நோபல் பரிசு-2011-பிரபஞ்ச விரிவு ஓர் ஆய்வு

in 2012 ஏப்ரல்,அறிவியல்

நாத்தீக பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு….
நோபல் பரிசு-2011-பிரபஞ்ச விரிவு ஓர் ஆய்வு
அல்குர்ஆன் இறைவனின் வார்த்தை-உறுதிப்படுத்தும் ஆய்வின் முடிவுகள்:
ஜாஃபர் சித்தீக், கம்பம்

நோபல் பரிசுகள் 1901ஆம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உடலியல், இலக்கியம் மற்றும் உலக அமைதிக்கான 5 துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு 1969ஆம் ஆண்டு முதல் ஸ்வீடன் நாட்டுத் தேசிய வங்கியால் ஆல்ஃபிரட் நோபல் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆறு நோபல் பரிசுகளும் ஆண்டு தோறும் ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10ம் தேதியன்று வழங்கப்பட்டு வருகின்றன. இப்பரிசைப் பெறுவோருக்கு ஒரு தங்கப் பதக்கமும், ஒரு சான்றிதழும், ரொக்கப் பரிசுத் தொகையும் அளிக்கப்படுகின்றன. பரிசளிப்பு விழா ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக் ஹோம் நகரில் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு 2011 இயற்பியலுக்கான நோபல் பரிசு
1. Saul Permutler-Laurence Berkeley National Labarotory, USA.
2. Brain P.Schmidt-Australian National University-Australia
3. Adam G.Riess-Johns Hopkins University, Space Telescope Science Institute.

நோபல் பரிசு வாங்கும் அளவு உயர்ந்த விஞ்ஞானம் கருத்து:
வெகு தொலைவிலுள்ள நமது அல்லது மற்ற நட்சத்திர மண்டலங்களில் (Galaxy) உள்ள நட்சத்திரங்கள் வெடித்து அதன் நிலையைப் பற்றி ஆராய்ந்துள்ளனர். இதன்மூலம் பிரபஞ்சத்தின் விரிவாக்கம், பிரபஞ்சம் மிக வேகமாக விரிவடைகிறது என்று “சூப்பர் நோவா’ ஆய்வின் மூலம் கூறியுள்ளனர். பிரபஞ்சம் விரிவடைவதற்கு கரும் ஆற்றல் (Dark Energy) காரணம் எனவும் கூறுகின்றனர்.

வெகு தூரத்திலுள்ள சில நட்சத்திர மண்டலங்களில் ஏற்பட்ட நட்சத்திர வெடிப்பைக் கண்டு, ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்ட போது எல்லா விஞ்ஞானிகளுக்கும் ஒரு வியப்பைத் தந்தது. மேலோட்டமாக நோக்கும்போது சாதாரணமான கண்டுபிடிப்புதான் என்று பலருக்குத் தோன்றினாலும் இந்த கண்டுபிடிப்பின் பொருள்  (Implications)  மிகப் பெரியது.

அதாவது இந்த பிரபஞ்சம் (Universe)  எப்படி நாளுக்கு நாள் விரிவடைகிறது என்பதைப் பற்றிய ஓர் அரிய உண்மையை நமக்குத் தந்தது.
இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டது என்னவென்றால் ஒரு பெரிய வெடிப்பில் (Big Bang) பிறந்த நமது அண்டம் வரிவடைவதின் வேகம் குறையாமல்  (Expansion with increasing velocity) ஒரு முடுக்கிவிடப்பட்ட முறையில் (Accelerated Expansion)  விரிவடைந்து கொண்டிருக்கிறது.
அன்றைய விஞ்ஞானத்திற்கு இந்த முடுக்கப்பட்ட வளர்ச்சி ஒரு முரண்பாடாகத் தெரிந்திருந்தாலும், இவர்கள் 3 பேரும் 10 ஆண்டுகளாக கவனமாக பல கோணங்களில் ஆராய்ச்சி செய்து இது ஒரு முரண்பாடு இல்லை, இயற்கை இப்படித் தான் இருக்கிறது. நாம் இந்த அண்டத்தை இதுவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை. நமது அறிவியலில் சில அறியாமைகள் புதைந்திருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தனர்.

விஞ்ஞானிகள் செய்த தவறு என்ன?
விஞ்ஞானிகள் இந்த அண்டத்தையே தவறாக எடை போட்டிருந்தனர்! நீண்ட காலமாக செய்த ஆய்வின்படி இந்த அண்டத்தின் எடை சுமார் 5×10 கிலோ (5க்கு பிறகு 55 சைபர்கள்) (அண்டத்தை எடை போடுவது சுலபமான காரியம் அல்ல!) கடந்த ஆண்டு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, உதாரணமாக முன்பு அண்டத்தின் எடை 100 கிலோ எனில், தற்போதைய அண்டத்தின் எடை சுமார் 1000 கிலோ, அதாவது 10 மடங்கு பெரியது என்பதுதான். நமது கண்களுக்கு டெலஸ்கோப் மூலமாகத் தெரியும் நட்சத்திரங்கள், கேலக்ஸிகள், நெபுலாக்கள், விண்வெளித் தூசிகள் ஆகியவற்றைச் சேர்த்து எடை போட்டிருந்தனர்.

இவர்கள் கணித்த எடை தவறாக இருக்குமென்றால் நம் கண்களுக்கு, தொலைநோக்கிகளுக்கு புலப்படாத ஒளி தராத ஒருவித கருப்புப் பொருள்கள் (Dark Matter) இந்த அண்டம் முழுவதும் வியாபித்துள்ளன என்ற ஓர் உண்மை புலப்பட்டது. இந்த கருப்புப் பொருள் நமக்குத் தெரிந்த எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் அல்லது ஒளித்துகளோ அல்ல. இதுவரை விஞ்ஞானிகளின் கண்களுக்குத் தப்பிய இந்த துகள் என்ன என்பது தற்போது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிர்!

5% மட்டுமே நமக்குத் தெரிந்த கேலக்ஸிகள், நெபுலாக்கள், நட்சத்திரங்கள் etc…. மீதமுள்ள 95% நமக்குப் புலப்படாத கரும் பொருள் ஆற்றலே! மன இச்சையைப் பின்பற்றும் நாத்திக பகுத்தறிவாளர்கள்? இதை நம்புவார்களா? அதாவது 20% கருப்புப் பொருளாகவும், (Dark Matter) 75% கருப்புச் சக்தியாகவும் (Dark Energy) இந்த அண்டம் முழுவதும் பரவியுள்ளன.

இந்த ஆராய்ச்சியாளர்கள் எதை அடிப்படையாக வைத்து ஆய்வுகளை மேற்கொண்டனர்? வேத கிரந்தங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தனரா? இல்லை! பிரபஞ்சத்தின் தோற்றம், பிரபஞ்சத்தில் நடைபெறும் மாபெரும் அதிசயங்கள், எந்தவித கோணலும், குறைகளற்ற, சீரான இயக்கத்திலுள்ள பிரபஞ்சப் பொருள்கள், இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, இதன் நிலை என்ன? இதன் எதிர்கால நிலை என்ன? என்ற உந்துதலே இவர்கள் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.

ஆனால் மாபெரும் கைசேதம் என்னவென்றால் படைத்த ஒரே இறைவனின் இறுதி இறை நெறி வழிகாட்டல் நூலில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகள் மதகுருமார்களால் மறைக்கப்பட்டதின் விளைவு, பல விஞ்ஞானிகளும் இந்த மாதிரி நிகழ்வுகள் இயற்கையே! இதெல்லாம் வானவேடிக்கையே! என்று சொல்லும் நிலையையே நாம் காண முடிகிறது.

நாத்திகர்கள், பல தெய்வக் கொள்கைக்காரர்கள் சிந்திப்பார்களா?
சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள், கருப்பு ஆற்றல் என கண்டறிவதற்கு முன்னரே 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதை அரபகத்தில் பிறந்து இறுதி இறைத் தூதரான நபி(ஸல்) அவர்களால் எவ்வாறு சொல்ல முடிந்தது?
“”வஸ்ஸமாஅ பனய்னாஹா பிஅய்திவ் வ இன்னா லமூஸிஊன்”
“And the universe, we constructed with power and skill and verily we are expanding” (Al-quran 51:47)

மேலும் நாம் வானத்தை (பிரபஞ்சத்தை) சக்தியைக் கொண்டு அமைத்தோம். நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
இந்த ஆயத்தில் “Aydin”  என்ற சொல்லுக்கு  “Power”  (சக்தி) என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது.

(Ref: Aydin: Al-Ayd and Al-Aad all mean power – Book : Lisan Al-Arab)
“Moosi’oon  என்றால் Extension, Opposite of narrowness  அறிவியல் நிகழ்வுகள்: Scientific Facts)

1929ல் எட்வின் ஹப்பிள் பால்வழித் திரள்கள் ஒன்றயொன்று அசுர வேகத்தில் விலகிச் செல்வதாக கண்டறிந்தார். மேலும் ஹாம்ப்ஸன், ஹப்பிள் ஆகியோர் பிரபஞ்சம் விரிவடைதலை உறுதி செய்தனர். இதன் மூலம் ஹப்பிள் கண்டுபிடித்த விதியின் மூலம் பிரபஞ்சத்தின் வயதையும் கணக்கிட முடிந்தது. ஹப்பிள் தனது தொலைநோக்கி மூலம் பிரபஞ்சம் எவ்வாறு விரிவடைகிறது என்பதை ஐன்ஸ்டீனுக்கும் அறிவித்தார்.

சிவப்பு இடப்பெயர்ச்சி:
நிறமாலை நோக்கியின் இரண்டு முனைகளில் குறுகிய அலை நீளம் கொண்ட ஊதா நிறத்திற்கும், நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்திற்கும் உரிய இடங்களாகும்.
காலக்சிகள் பூமியை நோக்கி வருவதாக இருந்தால் பூமிக்கும், காலக்சிக்கும் இடையிலுள்ள தூரம் குறுகிக்கொண்டே வந்து, காலக்சியிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் குறுகிய அலை நீளம் கொண்ட ஊதா நிறத்தை நோக்கி இடப் பெயர்ச்சி அடைய வேண்டும். மாறாக, காலக்சிகள் பூமியை நெருங்கி வரவில்லை. எனவே ஒளிக்கற்றைகள் நீண்ட அலை நீளம் கொண்ட சிவப்பு நிறத்தின் இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்தது. இந்த இயற்பியல் பண்பை  Red Shift  என்கிறார்கள்.
சூப்பர்நோவா மற்றும் கருந்துளை:
ஒவ்வொரு நட்சத்திரமும் சூரியனைப் போன்றதே. அவை வெகு தொலைவில் இருப்பதால் கண்களுக்குச் சிறியதாகத் தெரிகின்றன. அதேபோல் நட்சத்திரங்கள் அவற்றின் அளவு, அடர்த்தி மற்றும் வெப்பநிலை ஒன்றுக்கொன்று மிகவும் மாறுபட்டவை. ஒரு நட்சத்திரத்தின் ஆயுட்காலம் அதில் உள்ள ஹைட்ரஜன் எரி பொருளைப் பொறுத்தது. ஹைட்ரஜன் தீர்ந்து போகும்போது நட்சத் திரம் சுருங்க ஆரம்பிக்கிறது. சுருங்கிய நிலையில் அது குள்ள நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் அதன் சுருங்கிய வடிவம் மிகவும் கனமானது. சூரியனை விட கூடுதல் எடை கொண்ட ஒரு நட்சத்திரம், தனது அளவை விடப் பல மடங்கு வீங்கி பின்னர் திடீரென வெடிக்கிறது. இது “”சூப்பர்நோவா” (Supernova) எனப்படும்.

மிக அதிக எடையுள்ள ஒரு நட்சத்திரம்- சூரியனை விட பல மடங்குகள் எடை கொண்டது. அதன் ஈர்ப்பு விசை காரணமாகவே நொறுங்கி முடிவில், ஒளியும் கூட வெளியேற முடியாத நிலைக்கு மாறுகிறது. இதனை “”கருந்துளை”  (Black Hole)  என்கிறார்கள்.

ஹப்பிளின் கூற்றை ஏற்றுக்கொண்ட ஐன்ஸ்டீன்:
நிலையான அண்டக் கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்கு, ஐன்ஸ்டீன் தன்னுடைய சார்பியல் தத்துவக் கொள்கையில் திருத்தங்கள் செய்து பிரபஞ்சவியல் மாறிலியை (Cosmoligical Constant)   அறிமுகம் செய்தார்.

ஆனால் ஹப்பிளின் சிவப்பு இடப் பெயர்ச்சி மூலம் அண்டம் விரிவடைகிறது என நிலை நாட்டப்பட்டதால் நிலையான அண்டக் கோட் பாட்டில் அறிமுகம் செய்த பிரபஞ்சவியல் மாறிலிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பிரபஞ்சம் “”திறந்ததாக” (Open) இருந்தால் விரிவாக்கம் தொடர்ச்சியாக நடைபெறும். அல்லது “”மூடியதாக”(closed) இருந்தால் விரிவாக்கம் நடைபெறாமல், அனைத்து பிரபஞ்சப் பொருட்களும் பெரிய நெருக்கடிக்கு (Big Crunch) உள்ளாகி அனைத்தும் உருக்குலைந்து ஒரு Singularity- ல் முடியும்.

முதலாவதாக சொல்லப்பட்ட நிகழ்வு எப்போது நடைபெறச் சாத்தியமென்றால், “”கருப்பு ஆற்றல்” (கருவியின் துணையுடன் காண முடியாது) பிரபஞ்சத்தில் அதிக அளவு இருந்தால். இரண்டாவதாக சொல்லப்பட்ட நிகழ்வு, நடைபெற முக்கிய காரணி என்னவென்றால் “”கரும்பருப்பொருள்” (Dark Matter-காணக் கூடிய அலை நீளத்தில் கதிர்வீச்சை வெளி விடாது) பிரபஞ்சத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதனால் புவிஈர்ப்பு இழப்பையும் ஏற்படுத்தும்.

சூப்பர் நோவாவை தேர்ந்தெடுக்கக் காரணம் மற்றும் நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்கள் சந்தித்த சவால்கள்:
1. ஆராய்ச்சியாளர்களின் கண்களில் சிக்கிய நட்சத்திர வெடிப்பில் சிறப்பானது Type Ia Super nova  ஆகும். இந்த சூப்பர் நோவா, மற்ற பெரிய சூப்பர் நோவாக்களை விட முற்றிலும் மாறுபட்டது.

2. கடுமையான வெடிப்பு மூலம் வெள்ளை நட்சத்திரம் (White Dwarf Star) வெடித்து சூப்பர் நோவாவாக மாறுகிறது.

3. இந்த நட்சத்திரம் அணுக்கரு இணைவு மூலம் ஆற்றலை வெளியிட்டு தன்னுடைய வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்கிறது.

4. 15 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இவ்வகை நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் ஒளியின் செறிவு மிகவும் குறைவாக இருந்ததால், CCD காமிராக்கள் (Charged Coupled Device)  மூலமே ஆய்வை மேற்கொள்ள முடிந்தது.

5. இதேபோல் 50 சூப்பர் நோவாக்களில் இருந்து பெற்ற ஒளியின் அளவு எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. இதிலிருந்தே அண்டம் விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று உறுதியாக ஆய்வின் மூலம் இவ்வுலகுக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.

6. அதே நேரத்தில் சூப்பர் நோவா வெடித்த பிறகு உண்டாகும் மிக அதிக பொலிவு மெதுவாகவே மறைந்து, மேலும் பால் வழித்திரளின் வெளிச்சத்தையும், சூப்பர் நோவாவின் வெடிப்பின் போது ஏற்பட்ட வெளிச்சத்தையும் வேறுபடுத்தி அறியவும் சிரமமாக இருந்தது.

7. சூப்பர் நோவா வெடித்து உடனே மறைவதால், அதைக் காண்பதற்கும் அதி நவீன தொலைநோக்கியும் தேவைப்பட்டது. இதற்கு மிக அதிக எண்ணிக்கையில் அறிவியல் அறிஞர்களின் பங்கும் இருந்தது.

இப்படிப் பல கஷ்டங்களைச் சந்தித்த பிறகுதான் அண்டம் விரிவடைகிறது என்ற உண்மையை உலகிற்கு பிரகடனம் செய்துள்ளனர்.
அக்கு வேறு ஆணி வேறாக அண்டத்தை அலசி ஆராயும் NASA விஞ்ஞானிகளும், மறைந்த அறிவியல் மேதை ஐன்ஸ்டீனும், மற்றும் ஹப்பிள், ஸ்டீஃபன் ஹக்கிங் போன்றோரும் அல்குர்ஆனை படிக்காததாலேயே, தாங்கள் கண்டறிந்த ஆய்வின் முடிவுகள் அல்குர்ஆனின் கூற்றுக்கே ஒத்துப் போகின்றன என்ற பேருண்மையை உணர முடியாமல் இருந்துள்ளனர். (மற்றவர்கள் குர்ஆனைப் படித்து விளங்க இந்த மவ்லவி மதகுருமார்கள் விட்டால்தானே! ஆ-ர்)

இந்த அறிவியல் பேருண்மைகள் இந்துக்கள் வைத்திருக்கின்ற வேதப் புத்தகங்களிலும் இல்லை.பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு உண்டானது என்று சொல்லப்படும் பெரும்பாலான கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் பைபிளிலும் இல்லை. நாத்திகர்களால் பெரிதாக மதிக்கப்படும் பெரியாரின் நூலிலும் இல்லை.

பரிசுத்தவான்களான மலக்குகள் தவிர வேறு யாரும் தொடமாட்டார்கள் என்ற குர்ஆன் இவ்வுலகிற்கு இறக்கப்படுவதற்கு முன்னுள்ள நிலை பற்றிய அல்குர்ஆனின் கூற்றுக்கு தவறான விளக்கத்தை தந்து மனிதர்களும் அல் குர்ஆனைப் படிக்கவிடாமலேயே முஸ்லிம்களை உண்மையாகவே அவாம்களாக ஆக்கி யிருக்கும் ஆலிம்கள் என்று சொல்லக்கூடிய வர்களும் அறிவியல் உண்மையை உணர்வதாக இல்லை.

“”அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக படிப்பினை பெறுவோர் அறிவுடையவர்கள்தாம்” அல்குர்ஆன்39:9

இறைவனை நிராகரிக்கக் கூடியவர்களும், பல தெய்வ சிந்தனை உடையவர்களும், இறைத் தூதர்களை கடவுளாக ஆக்கி வழிபடுபவர்களும், இயற்கையை வணங்கக் கூடியவர்களும் சிந்திப்பார்களா?

சாதாரணமான 100kg எடை கொண்ட மனிதன் மனிதனை விட மிகவும் சிறிய எடை கொண்ட தெய்வமாக வணங்கப்படும் சிலைகள் 10 55 நிறை கொண்ட பிரபஞ்சத்தை படைப்பது சாத்தியமா? ஒளியின் திசைவேகத்தில் செல்லக் கூடிய கதிர்வீச்சுக்களை உருவாக்க முடியுமா?

“”அவன் எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுக்கு கூட் டாளி எவருமில்லை. அவனே எல்லாப் பொருள் களையும் படைத்து அவற்றை அதனதன் அளவுப்படி அமைத்தான். (25:2)

“”அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவை எந்தப் பொருளையும் படைக்கமாட்டா; அவை படைக் கப்பட்டவையே” (25:3)

அறிவியல் உலகைப் பொறுத்தவரை பல விஞ்ஞானிகளால் சொல்லப்பட்ட கருதுகோள்கள் (hypolthesis)  சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டும் உள்ளன. பல அறிவியல் கூற்றுகள் அனுமானங்களாகவே உள்ளன. மனிதர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் பலப்பல விஷயங்களை அவர்களால் அறிந்து கொள்ள நிச்சயம் முடியாது. பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருள்களும் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் சுழன்று கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கின்றன. பல பில்லியன் வருடங்கள் ஆகியும் இம்மாபெரும் பிரபஞ்சம் எந்தவித குறையும், கோணலும் இல்லாமல் எவ்வாறு சீராக இயங்க முடிகிறது?

… இன்னும் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்குக் கட்டுப் பட்டவையாகப் (படைத்தான்) அறிந்து கொள்ளுங்கள்! படைத்தலும், கட்டளையிடு தலும் அவனுக்கே சொந்தம்…. (7:54)

படைத்த ஒரே இறைவனின் வஹியை எடுத்துச் சொன்ன நபி(ஸல்) அவர்களை பைத்தியக்காரர், சூனியக்காரர், கவிஞர், இட்டுக்கட்டுபவர், இவரே எழுதுகிறார் என்று இறை நிராகரிப்பாளர்களால் பட்டம் சூட்டப்பட்டது. அப்படி அவர்களால் அழைக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன. இறை நிராகரிப்பாளர்களால், மேற்கண்டவாறு நபி(ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும் இனி உலகம் அழியும் வரையும் நபி(ஸல்) அவர்களின் கூற்றில் எந்தவொரு தவறையும், முரண்பாடையும் எந்தவொரு அறிவு ஜீவியாலும் கண்டறிய முடியாது ஏனென்றால்,

“அவனே(அல்லாஹ்) தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான். சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக; (இதற்கு) சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானவன்” (48:28)

இந்து புரோகிதர்கள், இஸ்லாமிய புரோகிதர்கள், கிறித்தவ புரோகிதர்கள், நாத்திக புரோகிதர்கள் ஆகிய அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!:
இந்து மத புரோகிதர்களைப் பொறுத்தவரை அறிவியல் ரீதியான உண்மைகளை மறுத்து மூட நம்பிக்கைகளை மதபோதனைகளாக போதிக்கின்றனர். சந்திர, சூரிய கிரகணங்களின்போது கோயில் நடை சாத்துவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

முஸ்லிம் மதகுருமார்கள் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களை அவாம்களாக ஆக்கி அல்குர்ஆனை படிக்க விடாமல், அல்குர்ஆனில் கூறப்பட்ட அறிவியல் ரீதியான நிரூபணங்களையும் ஏற்றுக் கொள்ளாமலும் அல்லாஹ்வுடைய வழியில் மக்களைச் செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யூதப் புரோகிதர்களும், கிறித்தவப் புரோகிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பைபிளில் உள்ள அறிவியலுக்கு முரண்பட்ட வசனங்களை மறுத்து, உண்மையாகவே அறிவியல் பேருண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொன்ன அறிவியல் விஞ்ஞானிகள் கொல்லப்பட்ட சம்பவமும் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

கத்தோலிக்க குருமார்களின் முட்டுக்கட்டை:
பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்றும், இந்த மையத்தைச் சுற்றித்தான் சூரியன், பிற கோள்கள் சுற்றுகின்றன. இதற்காக கிறிஸ்தவ மதம் தனது வேதப் புத்தகங்களை மேற்கோள் காட்டியது. டாலமியும், அரிஸ்டாட்டிலும் கூட இதை சரியென்று சொன்னார்கள். ஆனால் இந்த தத்துவத்தை தகர்த்தவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கலீலியோ.

சூரியனும் மற்ற கோள்களும் பூமியைச் சுற்றவில்லை. பூமிதான் மையம் என்பது தவறு. பூமி தான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று கூறினார் கலீலியோ, உடனே கத்தோலிக்க புரோகிதர்கள் கோபத்தில் பொங்கி எழுந்தார்கள். கர்த்தருக்கு எதிராக கருத்துச் சொன்னதாக குற்றம் சுமத்தினார்கள்.

கலீலியோ இதை ஒன்றும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று சொல்லிவிடவில்லை. வானவியலில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர்; தனது 18 வயதில் தொடங்கிய ஆராய்ச்சிப்பயணம். மத நம்பிக்கைக்குப் புறம்பாக இவர் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று சொன்னதால் இவரை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்தார்கள்.

இதே கருத்தை இவருக்கு முன் சொன்ன கோபர் நிக்கசின் புத்தகங்களை தேவாலயங்கள் தடை செய்தன. இன்னொரு விஞ்ஞானி உயிரோடு எரிக்கப்பட்டார். கலீலியோவுக்கு இதெல்லாம் தெரியும். மற்றவர்களைப் போல தானும் வீணாக சாக விரும்பவில்லை. தனது கடினமான ஆராய்ச்சி உண்மைகளை மறைத்து நீதிமன்றத்தில் “”நான் சொன்னது தவறுதான்” என்று அழுதுகொண்டே சொன்னார். இதனால் மரணதண்டனையில் இருந்து தப்பினார். இருந்தாலும் 10 மாத காலம் கலீலியோ அனுபவித்த சித்திரவதை மிகவும் கொடுமை யானது. கடைசியில் அவரை சாகும் வரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தார்கள்.

இவருக்குப்பின் வந்த ஐசக் நியூட்டன் போன்றவர்கள் கலீலியோ சொன்னது உண்மை தான் என்றார்கள். அறிவியல் பூர்வமாகவும் நிரூபித்தார்கள். ஆனால் மதகுருமார்கள் கடைசி வரை ஒத்துக் கொள்ளவில்லை. கடைசியாக வேறு வழியில்லாமல் கலீலியோ இறந்து 350 வருடங்கள் கழித்து கலீலியோ சொன்னது உண்மை தான் என்று வாடிகன் ஒப்புக் கொண்டது.

இதேபோல்தான் நாத்தீகப் புரோகிதர்களும் எந்தவொரு செய்தியையும் அறிவியலின் உரை கல்லோடு உரசிப்பார்ப்பார்கள். அல்குர்ஆனில் சொல்லப்பட்ட அற்புத, வியத்தகு விஞ்ஞான உண்மைகளை மறுப்பார்கள். ஆனால் மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்ற மடமையான, கூமுட்டை வாதத்தை வைப்பார்கள். ஆக அனைத்து மதப் புரோகிதர்களும் உண்மையை ஏற்காத குருடர்களாகவும், செவிடர்களாகவுமே இருக்கிறார்கள்.

மேலும் சுஜ மதகுருமார்களும், தவ்ஹீது மத குருமார்களும் சந்திர நாட்காட்டிதொடர்பாக சொல்லப்பட்ட குர்ஆன் கூறும் வசனங்களை மறுத்துக் கொண்டும், தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பி ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர். 7:54ன்படி அல்லாஹ் தனது கட்டளைக்கு கட்டுப்பட்டவையாகக் கோள்களைப் படைத்துள்ளான். அவற்றை மனிதர்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். அதன் சுழற்சியைக் கொண்டு காலத்தை அறிந்து கொள்ளலாமே தவிர நன்மை, தீமை ஆகியவற்றைக் கணிக்க நமக்கு ஏற்படுத்தித் தரவில்லை. மார்க்கம் எங்களுக்கு தான் சொந்தம், நாங்கள் தான் விளக்கம் கொடுக்க முடியும், நாங்கள்தான் தஃப்ஸீர் கதாநாயகர்கள், எங்கள் ஆய்வை மிஞ்சி அவாம்களாகிய உங்களால் முடியாது என்று மார்தட்டிக் கொள்ளும் மவ்லவிமார்களை என்னவென்று சொல்ல? ஐந்தாம் வகுப்பைத் தாண்டாதவர்கள், நாங்கள்தாம் வானவியல் நிபுணர்கள் என்று கூறுவதை எப்படி ஏற்பது? இது நியாயமா?

விஞ்ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் 75% நேரம், உழைப்பு, கண்டுபிடிப்பு என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இந்த பிரபஞ்ச நிகழ்வுகள் ஒரே இறைவனின் வல்லமையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு சீராக இயங்குகின்றன என்ற உண்மையை உணரத் தவறிவிட்டார்கள். காரணம் முஸ்லிம் சமுதாய மதகுருமார்கள் கருத்து மோதல்களுக்கே முதலிடம் கொடுப்பதால், ஏனைய சமுதாயமும் குர்ஆனைப் படித்தால் நாமும் இந்த நிலைக்கு ஆளாக வேண்டுமே என்று நினைத்து புறக்கணிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் TNTJ   வினருக்கும்,  SAKSHI APOLOGISTIC GROUP ற்கும் இடையே நடந்த பைபிள் இறைவேதமா? விவாதத்தில் சகோ. கலீல் ரசூல் பைபிள் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும்போது, SAKSHI APOLOGISTIC GROUP மதகுருமார்கள் உனக்கு பைபிளை ஆராய தனிக்கலை வேண்டும், உன்னால் முடியாது. அதற்கு தனித் திறமை வேண்டும் என்று மட்டம் தட்டும் செயலையே காண முடிந்தது.இதே போல்தான் மவ்லவிகளும், முஸ்லிம்களாகிய உங்களால் குர்ஆனை படித்து விளங்க முடியாது. எங்களால் தான் முடியும் என்று குர்ஆனைத் தொடவிடாமல் கூட ஆக்கியுள்ளனர்.

இதையேதான் முஸ்லிம்களும் நோயாளிகளைப் பார்க்க டாக்டர் இருப்பது போல் ஒவ்வொரு உலகாதாய துறைக்கும் நிபுணர்கள் இருப்பது போல் மார்க்கத்தை சொல்வதற்காக தனியாக மவ்லவி நிபுணர்கள் தேவையே என்ற சொத்தை வாதத்தை முன் வைக்கிறார்கள்.
எனவே இறைவனின் இறுதி வழிகாட்டல் நூலை மனமுவந்து ஏற்றுப் படித்து, வாழ்க்கையில் பின்பற்றினால் அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம், நீதி நிர்வாகம், அறிவியல், குடும்பவியல், சமூகம் என அனைத்துத் துறைகளிலும் வியத்தகு முன்னேற்றங்களைக் காணலாம். மறுமையில் ஈடேற்றம் பெறலாம். மனிதர்கள் எவ்வளவுதான் முயன்று ஆய்வுகள் செய்தாலும் இறைவன் கற்றுத் தருவதைத் தவிர வேறு எந்த அறிவையும் பெற்றுக் கொள்ள முடியாது.

(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார். இன்னும் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். (27:65)

(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே அறிந்தவன்… (2:32)

மேலும் படிக்கவும் 2:117, 6:97, 14:48, 15:16, 16:16, 17:99, 21:30, 29:61, 36:38, 41:11, 14:32-33, 51:47, 55:33, 85:1, 88:18
இதேபோன்று இன்னும் ஏராளமான அல்குர்ஆன் வசனங்களும் அறிவியல் உண்மை களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வின் மூலம் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் அல்குர்ஆன் 51:47 வசனத்தின் படி அண்டம் வேகமாக விரிவடைகின்றது என்பதை அறிவியல் பூர்வமாக ஆணித்தரமாக நிரூபணம் செய்துள்ளார்கள்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

Previous post:

Next post: