ஆய்வரங்கம்! கருத்தரங்கம்! நாள் : ஹிஜ்ரி 21.04.1434 (03.03.2013) ஞாயிறு

in 2013 மார்ச்

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்
ஆய்வரங்கம்! கருத்தரங்கம்!
நாள் : ஹிஜ்ரி 21.04.1434 (03.03.2013) ஞாயிறு
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (அல்லாஹ் நாடினால்)
இடம் : மதீனா மஸ்ஜித், ஆசாத் வீதி, செந்தண்ணீர்புரம், திருச்சி-620 004. 94429 14198

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

உலகளாவிய முஸ்லிம் சமூகம் 21:92, 23:52 இறைவனது கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து ஒன்றுபட முடியாமைக்குக் காரணம் என்ன? எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றும் மூடக் கொள்கைகளே காரணம். டார்வின் மனிதனின் புறத் தோற்றத்தையும், குரங்கின் புறத் தோற்றத்தையும் புறக்கண்ணால் வெளிரங்கமாகப் பார்த்து மட்டுமே குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற மூடக் கொள்கையை வெளிப்படுத்தினான். பொய்க்கடவுள்களுடன், இணை துணை இல்லா ஏகனாகிய ஒரே இறைவனையும் மறுக்கும் நாத்திகர்களுக்கு இது பெரிய ஆதாரமாகிவிட்டது. கடவுள் இல்லவே இல்லை என கோரஸ் பாட ஆரம்பித்தார்கள்.

அறிவியல் வளர்ச்சியால் உடற்கூறு ஆய்வு அறிஞர்கள் முறையாக ஆய்வு செய்து குரங்கின் உள்ளுறுப்புகள் எந்த வகையிலும் மனிதனின் உள்ளுறுப்புகளுடன் ஒத்துப் போகவில்லை. ஆனால் பன்றியின் உள்ளுறுப்புகள் மனிதனின் உள்ளுறுப்புகளுடன் ஓரளவு ஒத்திருக்கின்றன என அறிவித்தார்கள். நாத்திகர்கள் அசைந்து கொடுக்கவில்லை. பழைய பல்லவியையே பாடினார்கள். தற்போது அதி அறிவியல் முன்னேற்றம் காரணமாக மரபணு (ம்ஹிபு) சோதனை மூலம் மனிதனின் தோற்றம் ஒரு பாட்டியிடமிருந்தே ஆரம்பிக்கிறது என்பதை நிலைநாட்டி இருக்கிறார்கள். நாத்திகர்கள் குர்ஆன் 4:1 கூறும் இதே உண்மையை ஏற்றுக் கொண்டார்களா? இல்லையே! இன்றும் மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று தானே பிதற்றித் தங்களின் கடவுள் இல்லவே இல்லை என்ற மூடக் கொள்கையைப் பரப்பி வருகிறார்கள்.

இதேபோல் மனிதனின் புறக்கண் பார்வையில் பூமி தட்டையாக இருப்பது போலும், சூரியனே பூமியைச் சுற்றி வருவது போலும்தானே தோற்றமளிக்கிறது. வெகு நீண்ட காலம் மனித குலம் இப்படித்தானே நம்பி வந்தது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு இன்றும் அரபி மதரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்படும் “”தஷ்ரீக்குல் அஃப்லாக்” என்ற அரபி நூலிலும் “”பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது” என்று தவறாக எழுதப்பட்டுள்ளதை அப்படியே மூடத்தனமாக நம்பி ஒப்புவிக்கும் மவ்லவிகள் இன்றும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இதேபோல்தான் அறிவியல் முன்னேற்றம் ஏற்படாத அக்காலத்தில் பிறை வளர்ந்து தேய்வதையும், இறுதியில் கண் பார்வையிலிருந்து மறைந்து போவதையும் பார்த்தார்கள். இதையே இறுதி இறைத்தூதரிடம் கேட்டதாக 2:189 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. காலையில் உதித்து மாலையில் மறையும் முதல் பிறை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரிவதில்லை. இரண்டாம் பிறை கண்ணுக்குப் பெரும்பாலும் தெரிகிறது. இரண்டாம் பிறை மாலையில் மறைவதைப் பார்த்து அதையே முதல் பிறை என்று மூடத்தனமாக நம்பினார்கள். பிறை பிறந்து விட்டது; நாள் ஆரம்பிக்கிறது; அதுவே முதல் பிறை என அடுத்த நாளான மூன்றாம் நாளை முதல் நாளாக மூடத்தனமாக நம்பினார்கள். இந்த மூட நம்பிக்கை கி.மு.383-ல் பாபிலோனில் அறிமுகப்படுத்தப்பட்டுப் புழக்கத்தில் வந்ததாக 1953ல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் துல்லியக் கணக்கீட்டைக் கொண்ட ஒரு சரியான கேலண்டரைக் கண்டு பிடித்துத் தரும்படி அமைக்கப்பட்ட “”கேலண்டர் ரீஃபோர்ம் கமிட்டி” வெளியிட்ட கேலண்டர்களின் சரித்திரம் என்ற நூலின் 181-ம் பக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முழுமையான மூட நம்பிக்கையையே யூதர்களிடம் இருந்து காப்பி அடித்து யூதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளும் அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் பெருங்கொண்ட முஸ்லிம்களும் கடைபிடிக்கின்றனர். அறிவியல் முன்னேற்றம் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற மூடக் கொள்கையை அறிவியல் நன்நம்பிக்கையைக் கொண்டு தகர்த்தெறிந்தது போல், பூமி தட்டை சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற மூட நம்பிக்கையை, பூமி உருண்டை, பூமியே சூரியனைச் சுற்றி வருகிறது என்ற அறிவியல் நன்நம்பிக்கை கொண்டு தகர்த்தெறிந்தது போல், பூமியைச் சுற்றி வரும் சந்திரன் நேர்கோட்டிற்கு வந்து சங்கமம் (Conjunction)  ஆனவுடன் பழைய மாதம் முடிந்து புதிய மாதம் (N.M.) ஆரம்பித்து விட்டது; 97:5 இறைக் கட்டளைப்படி வட்டச் சுற்றில் நாள் முடிந்து நாள் ஆரம்பிக்கிறது என்ற நன்நம்பிக்கை நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூட நம்பிக்கையைத் தகர்த்து எறிந்துவிட்டது.

ஆயினும் நாத்திகர்கள் இன்றும் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனப் பிதற்றுவது போல், பூமி தட்டை சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்று பல மவ்லவிகள் இன்றும் பிதற்றுவது போல், காலையில் பிறந்து மாலையில் மறையும் 3ஆம் பிறையை முதல்பிறை என அனைத்துப் பிரிவு மவ்லவிகளும் அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் பெருங்கொண்ட முஸ்லிம்களும் பிதற்றி வருகிறார்கள். நாத்திகர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடில்லை.

எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக சந்திரனின் சுழற்சி மனிதக் கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது; அதனால் காலையில் உதித்து மாலையில் மறையும் இரண்டாம் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து அடுத்து வரும் மூன்றாம் நாளை முதல் நாளாகக் கணக்கிடக் கூறும் மூடத்தனமான உத்திரவை நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் இடவில்லை. அப்படி ஒரு ஆதாரபூர்வமான ஹதீஃதை இந்த மவ்லவிகளில் ஒருவர் கூட ஒருபோதும் காட்ட முடியாது. பார்த்து வையுங்கள் பார்க்காமல் வைக்காதீர்கள் என்று காணப்படும் ஹதீஃத்கள் அனைத்தும் 2:189, 36:39 இறைவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து சந்திரனின் சுழற்சி காரணமாக ஏற்படும் (மன்ஜில்களின்) நாள்களின் எண்ணிக்கையைக் காட்டும் வளர்ந்து தேயும் நிலையைப் பார்த்து அதாவது மாதம் முழுவதும் சந்திரனின் சுழற்சியைக் கண்காணித்துச் செயல்படச் சொல்லி இருக்கிறார்கள்.

அப்படிக் கணிக்கும் போது சிலரின் கணிப்பில் மாதம் 29-ல் முடிகிறது என்றும், வேறு சிலரின் கணிப்பில் 30-ல் முடிகிறது என்றும் கருத்து வேறுபாட்டில் ஏற்பட்டக் குழப்பத்தை அன்றிருந்த சூழ்நிலையில் தீர்க்கவும், அதேபோல் 2-ம் பிறை, 3-ம் பிறை என்ற சர்ச்சையைத் தீர்த்து வைக்கவும், உங்களின் கணிப்புக்கு (துல்லிய கணக்கீடு அல்ல) முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். சந்திரனின் சுழற்சியைப் பார்த்து முடிவு செய்யுங்கள் என்றே நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்.

இதுபோலவே பெரும் மூட நம்பிக்கைகளும், வழிகேடுகளுமான தக்லீத், தஸவ்வுஃப், மத்ஹபுகள், தரீக்காக்கள், மஸ்லக்கள், ஜாக், ததஜ போன்ற இயக்கங்கள், அமைப்புகள், கழகங்கள், இத்யாதி இத்யாதி அனைத்தும் வழிகேடுகள்தான் நரகிற்கு இட்டுச் செல்பவைதான் என்பதை நேரடி குர்ஆன் வசனங்கள், ஆதாரபூர்வமான ஹதீஃத்கள் கொண்டு மட்டுமே நிலைநாட்டப்படும். இந்த மூட நம்பிக்கைகள் அனைத்தும் நேர்வழி என்ற நன்நம்பிக்கை கொண்டு தகர்த்தெறியப்படும். இன்ஷா அல்லாஹ்.

மேலும் விபரங்கள் அறிய ஆண்கள், பெண்கள் அனைவரும் அவசியம் 21.04.1434(03.03.13) ஞாயிறு அன்று நடைபெறும் கருத்தரங்கில் பங்கு பெற்றுத் தெளிவு பெற அன்புடன் அழைக்கிறோம். கேள்விகளுக்கு குர்ஆன், ஹதீஃத் கொண்டு மட்டுமே பதில் அளிக்கப்படும்.

ஜமாஅத்துல் முஸ்லிமீன்

திருச்சி. அலைபேசி : 94429 14198

Previous post:

Next post: