விமர்சனம்: அந்நஜாத் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக (கால் நூற்றாண்டு) சுய சிந்தனையாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே செயல்படுகிறது. ஆயினும் இது நாள் வரைக்கும் அதன் இலக்கை அடைய முடியவில்லை. எனவே தான் ஒவ்வொரு விஷயத்திலும் சமுதாயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இயக்கங்கள், சங்கங்கள், கழகங்கள் என்ற பெயர்களில் பிளவுபட்டுக் கிடக்கிறோம். உதாரணத்திற்கு பிறை விஷயத்தில்
1. கணினி கணக்கீடு அடிப்படையிலும்
2. சர்வதேச அடிப்படையிலும்
3. நேரடியாக (Naked eye) பார்த்து
முடிவு செய்வதிலுமாக இன்று ஒரு நாள் தலைப் பிறையை 3 நாட்களாகச் செயல்படுத்துகிறோம். இப்படி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமுதாயம் மேலும் மேலும் பிளவுபடுவதை விட பெருநாள் விஷயத்தில் மட்டுமாவது ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்துவதல்லவா சிறந்தது! தாங்கள் அதற்கான முயற்சியை எடுக்கலாம் அல்லவா? தங்களின் விளக்கம் என்ன?
M.அபூநதீர், நாகர்கோவில்-1.

விளக்கம்: அன்பு சகோதரரே நீங்கள் அந்நஜாத்தின் தொடக்க காலத்திலிருந்தே அதன் தொடர்புடையவர். 30.10.1984 அன்று சின்னப்பர் இறையியல் கல்லூரியில் “”சமயங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதகபாதகங்கள் என்ற தலைப்பில் ஆற்றிய உரை நூலாக வெளிவந்ததை படித்துப் பார்த்து உலவிகள், மதனிகள், மற்றும் சில மவ்லவிகள் நம்மோடு இணைந்து பணிபுரிய முன்வந்ததும், தங்களின் புரோகித இனத்தைத் தக்க வைக்கும் நோக்கத்துட னும், அந்நஜாத்தைக் கைப்பற்றும் சதித்திட்டத்துட னும் எம்மீது பணமோசடி போன்ற எண்ணற்றப் பழிகளைச் சுமத்தி, எம்மிடமிருந்து அனைத்துப் பொறுப்புகளையும் பறித்துக் கொண்டு, அட்ஹாக் கமிட்டி போட்டு வரவு செலவு கணக்குகளை வரிவரியாக, எழுத்து எழுத்தாகப் பரிசீலித்தும் தங்கள் முயற்சியில் படுதோல்வி யுற்று, வரவு செலவு கணக்குகளில் எவ்வித மோசடியும் நடைபெறவில்லை. வரவும் முறையாக வரவு வைக்கப்பட்டுள்ளது. செலவுகளும் முறையாகவே செலவிடப்பட்டுள்ளது என்று எழுதி ஒப்புக்கொண்டு கையயழுத் திட்ட சமாச்சாரம் எல்லாம் உங்களுக்கு நன்கு தெரியும்.

மவ்லவிகளின் சதி தோல்வி!
மவ்லவிகளது சதித்திட்டம் தோல்வியுற்று எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட அந்நஜாத்தின் பொறுப்புகள் மீண்டும் எம்மிடமே ஒப்படைக்கப்பட நீங்கள் முழு முனைப்புடன் செயல்பட்டதையும் மறந்திருக்க மாட்டீர்கள். இவை அனைத்தையும் இங்கு ஏன் நினைவுக்குக் கொண்டு வருகிறோம் என்றால், சத்தியத்தை, நேர்வழியை நிலைநாட்டுவது கல்லில் நார் உரிப்பதைவிடக் கடினமான ஒரு பணி என்பதை உணர்த்தத்தான்.

நபிமார்களுக்கே முடியவில்லை!
நம்முடைய முயற்சியில் உரிய பலனை 26 ஆண்டுகள், கால் நூற்றாண்டுக்கும் அதிகமாகப் பாடுபட்டும் அடைய முடியவில்லையே என்ற விரக்தியில் எழுதியுள்ளீர்கள். நம்முடைய இப்பணியில் வெற்றி அடைவது நம் கையில் இல்லை. நாம் என்ன? இறைத் தூதர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நபிமார்களுக்கே அந்த வெற்றி வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

நூஹ்(அலை) 950 வருடங்கள் வாழ்ந்து இறைப் பணி செய்தும் ஒரு நூறு நபர்களைக் கூட நேர்வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. சில நபிமார்களால் ஓரிருவரை மட்டுமே நேர்வழிக்குக் கொண்டுவர முடிந்தது. சில நபிமார்களால் ஒருவரைக் கூட நேர் வழிக்குக் கொண்டு வர முடியவில்லை. ஆயினும் அவர்கள் இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து தங்கள் கடமையை ஆற்றியதால் அவர்கள் தங்கள் வாழ்க்கைப் பரீட்சையில் வெற்றி யடைந்து சுவர்க்கம் நுழைவார்கள் என்றே நபி மொழிகளில் பார்க்கிறோம்.

நேர்வழியை எடுத்துச் சொல்வதே பொறுப்பு!
அவர்கள்மீது விதிக்கப்பட்டது சத்தியத்தை-நேர் வழியை மக்களிடம் எடுத்து வைப்பது மட்டுமே; மக்களை நேர்வழிக்குக் கொண்டு வரும் அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்பதைப் பல குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.
(பார்க்க: 3:20, 5:92,99, 13:40, 14:57, 16:35,82, 24:54, 29:18, 36:17, 42:48, 46:35, 64:12)

இறைத் தூதர்களின் நிலையே இதுவென்றால் நம்முடைய நிலை பற்றி முடிவு செய்து கொள்ளுங்கள். இறுதித் தூதரே கடும் முயற்சி எடுத்தும், அழுதழுது இறைவனிடம் துஆ கேட்டும், தமது 40வது வயதிலிருந்து 52 வயது வரை அதாவது தமது நேர்வழி பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் தனக்குப் பேருதவியாக, எதிரிகளிடமிருந்து, அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாகப் பாதுகாக்கும் அரணாக இருந்த, ஆரம்ப கால முஸ்லிம்கள் பட்ட பல துன்பங்களை அவரும் அனுபவித்த, தூதரின் தகப்பனார் கூடப் பிறந்த சகோதரர் அபூதாலிப் நேர்வழியை அடைய முடிந்ததா? இல்லையே! (பார்க்க: 28:56) இந்த நிலையில் வேறு யாரால் சாதிக்க முடியும்?

உலகியலில் சாதித்தாலும் மார்க்கத்தில் முடியாது!
அயராது உழைத்தால் அற்ப உலகக் காரியங்களில் சாதனையாளர் பட்டம் பெற்றுவிடலாம். அதை விடக் கடுமையாக உழைத்தாலும் பிரசார பணியில் சாதித்துவிடலாம் என்பது வீண் கனவே. சாதிக்கும் எண்ணத்தில்தான் 1987ல் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற மவ்லவிகளும் அவர்களது பக்தர்களும் அவர்களது எண்ணப்படி உலகில் அவர்களின் பங்கைப் பெற முடிந்ததே அல்லாமல் மறுமை வெற்றியோ கேள்விக்குறி?

மிகமிக அதிகமான மக்கள் சத்தியத்தை உணர்ந்து நேர்வழிக்கு வரமாட்டார்கள். ஷைத்தானைப் பின் பற்றிச் சென்று நரகை நிரப்ப இருக்கிறார்கள் என்று சுமார் 80 இறைவாக்குகளும், கோடிக்கணக்கான சிப்பிகளிலிருந்து மிக மிகச் சொற்பமான முத்துக்களே தேர்வது போல், மிகமிக சொற்பமான மக்களே ஷைத்தானினதும், அவனது நேரடி முகவர்களான மதகுருமார்கள் என்ற மவ்லவிகளினதும் மதிமயக் கும் வசீகரப் பேச்சிலிருந்தும் உடும்புப் பிடியிலிருந்தும் விடுபட்டு சத்தியத்தை-நேர்வழியை குர்ஆன், ஹதீஃதிலிருந்து நேரடியாக விளங்கி அதன்படி நடந்து சுவர்க்கம் நுழையும் வாய்ப்பும், அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்கும் பாக்கியமும் பெறுவார்கள் என்று சுமார் 70 வசனங்கள் கூறுவதையும், குர்ஆனை நேரடியாகப் பொருள் அறிந்து படித்து விளங்குபவர்கள் நிச்சயம் உணர முடியும்.

மார்க்கப் பணிக்கு கூலி கொடிய ஹறாம்!
அல்லாஹ்வையும் மறுமையையும் உறுதியாக நம்பி இவ்வுலகைவிட மறுமையை அதிகமாக நேசிப்பவர்களுக்கே இது சாத்தியப்படும். இறைவன் எண்ணற்ற இறை வசனங்களில் கூலி-சம்பளத்திற்காக மார்க்கப் பணி புரிவது ஹறாம்களிலேயே மிகமிகக் கொடிய ஹறாம்; அதனால் தான் உலகில் அனைத்து வகை கொடிய வழிகேடுகள் உருவாகின்றன என்று திட்டமாக, தெளிவாக நேரடியாகக் கடுமையாக எச்சரித்திருந்தும், அந்த வசனங்களை எல்லாம் முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு, அவற்றை முற்றிலும் நிராகரித்துச் செயல்படும் மதகுருமார்களான மவ்லவிகளும், அழிந்துபடும் அற்பமான இவ்வுலகில் பட்டம், பதவி, அந்தஸ்து, சொத்து சுகம், ஆள் அம்பு, இத்தியாதி, இத்தியாதி உலகியல் ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு, மறுமையை விட இவ்வுலகை அதிகமாக நேசிப்பவர்களும் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள். ஷைத்தானைப் பின்தொடர்ந்து நரகை நிரப்பவே முற்படுவார்கள். அல்லாஹ் விதித்து விட்ட இந்த நிலையை நாம் ஒருபோதும் மாற்றவே முடியாது என்பதை 32:13, 11:118-123 குர்ஆன் வசனங்களை பொருள் அறிந்து படித்துணர்கிறவர்கள் நிச்சயம் அறிவார்கள்.

நபிமார்களையே ஷைத்தான் விட்டு வைக்க வில்லையே!
முதல் மனிதரும், இறைத்தூதருமான ஆதம் (அலை) அவர்களை மயக்கி வழிதவறச் செய்த ஷைத்தான் அதன் பின்னர் வந்த இறைத் தூதர்களையும் மயக்கி வழி தவறச் செய்ய முயற்சிக்காமல் இல்லை. ஆயினும் இறைத் தூதர்களை அல்லாஹ் வஹீ மூலம் மீண்டும் மீண்டும் கடுமையாக எச்சரித்து அவர்களை நேர்வழியில் செலுத்தினான் என்றே பல குர்ஆன் வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன.
இறைவனின் இறுதித் தூதரும் அதற்கு விதி விலக்காக இருக்கவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாகத் திட்டமாக பல இறைவாக்குகள் கூறுகின்றன. 5:48.67. 6:68,112,116, 13:37, 17:39,73-75, 22:52, 25:31,52, 33:1,2, 36:30, 42:52, 43:43,44, 45:18, 66:9, 69:44-47, 72:21 போன்ற இறைவாக்குகள் இறுதித் தூதரை எச்சரித்து நேர்வழி நடத்துவதை, இந்த இறைவாக்குகள் அனைத்தையும் சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள் விளங்க முடியும். பெருமை அடித்தவர்களே அதாவது மதகுருமார்களே இறைத்தூதர்களின் சத்திய போதனையை மறுத்து நரகிற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிகளை ஏற்றுக் கொள்ளும்படி அத்தூதர்களையே நிர்ப்பந்தித்தார்கள் என்பதை 7:88, 40:41,42 இறைவாக்குகள் உறுதிப்படுத்தி நம்மை எச்சரிக்கின்றன.

இறைத் தூதர்களே இம்மதகுருமார்களிடம் படாதபாடுபட்டார்கள் என்றால் நம்மைப் போல் சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்? இறைத் தூதர்கள் இறைவனுடன் வஹியின் தொடர்புடன் இருந்ததால் உடனுக்குடன் எச்சரிக்கப்பட்டுத் திருத்தப்பட்டார்கள். இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பிறகு நயியும் இல்லை, ரசூலும் இல்லை. யாருக்கும் நுபுவ்வத்துடைய வஹியும் நிச்சயம் வராது. எனவே நம்மைப் பொருத்தமட்டிலும் 1450 வருடங்களுக்கு முன்னர் வஹி மூலம் இறக்கியருளப்பட்ட குர்ஆன் மற்றும் நபி மொழிகளுமே வழிகாட்டி.
(பார்க்க: 7:3, 33:36, 53:2-5)

எவை எல்லாம் மார்க்கம்?
மேலும் நபி(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும், நபி(ஸல்) அவர்களின் 40வது வயதிலிருந்து அவர்கள் இறப்பெய்திய 63வது வயது வரை இஸ்லாத்தை எப்படி நடை முறைப்படுத்திக் காட்டினார்களோ அவை மட்டுமே அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று 3:19 இறைவாக்கும் அது அல்லாத அனைத்து வழிமுறைகளும் கோணல் வழிகள், அல்லாஹ்வால் ஏற்கப்படா, அவர்கள் பெரும் நட்டத் திற்குரியவர்கள் என்று 3:85 இறைவாக்கும் உறுதிப் படுத்துகின்றன.

இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் படித்துணராமல் எமக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து எமது 42-வது வயது வரை மதகுருமார்களான மவ்லவிகளை அளவுக்கும் அதிகமாக நேசித்து, அவர்கள் கூறுவதே வேதவாக்கு எனக் குருட்டுத்தனமாக நம்பி செயல்பட்ட நிலையிலிருந்து, குர்ஆனை பொருள் அறிந்து படித்து விளங்கிய பின்னரே மவ்லவிகளின் மதிமயக்கும் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு இல்யாஸ் சாகிபின் தப்லீஃக் பணியை தவ்பா செய்துவிட்டு, அல்லாஹ் குர்ஆனில் வழிகாட்டியுள்ளபடி அல்லாஹ் கூறும் தப்லீஃக் பணியைச் செய்யத் துணிந்தோம். 2:186ல் காணப்படும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிந்து இடைத்தரகர்களான இந்த மவ்லவி புரோகிதர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வையே முழுமையாக நம்பி அவனையே இறைஞ்சி குர்ஆனை சுய சிந்தனையுடன் படிப்பவர்களுக்கு நிச்சயம் அல்லாஹ் நேர்வழியைக் காட்டுகிறான் (29:69). ஆனால் உலகியல் அற்ப ஆதாயங்களை அசல் குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பாக்கியம் ஒருபோதும் கிட்டாது. ஷைத்தான் உலகியல் ஆசை வார்த்தைகளைக் காட்டி அப்படிப்பட்டவர்களை வழிகேட்டில் இழுத்துச் செல்லவே செய்வான். அவர்களும் அவனின் நேரடி ஏஜண்டுகளான மதகுருமார்கள் பின்னால் செம்மறி ஆட்டு மந்தை போல் கண்மூடிச் செல்லவே செய்வார்கள்.

ஷைத்தானின் வசீகர வலை!
1984-ல் அல்லாஹ் காட்டிய வழியில் குர்ஆன், ஹதீஃத் முறைப்படி தப்லீஃக் பணியை ஆரம்பித்தவுடன் ஷைத்தான் நம்மீதும் அவனது வசீகர வலையை வீசினான். சவுதியிலிருந்து பிரசார பணிக்கும், குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் மாதிரி நகர் அமைப்பதற்கும் கோடிகோடியாகப் பணம் பெற முடியும், அவர்களது ஸலஃபி அகீதாவில் (கொள்கை) ஐக்கியமாகிவிட்டால் என்று சிலரை ஏவிவிட்டு நம்மை வழிகேட்டில் இட்டுச் செல்ல பெரிதும் முயன்றான். நாம் குர்ஆனிலிருந்து படித்து விளங்கிய மேலே நாம் எடுத்தெழுதியுள்ள வசனங்களை எமக்குத் தக்க சமயத்தில் நினைவுபடுத்தி அல்லாஹ் எம்மைக் காப்பாற்றி அருளினான்.

ஷைத்தானின் பிடியில் சிக்கியவர்கள்!
அதற்கு மாறாக, எம்முடைய முயற்சியைச் சரிகண்டு எம்மோடு இணைந்து அல்லாஹ் அளித்த தப்லீஃக் பணியைச் செய்ய முன் வந்த உலவிகள், மதனிகள் ஷைத்தானின் இந்த ஆசை வார்த்தையில் மயங்கியே 47:25-ல் அல்லாஹ் சொல்வது போல் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவான பின்னர், தம்முதுகுகளைத் திருப்பிக் கொண்டு, ஷைத்தான் அழகாகக் காட்டிய வழிகேடான ஸலஃபி பிரிவுக் கொள்கையில் ஐக்கியமாகி அற்ப உலக ஆதாயங்களை அடைந்தார்கள். மேலும் பலப் பிரிவாகப் பிரிந்து மறுமையைக் கோட்டை விட்டார்கள்.
உலகில் வழிகேட்டில் சென்று நரகை நிரப்ப இருக்கும் ஒவ்வொரு பிரிவாரும், ஒவ்வொரு மதத்தாரும் அவர்கள் நேர்வழியில் இருப்பதாகவும், மோட்சம் நோக்கிச் செல்வதாகவுமே நம்புகிறார்கள்; பிரகடனப்படுத்துகிறார்கள். ஆனால் அல்லாஹ் குர்ஆன் 5:3, 3:19,85 இன்னும் பல வசனங்களில் கூறுவது போல் அல்லாஹ் காட்டுவது மட்டுமே நேர்வழி. மனிதர்கள் சுயமாகக் கற்பனை செய்து அமைத்துக் கொள்ளும் அனைத்து வழிகளும் கோணல் வழிகள். நரகிற்கு இட்டுச் செல்லும் என்பதை அவர்களின் உலகியல் ஆசைகளும், அவர்களது மனோ இச்சையும், மமதையும் அறிய விடாமல் தடுத்து விடுகின்றன.

நபிக்குப் பின்னர் எவரது சுய விளக்கமும் மார்க்கம் ஆகாது!
இறுதி இறைத் தூதருக்குப் பின் மனிதர்களில் எவருடைய சுய விளக்கமும் மார்க்கம் ஆகாது. குறிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரே பொருளைத் தரும் “”முஹ்க்கமாத்” வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுக்கும் அனைத்துப் பிரிவினரும், அனைத்து மதகுருமார்களும் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகள், நரகை நிரப்ப ஷைத்தானுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை யார் விளங்கி, அவர்களை முற்றிலும் புறக்கணித்து நேரடியாக குர்ஆன், ஹதீஃதை படித்து விளங்கி நடக்கிறார்களோ அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.
முயன்றால் கூலி உண்டு!

அப்படி அவர்கள் 2:186 இறைக் கட்டளைப்படி அல்லாஹ்வை மட்டுமே முற்றிலும் நம்பி குர்ஆன், ஹதீஃதைப் படித்து விளங்கி அதன்படி நடக்க முற்பட்டால், அது சரியாக இருந்தால் அவர்களுக்கு இரண்டு கூலிகள் கிடைக்கும். தவறாக இருந்தாலும் ஒரு கூலி கிடைக்கும். தண்டிக்கப்படமாட்டார்கள் என்பது இறைத் தூதரின் உறுதிமொழி. அதற்கு மாறாக அல்லாஹ்மீதும், தன்மீதும் நம்பிக்கை இழந்து இந்த மதகுருமார்களை நம்பி அவர்களின் வழிகாட்டல்படி நடப்பவர்கள், நாளை நரகை அடைந்து, நம்பியவர்களை அங்கு சபித்துச் சாபமிடுவதை குர்ஆன் 33:66,67,68 வசனங்களைப் படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே உணர முடியும்.

நேர்வழி எது?
4:115 இறைவாக்கு என்ன கூறுகிறது? இறுதி இறைத் தூதரின் நபித்துவ காலமான கி.பி.610 லிருந்து கி.பி.632 வரை (ஹிஜ்ரி 11) 23 ஆண்டு கால கட்டத்தில் இறுதி இறைத்தூதரும், அவர்களது தோழர்களும் நடைமுறைப்படுத்திக் காட்டிய வழியே நேர்வழி. இந்த நேர்வழி இன்னது தான் என்று தங்களுக்குத் தெளிவான பின்னர், இத்தூதரை விட்டுப் பிரிந்து அதாவது தூதர் காட்டாத வழியில் (கோணல் வழிகள்) நபியுடன் இருக்கும்போது நபி யால் நேர்வழி காட்டப்பட்டு நடந்த முஃமின்கள் செல்லாத (கோணல்) வழியில் எவர்கள் செல்கிறார்களோ அவர்களை அவ்(கோணல்)வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவர்களை நுழையச் செய்வதாக அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரித்தும், இக்கடுமையான எச்சரிக்கையைப் புறக்கணித்து எண்ணற்றப் பிரிவுகளாகப் பிரிந்து அப்பிரிவுகளைக் கொண்டு மகிழ்வடைகிறவர்கள் (30:32, 23:52-56) எப்படிப்பட்ட கொடும்பாவிகளாக இருப்பார்கள்? அகந்தை ஆணவம் மிக்கவர்களாக இருப்பார்கள் என்பதை மேற்படி வசனங்களைப் படித்துணர்கிறவர்கள் அறிய முடியும்.

மதகுருமார்களின் விதண்டா வாதம்!
குர்ஆன் மட்டும் போதும் என முரட்டுத்தனமாக வாதிடும் ஒரு சகோதரரிடம் 16:44 இறைவாக்கைப் படித்துக் காட்டி இவ்வளவு தெளிவாக அல்லாஹ் குர்ஆனுக்கு மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் தூதருக்கே உண்டு என்று நேரடியாகச் சொல்லியிருக்க 16:44 வசனத்தை நிராகரிக்கும் நீங்கள் எந்த முகத்தோடு குர்ஆனைப் பின்பற்றுவதாகக் கூறுகிறீர்கள் என்று கேட்டால் இந்த வசனம் யூத கிறித்தவர்களையே கட்டுப்படுத்தும்; முஸ்லிம்களை அல்ல என வாதிட்டார். இத்தனைக்கும் 16:44 வசனத்தில் நேரடியாக “மனிதர்களுக்காக’ என்று திட்டமாக அல்லாஹ் அறிவித்துள்ளான். அதேபோல் 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 இறைவாக்குகள் மத்ஹபினரைக் கட்டுப்படுத்தும்; எங்களைக் கட்டுப்படுத்தாது என இயக்க, கழக அமைப்பு, ததஜ அமைப்பினர் கூறுகின்றனர். 33:66,67,68, 18:102-106 இறைவாக்குகள் காஃபிர்களையே கட்டுப்படுத்தும் எங்களை அல்ல என தர்கா, தரீக்கா, மத்ஹபு பிரிவினர் கூறுகின்றனர். அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு அளிக்காதவர்கள் காஃபிர்கள், அநியாயக்காரர்கள், பாவிகள் என்று கூறும் 5:44,45,47 குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டினால் அவை யூத, கிறித்தவர்களுக்கு எங்களுக்கு இல்லை எனப் பெரும்பான்மை முஸ்லிம்கள் கூறுகின்றனர். 33:40, 21:107, 25:1, 34:28, 62:3 போன்ற இறைவாக்குகளை படித்துக் காட்டி இந்த இறுதி வாழ்வியல் வழிகாட்டி இறுதி நெறிநூல் அல்குர்ஆனைப் பெற்ற முஹம்மது(ஸல்) அவர்கள் தான் இறுதித் தூதர் என்றால் காதியானிகள் ஏற்கிறார்களா? இப்படி வழிகேட்டில் செல்லும் ஒவ்வொரு பிரிவினரது வாதத்தையும் ஏற்பதாக இருந்தால் இறுதியில் அகில உலக மக்களுக்கும் இறுதி வாழ்க்கை வழிகாட்டி நெறிநூல் குர்ஆன் முஸ்லிம்களுக்காக அல்ல; முஸ்லிம் அல்லாதாருக்கே இறங்கியது என்ற மடமை வாதத்தில் தான் போய் முடியும்.

நேரடி வசனங்களுக்கே சுய விளக்கம் கொடுத்து நிராகரிக்கும் மவ்லவிகள்!
இப்படி அவர்களைப் போல் நம்முடைய சுய விளக்கத்தைச் சொல்லாமல், குர்ஆனிலிருந்து வசனங்களை எடுத்துக் காட்டினாலும் ஷைத்தானைப்போல் சுய விளக்கம் கொடுத்து அல்லாஹ் வின் நேரடிக் கட்டளைகளை நிராகரிப்பவர்களாகத்தான் வழிகேட்டில் செல்லும் ஒவ்வொரு பிரிவினரும் இருக்கின்றனர். 32:13, 11:118,119 இறைவாக்குகள் கூறுவது போல் நரகை நிரப்ப நான் முந்தி, நீ முந்தி என முந்துகிறார்கள். 1984லிலிருந்து குர்ஆனிலிருந்து நேரடியாக இந்த வசனங்களை எடுத்து வைக்கத்தான் செய்கிறோம். பெருங்கொண்ட மக்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை நிராகரிக்கிறார்கள் என்றால் நாம் என்ன செய்ய முடியும்? நமக்கு அதில் அணுவளவும் அதிகாரம் இல்லை. எடுத்துச் சொல்வது தான் நமது கடமை.

முதல் பிறை மூன்று நாள்!
பிறை விவகாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய, சந்திரனின் ஓட்டம் மனிதக் கண்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அவை முழுக்க முழுக்க அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவற்றின் ஓட்டம் ஒரு வினாடி கூட முன்பின் ஆவதில்லை. அவற்றின் ஓட்டத்தைக் கணக்கிடும் அறிவு நுட்பத்தை மனிதனுக்குக் கொடுத்து வசப்படுத்திக் கொடுத்துள்ளான் என்பதைத் தெளிவாகச் சொல்லும் குர்ஆன் வசனங்களான 6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 21:33, 29:61, 31:29, 35:13, 36:39,40, 39:5, 55:5 இவற்றை எடுத்துக் கொடுத்துவிட்டோம். புரோகிதர்களான மவ்லவிகளின் வழமையான நடைமுறைப்படி இவ்வசனங்களைக் கண்டு கொள்ளாமல் சந்திரனின் ஓட்டம் மனிதக் கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மனிதக் கண்கள் அதில் பட்டால்தான் அது சுழல ஆரம்பிக்கும். மனிதக் கண்கள் படாதவரை அது முதல் பிறையிலேயே சுழலாமல் நின்று கொண்டிருக்கும் என அறிவீனமான வாதத்தை வைக்கின்றனர். அவர்கள் பின்னால் செம்மறி ஆட்டு மந்தை போல் கண் மூடிச் செல்பவர்களும் அதை அப்படியே ஒப்புக் கொள்கின்றனர்.

வழிகேட்டிற்கு எல்லை உண்டா?
மனிதக் கரங்களால் செதுக்கப்பட்ட சிலைகளுக்கும் தெய்வீக சக்தி உண்டு என்பவர்களுக்கும், இறைவனுக்கும் மகன் உண்டு என்பவர்களுக்கும், இறந்து குளிப்பாட்டி தொழ வைத்து மண்ணில் புதைக்கப்பட்டவர்களும் நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார்கள் என்பவர்களுக்கும், சந்திரனின் ஓட்டம் அவர்களின் கண்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பவர்களுக்கும் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா? இவை அனைத்தும் பெரும் மூட நம்பிக்கைகள் என்பதில் சந்தேகமுண்டா?

காலமே அவர்களை மாற்றும்!
ஆயினும் 22:27 சொல்வது போல் ஒட்டகத்தில்தான் ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டும், சூரியனின் ஓட்டத்தைக் கண்ணால் பார்த்தே தொழ வேண்டும், தூரத்து இறப்புச் செய்தியை ஆள் நேரில் வந்து சொன்ன பின்னரே ஏற்க வேண்டும் என்று இப்போது பிறைக்கு முரட்டுப் பிடிவாதம் பிடிப்பது போல் பிடிவாதம் பிடித்த இந்த மதகுருமார்களை காலம் மாற்றியது போல் பிறை பற்றிய அவர்களின் மூட நம்பிக்கையையும், முரட்டுப் பிடிவாதத்தையும் காலம்தான் மாற்றும். மவ்லவிகள் ஒரு போதும் மாறமாட்டார்கள். அதுவரை நாம் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

பெருநாள் கொண்டாட்டத்திலாவது ஒற்றுமை!
ஆயினும் பெருநாள் விஷயத்தில் மட்டுமாவது ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்துவது சிறந்ததுதான்.
அதற்கான முயற்சியை நாம் தொடர்ந்து செய்து வரத்தான் செய்கிறோம். அந்நஜாத்திலும் தொடர்ந்து எழுதத்தான் செய்கிறோம். சமுதாயத்தைப் பிளவுபடுத்தியே உலக ஆதாயங்களை அடைந்து வரும் கூட்டம் அதற்கு இணங்கி வரவேண்டுமே. ரமழான் முதல் நாள் நோன்பை நோற்காமல் பெரும் பாவியாவதையும், நோன்பு நோற்பது ஹறாமான ஷவ்வால் முதல் நாளில் நோன்பு நோற்று பெரும் பாவியாவதையும் கண்டு கொள்ளாத இம்மவ்லவிகள் சமுதாய ஒற்றுமை பற்றியா அக்கறை எடுக்கப் போகிறார்கள்.

அற்பமான இவ்வுலகே மதகுருமார்கள் லட்சியம்!
3:196,197, 5:100 இறைவாக்குகளில் அற்பமான இவ்வுலகைப் பற்றி அல்லாஹ் கடுமையாக எச்சரித்திருந்தும் இம்மவ்லவிகளுக்கு இந்த எச்சரிக்கை உறைக்காது. அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்காகச் சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதில் தான் மிக மிகக் குறியாக இருப்பார்கள். ரமழான் முதல் பிறையில் நோன்பு நோற்று ரமழான் கடைசிப் பிறையுடன் நோன்பு நோற்பதை விட்டு ஷவ்வால் முதல் பிறையில் பெருநாள் கொண்டாடுவதுதான் நபி வழி. கணக்கீட்டு முறை தெரியாத அக்காலத்தில் ஒருமுறை பிறைத் தகவல் மாலையில் கிடைத்துள்ளது. நோன்பை உடனடியாகத் துறந்துவிட்டு, ஆண்கள், பெண்கள், மாதவிடாய் பெண்கள், கன்னிப் பெண்கள் ஆக சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி இரவில் பெருநாள் கொண்டாடுவது சாத்தியமில்லை என்பதால் அடுத்த நாள் காலை மைதானம் வர நபி(ஸல்) கட்டளையிட்ட ஆதாரம் நமக்குக் கிடைக்கிறது.

நபி வழிகாட்டல் உண்டு!
இந்த ஆதாரத்தை வைத்து ஷவ்வால் முதல் நாள் நோன்பு நோற்பதைத் தவிர்த்துவிட்டு, அடுத்த நாள் பெருநாள் கொண்டாடுவதில் தவறில்லை என்று நாம் ஆரம்பத்திலிருந்தே எழுதத்தான் செய்கிறோம். ஆயினும் பிறை விஷயத்தில் தெளிவானவர்களும் இதில் தடுமாறத்தான் செய்கிறார்கள். காரணம் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பேர் போன மத குருமார்களிடம் பாடம் பயின்று, அதனால் சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதைக் குற்றமாகக் கருதாத சகோதரர்கள், முதல் நாளில் பெருநாள் கொண்டாடியே தீரவேண்டும் என்பதிலும், மத்ஹபு இமாம்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்பதிலும் பிடிவாதமாக இருக்கிறார்கள். இப்படி ஒரு சாரார்.

எங்கள் வீட்டு மாடியிலிலேயே பிறை தெரிய வேண்டும்?
தங்கள் பகுதியில் பிறை கண்ணுக்குத் தெரியா விட்டாலும், வேறு பகுதியில், வேறு நாட்டில் பிறை தெரிந்ததை ஏற்கலாம் என்று இரண்டாவது சாரார். வேறு பகுதியில் தெரிந்த பிறையையும் ஏற்க மாட்டோம். எங்கள் வீட்டு மாடியில் நாங்கள் பிறை பார்ப்பதை மட்டுமே ஏற்போம் என்று கூமுட்டை வாதம் செய்யும் மூன்றாவது சாரார். இந்த மூன்று சாராரையும் ஒற்றுமைப்படுத்தி ஒரே நாளில் பெரு நாள் கொண்டாடும் அந்த அதிசயத்தை எப்படி நிகழ்த்துவது? அப்படியொரு அதிசய வழி இருந்தால் அறியத் தாருங்கள். நாம் ஏற்கத் தயாராக இருக்கிறோம்.
ஆயினும் ஒட்டகப் பிடிவாதம் தகர்ந்தது போல், சூரியனைக் கண்ணால் பார்ப்பது தகர்ந்தது போல், மரணச் செய்தியை ஆள் நேரில் வந்து சொல்வது தகர்ந்தது போல், பிறையைக் கண்ணால் பார்ப்பது என்ற பிடிவாதமும் காலப்போக்கில் தகர்ந்து போகத்தான் செய்யும். காலம்தான் அவர்களை மாற்றும். அது வரை நாம் சத்தியத்தை-நேர்வழியை விடாது தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதுடன் பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. உங்களிடம் அதற்குரிய வழி இருந்தால் சொல்லுங்கள். நாம் பரிசீலனை செய்கிறோம். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக.

ஆயினும் ஒரு விடியல் வெளிச்சம் தெரிகிறது?
மனித குலம் எந்த அளவு வழிகெட வேண்டுமோ அதற்கும் அதிகமாகவே இன்று வழிகேட்டில் இருக்கிறது. 1450 வருடங்களுக்கு முன்னர் இறுதித் தூதர் வரும்போது, எப்படி மனித குலம் நரக விளிம்பில் நின்றதோ அதேபோல் இன்றும் நரக விளிம்பிலேயே மனித குலம் நிற்கிறது.
எனவே எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் மனித குலத்திற்கு மீண்டும் ஓர் எழுச்சியை ஏற்படுத்துவான் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. பரம்பரை முஸ்லிம்கள் மவ்லவிகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்தாலும் முஸ்லிம் அல்லாதவர்கள் இம்மவ்லவிகளிடம் சிக்காமல் நேரடியாக குர்ஆனைப் படித்துச் சிந்தித்து இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். பரம்பரை முஸ்லிம்களை விட அவர்கள் மார்க்கத்தில் தெளிவான நேரிய பாதையில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் 9:39, 11:57, 47:38 இறைவாக்குகளில் கூறுவது போல் பரம்பரை முஸ்லிம்களைப் புறக்கணித்து முஸ்லிம் அல்லாதவர்களைத் தேர்ந்தெடுக்கிறான் போலும். பரம்பரை முஸ்லிம்கள் 2:186 இறைக் கட்டளையை நிராகரித்து அல்லாஹ்வைப் புறக்கணித்து இடைத்தரகர்களான புரோகித மவ்லவிகளிடம் தஞ்சம் அடைந்துள்ளார்கள். எனவே அல்லாஹ்வும் அவர்களைப் புறக்கணிப்பது நியாயம் தானே? பரம்பரை முஸ்லிம்களை விட பெரும் நட்டவாளிகள் இருக்க முடியுமா?

 

 

 

Previous post:

Next post: