர் நட்டம் ஏற்பட்டதிலிருந்து பல்லாண்டுகளாகப் பல்லாயிரம் கோடி செலவில் கூடன்குளத்தில் அணுமின் நிலையம் நிறுவப்பட்டு மின் உற்பத்தித் தொடங்கும் நேரத்தில் அதைச் சுற்றியுள்ள மக்கள் அதை இழுத்து மூடச் சொல்லியும், அளவில்லா மின்வெட்டின் காரணமாக எண்ணற்ற தொழிற்சாலைகள் முடங்கி அவற்றின் தொழிலாளர்கள் வேலையற்று வறுமையில் வாடுவோரும், மின்வெட்டால் அன்றாட மாமூல் வாழ்க்கையில் அவதியுறும் நடுத்தர, ஏழை மக்களும், பரீட்சைக் காலத்தில் முறையாகப் படிக்க முடியாத மாணவர்களும், பெற்றோரும் கூடன்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டே தீரவேண்டும் என்றும், விடாக் கண்டன், கொடாக் கண்டன் எனப் பிடிவாதம் பிடிக்கிறார்கள்.

கூடன்குளத்தைச் சுற்றியுள்ள மக்களை வழிக்குக் கொண்டு வரும் நோக்கில் முன்னைய அரசில் 2 மணி நேரமே நீடித்த மின்வெட்டு தற்போதைய அரசில் 10 மணி நேர மின்வெட்டாக அதிகரித்து மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மின்வெட்டால் பெரிதும் பாதிக்கப்படுகிறவர்கள் நடுத்தர, ஏழை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெருங்கொண்ட மக்களே அல்லாமல், சொற்பத் தொகையினரான செல்வந்தர்கள் அல்ல; அவர்கள் ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் மூலம் தங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்கிறார்கள் என்பது அரசுக்குத் தெரியாதா?

இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில், தங்களின் பேர் புகழையும், செல்வாக்கையும் வளர்த்துக் கொள்ளச் செலவிடும் பல்லாயிரம் கோடியையும், எதிரணியினரின் பேர் புகழையும், செல்வாக்கையும் அழித்தொழிக்கச் செலவிடும் பல்லாயிரம் கோடியையும் கொடுத்து தங்களின் தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களிலிருந்து வாங்கி மின் தட்டுப்பாட்டைத் தீர்த்து ஏழை, எளிய மக்களின் துன்பத்தைப் போக்க அரசு தயாராகாது. அதுபோல் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் மின் சக்தியை முற்றிலும் நிறுத்தினாலும் கூட, அந்நிறுவனங்கள் சுயமாக மின் உற்பத்தி செய்து தொழில் நடத்தினாலும் லாபத்தில் ஒரு சிறிதளவுதான் குறையும். ஆயினும் முழுமையாக அல்ல.

தமிழகம் முழுவதும் அமுல்படுத்து அளவுதானும் மின் தடை ஏற்படுத்த அரசு தயாராக இல்லை. காரணம் அவர்கள் கையூட்டாகக் கொடுக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சமே! அப்படிப்பட்ட பெரும் செல்வந்தர்களிடம் கோடிக்கணக்கில் பெற்று அறிவற்ற ஏழை மக்களுக்கு 500/-, 1000/-என்று கையூட்டாகக் கொடுத்து அவர்களின் விலை மதிப்பற்ற பொன்னான வாக்குகளை அபகரிக்கும் கெடுமதி பெற்ற ஆட்சியாளர்கள் பணம் படைத்தவர்களைப் பகைக்க அஞ்சுவார்கள்தானே! இது ஜனநாயக ஆட்சிமுறையின் பெரும் சாபக் கேடாகும்.

இப்போது மின் உலை வேண்டாம் எனப் போராட்டம் நடத்துவோரின் சிந்தனைக்கு!
உங்களின் இந்தப் பிடிவாதத்தால் பெரிதும் பாதிக்கப்படுவோர் சிறுபான்மையினரான முதன் மந்திரியோ, மந்திரிகளோ, எம்.பி. எம்.எல்.ஏக்களோ, அரசு உயர் அதிகாரிகளோ, பெரும் செல்வந்தர்களோ அல்ல. எனவே அவர் கள் உங்கள் போராட்டத்தைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அதற்கு மாறாக உங்கள் வீண் போராட்டத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறவர்கள் உங்களைப் போன்ற நடுத்தர, ஏழை, வறுமைக் கோட்டற்குக் கீழ் உள்ள பெரும்பான்மை மக்களே! பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறவர்கள் SC, ST என தாழ்த்தப்பட்ட மக்களாக அடையாளம் காட்டப்படு கிறவர்களே! அன்றாட உழைப்பைக் கொண்டு மட்டுமே அரை வயிறு, கால் வயிறு நிரப்புபவர்களே. அவர்களை முழுப்பட்டினி கிடக்க வைப்பது என்ன நியாயம் எனச் சிந்தியுங்கள்.

மின் கசிவு ஏற்பட்டு எத்தனைத் தொழிற் சாலைகள், கட்டிடங்கள் தீக்கிரையாகி எண்ணற்ற உயிர் சேதங்களோடு. பல்லாயிரம் கோடி நட்டமும் ஏற்படுகிறது. அதனால் மின் உற்பத்தியோ அதன் பயன்பாடோ தேவை இல்லை என்று சொல்வோர் உண்டா? எங்கள் பகுதியில் மின் உற்பத்தி தேவை இல்லை; என்போர், அதேபோல் ஆபத்தை விளைவிக்கும் மின் இணைப்பும் எங்களுக்குத் தேவை இல்லை; எங்கள் பாட்டன், பூட்டன் போல் வாழ்கிறோம் என்று சொல்ல முன்வருவீர்களா? அப்படியானால் ஏன் இந்த முரண்பட்டப் போக்கு? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற முரண்பட்டப் போக்கு நியாயமா?

காசைக் கரியாக்கும் வெட்டிச் செலவான காதைச் செவிடாக்கும் பட்டாசுத் தொழிற் சாலைகளில் விபத்து ஏற்பட்டு பலர் பலியாவதைப் பார்த்து பட்டாசும் வேண்டாம்; அதனால் ஏற்படும் உயிர், பொருள் நாட்டமும் வேண்டாம் எனப் போராடுவோர் உண்டா? அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்திலும் பேராபத்தும் இணைந்தே இருக்கிறது. அவற்றின் பலன்களை அனுபவிக்க முன்வருவோர், அவற்றால் விளையும் ஆபத்துக்களையும் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதே நீதியாகும்.

மக்கள் நலனுக்காக விமானம் தயாரிக்க முற்பட்ட ரைட் சகோதரர்களில் ஒருவர் அந்த விமான விபத்திலேயே இறந்தார். இதுபோல் பல கண்டுபிடிப்பாளர்கள், அந்த முயற்சியிலேயே ஆபத்தில் சிக்கி மாண்டிருக்கிறார்கள். அதி நவீன கண்டுபிடிப்புகளைக் கொண்டு பலன் அடையும் மனித சமூகம் அவை கொண்டு சில சமயங்களில் நட்டமடைவதும் இயற்கை நியதியே. நாம் கணக்குப் பார்க்க வேண்டியது அவை கொண்டு பலன் அதிகமா? அல்லது பாதிப்பு அதிகமா? என்பதே!

இப்படி ஆகாயத்தில் பறக்கும் விமானங்கள் கடலில் மிதந்து செல்லும் சிறிய பெறிய கப்பல்கள், படகுகள், தரையில் செல்லும் பல ரக வாகனங்கள் இப்படி அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்திலும் பலன் இருப்பதோடு பாதிப்பும் இருக்கத்தான் செய்கிறது. அதே சமயம் இவை கண்டுபிடிக்கப்பட்டு பலனளிக்க ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை இவற்றால் ஏற்பட்டப் பலன்களையும், இழப்புகளையும் சகவிகிதத்தில் கணக்கிட்டுக் கொண்டு அவற்றோடு அணுமின் நிலையங்கள் மூலம் மின்சக்தி கிடைக்க ஆரம்பித்ததிலிருந்து இன்று வரைக் கிடைத்த பலனோடு, இழப்பைச் சதவிகிதத்தில் கணக்கிட்டு ஒப்பிட்டால், அது மிகமிகக் குறைவே என்பது தெரியும்.

மேலே குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படும் ஆபத்து குறிப்பிட்ட சில எண்ணிக்கையினரோடு முடிந்து விடும். ஆனால் அணு உலையால் ஏற்படும் ஆபத்து பல கி.மீ.தூரம் வரையுள்ள மக்களையும் பாதிக்குமே என அணு உலை எதிர்ப்பாளர்கள் வாதிடலாம். அணு உலை ஆபத்து மட்டும்தான் பல கி.மீ. வரை பாதிப்பை ஏற்படுத்துமா? சுனாமி, “தானே’ போன்ற மிகக் கடுமையான புயல்கள், பேய் மழை, நிலநடுக்கம், எரிமலை போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பேராபத்து கள் பல கி.மீ.தூரமுள்ள மக்களைக் கொத்து கொத்தாக அள்ளிச் செல்லவில்லையா? இவற்றை மனிதச் சக்தியால் தடுக்க முடியுமா?

கரையிலும், கடலிலும் ஏற்படும் குழப்பங்கள், பேராபத்துகள் மனிதன் தன் கரங்களால் தேடிக் கொண்டவையே என மனிதகுல அனைத்து மக்களுக்கும் சாதி, மத, இன, மொழி பேதமின்றி ஒரே இறைவனான தன்னந்தனியனான இணை துணை இல்லாதவனான அரபி மொழி மொழியில் “அல்லாஹ்’ என அழைக்கப்படும் கடவுள் மனித குலத்திற்குரிய தனது இறுதி வாழ்க்கை வழிகாட்டி நெறிநூல் அல்குர் ஆனில் 2:95,195, 3:182, 4:62, 8:51, 30:41, 59:2 ஆகிய பல இடங்களில் கூறி எச்சரிக்கிறான்.

பிரளயத்தால் அழிக்கப்பட்ட நூஹு இறைத்தூதரின் சமுதாயம், நிலநடுக்கம், பெரும் காற்று, புயல் இன்னும் இவைபோல் பல வழிகளில் பேரழிவுகளைச் சந்தித்த ஆத், ஃதமூது போன்ற சமூகங்கள் தங்கள் துர்ச் செயல்களின் காரணமாகவே பேரழிவைச் சந்தித்தன என இறைவன் இறுதி நெறி நூலில் பல இடங்களில் எச்சரித்து பாடம் புகட்டு கிறான். மனித சமூகம் பாடம் பயிலத் தயாரில்லை.

சமீப காலத்தில் சுனாமி, புயல் பெரும் காற்று, நில நடுக்கம், பெரும் நெருப்பு, பேய் மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளிலுள்ள மக்களின் வாழ்க்கை முறையை அவதானித்தால் இந்த உண்மை தெளிவாகப் புரியும். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற தீய நோக்கில் குடி, சூது, விபச்சாரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை, ஈவ்டீஸிங், மற்றவர்களின் சொத்துக்களை அநீதமான முறைகளில் அபகரித்தல், கையூட்டு(லஞ்சம்) ஊழல், முறைகேடுகள் எனப் பஞ்சமா பாவங்கள் எனச் சொல்லப்படும் அனைத்தையும் துணிந்து செய்யும் மக்கள்தான் இன்று பெரும்பான்மையாகக் காணப்படுகின்றனர்.

மனிதக் கரங்கள் பெரும் பாவங்களைத் தேடிக் கொண்டதின் விளைவாகப் பருவக் காலங்களே தலைகீழாகி வருகின்றன.

இந்த பஞ்சமா பாவங்கள் அனைத்தையும் சில இடங்களில் வெள்ளித்திரையில் பரப்பிய நிலை போய், இன்று சின்னத்திரை என்ற பெயரால் தொலைக்காட்சி மூலம் படுக்கையறையிலேயே பரப்பும் கொடுமையை என்ன சொல்ல? இவற்றை அதாவது இப்படிப்பட்ட பஞ்சமா பாவங்களையும் பொழுதுபோக்கு என்ற பெயரால் மனோ இச்சைக்கு அடி பணிந்து ஐயறிவு மிருக வாழ்க்கை வாழத் துடிக்கும் பெரும்பான்மை மக்களிடையே பரப்பி அதன் மூலம் கோடி கோடியாகக் குவித்து சொகுசு, குபேர வாழ்க்கை வாழ முற்படுவோரை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், வேலை நிறுத்தம், இத்தியாதி இத்தியாதி செயல்கள் மூலம் போராட யார் தயாராக இருக்கிறார்கள்? சிந்தியுங்கள்!

இவை அனைத்தையும் நடுநிலையோடு நிதானமாகச் சிந்தித்து, அணு உலை எதிர்ப் பாளர்கள் தங்களின் வீணான, அறிவீனமான போராட்டங்களைத் தவிர்த்து நாட்டுக்கு, நாட்டு மக்களுக்குக் குறிப்பாக நடுத்தர, ஏழை, வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் துயர் போக்க முன்வரவேண்டும். ஒரே தந்தைக் கும், தாய்க்கும் பிறந்த ஒரே குடும்ப மக்களை, மதவெறி, ஜாதிவெறி, இனவெறி, மொழி வெறி, பகுதி வெறி எனப் பிரித்தாளுவதன் மூலம் உலக ஆதாயம் அடைய முற்படும் இடைத்தரகர்களான மத, அரசியல் தலைவர் களின் மயக்கு மொழிகளில் சிக்கிச் சீரழியாமல், அமைதியற்று வாழ முற்படாமல், சாந்தி அமைதி வாழ்க்கை வாழ முன் வாருங்கள். நாம் நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். நாமும் வாழவேண்டும். மற்றவர்களையும் வாழ விட வேண்டும் என்ற தூய எண்ணம் வேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையைச் சீரழித்து நாம் வாழ வேண்டும் என்று ஒருபோதும் எண் ணக் கூடாது. இது வழி கெடுக்கும் சாத்தான்-மனோ இச்சை நம்மைத் தூண்டும் பெரும் அழிவுக்குரிய செயலாகும்.

மத்திய அரசும் தமிழகத்தைப் பொறுத்த வரை மாற்றாம் தாய் மனப்பான்மையுட னேயே செயல்படுகிறது. தமிழக மீனவர் வி­யத்தில் சிறிதும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. மொழி வெறி, மாநில வெறி மிதமிஞ்சிய இக்காலத்தில் அந்தந்த மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சக்தி அந்தந்த மாநிலங்க ளுக்கே பயன்படும் வகையில் அமைய வேண் டும். அணுமின் உலையால் ஏற்படும் பலன்களை மற்ற மாநிலங்களும் அனுபவிக்கும் நிலையில் அதனால் ஏற்படும் ஆபத்தான கழிவுகளையும், விபரீதம் ஏற்பட்டால் அதன் தீய விளைவை யும், அணு உலை அமைந்த மாநிலம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற நடைமுறை மக்களின் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு உணர்ந்து செயல்படவேண்டும்.

நாட்டுக்கும், நமக்கும் நல்லதே நடக்க முதலில் நாம் நல்லதே நடக்க நாடுவோம். அந்த நல்லெண்ணத்தோடு, நமது உழைப்பு இருக்குமானால் அது ஒருபோதும் வீணாகாது. வெற்றி உறுதி! இது தன்னந்தனியனா இணை, துணை, தேவை எதுவும் இல்லா இறைவனின் வாக்குறுதி!

Previous post:

Next post: