ஐயம்: ஷரீ அத் சட்டதிட்டங்களுக்கு சுயேட்சையாக விளக்கம் கொடுப்பது “”இஜ்திஹாத்”, எந்த ஒரு பிரச்சனைக்கும், முன்னாள் சட்டமேதைகளான நமது மேன்மைக்குரிய இமாம்கள் செய்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் ஷரீ  அத்தை விளங்கிக் கொள்வதே “”தக்லீத்” என்று மரியம் ஜமீலா அவர்கள் எழுதியுள்ளார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன?
M.A.ஹாஜி முஹம்மது நிரவி

தெளிவு: கண்ணியமிக்க இமாம்கள் பேரால் நாற்பெரும் கூறுகளாய் பிரிந்து சிக்கி, சீரழிந்து அழிவின் விழிம்பில் இருந்து கொண்டிருக்கும் நமது சமுதாய மக்கள் பெரும்பாலோரின் செயலை அடிப்படையாகக் கொண்டு, சகோதரி மரியம் ஜமீலா சரியாகவே எழுதியுள்ளார். எனினும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகளான அல்குர்ஆனுக்கும், இதனை நடைமுறைப்படுத்திக் காட்டிய நாம் உயிரினும் போற்றும் நபி(ஸல்) அவர்களின் வழி முறைக்கும் மாற்றமாக சுயேச்சையாக விளக்கம் கொடுத்து மனித யூகத்தை மார்க்கமாக்குவதற்கு உலகில் யாருக்கும் உரிமையில்லை.

இறைவனையும், இறைத் தூதரையும்(ஸல்) உளமாற ஒப்புக் கொண்ட நாம், யாருடைய விளக்கத்தை-தெளிவை ஏற்று நடக்க வேண்டும் என்பது குறித்து வல்ல அல்லாஹ் கூறும்போது (நபியே!) உம்மை ஷரீ  அத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே அதனையே நீர் பின்பற்றுவீராக! அல் ஜாஸியா (45: வசன எண் 18) என்றும் தெளிவான அத்தாட்சிகளையும் நெறிநூல்களையும் மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும், உமக்கு இந்நெறிநூலை நாம் அருளினோம் என்றும் கூறுகிறான். சூரத்துன் நஹ்ல் 16: வசன எண் 44.

மேலும் வல்ல அல்லாஹ், மறுமையை நம்பும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரியான வழி காட்டல், அல்குர்ஆனும்-அதனை நடைமுறைப் படுத்திக் காட்டிய நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலும் என்றே கூறுகிறான்.
(அல்குர்ஆன் 33:21, 4:59)

கூடுதல் குறைவின்றி தனது ஷரீ  அத்தை மட் டுமே பின்பற்றச் சொல்லும் அல்லாஹ், தான் காட்டிய நேர்வழி, உலக மக்கள் அனைவரும் எளிதாக விளங்கும் பொருட்டு மிகவும் லேசானது என்றும் கூறுகிறான்.
(அல்குர்ஆன் 4:28, 54:17,22,32,40)

மக்கள் எளிதாக விளங்கும் பொருட்டு வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மார்க்கம் எவ்வித குறையுமின்றி நிறைவு செய்யப்பட்டதாகவும் அவனே கூறுகிறான். (அல்குர்ஆன் 5:3)

நபி(ஸல்) அவர்களும் ஹலால்-ஹராமை தெளிவுபடுத்தி இந்த ஷரீ  அத்தை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார்கள். மேலும் முஸ்லிம்கள் தீர்ப்பளிப்பது பற்றி கூறும்போது அல்லாஹ் அருள் செய்த (சட்டதிட்டத்) தைக் கொண்டே அவர் களிடையில் தீர்ப்புச் செய்வீராக (அல்குர்ஆன் 5:44,45,47) என்றும் தெளிவுபட கூறுகிறான்.

நெறிநூல்களை அறிந்தவர்களிடம் அறியாத மக்களை கேட்டு அறியச் சொன்ன அல்லாஹ் கண்மூடி சுய சிந்தனையற்று அவர்களைப் பின்பற்றச் சொல்லவில்லை. மாறாக “”அவர்கள் சொல்லை-நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத்தாம். இவர்கள் தாம் நல்லறிவுடையோர்”. (அல்குர்ஆன் 39:18) என்று கூறுகிறான்.

இதற்கு மாற்றமாக செயல்படுபவர்கள் பயங்கரமான வழிகேட்டில் இருப்பதாக எச்சரிக்கவும் செய்துள்ளான். “”அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண் ணுக்கோ, உரிமையில்லை. ஆகவே அல்லாஹ் வுக்கும், அவனுடைய ரசூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்க மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்”. சூரத்துல் அஹ்ஜாப் 33: வசன எண் 36.

இவ்வளவு தெளிவுபடுத்தி எச்சரித்த பின்பும் கண்ணியமிக்க இமாம்களை, அவர்களின் சொல்லையும், எச்சரிக்கைகளையும் மீறி தக்லீது-கண்மூடி குருட்டுத்தனமாகப் பின்பற்றச் சொல்லும் மவ்லவிகளின் நிலையும், அவர்களைச் சுய சிந்தனையற்று பின்பற்றும் பெரும்பாலான மக்களின் நிலையும் பரிதாபத்துக் குரியதே! நமது கொடிய விரோதி ஷைத்தான் எந்த அளவு தனது ஆதிக்கத்தை முஸ்லிம்கள் மீது செலுத்தியுள்ளான் என்பதை இவர்களின் பேச்சுக்கள் செயல்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவர்களின் நேர்வழிக்காக நாம் துஆ செய்வதோடு, இறைவனின் கடுமையான எச்சரிக்கைகளையும் இம்மாதிரி யானவர்களுக்கு நினைவூட்டுவோம்.

“”நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட் டப்படும் அந்நாளில் ஆ! கைசேதமே! அல் லாஹ்வை நாங்கள் வழிபட்டிருக்க வேண் டுமே; இத் தூதருக்கும் நாங்கள் வழிப்பட் டிருக்க வேண்டுமே! என்று கதறுவார்கள்.

எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம், அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள் என்றும் அவர்கள் கதறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக. அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக! (என்பர்) சூரத்துல் அஹ்ஜாப், வசன எண்கள்: 33:66,67,68.
—————————————————-

ஐயம்: யாஸீன் சூராவில் 13,14ம் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் இரு தூதுவர்கள் யார்? மூன்றாமவர் யார்? 26,27ம் வசனத்தில் மூன்றாம் நபரை அம்மக்கள் கொன்ற பின், இறைவன், அந்நபரை சொர்க்கத்தில் பிரவேசிப்பாயாக! என்று உடனே சொல்கிறானே, அப்படியானால் இறந்து போன ஏனைய நபிமார் கள் இறைநேசர்கள் நிலை என்ன? அந்நபரை அல்லாஹ் சொர்க்கம் புகச் சொன்னதும் சந் தோ­மடைகிறார் என்றால் அவரது ஆன்மா -நஃப்ஸ் உயிருடன் இருக்கத்தானே செய்கிறது. இந்த ஆயத்தின் மூலம் மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்பது மறுமை வரை இருக்கிறது தெரிகிறதே? வசனம் 27ல் அந்த நல்லடியார் இறைவனிடம் துஆ கேட்கும் தோரணையில் அமைந்திருப்பதால் ஒலியுல்லாக்கள் நாம் இறைஞ்சுவதை கேட்கும் சக்தியையும், நமக்காக அவர்கள் இறைஞ்சும் தன்மையையும் ஏன் பெற்றிருக்க கூடாது? இதற்கான பதிலை அதிசீக்கிரம் எழுதவும்.
இறையடிமை ஜமால், சென்னை-14.

தெளிவு: அல்லாஹ் இவ்வசனங்களில் கூறும் மூன்று தூதுவர்களின் பெயரைப் பற்றி பல சஹாபாக்கள் பல்வேறு பெயரை குறிப்பிடுவதால் தீர்க்கமாக கூற முடியாது.

அவரை அம்மக்கள் கொன்றபின், அல்லாஹ் அவருடைய நஃப்ஸை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்கிறான். அவ்வாறு புகுத்தப்பட்ட நஃப்ஸ் தனது நல்ல எண்ணங்களை வெளிப்படுத்துவதாகவே தொடர்ந்து வசனங்கள் வருகின்றன.

நபி(ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்துச் சொல்லும்போது, அவர்களின் நஃப்ஸ் பச்சை நிறத்துப் பறவையின் கூட்டுக்குள் புகுத்தப்பட்டு சுவனத்தில் உள்ளன.அவை அங்கு விரும்பிய பிரகாரம் உண்டு சுற்றித்திரிகின்றன என்றார்கள். இப்னு மஸ்ஊத்(ரழி) அறிவிக்கும் இச்செய்தி முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது.

நல்லடியார் என்று நாமெல்லாம் போற்றும் ஏனையோர் கப்ரில் விசாரணைகள் முடிந்தவுடன், மலக்குகள் அவருக்கு உரிய இடத்தைக் காட்டி இதுவே கியாமநாள் வரை உங்களது தங்குமிடம் என்று கூறுவர். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவிக்கும் இச்செய்தி புகாரி-முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இது சம்பந்தமாக நபி(ஸல்) அவர்கள் கூறும்போது கப்ரில் நல்ல மனிதர் வைக்கப்பட்டு விசாரணைகள் முடிந்த உடன் நான் எனது குடும்பத்தாரிடம் சென்று எனக்கு கிடைத்த இம்மகத் தான வாழ்வை கூறிவிட்டு வருகிறேன் என்று கேட்கும் போது புது மணமகனைப் போல் உறங்கு என்று கூறப்படும் என்றார்கள். அபூஹுரைரா(ரழி) அறிவிக்கும் இச்செய்தி திர்மிதியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் கூறினார்கள்: கப்ரில் விசாரணை முடிந்தபின் சுவனத்து ஆடைகள் அணிவிக்கப்பட்டு, சுவனத்து விரிப்பை அவருக்கு விரித்து படுக்க வைக்கப்படும். சுவனத்தின் நறுமணம் அவர்களை நோக்கி வீசிக் கொண்டிருக்கும். பர்ரா இப்னு ஆஸிப்(ரழி) அறிவிக்கும் இச்செய்தி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

மரணத்திற்கும்-மறுமைக்கும் இடையிலுள்ள இந்நிலைகளை வைத்து உலகத்தில் உயிருடன் இருக்கிறார்கள்; நம்மை ஆட்சி செய்கிறார்கள் என்று கூறுவதும், கேட்கும் சக்தியை பெற்றுள்ளார்கள் என்று கூறுவதும், நாம் அவரிடம் இறைஞ்சினால் நமக்காக அவர் இறைவனிடம் பரிந்துரை செய்வார் என்பதும் பல குர்ஆன் வசனங்களுக்கும் நபி மொழிகளுக்கும் விரோதமானது. வல்ல அல்லாஹ் இம்மாதிரியான தவறான எண்ணங்கள் செயல்களை விட்டும் உலக முஸ்லிம்களைப் பாதுகாப்பானாக!
——————————————————-

ஐயம்: தானாக ஒருவருக்கு வாந்தி வந்தால் அவர் (நோன்பை) களா செய்ய வேண்டியதில்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கின்றாரோ, அவர் களா செய்ய வேண்டும். (நபி மொழி) அபுஹுரைரா(ரழி) நூல்கள் திர்மிதி, அபூதாவூத், ஹாகீம்.

இந்த ஹதீஸுக்கு இப்படி ஒரு கருத்து கொடுக்கப்படுகிறது. அதாவது ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது அவருக்கு வாந்தி மிகைத்து விட்டால் அவர் நோன்பை விட்டு விடலாம். இதை களா செய்யவும் தேவையில்லை. வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் மீட்ட வேண்டும். இது சரியானதுதானா? விளக்கம் தரவும். M.B.M இனாம்தீன், இலங்கை.

தெளிவு: வெள்ளை வெளேர் என்ற நிலையில் உள்ள தெளிவான விஷயங்களிலும் மனித யூகத்தைப் புகுத்தச் செய்து அதனை மார்க்கமாக்கி மனிதர்களின் நல் அமல்களை அழியச் செய்து நரகத்தில் தள்ளுவதே ஷைத்தானின் வேலை. “”நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்” (2:42) என்ற இறை வசனத்திற்கு எதிராகவே ஷைத்தானின் மாய வலையில் வீழ்ந்த மனிதர்களால் பல விஷயங்கள் திரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் இதுவும் ஒன்று.

தாங்கள் கூறும் ஹதீஸ் மிகத் தெளிவாக பின் வருமாறு அமைந்துள்ளது. யாருக்கேனும் வாந்தி மிகைத்து விட்டால் அவரின் மீது எவ்வித குற்றமில்லை. (நோன்பைத் தொடரலாம்) எவரேனும் வேண்டுமென்றே வாந்தியை வரவழைத்தால் அவர் அந்நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். எனவே தானாக அதிகமாக வாந்தி எடுத்த ஒருவரும், தொடர்ந்து நோன்பு நோற்க சக்தி பெற்றிருப்பின் நோன்பை தொடர வேண்டும் என்பதே சரியானது. தொடராது விட்டு விடின் மீண்டும் அந்நோன்பைக் களா செய்ய வேண்டும்.
——————————————————-

ஐயம்: சுப்ஹ் தொழுகையில் குனூத் வழமையாக ஓதுவது பித்அத் என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்துள்ளோம். இமாம் ஜமாஅத்தின் அவசியத்தை உணர்ந்த நாம் குனூத் ஓதும் இமாமை பின்பற்றும் பொழுது நாமும் குனூத் ஓத வேண்டிவரும். அல்லது கையை விட்டுவிட வேண்டியது வரும். இவ்வாறு செய்வதால் “”ஒருவரை இமாமாக நியமிக்கப்படுவதெல்லாம், அவரைப் பின்பற்றுவதற்காகவே என்ற ஹதீஸுக்கு முரண்படுமே. எனவே குனூத் ஓதிய பின் இமாமை அடைந்து தொழுவது சரிதானா? பிர்தவ்ஸ் ஹம்ஸா, இலங்கை.

தெளிவு: (ஜமாஅத்து) தொழுகையை எதிர் பார்த்து தமது தொழுமிடத்தில் இருந்து கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருந்து கொண்டிருக்கிறார். அவர்(வீடு) திரும்பும் வரை அல்லது அவருக்கு ஒளூ முறியும் வரை, மேலும் யா அல்லாஹ்! இவரை மன்னித்தருள்! இவருக்கு கிருபை செய்தருள்! என்று மலக்குகள் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் இச்செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிடும். ஒருவர் “”பகீ” எனும் இடத்திற்குச் சென்று தமது சுய தேவையை பூர்த்தி செய்து விட்டு ஒழு செய்து விட்டு வருவார். அது வரை நபி(ஸல்) அவர்கள் (கிராஅத்தை) ஓதிக்கொண்டு முதலாம் ரகா அத்தை நீட்டியவர்களாக அதிலேயே இருந்து கொண்டிருப்பார்கள். அபூ ஸயீதில் குத்ரி(ரழி) முஸ்லிம், நஸயி, அஹ்மது, இப்னுமாஜ்ஜா.

மேற்கூறிய இரு ஹதீஸ்களிலும் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றும் முகமாக முன் கூட்டியே வருதல், மற்றும் முதல் ரக்அத்தில் சேர்ந்து தொழுவதன் முக்கியத்துவம் குறித்து மிகத் தெளிவாக உள்ளதால், வேண்டுமென்றே தாமதமாக ஜமாஅத்தில் வந்து சேருவதும் ஜமா அத்தை புறக்கணிப்பதும் மாபெரும் தவறு. மேலும் மத்ஹபுவாதிகள் செய்யாத பல சுன்னத்துகளை, அந்த இமாம்கள் பின் நின்று நாம் நிறைவேற்றி தொழுவதுபோல், அவர்கள் செய்யும் பித்அத்துகளையும் விட்டுவிடலாம். இதுவே சரியான முறை. இதனை தெளிவாக விளக்கும் விதமாக பின்வரும் அஃதர் அமைந்துள்ளது.

எங்களுக்குக் குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார்; அவரைப் பின்பற்றி தொழுதால் நாமும் பாவிகளாகி விடுவோமோ என்று கருதி சங்கடப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று உஸ்மான்(ரழி) அவர்களிடம் கூறினர். அதற்கு அவர்கள் தொழுகைதான் மக்களுடைய அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகாகச் செய்யும்போது, அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுறச் செய்வீராக! அவர்கள் தீமை விளைவிப்பார்களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாது உம்மை தற்காத்துக் கொள்வீராக! என்றார்கள். அதிய்யுபின் கியார்(ரஹ்) புகாரி.

“”உங்களுக்கு சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள்; அவர்கள் முறையாகத் தொழ வைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான். அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான் அன்றி அவர்களுக்குத்தான் கேடு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஹுரைரா(ரழி) புகாரி.
——————————————

ஐயம்: இரவில் தூங்கி எழும்போது ஸ்கலிதம் ஏற்பட்டு குளிக்கவேண்டி நிலை எற்பட்டு விடுகிறது. குளித்து விட்டுச் சென்றால் ஜமாஅத் முடிந்து விடும். இந்நிலையில் தயம்மம் செய்து விட்டு தொழச் செல்லலாமா? குர்ஆன் ஹதீஸ்படி பதில் தரவும். சந்தா எண் 2420, திமிரி.

தெளிவு: “”நீங்கள் நோயாளிகவோ, யாத்திரை யிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரைப் பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும் உங்களுடைய கைகளையும் தடவி தயம்மம் செய்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 4:43)

“”நீங்கள் பெருந்தொடக்குடையோராயிருப்பின் குளித்து உடல் முழுவதையும் (நன்கு) சுத்தம் செய்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:6)

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு ஆண், தான் கனவு கண்டது நினைவின்றி (விந்தின்) ஈரத்தை மட்டும் கண்டால் (என்ன) செய்ய வேண்டும்) என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் குளிக்க வேண்டும் என்றார்கள். அவ்வாறே ஒரு ஆண் கனவு கண்டு ஈரம் எதையும் காணவில்லை என்றால் அவர் அதற்காக குளிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்கள். (இவ்வுரையாடலின்போது) அருகிலிருந்த உம்முசுலைம்(ரழி) அவர்கள் (மேற்காணும் இரு நிலைகளை) ஒரு பெண் கண்டால் (அவள் என்ன செய்ய வேண்டும்) என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் அவளுக்கும் அதே சட்டம்தான்; பெண்களும் ஆண்களின் அமைப்பிலுள்ளவர்கள் என்றார்கள். ஆயிஷா(ரழி) அறிவிக்கும் இச்செய்தி புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இப்னு மாஜ்ஜாவில் இடம் பெற்றுள்ளது. மேற்கண்ட குர்ஆன் ஹதீஸ்படி ஸ்கலிதம் ஏற்பட்டால் குளித்து விட்டுத்தான் தொழ வேண்டும். அல்லாஹ் கூறும் நோய், பிரயாணம் மற்றும் ஏனைய காலங்களில் தண்ணீர் கிடைக்காத நிலை ஆகிய இம்மூன்று காரணங்களுக்கே தயம்மம் செய்யலாம். ஜமாஅத் தவறி விடும் என்ற காரணத்தை வைத்து தயம்மம் செய்தால் அது குர்ஆன் ஹதீஸுக்கு முரணான செயலாகும்.
————————————————–

ஐயம்: ஜமாஅத் தொழுகை தொழுது கொண்டிருக்கும்போது விளக்கு அணைந்துவிட்டால் உடனடியாக தொழுகையை முறித்து விட வேண்டும் என சிலர் கூறுகிறார்கள். தொடர்ந்து தொழலாமா? விளக்கம் தரவும்.
சந்தா எண்:2420, திமிரி.

தெளிவு: விளக்கு ஏதும் இல்லாமல் நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள் என்று ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்து புகாரி, முஸ்லிமில் இச் செய்தி இடம் பெற்றுள்ளது. எனவே தொழுகையை தொடரத் தடையில்லை.
————————————————–

ஐயம்: ஷைத்தான் ஒரு மலக்கா? அல்லது நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்னா?
பத்ருன்னிஸா, இளையாங்குடி.

தெளிவு: “அன்றியும் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள் என்று மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக. அப்போது இப்லீஸைத் தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன்(இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்” அல்குர்ஆன் 18:50. மேற்கண்ட வசனத்திலிருந்து இப்லீஸ் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்பது தெளிவாகிறது.
—————————————————

ஐயம்: அல்லாஹ் ஆதமைப் படைத்த படைப்பில் வேறுபாடு உள்ள இரு சாராரை அழைத்து ஸுஜூது செய்யச் சொல்லும் போதே மலக்குகளை நோக்கி ஆதமுக்கு பணிந்து ஸுஜூது செய்யுங்கள் என்று பொதுப்படையாக கூறுகிறானே, ஏன்? விளக்கவும்.
பத்ருன்னிஷா, இளையாங்குடி(சென்னை)

தெளிவு: அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வைப் பார்த்து ஏன் சொல்கிறான்? ஏன் செய்கிறான் என்று கேள்வி எழுப்பக் கூடாது. இதனைத் தெளிவுபடுத்தும் விதமாக பின் வரும் இறை வசனம் அமைந்துள்ளதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

“”அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது. ஆனால் அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப் படுவார்கள். அல்அன்பியா 21: வசன எண் 23, மேலும் தாங்கள் எழுதிய 2:34 வசனத்தை தெளிவாக விளங்க இதே கருத்துள்ள பின்வரும் வசனத்தைக் கவனியுங்கள். இதில் மலக்குகள்- இப்லீஸ் என்று சொல்லாமல் இரு சாராரையும் சேர்த்து நீங்கள் ஸுஜூது செய்யுங்கள் என்று கூறுகிறான். நான் அவரைச் செவ்வைப்படுத்தி எனது ஆவியிலிருந்து அவருக்கு ஊதிய பொழுது; அவருக்கு “”நீங்கள் விழுந்து சுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்) அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.

இப்லீஸைத் தவிர அவன் பெருமை அடித்த வனாக (நம் கட்டளையை மறுத்து) காஃபிர் களில் (ஒருவனாக) ஆகி விட்டான். ஸூரத்து ஸாத். 37: வசனங்கள் 72,73,74..

Previous post:

Next post: