அகில உலக முஸ்லிம்களின் அதல பாதாள வீழ்ச்சி ஏன்?

in 2013 மே

இப்னு ஹத்தாது

இதோ இறைவனின் உறுதி மொழிகள் :
தைரியத்தை இழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; முஃமின்களாக இருப்பின் நீங்களே மேலோங்குவீர்கள். (3:139)

நம் தூதர்களையும், நம்பிக்கையாளர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம். முஃமின்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமையாகும். (10:103)

இறை நம்பிக்கையாளர்களான அவர்களுக்கு உறுதியாக அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான். (22:38)

……முஃமின்களுக்கு உதவுதல் நம்மீது கடமையாகும். (30:47)

முன்னிருந்தோரை (பூமிக்கு) ஆட்சியாளர்களாய் ஆக்கியது போல், உங்களில் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிபவர்களைப் பூமிக்கு ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், அவர்களுக்கென அவன் பொருந்தியுள்ள மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்துவதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அமைதியாக மாற்றுவதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் எனக்கு யாரையும் இணை வைக்காமல் என்னையே வணங்குவார்கள். இதன் பின்னர் மாறு செய்வோரே பாவிகள். (24:55)

அல்லாஹ் வாக்குறுதி மீறவே மாட்டான் என்று 3:9,194, 39:20 ஆக மூன்று இறைவாக்குகளில் உறுதி அளித்துள்ளான். இந்த எட்டு இறைவாக்குகளையும் குர்ஆனில் நேரடியாகப் பார்த்து மீண்டும் மீண்டும் கவனமாக உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.

என்றுமே வாக்கு மாறாத அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இன்றைய முஸ்லிம்களைக் கைவிட்டக் காரணம் என்ன? இன்று முஸ்லிம்கள் அழிவின் அதலபாதாளத்தில் வீழ்ந்து புழு பூச்சிகள் போல் துடிக்கக் காரணம் என்ன? இதர மக்கள் எல்லாம் முஸ்லிம்களை இழிவுபடுத்திக் கேவலப்படுத்தி, கொடுந்துன்பங்கள் கொடுத்து வீண் பழிகள் சுமத்தி குற்றப்படுத்தக் காரணம் என்ன? முஸ்லிம்கள் சிந்தித்தார்களா? சிந்திக்கிறார்களா? மீண்டும் அந்த இறைவாக்குகளைப் படித்துப் பாருங்கள். அல்லாஹ் விதித்துள்ள நிபந்தனை முஸ்லிம் பெயர் தாங்கி முஸ்லிம்களாக இல்லாமல் முஃமின்களாக இருக்க வேண்டும், நற்செயல்கள் செய்ய வேண்டும்; எந்த நிலையிலும் இறைவனுக்கு இணை வைக்கக் கூடாது. இன்றைய முஸ்லிம்களால் இந்த நிபந்த னைகள் நிறைவேற்றப்படுகின்றனவா? இல்லையே!

பெரும்பாலான முஸ்லிம்கள் 49:14 இறைவாக்குக் கூறுவது போல் ஈமான் உள்ளத்தில் நுழையாது, கலிமாவே தெரியாது பெயர் அளவில் முஸ்லிம்களாக இருக்கிறார்கள். ஈமான் கொண்டவர்க ளிலும் இறைவனுக்கு இணை வைக்காத நிலையில் ஈமான் கொள்ளவில்லை. 12:106 இறைவாக்குக் கூறு வது போல் பெரும்பான்மை முஸ்லிம்கள் இணை வைக்கும் நிலையிலேயே ஈமான் கொண்டுள்ளனர்.

எது இறைவனுக்கு இணை வைப்பு என்பதிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் கருத்து வேறுபாட்டிலேயே இருக்கிறார்கள். தர்காக்களை ஆதரிப்போர் சிலைகளிடம் போய் முறையிடுவதுதான் இணை வைப்பு. தர்காக்களில் அடங்கி இருக்கும் அவுலியாக்களிடம் முறையிடுவதும், அவர்களை வசீலாவாக ஆக்குவதும் இணை வைப்பு இல்லை என்கின்றனர். இன்னும் பலர் அவுலியாக்களிடம் முறையிடுவது தான் இணை வைப்பு. அவுலியாக்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது இணை வைப்பு இல்லை என்கின்றனர்.

18:102-106 கட்டளைகளுக்கு அடிபணிந்து தர்கா சடங்குகளை விட்டும் விடுபட்டவர்கள், தர்கா சடங்குகளுக்கு வழிவகுக்கும் தரீக்கா சடங்குகளையும், அதன் மூலம் மனிதன் இறைவனுடன் இரண்டரக் கலக்க முடியும் (அத்துவைதம்-பரமாத் மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே) என்ற நம்பிக்கையில் இறைவனுக்கு இணை வைக்கின்றனர். தர்கா, தரீக்கா இணை வைப்பை விளங்கி அவற்றிலிருந்து விலகியவர்கள், ஹிஜ்ரி 400க்குப் பிறகு மதகுருமார்களின் கற்பனையில் உருவான மத்ஹபுகளின் பேரால் இணைவைக்கின்றனர் என்பதை 2:39,186, 7:3, 9:31, 33:36,66-68, 21:92,93, 23:52-56, 3:102, 103, 105, 6:153, 159, 30:32, 42:13,14 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து உறுதி செய்து கொள்ளlலாம். மத்ஹபு வழிகேட்டை விட்டு விடுபட்டவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இறைவாக்குகளை இவர்களும் நிராகரித்து இயக்கங்களின் பெயரால் இணை வைக்கின்றனர். முஸ்லிம்களில் மிகமிகப் பெரும் பான்மையினர் 2:38,186, 3:103, 7:3, 18:102-106, 50:16, 56:85, 59:7 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து குர்ஆனையும், நபி வழிகாட்டலையும் மட்டும் பின்பற்றாமல், 6:116 இறைவாக்குக் கூறுவது போல் மனிதக் கற்பனைகளையும், யூகங்களையும் பின்பற்றி, நேர்வழியிலிருந்து கோணல் வழிகளில் சென்று 9:31 இறைவாக்கு கூறுவது போல் முன்னோர்களை, அவுலியாக்களை, இமாம்களை, மதகுருமார்களை ரப்பாக ஆக்கி இணை வைக்கின்றனர்.

7:3 இறைவாக்கில் தெளிவாக, திட்டமாக, நேரடியாக அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதை மட்டுமே பின்பற்ற வேண்டும், மனிதர்களில் யாரையும் நம்பி அவர்களை அவுலியா என்றோ, இமாம் என்றோ, மதகுரு என்றோ பின்பற்றக் கூடாது என்று அல்லாஹ் உறுதியாகக் கட்டளையிட்டுள்ளான். 52:48ல் தூதர் தனது கண்காணிப்பில் இருப்பதாகவும், 53:2-4 இறைவாக்குகளில் அத்தூதர் அவருக்கு இறைவன் புறத்திலிருந்து இறக்கப் பட்டதை மட்டுமே மார்க்கமாகச் சொல்கிறார் என்று அல்லாஹ் உறுதிப்படுத்தியுள்ளான்.

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டுமே வழிப்படவேண்டும் என்று பல இறை வாக்குகளில் நேரடியாகக் கட்டளையிட்டுள்ளான். 8:46 இறைவாக்கில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்படுங்கள். மனிதர்களைப் பின்பற்ற ஆரம்பித்தால் கருத்து வேறுபாடுகள் கொண்டு பிரிய ஆரம்பிப்பீர்கள். அதனால் கோழைகளாகி விடுவீர்கள். உங்களின் பலமும் குன்றிவிடும் என்று உறுதியாகக் கட்டளையிடுகிறான் அல்லாஹ்.

33:36 இறைவாக்கில் குர்ஆன், நபி நடைமுறை அல்லாத மனிதக் கருத்து பகிரங்கமான வழிகேடு என்று நேரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளான். மேலும் குர்ஆன், ஹதீஃத் மட்டுமே நேர்வழி; மூன்றாவதாக ஒன்று இல்லவே இல்லை என்று பல குர்ஆன் வசனங்களும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களும் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன. எண்ணற்ற இறைக் கட்டளைகளை 25:30 இறைவாக்குக் கூறுவது போல் புறக்கணித்து முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு, மனிதக் கற்பனைகளையும், யூகங்களையும் வேதவாக்காகக் கொண்டே இன்றைய முஸ்லிம்களில் 99¾ சதவிகிதத்தினர் செயல்படுகின்றனர். 2:186 அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து மனிதர்களில் முன்னோர்களையோ, பின்னோர்களையோ, இப்போதிருப்பவர்களையோ, மதகுருமார்களையோ நம்பிப் பின்பற்றாமல் நேரடியாக குர்ஆன், நபிவழியைக் கூறும் ஆதாரபூர்வமான ஹதீஃத்களைப் பார்த்துச் சிந்தித்து விளங்கி அதன்படி நடப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 99¾ சதவிகித முஸ்லிம்கள் நம்பி இருக்கும் மதகுருமார்களான மவ்லவிகள் 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து சமுதாய ஒற்றுமையைக் கட்டிக் காக்கத் தயாரில்லை. அதற்கு மாறாக 2:213, 3:19, 42:14, 45:17 இறைவாக்குகள் கூறுவது போல் தங்களிடையே ஏற்பட்டப் பொறாமை காரண மாகவே 21:93, 23:53-56 இறைவாக்குகள் கூறுவது போல் பல பிரிவுகளாகப் பிரிந்து அவை கொண்டு 23:53, 30:32 இறைவாக்குகள் கூறுவது போல் சந்தோசமடைகிறார்கள்.

1987க்குப் பிறகு தவ்ஹீத்வாதிகள் எனப் பொய்யாகப் பீற்றிக் கொள்ளும் பிரிவு இயக்கவாதிகள் பிரிவுகள் மூலம் அவர்கள் அடைந்துள்ள உலகியல் செல்வாக்கு, ஊடகங்களில் வரும் பிரபல்யம், பணம் காசு, சொத்து சுகம் இவை கொண்டு அவர்கள் நேர்வழியில் இருப்பதாக மனப்பால் குடிக்கின்றனர். அவர்களின் பெரும் நட்டத்திற்குரிய பரிதாப நிலையை அல்குர்ஆன் முஃமினூன்: 22:53-56 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆனால் அவர்களின் ஆணவம் இந்த 23:53,54,55,56 இறைவாக்குகள் கூறும் அவர்களின் பரிதாப நிலையை உணர விடாமல் அவர்களைத் தடுக்கின்றது. நேர்வழி 6:153 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ் கொடுத்த வழி மட்டுமே என்பதை 1986ல் தெளிவாக அறிந்து அந்நஜாத் இதழ்களில் ஊரறிய பகிரங்கமாக ஒப்புக்கொண்டு எழுதியவர்கள் 7:175-179, 47:25 இறைவாக்குகள் கூறுவது போல் 23:53-56 இறைவாக்குகள் கூறும் அற்ப மான உலகியல் ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு முதுகைத் திருப்பி(முர்த்தத்) புறங் காட்டிச் சென்றதால் ஷைத்தான் அவர்களின் இச் செயல்களை அவர்களுக்கு அழகாகக் காட்டி அவற்றை அதிகப்படுத்தியும் விட்டான். அதனால் அவர்கள் செல்லுவதுதான் நேர்வழி என நம்பி நரகை நோக்கி நடைபோடுகிறார்கள்.

இது போலவே தங்களை ஸலஃபுஸ்ஸாலிஹீன்களைப் பின்பற்றும் ஸலஃபிகள் எனப் பீற்றும் மத குருமார்களும், அவர்களை நம்பி 7:3 இறைவாக்கை நிராகரிக்கும் பிரிவினரும் 33:36 இறைவாக்கை நிராகரித்து ஸலஃபுகளின் பெயரால் வேறு அபிப்பிராயம் கொண்டு மனிதக் கருத்துக்களைப் புகுத்தி பகிரங்க வழிகேட்டிலேயே செல்கின்றனர்.

ஆக மதகுருமார்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும், அவர்களையும், எம்மையும், அகிலங்கள் அனைத்தையும் படைத்த எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் தெள்ளத் தெளிவாக நேரடியாகக் கூறியுள்ள,
“”இன்றைய தினம் உங்களுக்காக உங்களின் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கிவிட்டேன் (அதில் மேலதிகமாகச் சேர்ப்பதற்கு அணுவளவும் இல்லை) உங்கள் மீது என் அருட்கொடையையும் பூர்த்தி யாக்கிவிட்டேன் (மேலதிகமாக ஒன்றுமே இல்லை) இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களின் மார்க்கமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன்..” (5:3)

இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கமாகும். நெறிநூல் வழங்கப்பட்டவர்களுக்கு (இந்த) அறிவு கிடைத்த பின்னரும் தங்களின் பொறாமைக் காரணமாகவே தவிர மாறு படவில்லை. அல்லாஹ் தன் வசனங்களை மறுப்போரின் கணக்கை விரைந்து முடிப்பவன். (3:19)

இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஒருபோதும் ஏற்கப்படாது. அவர் மறுமையில் பெரும் நஷ்ட வாளியாகவே இருப்பார். (3:85)

அன்று யூத, கிறித்தவர்கள் எண்ணற்ற இறை வாக்குகளை நிராகரித்து, புறக்கணித்து ஒதுக்கியது போல், இன்று முஸ்லிம்களும் இந்த அனைத்து இறைவாக்குகளை நிராகரித்து, புறக்கணித்து ஒதுக்குகிறார்கள். 25:30 இறைவாக்கு இதையே உறுதிப்படுத்துகிறது.
மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை உறுதிப்படுத்தி முன் அறிவிப்புச் செய்துள்ளார்கள். அது வருமாறு:

உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள், கிறித்தவர் கள்)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (புகாரீ ர.அ. 3456)
இந்த ஹதீஃத் மேலும் பல ஹதீஃத் நூல்களிலும் காணப்படுகிறது.

மேலும், தவ்றாத் சுமத்தப்பட்ட பின்பு அதன்படி நடக்காதவர்களுக்கான உதாரணம், ஏடுகளைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பாகும் என்று அல்லாஹ் ஜுமுஆ: 62:5 வசனத்தில் கூறி இருப்பது போல், இன்று முஸ்லிம்கள் மீது குர்ஆன் சுமத்தப்பட்டிருந்தும் அதன்படி நடக்காமல், 25:30 இறை வாக்குச் சொல்வது போல் குர்ஆனை நிராகரித்து, யூதர்கள் அவர்களின் மதகுருமார்களை நம்பிப் பின்பற்றியது போல் முஸ்லிம்கள் குர்ஆனைப் புறக்கணித்து முஸ்லிம் மதகுருமார்களையே நம்பிப் பின்பற்றுகின்றனர். அப்படியானால் அல்லாஹ் 62:5ல் குறிப்பிடும் “ஏடுகளைச் சுமக்கும் கழுதைகள்’ முஸ்லிம்ளுக்கும் பொருந்துமா? இல்லையா? சொல்லுங்கள்.

முஸ்லிம்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்களது உள்ளத்தில் ஈமான் இல்லை என்பது கலிமாவே தெரியாத பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்டு உறுதிப்படுகிறது. இரண்டாவது ஆதாரம் ஈமான் உள்ளத்திலுள்ள எந்த முஸ்லிமும் ஐங்காலத் தொழுகை இல்லாமல் ஒருபோதும் இருக்க மாட்டான். இன்று முஸ்லிம்களிலுள்ள தொழுகையாளிகளைக் கணக்கெடுங்கள். 5 சதவிகித முஸ்லிம்கள் கூட தேற மாட்டார்கள். தொழுபவர்களிலும் ஐங்காலத் தொழுகைகளைப் பேணி அதனதன் நேரத்தில் தொழ மாட்டார்கள். ஐங்காலமும் தொழ வைக்கும் இமாம்களும் அதைச் சம்பளம் வாங்கி அற்பக் காசுக்கு விற்று விடுவதால் தொழுகையற்றவர்களாகி விடுகிறார்கள். அப்படித் தொழுபவர்களிலும் நபிவழியில் தொழுவது அரிதிலும் அரிது. ஷிஆ தொழுகை, ஹனஃபி தொழுகை, ஷாஃபி தொழுகை, மாலிக்கி தொழுகை, ஹன்பலி தொழுகை, ஜாக் தொழுகை, ததஜ தொழுகை, முஜாஹித் தொழுகை, ஸலஃபி தொழுகை, அஹ்மதி தொழுகை என அவரவர்களின் மத்ஹப் அல்லது இயக்கம் சொல்லும் தொழுகையை தொழுகின்றனர். அவர்களில் யாரும் நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறையயன்று பொய்யாகச் சொல்லும் பலவீன மான ஹதீஃத்களைக் கைவிட்டு, ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மட்டும் எடுத்து நேரடியாகப் பார்த்து விளங்கி அதன்படி தொழுவதில்லை.

அதேபோல் நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற நற்செயல்களிலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியைப் புறக்கணித்து அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்களின் வழிகாட்டல்படியே நடக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், மேலே எடுத்தெழுதியுள்ள இறைவாக்குகளை அல்குர் ஆனை எடுத்து நேரடியாகப் படித்துப் பார்த்துச் சிந்தித்து விளங்கி, குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஃத் அடிப்படையில் நடக்கும் முஸ்லிம்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மதகுருமார்களைப் பின்பற்றும் பெருங்கொண்ட முஸ்லிம்கள் அல்லாஹ் 17:41 இறைவாக்கில் “”அவர்கள் சிந்திப்பதற்காக இந்த குர்ஆனில் நிச்சயமாக அனைத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். எனினும் அவர்களுக்கு அவை வெறுப்பைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தவில்லை. (17:41)

என்று கூறுவது போல் குர்ஆன் வசனங்களில் வெறுப்படைந்து, மவ்லவிகள் சொல்லுவதையே வேதவாக்காக ஏற்று அதன்படி செயல்படுகின்றனர்.

ஆம்! உண்மைதானே. அல்லாஹ் 22:78ல் “”முஸ்லிமீன்” என்று பெயரிட்டு அழைத்துக் கொள்ளச் சொல்வது பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது. 3:103, 41:33 இறைவாக்குகள் மற்றும் பிரபல்யமான ஆதாரபூர்வ மான ஹதீஃத் கூறுவது போல் தங்களை “”ஜமா அத்துல் முஸ்லிமீன்”ல் உள்ளவர்கள் என்று சொல்வது வெறுப்பையே அதிகரிக்கிறது. மாறாக ஷிஆ, சுன்னத் ஜமாஅத், ஹனஃபி, ஷாஃபி, மாலிக்கி, ஹன்பலி, அஹ்லஹதீஸ், முஜாஹித், ஜாக், ததஜ, இதஜ, ஸலஃபி, அஹ்மதி எனத் தங்களை அழைத்துக் கொள்வதில்தான் அவர்களுக்கு 30:32, 23:53 இறைவாக்குகள் சொல்வது போல் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

ஆம்! இப்படி நேரடியாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைப்படி நடக்காமல், குர் ஆனை 25:30 வசனம் சொல்வது போல் நிராகரித்து மதகுருமார்களைப் பின்பற்றுவதால் இன்றைய முஸ்லிம்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாக இருக்கிறார்களே அல்லாமல் முஃமின்களாக இல்லை. அதனால்தான் அல்லாஹ் அளித்துள்ள வாக்குறுதி இவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.

விளக்கம் கொடுக்கும் அதிகாரம் நபிக்கு மட்டுமே என்று 2:213, 16:44,64 வசனங்கள் தெளிவாகக் கூறியிருக்க, ஆதாரமின்றி குர்ஆனில் சர்ச்சையிடுவது பெரும் வழிகேடு, அதனால்தான் பிளவுகள் ஏற்படுகின்றன என்று 2:176, 4:140, 6:68, 40:4,35 இறைவாக்குகள் கூறிக் கொண்டிருக்க, வேறு கருத்துக் கொள்வது பகிரங்க வழிகேடு என்று 33:36 இறைவாக்கு தெளிவாக நேரடியாகக் கூறிக் கொண்டிருக்க, இந்த மவ்லவிகளுக்கு குர்ஆனில் இல்லாத, ஹதீஃதில் இல்லாதவற்றை எல்லாம் மார்க்கமாக்கும் அதிகாரம் எங்கிருந்து கிடைத்தது?

ஐம்பதுக்கும் மேற்பட்ட வசனங்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளக் கூடாது, அதனால் தான் சகல சீர்கேடுகளும் ஏற்படுகின்றன என்று தெளிவாக நேரடியாகக் கூறிக் கொண்டிருக்க, இந்த வசனங்கள் அனைத்தையும் 2:39 சொல்வது போல் நிராகரித்து மார்க்கத்தை மதமாக்கி அதனையே பிழைப்பாகக் கொண்டிருப்பதால், அவர்களின் உள்ளங்கள் 2:74, 5:13, 6:125 வசனங்கள் கூறுவது போல் கற்பாறைகள் போல் இறுகிக் கடினமாகி விட்டதால் துணிந்து 25:30 வசனம் கூறுவது போல் குர்ஆனை முற்றிலும் நிராகரிக்கும் துணிச்சல் ஏற்படுகிறது என்று சொன்னால் அது தவறா?

முஸ்லிம்கள் வீழ்ச்சியின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதன் காரணம் புரிகிறதா? மதகுருமார்களான இம்மவ்லவிகளை நிராகரித்து 3:103 வசனம் சொல்வது போல் ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்தால் மட்டுமே முஸ்லிம்கள் இழந்து விட்டப் பழம் பெருமையையும், ஆட்சி அதிகாரத்தையும் பெற முடியும் என்பதில் ஐயமுண்டா? முஸ்லிம்களே சுயமாகச் சிந்தித்துச் செயல்பட்டு ஈருலகிலும் வெற்றி பெற முன்வாருங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக!

இவற்றில் எதுவும் எமது சுய கருத்து இல்லை. அனைத்திற்கும் குர்ஆன் வசனங்களையே கொடுத்துள்ளோம். குர்ஆனை புரட்டிப் பார்த்து அவ் வசனங்கள் நேரடியாக அப்படிக் கூறினால் மட்டுமே எடுத்து நடக்கக் கூறுகிறோம். ஆத்திரப்படுபவர்கள் எம்மீது ஆத்திரப்படவில்லை. அவர்களைப் படைத்த அல்லாஹ் மீதே ஆத்திரப்படுகிறார்கள் என்பதை விளங்கித் திருந்தினால் தப்பினார்கள். இல்லை நரகமே கூலியாகும். (பார்க்க: 2: 38,39)

Previous post:

Next post: