விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2012 ஆகஸ்ட்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!


விமர்சனம்:
குர்ஆனையும் சுன்னாவையும் விளங்குவதில் சஹாபாக்களின் விளக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாம் நமது அறிவைக் கொண்டு சுயமாக விளங்கக் கூடாது? அப்படி விளங்குவது வழிகேட்டில் விட்டுவிடும் என்று அஹ்லே ஹதீஸ்காரர்கள் மற்றும் ஸலஃ பிகள் கூறுகிறார்கள். இதற்கு குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உள்ளதா? இது சஹாபாக்களை தக்லீது செய்வது போல் ஆகாதா? விளக்கவும்.
B. சகாபுத்தீன், திருச்சி-26.

விளக்கம்: தன்னம்பிக்கையோ, சுய சிந்தனையோ இல்லாமல் ஸலஃபுகளான நபிதோழர்களைப் பின்பற்றுவது “”தக்லீது” என்ற மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத செயலே என்பதில் அணுவளவும் சந்தேகமே இல்லை என்பதை 7:3, 18:102-106, 33:36,66-68 இறைவாக்குகளைக் கற்று விளங்குகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும். உலகப் பரீட்சையில் காப்பி அடிப்பது எப்படிப்பட்டக் குற்றமோ அதைவிட மெகா குற்றம் வாழ்க்கைப் பரீட்சையில் கலீஃபாக்கள், நபி தோழர்கள், இமாம்கள் ஸலஃபுகள் என முன் சென்றவர்களைப் பின்பற்றுவது காப்பி அடிப்பதே ஆகும்.

மேலும் 2:186, 50:16, 56:85 குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அல்லாஹ்வுக்கும் அடியாருக்குமிடையில் இடைத்தரகர்களாக, புரோகிதர்களாக, ஆலிம்களாக யாருமே புகமுடியாது; அது பெருத்த வழி கேடாகும்; நரகில் சேர்க்கும் என்பதைத் திட்ட மாக அறிய முடியும்.

அல்லாஹ் மனிதர்களுக்காக தெள்ளத் தெளிவாக, நேரடியாக, எந்த ஸலஃபுகளதும் அல்லாமாவினதும் மேல் விளக்கம் தேவை இல்லாத நிலையில் குர்ஆனை விளக்கி இருப்பதாக 2:99,159,185,209,213, 3:105,184, 10:13,15, 19:73, 22:16, 72, 24:1, 29:49, 30:47, 34:43, 35:25, 40:66,83, 45:17, 25, 46:7, 57:9,25, 58:5 போன்ற எண்ணற்ற வசனங்களில் உறுதிப்படுத்தி இருப்பதோடு, குர்ஆன் கட்டளைகளை நடை முறையில் செயல்படுத்திக்காட்ட இறுதித் தூதருக்கு அனுமதி கொடுத்திருப்பதை 2:213, 16:44,64 மூன்று இறைவாக்குகள் உறுதிப் படுத்தி இருப்பதோடு, இறுதித் தூதருக்குப் பின்னர் வேறு எவருக்கும் சுய விளக்கம் கொடுக்கும் அதிகாரமில்லை, அது பெரும் வழிகேடு என்று 33:36 இறைவாக்கு உறுதிப்படுத்துவதோடு, இத்தனை இறைக் கட்டளைகளையும் நிராகரித்து குஃப்ரிலாகி ஸலஃபுகளான முன் சென்றவர்களைப் பின்பற்றுகிறவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்துகொண்டு, எவர்களுடைய போதனைகளை ஏற்று அப்படி நடந்தார்களோ அவர்களைக் கடுமையாகச் சபிக்கவும், அவர்களுக்கு இரு மடங்கு வேதனை கொடுக்கவும் இறைவனிடம முறை யிடுவார்கள் என்று 33:66-68 இறைவாக்குகள் எச்சரிக்கின்றன.

இதற்குக் காரணம் 2:134,141 இறைவாக்குகள் தெள்ளத் தெளிவாக நேரடியாக “”அந்தச் சமூகம் சென்றுவிட்டது; அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே; நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்” என்று இரண்டு இடங்களில் முன் சென்றவர்கள் பற்றிக் கூறியிருந்தும், இறைவனது இக் கட்டளையைத் துச்சமாக மதித்துத் தூக்கி எறிந்து விட்டு, 2:39 எச்சரிப்பது போல் நிராகரிப்பவர்களாகி ஸலஃபுகள் விளங்கியது போல்தான் நாம் விளங்க வேண்டும் என்று தக்லீதை நியாயப்படுத்துவதேயாகும் 29:69 இறைவாக்கை நிராகரிப்பது போல் சுயமாக முயற்சித்து விளங்க முற்படுவதைத் தடுப்ப தாகும். ஸலஃபுகள் தங்களைப் பின்பற்றச் சொல்லவில்லை!

இந்த ஆலிம்கள் மக்களை வாழ்வியல் வழி காட்டி குர்ஆனை விட்டும், குர்ஆன் உங்களுக்கு விளங்காது, ஸலஃபுகள் விளங்கியபடி தான் விளங்கவேண்டும் என்று சதா ஒப்பாரி வைக்கும் உண்மை நோக்கம் என்ன தெரியுமா? ஆதத்தின் சந்ததிகள் அனைவரும் நேரடியாக குர்ஆனைப் படித்து உண்மையை விளங்கிக் கொண்டால் தங்கள் புரோகித வர்க்கம் செல்லாக் காசாகி விடும். வயிற்றுப் பிழைப்பில் மண் விழுந்து விடும். புரோகிதர்களின் வண்ட வாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்ற அச்சமே காரணமாகும். இந்த ஆலிம்கள் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான தாஃகூத்கள்-மனித ஷைத்தான்கள், பெருங்கொண்ட மக்களை வஞ்சித்து கொடிய நரகில் தள்ளுவ தோடு, அற்ப உலக ஆதாயம் அடையும் கொடுமையாளர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள் ளக்கூடாது என்ற கெட்ட நோக்கத்துடனேயே மக்களை குர்ஆனைப் படித்து விளங்க விடாமல் தடுக்கிறார்கள்.

அத்தோடு விட்டார்களா? 2:90, 213, 3:19, 10:90, 42:14, 45:17, 23:53, 30:32 இறைவாக்குகள் கூறுவது போல் அற்ப உலக ஆதாயங்களை அடைவதற்காகப் போட்டி பொறாமை கொண்டு தலைமைப் பதவிகளைத் தட்டிப் பறிக்க எண்ணற்றப் பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரோடு ஒருவர் சதா சண்டையிட்டுக் கொண்டு, ஒவ்வொரு பிரிவும் அவர்கள்தான் நேர்வழியில் இருப்பதாக 4:49, 53:32 இறைவாக்குகளை நிராகரித்துத் தம்பட்டம் அடிக்கிறார்கள்.
“”நமது அறிவைக் கொண்டு சுயமாக விளங்கக் கூடாது” என்றால் 33:36 இறைக் கட்டளைப்படி இறைத்தூதரின் விளக்கத்தை விட்டுச் சுயமாக ஸலஃபுகளாக இருந்தாலும், கலஃபுகளாக இருந்தாலும், இன்றைய ஆலிம்(?)களாக இருந்தாலும் சுய விளக்கம் கொடுக்க முற்படக் கூடாது என்ப தற்கே குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இருக்கிறது. மற்றபடி பொதுமக்கள்தான் விளங்க முற்படக் கூடாது ஸலஃபுகள் விளங்கியபடி விளங்க வேண்டும் என்று தக்லீது செய்யவே கூடாது. மேலும் மவ்லவிகள், ஆலிம்கள் என பெருமை பேசும், ஆணவம் கொள்பவர்கள் சுயமாக விட்டடிக்கவே கூடாது என்பதையே வலியுறுத் துகிறது.

மனிதர்களுக்காக குர்ஆன் தெள்ளத் தெளிவாக நேரடியாகப் பாமரனும் காதால் கேட்ட வுடன் விளங்கும் நிலையில் அல்லாஹ் இறக்கியிருப்பதாக எண்ணற்ற குர்ஆன் வசனங்களிலேயே அறிவித்திருக்க அது பொது மக்களுக்கு விளங்காது; நாங்கள்தான் குர்ஆனை விளக்கும் பேர்வழிகள் என மார்தட்டும் இந்த ஆலிம்களின் ஆணவம் எதை உணர்த்துகிறது? அல்லாஹ் விளக்கியது உங்களுக்கு விளங்காது; நாங்கள் விளங்கித்தான் நீங்கள் விளங்க முடியும் என்று அவர்கள் கூறுவதால் அல்லாஹ்வைவிட அவர்களுக்கே மக்களுக்கு குர்ஆனை விளக்கும் ஆற்றல் இருப்பதாகத்தானே அது பொருள் படுகிறது. அதாவது அல்லாஹ்வுக்கும் மேலான அல்லாஹ் (நவூதுபில்லாஹ்) நாங்கள்தான் என்று அவர்கள் பிதற்றுகிறார்கள் என்பதில் சந்தேக முண்டா?

மேலும் ஸலஃபுகளை அல்லாஹ்வுக்கும் மேலான அல்லாஹ்வாக கற்பனை செய்து 9:31 சொல்வது போல் அவர்களை வணங்கி அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்கள் என்பதை 2:186, 42:21, 49:16 போன்ற இறைவாக் குகளை நீங்களே தன்னம்பிக்கையோடு படித் துப் பார்த்தால் விளங்க முடியும்.

2:256, 257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17 ஆகிய எட்டு இடங்களின் தாஃகூத் என்றும், 51:53, 52:32 என்ற இரண்டு இடங்களில் தாஃகூன் என்றும் குறிப்பிட்டு அல்லாஹ் எச்சரிப்பது மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மனித ஷைத்தானாகிய இந்த மதகுருமார்களைத் தான். இவர்கள் ஸலஃபுகள் என்றும், இமாம் கள் என்றும் அவுலியாக்கள் என்றும் முன் சென்ற நாதாக்கள், பெரியார்கள் என்றும் வாயால் மொழிந்து மக்களை மதிமயக்கி ஏமாற்றி வஞ்சிப்பதெல்லாம் உண்மையில் அந்த ஸலஃபுகள், கலஃபுகள் மீது பக்தி கொண்டல்ல. அவர்களின் பெயரால் மக்களை மயக்கி 2:186, 50:16, 56:85 இறைவாக்குகளை நிராகரித்துத் தங்களை இடைத்தரகர்களாக, புரோகிதர்களாக, மதகுருமார்களாக அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாகப் புகுந்து வயிறு வளர்ப்பதோடு, அவர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் பெருங் கொண்ட மக்களை நரகில் தள்ளும் ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படும் தீய நோக்குடன் தான் என்பதைப் புரிந்து, அவர்க ளின் வசீகர, உடும்புப் பிடியிலிருந்து விடுபடுகிறவர்களே வெற்றியாளர்கள்! சுவர்க்கம் நுழைவோர்.
——————————————————–

விமர்சனம்: மார்க்க அறிஞர்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறுகிறார்களே அப்படிச் சொல்வதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன அளவுகோல் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்? B.சகாபுத்தீன், திருச்சி-26

விளக்கம்: கொயபல்ஸ் தத்துவம் என்று மக்களிடையே புழக்கத்தில் இருக்கிறதே அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு வடிகட்டியப் பொய்யை மீண்டும் மீண்டும் மக்களிடையே சொல்லி வந்தால் அதை மக்கள் உண்மை என்று நம்பி விடுவார்கள். அந்தத் தத்துவப்படிதான் இந்த மவ்லவிகளான மதகுருமார்கள் ஆலிம்கள், ஆலிம்கள் என்றும் மார்க்க அறிஞர்கள் மார்க்க அறிஞர்கள் என்றும் அடிக்கடிப் பிதற்றி வருகிறார்கள். அதையே சுய சிந்தனை இல்லா பெருங் கொண்ட மக்கள் முற்றிலும் நம்பி செம்மறி ஆட்டு மந்தை போல் அவர்கள் பின்னால் கண் மூடிச் சென்று நரகை நிரப்ப இருக்கிறார்கள்.
மற்றபடி ஆலிம்-மார்க்க அறிஞர் என்றதொரு தனிப்பிரிவு இருப்பதாக குர்ஆனிலும் ஆதாரம் இல்லை; ஹதீஃத்களிலும் ஆதாரமில்லை. மாறாக 58:11, 35:28, 39:9, 35:19 போன்ற இறை வாக்குகளை ஓதிக்காட்டி (படித்துக்காட்டி அல்ல) 33:36 இறைவாக்கை நிராகரித்து வேறு அபிப்பிராயம் கொண்டு ஆலிம் என்ற ஒரு தனி வர்க்கம் இருக்கிறது என்று மக்களை ஏமாற்றி வஞ்சிப்பார்கள், தங்களை ஆலிம்கள் என்று ஒரு தனிப்பிரிவாகப் பிரித்து 21:92, 23:52 இறைக் கட்டளைகளை நிராகரித்து சமுதாயத்தைப் பிளவுபடுத்துவார்கள். இந்த உண்மையை 21:93, 23:53-56 இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்து விலங்கலாம்.

இவர்களின் இந்தச் சுய விளக்கம் எந்த அளவு மூடத்தனமானது என்பதை 59:20ல் காணப்படும் “”நரகவாசிகளும், சுவர்க்கவாசிகளும் சம மாக மாட்டார்கள்” என்ற இறைவாக்கைக் காட்டி 33:36 இறைவாக்கை நிராகரித்து இவ் வுலகிலேயே முஸ்லிம்களை சுவர்க்கவாசிகள், நரகவாசிகள் என இரு பிரிவாகப் பிரித்து சுய விளக்கம் கொடுத்தால், அப்படி சுய விளக்கம் கொடுப்பவன் எப்படிப்பட்ட வடிகட்டிய மூடனாக-ஜாகிலாக இருப்பானோ அவனைப் போன்ற மூடர்களே இந்த மவ்லவிகளும் என்பதே உண்மையாகும்.

முதலில் பொதுமக்களும், மதகுருமார்களும் ஒரு விடயத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். குர்ஆன் இறங்கியது இறுதி நபிக்கே. குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க உரிமையும் கடமையும் உள்ளவர்கள் இறுதி நபியே! இந்தப் பேருண்மையை 2:99,159, 4:105, 6:92, 8:41, 12:2, 14:1, 38:29, 39:2,41, 57:25, 2:213, 16:44,64 இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும். அல்லாஹ் குர்ஆனில் சொன்னதற்கு அதிகமாக, குர்ஆனுக்கு இறுதித்தூதர் தெளிவு படுத்திய பின்னர் மேல் விளக்கமாக யார் கொடுத்தாலும் அவர்கள் பகிரங்கமான பெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று 33:36 இறைவாக்கு அடித்துச் சொல்கிறது. ஒட்டு மொத்த இம்மதகுருமார்களும் பெரும் வழி கேட்டில் இருக்கிறார்கள் என்பதில் ஐய முண்டா?

ஆதத்தின் சந்ததிகளில் மார்க்க அறிஞர்கள்-மதகுருமார்கள் என்ற தனி இனம் இருப்பதை மேலே எழுதப்பட்டுள்ள 35:19,28, 39:9, 58:11 இறைவாக்குகள், இந்த ஆலிம்கள் சொல்வது போல் கூறுகின்றன என்றால் அதை யார் தெளிவுபடுத்த வேண்டும்? இறுதி இறைத் தூதர்தானே! அப்படி ஒரேயொரு ஆதாரமாவது இவர்களிடம் உண்டா? இல்லையே!

குறைந்த பட்சம் இந்த வசனங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு விளக்கம் இருந்தால் நபி(ஸல்) என்ன செய்திருப்பார்கள்? நபியின் பள்ளிக்குப் பக்கத்திலிருந்த திண்ணையில் அடுகிடை படுகிடை எனக் கொலைப் பட்டினியோடு மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளக் காத்திருந்த அத்திண்ணைத் தோழர்களுக்கு பைத்துல் மாலி லிலிருந்து மாதச் சம்பளம் நிர்ணயித்து வழங்கி இருப்பார்கள். அல்லது அவர்களின் உணவுத் தேவைகளையாவது மற்ற நபிதோழர்கள் நிறைவு செய்யக் கட்டளையிட்டிருப்பார்கள். அவர்கள் பட்டினிக் கிடந்து மயங்கி விழும் நிலை ஏற்பட்டிருக்காது.

மேலும் இன்று போல் அன்றைய நிலை இல்லை. இன்று குர்ஆனும் சுன்னாவும் பதியப் பட்டு நமக்குக் கிடைக்கின்றன. நம் வீடுகளிலிருந்தே அவற்றைப் படித்து மார்க்கத்தை விளங்க முடியும். அன்று இந்த வாய்ப்பு இல்லை. நாள் முழுக்கக் காத்திருந்து வஹீ மூலம் பெறப்படும் குர்ஆன் வசனங்களையும், அவற்றிற்கு நபி(ஸல்) அவர்கள் தரும் நடைமுறை விளக்கங்களையும் அதாவது சுன்னாவையும் அறிந்து கொள்ளும் கட்டாயம் இருந்தது. அப்படிப்பட்டக் கட்டாய நிலையிலும், அவர்களது உணவு மற்றும் இதரத் தேவைகளை பைத்துல்மாலிலிருந்தோ, நபி தோழர்களிடமிருந்தோ நிறைவு செய்து கொள்ள நபி(ஸல்) எந்த ஏற்பாட்டையும் செய்து வழிகாட்டவில்லையே ஏன்? நபி தோழர்களில் சிலர் திண்ணைத் தோழர்களின் பரிதாப நிலையைப் பார்த்து 2:273 இறைக் கட்டளைப்படி அவர்களாக முன்வந்து உதவி செய்தால் போச்சு; இல்லை என்றால் கொலைப் பட்டினிதான்.

நபி(ஸல்), அவர்களுக்கு எவ்வித முன் ஏற்பாடும் செய்யவில்லை என்பது ஒருபுறம் இருக்க, கஃபாவுக்கு மிக அருகில் இருந்த அவர்களது பாட்டனாரின் பாட்டனார் குசை கி.பி.440-ல் நிறுவிய அரபி மதரஸாவையும் (தாருந்நத்வா) இருந்த இடம் தெரியாமல் தரை மட்டமாக்கினார்கள் என்ற வரலாறே குன்றிலிட்ட தீபமாக இருக்கிறது. இந்த மவ்லவிகள் மறுப்பார்களா?

அதற்கு மேலும் அத்திண்ணையில் அடுகிடைப்படுகிடை எனக் கிடந்து மார்க்கத்தைக் கற்றுக் கொண்ட திண்ணைத் தோழர்களுக்கு மவ்லவி-ஆலிம் பட்டம் கொடுத்து ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தி, அவர்களிடம்தான் மற்றத் தோழர்கள் மார்க்கத்தைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டவுமில்லை. அதற்கு மாறாக “”என்னைப் பற்றி உங்களுக்கு ஒரேயொரு விடயம் தெரிந்தாலும் அதை மற்ற வர்களிடம் சேர்த்து விடுங்கள்” என்று கட்டளை யிட்ட ஆதாரமே கிடைக்கிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? சமுதாயத்தை ஆலிம் அவாம் எனப் பிளவுபடுத்துதை விடப் பெருங்கேடு வேறு ஒன்றுமே இல்லை.

இன்று மனித சமுதாயத்தில் காணப்படும் அனைத்துப் பிளவுகளுக்கும், பிரிவுகளுக்கும், வழிகேடுகளுக்கும் இந்த ஆலிம்-அவாம் மதகுருமார்கள் வேறு பாடே முற்றிலும் காரணமாக இருக்கிறது என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்கவில்லையா? ஆம்! தன்னை ஆலிம் என்று எவன் கூறுகிறானோ அவன் வடிகட்டிய ஜாஹில்-மூடன்; அவன் ஒருபோதும் மக்களுக்கு நேர்வழி யைக் காட்டமாட்டான். வழிகேடுகளையே நேர்வழியாகக் காட்டுவான் என்பதை அறிந்து அப்படிப்பட்ட ஆலிம்களின் பிடியிலிருந்து விடுபட்டு, யார் சொன்னாலும் கேட்டு அவற்றில் குர் ஆன், சுன்னாபடி இருப்பதை மட்டுமே எடுத்து நடப்பவர்கள் அல்லாஹ்வின் நன்மாராயம் பெற்றவர்கள். இறைவனால் நேர்வழி நடத்தப்படு கிறவர்கள், உண்மையான அறிஞர்கள் என்பதை 39:17,18 குர்ஆன் வசனங்களை நீங்களே படித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.

அதற்கு மாறாக இந்த ஆலிம்கள் பின்னால் செல்பவர்கள் 9:31 வசனப்படி அவர்களை வணங்குகிறார்கள். அப்படி பெருங்கொண்ட மக்கள் தங்களை வணங்குவதை ஏற்று தாங்கள் தான் ஆலிம்கள்-மார்க்க அறிஞர்கள் என்றோ பெருமைப்படுவோர் தாஃகூத் என குர்ஆன் பல இடங்களில் அம்பலப்படுத்தும் மனித ஷைத்தான்கள் என்பதையும் அறிய முடியும். ஆம்! ஆலிம்கள்-மார்க்க அறிஞர்கள் என்றோ தாயி கள் என்றோ வார்த்தைக்கு வார்த்தை கொய பல்ஸ் தத்துவப்படிக் கூறி மக்களை மயக்க முற் படுகிறவர்கள், அவர்களின் வசீகர வலையில் சிக்கி, அவர்கள் சொல்வதை வேதவாக்காகக் கொண்டு எடுத்து நடப்பவர்கள் இந்த இரு சாரா ரும் நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியும், சபித்தும் ஒப்பாரி வைப்பதை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளை நீங்களே நேரடியாக குர்ஆனை எடுத்துப் படித்துப் பார்த்து எதார்த்த நிலையை சந்தேகமற அறிந்து கொள்ளுங்கள்.
————————————————–

விமர்சனம்: அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பிறை என்று சொல்லி வருகிறீர்கள். புதன்கிழமை அமாவாசை ஆரம்பித்துவிட்டது. அப்படியானால் நீங்கள் வியாழக்கிழமையே நோன்பை ஆரம்பித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக நீங்கள் வெள்ளிக்கிழமை என உங்கள் கூற்றுக்கே நீங்கள் முரண்படுகிறீர்கள். இது தான் நீங்கள் நேர்வழியை குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் கொண்டு எடுத்துரைக்கும் லட்சணமா?
பல தொலைபேசி விமர்சனம்.

விளக்கம்: அமாவாசைக்கு அடுத்த நாள் தலைப்பிறை என சிலர் சொல்லிவருவது உண்மைதான். நாம் அப்படிச் சொல்வது தவறு என்று தெளிவு படுத்தியுள்ளோம். அமாவாசை என்றால் அது முடியும் மாதத்தின் இறுதிப் பகுதியையும், வரும் மாதத்தின் ஆரம்பப் பகுதியையும் கொண்டதாகும். இந்துக்கள் அமாவாசையின் ஆரம்பப் பகுதியான தேய்பிறை யில் தீபாவளி, கருமாதி போன்ற சடங்கு களைச் செய்வதையும் சங்கமத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கும் வளர்பிறையில் திருமணம் போன்ற சுப காரியங்களைச் செய்வதையும் பார்க்கிறோம். ஆம்! அமாவாசை ஆரம்பித்த வுடன் புதிய மாதம் ஆரம்பிக்காது. சங்கமம் (Conjunction) ஆகிய பின்னரே புதிய மாதம் ஆரம்பிக்கிறது. சங்கமம் ஏற்படும் தினத்தில் தேய்பிறையும் வளர்பிறையும் கலந்திருக்கிறது. அதனால்தான் நாம் சங்கமம் ஆகும் தினத்தை முதல் பிறையாகக் கொள்ள முடியாது.

18.07.12 புதன்கிழமையே அமாவாசை ஆரம்பித்து விட்டாலும் அது தேய்பிறையின் அதாவது ஷஃபான் மாதத்தின் இறுதிப் பகுதியாகும். அடுத்த நாள் 19.07.12 வியாழன் அன்றே சங்கமம் 4.24 சர்வதேச நேரப்படி இடம் பெறுகிறது. அப்போது நமது இந்திய மைய நேரம் 4.24+6.30=10.54. அதாவது 19.07.12 வியாழக்கிழமை காலையில் சங்கமம் (Conjunction) இடம் பெறுகிறது. எனவே 20.07.12 வெள்ளிக்கிழமை ரமழான் மாதம் ஆரம்பிக்கிறது; அன்று நோன்பை ஆரம்பிப்பது 2:185 இறைக் கட்டளைப்படிக் கட்டாயக் கடமையாகும். விடுபவர்கள் பெரும் பாவிகளாகும்.

Previous post:

Next post: