“குலா” மூலம் மணவிலக்குப் பெற்ற பெண்

in 2013 மே

 “குலா”  மூலம் மணவிலக்குப் பெற்ற பெண் மீண்டும்  அதே கணவனை மணப்பது கூடுமா?

ஆத்தூர்.G.S சுல்தான்ஜி, காமராஜனார் சாலை, ஆத்தூர் (சேலம்) 9994112503

முதலில் “”குலா” என்பதற்கான விளக்கத்தை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். கணவன், மனைவியருக்கிடையே ஏற்பட்டுவிட்ட பிணக்கைப் போக்கி சமாதானம் செய்து வைக்க முற்படும் இரு வீட்டார் சார்பான நடுவர்கள் சமாதானம் செய்து வைக்க முயலும் போது கணவன் சமாதானத்துக்கு முன்வந்த போதும் மனைவி அதை ஏற்காத நிலையில் கணவன்-மனைவி இருவரும் அல்லாஹ்வின் வரம்புக்குள் நிலைத் திருக்க மாட்டார்கள் என்று நடுவர்களும் அஞ்சும் போது, மனைவியானவர் கணவனிடமிருந்து பெற்றதை திரும்பக் கணவனிடமே கொடுக்கச் செய்து பிரித்து விடுவதில் தவறில்லை என்பதை குர்ஆன் 2:229 மூலம் அறிய முடிகிறது. இப்படிக் கணவனிடமிருந்து பெற்றதை மனைவி திரும்பக் கணவனிடமே கொடுத்துத் திருமண ஒப்பந்தத்தை தானாகவே முறித்துக் கொள்ள முன் வருவது தான் குலா என்பதாகும்.

அல்குர்உ, குல்உ, குலா என்று கூறப்படும் சொல்லுக்கு அகராதியில் கழற்றிவிடுதல் என்பது பொருளாகும். மனைவியிடமிருந்து ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு அவளிடமிருந்து பிரிந்து விடுவதற்குக் கணவன் சம்மதம் தெரிவிப்பதையே வழக்கத்தில் “”குலா” என்பர்.

கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி கணவனிடமிருந்து பெற்ற மஹர் தொகையை திரும்பக் கொடுத்தோ அல்லது மஹராக கொடுக்க ஒப்புக் கொண்டதை விட்டுக் கொடுத்தோ, மேலும் புதிதாக ஒரு தொகையையோ, பொருளையோ கொடுக்க சம்மதித்து பிரிவினையைக் கோருவதே “”குலா” என்பதாகும்.

“”குலா” என்பதும் தலாக் என்பதும் ஒன்றே என்று கூறுவோரும் உண்டு. தலாக்தான் என்றாலும் அது திரும்ப அழைத்துக் கொள்வதற்கேற்ற ரஜயீ தலாக் என்று கூறுவோரும் உண்டு. முதிர்ந்த (பாயின்ல்) தலாக் என்று கூறுவோரும் உண்டு.

“”குலா” என்பது வெறும் பிரிவினையே தவிர பூரண மணவிலக்கு ஆகாது என்றும் எனவே குலா செய்யப்பட்டப் பெண்ணை மீண்டும் மண முடிக்க விரும்பினால், முத்தலாக் கூறி விவாக விலக்கு செய்யப்பட்ட பெண் மற்றொரு ஆணை மணந்து அவனும் மணவிலக்கு அளித்திருக்க வேண்டும் என்பது போன்ற விதி “”குலா”வுக்கு பொருந்தாது என்று கூறுவோரும் உண்டு. இதுதான் சரி.

ஆட்சியாளர்கள், அல்லது நீதிபதியின் அனுமதி இல்லாமலேயே “குல்உ’ நிகழ்வதை உமர்(ரழி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்றும், மனைவியின் பின்னால் கட்டும் கயிற்றைத் தவிர அவளின் அனைத்துச் சொத்துக்களுக்கும் ஈடாக “குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான்(ரழி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஸாபித் பின் கைஸ்பின் ­ம்மாஸ்(ரழி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “”அல்லாஹ்வின் தூதரே!” என் கணவர் ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால் நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலை செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “”ஸாபித் உனக்கு மணக்கொடையாக அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அவர் ஆம் தந்து விடுகிறேன்’ என்று கூறினார். ஸாபித் அவர்களிடம் தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவளை ஒருமுறை தலாக் சொல்லி விடுங்கள்”! என்று கூறினார்கள். புகாரி ஹதீஸ் எண்.5273.

எனவே மேற்கண்ட ஹதீஃதில் இருந்து கணவனுடன் இனியும் சேர்ந்து வாழ முடியாது என்னும் போது கணவனிடமிருந்து மஹராக பெற்றதைத் திரும்பக் கொடுத்து “”குலா” என்னும் மண விலக்கைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும், இப்படி மண விலக்குப் பெற்ற பெண் பழைய கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் அந்த முன்னால் கணவனும் விரும்பினால் மீண்டும் மஹர் கொடுத்து திருமணம் செய்து கொள்வது கூடும் என்றும் இதற்கு இஸ்லாத்தில் தடை இல்லை என்றும் அறிய முடிகிறதுதானே? மாற்றுக் கருத்து இருந்தால் எழுத்து மூலம் தெரிவிக்க கோருகிறோம்.

Previous post:

Next post: