ஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணானது – ஹராம்!

in 2013 மே

ஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு
முற்றிலும் முரணானது – ஹராம்!
                               அபூ அப்தில்லாஹ்

இறை நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு (தூதரே) கூறும் :
அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங்களைப் பேணட்டும். அதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்பவற்றை இறைவன் மிக அறிந்தவன். (அந்நூர் : 24:30)

இறை நம்பிக்கையுள்ள பெண்களிடம் (தூதரே) கூறும் :
அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங்களைப் பேணட்டும். தங்களின் அழகு அலங்காரத்தை அதிலிருந்து வெளிப்படக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டக் கூடாது. அவர்கள் தங்களின் முந்தானைகளால் தங்களின் மார்புகளையும் மறைத்துக் கொள் ளட்டும்……………………………………………………..
……தாங்கள் மறைத்து வைக்க வேண்டிய அழகு அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்களின் கால்களை (தரையில்) தட்டி நடக்க வேண்டாம். (அந்நூர் : 24:31)

இந்த இரண்டு வசனங்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் ஆண்களும், பெண்களும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் திட்டமாகக் கூறுகின்றன. அந்நியப் பெண்களை விட்டு ஆண்களும், அந்நிய ஆண்களை விட்டுப் பெண்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்தி அவர் களைப் பார்ப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இதில் ஆண் பெண் என்ற பேதமில்லை.

அதே சமயம் ஆணுடைய உடல் அமைப்பிலும், பெண்ணுடைய உடல் அமைப்பிலும் பெரும் வேறுபாட்டை இறைவன் வைத்துள்ளான். ஒரு பெண்ணுடைய உடலைப் பார்த்து ஆண் கிளர்ச்சியடைவது போல், ஒரு ஆணுடைய உடலைப் பார்த்துப் பெண் கிளர்ச்சியடைவதில்லை. பெருங்கொண்ட விளம்பரங்களில் ஆண்கள் சம்பந்தப்பட்ட பொருள்களுக்கும் ஏன் பெண்கள் படத்தைப் போடுகிறார்கள். விளம்பரங்கள் அனைத்திலும் பெண்களின் கவர்ச்சிப் படங்கள் நிறைந்திருப்பதற்குக் காரணம் என்ன? ஆண்களும் பெண்களும் சரிசமமானவர்கள்; ஆண்களைப் போல் பெண்கள் உடைகள் அணிந்து கவர்ச்சிப் பெண்ணாகக் காட்சித் தரவேண்டும் என்று கூறுபவர்கள், அந்நியப் பெண்களை முறை தவறி அனுபவிக்க விரும்பும் காமுகர்களாக மட்டுமே இருக்க முடியும். மற்றபடி நியாயவான்களாக இருக்க முடியாது.

அன்றாட ஊடகச் செய்திகளில் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்; கற்பழிக்கப்படுகிறார்கள்; கற்பழித்துக் கொலை செய்யப்படுகிறார்கள் என்று செய்திகள் காணப் படுகின்றனவா? அல்லது அதற்கு மாறாக ஆண்கள் பற்றி இப்படிப்பட்டச் செய்திகள் வருகின்றனவா? யாருடைய இன உறுப்பு வன் புணர்ச்சிக்கும், கற்பிழப்பிற்கும் சாதகமாக இருக்கிறது? அதன்பின் கருவுற்றுக் குழந்தைச் சுமையை பெண் சுமக்கிறாளா? ஆண் சுமக்கிறானா? இந்த நிலையில் ஆணும் பெண்ணும் அனைத்து நிலைகளிலும் சரிசமமானவர்கள் என்று கூறுவோர் எப்படிப்பட்ட அறிவீனர்களாக இருப்பார்கள் என்பதை வாசகர்களே முடிவு செய்யுங்கள்.

இதோ மனித குலத்தையும், சர்வப் படைப்புகளையும் படைத்த முக்காலமும் அறிந்த சர்வ சக்தனான இணை, துணை, இடைத்தரகர் இல்லாத ஓரிறைவன் தனது வழிகாட்டல் நூல்களிலேயே இறுதி நெறி நூலான அல்குர்ஆனின் பகரா: 2:228 இறைவாக்கில் கூறுகிறான் காது கொடுத்து கேளுங்கள்.

“”……….. ஆண்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகளைப் போல், பெண்களுக்கும் அதே உரிமைகள் ஆண்களிடம் உண்டு; ஆயினும் ஆண்களுக்கு ஒரு படி உயர்வுண்டு. (2:228)

சிலரை விடச் சிலரை அல்லாஹ் மேன்மை யாக்கியுள்ளான். ஆண்கள் தங்கள் செல்வங்களிலிருந்து பெண்களுக்குச் செலவிடுவதால் அவர்களே பெண்களை நிர்வகிப்பவர்கள்………………(அன்னிசா : 4:34)

பெண்களை ஆண்கள் தங்கள் அடிமைகளைப் போலவோ, போகப் பொருளாகவோ எண்ணிச் செயல்படக்கூடாது. மனைவிமார்கள், கணவன்மார்களிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த அமானிதத்தைப் பேணிப் பாதுகாக்காதவன் தண்டிக்கப்படுவான் என்பதற்கு நெறிநூல் குர்ஆனிலும் நபி நடைமுறைகள் ஹதீஃதிலும் பல ஆதாரங்களைப் பார்க்க முடிகிறது. ஆக ஆண்களைப் போல் பெண்களும் ஆடைகள் அணிவது தவறு; ஆண்களுக்கென்று தனி ஆடைகள் உண்டு; பெண்களுக்கென்று தனி ஆடைகள் உண்டு. பெண்கள் ஆண்களைச் சுண்டி இழுத்து அவர்களைக் காமக் கிலுகிலுப்பில் விழச் செய்யும் வகையில் தங்களின் கவர்ச்சியளிக்கும் உடலுறுப்புகள் தெரியும் வகையில் ஆடையணிவது குற்றச் செயலேயாகும்.

இப்போது நமது சிந்தனைக்குரியது, “”தங்களின் அழகு அலங்காரத்திலிருந்து வெளிப்படக் கூடியதைத் தவிர” என்று குறிப்பிடும் பகுதி எது என்பதாகும். மவ்லவிகள் அவை கால்களும், முன் கைகளும் என்கிறார்கள். பெண்களின் கீழாடைகள் பெரும்பாலும் கால்களை மறைத்தே அணிய வேண்டும் என்பது இறுதித் தூதரின் வழிகாட்டல். முன்கைகளும் அழகு அலங்காரத்திற்கு உட்பட்டது என்று சொல்ல முடியுமா? அப்படியே காலுறை, கையுறை அணிந்து கொண்டாலும் பாதிப்பில்லை, மறுப்புமில்லை. சத்தம் வரும் கொலுசுகள் அணிந்து கொண்டு நடப்பதன் மூலம் ஆண்களின் கவ னத்தை ஈர்ப்பதற்கு 24:31 இறைவாக்குத் தடை விதிக்கிறது.

ஆக கைகள், கால்களை அழகு அலங்காரத்திற்கு உட்பட்டதாக 24:31 இறைவாக்குக் கூறவில்லை என்பதை எளிதாக விளங்க முடிகிறது. அப்படியானால் பெண்களின் அழகு அலங்கார ரத்திற்கு உட்பட்ட பகுதி எது? நிச்சயமாக அது பெண்களின் முகங்கள் என்பதே சரியாகும். ஏன் பெண்களின் முகத்தில் அழகிருந்தாலும் அது மறைக்கப்படாமல் வெளியில் தெரிய வேண்டும்? ஆம்! அதில் தான் பெண்களின் பாதுகாப்பும், ஒழுக்கம் பேணுதலும் இருக்கிறது.

இரண்டு ஆடைகளால் மறைக்கப்பட்டிருக்கும் மார்பகத்தை மூன்றாவதாக முந்தானை கொண்டும் மறைக்க ஆணையிட்ட அல்லாஹ் அழகு நிறைந்த முகத்தை மறைக்கும்படி கட்டளையிடவில்லையே ஏன் என்று சிந்திக்க வேண்டாமா? அப்படிச் சிந்தித்தால் அதன் உண்மை விளங்கும். அதாவது பெண்ணின் அழகைக் காட்டும் முகம் திறந்திருப்பதால் ஏற்படும் கெடுதிகளை விட அந்த முகம் மறைக்கப்படுவதால் ஏற்படும் கெடுதிகள் பல மடங்காகும் என்பதை அறிந்துள்ள அல்லாஹ் முகத்தை மறைக்க ஆணையிடவில்லை என்பதை விளங்க முடியும். ஆக 24:31 இறை வாக்குக் கூறும் அழகு அலங்காரத்திலிருந்து வெளியே தெரிய வேண்டியது பெண்களின் முகம்தான் என்பது உறுதியாகத் தெரிகிறது.

அடுத்து அஹ்சாப் : 33:59 இறைவாக்குக் கூறும்: தூதரே! நீர் உம் மனைவியருக்கும், உம் பெண்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்களின் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும். அவர்கள் அறியப்பட்டு நோவினை செய்யப்படாதிருக்க இது உகந்த வழியாகும். (33:59) என்ற வசனத்தைக் காட்டி முகத்தை மூடுவதை நியாயப்படுத்துகின்றனர். இதுவும் தவறான விளக்கமாகும். தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கட்டளையிடும் அல்லாஹ், மார்கத்தை மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டிருப்பது போல், முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டிருக்கலாமே! ஏன் கட்டளையிடவில்லை? பெண் அடையாளம் தெரியாமல் முகத்தை மறைப்பது பெரும் கேடுகளுக்கு வழி வகுக்கும் என்பதாலேயே இறைவன் முகத்தை மூட அனுமதிக்கவில்லை. அதற்கு மாறாக இன்று வடநாட்டு சேட்டுப் பெண்களிடம் காணப்படு வது போல், முகம் தெரிந்த நிலையில், தலை முந்தானையைத் தாழ்த்திக் கொள்ள மட்டுமே கட்டளையிடுகிறான். மேலும் “”அவர்கள் அறியப்பட்டு நோவினை செய்யப்படாதிருக்க இது உகந்த வழியாகும்” என்று கூறும் பகுதி எப்போது சாத்தியம்? முகம் மறைக்கப்பட்டிருந்தால் அவர்கள் அறியப்பட முடியுமா? சிந்தியுங்கள்.

ஒரு பிரயாணத்தில் தனித்து விடப்பட்ட நிலையில் தன் அருகே ஒரு ஆணைப் பார்த்து அச்ச, வெட்க உணர்வோடு ஆயிஷா(ரழி) தன் முகத்தை மறைத்துக் கொண்டதும், வீட்டிலிருக்கும் பெண்கள் திரைக்கப்பால் இருந்தே அந்நிய ஆண்களுடன் தேவையின் நிமித்தம் பேச வேண்டும் என்பதும் முகத்தை மறைப்பதற்கு ஆதாரமாகாது. அதற்கு மாறாக நபி(ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிக்குத் தொழ வரும் பெண்கள் ஆள் அடையாளம் தெரியுமாறு முகம் தெரியும் நிலையில் தங்களின் இதர பாகங்களைத் தங்களின் ஆடைகளால் மறைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்ததாகப் பல ஹதீஃத்கள் காணப்படுகின்றன.

ஆக வெளியில் நடமாடும் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் தங்கள் முகத்தை மறைப்பதற்கு இந்த மவ்லவிகள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் குர்ஆன், ஹதீஃத் வெளிச்சத்தில் ஏற்க முடியாதவை என்பது தெளிவாகிறது. மேலும் பெண்களின் அழகு அவர்களின் முகத்தில்தான் அதிகம் வெளிப்படுகிறது. அதனால்தான் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று சொல்கிறோம் என்று இந்த மவ்லவிகள் கூறுவது குர்ஆன், ஹதீஃத் போதனைகளுக்கு முரணானதே. குர்ஆன் 24:31 இறைவாக்கு “”அழகலங்காரத்திலிருந்து வெளிப்படக் கூடியது” என்று கூறுவதிலிருந்தே முகமும் அழகலங்காரத்திற்கு உட்பட்டது என்று திட்டமாகத் தெரிந்த நிலையில் மவ்லவிகள் அதையே காரணமாகக் கூறி முகத்தை ஆள் அடையாளம் தெரியாமல் மறைக்கக் கூறுவது தவறாகும்.

வெளியில் பெண்கள் முகம் மறைத்து நடமாடுவதால் ஏற்படும் விபரீதங்கள்!

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஆள் அடையாளம் தெரியாமல் உறை போட்டது போல் முகம் உட்பட அனைத்துப் பகுதிகளையும் மறைத்துக் கொண்டு நடமாடுவதால் ஏற்படும் விபரீதங்களைச் சொல்லி மாளாது. முதலில் அந்தப் பெண்ணின் வழி கேட்டிற்கே அதுவே வழிவகுக்கும். பொதுவாக மனித சுபாவம் அல்லாஹ்வுக்கு அஞ்சாவிட்டாலும், வெட்கப்படாவிட்டாலும் மனிதர்களுக்கு அஞ்சும், வெட்கப்படும் சுபாவமே மிகைக்கும். 3ம், 7ம், 40ம் பாத்திஹாக்கள் பித்அத்-வழிகேடு என்று தெளிவாக அறிந்துள்ள முஸ்லிமகளே நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்களே என்று அஞ்சி இந்தப் பித்அத்களை தங்கள் வீடுகளில் அரங்கேற்றுவதைப் பார்க்கத்தானே செய்கிறோம்.

ஒரு பெண் தன்னை இன்னார் என்று அடையாளம் தெரியும் விதமாக முகம் திறந்து செல்லும்போது அவளுக்கிருக்கும் அச்ச, நாண உணர்வு ஆள் அடையாளம் தெரியாமல் உறை போட்டது போல் முகம் மறைத்துச் செல்லும் போது இருக்க வாய்ப்பில்லை. சில பெண்கள் முகம் மறைத்தவர்களாக மணிக்கணக்கில் யாருடனோ அலைப்பேசியில் பேசிக் கொண்டே நடந்து செல்வதைப் பார்க்கத்தானே செய்கிறோம். அந்நிய ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டு வீட்டை விட்டு ஒடிப்போகும் பல பெண்களின் செய்திகள் தினசரி வந்து கொண்டு தானே இருக்கின்றன. படிப்பினை பெற வேண்டாமா?

ஒருவரின் மனைவியோ, மகளோ உறை போட்டவளாக அந்நிய ஆணுடன் நடந்து செல்லும்போது, கணவனோ, தகப்பனோ அவளை அடையாளம் காண முடியுமா? ஒரு பெண் இன்று ஒரு ஆணுடனும், நாளை இன்னொரு ஆணுடனும், இப்படி பல ஆண்களுடன் சுற்றித் திரிவதை தகப்பனோ, சகோதரனோ, பார்ப்பவர்களோ அடையாளம் காண முடியுமா? முகம் மூடிச் செல்வதால் ஏற்படும் விபரீதங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஒரு பெண் அடையாளம் தெரியாமல் முகத்தை மறைத்துக் கொண்டு வேறொரு பெண் போல் நடித்துப் பல தவறுகளைச் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறதா இல்லையா? வெள்ளித்திரை, சின்னத் திரைகளில் அரை நிர்வாணமாக, முக்கால் நிர்வாண மாக நடித்து அசத்தும் நடிகைகள், விபச்சாரத்தில் சிக்கி நீதிமன்றம் வரும்போது முஸ்லிம் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் உறையிட்டுக் கொள்வதுபோல், இந்த நடிகைகள் தங்களை உறையிட்டு மறைத்துக் கொண்டு வருவது இன்று நாகரீகமாகி (Fashion) விட்டதையும் காணத்தானே செய்கிறோம்.

அல்லாஹ்வின் 24:31 கட்டளைக்கு முரணாகப் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் உறை போட்டது போல் மறைத்துக் கொள்வதால் பெண்ணினத்திற்கு ஏற்படும் பெருங்கேடுகளைப் பார்த்தோம். அது மட்டுமல்ல; ஆண்களும் பல தீமைகளைச் செய்ய வழிவகுக்கிறது. ஓர் ஆண் உறை போட்டது போல் தன்னை மறைத்துக் கொண்டு பல தீய செயல்களைச் செய்ய அது வழி வகுக்கிறது. திருடர்கள், கொள்ளையர்கள், கொலைகாரர்கள் மக்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, தப்பிச் செல்ல அது பெரிதும் உதவுகிறது. இதன் காரண மாக முகம் மறைத்துச் செல்லும் கண்ணியமான பெண்களும், காவல்துறையினரால், இன்னும் பல அதிகாரிகளால் சோதனைக்குள்ளாக்கப் பட்டு அவமானப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.

இன்றைய நவீன யுகத்தில் கள்ளக் காதலையும், தவறான ஆண் பெண் உறவுகளையும் வளர்ப்பதில் கைப்பேசிகள் பெரிதும் உதவுகின்றன. அது போதாதென்று வலை தளங்களும் இன்று பேருதவியாக இருக்கின்றன. பெண்களுக்கு அந்நிய ஆண்களுடனும், ஆண்களுக்கு அந்நியப் பெண்களுடனும் கள்ளத் தொடர்பு கொண்டு கள்ளக் காதலை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவுகின்றன. அது முற்றி தனிமையில் சந்திக்கும் வாய்ப்பை இந்த உறை ஆணுக்கும் உதவுகிறது; பெண்ணுக்கும் உதவுகிறது.

பெண் உறை போட்டுக் கொண்டு மற்றவர்கள் கண்களை மறைத்து வீட்டை விட்டு வெளியேறிச் சென்று, தன் கள்ளக் காதலனுடன் தனித்திருக்கவும், சல்லாபிக்கவும், அது முற்றி உறவு கொள்ளவும் வழி வகுக்கிறது. அது முற்றி வீட்டை விட்டு ஓடிப்போகவும் செய்கிறார்கள். இப்படிப் பலப் பெண்கள் சீரழிகிறார்கள். இதிலும் வேதனைக்குரிய விஷயம், வீட்டில் மகள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் வெளியே சென்றிருக்கும் சமயம், வீட்டில் தனித்திருக்கும் பெண் கைப்பேசி மூலம் கள்ளக்காதலனை தொடர்பு கொண்டு நான் வீட்டில் தனியாக இருக்கிறேன். பெற்றோர்கள் இப்போதைக்கு வரமாட்டார்கள். நீ பெண்ணைப் போல் உறை மாட்டிக் கொண்டு என் வீட்டுக்கு வா. மக்கள் ஒரு பெண் தான் வீட்டுக்குள் நுழைகிறாள். அது அவ் வீட்டுப் பெண்ணின் தோழியாக இருக்கலாம் என்று நம்பி விடுவார்கள்.

இப்படிக் கள்ளக் காதலனுக்கு ஐடியா கொடுத்து அவனை வீட்டுக்குள் வரவழைத்து, தனித்திருந்து சல்லாபித்து விட்டு அனைத்தையும் முடித்துக் கொண்டு, அவனை மீண்டும் உறைக்குள் நுழைவித்து, பெண் என்று மக்களை நம்பச் செய்து, மக்களின் கண்ணில் மண்ணைத் தூவிப் பாதுகாப்பாக வெளியேறச் செய்ய முடியுமா? இல்லையா? இப்படி அடுக்கடுக்கான எண்ணற்றக் கேடு ள் விளைவிப்பதுதான் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் தங்களை உறையிட்டுக் கொள்வதாகும்.

பெண்கள் ஆள் அடையாளத்திற்குரிய முகம் அல்லாத இதர தங்களின் கவர்ச்சிப் பகுதிகளை மறைக்காமல் வெளிப்படுத்துவதால் என்னென்ன விபரீதங்கள் இன்று அன்றாடம் அரங்கேறி வருகின்றனவோ, அது போல் ஆள் அடையாளத்திற்குரிய முகத்தை மறைப்பதாலும் பெரும் பெரும் விபரீதங்கள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன என்பதை நாம் உணர வேண்டும். மேலும் 24:31, 33:59 இறைவாக்குகள் இறைவனால் அவனது இறுதித் தூதருக்கே அருளப் பட்டது. அதற்கு மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்று 2:213, 16:44,64, 33:36 இறைவாக்குகள் கூறுகின்றன. பெண்களின் முகம், முன் கைகள் தவிர்த்து இதர பாகங்கள் மறைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்ட ஆதாரம் இருக்கிறதே அல்லாமல், முகத்தை மறைக்கச் சொன்ன ஒரு பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃதும் இல்லை. மேலும் நபியுடைய காலத்தில் பள்ளிக்குத் தொழ வந்த பெண்கள் ஆள் அடையாளம் தெரியும் வண்ணம் முகம் தெரியும் வகையில் வந்ததற்கே பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. அந்நஜாத்தின் ஆரம்ப இதழ்களிலேயே அவற்றை எடுத்து எழுதியுள்ளோம்.

பொதுவாக நாம் சிந்திப்போம். வெளியில் நடமாடும் ஆணோ, பெண்ணோ அவர்களின் அடையாளம் தெரிய வேண்டும் என்பது கட்டாயமா? இல்லையா? இன்று புழக்கத்திலிருக்கும் அடையாள அட்டைகளில் (ID Card) ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் முகம் தெளிவாகத் தெரியும் நிலையில் புகைப்படம் ஒட்டப்படுகிறதா? இல்லையா? ஒரு முஸ்லிம் பெண் முகம் மறைத்த நிலையில் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெறக் கொடுத்தால் அது ஏற்கப்படுமா? நிச்சயம் ஏற்கப்படாது என்பதை அனைவரும் அறிவோம். இப்போது சொல்லுங்கள்! வெளியில் நடமாடும் பெண்கள் தங்களின் முகம் தெரியாமல் மறைத்துக் கொள்வது சரியா? அறிவார்த்த செயலா?

பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் முகத்தை மறைக்கும் நடைமுறை ஆரம்பத்தில் இருக்கவில்லை என்பதற்கு ஹதீஃத்களே ஆதாரமாக இருக்கிறது.அரேபியாவில் ஸலஃபி அகீதா (கொள்கை) தலைதூக்கிய பின்னர் சமீப கால அறிஞர்களின் சிந்தனையில் பெண்களின் அழகே முகத்தில்தான் இருக்கிறது; எனவே முகம் மறைக்கப்பட வேண்டும் என்ற சிந்த னைத் தோன்றியதாகவே அறிய முடிகிறது. அதன் பின்னர் இந்தியாவில் தப்லீஃக் ஜமாஅத்தினரும் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இன்று பெண்கள் முகம் மறைப்பதைத் தீவிர மாக நடைமுறைப் படுத்தும் சவுதி அரேபியா, ஹஜ், உம்ராவுக்காக சவுதி வரும் பெண்கள் ஆள் அடையாளம் தெரியாமல் முகம் மறைத்து புகைப்படம் கொடுத்து விசா பெற விண்ணப்பித்தால் சவுதி அரசு விசா கொடுக்குமா? நிச்சயம் கொடுக்காது. அதேபோல் சவுதி பெண்கள் வெளிநாடுகள் செல்ல முகம் மறைத்துப் புகைப்படம் எடுத்து கடவுச் சீட்டு (Passport)க்கு விண்ணப்பித்தால் சவுதி அரசு கொடுக்குமா? நிச்சயம் கொடுக்காது. காரணம் ஆள் அடையாளம் அவசியம் தேவை என்பார்கள். அது உண்மைதான்.

ஆனால் அந்த உண்மை ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்குச் செல்வதற்கு மட்டுமே அவசியம், உள்ளூரிலே வெளியில் நடமாடும் போதும் ஆள் அடையாளம் அவசியமில்லை என்பார்களா? இதிலிருந்தே பெண்கள் முகம் மறைப்பது அறிவுக்குப் பொருந்தாத ஒரு காட்டுமிராண்டிச் சட்டம் என்பது புரியவில்லையா? சிந்தியுங்கள்.

பெண்களை ஆள் அடையாளம் தெரியாமல் உறை போட்டு மூடும் சட்டம், ஆண் கோபத்தில், போதையில், அவசரத்தில், விளையாட்டாக தலாக், தலாக், தலாக் என்று சொல்லிவிட்டால் கணவன் மனைவி உறவு முறிந்து விடும், அதே சமயம் பெண் கணவனுடன் வாழப் பிடிக்காமல் அல்லது முடியாமல் கணவன் மனைவி உறவை ரத்துச் செய்யும்படி கோரினால் (குலா) கணவன் தலாக் சொல்ல மறுத்தால் கணவன் மனைவி உறவைப் பிரிக்க முடியாது,கணவன் இன்னொருவளை மணந்து அவளுடன் வாழ்வதுடன் இவளை வாழாவெட்டியாக வைத்துத் துன்புறுத்தினாலும் சரி என்று கூறும் சட்டம், அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? பெண்கள் படிப்பறிவு பெற்றால் அந்நிய ஆண்களுக்கு கள்ளக்காதல் கடிதம் எழுதுவாள், ஆண்களும் ஆங்கில மொழி கற்பது ஹராம் என்ற சட்டம் என்று அக்காலத்தில் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரணான சட்டங்கள் இயற்றி முஸ்லிம்களை பொது அறிவற்றவர் ஆக்கியதன் மூலம், செமி பகுத்தறிவாளர்கள் இஸ்லாமும் இதர மதங்களைப் போல் ஒரு மதமே, காட்டுமிராண்டிச் சட்டங்களையுடையதே, போதை தரும் அபின் போன்றதே என்று மக்களிடையே செய்தி பரப்பி, இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தி வைத்திருக்கக் காரணம் மவ்லவி இனம்தானே.

பிக்ஹு சட்டங்கள் என்ற பெயரால் இப்படிப் பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, குர்ஆன், ஹதீஃ துக்கும் முரணானச் சட்டங்களை இயற்றி வைத்திருப்பதைப் பார்த்தே எம் போன்றவர்கள், சுய சிந்தனையாளர்களையும், பகுத்தறிவாளர்களையும், பொது மக்களையும் உண்மையான மார்க்கத்தை-நேர்வழியை அறியவிடாமல் தடுத்து-முட்டுக்கோட்டை போட்டு, முற்றிலும் சுய சிந்தனையே அற்றவர்களாக்கி-முகல்லிதுகளாக்கி ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்ப்பதோடு, அவர்களை ஈவிரக்க மின்றி நரகில் தள்ள முற்படுவதையே இறுதி நெறிநூல் குர்ஆன் கூறும் 2:186, 7:3, 33:36, 66-68, வசனங்களைக் காட்டியே எச்சரிக்கிறோம். மவ்லவிகள் உண்மையை உணர முன்வராததே வேதனைக்குரிய விசயம்.

கிறித்தவ கன்னியாஸ்திரிகள் முகம் தவிர இதர பாகங்கள் அனைத்தையும் கச்சிதமாக மறைத்து நடமாடுகிறார்கள். அவர்களின் எளிய சாதாரண உடை காரணமாக அவர்களைப் பார்த்து எந்த ஆணுக்கும் காமக் கிளர்ச்சி ஏற்படுவதில்லை. எந்த நாடும் அதற்குத் தடை விதிப்பதுமில்லை. முஸ்லிம் பெண்கள் முகம் மறைத்து புர்கா அணிந்தாலும், அந்த புர்காவின் கவர்ச்சியே ஆண்களைச் சுண்டி இழுக்கிறது. இந்த வழிகேட்டை எந்தப் பிரிவு மவ்லவிகளும் கண்டு கொள்வதாக இல்லை.

பெண்களின் அழகு முகத்திலேயே அதிக மாகப் பிரதிபலித்தாலும் ஆள் அடையாளம் தெரியாமல் அதை உறையிட்டு மறைப்பதால் முகம் திறந்திருப்பதால் ஏற்படும் கெடுதிகளை விட மிகமிக அதிகமான கெடுதிகள் ஏற்படுவதாலேயே முக்காலமும் அறிந்த பேரறிஞனான அல்லாஹ் பெண்கள் முகத்தை மறைப்பதைக் கட்டளையிடவில்லை. அதற்கு மாறாக அழகலங்காரங்களில் அது தெரிய வேண்டிய பகுதி என்றே 24:31ல் தெளிவு படுத்தியுள்ளான். எனவே பெண்கள் முகத்தை ஆள் அடையாளம் தெரியாமல் மறைப்பது இறைவனது வழிகாட் டலுக்கு முற்றிலும் முரணான செயலாகும். ஹராமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் நேர் வழியை தெளிவாக அறிந்து அதன்படி நடக்க அருள் புரிவானாக.

Previous post:

Next post: