“அமல்களின் சிறப்புகள்”

in 2002 நவம்பர்,பொதுவானவை

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் புத்தகம்

  ஆய்வுத் தொடர் : 20 – M.அப்துல் ஹமீது, திருச்சி.

“திருக்குர்ஆனின்  சிறப்புகள்” எனும் தலைப்பில் சில சூராக்களை (குறிப்பாக யாசீன் சூரா) சிலாகித்து பல விஷயங்களை ‘அமல்களின் சிறப்புகள்” புத்தகம் எழுதியிருக்கிறது. அவற்றில் மிகைப்படுத்தப்பட்டு பல விஷயங்கள் உள்ளன. அப்புத்தக ஆசிரியருக்கு மிகைப்படுத்தப்பட்டவைகள் உறுத்தலாக இருந்திருக்கும் போல் தெரிகிறது. எனவே எழுதுவதை எல்லாம் எழுதிவிட்டு ஒரு சில குறிப்பையும் தருகிறார். ஆசிரியரின் அக் குறிப்பாவது:

“இங்கு கூறப்பட்டவை பெரும்பாலும் ‘மளாஹிருல் ஹக்’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இந்த அறிவிப்புகளின் சில, சரியான ஆதாரமுள்ளவைதாமா என்பது பற்றி முஹத்திஸீன்களிடம் கருத்து வேற்றுமை இருக்கிறது”. ஓரளவேனும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளதால், அவைகளை நாம் விரிவாக ஆராய்வது தேவையற்றதாகிவிட்டது.

மார்க்க அமல்களை சக்திக்கு மீறி செய்வதை அல்லாஹ்வின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் தடுத்திருப்பது மட்டுமில்லாமல், அப்படி அமல் செய்பவர்கள் “என்னைச் சார்ந்தவர்கள் அல்ல’ என கடுமையாக எச்சரித்திருந்தும். ‘அமல்களின் சிறப்புகள்’ புத்தகத்தில் நாம் இதுவரை பார்த்தவைகளில் பெரும் பகுதியும், அப்புத்தகத்தில் இனியும் உள்ளவற்றின் பெரும்பகுதியும், மனிதர்களால் செய்யவே சாத்தியமில்லாத அமல்களை பல பெரியார்கள் செய்ததாகக் கதை அளந்து கொண்டு, அக்கதைகளை முன்னுதாரணங்களாக்கி, அப்படிப்பட்ட அதிகப்படியான அமல்களை செய்யும்படி மனிதர்களைத் தூண்டுகின்ற பணியைத்தான் அப்புத்தகம் திறம்பட செய்திருக்கிறது. அக்கதைகளில் சிலவற்றையேனும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் தவறு என்பதை நாம் மாதிரிக்காக நிரூபித்துவிட்டோம். எனவே, இனி வரக்கூடிய அதிக அமல்கள் புரியும் கதைகளை நாம் இனி ஆய்வு செய்யப்போவதில்லை.

இப்போது “ரமழானின் சிறப்புகள்’ எனும் தலைப்பில் அப்புத்தகத்திலுள்ள முன்னுரையைக் காண்போம்.

“ரமழான் மாதத்தில் போருக்குச் சென்ற பிரயாணத்தில் நோன்பை விட்டு விடலாம் என நபி(ஸல்) அவர்கள் பல தடவை அனுமதி அளித்திருந்தும்  கூட நோன்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனைச் சட்டப்பூர்வமாகத் தடை செய்யும் வரை நோன்பு நோற்றிருந்தார்கள் என்றும், அதில் ஏதேனும் இரகசியம்  இருக்க வேண்டாம் அல்லவா?

மேலே உள்ள வாசகங்கள் அப்புத்தகத்தில் உள்ளவையாகும்.

நபி(ஸல்) அவர்கள் நோன்பை விட்டு விட கூறியவுடனேயே நோன்பை விட்டு விடுவதுதானே, அல்லாஹ்வின் கட்டளைப்படி நபிக்கு வழிபடுவது ஆகும். சட்டப்பூர்வமாகத் தடை செய்யும் வரை நோன்பு நோற்றார்கள் என்றால் என்ன அர்த்தம்? நபி(ஸல்) அவர்கள் கூறியதை சட்டமாக்க எங்கே போய் அனுமதி பெற வேண்டும்? நபி(ஸல்) அவர்கள் கூறுவதுதான் சட்டம் என்பதை அறியாத அப்பாவியாக இருக்கிறார் இந்த ஷைகுல் ஹதீஸ்!

நபியின் கூற்று வேறு; சட்டம் வேறு என பிரித்துப் பார்க்க உண்மை முஸ்லிம் எவருக்காவது மனம் வருமா? அப்புத்தகம் இப்படி எழுதியிருப்பதன் காரணம். அப்புத்தகத்தின் அடுத்த பாராவிலேயே அதனை வெட்ட வெளிச்சமாக்கி விட்டார்கள்.

அடுத்த பாராவில் அவர்களது வாசகங்களுடன் ஒரு ஹதீஸை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த ஹதீஸை அப்படியே கீழே தருகிறோம். கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் ஒரு போருக்காகச் சென்றிருந்த பிரயாணத்தில் ஓரிடத்தில் தங்கினார்கள். வெயில் மிகக் கடுமையாக இருந்தது. ஏழ்கையின் காரணத்தால் அந்த வெயிலை விட்டுத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் போதுமான துணிகளும் அவர்களிடம் இல்லை. பெரும்பாலான ஸஹாபாக்கள் தங்களின் கைகளினாலேயே சூரியனின் வெப்பத்தைத் தங்களை விட்டுத் தடுத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையிலும் அதிகமான பேர் நோன்புடையவர்களாகவே இருந்தனர். இதனால் சிலர் நிற்க முடியாமல் மயக்கமுற்றுக் கீழே விழுந்தனர். ஸஹாபாக்களில் ஒரு கூட்டத்தினர் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவர்களாக இருந்து வந்திருக்கின்றனர். ஆதாரம்: முஸ்லிம்.

போருக்குச் சென்றாலும், அதற்கான பயணத்தில் தாங்க முடியாத கஷ்டம் இருந்தாலும் நோன்பை விட்டு விடக்கூடாது என்பதைத்தான் அவர்களாகவே வெளியிட்டிருக்கின்ற இந்த ஹதீஸில் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். முஸ்லிமுள்ள அந்த ஹதீஸ் தெரியப்படுத்தும் உண்மை நிலையை இப்போது கவனிப்போம்.

“மக்கா வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டின் ரமழான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அங்கு புறப்பட்டனர். சூராவுல் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு இருந்தனர். பின்னர், நபி(ஸல்) அவர்கள், ஒரு கோப்பையில் நீர் கொண்டுவரச் செய்து, மக்கள் அனைவரும்ட பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்களும் அதனைப் பார்த்த பின்னர், அந்த நீரை பருகினர். இதற்குப் பிறகு, மக்களில் சிலர் (நோன்பை விட்டு விடாமல்) நோன்போடு இருப்பதாக நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது.  அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர்.

அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி), நூல்:முஸ்லிம், திர்மிதீ

தாம் நோன்பை விட்டு விட்ட பின், நோன்பு வைத்தவர்களை பாவிகள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதை மறைத்து விட்டு, கஷ்டப்பட்டாலும், பயணத்திலும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறும் ‘அமல்களின் சிறப்புகள்” ஆசிரியர், திருகுர்துஆனுக்கும், நபிவழிக்கும் மாறு செய்யும் அமல்களைத்தான் மக்களிடம்ட பிரபல்யப்படுத்தி வருகிறார் என்பது தெளிவாகவில்லையா?

“ஸஹாபாக்களில் ஒரு கூட்டத்தினர் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவர்களாக இருந்து வந்திருக்கின்றனர்” என்றும் ஆதாரம் முஸ்லிம் என்று பொய்யான தகவலை தந்துள்ளார் அமல்களின் சிறப்புகள் ஆசிரியர். ஒரே ஒரு நபித்தோழர் அப்படி ஆண்டு முழுவதும் நோன்பு நோற்க முற்பட்டபோது, அவரை அழைத்து நபி(ஸல்) அவர்கள் கண்டித்து, அவ்வாறு ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பதைத் தடுத்தார்கள் என்பதுதான் ஆதாரபூர்வமான ஹதீஸ்.

தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள் இப்போதேனும் இவரை அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்களா?

அப்படி நோன்பு வைப்பதில் ஏதேனும் இரகசியம் இருக்கவேண்டுமல்லவா என முந்தய பாராவில் வினா எழுப்பும் அவர், தெள்ளத் தெளிவான மார்க்கத்தில் ரகசியம் எனக் கூறி குழப்பத்தை உண்டுபண்ண பார்ப்பது தெரியவில்லையா?

நோன்பு நோற்பதன் சிறப்புகள்” எனும் குறுந்தலைப்பிலுள்ள ரமழான் மாதத்தின் சிறப்பு எனும் ஹதீஸ் எண் 1ல் அப்புத்தகம் குறிப்பிட்டிருப்பதை கவனியுங்கள்.

‘யஹ்யா பர்மகீ(ரஹ்) என்பவர்கள், ஹஸ்ரத் சுப்யான் தவ்ரீ(ரஹ்) அவர்களுக்காக, அவர்களின் குடும்பத்திற்காக ஒவ்வொரு மாதமும் 1000 திர்ஹங்கள் செலவு செய்து வந்தார்கள். சுப்யான் தவ்ரீ(ரஹ்) அவர்கள் ஸஜ்தாவிலிருந்து கொண்டு ‘யா அல்லாஹ்! யஹ்யா அவர்கள் என்னுடைய உலக காரியங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது போல, நீ உன் கருணையால், அவருடைய மறுவுலகக் காரியங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வாராக! என்று துஆ செய்து கொண்டிருந்தார்கள். யஹ்யா(ரஹ்) அவர்கள் இறந்தபின், அவர்களைக் கனவில் கண்ட சிலர், ‘என்ன நிகழ்ந்தது?” என்று அவர்களிடம் கேட்டதற்கு, ‘சுப்யான் தவ்ரீ(ரஹ்) அவர்களுடைய துஆவின் பொருட்டால் மன்னிப்புக் கிடைத்தது” என்று கூறினார்கள்.

இந்த சம்பவத்தைப் படிக்கும் போதோ அல்லது பிறர் படித்துக் கேட்கும்போதோ, ‘சுப்ஹானல்லாஹ்! மாஷா அல்லாஹ்!’ என்றெல்லாம் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறதல்லவா? ஆனால் இந்தக் கதையில் எந்த அளவுக்கு ‘ரீல்’ விடப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.

1. சுப்யான் தவ்ரீ(ரஹ்) அவர்கள் ஸஜ்தாவில் இருந்து கொண்டு, ‘யா அல்லாஹ்! யஹ்யா அவர்கள் என்னுடைய உலக காரியங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது போல, நீ உன் கருணையால் அவருடைய மறுவுலகக் காரியங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வாயாக என்று துஆ செய்து கொண்டிருந்தார்கள் எனக் குறிப்பிடும் அப்புத்தக ஆசிரியருக்கு சுப்யான் தவ்ரீ அவர்கள் ஸஜ்தாவில் செய்த துஆ எப்படித் தெரிய வந்தது? அவர் காலத்தில் இவர் இல்லையே. வேறு யாராவது சொல்லி இவர் தெரிந்து கொண்டார் என்றால், இவருக்கு சொன்னவர்கள் யார்? எப்படியிருந்தாலும், சுப்யான் தவ்ரீயும் அல்லாஹ்வின் கட்டளையை புறக்கணிப்பவர்தான் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார் அமல்களின் சிறப்புகள் ஆசிரியர், அப்படி என்றால், சுப்யானின் துஆவை இவர்கள் எப்போது கேட்டிருக்க முடியும்? சுப்யான் அவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் சப்தமாக துஆ கேட்டிருந்தால்தான். இவர்களால் அந்த துஆவை வார்த்தை பிசகாமல் கேட்டிருக்க முடியும் அப்படி சுப்யான் அவர்கள் சப்தமாக துஆ கேட்டிருந்தால், அவர் திருகுர்ஆனை மீறியவர் ஆகிறார்; அதன் மூலம் அல்லாஹ்வின் கட்டளையைக் கண்டு கொள்ளாதவரும் ஆகிறார். ஏனென்றால், அடியான் அல்லாஹ்விடம் எப்படி துஆ கேட்கவேண்டும் என திருகுர்ஆனின் 7வது அத்தியாயத்தின் 55வது வசனத்தில் அல்லாஹ்வே கட்டளையிட்டிருப்பதைப் பாருங்கள்.

“முஃமின்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை” அல்குர்ஆன் : 7:55.

பணிவாகவும் அந்தரங்கமாகவும் அல்லாஹ்விடம் துஆ கேட்கவேண்டும் என்பது அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பு; அந்த வரம்பை மிறிவிட்டவர்களை அல்லாஹ் நேசிக்கவும் மாட்டானாம்.

2. அல்லாஹ் நேசிக்காத நிலையில், சுப்யான் அவர்களின் துஆ கபூல் ஆகியும் இருக்காதல்லவா? அப்படியிருக்கும்போது, சுப்யானின் துஆவால் மன்னிப்புக் கிடைத்ததாக யஹ்யா(ரஹ்) அவர்கள் எப்படி கூறியிருக்க முடியும்?

3. கனவில் யஹ்யா சொன்னதாக அப்புத்தகம் கூறுகிறதே கனவில் காண்பதெல்லாம் மார்க்கமாகி விடுமா? அதுவும் குறிப்பிட்ட ஒரு நபருடைய கனவில் யஹ்யா அப்படிச் சொல்லவில்லையாம். யஹ்யாவை கனவில் கண்ட சிலரிடம்ட, யஹ்யா அப்படிக் கூறினாராம்? இது எப்படி இருக்கு? கனவில் யஹ்யாவைக் கண்டவர் ஒருவரல்ல, இருவரல்ல, மூவரும் அல்ல; சிலராம். அத்தனை பேருமே கனவில் கூட சொல்லி வைத்தாற் போல, எழுத்து அச்சு மாறாமல், “என்ன நிகழ்ந்தது?” என்ற கேள்வியைக் கேட்டார்களாம். இது எப்படி சாத்தியமாகும்? அது மட்டுமா? அத்தனை பேரிடமும் யஹ்யா கூறியதும் ஒரே மாதிரியான வாசகங்கள்தான் அதாவது “சுப்யான் தவ்ரீ(ரஹ்) அவர்களுடைய துஆவின் பொருட்டால் மன்னிப்புக் கிடைத்தது” என்று

4. மவுத்தாய் போய்விட்ட யஹ்யா தனக்கு பாவமன்னிப்புக் கிடைத்ததை எப்படி அறிந்தார்?

5. மறுமை நாளில்தான் எவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதை, தீர்ப்பு நாளின் அதிபதியாகிய அல்லாஹ்(ஜல்) அறிவிப்பான் என்பது உண்மையாக இருக்கும்பொழுது, யஹ்யாவுக்கு மட்டும் தீர்ப்பு நாள் முன்னமே வந்து விட்டதா? (அஸ்தஃபிருல்லாஹ்) அல்லாஹ்வின் அதிகாரத்தை தமது கையில் எடுத்துக் கொள்ள முடியும் என அமல்களின் சிறப்பு ஆசிரியர் தப்பர்த்தம் செய்து கொண்டு, எந்த வித அச்சமும் இல்லாமல் சர்வசாதாரணமாக இப்படி ஒரு தீர்ப்பைத் தருகிறாரே!

சரி! அடுத்த விஷயத்திற்கு வருவோம். “நோன்பு எனக்காக மட்டுமே நோற்கப்படுவதால்” நோன்பிற்குரிய கூலியை நானே வழங்குகிறேன்” என அல்லாஹ்(ஜல்) கூறியிருப்பதை, அப்புத்தகம் விளக்கு(விமர்சிப்ப)தைப் பாருங்கள். “நானே கூலி வழங்குகிறேன்” என்றால் அந்த நோன்பிற்கு நானே கூலியாகி, என்னையே நான் கொடுத்து விடுகிறேன் என்பது அதன் பொருளாகும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

அதாவது, “நானே ஆட்டை அறுக்கப் போகிறேன்” என்டறு ஒருவர் சொன்னால், இவர்கள் பாஷையில் அதற்கு என்ன பொருள் தெரியுமா? “நானே ஆடாகி, என்னையே நான் அறுக்கப் போகிறேன்” என்று பொருள் ஆகுமாம். அதாவது நோன்பாளி தாம் வைத்த நோன்பிற்காக எதிர்பார்ப்பது கூலி(அதாவது சுவர்க்கத்தை) ஆனால் கிடைப்பதோ வேறொன்று. அது போல அறுபடவேண்டியது ஆடு. ஆனால் அறுக்கப்படுவதோ வேறொன்று.

அபத்தம்! அபத்தம்!

நோன்பாளிக்கு சுவர்க்கம் கிடைப்பதற்கு பதிலாக அல்லாஹ்வே கிடைத்துவிட்டால், அதைவிடப் பெரிய பாக்கியம் என்ன இருக்கிறது? அவனிடமிருந்து சுவர்க்கத்தை அடைந்து கொள்ளலாம் அல்லவா? என சில தப்லீக் மேதாவிகள் மேதாவிலாசம் பேசுவார்கள். நோன்பாளிக்கு சுவர்க்கத்தை வழங்குவதாக அல்லாஹ் கூறிவிட்டபின், அந்த சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டியதுதானே, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடித்த கதையாக, முதலில் அல்லாஹ் கிடைக்க வேண்டுமாம். அந்த அல்லாஹ்விடமிருந்து சுவர்க்கத்தை அப்புறம் அடைவார்களாம்.

சரி! ஒரு வாதத்திற்கு இதையும் அனுமதிப்போம். அல்லாஹ் தானே கூலியாகி அந்த நோன்பாளிக்கு தன்னைக் கொடுத்துவிட்டால், மற்ற நோன்பாளிகளெல்லாம் என்ன செய்வார்களாம்? அல்லாஹ்வும் கிடைக்க மாட்டான். அல்லாஹ்விடமுள்ள சுவர்க்கமும் கிடைக்காது? அல்லது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அல்லாஹ் கூலியாகக் கிடைப்பானா? (அஸ்தஃபிருல்லாஹ்) இப்படி எல்லாம் சொன்னாலும் சொல்வார்கள். ஆச்சரியப்படுவதற்கில்லை. தப்லீக் ஜமாஅத் சகோதரர்களே! ஒழுங்காக குர்ஆன், ஹதீஸ்களை படித்து முன்னுக்கு வரும் வழியைப் பாருங்கள். கண்டவர்களின் பிதற்றல் எல்லாம் நம்மை முன்னுக்குக் கொண்டு வந்து விடாது என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

அவர்களின் அடுத்த தமாஷைப் பாருங்கள்.

“நானே கூலி வழங்குகிறேன் என்றால் நானே கூலியாகி என்னையே நான் கொடுத்து விடுகிறேன் என்பது அதன் பொருளாகும். காதலனே கூலியாகக் கிடைத்து விடுவதைவிட உயர்ந்த பிரதிபலன் வேறு எதுவாக இருக்கமுடியும்? என வினா எழுப்புகிறார் அமல்களின் சிறப்புகள் ஆசிரியர்!

காதலன் என்றால் அவனுக்கு காதல் தேவைப்படும் அல்லவா? எந்த தேவையும் இல்லாத அல்லாஹ்(ஜல்)வுக்கு காதலை உவமானமாகக் கூறி, இறையச்சத்தையும், இறை வெகுமதியையும் கீழ்தரமாக கொச்சைப்படுத்தும் இழி செயலை அப்புத்தகம் கணக்கிலடங்கா எண்ணற்ற இடங்களில் செய்து திருப்திப்பட்டுக் கொள்கிறது. மட்டரகமான ரசனை கொண்டவர்கள்தான் இப்படிப்பட்ட வெளிப்பாடுகளைத் தெரிவிக்க முடியும். தடித்த அச்சு எழுத்துக்களில் பாரசீக கவிதை, உருது கவிதை என்றெல்லாம் புகழ் கூறி மட்டமான காதல் பாடல்களை இந்த புத்தகத்தில் தாராளமாகக் கையாளப்பட்டிருக்கிறது. இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Previous post:

Next post: